30 Aug 2012

அதிஷா யுவா - பதிவர் சந்திப்பைப் பற்றி வாசகன் மடல்


உங்கள் இருவருக்குமான இந்த மடலை எழுதலாமா வேண்டாமா என்ற மிகப் பெரிய மனப் போராட்டத்திற்குப் பின் எழுதத் தொடங்குகிறேன். புதிய தலைமுறை உங்கள் இருவரையும் அறிமுகம் செய்யும் முன்பே, நீங்கள் எழுதி வரும் வலைபூ மூலம் உங்களை கண்டுகொண்டேன். உங்களது தீவிர வாசகன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள மாட்டேன், சொல்லப் போனால் சுஜாதா ஒருவரைத் தவிர வேறு எந்த எழுத்தாளர்களுக்கும் நான் தீவிர வாசகன் எல்லாம் கிடையாது. ஆனால் உங்கள் எழுத்துகள் மீது தனிப்பட்ட மரியாதை உண்டு. முதல் காரணம் நீங்கள் இருவருமே உயிர்மை வழங்கிய சுஜாதா விருது பெற்றுள்ளீர்கள், இரண்டாவது காரணம் அந்த விருதுகள் உங்கள் எழுத்தின் அருமைக்கு பெருமை சேர்த்தவை. 

என்னை போன்ற இளைஞர்கள் எழுத்துத்துறையை தேர்ந்தெடுக்கலாமா வேண்டாமா என்று தெளிவு பெறாத நிலையில் அந்தத் துறையை துணிந்து தேர்ந்தெடுத்து அதில் அங்கீகாரமும் பெற்றவர்கள் நீங்கள். பா ராகவன் அவர்களின் நட்பு உங்களுக்கு கிடைப்பதற்கு வலைப்பூ மிகப்பெரும் அளவில் உதவி உள்ளது. எழுத்துலகில் அங்கீகாரம் பெறுவதற்கு வலைபூவும் பதிவர் சந்திப்பும் உதவி உள்ளது என்பதை உங்கள் தளங்களில் படித்துள்ளேன். அதிஷா, நீங்கள் சுஜாதா விருது பெற்றபோது பதிவர் சந்திப்பு எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றெல்லாம் எழுதி இருந்தீர்கள் ( இதை என் நினைவில் இருந்து கூறுகிறேன். இப்போது சென்று  படித்துவிட்டு வந்து கூறவில்லை). நீங்கள் இருவருமே முற்போக்கு சிந்தனை உடையவர்கள் என்பதை உங்கள் பதிவுகள் மற்றும் முகநூல் எழுத்துக்களின் மூலம் அறிந்து கொண்டேன்.

கர்ணன் திரைப்படம் பார்த்துவிட்டு வந்து கர்ணன் ஒரு க்ளோனிங் பேபி என்று யுவா எழுதி இருந்தார், இதிகாசங்கள் மீது மதிப்பு வைத்திருக்கும் என் போன்ற பல வாசகர்களை அது எவ்வளவு காயபடுத்தி இருக்கும் என்பதை யுவா அறிந்திருப்பாரா என்று தெரியவில்லை. "இவ்வாறு எழுதாதே என்று கூற நீ யார்?" என்று யுவா கேட்கலாம். உங்களை அவ்வாறு எழுத வேண்டாமென்று என்று கூறவில்லை. ஆனால் உங்கள் எழுத்துக்கள் மீது வைத்திருந்த மதிப்பில் ஒரு படி குறைந்த்தது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அதே நேரத்தில் ஹைடெக் ஆசிரமத்தில் சேரச்செலும் பணக்காரன் கதையை அதிஷா எழுதி இருந்தார் அதை நான் வெகுவாக ரசித்தேன். மூடநம்பிக்கையை சுட்டிக்காட்டினால் எவரும் ஏற்றுக் கொள்வார்கள். மூடநம்பிக்கையை கிண்டல் செய்கிறேன் என்ற பெயரில் நீங்கள் வெறுப்பதை எல்லாம் சுட்டிக்காட்டினால் எந்த ஒரு வாசகனுக்கும் அலுப்பும் எரிச்சலும் வரத்தான் செய்யும். 

மடலின் பாதை திசை திரும்பவில்லை. உங்கள் வாசகன் என்ற முறையில் உங்கள் எழுத்துக்கள் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகளை முதலில் கூறினேன்.  

புதிய தலைமுறையைப் புரட்டும் பொழுது, மாலன் அவர்களின் எழுத்துக்களைப் படிக்கும் முன், வாசிப்பது உங்கள் இருவரின் எழுத்துக்களைத் தான். புத்தகக் கண்காட்சியில் நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பெயர்களைக் குறிப்பிட்ட பொழுது உங்களின் தேடலை எண்ணி வியந்தேன். நான் எப்போது அது போன்ற புத்தகம் எல்லாம் வாசிக்கப் போகிறேன் என்ற கேள்வியை என்னுள் கேட்டுக் கொண்டேன். யுவாவின் அழிக்கப் பிறந்தவனை படிக்கும் படி பலரிடமும் கூறிகொண்டு இருக்கிறேன். என்னுடைய ஒரு பதிவிலும் அதைப் பற்றி கூறி இருக்கிறேன்.  அப்படிப்பட்ட உங்களை ஒரு வாசகனாக (சக பதிவனாக இல்லை) பதிவர் சந்திப்பில் எதிர்பார்த்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். உங்களுடன் பேச வேண்டும் கைகுலுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. தூரத்தில் இருந்து உங்களை பார்க்க வேண்டும் என்ற சிறு ஆர்வம் தான். விழாவிற்கு வந்த பி கே பி அவர்களையும் அப்படித் தான் நான் ரசித்தேன்.

உங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக நீங்கள் வரவில்லை, உங்கள் அலுவல் அப்படி. அதில் தலையிடும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. வருகிறார்களா என்று கேட்டேன். வரவில்லை என்றார்கள். ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வில்லை. ஆனால் கூகிள் பிளசில் உங்கள் எழுத்துகளைப் படித்த பொழுது மிக மிக வருத்தமாக இருந்தது. முற்போக்கு சிந்தனையை கொஞ்சம் விசாலமாக்கி இருந்தீர்கள் என்றால் அது ஹைபட்ஜெட்டா இல்லை அவ்வளவு பெரிய சந்திப்பை மிகச் சரியாக திட்டமிட்டு செயல்படுத்தி காசை நேரத்தை விரயம் செய்யாத அளவில் வடிவமைக்கப்பட்ட பட்ஜெட்டா என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். 

சந்திப்பு நடக்க மண்டபம் தேவை, ஒரு முழு நாள் விழா என்பதால் மதிய உணவு தேவை. மூத்த பதிவர்களுக்கு மரியாதையை செய்யும் விதமாக நினைவுப் பரிசு தேவை என்றெல்லாம் ஒவ்வொரு பதிவருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டுமா. நாங்கள் மெரீனாவில் நூறு நூத்தைம்பதுக்கு தான் சந்தித்தோம் நீங்கள் அப்படி சந்தித்திருந்தால் எனக்கு உடன்பாடு உண்டு. இப்போது இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? எல்லாரும் எல்லா நேரங்களிலும் ஒரே வழிமுறைகளைத் தான் பின்பற்ற வேண்டுமா? அந்த பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உதவலாம் என்று கூறுகிறீகள். ஏழைகளுக்கு உதவலாம் என்று சந்திப்பு நடத்துவதற்கும் ஒரு சந்திப்பு தேவை என்பது தெரியாதா? மேலும் அன்று நடந்த அந்த சந்திப்பில் ஏழைகளுக்கு உதவுவது பற்றி ஒரு விவாதம் நடைபெற்றது. 

என் போன்ற புதிய இளைய பதிவர்களுக்கு பதிவர் சந்திப்பு நடைபெற்ற தினம்  எவ்வளவு உற்சாகமான தினம் தெரியுமா? நான் ஒவ்வொரு தனிப் பதிவரையும் ஊர் ஊராக சென்று சந்திப்பதை விட அத்தனை பேரையும் ஒரே இடத்தில சந்திபதற்கு எனக்கு ஆன செலவு மிகச் சொற்பமே.எத்தனை பேரின் வழிகாட்டுதல் இந்தப் பதிவின் மூலம் எனக்குக் கிடைத்தது தெரியுமா? ஜெய் மிக நேர்மையாக வரவு செலவு காட்டி இருக்கிறார். ஆனால் பணம் விஷயம் என்றால் கலவரத்தில் தான் முடியும் என்று நீங்களே கலவரம் உண்டு பண்ணுகிறீர்கள். பணம் என்ற ஒன்று மட்டுமே உங்களுக்கு பிரதானமாகத் தெரிகிறது. இதற்காக உழைத்தவர்கள் யாருமே உங்களுக்கு தெரியவில்லை. யாருக்கும் தனிப்பட்ட அழைப்பிதழ் எல்லாம் கிடையாது. நாம் நடத்தும் சந்திப்பு நமக்கேன் அழைப்பிதழ் என்ற எண்ணத்தில் அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டார்கள் அதில் தானே இருக்கிறது இந்த சந்திப்பின் வெற்றி. 

என்ன சாதித்தோம் என்று கேட்கிறீர்கள் ஒரு நாளில் ஒரு சந்திப்பில் சாதனை நிகழுமா? எந்த வில்லங்கமும் இல்லாமல் அனைவரும் மகிவாய் இனிதாய் கூடி பேசியதே நம்மைப் பொறுத்தவரை சாதனை தானே? பலரின் எழுத்துகளை மட்டுமே பார்த்தவன் அவர்களின் அணுகுமுறையைப் புரிந்து கொள்ள எனக்குக் களம் அமைத்துக் கொடுத்த இந்த சந்திப்பு சாதனை தானே? இல்லை எப்படி முடிந்த்திருந்தால் இதை சாதனையாக ஏற்றுக் கொண்டிருபீர்கள் என்று புரியவில்லை. விதை ஊன்றி இருக்கிறோம், பலனை எதிர்பாப்போம். பலமான பேனா முனை உங்களுடன் இருக்கிறது. உங்களால் இன்னும் இன்னும் ஆக்கபூர்வமணா செயலில் ஈடுபட முடியும். புதியவர்களை உற்சாகப்படுத்த முடியும். அதை விடுத்தது இவ்வளவு காட்டமாக உங்கள் கருத்தை கூறுகிறீர்கள், முன் நின்று நடத்திய மூத்த பதிவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாதா?  நீங்கள் கவனிக்கப்படாதவரை மட்டுமே உங்கள் கருத்துக்களை எல்லாரும் எல்லா நேரங்களிலும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை அறியாதவரா நீங்கள்?


சமஸ் மற்றும் திருமாவேலன் மீதும் அதிகமான மதிப்பை வைத்துள்ளேன், அவர்கள் எழுத்தின் வேகம் மிக மிக அதிகம். உங்களின் எழுத்துக்களையும் அந்த இடத்தில பார்க்க வேண்டும் என்ற சாதாரண வேண்டுகோளுடன் இந்த மடலை முடிக்கிறேன்.  

இப்படிக்கு 
உங்களின் வாசகன் 



28 Aug 2012

பதிவர் சந்திப்பு - எனது முதல் பார்வை


தற்கு மேலும் பதிவர் சந்திப்பைப் பற்றி எழுதாமல் இருந்தேன் என்றால் பதிவு எழுதும் நல்லுலகம் என்னை மறந்துவிடும் வாய்ப்பு அதிகம். இப்பதிவு ஒரு முறையான கோர்வையான பதிவாக இருக்காது. இதை எழுதும் பொழுது என் மனத்தில் தோன்றிய சம்பவங்களின் கோர்வையாக மட்டுமே இருக்கும். அதனால் விதை விருட்சமானது பற்றி கூறப் போவது இல்லை.விருட்சம் எவ்வாறு கம்பீரமாக எழுந்து நிற்கிறது என்பதைப் பற்றி மட்டுமே பதியப் போகிறேன்.

எனது அறிமுகம் (மேடையில் நான் பேசியது. பதிவின் நீளம் கருதி சென்சாருடன்)  


பிரபல பதிவர்களைப் படிக்கும் பிற பல பதிவர்களில் நானும் ஒருவன். திடங்கொண்டு போராடு என்னும் தலைப்பில் எழுதி வருகிறேன். 

தேம்பி அழும் குழந்தை நொண்டி - நீ  
திடங்கொண்டு போராடு பாப்பா  

என்று பாரதி சொன்ன வரிகளை தலைப்பாக மாற்றிக் கொண்டேன். பெரிதினும் பெரிது கேள், ரௌத்திரம் பழகு போன்ற பாரதியின் தலைப்பை மற்ற நண்பர்கள் எடுத்துக் கொண்டதால் நான் திடங்கொண்டு போராடுகிறேன். சீரியசான விசயங்களைக்  நான் எழுதினால் சிரிப்பு கலந்த பதிவாகி விடுகிறது என்று கணேஷ் சார் சொல்லிச் சென்றார். சிரிப்பு தரும் விசயங்களை பற்றி நான் எழுதினேன் என்றால், ஏனோ தெரியவில்லை அப்பதிவு கூட  சீரியசான பதிவாக மாறிவிடுகிறது. 

நான் சொல்ல நினைத்து, மறந்த வேண்டாமென்று ஒதுக்கிய விஷயங்கள்

வெற்றிகரமான ஏற்பாட்டிற்க்கான நன்றிகள் பற்றி பலருக்குக் கூற நினைத்தேன், ஆனால் பேச்சின் நேரமும் நீளமும் கருதி கூற வில்லை. மாதம் ஒரு சந்திப்பு அந்தந்த ஊர்களில் நடத்த ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொள்ள நினைத்தேன் மறந்துவிட்டேன், ஆனால் சந்திப்பின் இறுதியில் இது பற்றி கலந்து ஆலோசித்தார்கள். மிக்க மகிழ்ச்சி. பதிவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்த முயற்சி செய்யுங்கள். என்னைப் போன்றவர்களைப் பட்டைத் தீட்ட பயிற்சிப் பட்டறைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும். பதிவுலகில் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் எங்கும் பரவிக் கிடக்கிறார்கள். அவர்கள் வழிகாட்டுதல் மிகவும் உதவியாக இருக்கும். பட்டுக்கோட்டைப் பிரபாகர் அவர்கள் கூட பதிவுலகின் ஆளுமை பற்றி தனது பேச்சிலே தெரிவித்தார் அதன் தாக்கத்தை பிறிதோரு சமயம் கூறுகிறேன். "எழுத்து உன் உள்ளே ஊற வேண்டும் யாரும் பட்டை தீட்ட முடியாது" என்று கூறாதீர்கள். எவ்வளவு பெரிய எழுத்தாளர் எழுதினாலும் அவற்றைப் பிழை திருத்த, டெஸ்க் வொர்க் செய்ய பத்திரிக்கை அலுவலகங்களில் தனி குழு உண்டென்று கேள்விப்பட்டுளேன். பதிவர்களுக்கு என்று அப்படியெல்லாம் ஒரு குழு கிடையாது. இங்கே எப்போதுமே நமக்கு நாமே திட்டம் தான். அதனால் எனது எண்ணத்தை இங்கே இவ்விடத்தில் தெரியப்படுத்துகிறேன்.   


டுத்தது வரவேற்புக் குழுவை கவனித்துக் கொண்ட எனது நண்பர்கள். எங்களுக்குள் நன்றி தெரிவித்துக் கொள்ளும் வழக்கம் இல்லை. மிக்க நன்றி என்று எப்போதாவது கூறுவது கூட அப்படி ஒரு வார்த்தை இருப்பதை நியாபகப்படுத்திக் கொள்ளத்தான். நான்கு பேரை அழைத்திருந்தேன், உடல்நலக் குறைவு காரணமாக இரண்டுபேரால் வர இயலவில்லை. மொத்த பொறுப்பும் மீதமிருந்த இருவர் மேல் விழுந்தது. இருவரும் அதைக் கண்டு முகம் சுளிக்கவில்லை. அந்நேரத்தில் அவரகளுக்கு நான் அணு அளவு கூட உதவவில்லை. என் நிலை புரிந்து பதிவர்களின் பதிவேட்டை எவ்வித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.இங்கே வரும் முன் கிண்டலாக அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி ஒன்றே ஒன்று தான் "மத்தியான சாப்பாடு போடுவாங்க தான?".

திய சாப்பாடு மிகவும் திருப்தியான சாப்பாடு. காலை நாங்கள் யாருமே சாப்பிடவில்லை. வரவேற்புக் குழு என்பதால் எங்கும் நகர இயலவில்லை. சரியான பசி.மதியம் அந்தக் குறை தீர்ந்த்தது. வெளுத்துக் கட்டினோம்.


சில சமயங்களில் புலவர் அய்யாவை நினைக்கும் பொழுது தான் வருத்தமாக இருந்தது. பதிவர் சந்திப்பிற்கு முன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் அய்யா கூறுவார் " நாலு மணி நேரத்துக்கு மேல உக்கார முடியல, முதுகு வலிக்குது, நீங்க பேசிவிட்டு கிளம்புங்க, நான் போயிடு வாரேன்". ஆனால் பதிவர் சந்திப்பு நாளிலோ முழுமையாக பத்து மணி நேரம் அய்யா இருந்த இடம் விட்டு நகர வில்லை. அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் கூறிய அந்த வார்த்தைகள் வந்து சென்றது. பித்தன் அய்யா, கணக்காயர், வல்லிசிம்கன், லெட்சுமி அம்மா, ரேகா ராகவன், சீனா அய்யா இன்னும் பலர் முகம் சுளிக்காமல் இருந்த இடம் விட்டு நகராமல் விழாவுடன் ஒன்றிப் போயிருந்தனர்.       
         
தெரிந்த தெரிந்துகொண்ட நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியவில்லை. முக்கிய பிரச்னை என்னிடம் கேமரா இல்லை. நண்பர்கள் யாரிடம் இருந்தும் வாங்கி வரவில்லை. சில தருணங்களில் சிலரிடம் "உங்க கூட சேர்த்து என்னையும் போட்டோ எடுங்க" என்று கூட கேட்டுவிட்டேன். யார் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று என் மனத்தில் பட்டதோ அவர்களிடம் மட்டுமே கேட்டேன். என்னுடைய டீம் லீடர் கார்த்திக் அவர் நண்பன் ஜெகதீஷ் இருவரும் சந்திப்பிற்கு வந்திருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து புகைப் படம் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்த பொழுது அருகில் யாருமே இல்லை. 


 மக்கள்சந்தை நிர்வாக இயக்குனர் அருண் சற்று தொலைவில் காமெராவுடன் நின்று கொண்டிருந்தார். அவரை கூப்பிடு என்று மனம் சொல்லியது, வேண்டாம் தவறாகக எடுத்துக் கொள்வர் என்று அறிவு தடுத்தது. இறுதியில் மனமே வென்றது. புகைப்படம் எடுத்துக்கொண்டதும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றேன். என்னைப் பார்த்து சிரித்துவிட்டு, " கழுத்துல இவ்ளோ பெரிய காமெரா தொங்க விட்டு இருக்கேன். அதுக்கு வேலை வேண்டாமா, தப்பாலாம்  எடுத்துக்க மாட்டேன் சீனு" என்றார். அந்தப் பெருந்தன்மைப் பிடிதிருந்த்து. இருந்தும் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன் சீக்கிரம் ஒரு காமெரா வாங்க வேண்டுமென்று. இதற்காக என்று இல்லை சென்னையின் சாலை வலிகளையாவது படம் பிடிக்க உதவுமே. 

மேடையில் பதிவர் சந்திபிற்காக உழைத்தவர்களை அழைத்தார்கள். கீழ் இருந்து பலரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஆரம்பித்த பொழுது கேபிள் சங்கர் என்  தோளில்  கை போட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதற்கு என்னை அப்படி கிண்டலாக பார்த்தார் என்பது எனக்குத் தெரியும். இருந்தும் "ஏன் சார் என்னைய பாத்துட்டே இருக்கீங்க" என்றேன். " இல்லை நீ போட்டோக்கு எப்படி போஸ் குடுக்றேன்னு பாத்துட்டு இருந்தேன்" என்றார். நல்ல வேலை அதன் பின் மதுமதி பேச அவர் சிந்தனை திசை மாறியது. 


ன்னும் இன்னும் பல விஷயங்கள் எழுத வேண்டும். நிச்சயம் இது ஒரு சாதனைத் திருவிழா தான். மேம்போக்காகப் பார்த்தால் யாரோ நாலு பேர் உழைத்தது போலத் தெரியும், வருகை தந்து விழாவை சிறப்பித்த ஒவ்வொருவருக்கும் அதில் பங்கு உண்டு. நல்லதோ கேட்டதோ என்ன நடக்கிறது என்றாவது பார்க்க வந்த தோழமைகளே உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி. இதுவும் நமக்கு நாமே திட்டம் தான். அண்ணன் ஜெய் அவர்களை நான்கு வரிகளில் பாராட்ட மனமும் பதிவின் நீளமும் இடம் தரவில்லை. பதிவர்   சந்திப்பு பற்றி மேலும் பல சுவையான தகவல்களுடன் அடுத்த பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். அதற்கு முன் ஒரு சிறு வேண்டுகோள்.

மேலும் ஒரு சிறு வேண்டுகோள்

என் வலைப் பூவின் பெயர் திடங்கொண்டு போராடு. பலரும் திடம்கொண்டு போராடு என்று குறிப்பிடுகிறீர்கள். திடம்கொண்டு போராடு என்பதில் இருக்கும் எளிமையை விட திடங்கொண்டு போராடு என்பதில் இருக்கும் வலிமை மிக அழகாக உள்ளது. இதையும் மேடையில் சொல்லலாம் என்று நினைத்தேன். இங்கே கூறுவதே அதிகப்பிரசங்கித் தனம், இதை மேடையில் வேறு கூற வேண்டுமா என்று கூறாமல் விட்டுவிட்டேன். அண்ணன் மெட்ராஸ் பவன் என் வலைப்பூவின் பெயரை திடங்கொண்டு போராடு  என்றே குறிபிடுகிறார். அதனால் அவருக்கு ஒரு ஷொட்டு. 


21 Aug 2012

சென்னையின் சாலைவலிகள் : மரண வாக்குமூலம்


சென்னையின் சாலை வலிகளைப் பற்றி நான் எழுதும் இரண்டாவது மரண வாக்குமூலம் இது. மரண வாக்குமூலமா? யாருக்கா? சென்னையின் சாலையில் பயணிப்பவரா நீங்கள்...? புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறன். முன்பெல்லாம் சாலைகள் எனக்கு வலிகளை மட்டுமே தந்து கொண்டிருந்தன, ஆனால் இப்போதெல்லாம் உயிர் பயத்தையும் சேர்த்துத் தரத் தொடங்கிவிட்டன. 


லுவலகம் முடிந்த இரவுகளில் பதினோரு மணிக்கு மேல் பயணம் செய்யும் சுதந்திரப் பறவை நான். பகல் பொழுதில் கொடிய அரக்கனைப் போல் அட்டுழியம் செய்யும் சென்னையின் சாலைகள், இரவில் தன் முகத்தை அப்படியே மாற்றி இருக்கும். பகல் எல்லாம் ஆடிக் களைத்த களைப்பில் அசந்து தூங்குகின்ற குழந்தையைப் போல் உறங்கும். சென்னை என்னும் குழந்தை உறங்கும் சமயங்களில் தான் எனது பயணமும் இருக்கும். வாகன நெரிசல் இல்லாத நாற்கர சாலை என்பதால் பைக்கின் வேகம் எப்போதுமே அறுபதிற்கு குறைந்திருக்காது.சமயங்களில் எண்பதையும் தொடும்.       

சென்ற வாரம் சோளிங்கநல்லூரில்  இருந்து மேடவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். நல்ல இருட்டு, அரசு நட்ட மின் கம்பங்களுக்கு மின்சாரம் பாய்ச்ச ஆள் இல்லாத காரணத்தால் இரவின் குளுமையை அனுபவித்துக் கொண்டிருந்தன. சாலையின் நடுவில் நாய்கள் மற்றும் நடுநிசி நாய்கள் படுத்திருந்தால் கூட கண்டுகொள்ள முடியாது. வண்டி திடிரென்று பயங்கரமாக அதிர்ந்தால், வண்டியை ஏதேனும் பள்ளத்தில் விட்டேனா இல்லை ஜீவராசிகளைக் கொன்றேனா என்று கூட கண்டுபிடிக்க முடியாது. 

ஹெட்லைட் வெளிச்சத்தில் இரண்டு அடிகளுக்கு மேல் என்னால் பார்க்க முடியாது. அந்த இரண்டு அடி தூர வெளிச்சத்தை மூளை உள்வாங்கி கட்டளை பிறப்பிக்கும் நேரத்தில் குறைந்தது பத்தடியைத் தாண்டியிருப்பேன். இந்த கொடிய சாலைகளில் பயணிக்கும் பொழுது ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொண்டேன். அறுபதிற்க்கு மேல் நான் இருக்க வேண்டுமானால் வண்டியின் வேகம் நாற்பதிற்கு மேல் கூட இருக்கக் கூடாது என்ற ஒன்று தான் அது.  

உசுரு பயம்னா என்னன்னு தெரியுமா 

ன்றும் அப்படித்தான், மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தேன். அந்த கும்மிருட்டில் தூரத்தில் ஏதோ அசைவது போல் தோன்றியது. இப்போதெல்லாம் இருளுக்கும், இருள் நிறைந்த அந்த சாலைகளுக்கும் கண்கள் தன்னைப் பழகிக் கொண்டுவிட்டது. தூரத்தில் ஏதேனும் அசைகிறதா இல்லை அசைவது போன்ற மாயையா எனபதை அந்த இருட்டில் இனம் காண முடியாமல் மூளை விழித்துக் கொண்டிருந்தது. 



வேகத்தைக் குறைத்துவிட்டேன். இப்போது எதுவும் அசைவது போல் தெரியவில்லை.  தூக்கக் கலக்கமாக இருக்கும் என்று வண்டியின் வேகத்தை அதிகரித்தேன். வேகம் அறுபதைக் காட்டியது. அந்த ஏதோ ஒன்றை நெருங்க நெருங்க மூளைக்கு முன் மனம் முழித்துக் கொண்டது. வேகத்தை மீண்டும் குறைக்க ஆரம்பித்தேன். பத்தடி தூரத்தில் கண்டுகொண்டேன் அசைவது போல் தோன்றியது ஒரு பெரிய வாகனம் தான் என்று. எட்டடி தூரத்தில் கண்டுகொண்டேன், வண்டியின் பின்னல் ரிப்லெக்ஷன் ஸ்டிக்கர் ஒட்டப்படாத டிராக்டர் என்று. ஆறடி தூரத்தில் தான் முக்கியமான விசயத்தைக் கவனித்தேன், அந்த டிராக்டர் செல்லவில்லை நடுரோட்டில் நின்று கொண்டுள்ளது எனபதை. 

டுத்த நான்கு அடிகளும் வண்டியின் டயர் தேயும் சத்தம் மட்டுமே எனக்குக் கேட்டது. எனக்கும் டிரக்டருக்கும் நூல் அளவு மட்டுமே இடைவெளி. (இரண்டடி குறைகிறதா? மூளை பிரேக்கிற்கு செய்தி அனுப்பும் முன், அந்த இரண்டு அடிகளை கடந்து இருந்தேன்). நான் வந்த வேகத்தில் டிராக்டரின் மேல் இடித்து இருந்தேன் என்றால், நிச்சயம் சின்னாபின்னம் ஆகியிருப்பேன். அந்த நொடியை இப்போது நினைத்தாலும் பயமாகத் தான் உள்ளது. நல்லவேளை எந்த சேதாரமும் இல்லாமல் தப்பித்தேன். வண்டியின் இண்டிகேட்டரை ஆன் செய்துவிட்டது  போர்க்களதிற்குப் புறப்பட்டேன்.

"யோவ் வண்டிய இப்படியா நடு ரோட்ல நிப்பாட்றது, வாறவன் அடிபட்டு சாகுறதுக்கா?" 

" இல்ல தம்பி, லைட்டு எதுவும் வேல செய்யல, அதான் இன்னா பிரச்சனன்னு பாத்துனு இருக்கேன்" 

" ஓரமா நிறுத்திப் பாருன்னே" 

ரு கார் டயர் தேயும் சத்தம் கேட்டது. காரும் இன்னும் இரண்டு பைக்சாரிகளும் என்னுடன் சேர்ந்து அவனை திட்டவே, ஏதோ வேண்டா வெறுப்பாக சாலையின் ஓரத்திற்கு டிராக்க்டரைக் கொண்டு சென்றான்.    

டந்த ஒரு மாதகாலமாகே இந்த சாலையிலும் சரி, வேளச்சேரி மேடவாக்கம் நாற்கர சாலையிலும் சரி மின்கம்பங்கள் உயிரற்றுத் தான் கிடக்கின்றன. அதிலும் கிண்டி - வேளச்சேரி - மேடவாக்கம் நாற்கர சாலையில் வண்டி ஊட்டுவதற்கு தனி தைரியம் வேண்டும். இந்த சாலையில் ஐம்பது கி .மீ வேகத்திற்கு குறைவாக வண்டி ஓட்டினால் வண்டி ஓட்டுவது கஷ்டம். ஐம்பது கி .மீ வேகத்திற்கு அதிகமாக்கினால் உயிர் வாழ்வது கஷ்டம். காராணம் அவ்வளவு நாற்சக்கர வாகனங்கள் டயரில்றெக்கைக் கட்டிப் பறந்து கொண்டிருப்பார்கள். 

சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் நிலைமை மிகவும் பரிதாபமாகவே உள்ளது. திடிரென்று யாரவது நடுரோட்டில் புகுந்தால் நிலைமை என்னவாகும். இருட்டில் சாலையைக் கடப்பவனை அடையாளம் கூட காண முடியாது. இருள் இருள் இருள் எங்கும் இருள்.வாழ்வது கலிகாலத்திலா கற்காலத்திலா? ஒன்றும் விளங்கவில்லை.  பல சென்டர் மீடியன்களில் ரிப்லெக்ஷன் ஸ்டிக்கர் இல்லாத காரணத்தால் வாகனங்கள் இடித்து உடைபட்டு பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன. அவைகளால் நிச்சயமாக பெரும் விபத்து நடக்கும் என்பது திண்ணம். ஒட்டுப் போட்ட சாலைகளில் டயர் உருளும் போதெல்லாம் எங்கே சரிக்கி விழுந்து விடுமோ என்ற பயத்தில் வயிற்றிற்குள் ஏதோ உருளுகிறது.  



சிறு வயதில் ட்யுஷன் முடிந்து வரும் இரவு வேளைகளில் மின்சாரம் போய்விட்டால் செய்வதறியாது அந்த இடத்திலேயே நின்று விடுவேன். யாரேனும் டார்ச் அடித்துக் கொண்டு அந்த வழி வந்தால் அந்த வெளிச்சத்திலேயே அவர்கள் செல்லும் தூரம் வரை செல்வேன். இப்போது வண்டியும் அப்படித் தான் ஓட்ட வேண்டியுள்ளது. ஏதேனும் கார் வந்தால், கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் தைரியமாக ஓட்டுகிறேன். மற்ற நேரங்களில் எல்லாம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்டுகிறேன்.

இந்திய அரசியவாதிகளுக்கு 

மெட்ரோ ரயில் வேலைகள் நடைபெறும் சாலைகள் தவிர்த்து சென்னையின் அனைத்து சாலைகளும் அழகாக அருமையாக உள்ளன, காரணம் அரசியல்வாதிகளான நீங்கள் அங்கே வசிக்கிறீர்கள். ஓட்டுபோட்ட சாலைகளை அடையாறிலும் பெசன்ட் நகரிலும் அண்ணா நகரிலும் போர்ட்கிளபிலும் பார்க்க முடியவில்லை. வேறு இடங்களில் ஒட்டுப் போட்ட சாலைகளைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. ஓட்டு போட்டது ஒரு குற்றமா. கருணையே இல்லாமல் எங்களைக் கொலை செய்வதற்கு நீங்கள் தேர்ந்ததெடுத்த துறைகள் மின்சாரத்துறையும், நெடுஞ்சாலைத் துறையுமா? மின்சாரத்தை நிறுத்துவதற்குப் பதிலாய் நெடுஞ்சாலைகளை மூடிவிடுங்கள். பல உயிர்களாவது சந்தோசமாய் வாழும். சென்னையின் புறநகர் என்ன பாவம் செய்ததது உங்களுக்கு. தேர்தலைப் புறக்கணிப்பது தவறு என்று சொல்லும் தேர்தல் ஆணையமே, ஒழுங்கான அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் இணங்காண முடியாதா? 

இந்தியப் பொதுமக்களுக்கு 



சென்னையின் சாலை வலிகள் வழிகளாக மாறும் வரை இந்தக் கட்டுரை தொடரும். இப்படி ஒரு தொடர் கட்டுரை எழுத வாய்ப்பளித்த இந்திய பொதுமக்களுக்கு நன்றிகள். எத்தனை காலம் தான் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே நன்றி சொல்லிக் கொண்டிருப்பது.

சென்னையின் சாலைவலிகளைப் பற்றி கூறிய எனது முந்தைய கட்டுரை 






16 Aug 2012

சீரியசாய் ஒரு பதிவு...


இந்த நல்ல நாளிலே வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்கள் தங்களுக்குக் கிடைத்த விருதை நூற்றியெட்டு பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துணை பதிவர்களின் பெயருடன் மட்டும் நில்லாது லிங்கையும் இணைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஒருபதிவில் லிங்க் இணைப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. இவ்வளவு சிரத்தை எடுத்து தான் பெற்ற விருது நாமும் பெற வகை செய்த  அய்யா அவர்களுக்கு மீண்டுமொருமுறை மகிழ்ச்சி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தொழிற்களம் அறிவுப்பு கண்டு அவர்களுக்கு மின்அஞ்சல் அனுப்பி இருந்தேன், மகிழ்வுடன் என்னைத் தங்கள் தளத்தில் எழுதுவதற்கு அனுமதித்து உள்ளார்கள். நான் பதிவு எழுத ஆரம்பிபதற்கு முன்பு சில தளங்களில் எழுதும் வாய்ப்பு கேட்டு முயன்றுள்ளேன், நிராகரிக்கப் பட்டுள்ளேன். தொழிற்களம் நிராகரிக்காமல் என்னை ஏற்றுக் கொண்டது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் எழுதும் அளவிற்கு திறமை இருக்கிறதா என்று தெரியவில்லை. காரணம் கணினி தேடலைத் தவிர்த்து வேறு எதிலும் ஈடுபாடு காட்டியதில்லை இருந்தும் ஒரு ஆர்வம், முயற்சி. 

பதிவர் சந்திப்பு. பதிவு எழுத ஆரம்பித்த சம காலத்தில் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இது நிச்சயமாக ஒரு நல்ல அனுபவத்தை படிப்பினையை ஆர்வத்தைத் தரும் என்ற ஆர்வத்துடன் மகிழ்வோடு பதிவை சந்திப்பை எதிர்நோக்கிக் காத்துள்ளேன்.

நான் செய்யும் தவறுகளை திருத்தி, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து வரும் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் சிறப்பான நன்றிகள்

இன்று இந்த நாளில் தான் என்னடைய இருபத்தி ஐந்தாவது பதிவை எழுத வேண்டுமென்று கடந்த மாதம் நினைத்திருந்தேன். ஆனால் அதன் பின் தொடர்ந்து வந்த நிகழ்வுகளால் அடிகடி பதிவுகள் எழுதி குறைந்த காலத்தில் அதிகமான பதிவுகள் எழுதி விட்டேன். இதன் பின் வரும் ஒவ்வொரு பதிவுகளையும் குறைந்தது ஒரு வாரம் அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி கொடுத்து எழுதலாம் என்று இருக்கிறேன். 'எவ்வளவு பதிவுகள் எழுதுகிறாய் என்பது முக்கியம் இல்லை, அதில் எத்தனை பயனுள்ள விசயங்களைப் பகிர்கிறாய் என்பதே முக்கியம்' என்று முன்னொரு நாளில் மூத்த பதிவர் ஒருவர் எனக்கு ஆலோசனை வழங்கி இருந்தார். அந்த ஆலோசனை வழி நடக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.  

இந்த நாளை நல்ல நாள் என்று சொல்லுவதற்கும், இந்தப் பதிவை இத்தனை சீரியசாய் எழுதியதற்கும், இருபத்தி ஐந்தாவது பதிவை இந்த நாளில் எழுதி இருக்கலாம் என்று நான் நினைத்தற்கும் காரணம் ஒன்றே... அறிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்... 


14 Aug 2012

பதிவர் சந்திப்பு - சாமான்யன் நடத்தும் சாதனைத் திருவிழா


12-08-2012 அன்று நடந்த பதிவர் சந்திப்பிற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு நான் செல்லாமல் இருந்திருந்தேன் என்றால் பதிவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் பற்றிய பல விசயங்களை அறிந்து கொள்ளாமல் இருந்திருப்பேன். எத்தனையோ கேள்விகள், பதில்கள், எதிர்பார்ப்புகள், எதிர்ப்புகள், விளக்கங்கள். இவை எல்லாம் இல்லாமல் நேரடியாக ஒரு விழா நடத்த முடியாது என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டேன். சென்னை தவிர்த்து பிற பகுதகளில் இருந்து பெரும்பான்மையான பதிவர்கள் வர இருப்பதால் அவர்கள் தங்கும் வசதி பற்றியும் விருந்து உபசாரம் பற்றியும் காரசாரமான உரையாடல் நடைபெற்றது. 

(புலவர், மின்னல் வரிகள், கவிஞர், வடபஜ்ஜி) 

எவ்வளவு பெரிய விழாவாக இருந்தாலும் முறையான பட்ஜெட் என்ற ஒன்று இல்லாவிட்டால் ஆட்டம் காண்பது ஒட்டுமொத்த விழா மேடையாகத் தான் இருக்கும். தங்கள் முதல் ஆலோசனைக் கூட்டத்திலேயே பட்ஜெட் குறித்து முறையாக முடிவெடுத்த போதிலும், பற்றாகுறை எப்போதுமே தன் இருப்பைக் கட்டிக்கொள்ளத் தான் முயலும். யாரிடமும் பணம் எதிர்பார்க்கவில்லை, பணம் வேண்டுமென்று அறிக்கை அளிக்கவுமில்லை. ஆனாலும் அறிவிப்பு இல்லாமலேயே பதிவுலக நண்பர்கள் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர். பணமாக மட்டுமில்லாமல் தங்கள் நிலையிலிருந்து என்ன செய்ய முடியுமோ அத்துணையும் பதிவுலக நண்பர்கள் செய்து வருவதை நினைக்கும் பொழுது மகிழ்வாய் உள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் தொகை சிறியது என்றாலும் மிக மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கின்றனர்.

(வடபஜ்ஜி மெட்ராஸ் பவன், பட்டிகாட்டான்)

பதிவுலக சந்திப்பை நாம் எதிர்பார்கிறோமோ இல்லையோ, புலவர் ராமனுஜம் அய்யா மிக மகிழ்வுடன் எதிர் நோக்கி காத்துக் கொண்டுள்ளார். அந்த விழாவிலே அவர் நமக்காக வெளியிட இருக்கும் அறிவிப்பைக் கேட்டதும் சொல்வீர்கள், "ஆம். இது நமக்கான, நம் நன்மைக்கான அறிவிப்பு தான்" என்று. பதிவர் சந்திப்பிற்கு வர முடியாதவர்கள் காணும் விதமாக நிகழ்ச்சியை நேரலை செய்வது குறித்த விவாதம் நடைபெற்றது. சாத்தியமாயின் அதுபற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.  

மதுமதி, சிவகுமார், கசாலி, சிராஜ் ஜெய் மற்றும் அரசன் ஆகியோர் தங்களது கருத்துக்களைக் கூறும், விவாதிக்கும் சமயங்களில் எல்லாம் இளமையைப் பேசவிட்டு இறுதியில் ராமனுஜம் அய்யாவும் கணேஷ் சாரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். புதிய பதிவனாய் இருந்த காலத்தில் தான் பெற்ற அனுபவங்களையும், அது வேறொரு புதிய பதிவனுக்கு நிகழக் கூடாது என்பதில் இருந்த அக்கறையும் குறித்து சிவா கூறிய கருத்துக்கள் அனைத்தும், புதிய பதிவர்களே அவற்றை நீங்கள் அந்த இடத்தில இருந்து கேட்டிருந்தீர்கள் என்றால் எவ்வளவு உற்சாகம் அடைந்திருப்பீர்கள் தெரியுமா!  

புலவர் ராமனுஜம் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மின்னல் வரிகள் பாலகணேஷ் சார்,கவிஞர் மதுமதி, மெட்ராஸ் பவன் சிவகுமார், பட்டிகாட்டான் ஜெய், பதிவுலக அரசியல் நிபுணர் கசாலி, வடபஜ்ஜி கடை ஓனர் சிராஜ், கரைசேர அலை அரசன் மற்றும் உண்மைத் தமிழன் போன்றோர் கலந்து கொண்டனர். அடுத்த ஞாயிறு மதியம் இறுதி கட்ட ஆலோசனை நடைபெற இருக்கிறது, கலந்து கொள்ள நினைப்பவர்கள் தவறாது கலந்து கொள்ளுங்கள்.. இடம் டிஸ்கவரி புக் பேலஸ்.           

(கசாலி, திடங்கொண்டு போராடு, கரைசேர அலை)

எந்த ஒரு விசயமும் ஒதுங்கி நின்று பார்க்கும் வரை எளிதாகத் தான் இருக்கும். களத்தில் இறங்கி கலப்பையைத் தூக்கினால் மட்டுமே அதன் வலி புரியும். வழிகாட்டுபவர்களும் வழி நடப்பவர்களும் இருக்கும் வரை விழாவை சாமன்யன் நடத்தினாலும் அது சாதனைத் திருவிழாவாகத் தான் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.      



12 Aug 2012

பதிவர் சந்திப்பு...விதை விருட்சமாகிறது...விருட்சம் லட்சமாகிறது...


திர்பாராத நேரத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடப்பதில் ஆச்சரியமில்லை, நடக்கும் நல்ல விஷயங்கள் அனைத்தும் ஒருங்கே, ஒரே இடத்தில நடைபெற இருப்பதை நினைத்தால் அதில் ஆச்சரியத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. 

பதிவர் சந்திப்பிற்கான விதை

பாலகணேஷ் சார், கவிஞர் மதுமதி, புலவர் ராமானுசம், சென்னைப் பித்தன் மற்றும் சகோதரி சசிகலா ஆகியோர் சந்தித்த மினி சந்திப்பின் தொடர்ச்சியாக, பல பதிவர்கள் "எங்களை விடுத்து ஒரு சந்திப்பா?" என்ற கேள்வியை இந்த ஐவர் கூட்டணியை நோக்கிக் கேட்கத் தவறவில்லை. விடை தேடி பயணம் தொடங்கியது. தற்செயலாக நடைபெற்ற இந்த ஐவர் சந்திப்பில்  இத்தனை பிரம்மாண்டமாய் நடைபெற இருக்கும் பதிவர் சந்திப்பிற்கான விதை பதியப்பட்டிருக்கும் என்பதை இவர்களே அறிந்திருக்க மாட்டார்கள் என்பது என் கணிப்பு. 

விதை விருட்சமாகிறது 

ளிமையான ஆனால் மறக்கமுடியாத சந்திப்பாக நடத்த திட்டமிட்டு களத்தில் இறங்கினார்கள். நாள் குறித்து, நடைபெறும் இடம் குறித்து, சிறப்பு விருந்தினரையும் அறிவித்த பின், இறுதிகட்ட பணிகளை ஆரம்பித்திருந்த நேரத்தில் தான் கவனித்தார்கள், விதை அவர்கள் அறியாமலேயே விருட்சமாக மாறியிருந்ததை. ஆம் பதிவர்கள் அனைவரும் உற்சாகமாய் களமிறங்க ஆரம்பித்தனர். சென்னை பதிவர் சந்திப்பு, தமிழக பதிவர் சந்திப்பாக மாறி பின் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் மாற்றிக்காட்ட தயாரானார்கள் தமிழ்ப் பதிவர்கள். 

சென்னையை மையமாக கொண்டு நடைபெற இருப்பதால், ஒவ்வொரு வார ஞாயிற்றுக் கிழமையும் இதற்கென்ன ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தி ஆலோசிக்கத் தொடங்கினார்கள். தாங்கள் ஆலோசித்ததை உடனடியாக பதிவேற்றி சக பதிவர்களின் கருத்துக்களையும் கேட்கத் தொடங்கினர். ஏமாற்றம் அளிக்கவில்லை, அனைவரும் தொடர்ந்து தங்கள் கருத்துகளையும் (மாற்றுக் கருத்துக்கள் உட்பட) ஆலோசனைகளையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே வந்தனர். தலைவர்களாய் புலவரும் பித்தனும்,  அமைச்சர்களாய்  கணேஷ் சாரும் மதுமதியும், சேனாதிபதிகளாய் மோகன்குமார், சவுந்தர், செந்தில் அரசன் இவர்களுடன் சகோதரி சசிகலாவும் இன்னும் பல பதிவுலக நண்பர்களும் இணைந்து அடுத்த கட்டங்களை நோக்கி பயணித்து வருகின்றனர். களப்பணி ஆற்ற முடியாதவர்கள், பதிவர் சந்திப்பு பற்றிய தமது எண்ணங்களை பதிவேற்றி கலைப் பணி புரிந்து வருகிறார்கள்.  

தென்றலின் கனவு என்னும் புத்தக வெளியீட்டு விழா அரங்கேற இருப்பது கூடுதல் சிறப்பு. ஆலோசனை செய்ய இடமளித்து உதவி வரும் டிஸ்கவரி புக் பேலஸ் அங்கே சிறியதொரு புத்தக கண்காட்சியை நடத்த திட்டமிட்டிருப்பது தனிச்சிறப்பு. பதிவர்கள் முத்திரைப் பதிக்க இருக்கும் திருவிழாவிற்கான அழைப்பிதழில், தமிழ்ப் பதிவர்களுக்கென முத்திரை ஒன்றை வடித்து அழைப்பிதழை மெருகேற்றியிருக்கும் கணேஷ் சாரின் சிந்தனை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  

விருட்சம் லட்சமாகிறது

மேற்கூறியவை பலவும் எதிர்பாராத ஒன்று. இந்த எதிர்பாராத ஒன்றுடன் எதிர்பார்க்கவே முடியாத ஒன்றும் நிகழ இருக்கிறது. திறமையை மேம்படுத்த எழுதும் பதிவர்களால் பல நல்ல விசயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறதென்றால், அதை ஒருகிணைந்த  சிந்ததனையாக்கி இன்னும் மெருகேற்றித் தாருங்கள், உங்கள் சிந்தனைகளை  பல தளங்களில் கொண்டு சேர்க்கின்றோம், பதிவின் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறோம், பதிவர் சந்திப்பிற்கு வாருங்கள் முழுத் தகவல்களையும் தருகிறோம் என்று கூறி நம் வியப்பை இன்னும் அதிகப்படுத்துகிறார்கள் தொழிற்களம் மின் இதழைச்  நிர்வாகிகள்.

மக்கள் சந்தை மின்ஊடகம் மூலம் வர்த்தகம் செய்து வரும் இவர்கள், தங்களது தொழிற்களம் தளத்தில் ,பகுதிநேரமாகவோ,  முழுநேரமாகவோ நம்மை பதிவெழுத அழைக்கிறார்கள். தகுந்த சன்மானமும் தரத் தயாராக உள்ளார்கள். மேலும் பதிவர்களுக்காக இவர்கள் ஆரம்பித்திருக்கும் திரட்டியின் பெயர் தமிழ்ப் பதிவர்கள்GOOGLE Ad Sense சேவையை ஆங்கிலப் பதிவர்கள் மட்டுமே உபயோகப்படுத்த முடியும் சம்பாதிக்கவும் முடியும். இந்த வருமானம் ஈட்டும் சேவையை தமிழ்ப் பதிவர்களும் பயன்படுத்தும் வகையில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். 

வலைப்பூவில் உங்களுக்கு வரும் ஒவ்வொரு ஹிட்ஸ்களையும் வருமானமாக மாற்றும் வல்லமை உடைய தொழிநுட்பம் தான் இந்த Ad SenseAd Sense சேவை மூலம் வருமானம் ஈட்டும் வழிகளைப் பற்றிய உரையை மக்கள் சந்தை, தொழிற்களம், தமிழ்ப் பதிவர்கள் இணைய சேவையின் இயக்குனர் திரு சீனிவாசன் அவர்கள் நிகழ்த்த இருக்கிறார்கள். அனைத்து பதிவர்களுக்கும் மிக பயனுள்ள உரையாக சீனிவாசன் அவர்களின் உரை இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.     

உங்களில் யார் லட்சாதிபதி 

பதிவுலகம் நம்மை ஒருங்கிணைத்தாலும், நம்மில் பலரும் தனித்திறமை உடையவர்களாக மாறுபட்ட சிந்தனை உடையவர்களாகத் தான் வலம் வந்து கொண்டிருக்கிறோம். சிலருக்கு வரலாறு பிடிக்கும், சிலருக்கு அரசியல், இன்னும் சிலருக்கோ சினிமா, கவி பாடலாம், கதை எழுதலாம், சிரிக்க சிரிக்க நகைசுவைக்கலாம், அறிவியல் பாடம் எடுக்கலாம், இன்னும் இன்னும் என்று நம் தனித்துவம் விரிந்து கொண்டுதான் உள்ளது. இவை அனைத்திலும் எல்லாராலும் சிறந்து விளங்க முடியாது, எல்லாவற்றிலும் சிறந்தவன் ஒருவன் இல்லை என்றும் சொல்வதற்கில்லை. நம்மில் இருக்கும் நம் திறமைகளை, எழுத்தின் ஈர்ப்பை, பட்டை தீட்டிக் கொள்ள வாய்ப்பாக மக்கள்சந்தை.காம் நடத்த இருக்கும் போட்டி தான் நான் பதிவன், இதில் வெல்லும் பதிவர் நீங்களாக இருந்தால் சந்தேகமே இல்லை நீங்கள் தான் அந்த லட்சாதிபதி.

என்ன போட்டி?, அதன் விதிமுறைகள் என்ன? பரிசு ஒருவருக்கா பலருக்கா? இன்னும் இன்னும் நம்முள் கேள்விகள் ஓராயிரம் எழலாம், மக்கள்சந்தை நிறுவனர் சீனிவாசன் அவர்கள் முறைப்படி அறிவிக்கும் வரை நாம் காத்திருந்து தான் ஆக வேண்டும். அதருக்கு நீங்கள் பதிவர் சந்திபிற்க்கு கட்டாயம் வந்து தான் ஆக வேண்டும்.          


எட்டுத்திக்கும் தமிழ் பரவச் செய்வோம் என்றான் பாரதி
நண்பர்களே அதைத் தானே நாம் செய்து வருகிறோம் 

பதிவர் சந்திப்பு என்னும் விதை விருட்சமாகி, விருட்சம் லட்சங்களைத் தரப் போகிறது என்றால் அதில் நம் பங்களிப்பு இல்லாமல் நிறைவேற சாத்தியம் இல்லை. வாருங்கள் நமக்காக ஒருவிழா. பதிவர் சந்திப்புத் திருவிழா. 




10 Aug 2012

கல்லூரி வாழ்கை... வாழ்கை அல்ல வரம்!



பெஞ்சுக்குள் முகம் புதைத்து 
மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம் 
அப்படி என்ன பேசுவோம் என்று யாருக்கும் தெரியாது 
ஏன் சமயங்களில் நமக்கே தெரியாது...

நம்போல் இருக்க முடியவில்லையே 
என்று வருத்தப்பட்டவர்களை விட 
நம்முடன் இருக்க முடியவில்லையே 
என்று வருத்தப்பட்டவர்கள் 
அதிகம்... 

பத்து விரல்களால் எண்ணிவிடலாம் 
நம்மை நிற்க வைக்காத ஆசிரியர்களை 
கேள்வி கேட்டு நிற்க வைப்பார்கள்  இல்லையேல்
எதிர்த்து கேள்வி கேட்டதற்காக  நிற்க வைப்பார்கள்...


கல்லூரி விதிமுறைகளைக் கேட்டால் 
அடுத்த திகாரோ என்று எண்ணத் தோன்றும் 
விதியே என்று கடைபிடித்திருந்தால் 
அதுவே அதிசியம்... 

யாருக்கும் பயப்பட்டதில்லை 
அசைமென்ட்டா அசை போட்டுவிடலாம் 
செமினாரா நார் நாராய் கிழித்து விடலாம் 
வாத்தியாரையோ ஒட்டியே ஓட விடலாம் 
H.O.D யா V.P யா Prince ஆ
வந்து பாருங்கள் என்று சொல்லலாம்... 

இருந்தும் நாம் அனைவரும் பயப்படும் ஒரே ஒரு ஜீவன் 
உண்டென்றால் அது செக்யூரிட்டி தான் 
கல்லூரி வாசலை மட்டும் கடந்து விட்டால் போதும் 
அன்றைய தினத்தையே கடந்து விடலாம்... 

இந்த வார்த்தைகள் கடந்து போன 
நம் வரலாற்றின் வாழ்க்கைகள் 
வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை 
வாசிக்க முடியும்... 

ஆனால் இதில் இருக்கும் வாழ்கையை 
மீண்டுமொரு முறை வாழ முடியுமா!



கல்லூரி வாழ்கை
வாழ்கை அல்ல 
வரம். 


( இதைப் படித்துவிட்டு 'கவிதை நல்ல இருக்கே' என்று சொல்பவர்களை தமிழ் கூறும் நல்லுலகம் மன்னிக்காது. 

 அதையும் மீறி கவிதை நன்றாக உள்ளது நீங்கள் பதிவர் சந்திப்பில் நடைபெறும் கவியரங்கில் கவிதை பாடலாம் என்று அழைப்பு விடுப்போரை தமிழ் கூறும் நல்லுலகம் மன்னிக்கவே மன்னிக்காது) 

கவிதை போன்று இருக்கும் இதை எழுதிவிட்டு வெளியிடலாமா வேண்டாமா என்று நெடுநாள் யோசித்து வெளியிடும் மன தைரியம் இன்று தான் வந்தது. படித்து ரசித்த (!) உங்கள் மன தைரியத்தைப் பாராட்டுகிறேன்.  

  

8 Aug 2012

அக்கா கடை


யல்வெளி சூழ்ந்த அழகான கிராமத்தில் இருக்கும் கல்லூரியாக இருந்தாலும் சரி, பரபரப்பான ஜன வாகன போராட்டம் நிறைந்த நகரத்தின் மத்தியில் இருக்கும் கல்லூரியாக இருந்தாலும் சரி அக்கா கடையை கடக்காமல் கல்லூரி வாசலுக்குள் நுழையவே முடியாது. நான் இளநிலை படித்த கல்லூரிக்கு இரண்டு வாசல் இருபது போல், வாசலுக்கு ஒன்றாக இரண்டு அக்கா கடைகளும் உண்டு. ஒரு அக்கா கடைக்கு செல்லும் மாணவர்கள் இன்னொரு அக்கா கடைக்கு வரமாட்டார்கள் வரக்கூடாது என்பது என்னவோ எழுதப்படாத விதி. ஒரு வகுப்பில் நிச்சயம் இரு பிரிவிருக்கும், ஒரு பிரிவு செல்லும் அக்கா கடைக்கு இன்னொரு பிரிவு செல்லாது என்பது வேண்டுமானால் காரணமாய் இருக்கலாம். 

ல்லூரிக்கு தாமதமாக வரும் வேளை, வகுப்பை விட்டு வெளியேற்றப்படும் அல்லது வெளிநடப்பு செய்யப்படும் வேளைகளில் எல்லாம் ஆதரவுக்கரமும் பாதுகாப்பும் அளிப்பது இந்த அக்கா கடை மட்டுமே. கான்டீனில் ஒருநாள் மின்விசிறி வேலை செய்யவில்லை என்பதற்காக அக்கா கடைக்கு சாப்பிடச் சென்ற நாங்கள், கல்லூரிப் படிப்பு முடியும் வரையிலும் அக்கா கடைக்குத் தான் சாப்பிடச் சென்றோம். காலை பத்து மணிக்கு சாப்பிட வரும் காளைகள், எங்கள் கல்லூரி அழகிகளை எல்லாம் வழியனுப்பிவிட்டு தங்கள் வழி செல்லும் வரை அக்கா கடை என்பது இன்னுமொரு மெரீனா. 


கூரைவேய்ந்த கட்டிடம், எப்போதுமே புகைந்து கொண்டிருக்கும் அடுப்பு, சுவிட்ச் போட்ட ஒரே ஒரு காரணத்திற்காக சுற்றும் மின்விசிறி, கடையின் முன்னால் டீ கடை, உள்ளே ஹோட்டல், பின்னால் சிகரெட் புகைக்கும் இடம் இது தான் அக்கா கடையின் வரைபடம். சுடச் சுட கிடைக்கும் வெங்காய வடையும், அட்சயப் பாத்திரத்தில் ஊற்றப்பட்டிருக்கும் சாம்பாரும் அக்கா கடைக்கு நாங்கள் செல்வதற்கான சிறப்பம்சம் என்றால் கடைக்கு வரும் ஒவ்வொருவரின் பெயர் படிக்கும் படிப்பு என்று அவர்கள் சார்ந்த அத்தனை விசயங்களையும் நியாபகம் வைத்திருப்பது அக்காவின் சிறப்பு. அக்கா கடை எங்களால் எப்போதுமே நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கும். தினசரிகள் இறைந்து கிடக்கும். சிகரெட் புகையும் வாசமும், வடை சுடும் வாசமும் இரண்டறக் கலந்து வித்தியாசமான மனத்தைக் கொடுக்கும்.

குப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு நல்ல நேரத்தில் அக்கா கடைக்குள் நுழைந்தோம். அப்போது எங்களைப் பார்த்து அக்கா கேட்ட கேள்வி "என்ன தம்பி சேது சார் கிளாசா, வெளியில அனுபிட்டாரா". 

"சேது சார் க்ளாஸ்க்குள்ள வரும் பொது தான் எங்களுக்கே அவரு கிளாஸ்ன்னு தெரியும், உங்களுக்கு எப்படிக்கா தெரிஞ்சது?"  ஆச்சரியத்தோடு கேட்டான் என் நண்பன். " இல்ல போன ஹவர்ல உங்க சீனியர்ஸ் வந்திருந்தாங்க, இப்போ நீங்க வந்த்ருகீங்க அதான் கேட்டேன்" என்றார் சிரித்துக் கொண்டே. சாப்பிடும் பொழுது குடும்ப நிகழ்சிகள், பீஸ் கட்டுவதில் ஏற்பட்ட தாமதம் இன்னும் இன்னும் என்று எதைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தாலும் பின்னொரு நாளில் மறக்காமல் அவை அனைத்தையும் அக்கறையோடு விசாரிப்பார். 


"க்கா ஒரு போண்டாக்கு ரெண்டு கரண்டி சாம்பார் ஊத்தி சாபிடுறான் இவன மறந்த்ராதீங்க " என்று எங்களை நாங்களே கேலி செய்து கொண்டால், "உங்களை எல்லாம் மறந்தாலும் மறந்த்ருவேன்,  ராஜ்குமார் தம்பி போண்டா வாங்காமலே ஒரு வாளி சாம்பார் ஊத்தி சாப்பிடுராறு அவர மட்டும் மறக்கவே மாட்டேன்" என்று பதிலுக்கு அவரும் கேலி செய்வார். கல்லூரிக்கு பீஸ் கட்ட முடியாமல் திண்டாடும் வேளைகளில் அவர் கடனாக பணம் கொடுத்து பீஸ் கட்டிய மாணவர்களும் அதிகம். 


வ்வொரு முறை பட்டமளிப்பு விழாவிற்கு வரும் மாணவர்களும் பட்டம் வாங்கியவுடன் பாடம் எடுத்த வாத்தியார்களைப் பார்கிறார்களோ இல்லையோ அக்காவைப் பார்க்காமல் போவதே இல்லை. அப்போதெல்லாம் அக்கா சொல்லுவார் "என் பிள்ளையவும் இந்தக் காலேஜ்ல தான் சேர்க்கணும்" இதைக் கேட்டவுடன் " வேற எதாவது நல்ல காலேஜ்ல சேர்த்து விடுங்க, இங்கயெல்லாம் வேணாம் " என்பது தான் எங்கள் பதிலாக வரும். உடனே அவர் சொல்லுவார் "ஒவ்வொரு வருசமும் எவ்வளவு பேர் சீட் கிடைக்காம போறாங்க தெரியுமா, நல்ல காலேஜ் தம்பி" என்பார் அழுத்தமாக.       

சென்னையில் முதுநிலை படிக்க வந்த கல்லூரியோ ஆவடியில் இருந்து ஆவடிக்குள்ளேயே பத்து கி. மீ தொலைவில் ஒரு வனாந்திரத்தில் இருந்தது. இங்கே அக்கா கடைகள் எல்லாம் கிடையாது, கடைகளுக்கு அனுமதியும் கிடையாது. ஆவடி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஜூஸ் கடை தான் எங்கள் சந்திப்பிற்கான பிரதான கடை. ( வளர்ந்து வரும் சென்னையின் புறநகர் காடுகளில் கட்டபட்டிருக்கும் கல்லூரிகள் தவிர்த்து அக்கா கடை பெரும்பாலான கல்லூரிகளுக்குப் பொருந்தும்.)  

சில மாதங்களுக்கு முன்பு தென்காசி சென்றிருந்த பொழுது ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் எனது கல்லூரிக்கும் சென்றிருந்தோம், அங்கே இரு அக்கா கடைகளையும் காணவில்லை. வாட்ச்மேனிடம் கேட்டோம் கல்லூரி வற்புறுத்தலின் படி இரு கடைகளையும் எடுத்துவிட்டார்கள் என்று கூறினார்கள். அக்கா குடும்பம் தற்போது எங்கு உள்ளது எதுவும் அறிவதிற்கில்லை. ஆனால் அக்கா கடைகள் இல்லாத கல்லூரியோ அழகிழந்து வெறுமையாய் வெற்றிடமாகக் காட்சியளிக்கிறது.  

சில நாட்களுக்கு முன்பு என் பள்ளித் தோழன், நான் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் வேலை பார்ப்பதை அறிந்துகொண்டு அவனுக்கு தொலைபேசினேன். உன்னை எங்கே சந்திப்பது என்று கேட்ட என்னிடம் அவன் கூறிய பதில் " கம்பெனிக்கு பின்னாடி கேட் த்ரீக்கு வெளியில் ஒரு அக்கா கடை இருக்கு, நா இப்போ அங்க தான் நிக்கேன் நீ வா". இங்கும் அக்கா கடை இருப்பது புதுமையாய் இருந்தது. இரு சக்கர வாகனம் ஒன்றில் ஒரு டீ கேன் சகிதம் தன் கடையை பரப்பி இருந்தார்.  
   
ந்த இரு இடங்களில் நான் பார்த்த அக்கா கடைகளுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருந்தாலும் இரு ஒற்றுமைகள் இருப்பதை கவனிக்கத் தவறவில்லை. அங்கே கல்லூரி  புகைத்துக் கொண்டிருந்ததது இங்கே கம்பனியே புகைத்துக்  கொண்டிருக்கிறது. இந்த இரு அக்கா கடையிலும்  டீ என்ற பெயரில் கிடைக்கும் வெந்நீர் சூடாகவும் இனிப்பாகவும் சில சமயங்களில் டீ போன்ற உணர்வையும் தருகிறது.  


3 Aug 2012

சென்னையும் பகுதிநேர வேலை வாய்ப்புகளும்


சென்னையைப் பற்றி முழுமையான பதிவொன்று எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது, சென்னையின் வேலை வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளைப் பற்றிய விளம்பரங்களின் நம்பகத் தன்மையையும் பற்றிய பதிவாக இப்பதிவை எழுதுகிறேன்.  

ளநிலை முடிந்ததும் வேலைக்குச் செல்வது என்று முடிவெடுத்து, சென்னைக்கு முழுமையாக என்னை தாரைவார்த்துக் கொடுத்த இரண்டாம் நாள் நண்பன் மணிக்குமாரிடம் இருந்து ஒரு போன். 

"ல இப்பதான பஸ்ல ஒரு விளம்பரம் பார்த்தேன் மாச சம்பளம் பதினெட்டாயிரம் ரூபா, சனி ஞாயிறு மட்டும் வேல பார்த்தலே ஒன்பதாயிரம் ரூபா, அவங்களுக்கு போன் செஞ்சு கேட்டேன் கோயம்பேடு பக்கத்துல ஒரு ஆபிஸ்க்கு வார சொன்னாங்க உடனே கிளம்பி வா". 

நான் திருவள்ளூரில் இருந்து கிளம்பி கோயம்பேடு வர வேண்டும், குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும். மேலும் இது போன்ற விளம்பரங்களை சென்னையின் பல பேருந்துகளிலும், நிறுத்தங்களிலும் பலமுறைப் பார்த்துப் பழக்கபட்ட எனக்கு இவ்வேலையின் மீது நம்பிக்கை இல்லை. இருந்தும் அங்கு என்ன வேலைக்கு தான் ஆள் எடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருந்ததால் கிளம்பிவிட்டேன். சென்னையில் வேலை தேடி அலைந்த முதல் பயணமும் முதல் நாளும் அது தான். இருவரும் வழி தேடி அந்த அலுவலகத்திற்கு சென்று சேர்ந்தோம், அந்த வேலைக்கு படிப்பும் வயதும் தடை இல்லை என்பதால் வயது படிப்பு வித்தியாசமின்றி பலரையும் சந்திக்க முடிந்ததது. குறைந்தது நூறு பேராவது வந்திருப்பார்கள். 

வேலை பற்றிய சொற்பொழிவு ஆரம்பமாகியது. ஆற்றியவர் கரும்பலகையில் படம் ஒன்று வரையும் பொழுதே அது இன்ன வேலை என்று கண்டுகொண்டேன், காரணம் அப்படி படம் வரைந்து பாகம்பிரித்த ஒருவரிடமிருந்து வெகு சமீபத்தில் தான் தப்பி இருந்தேன். நீங்கள் இரண்டு பேரை சேர்த்துவிட வேண்டும், அந்த இருவர் மேலும் இருவரை , அந்த மேலும் இருவர் மேலும் மேலும் இருவரை என்று முடிவில்லாத ஒரு நீட்சியாக செல்லும். நம் கீழ் ஆட்கள் சேரச்சேர நமக்குப் பணமும் சேரும். ஆனால்  நீங்கள் வெறும் எட்டாயிரம் ருபாய் முன்பணமாகக் கட்டினால் போதும். இது எல்லாம் நடக்கிற காரியமா ஒருவழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று அரங்கின் வெளியில் வந்து அவனை முறைத்தேன் (இது பற்றி O4P என்று சுவையான குறும்படம் ஒன்று உண்டு)  

"னக்கும் இப்படித் தான் நடக்கும்னு தெரியும். நாம இப்ப மவுன்ட் ரோடு போறோம், அங்க ஒரு கால் செனட்டர். மணி கூட அங்க தான் நிக்கான்" கொளுத்தும் மதியவெயில் காலை உணவு கூட உண்ணாமல் மவுன்ட் ரோடு நோக்கி கிளம்பினோம். அங்கே நண்பன் மணிகண்டன் காத்திருக்க அந்த அலுவலகத்தினுள் நுழைந்தோம். ஆனால் அது ஒரு கம்பனி போல் இல்லை கற்றுக் கொடுக்கும் இடம் போல் இருந்த்தது. நவநாகரீகமாக உடை அணிந்த மூன்று பெண்கள் ஆங்கிலத்தையே ஆடையாக உடுத்தியவர்கள் எங்களிடம் வந்தார்கள். எங்களை ஆங்கிலத்தில் ஐந்து நிமிடம் பேசச் சொன்னார்கள்.

மணிகுமரன் பேசினான், நான் ப்பே ப்பே பேசினேன்.. மணிகண்டனோ ப்பே ப்பே ப்பே பேசினான். தலைக்கு பத்தாயிரம் ருபாய் பணம் செலுத்துங்கள் உங்களை ஆங்கில அருவிகளாக மாற்றுகிறோம் என்றார்கள். வந்ததற்கு பதிவுக் கட்டணம் ஐநூறு ருபாய் என்றார்கள். இரண்டு மணியும் சேர்ந்து இருநூறு ருபாய் கட்டினார்கள். நான் மறுத்துவிட்டேன். முறைத்து வழி அனுபினர்கள். வெளியில் வந்தததும் அவனை மேலும் முறைக்க " நீ சேர மாட்டேன்னு எனக்கும் தெரியும்ல நாங்க ரெண்டு பேரும் இங்க சேர போறோம், உன்ன கூப்டது வேற ஒரு விசயத்துக்கு" என்று கூறி ஒரு கி.மீ என்னையே நடத்தியே கூட்டிச் சென்றான் . சென்னையின் மிகப் பிரபலமான  பிரமாண்டமான திரையரங்கான சத்தியம் தியேட்டர் தான் அவன் என்னை அழைத்துச் சென்ற இடம். "எதுக்கு இப்போ இங்க கூட்டிட்டு வந்ததே" என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில். "சென்னைக்கு வந்தா கண்டிப்பா சத்தியம்க்கு போகணும்னு சொன்ன அதான் நேத்தே டிக்கெட் எடுத்து வச்சிட்டேன், படத்துக்குன்னு கூப்டா திருவள்ளூர்ல இருந்து நீ வரமாட்டே அதான் இப்படி". 

ன் படிப்பு முடிந்திருந்த நேரம் கணினித் துறை அதாள  பாதாளத்தில் விழுந்திருந்தது. மீண்டும் மூன்று வருடம் படிப்பது என்று முடிவாகியது. இங்கே தான் ராகுல் நண்பனான். இருவரும் அருகருகில் அமர்ந்திருக்கும் வேளைகளில் எல்லாம் பகுதி நேர வேலை தேடுவது குறித்து பேசிக் கொண்டிருப்போம். டெக்கான் கிரானிகிள், தினமலர், தந்தி என்று அந்த வார தினசரிகளை எல்லாம் சேகரிப்போம், வார இறுதியில் குறித்து வைத்திருந்த அலுவலகங்கள் சென்னையின்  எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து சென்றுவிடுவோம். நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், தி நகர், அடையார், வளசரவாக்கம். ஆழ்வார்பேட், மயிலாப்பூர், வடபழனி இன்னும் இன்னும் பேருந்து செல்லும் தடங்களில் எல்லாம் வேலை தேடி பயனிதுள்ளோம், ஆனால் வேலை கிடைத்ததா என்றால் இந்த மாதிரி வேலை தேடி அலையக்கூடாது என்ற அனுபவம் மட்டுமே கிடைத்தது.

ந்த விளம்பரங்களில் இருக்கும் வேலைகளைப் பற்றிய சிறுபார்வை. மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்சன். அமெரிக்க மருத்துவர்கள் மருத்துவக் குறிப்புகளை ரெகார்ட் செய்து கொள்வார்கள். அப்படி ரெகார்ட் செய்த ஆடியோ குறிப்புகளை எழுத்துகளாக மாற்றி மீண்டும் அமெரிக்கர்களிடம் கொடுக்க வேண்டும். இதனை அம்பத்தூரில் இருக்கும் டெல் பெரோட் நிறுவனம் முழுமையாக செய்துவருகிறது நல்ல சம்பளமும் கொடுகிறது. இந்நிறுவனம் அடிக்கடி ஆள் எடுக்கும் நம்பகமான கம்பெனி. இதே வேலையை நீங்கள் வீட்டில் இருந்தும் பகுதி நேரமாக செய்யலாம் என்று விளம்பரம் கொடுப்பவர்கள் அனைவருமே ஏமாற்றுக்காரர்கள் தான். ஒரு காலத்தில் நம்பகமான பகுதிநேரத் தொழிலாகத்தான் இவ்வேலை இருந்திருகிறது, இப்போது இல்லை என்பதே உண்மை. இவ்வேலைக்கு நாம் செலுத்த வேண்டிய முன்பணம் மிக மிக அதிகம். 

டுத்தது கூகிள் ஆட்ஸ் (ADDS) அல்லது ஆட்வோர்ட்ஸ் (ADD WORDS).இரண்டின் செயலும் ஒன்று ஆனால் செயல்படும் விதம் வேறு வேறு. உங்களுக்கு என்று ஒரு கணக்கு ஆரம்பித்துக் கொடுத்து விடுவார்கள். நீங்கள் செய்ய வேண்டியது தென்படும் கூகிள் அட்ஸ் மற்றும் வோர்ட்ஸ்களில் க்ளிக்க வேண்டியது தான். கேட்பதற்கு எளிதாக இருக்கும், ஒவ்வொரு க்ளிக்குகளும் டாலர்களாக மாறும் என்றெல்லாம் சொல்லுவார்கள், ஆனால் இவர்களைக் கண்டறிவதற்கான தொழில்நுட்பமெல்லாம் கூகிளிடம் உள்ளத்தால் இதுவும் ஏமாற்று வேலையே. 

டுத்தது புத்தகங்களை மின் வடிவத்திற்கு மாற்றும் வேலை. அந்தக் காலப் பழைய புத்தகங்களை ஸ்கேன் செய்து உங்களிடம் கொடுத்து விடுவார்கள் அவற்றில் இருக்கும் பிழைதிருத்தி எழுத்துகளாக மாற்றி மீண்டும் கொடுக்க வேண்டும். இதற்காக பல e publishing கம்பெனிகள் சென்னையில் இருந்தாலும் வீடுகளில் வைத்து பகுதி நேரமாக செய்யுங்கள் என்று சொல்லும் அனைவருமே ஏமாற்றுபவர்கள் தான். மின் புத்தகமாக மாற்றிக் கொடுப்பதாகக் கூறி எனது நண்பர்களின் முப்பதாயிரம் ரூபாயை ஏமாற்றியது தெரியவந்த பொழுதுதான் பகுதிநேர வேலை தேடுவதற்கான முற்றுப்புள்ளியை  வைத்தோம்.

ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்வதற்க்கான காரணங்கள்

இவர்கள் அனைவருமே இடைத்தரகர்கள்.

நம்மிடம் வேலை வாங்கிகொள்வார்கள், நீங்கள் செய்ததது நிரகரிப்பட்டது என்று கூறி நம்மை ஏமாற்றிவிட்டு அதனால் அடைந்த லாபத்தை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். 

நாம் செய்தது நூற்றுக்கு நூறு சரியாக இருந்தாலும் தரக்கட்டுபாடு இல்லை அதனால் பெயில் ஆகிவ்ட்டது மேலும் பணம் கட்டுங்கள் அடுத்த ப்ராஜெக்ட் தருகிறோம் என்று மேலும் மேலும் பணம் கறக்கப் பார்ப்பார்கள். 

முன்பணம் வாங்காமல் வேலையைப் பற்றி பேசவே ஆரம்பிக்க மாட்டார்கள். 

ப்படி வேலை தேடி அலைந்ததால் நேரம் பணம் விரயமானது மட்டுமே மிச்சம், ஆனால் சென்னையை சுற்ற ஒரு வாய்பாய்   அமைந்தது என்ற அளவில் மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான். அப்படி என்றால் சென்னையில் வேலையே கிடைக்காதா என்ற ஒரு கேள்வியும் எழலாம். முதுநிலை படிப்பு முடியும் நேரத்தில் மீண்டும் வேலை தேட ஆரம்பித்தேன், குறைந்த சம்பளத்தில் படித்த படிப்பிற்கு சம்மதமே இல்லாத வேலை, மிகக் குறைந்த சம்பளத்தில் கிடைத்தது. நானும் எனது மற்ற இரு நண்பர்களும் அங்கு தான் ஒரு வருடத்திற்கு வேலை பார்த்தோம். மிக அதிகமான விசயங்களைக் கற்றுக் கொடுத்த வேலை அது. தகுதியான வேலை கிடைக்கும் வரை உங்களுக்கு சற்றும் தகுதி இல்லாத வேலை பார்க்க நீங்கள் தயாரா உங்களுக்கு வேலை கொடுக்க சென்னையும் தயார். இருந்தும் வேலைஇல்லாத் திண்டாட்டம் அதிகமாகி வரும் சென்னையில் வேலை இல்லா இளைஞர்களும் அதிகமாகி வருகிறார்கள் இதற்கு அரசாங்கம் என்ன வழி செய்து கொடுக்கப் போகிறார்கள் என்பது மட்டும் கேள்விக் குறியாகவே உள்ளது.  

வெகு நாட்களுக்குப் பின் எனது முகநூலில் நான் எழுதிய இரண்டு வரிகள் 

என்னால் தோற்க முடியும் என்றால்...
வெல்லவும் முடியும். 


சென்னையைப் பற்றிய எனது பிற பதிவுகள் 


சென்னை சிங்காரச் சென்னை