Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

5 Mar 2018

மாஷா அல்லாஹ்

மாஷா அல்லாஹ் 

கென்யா தலைநகர் நைரோபியாவில் இருந்து மண்டீராவை நோக்கிக்  கிளம்பும் பேருந்தில் ஏறும் முன்பே பேருந்து நிறுத்த ஊழியரிடம் 'போலீஸ் பாதுகாப்பு உண்டா, இல்லை வழக்கம் போல் தீவிரவாதிகள் எங்களை கொன்றுவிடுவார்களா?' என விசாரித்திருந்தார் யுவா எனும் கிறஸ்தவப் பெண்மணி. 

கென்யா மற்றும் சோமாலிய எல்லையில் அல்-ஷபாப் எனும் பயங்கரவாத இயக்கத்தின் அச்சுறுத்தல் அதிகமாகி இருந்த டிசம்பர் 2015. கண்ணில் தென்படும் கிறஸ்தவர்கள் அனைவரையும் ஈவிரக்கம் இல்லாமல் கொன்று சாய்த்துக் கொண்டிருந்தது அந்த இயக்கம். கிறஸ்தவ மதமாற்றம் இஸ்லாமை அழிக்கிறது அதனால் அவர்களை நாங்கள் அழிக்கிறோம் என்கிறது இவ்வியக்கம். 

நாடு முழுக்க பலரும் மாண்டு போகிறார்கள். குழந்தைகள் பெண்கள் என யாரையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை.  

இப்படியொரு பதட்டமான சூழலுக்கு மத்தியில் யுவாவின் பயணம் நிகழ்கிறது. கிட்டத்தட்ட முப்பத்தியிரண்டு மணிநேர பேருந்துப்பயணம். அவரிடம் எஞ்சியிருப்பது உயிரும் அதன் மீதான பயமும் மட்டுமே. கண்களில் கொலைநடுக்கம். கண்ணில் தென்படும் இஸ்லாமியர்கள் அனைவரையும் விரோதியாகவேப் பார்க்கிறாள். சொல்ல முடியாத பெருஞ்சோகம் ஒன்று அவளை சூழ்ந்திருக்கிறது. பேருந்தில் ஏறி அதன் பின் பகுதியில் தனக்கென ஒரு இடம் தேடி அமர்கிறார். ஒரு கண் அவரை தீவிரமாக உற்று நோக்குகிறது. பயந்து மிரளுகிறாள். அவசர அவசரமாக தன் பையினுள் இருக்கும் சிலுவை பூட்டிய பச்சைநிற மாலையை எடுத்து தேவனின் பாதுகாப்பை நாடுகிறார். பேருந்தினுள் நுழையும் எவரையும் ஒருவித பயத்துடனேயே அணுகுகிறார். பயணம் தொடர்கிறது. அப்பேருந்தில் உடன் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் இஸ்லாமியர்கள். அந்த இரவைக் கடந்த அடுத்த நாள் காலையில் பேருந்தில் தண்ணீர் விற்கும் சிறுவனின் மீது வெறுப்பை உமிழ்கிறாள் யுவா. காரணம் அவன் மதம் இஸ்லாம். அவளின் அருகில் அமர்ந்திருக்கும் இஸ்லாமியப் பெண்ணையும் வெறுப்புடன் அணுகுகிறாள். பின்னொரு சமயத்தில் அவளிடம் பேச்சு கொடுக்கும் இஸ்லாமிய ஆசிரியர் எதனால் எங்கள் மீது இவ்வளவு வெறுப்பு நாங்கள் மனிதர்கள் தானே என்கிறார். என் மனைவிக்கு இது ஐந்தாவது பிரசவம் நான் ஊருக்கு செல்கிறேன் என்கிறார். 

நாங்களும் மனிதர்கள் தான் ஏன் எங்களைக் கொல்கிறீர்கள். போனவராம் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் என் கணவன் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். எஞ்சியிருப்பது நான் மட்டுமே என்று கூறிவிட்டு அழுகிறாள். அவள் மீதான அனைவரது பார்வையும் மாறுகிறது. ஒருவித இரக்க மனப்பான்மையோடு அவளை அணுகத் தொடங்குகிறார்கள். 

இடைநிறுத்தமாக பேருந்து நின்ற ஊரில் அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த போலீஸ் வாகனம் பழுதாகிப்போக அங்கிருந்து எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் தன் பயணத்தைத் தொடர்கிறது பேருந்து. 

பாலைவனம் போல் இருக்கும் கென்யாவின் வெம்மை அடர்ந்த பகுதியில் அல்-ஷாபாப் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் பேருந்தைச் சுற்றி வளைக்கிறார்கள். எது நிகழக்கூடாது என யுவா நினைத்தாரோ அது நிகழ இருக்கிறது. நடக்கப்போகும் அபாயம் பேருந்து முழுக்க பற்றிக்கொள்கிறது. யுவாவின் அருகில் அமர்ந்திருக்கும் பெண்மணி துரிதமாக செயல்பட்டு யுவாவின் கைகளில் இருக்கும் சிலுவை கொண்ட அந்த ஜெபமாலையைப் பிடுங்குகிறார். யுவா அதனைத் தரமறுக்க அவள் எதிர்ப்பையும் மீறி பிடுங்கி பின் யுவாவின் முகத்தில் புர்காவை அணிவித்து இஸ்லாமியத் தோற்றத்திற்கு மாற்றுகிறாள். பேருந்து மொத்தமும் பலரையும் இதுபோல் இஸ்லாமியத் தோற்றத்திற்கு மாற்றுகிறது. இவையனைத்தும் துரிதகதியில் நிகழ்கின்றன.



பேருந்தில் இருந்து அனைவரையும் இறங்கச் சொல்லும் பயங்கரவாதிகளின் தலைவன், இஸ்லாமியர்கள் தனியாகவும் கிறிஸ்தவர்கள் தனியாகவும் பிரிந்து நிற்கச்சொல்கிறான். அனைவரின் முகத்திலும் அங்கு நிகழ இருக்கும் பயங்கரவாதத்தின் கோரம் தெரிகிறது. அனைவரும் நடுங்குகிறார்கள். தப்பியோடும் ஒரு சிறுவனை சுட்டுக்கொல்கிறார்கள் பயங்கரவாதிகள். 

யாருமே எதிர்பார்க்காத வகையில் இங்குதான் அந்த அற்புதம் நிகழ்கிறது. இஸ்லாமியர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களுக்கு அரணாக மாறுகிறார்கள். 

ஓர் உண்மையான இஸ்லாமியன் என்றால் இங்கிருக்கும் கிறிஸ்துவர்களை அடையாளம் காட்டுங்கள் என்று ஆணையிடுகிறான் கூட்டத்தலைவன். 

மிகப்பெரிய இறைவன் அடுத்த உயிர்களைக் கொல்ல நமக்கு அனுமதியளிக்கவில்லை. இங்கு அனைவரும் இறைவனின் குழந்தைகள் என வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் அந்த ஆசிரியர். வாக்குவாதம் வலுத்து முற்றும் நிலையில் அனைவரையும் மொத்தமாக கொல்லப்போவதாக மிரட்டுகிறான். அதன் முதல்பலியாக ஆசிரியர் மீது குண்டு பாய்கிறது. அனைவரும் பயந்து நடுக்கும் வேளையிலும், தங்கள் உயிரே போனாலும் யாரும் யாரையும் காட்டிகொடுப்பதாயில்லை என்ற உறுதியோடு அங்கு நிற்கிறார்கள். யுவாவின் கண்களில் பயத்தையும் மீறிய ஆச்சரியம். நிகழும் அற்புதத்தின் மத்தியில் அங்கு தலைதூக்கி இருக்கும் மனிதத்தைத் எண்ணி வியக்கிறார். நல்லவேளையாக போலீஸ் வாகனம் வந்து சேர பயங்கரவாதிகள் பயணிகளை விடுத்து தப்பி ஓடுகிறார்கள். 

அனைவரும் நிம்மதிப் பெருமூச்சுவிட, அந்த இஸ்லாமியப் பெண் யுவாவின் கைகளில் அவளுடைய ஜெபமாலையை மீண்டும் கொடுப்பதைப் போல நிறைவடைகிறது அந்தக் குறும்படம். டிசம்பர் 2015, 21 அன்று கென்யாவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் சொதப்பினாலும் ஒரு ஆவணப்படம் ஆகியிருக்கக் கூடிய நிலையில் அங்கு நிகழ்ந்த சம்பவத்தை நம் கண்முன் நிகழச் செய்திருக்கிறார்கள். ஆஸ்கர் பரிந்துரையில் இருக்கும் இப்படத்தின் பெயர் watu wote - all of us

மனிதம் எத்தனை மகத்துவமானது என்பதை மிக அழகாக வெளிப்படுத்தி, இதுதான் உண்மையான இஸ்லாம் என்று கூறியிருக்கிறார்கள் அன்றைய தினத்தில் அப்பேருந்தில் பயணித்த இஸ்லாமியர்கள். அந்தப் பேருந்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் மாஷா அல்லாஹ் - இறைவனின் விருப்பம். 

26 Aug 2015

தலைவாரிப் பூச்சூடி உன்னை - குறும்படம்

ஆவி இயக்கி தயாரித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது குறும்படம் தலைவாரிப் பூச்சூடி உன்னை. 

ஒரு சிறிய கருவைக் கொண்டு இந்தக் குறும்படத்தை  உருவாக்கிய ஆவியின் வடிவில் பட்ஜெட் பத்மநாபனைக் காண்கிறேன். படம் பார்த்தால் உங்களுக்கும் புரியும். நேரத்தையும் சில நண்பர்களின் துணையையும் கொஞ்சம் திறமையையும் தன்னிடம் இல்லாத சில திறமைகளையும் வளர்த்துகொண்டு (எடிட்டிங், ஸ்பெஷல் எபெக்ட்ஸ்) அதையும் முயன்று பார்த்திருக்கிறார். 

பள்ளிக் கூடம் செல்லும் குழந்தையை பாடாய்ப்படுத்தும் இன்றைய தலைமுறை குழந்தைகளின் அம்மாவின் ஒருநாள் தான் இந்தக் குறும்படம். தான் கூற வந்ததை கிட்டத்தட்ட கூறிவிட்டார் என்று தான் கூறவேண்டும். 



'தனியொருவன் முயன்று விட்டால்' விளம்பரம் நொடிக்கு நொடி டிவியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்தக் குறும்படம் பற்றி கூறுவதென்றால் மொத்தமாக சுத்தமாக தனியொருவனின் முயற்சிதானிது. கொஞ்சம் ஆத்மார்த்தமான முயற்சியும் கூட.   

மேலும் இது தன்னுள் இருக்கும் ஒரு சினிமா கலைஞனுக்கு அவர் அளிக்க முயன்ற தீனி. யானைப் பசிக்கு சோளப்பொறி. 'இந்தப் படத்தை நான் இயக்கி இருந்தால்? இந்தப் படத்திற்கு நான் வசனம் எழுதி இருந்தால்' என்று அனைவராலும் ஆயிரம் ஆல் கூறமுடியும் என்பது தெரிந்தபோதிலும் ஒற்றை ஆளாக களமிறங்கி என்ன விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை என்று தான் கொண்ட முயற்சியில் மனம் தளராமல் செய்து முடித்த  ஆவியின் மனவலிமைக்கு பாராட்டுக்கள். ஆனாலும் ஆவியிடம் விமர்சனம் வைக்காமல் இல்லை. விமர்சனங்கள் கண்ணாடியைப் போன்றவை. அவை நமது பிம்பத்தை, நாம் இருக்கும் அழகைக் காட்டுபவை. அவற்றின் முக்கியத்துவம் உணர்ந்தவர்களுக்குத் தான் அதன் அவசியம் தெரியும். ஏற்றுகொள்வதும் மறுப்பதும் கலைஞனின் உரிமை.   

குறும்படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் மனதில் தோன்றுவதைக் கூறுங்கள் அவையாவும் ஆவி என்னும் கலைஞனை அடுத்தபடியை நோக்கி செதுக்கும் உளியின் சப்தமாக அமையட்டும். 

14 Feb 2015

கோவை ஆவி இயக்கும் காதல் போயின் காதல் - குறும்படம் டீசர்

இரண்டு நாட்களுக்கு முன்னரே காதல் போயின் காதல் படத்தின் டீசரை அனுப்பிவிட்டார் ஆவி​.  ஆர்வத்துடன் ஓபன் செய்தால் எந்த ஒரு காட்சிக்காக என்னை அனைவரும் கலாய்த்தார்களோ, எந்த ஒரு காட்சியில் 'ஐ வான்ட் மோர் எமோசன் என்றார்களோ அதையே டீசரில் வைத்திருந்தார். 'யோவ் ஏன்யா இப்படி செஞ்சீரு' என்று சட்டையைப் பிடிக்கலாம் என்றால் நான் எதை நினைத்திருந்தேனோ அதையே பதிலாக கூறினார் ஆவி. (என்ன பதில் என்பது ஆப்டர் தி மூவி)





'சரி டீசர் எப்படி இருக்கு' என்றார். 

அவரிடம் வழக்கமாக நான் கூறும் பதில் 'என்னை தவிர எல்லாமே நல்லா இருக்கு பாஸ்'

'யோவ் விளையாடாத, சீரியஸா  கேக்குறேன், எப்படி இருக்கு'

'பாஸு நானும் சீரியசாத்தான் சொல்றேன்' என்று சொன்னதையே மீண்டும் சொல்லவும் மனுஷன் கடுப்பாகிவிட்டார். 

'இல்ல பாஸ். எனக்கு ஏற்கனவே கதை தெரியும், அதுனால கருத்து சொல்றது ரொம்ப கஷ்டம்' என்றேன்.

'இல்ல சொல்லுங்க' என்றார் விடாப்பிடியாக. அப்போதைக்கு 'நன்றாக இருக்கு' என்று கூறினாலும். கதை தெரியாத ஒரு பார்வையாளனாக என்னால் அந்த டீசரைப் பார்க்கவே முடியவில்லை. அந்த டீசர் ஒரு படத்தின் காட்சிகளாக, எதற்கு அடுத்து என்ன வரும் என்பதாகத்தான் என் மனதினுள் ஓடிக் கொண்டிருந்தது. 

ஆனால், இந்த ஆனால் தான் மிக முக்கியம். டீசர் வெளியாகி அது குறித்து நீங்கள் கூறும் கருத்துக்களை பார்க்கும் போதுதான் என்னாலும் உங்கள் பார்வையில் பார்க்க முடிகிறது. 

டீசரின் வாயிலாக நீங்கள் ஊகித்திருக்கும் கதையின் படி, நாயகி நாயகனை(!) காபி குடிக்க அழைக்கிறார். வேகமாக வரும் ஒரு காரின் சக்கரம் தேயும் சப்தம் கேட்கிறது. நாயகி 'கமல்' என்று கத்துகிறார். coming soon. எழுத்துக்கள் வருகின்றன. 

இதை மட்டும் வைத்து கதைக்குள் ஒரு கதை பின்னினால் கதை வேறொரு பார்வைக்கு செல்கிறது. நிச்சயமாக நான் இப்படி யோசிக்கவில்லை. கதைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தேன். கதையின் முக்கியமான எந்த ஒரு விசயமும் இதில் காண்பிக்கப்படவில்லை. காண்பித்திருந்தால் எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருந்திருக்குமா தெரியவில்லை. 

ஆனால் ஆவியும் எடிட்டர் முல்லை வேந்தனும் இந்த டீசரின் மூலம் பார்வையாளர்களுக்கு எதை காட்சிகளாக காண்பித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தார்களோ அதை மிகச் சரியாக மிகத் தேவையான அளவில் காண்பித்து இருக்கிறார்கள் என்பதை உணரும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹேட்ஸ் ஆப் டூ யு போத். 

அப்புறம் என்னதான் என்னை சரமாரியாக ஓட்டித் தள்ளினாலும் என்னை எங்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் நண்பர்களே எனதாருயிர்த் தோழர்களே உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி... 




டீசரின் மற்றொரு சிறப்பான அம்சம் இதன் ஆரம்பத்தில் வரும் குரல். முதல்முறை கேட்டத்தில் இருந்து இப்போது வரைக்கும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. அப்படி ஒரு மயக்கும் குரல். அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் - நண்பர், எழுத்தாளர், பண்பலைத் தொகுப்பாளர் கார்த்திக் புகழேந்தி. உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் நண்பா...

காதல் போயின் காதல் குறும்படம் பெப்ரவரி 23 ஆம் தியதி வெளிவர இருக்கிறது. 

உங்கள் அனைவரின் மேலான ஆதரவை எதிர்பார்த்து
காதல் போயின் காதல் குறும்படக் குழு

பின்குறிப்பு : குறும்படம் சார்ந்த விரிவான பதிவுகளில் இனிவரும் பொழுதுகளில் :-) 

14 Oct 2014

சில நொடி ஸ்நேகம் - குறும்பட அனுபவம்

குடந்தையூர் சரவணன் அவர்கள் இயக்கத்தில் ஆவியும் அரசனும் கூடவே துளசிதரன் அவர்களும் இணைந்து நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படத்தை சில நாட்களுக்கு முன்பும் நேற்றும் பார்த்தேன். அப்படத்தைப் பற்றி சில விஷயங்கள். 

குடந்தையூர் அவர்கள் சற்றே நீள, அந்த நீளத்திற்கு ஏற்ற பட்ஜெட்டில் ஒரு குறும்படம் தயாரித்து இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தபோது இருந்தே அவரைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர் தனது முதல் குறும்படத்திற்கான கதையை விவரித்த போதே நிச்சயம் அது வெகுஜன ரசிகர்களுக்கு (என்னைப் போன்ற குறும்படப் பிரியர்களுக்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன்) பிடிக்கும் என்பது புரிந்தது, அதேநேரம் அந்தப் படத்திற்கு நாம் எதிர்பார்க்கும் ஒரு பெர்பெக்சன் வர வேண்டுமென்றால் அதற்கான உழைப்பு மிக அபாரமாக இருக்க வேண்டும். தயாரிப்பு செலவுகளும் முன்னப்பின்ன வரலாம். திரைத்துறையில் நன்கு அனுபவமிக்க சில நண்பர்கள் சில அறிவுரைகள் கூறியதன் பேரில் அந்தத் திட்டத்தை தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளார் குடந்தையூரர். அதிலும் அண்ணன் கே.ஆர்.பி கூறியது இதைத்தான் 'ஒரு பத்து குறும்படம் எடுத்து அடிபட்டு, அனுபவபட்டு வாங்க சார், அதுக்கு அப்புறம் இந்தப் படம் எடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்' என்றார். 


அவ்வகையில் தனது முதல் குறும்படமாக சில நொடி ஸ்நேகத்தை எடுத்து முடித்துவிட்டார். அரசனும் ஆவியும் குடந்தையூரரின் கூடவே இருந்ததால் குறும்படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை என்னால் ஓரளவேனும் புரிந்து கொள்ள முடிந்தது. 

மேலும் இந்த குறும்பட டீமில் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். தங்கள் அலுவலகம் முடிந்த இரவுகளில் மட்டுமே குறும்படத்திற்கான எடிட்டிங் மற்றும் மற்ற டிங்கரிங் வேலைகளைப் பார்க்க முடியும். அப்படித்தான் பார்த்தார்கள். ஒவ்வொரு இரவுகளிலும் அவர்கள் தூங்கச் செல்லும்போது அடுத்தநாள் தனது விடியலை நெருங்கியிருக்கும். ஒரு குட்டித்தூக்கம் போட்டு பின் அலுவலகம் நோக்கி ஓடி மீண்டும் ஒரு கூரையின் கீழ் இயங்கத் தொடங்கும் போது அடுத்த இரவு அவர்களுக்காக முழித்திருக்கும். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு இதே நிலை தான். அந்த பத்து நாட்களில் குறும்படத்திற்காக தன்னை முழுமையாக அர்பணித்தவர் குடந்தையூரர்.  

கும்பகோணத்தில் வைத்து நடைபெற்ற ஷூட்டிங் அனுபவங்களை அவ்வபோது ஆவியும் அரசனும் பகிர்ந்து கொண்டே இருப்பார்கள், வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை தாங்கள் உணர்ந்த தருணம் என்றார்கள். பெரிய பெரிய படங்களின் படப்பிடிப்புகளில் crowd controlling என்பது மிகவும் கஷ்டமான காரியம் தான் என்றபோதிலும், அதைக் கட்டுபடுத்த சில நபர்கள் இருப்பார்கள். 

ஆனால் குறும்படம் எடுக்கும் போது, கேமெராமேன் தீர்மானிக்கும் frameற்குள் தேவையில்லாத நபர்வரின் அவரை வரவிடாமல் பார்த்துக் கொள்வதே உடன் இருபவர்களுக்குப் பெரும்பாடாய் இருக்கும். ஒருவேளை மீறி ஏதாவது கூறினால் சண்டைக்கு வருவார்கள் அல்லது எகத்தாளமாகப் பார்ப்பார்கள். இத்தனைக்கும் நடுவில் லைட்டிங் மிக மிக முக்கியம். இருளில் ஷூட்டிங் செய்யும் அளவுக்கு எல்லாம் நம்முடைய பட்ஜெட் நம்மை அனுமதிக்கப் போவதில்லை. மேலும் குறித்த நேரத்திற்குள் படத்தை எடுத்தும் முடிக்க வேண்டும். இதையெல்லாம் விட மிக முக்கிய விஷயம், நடிப்பதற்காக நம்மோடு வருபவர்களுக்கு நடிப்பதில் ஓரளவேனும் ஈடுபாடு வேண்டும். சு'ம்மா அவர் கூப்டாரு வந்தேன், நட்புக்காக, ஜாலியா தலைய காட்டலாம்னு வந்தேன்'னு சொன்னா நீங்க உங்க கனவுகளை மூட்டை கட்டிற வேண்டியது தான். 

அப்படியே நடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு ஒருவர் வந்தாலும் கேமெரா முன் நின்று நாலு பேர் முன் நடிக்கத் தொடங்கினால் அப்படியே ஒதரும். இதில் அவர் இயல்புநிலைக்கு வருதல் என்பது பெரும்பாடு. இத்தனை சவால்களும் ஒட்டுமொத்தமாக ஒரே ஒருவர் தோளின் மீது மட்டுமே சுமத்தப்படும் அவர் வேறு யாருமில்லை அக்குறும்பட இயக்குனரே. இவ்வளவையும் கடந்து அவர் தனது இயக்குனர் வேலையையும் பார்க்க வேண்டும். இத்தனை சாவல்களையும் மீறித்தான் குடந்தையூரும் தனது சூட்டிங்கை முடித்துள்ளார். கூடவே போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளையும். 

அரசனும் ஆவியும் நடித்திருந்ததாலோ என்னவோ படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது. குடந்தையூரும் நட்பின் அடிப்படையில் 'வாத்தியார் ஸ்கூல்பையன் சீனு இவங்களோட கருத்த தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கேன். அவங்ககிட்ட கேட்டு சொல்லுங்க' என்று அரசன் மற்றும் ஆவியிடம் கூறியிருந்தார். 

கடந்த வாரம் வாத்தியாரின் வீட்டில் வைத்து படத்தைப் பார்க்கத் தொடங்கினோம். படம் பதினைந்து நிமிடங்கள் ஓடுகிறது என்று நினைக்கிறன். தற்செயலாய் சந்திக்கும் இரு நபர்களுக்கிடையே நிகழும் ஸ்நேகம் என்பது தான் கரு. மற்றவற்றை நீங்கள் குறும்படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 


இந்தக் குறும்படம் பார்க்கும் போதும் சரி பார்த்து முடிக்கும் போதும் சரி வாத்தியாரும் ஸ்கூல்பையனும் சும்மாத்தான் இருந்தார்கள். நான் தான் ஆரம்பத்தில் இருந்தே இது இப்படி இருந்திருக்கலாம் அது அப்படி இருந்திருக்கலாம் என்று ஒவ்வொன்றாகக் கூற ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் ஆவி பொறுமையிழந்துவிட்டார். யோவ் பேசாம படத்தப் பாரு, அப்புறமா கருத்த சொல்லு என்றார். ஆனாலும் நான் விடவில்லை. இல்ல பாஸு என்று நான் ஆரம்பித்தால் முறைக்க ஆரம்பித்துவிடுவார். அப்புறம் சில காட்சிகள் நான் புரியவில்லை என்றால் அதனை விளக்குவார், நானோ  'அதெல்லாம் முடியாது, ஒரு காட்சி பார்த்தவுடன புரியணும், நீங்க ஒவ்வொருத்தர் கிட்டயா போய் விளக்குவீங்களா என்றேன். 'இல்லப்பா இது குறும்படம் மோர் டீடெயிலிங் எதுக்கு' என்பார். 'கேமரா வசனம் எல்லாம் ஒகே, ஆனா இசை'  என்று இழுத்தேன் என்றால் மீண்டும் முறைப்பார்.

கிட்டத்தட்ட கடந்த நான்கு வருடங்களாக வெறும் குறும்படங்களாக தேடித்தேடிப் பார்ப்பது மட்டுமே எனது முக்கியப் பொழுதுபோக்காக இருந்தது. (இப்போ கொஞ்சம் குறைச்சிட்டேன், அரைச்ச மாவையே அரைக்கிறாங்க). அதனால் என்னிடம் குறும்படப் பாதிப்பு அதிகம். குடந்தையூரிடம் இருந்தும் ரொம்பவே சிறப்பான ஒரு படைப்பை எதிர்பார்த்திருந்ததலோ என்னவோ என் எதிர்பார்ப்புகளின் உள் அவை வரமறுத்தது. படம் பார்க்கும்போது என்னுள்ளே இருந்த ஒருவன் தன்னுடைய வாதங்களை வைக்கத் தொடங்க ஆவி டென்சன் ஆகிவிட்டார். 'ப்பா இது முதல் படம்ப்பா போக போக நல்லா பண்ணிரலாம்' என்றார். அவர் சொன்னது சமாதானம் தருவதாய் இருந்தாலும் முழு சமாதானம் அடையவில்லை. 

அதேநேரம் படம் பார்த்து முடித்ததும் நான் கூறிய கருத்துக்களில் வாத்தியாரும் ஸ்கூல்பைனும் ஒத்துப்போனார்கள், சிலவற்றை மறுத்தார்கள். விமர்சனம் என்பது தலையில் கொட்டுவது போல் இருக்கலாம் ஆனால் பாறாங்கல்லைப் போடுவது போல் இருக்ககூடாது என்பார்கள். நான் ரெண்டு மூன்று பாறாங்கல்லை வைத்திருந்தேன் போலும். 

இருந்தாலும் நாங்கள் கூறிய விமர்சனங்கள் நிச்சயம் குடந்தையூரைப் பாதித்திருக்க வேண்டும், வருத்தபட்டிருப்பார் என்றும் தெரியும். விமர்சனங்கள் என்பது ஒருவர் வருத்தபடுவதற்காகக் கூறப்படுவதில்லை, அவர் தன்னை கூர்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அக்கறையில் கூறப்படுபவை. எல்லாருமே எல்லாவற்றையும் முதல் முறையே சிறப்பாக செய்துவிடவில்லை. இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா என்று நாம் நினைக்கும் சில விஷயங்கள் பெரிய பிரச்சனையாக வரும். இன்றைக்கு அலுவலகத்தில் கூட  ஒரு சில்லறைத்தனமான பிரச்னையை செய்துவிட்டு டெஸ்கை தடவிக் கொண்டிருந்தேன், அதனை என் டி.எல் கார்த்திக் சரிசெய்த போது 'ச்ச இது கூட தெரியலியா எனக்கு' என்று தான் தோன்றியது. ஆனால் அது ஒரு பாடம். அவ்வளவு தான், அடுத்தமுறை அதே தவறை செய்யக்கூடாது. புதியதாய் ஒன்றை தேடிப்போக வேண்டும். ச்ச என்று அங்கேயே தேங்கிவிட்டேன் என்றால் கடைசி வரைக்கும் தேங்கிக் கிடக்க வேண்டியதுதான். 

நாங்கள் கொஞ்சம் காட்டமான விமர்சனம் தான் வைத்தோம் என்றபோதிலும் முதலில் வருத்தப்பட்டவர் பின் அதனை சரி செய்வது எவ்வாறு என்பது குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அதற்காக இன்னொருமுறை ஷூட்டிங் எல்லாம் செல்ல முடியாது. இருப்பதை வைத்து இன்னும் பெட்டர் ஆக்குவது ஒன்றே சிறந்த வழி. 

நேற்றைக்க்கு மீண்டும் ஒருமுறை படம் பார்த்தேன். எனக்கு எதுவெல்லாம் உறுத்தியதாக உணர்ந்தேனோ அதையெல்லாம் வெட்டி இருக்கிறார். எதையெல்லாம் வெட்ட முடியாதோ அதையெல்லாம் வேறுவழிகளில் சீர்படுத்தியுள்ளார்.  குடந்தையூர் சார் உங்களிடம் உங்களின் முதல் படமாக எதிர்பார்த்தது கிட்டத்தட்ட இது போன்ற ஒரு படத்தைத்தான். இந்தப்படம் உங்களுக்குக் கற்றுகொடுத்த பாடம் உங்களின் அடுத்த படத்தை மெருகூட்டும் என்று நம்புகிறேன். 'அன்னிக்குப் பார்த்தப்பவிட இப்போ எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு' என்றார் ஸ்கூல்பைனும். வாத்தியார் இன்னும் பார்க்கவில்லை என்று நினைக்கிறன். இந்த நள்ளிரவில் வாத்தியாருக்கு போன் செய்து 'பார்த்துட்டீங்களா' எனக் கேட்பது சற்றே சிரமமான காரியம் என்பதால் அவர் டீலில் விட்டுவிடுகிறேன். 

இந்த போட்டோக்கு மட்டும் எனக்கு பேமன்ட் வந்த்ரனும் 
அப்புறம் உங்களின் அடுத்த படத்தில் மிஸ்டர் ஸ்கூல்பையனை ஹீரோவாக வைத்து இயக்க இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. அப்படம் இன்னும் மென்மேலும் மெருகூட்டப்பட்ட ஒன்றாக வெளிவர வாழ்த்துகள். இன்னொரு விஷயம் எப்படியேனும் என்னை உங்களின் ஏதேனும் ஒரு படத்தின் ஒரு காட்சியிலாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற தீவிரத்தில் இருப்பதாக அதே உளவுத்துறை கூறியது. நானெல்லாம் அமெரிக்க மாப்பிள்ளையாக நடிப்பதற்குக் கூட லாயக்கிலாதவன் என்பதை இச்சமூகத்தின் முன் கூறிகொள்கிறேன் :-)

25 Sept 2013

ஜஸ்ட் ரிலாக்ஸ் - 24/07/2013

பிரபல பதிவருடன் திடீர் சந்திப்பு 

வேலையற்ற சோம்பலற்ற வியாழக்கிழமை மாலை. புதிய எண்ணிலிருந்து ஒரு அழைப்பு, நான் ஹலோ என்றதும் தன்னுடைய பெயரைச் சொன்னார், அவருடைய பெயரைக் கேட்டதும் என் முகத்தில் ஆயிரம் மின்னல் வெட்டியது போன்ற பிரகாசம், வானத்திலும் மேகங்கள் இடி முழக்கத்துடன் என் சந்தோசத்தை கொண்டாடத் தொடங்கியிருந்தன. "சீனு நான் இப்போ தாம்பரம் வருவேன் உங்களைப் பார்க்க முடியுமா என்றார்". வரம் தருவதற்காக அந்த இறைவனே தாம்பரம் வரை வருவதாக இருந்தால் பக்தன் நான் அதைப் பெற்றுக்கொள்ள தாம்பரம் நோக்கி செல்ல மாட்டேனா என்ன?

லேசான மழையிலும் பொங்கிப் பிரவாகம் எடுத்திருந்த சாலைகளின் ஊடே பயணிக்கத் தொடங்கினேன், சரியாக ஆறரை மணியளவில் சந்தித்தோம். அவரை இதற்கு முன் புகைப்படத்தில் பார்த்திருந்தாலும் நேரில் பார்பதற்கு மிகவும் வித்தியாசமாக மற்றும் இளமையாக இருந்தார். பதிவர் சந்திப்பு மற்றும் பதிவர்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார், எங்களுக்குள் நடந்த உரையாடலில் அவர் கூறிய மிக முக்கிய விஷயம் "ஒரு விஷயம் பதிவு செய்யுறோம்ன்னா அந்தப் பதிவு மேல நமக்கு ஒரு காதல் வரணும், அத யாரும் படிக்கிறாங்க படிக்கல, கமெண்ட் போடுறாங்க போடல, அதப் பத்தி கவலைப் படவே கூடாது, நாம எழுதுற பதிவு முதல்ல நமக்கு மன நிம்மதி கொடுக்கணும்" என்றார்.  எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

முப்பது நிமிட அளவிலேயே எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது, அன்றைய இரவே தமிழ்நாட்டில் இருந்து கிளம்புவதால் உடனடியாக சென்ட்ரல் செல்ல வேண்டும் என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.  இன்னும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்கலாமே என்று என்னுள் தோன்றினாலும் தன்னுடைய அவசர வேலைகளின் மத்தியிலும் என்னை சந்திக்க அழைத்ததே மிக சந்தோசமாக இருந்தது. மிகப் பெரிய மனிதர்களின் நட்பை சம்பாதித்துக் கொடுத்த வலையுலகின் மீதான காதல் இன்னுமின்னும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. 

உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சார்.  

இன்னும் இருமாதங்களில் மீண்டும் சென்னை வரவிருப்பதாகவும் அப்போது மற்ற நண்பர்களை கண்டிப்பாக சந்திக்கிறேன் அதுவரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஒரு அன்புக் கட்டளையிட்டுச் சென்றார். 

அந்தப் பிரபல பதிவர் யார் என்பது எங்களுக்குத் தெரியும் என்பவர்கள் தயவு செய்து அமைதி காக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்பது நிச்சயம் ஒரு குறியீடு அல்ல.

சென்னையில் ஒரு காவல் தெய்வம் 

அது ஒரு வேலையற்ற செவ்வாய்க் கிழமை. என்னிடம் வசமாக சிக்கியவர் அரசன், "தலைவரே கிண்டில இருக்கேன், பொழுது போகல என்ன பண்ணலாம்" என்றேன், "நீங்க அங்கயே இருங்க தலைவரே இதோ வந்த்ருர்றேன்" என்றவர் அரைமணி நேரத்தில் வந்துவிட்டார், சினிமாவுக்குச் செல்லலாமா இல்லை வேறு எங்கும் செல்லலாமா என்பதில் எங்களுக்குள் பெருங்குழப்பம். 

"தலைவரே பில்லர் பக்கத்துல கிராமத்து எபெக்ட்டுல ஒரு முனீஸ்வரன் கோவில் இருக்கு ஒருதடவ மதுமதி கூட்டிட்டுப் போனார் போவோமா" என்றார். அட இதுதான நமக்கு வேணும் என்றபடி உற்சாகமாக கிளம்பினோம். எப்படியெல்லாமோ சுற்றவைத்தப் பாதை முடிவில் அந்த முனீஸ்வரனின் பிரம்மாண்ட சிலை அருகே கொண்டு சேர்த்தது.

டிபிகல் சென்னைக்கு சொந்தமான பணக்காரத்தனம் அதைத் தொடரும் குடிசைவாசிகள் இவர்களில் இருந்து சற்றே விலகி காட்சியளிக்கிறார் முனீஸ்வரன். அங்காள பரமேஸ்வரி மூலவராக அருள்பாலிக்க வெளியே காவல் தெய்வமாக முனீஸ்வரன். அருகே கூவம் சலசலப்பில்லாமல் வெறும் சாக்கடையாக ஓடிக் கொண்டுள்ளது.     








மிகவும் பிரம்மாண்டமான முனீஸ்வரன். கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் சென்னையின் அவுட்டோரில் இருந்திருக்க வேண்டிய முனிஸ்வரன் தப்பித்தவறி இண்டோரில் இருப்பதால் அவுட்டோர் செலவை மிச்சப் பிடிக்க பெரும்பாலான கிராமத்துப் படபிடிப்பு இங்கேயே எடுக்கபடுவதாக அரசன் சொன்னார்.  நாங்கள் சென்ற போதும் ஒரு குத்துபாட்டுக்காக ஆடிக் கொண்டிருந்தார்கள். கோவமான காவல் தெய்வம் வேறுவழியே இல்லாமல் கேவலமான குத்துப் பாடல்களைப் பார்த்துக் கொண்டுள்ளார்.

குறும்படம் - தமிழ் இனி 

சமீபத்தில் வெகுவாக பார்த்து ரசித்த ஒரு குறும்படம் தமிழ் இனி. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக எடுக்கப்பட்ட குறும்படம் என்றும் சொல்லலாம். இப்படத்தின் இயக்குனர் திரு.மணிராம் கலிபோர்னியா வாழ் தமிழர். நாளைய இயக்குனர் பைனல்ஸ் வரை முன்னேறி வந்தவர். படம் பற்றி நான் எதுவுமே கூறத் தேவையில்லை காரணம் படமே தேவையான விசயங்களை கூறிவிடும்.


இயக்குனர் மணிராம் அவர்களுடன் 
மேத்யு கார்மெண்ட்ஸ் 

ரங்கநாதன் தெருவுக்கு அருகில் இருக்கு நடேசன் தெருவில் மேத்யு கார்மெண்ட்ஸ் என்ற ஆடவர் ஆடையகம் உள்ளது. இங்கு ஒரு ரெடிமேட் ஷர்ட்டின் விலை 450 ருபாய் மட்டுமே. தரமாகவும் உள்ளது நிறைய வெரைட்டியும் உள்ளது. ஜீன்ஸ் மற்றும் பேன்ட் குறித்து நோ கமெண்ட்ஸ்... 

Mathew Garments

No 21 Uma Complex 1st Floor,Near Mambalam Railway Station, Natesan St, 
CIT Nagar, Thiyagaraya Nagar, Chennai, TN 600017 ‎
044 6632 6091 


உங்களை எல்லாம் ஏண்டி சுனாமி தூக்கல 

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு கிளம்பத் தயாரான போது தான் அவள் அலுவலகம் உள்நுழைந்தாள். வழக்கத்தை விட மேக்கப் கொஞ்சம் அதிகமாக இருந்தது. பின்னபடாமல் கலைத்து விட்ட தலையை கோதிக் கொண்டே அவளது தோழி அருகே சென்றவள் பையிலிருந்த ஸ்மார்ட் போனை கையில் எடுத்து அதனை முகம் பார்க்கும் கண்ணாடியாக மாற்றினாள். முகம் தெளிவாக தெரிந்திருக்காது என்று நினைக்கிறன் போனில் முன் பக்கம் இருக்கும் கேமராவை ஆன் செய்து தனது மேக்கப்பை  தொடங்கினாள்.

திடிரென்று "ஆவ்" என்றவளை நோக்கி அவளது தோழி "வாட்" என்றாள்.

"கேப்ல வரும் போது லேசா மழைதுளி பட்டது... ஸீ மை மேக்கப் வெண்ட் ஆப்" என்றபடி மேக்கப் கலைந்த  தனது முகத்தையே மீண்டும் சோகமாக பார்க்கத் தொடங்கினாள். 

அவளுடைய சோகம் என்னையும் ஆட்கொண்டது பாவம் மேக்கப் கலைந்த முகத்துடன் அவளால் எப்படி நைட்ஷிப்டை தொடர முடியும் என்ற பெரும் வருத்தத்துடன் வீட்டிற்கு கிளம்பிய போது மணி இரவு பதினொன்று.   


ஜஸ்ட்கிளிக் 

அரசனுக்குச் சொந்தமான நூலகத்தில்  





17 Sept 2013

நாளைய இயக்குனர் சீசன் 4 - இறுதிச் சுற்று

"ஏல சனிக்கிழம ஆபீஸ் இருந்தா லீவ் போட்று, நாம நாளைய இயக்குனர் பைனல்ஸ் போறோம்" வெள்ளிகிழமை விடியும் முன்பே என்னை எழுப்பி அழைப்பு விடுத்தான் மணிக்குமார்.  

நாளைய இயக்குனர் சீசன் நான்கின் சிறந்த படத் தொகுப்பாளருக்கான பரிந்துரையில் மணிக்குமரனின் பெயரும் இருக்கவே கண்டிப்பாக வருகிறேன் என்று கூறிவிட்டேன். ஏதாவது ஒரு நாளைய இயக்குனர் ஷூட்டிங்கிற்கு என்னையும் அழைத்துச் செல்லும்படி பலமுறை அவனிடம் கேட்டதுண்டு. இருந்தும் மறதி அவனது முக்கிய வியாதி.


சனிக்கிழமை அன்று அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெற்ற நாளைய இயக்குனர் இறுதிச் சுற்றுக்கு மாலை நான்கு மணிக்கே நானும் எனது தம்பியும் சென்று சேர்ந்துவிட்டோம். ஐந்து மணிக்கு ஆரம்பிப்பதாகக் கூறிய நிகழ்ச்சி ஒரு சிறிய தாமதத்துடன் சரியாக ஏழரை மணிக்கு ஆரம்பமாகியது.நிகழ்ச்சி தொடங்குவதற்கு கடைசி நிமிடம் வரையிலும் அரங்க வடிவமைப்பு வேலையைக் முழு ஈடுபாட்டுடன் கவனித்துக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியை ஒளி வெள்ளத்தில் மூழ்கடிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அன்று தான் கண்டுகொண்டேன்.  

இயக்குனர்கள் சுரேஷ் கிருஷ்ணா, சிம்பு தேவன், பாண்டிராஜ் மூவரும் நடுவர்களாக அமர, கீர்த்தியும் சஞ்சீவும் தொகுத்து வழங்கினார்கள். கீர்த்தியை டிவியில் பார்க்கும் போது கொஞ்சம் மொக்கையாகத் தோன்றினாலும் மேடையில் கொஞ்சம் அழகாகத் தான் தெரிந்தார். ஒருவேளை தூரத்துப் பச்சையாக இருக்குமோ!

ஏழு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு அவற்றில் இருந்து மூன்று படங்கள் தேர்ந்தெடுக்கப் போவதாக அறிவித்தார்கள், இடையிடையே சீசன் நான்கில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு விருது கொடுத்து கவுரவித்துக் கொண்டிருந்தனர். 

இறுதிச் சுற்றில் ஒளிபரப்பப்பட்ட குறும்படங்கள் 

1.மகனே மண்ணாங்கட்டி 

தன் மகனை மண்ணாங்கட்டி என்று திட்டும் ஆசிரியர் மற்றும் தன் மகனுக்கு வாய்ப்பு கொடுக்காத விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கு சவால் விடும் அப்பா, நகைச்சுவைக் கலந்த சென்டிமென்டான கதை.   

2. உன்விழியில் என் கனவு 

ஒரு கட்டத்தில் தன் காதலி ஒரு திருநங்கை என்று தெரியவரும் பொழுது காதலனின் மனப்போராட்டம் மற்றும் என்ன முடிவெடுத்தான் என்று பயணிக்கும் வித்தியாசமான கதைக்களம். 

3. +91சைண்டிஸ்ட் 

நடிகர் ஸ்ரீகாந்த் உட்பட பெரிய பெரிய திரை நட்சத்திரங்கள் நடித்த குறும்படம். ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் மேதைகள் அனைவரும் ஏன் இந்தியாவைத் துறந்து வெளிநாடு செல்கிறார்கள் என்பது குறித்து எடுக்கப்பட்ட விழிப்புணர்வு படம். படித்தவர்கள் நாட்டைத் துறந்து செல்வதில்லை, துரத்தபடுவதால் செல்கின்றனர் என்பது தான் கதையின் மையம்.    

4. ஏழையின் சிரிப்பில் 

தெருவோர அண்ணன் தங்கை பாசம் குறித்த மனதை நெகிழ வைத்த படம். 

5. கொஞ்சம் பெரிய மனசு 

சாலையில் நடக்கும் பிரச்சனையைத் தட்டிக்கேட்க பெரிய மனசு தான் வேண்டும் என்று அவசியமில்லை, கொஞ்சம் பெரிய மனசிருந்தால் போதும் என்பதை வலியுறுத்தும் அருமையான படம்.
     
6. ஓம் க்ரீம் 

பேய் ஓட்ட வருபவன் அந்தப் பேயையே காதலிக்கத் தொடங்க, பேயும் இவனைக் காதலிக்கத் தொடங்க இருவருக்குள்ளும் நடக்கும் காதல்ப் போராட்டம் தான் கதை. வித்தியாசமான ஜாலியான படம்.
   
7. காற்று(முதல் பரிசு)   

ஒன்றுமே புரியாத திரைக்கதை என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அட சொல்லவைத்து முடிந்த படம். இந்த சமுதாயம் பெண்களை எப்படியெல்லாம் தங்கள் கைப்பாவையாக வைத்துள்ளது என்பதே படத்தின் கதை.


திரைப்பட பிரபலங்கள் 

இந்த நிகழ்விற்கு திரைப்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், பாலு மகேந்திரா, பாக்யராஜ் மற்றும் அவரது மகன் சாந்தனு, எஸ்.வி சேகர், அருண் விஜய், காதல் தண்டபாணி, கானா பாலா, சூதுகவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி, சிம்கா, விஜய் ஆதிராஜ், நிதின் சத்யா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அன்றைய மாலைப் பொழுதின் விழா அரங்கமே குறும்பட குடும்பத்தினரால் நிறைந்திருந்தது. தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும்  கிராமத்தில் இருந்தெல்லாம் தங்கள் பெற்றோர்கள் உறவினர்களை அழைத்து வந்திருந்தனர்,  தாங்கள் திரையில் கண்ட மாபெரும் நட்ச்சத்திரங்களிடம் இருந்து தங்கள் குழந்தைகள் விருது பெரும்போது அந்தப் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் மனதில் என்னோற்றான் கொள் என்னும்சொல் என்று நினைத்திருப்பார்கள்.

சிறந்த இசை அமைப்பாளர், படத்தொகுப்பாளர், நடிகர், நடிகை, வசனகர்த்தா, ஒளிபதிவாளர் என்று பல பிரிவுகளில் பணியாற்றியவர்களுக்கும் பரிசுகளை வழங்கினர்.

நாளைய இயக்குனர் சீசன் நான்கில் வெற்றிபெற்ற படமான "காற்று" குறும்படத்திற்கு கே.பி அவர்கள் பரிசினை வழங்கினார். காற்று படத்தின் இயக்குனர் வேந்தன் மென்பொருள் துறையில் பணிபுரிந்து கொண்டே குறும்படங்களையும் இயக்கி வருகிறார். 

சாந்தனு மற்றும் அருண்விஜய் மேடையில் பேசும்பொழுது நல்ல கதையுடன் வரும் இயக்குனர்களின் திரைப்படத்தை தயாரிக்க முன்வருவதாகக் கூறினார்கள்.

ஒரு காலத்தில் சினிமாவினுள் நுழைய வேண்டும் என்றால் கோடம்பாக்கமே கதி என்று தவமிருந்த நிலை மாறி, திறமை இருக்கும் யார் வேண்டுமானாலும் திரைப்பட உலகினுள் நுழையலாம் என்னும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது இன்றைய குறும்பட உலகம்,குறும்பட இயக்குனர்களுக்கு சிறப்பான தளம் அமைத்துக் கொடுத்து அவர்களை இன்னுமின்னும் சிறப்பாக மெருகேற்றும் கலைஞர் தொலைகாட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

என்னைப் பொருத்தவரை கலைஞர் தொலைகாட்சியில் வெளிவரும் ஒரு உருப்படியான மற்றும் நான் பெரிதும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி என்றால் அது நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மட்டும் தான். இந்நிகழ்ச்சி இன்னும் பாகங்களைக் கடக்க வேண்டும், திறமை இருப்பவர்கள் பலரை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் விரைவில் ஸீசன் 5 தொடங்கப் போவதாக அறிவித்தார்கள். 

ஸீசன் ஐந்தை எதிர்பார்த்து ஆவலுடன்...  


7 Aug 2013

சாவி - த்ரில்லர் குறும்படம்


அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர் சுரேஷ் நடித்து வெளிவந்திருக்கும் குறும்படம் சாவி. படத்தின் போஸ்டர் வெளிவந்த நாளில் இருந்தே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். 

ஒரு சஸ்பென்சுடன் ஆரம்பமாகும் படத்தின் திகிலை படம் முடியும் வரையிலும் தொடர வைத்திருப்பது சுவாரசியம். ஒரு வீட்டிற்குள் ஒரே ஒருவரை மையமாக வைத்து சுழலும் கதை, ஒருவேளை பேய்படமோ என்று நம் எல்லோரையும் நம்ப வைக்கும் பேய்படம் போன்ற ஒரு படம். படத்தின் இயக்குனர் தனசேகர் பூபாலன் தனது கதையை வித்தியாசமான கோணத்தில் இயக்கியுள்ளார், அவரது இயக்கத்தில் சுரேஷ் அவர்களின் நடிப்பு வெகு இயல்பாக உள்ளது.



ரீரெக்கார்டிங்கில் டப்பிங் தவிர்த்து மற்ற எல்லாமே மிக அருமை, சற்றே மெதுவாக நகரும் திரைகதை என்றாலும் தொய்வு இல்லை. மிகச் சிறந்த முயற்சி...

சுரேஷ் பாஸ் விரைவில் உங்களது படைப்பு வெள்ளித்திரையில் வலம் வர வாழ்த்துக்கள். 

சாவி - குறும்படம் பார்த்து நண்பரின் யுட்யுப் சேனலில் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து செல்லுங்கள். 

16 Jan 2013

குறும்படம் எடிட் செய்வது பற்றி எடிட்டர் மணிக்குமரனுடன் ஒரு நேர்காணல்



சுரேஷ் அவர்களின் மற்றும் ஒரு படைப்பு குறும்படத் துறையில் துறையில் எடிட்டர் ஆக இருக்கும் மணிக்குமரனை பேட்டி கண்டு, எடிட்டிங் சம்மந்தமான டிப்ஸ் வாங்கியது.

கண்டேன், முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற திரைபடத்தில் உதவி இயக்குனராக இருந்தவர். எடிட்டர் அண்டொனியிடம் பால பாடம் கற்றவர். குறும்படத் துறையில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை வெட்டி ஒட்டியவர். சமீபத்தில் நாளைய இயக்குனர் சீசன் 4 இல் இவர் எடிட் செய்த சுவரொட்டி என்னும் படம் சிறந்த படக் குழுவினருக்கான விருது பெற்றது என்பது குறிபிடத்தக்கது.

குறும்படத்தில் இருந்து அடுத்த நிலையில் தயாராகி வரும் இயக்குனர் இளனின் விசித்திரம் படத்தில் எடிட்டர் ஆக இருப்பவர்

ணிகுமரன் இன்னும் பல பெரிய சாதனைகள் செய்ததும் அவரைப் பற்றிய பெரிய பதிவு ஒன்று பதிவு செய்கிறேன். அதுவரை அவனுக்கு இதுவே கொஞ்சம் ஓவர் தான்.
  
டிட்டிங் சம்மந்தமான அணைத்து வித கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் கூறினார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்குஅதை வழக்கம் போல் தன்னுடைய சிறப்பான பாணியில் இயக்கி எடிட்டிங் செய்த நண்பர் சுரேஷுக்கு ஒரு ஷொட்டு






இந்த நேர்காணலில் கேள்விகள் கேட்க ஒப்புக் கொண்ட நண்பன் மணிவண்ணன் மற்றும் ராகவனுக்கு நன்றி. மேலும் துணை புரிந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்.  

தொடர்புடைய பதிவு