முன்குறிப்பு :
பார்கவி, பதிவர் அல்லாதவர், அலுவலகத்தில் உடன் பணிபுரியும் சகோதரி, காதல் கடிதப் போட்டி பற்றி தகவல் தகவல் தெரிந்ததுமே அது பற்றிய விபரங்கள் கேட்டு ஆர்வமுடன் பங்கு கொண்டவர்.
*******
காதல் என்ற வார்த்தையால் தான் கடிதம் எழுத மனம் தயங்குகிறது.
இருந்தும் போட்டியில் பங்கேற்க விரும்பி எழுதுகிறேன்..
காதல் கடிதம் எழுத வாய்ப்பு அளித்த சீனு அண்ணாவிற்கு நன்றி...
திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி
எப்படி எழுதுவது?
அன்பாய் எழுதவா ?
அதட்டி எழுதவா ?
ஆசையாய் எழுதவா?
ஆக்ரோஷமாய் எழுதவா?
இன்பமாய் எழுதவா?
இன்னல் வந்திடுமோ என்று அஞ்சி எழுதவா?
ஈகைப்பண்பை எழுதவா?
ஈசனை நினைத்து எழுதவா?
உன்னை நினைத்து எழுதவா?
ஊசலாடும் என் உயிரை நினைத்து எழுதவா?
என் வாழ்க்கையை நினைத்து எழுதவா?
என் தந்தைக்கு பயந்து எழுதவா?
ஏக்கமுடன் எழுதவா?
ஏசும் பேச்சுகளுக்கு அஞ்சி எழுதவா?
ஐயத்துடன் எழுதவா?
ஐயம் நீங்க எழுதவா?
இப்படியாக ,
ஒன்பது மணித்துளிகள் சிந்தித்த பிறகு என் சந்தேகங்களை
ஒளடதத்தில் ஏற்றி -அவைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல்
ஆயுதப் புள்ளி(ஃ) வைத்துப் புதுமையாக எழுதுகிறேன்.
அன்புக் காதலனுக்கு,
நான் உன் மீது கொண்ட காதலால் உன்னைப் புரிந்ததை விட என்னைப் புரிந்து கொண்டேன்.நான் மிகவும் மன உறுதி உடையவள்.தோழிகள் என்னை கேலி செய்யும் போது கூட 'நான் யாரையும் காதலிக்க வாய்ப்பில்லை' என்று திமிரித் திரிந்தவள்.இன்று உன் இதயமெனும் பாசச் சிறையில் ஆயுள் கைதி ஆனது போல் உணர்கிறேன்.
உன்னைப் பற்றி வர்ணிக்க என்னால் வார்த்தை தேட முடியாது ஏனென்றால் அதற்கு ஒரு வாழ்க்கை போதாது
.பல பிறவிகள் எடுக்க வேண்டும்.
உன்னை விடச் சிறந்தவன் உலகில் எவரும் இலர் என பொய் கூற என் மனம் ஒப்பவில்லை
.ஏனென்றால் நீ சிறந்தவனன்று.மிகச் சிறந்தவன்
.பொதுவாக காதலிப்போர் கூறும் ஒரு கருத்து
- 'பிடிப்பதற்கு காரணம் தேவை இல்லை ' என்பதே.என்னைப் பொறுத்தவரை அது முற்றிலும் தவறு. ஆண்கள் தான் பெண்களை வர்ணிப்பரோ ?இதோ நான் உன்னை வர்ணிக்கிறேன்
.
காதல் என்ற வார்த்தைக்குப் பொருள் புரியாமல் எனக்கு நானே விதிகளைப் போட்டுக்கொண்டிருந்தேன்.என்னுடைய காதலன் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என அட்டவணை போட்டிருந்தேன்.என் விதிகளுக்கு உட்படுபவனே என் காதலன் என்ற என் எண்ண ஓட்டத்தை அடக்கி ,ஆண்டு,நீ தவறை நினைத்திட்டாய் என்று சாட்டையால் அடித்து என் விதிகளை தூள் தூளாக்கி என் மனதைத் திருடி விட்டாய் .
எப்படி எல்லாம் ஒரு ஆண் இருக்க வேண்டுமென்று என்னால் முழுதாக வரையறுக்க முடியவில்லை.ஏனென்றால் என் வாழ்க்கையில் பங்கேற்கும் ஒரே ஆண் என் தந்தை
.எந்தப் பெண்ணுமே
தன் தந்தை போன்ற ஆணையேத் தேர்ந்தெடுக்க ஆசைப் படுவாள்.அது பெண்களின் இயற்கை குணம்.அது போன்று நீ இருக்கிறாய் என்று தோன்றியதால் நம் நட்பு இன்று எனக்கு காதலாகி கனிந்துவிட்டது.
உன்னை எனக்கு ஏன் பிடிக்கும் தெரியுமா?
நீ அதட்டி ஆள்பவன் அல்ல...அன்பானவன்
நீ இம்சை அரசன் ஆனாலும் இன்பம் தருபவன்...
நீ ஈட்டிக் குவிக்காவிட்டாலும் ஈகைப்பண்புடையவன்...
நீ உண்மை விரும்பி இல்லை என்றாலும் பொய்ப்புழுகி அல்ல...
நீ ஊசி போல் இருந்தாலும் என்னை ஊக்குவிப்பவன்
...
நீ என்னை விளையாட்டாய் ஏளனம் செய்தாலும் மறைமுகமாய் ஏற்றமளிப்பவன் ...
உன் குணங்களை பார்த்து மட்டும் காதல் வந்தது என்று சொன்னால் அது முற்றிலும் பொய்யாகிவிடும்
.அனைவர்க்கும் ஈர்ப்பு உண்டு.அது அழகின் வழியா? மனதின் வழியா?என்பதே முக்கியமான ஒன்று.எனக்கு அது மனதின் வழி. உன் கூர்விழி என் விழி தாண்டி பார்க்காத பொழுது உன் ஒழுக்கத்தை அறிகிறேன்
.
உன் படிய வாரிய தலைமுடி கண்டு உன் அடக்கத்தை அறிகிறேன்.. உன் இதழ்கள் பேச திறக்கும் போதெல்லாம் உன் தூய்மையான உள்ளத்தை அறிகிறேன்
.உன் கைகளை ஆட்டிப் பேசும் போதெலாம் அனைத்து உறவும் உன்னுள் அடங்கியது போலே உணர்கிறேன்... உன் நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வையில் உன் நேர்மையை உணர்கிறேன்...
உன்னை விட யாரால் என்னை சரிவர புரிந்து கொள்ள முடியும்...என் வாழ்வில் நீ வந்த நாளிலிருந்து சிரித்ததும் உன்னாலே..
அழுததும்(சந்தோஷ கண்ணீர்)
உன்னாலே...
சிரித்ததும் உனக்காக...அழுததும் உனக்காக(சந்தோஷ கண்ணீர்)...உன்னைத் தவிர என் சிந்தையில் எதுவும் ஏறவில்லை..என் மனம் எப்போதும் உன் பெயரையே உச்சரித்துக் கொண்டு இருக்கிறது...
நான் நானாக இல்லை
...நீயாக மாறிவிட்டேன் ..யாரேனும் உன் பெயரை உச்சரித்தால் கூட என்னை அழைத்ததைப் போல திரும்பிப் பார்க்கிறேன்..நான் உன்னுள் தொலைய ஆரம்பித்துவிட்டேன்...உன் பெயருடன் என் பெயர் சேரும் நாளை நினைத்து நினைத்து என் மனம் உற்சாகத்தில் திளைக்கிறது ...
நீ பாலில் கலந்த நீராய் இருந்திருந்தால்
உன்னை அன்னப்பறவையைப் போல பிரிந்திருப்பேனோ என்னவோ..
ஆனால் நீ என் உடலில் கலந்த உதிரமாய் அல்லவோ ஆகிவிட்டாய்
...
எப்படிப் பிரிவேன் உன்னை....உன் நினைவால் ஏங்கும் என் இதயத்திற்கு நல்வழி காட்டு.
உன் நல்ல குணத்தையும் மனத்தையும் நினைக்கும் போதெல்லாம் உன் பெற்றோர் உன்னை அருமையாய் வளர்த்திருக்கின்றனர் என்றே எனக்குத் தோன்றுகிறது... உன்னைப் பிடித்ததால் தான் என்னவோ,
உன் பெற்றோரையும் பிடித்துவிட்டது !
என் மாமியாரையும் மாமனாரையும் கேட்டதாகச் சொல்
.
பதிலை எதிர்பார்க்காமல் உறுதியாய் உன் மனையாள் நானே என்ற நம்பிக்கையில்...
இவள் ,
பார்கவி
Tweet |
ரசித்த வரிகள்
ReplyDelete//
என் விதிகளுக்கு உட்படுபவனே என்காதலன் என்ற என் எண்ண ஓட்டத்தை அடக்கி ,ஆண்டு,நீ தவறை நினைத்திட்டாய்என்று சாட்டையால் அடித்து என் விதிகளை தூள் தூளாக்கி என் மனதைத் திருடிவிட்டாய் .//
//யாரேனும் உன் பெயரை உச்சரித்தால்கூட என்னை அழைத்ததைப் போல திரும்பிப் பார்க்கிறேன்..நான் உன்னுள் தொலையஆரம்பித்துவிட்டேன்.//
வாழ்த்துக்கள்.
அப்பறம் சீனு, நம்ம ரெண்டு பேரும் ஒரு அலுவலகத்தில் தான் இருக்கிறோம், யார் இந்த பார்கவி? (அப்பாடா காதல் மன்னன் விரைவில் சிக்குவார்)
அருமை! அட்டகாசமான கவிதை கலந்த கடிதம்!
ReplyDeleteஆரம்ப கவிதை ஆயிரம் உணர்வுகளை சொல்லுகிறது!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!!
ReplyDelete//
யாரேனும் உன் பெயரை உச்சரித்தால் கூட என்னை அழைத்ததைப் போல திரும்பிப் பார்க்கிறேன்
//
//
நான் உன் மீது கொண்ட காதலால் உன்னைப் புரிந்ததை விட என்னைப் புரிந்து கொண்டேன்
//
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
சீனு! பல பேருடைய இதயங்களை திறக்க வைத்திருக்கிறது உனது கவிதைப் போட்டி.
ReplyDeleteமறைந்திருக்கும் படைப்பாளிகளையும் வெளிக் கொண்டு வந்து விட்டாய். பாராட்டுக்கள்
//காதல் கடிதம் எழுத வாய்ப்பு அளித்த சீனு அண்ணாவிற்கு நன்றி/
அப்ப அது சீனு இல்லையா?
காதலுக்கான காரணமும், எளிமையான வார்த்தைகளும் இயல்பான பெண்ணின் மனதை பிரதிபலிப்பதாகவும் உள்ளது கடிதம். பார்கவி உண்மையில் கலக்கி விட்டார்.
சரியான போட்டிதான்.
பரிசுபெற பார்கவிக்கு வாழ்த்துக்கள் ...
தமிழ் ஈர்ப்போடு நேர்மையான அழகிய காதல் கடிதம்...!
ReplyDelete// என் மாமியாரையும் மாமனாரையும் கேட்டதாகச் சொல்...
உன் வீட்டிற்கு நான் விளக்கேற்ற வர சம்மதமா என்று கேட்டுச் சொல்... //
அந்த கொடுத்து வைத்தவர் யாரோ...?
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
\\உன் இதயமெனும் பாசச் சிறையில் ஆயுள் கைதி // \\என் வாழ்வில் நீ வந்த நாளிலிருந்து சிரித்ததும் உன்னாலே.. அழுததும்(சந்தோஷ கண்ணீர்) உன்னாலே... சிரித்ததும் உனக்காக...அழுததும் உனக்காக(சந்தோஷ கண்ணீர்)..//என்னத்த சொல்ல எனனூ சொல்ல இதுக்குப் பேர்தான் ?
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகள்... அவுங்க கான்பிடன்ட் சூப்பர்...
ReplyDeleteகடிதம் சூப்பர்.எத்தனையோ பேரின் திறமைகளுக்கு களம் அமைத்து கொடுத்திருக்கிறது உங்கள் காதல் கடிதப் போட்டி
ReplyDeleteஅன்பைகுழைத்து, தன்னம்பிக்கைக் கலந்து ரசனையாக எழுதப் பட்டிருக்கிறது. பாராட்டுகள்.
ReplyDeleteநல்ல கடிதம்.
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகள்....
நல்லதோர் கடிதம். அகர வரிசைக் கவிதை அருமை.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி.
ReplyDeleteசெமையா எழுதியிருக்காங்க...
ReplyDelete//என் மாமியாரையும் மாமனாரையும் கேட்டதாகச் சொல் .//
அப்படிப்போடு..!!
யாரும் எழுதாத ஆத்திசூடிக் காதல் கடிதம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅகர வரிசைக் கவிதையையும் கடிதத்திற்குள்ளே கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது.
ReplyDeleteநிச்சயம் உங்கள் காதல் வெல்லும்.காதலிக்கும்போதே மாமனார் மாமியாருக்கும் ஐஸ் வைத்த ஒரே காதலி நீங்களாகத்தான் இருக்கும், பார்கவி!
உங்கள் தன்னம்பிக்கை மிக்க காதல் கடிதம் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!