31 Jul 2012

துப்பறியும் கணேஷ் வசந்த் - யுத்தம் ஆரம்பம் - தொடர்


யுத்தம் ஆரம்பித்த இடம் ஹாரி பாட்டர் வலைபூ. முதல் பகுதி படிக்காதவர்கள் படித்துவிட்டு மாறுபட்ட  இக்கதையை தொடருங்கள்.




துப்பறியும் கணேஷ் வசந்த் - யுத்தம் ஆரம்பம் 2 - தொடர்


  

ழக்கத்தை விட சுருதி கொஞ்சம் கம்மியான குரலில் வயிற்றிற்குள் இருந்து வெளிவந்த கார்பன் டை ஆக்ஸைடை ஏழு ஸ்வரங்களுக்குள் அடங்காத இசையாக மாற்றிக் கொண்டே அலுவலகத்தினுள் நுழைந்தான் வசந்த்.

"ப்போ விசிலடிக்கிறத நிப்பாட்ட போறியா இல்லியா?  " கணேஷின் சிந்தனை தடைபட்டதற்கான எரிச்சல் அவன் வார்த்தைகளில் தெரிந்தது.
  
"தே தம்புசெட்டி தெருவில், அதே இடத்தில இருக்கும் லாயர் கணேஷ் அலுவகத்தில் விசலடிக்கக் கூடாது அப்படின்னு அம்பேத்கர் எதுவும் எழுதி வைச்சதா எனக்கு நியாபகம் இல்லையே பாஸ்" .

தில் எதுவும் சொல்லாமல் அன்றைய தினசரியில் ஆழ்ந்தான் கணேஷ். வசந்த் தன் கையிலிருந்த கார் சாவிக்கு தூக்கு தண்டனையை வழங்கிவிட்டு கணேஷிடம் 

"பாஸ் ஒன்னு அந்த பியட்ட மாத்துங்க இல்ல என்ன மாத்துங்க, உங்ககிட்ட இருந்து எங்க இரண்டு பேரில் யாருக்கு விமோசனம் கிடைத்தாலும் சந்தோசம் தான்"

"உனக்கெல்லாம் விமோசனமே கிடையாதாடா? "

"தைத் தான் பாஸ் நானும் உங்ககிட்ட கேக்கிறேன் எனக்கெல்லாம் விமோசனமே கிடையாதா !" கணேஷ் முறைத்தான் சரி  பியட்ட மாத்த வேண்டாம் உங்க டப்பா மொபைல் அந்த டபிள் ஒன் டபிள் ஜீரோவையாவது மாத்தக் கூடாதா?" குரலில் அலுத்துக் கொண்டான். 

"லகமே ஆண்ட்ராயிட் ஆப்பிள்ன்னு சுத்திகிட்டு இருக்கு, நீங்க மட்டும் மாறாமலேயே இருக்கீங்க". கணேஷ் லேசாக சிரித்துவிட்டு குளியலறை நோக்கி சென்றான். இந்நேரத்தில் கணேஷ் போன் ரிங் ஆக, அதை வசந்த் எடுக்க, பேசியவரின் வார்த்தைகளைக் கேட்டு தன் முகத்தை மாற்ற, சில நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்படவும் கணேஷ் பாத்ரூம் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது. இந்நேரத்தில் குறுந்தகவல் வந்ததன் அடையாளமாய் "பீப்" ஒலித்து அமைதியாகியது. அதனை எடுத்துப் படித்த வசந்தின் முகம் கணேஷ் அணைத்த பாத்ரூம் பல்பை விட பிரகாசமாய் எறிந்தது. 

"பாஸ் உங்க மொபைல கோடி ரூபா கொடுத்தா கூட வித்ராதீங்க. இது போன் இல்ல பொக்கிஷம். இப்போ பேசினது யாரு தெரியுமா!   அரசியலையும் ஸ்டைலையும் சென்சஷேன் ஆக்கினவரு , நேத்து தப்பிப் பிழைச்சவரு" 

சந்த் ஆர்வத்தோடு சொல்ல கணேஷோ " வசந்தா அவர மாதிரி பேசறவங்க ஜப்பான் ல கூட ஆயிரம் பேரு இருக்காங்க டா" குரலில் கணேஷும் சிறிது ரஜினி ஆனான்.

"ணேஷா இந்த வசந்த் ஒன்னும் அவ்ளோ சீக்கிரமா யார்கிட்டயும் ஏமாற மாட்டான்." அவனும் ரஜினியானான், கலைந்த தன் தலைக்குள் கையைவிட்டு மேலும் கலைத்தான். அதிலும் ரஜினியே. 

"ரி போன் பண்ணினது அவரு தான்னு எப்படி நம்புறது"  

"ப்படிக் கேளுங்க, தலைவர் போன் போட்டு உங்க கூட பேசனும், பார்க்கனும்னு சொன்னாரு, நான் கூட எதிர்க்கட்சிகாரன் ஏவல்னு சீரியஸா எடுத்துக்கல, அவர போய் நாம பார்க்க வேண்டிய இடம் எல்லாம் சொல்லி முடிச்சதும் அவரே போன கட் பண்ணிட்டாரு, ஆனா..."          

"னாவுக்கு அப்புறம் என்ன நடந்ததது அத சொல்லு" கணேஷ் வசந்தை வேகப்படுதினான்.

"வர் போன் கட் பண்ணினதும் எனக்கு ஒரு மெசேஜ் ரிசீவ் ஆச்சு, அதான் என் நம்பிக்கைக்கு காரணமே"

"ன்ன மெசேஜ் "

"ன்னிக்கு எல்லா நியூஸ் பேப்பர்லையும் தலைப்பு செய்தி என்ன? " 

" WAR BEGINS யுத்தம் ஆரம்பம் " 

ணேஷ் சொல்லி முடிக்க, தன் கையிலிருந்த மொபைலை நீட்டினான் வசந்த்.

*******************************************************

சந்த் நீட்டிய மொபைலை வாங்கிப் படித்துவிட்டு 

"ல்லீங்க கணேஷ் இவங்கள சும்மா விடப் போறது இல்ல.  WAR BEGINSன்னு சொல்றாங்க யுத்தம் ஆரம்பம்னு சொல்றாங்க, யார் யார் கூட யுத்தம் பண்ணப் போறாங்க... என் கூட யுத்தம் செய்யல கணேஷ்... தமிழக மக்கள்... தமிழக மக்கள் கூட யுத்தம் செய்ய போறாங்க. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா" பலமான தன் அதிரும் சிரிப்பின் பின் அமைதியானார் முதல்வர் ரஜினிகாந்த்.

"ரியணையில் அமர்ந்த உங்களைப் பார்த்து சந்தோசப்படவா இல்ல இப்படி அடிபட்டு இருக்கத பாத்து வருத்தப்படவான்னே தெரியலை சார்" தன் வருத்தமானதொனியில் சொல்லிய கணேஷ் முதல்வரின் பதிலை எதிர்பார்த்து அவர் கண்களில் தன் பார்வையைப் பதித்தான். பார்க்க முடியவில்லை. கண்களில் அத்தனை தீர்க்கம்.


"நேற்று நடந்த குண்டுவெடிப்பு சமந்தமா பேசுறதுக்காகத் தான் உங்கள வரச் சொன்னேன் கணேஷ். ஸ்டோரி டிஸ்கசன் அப்போ சுஜாதா சார் பெரும்பாலும் உங்களைப் பத்தி தான் பேசுவாரு! கிரேட் மேன்.... ஐ மிஸ் ஹிம் லாட்..."

"வீ  டூ சார்..." வசந்த் சொல்லிவிட்டு சோகமாக கணேசைப் பார்த்தான், கணேஷாலும் எதவும் பேசமுடியவில்லை.

"ஷெங்கர் சார் கிட்ட தான் உங்க நம்பர் வாங்கினேன். நிறைய விஷயங்கள் பேசனும்"

"பேசலாம் சார்" இது வசந்த்.

" வசந்த் மறந்தே போய்ட்டேன். மொதல்ல அந்த ஜோக் சொல்லுங்க இன்னிக்கு தெரிஞ்சே ஆகணும் " அடிபட்ட வேதனையிலும் உற்சாகமானார் தலைவர்.

"மெக்சிகோ நாட்டுல" வசந்தும் ஆர்வமுடன் ஆரம்பிக்க. " சார் நீங்க தனியா இருக்கும் போது சில முக்கியமான விஷயங்கள் பேசலாம்னு தான் வந்தோம்.அதுக்கு சரியான நேரம் இதை விட்டா வேறு இருக்காது. வசந்த்தை இடைமறித்த கணேஷ் அவனை கண்களால் எரித்துவிட்டு அமைதியானான்.

"மா கணேஷ் என்னோட மனசுலயும் பல குழப்பங்கள் இருக்கு. இந்த முதலமைச்சர் பதவி அதுக்குள்ள இவ்ளோ பெரிய வலிய உண்டு பண்ணும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல." 

பெருமூச்சு ஒன்றை விட்டு மேலும் தொடர்ந்தார். " கோவலன் மதுரைக்கு வரும் போது கோட்டை வாசல்ல இருந்த கொடி  உள்ளே வராதே உன் உயிருக்கு ஆபத்துன்னு சொல்ற மாதிரி அசைந்ததாம்.  இந்தக் கோட்டைக்கு நான் வரும் போது எந்தக் கொடியுமே அப்படி அசையலையே கணேஷ். கணேஷ் அது என்ன சிலப்பதிகாரப் பாடல்னு தெரியுமா?".

"போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 
வாரால் என்பது போல் மறித்துக் கைகாட்ட

அழகிய தமிழில் சொல்லி முடித்தான் வசந்த்.

"சந்த் உங்களுக்கு இலக்கியம் கூட தெரியுமா?" தன் சிறிய விழிகளை அகல விரித்து ஆச்சரியக்குறியைக் காட்டினார் ரஜினி.

"வனுக்கு தொல்காப்பியத்திலிருந்து 'தோல்'காப்பியம் வரை எல்லாமே தெரியும் சார் நாகரிகம் தவிர " பொய்க் கோபத்துடன் வசந்தை முறைக்க , அவனும் பதிலுக்கு முறைத்தான்.

"ஹா ஹா ஹா" சிரித்துவிட்டு ஆழ்ந்த சிந்தனயில் ஆழ்ந்தார். " ஏதோ முக்கியமான விசயம்ன்னு சொன்னீங்களே சொல்லுங்க கணேஷ்"

ணேஷ் ஆரம்பித்தான் " சார் நேத்து ராத்திரி விழா நடந்த அரங்கதிற்குள்ள வர முடியல. அவ்ளோ கூட்டம். வெளியில இருக்ற திரையிலாவது உங்களைப் பார்த்துவிட்டுத் தான் வருவேன்னு வசந்த் அடம் புடிச்சான். கார்ல இருந்து விழா நிகழ்வுகளப்  பார்த்துட்டே இருந்தோம்" இமைக்காமல் சம்பவங்களை துரத்திக் கொண்டிருந்தார் ரஜினி.

"ப்போ திரையில் தெரிஞ்ச விஜயகாந்த் தொண்டன் கையில எதையோ கொடுத்ததையும் அத அந்த தொண்டன்  உங்க கையில கொடுத்ததையும் பார்த்தோம்.அவரு மேடைய விட்டு அகன்ற கொஞ்ச நேரத்துல பயங்கர சப்தம். எங்களுக்கு முன்னாடி நின்ன கார் புயல் வேகத்தில புறப்பட்டது.  என்ன நடந்த்ததுன்னு மூளை மனசுகிட்ட சொல்றதுக்குள்ள வசந்த் அந்தக் கார பாலோ பண்ண ஆரம்பிச்சான். ஏன்னு கேட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மேடையில பார்த்த விஜயகாந்த் இப்போ அந்த கார்ல போறாரு. சாம் திங் ராங். வீ ஹாவ் டூ பாலோ ஹிம் பாஸ்னு சொன்னான்."

"சந்த் சில விசயங்கள்ல கோடு போட்டாம்ன்னா  ரோடு போடாம விடமாட்டான்" நிறுத்திவிட்டு கணேஷ் வசந்தைப் பெருமையோடு பார்த்தான். இப்போது வசந்த் தொடர்ந்தான். 

"தாம்பரம் டூ வேளச்சேரி போற பாதையில இருக்கிற காஞ்சு போன காட்டுக்குள்ள கார் போனது. நாங்களும் போனோம். கார் போக வழியில்லை. நடந்து போய் துரத்தினோம். கட்டி முடிக்காம இருந்த அப்பார்ட்மென்ட் கிரௌண்ட் ப்ளோர் ல அங்கங்க துப்பாக்கி குண்டுகள் சிதறி இருந்தது. ஹால் நடுவில ஒருத்தர கட்டிபோட்டு இருந்தாங்க. விஜயகாந்த் போய் கட்டவிழ்துவிட்டாறு, ஏதோ வாக்குவாதம் பண்ணினாங்க. கொஞ்ச நேரத்துல்ல அந்த இரண்டு பெரும் ஒளிஞ்சு இருந்து வேடிக்கைப் பார்த்த எங்கள கவனிக்காம போனாங்க. அப்போ தான் கட்டுபடிருந்தவர் முகத்த தெளிவாப் பார்த்தோம் அது அர்ஜுனனு."     

"யோசிக்கக் கூட நேரம் இல்லாம அவங்களைப் பின் தொடர்ந்தோம். வந்த கார் புறப்பட்டது. எங்க கார் பின்னாடி இருந்து இன்னொரு உருவம் வெளிப்பட்டு அதுவும் அந்த கார்ல ஏறியது. வானத்தில திடீர்ன்னு மின்னல் வெட்ட சரத்குமார் தான் அந்த திடீர் மனிதர்னு கண்டுபிடிச்சோம். வேகவேகமா கார ஸ்டார்ட் பண்ணி துரத்தும் போது தான் தெரிஞ்சது, எங்க கார் பெட்ரோல் டாங்க்ல ஓட்டை போட்டு லீக் பண்ண வச்சு எங்கள தடுத்து நிப்பாட்டினது  சரத்குமார் தான்னு." இது தான் தலைவா நடந்தது. வசந்த் நிறுத்தினான்.

  ஆச்சரியத்திலிருந்து அதிர்ச்சிக்கு தள்ளப்பட்ட ரஜினி கணேஷிடம் கேட்டார் " விஜயகாந்த் எனக்கு நல்ல நண்பன் அவன் பண்ணியிருக்க வாய்ப்பே இல்ல மேலும் அவன் கூட வார அர்ஜுன் பத்தி எனக்கு நல்ல தெரியும். அர்ஜுன், அமெரிக்கன் ஜெமேஸ் கூட எல்லாம் டிடெக்டிவ்வா வொர்க் பண்ணியிருக்கான். சரத்குமார் என் கட்சி தான். நீங்க சொல்றது எதையுமே என்னால நம்பவே முடியல கணேஷ் என்ன நடக்குது கணேஷ். ஒன்னுமே புரியல"

சந்த் விளக்கினான். " ரெண்டு சாத்தியக் கூறுகள் இருக்கு சார். விஜயகாந்த், அர்ஜுன் சரத்குமார் மூணு பேருமே கெட்டவங்க. குண்டு வெடிப்பு நடக்ரதுல அர்ஜுன்க்கு கடைசி நேரத்துல உடன்பாடு இல்லாம போயிருக்கலாம், அதனால் மூணு பேருக்குள்ளையும் சண்டை வந்த்ருக்கலாம், அர்ஜுன கட்டிபோட்டுட்டு மத்த ரெண்டு பெரும் சேர்ந்து காரியத்த முடிச்சிருக்கலாம். காரியம் முடிஞ்சதும் மூணு பெரும் சமாதானம் ஆகியிருக்கலாம்." வசந்த் சிறிது இடைவெளிவிட்டு கணேஷைப் பார்த்தான்.

"ப்போ இன்னொரு சாத்தியக்கூறு என்ன கணேஷ்?" இடைவெளியை நிரப்பினார் ரஜினி. 

"வங்க மூணு பேருமே நல்லவங்க. இந்தத் திட்டம் கடைசி நேரத்துல இவங்க மூணு பெருகும் தெரிய வந்திருக்கு, தீவிரவாதிகள் கூட அர்ஜுனும் சரத்குமாரும் சண்டை போடுற நேரத்துல விஜயகாந்த் உங்கள எச்சரிக்கை பண்ண வந்திருக்கலாம். உங்களை எச்சரிச்சதும் அவங்கள காப்பாத்த கிளம்பிருக்காரு. இந்த நேரத்துல அர்ஜுன் அந்த உண்மையான தீவிரவாதிகளால கட்டுபட்டிருப்பரு , சரத்குமார் அவங்கள ஓடஓட துரத்தி அடிசிருப்பாறு, விஜயகாந்த் அர்ஜுன் கட்டவிழ்த்து காப்பாதிருப்பாறு" 

"வாவ். சுஜாதா சார் சொன்னதுல கொஞ்சம் கூட பிழையில்ல கணேஷ். மார்வலஸ் என்னால நம்பவே முடியல." 

"பட்" ரஜினி பாஸ் செய்தார்.

"இந்த பட் க்கு வசந்த் பதில் சொல்லுவான் சார்"

"கேப்டன் அர்ஜுன் சரத் இந்த மூணு பெரும் நல்லவங்களோ கெட்டவங்களோ இந்த மூணு பேரு விசயத்துல நாலாவது அஞ்சாவதா இந்த கணேஷ் வசந்த் நுழையிறது அவங்களுக்கு பிடிக்கமா போயிருக்கலாம். பெட்ரோல் சிந்த வச்சு அவங்க தப்பியிருக்கலாம். " 

தைக் கேட்டதும் ரஜினி முகத்தில் ஈ ஆடவில்லை.  கவலையின் ரேகைகள் படர்ந்தன. இந்நேரத்தில் டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளே நுழைய சம்பிரதாயமாக பேசிவிட்டு கணேசும் வசந்தும் விடைபெறும் பொழுது ரஜினியும் ராஜேந்திரனும் ஒரே குரலில் சொன்னார்கள் " கணேஷ் வசந்த் வீ நீட் யு ஆல்வேஸ். "   


ந்நேரத்தில் அஜீத் விஜய் மொபைலில் குறுந்தகவல் வந்ததன் அடையாளமாய் "பீப்" ஒலிக்க எடுத்துப் படித்ததும் பரபரப்பானார்கள்... அந்த குறுந்தகவல் சொல்லிய தகவல்..

" WAR BEGINS யுத்தம் ஆரம்பம் "  .....

அடுத்து ஆரம்பமாகும் இடம் 

நண்பன் பக்கம் அப்துல் பாசீத் வலைப்பூ ... படிக்கத் தவறாதீர்கள்.... 

பகுதி 4 - ராஜ் -சினிமா சினிமா-

பகுதி 5 - சின்னமலை - தல போல வருமா-

பகுதி 6 - SCENECREATOR -யாவரும் நலம்-

பகுதி 7 - ஹாலிவுட் ரசிகன்- ஹாலிவூட் பக்கம்-

பகுதி 8 - KUMARAN - எண்ணங்களும் வண்ணங்களும்-

பகுதி 9- ராஜா - என் ராஜ பாட்டை -

பகுதி 10 - JZ - JZ சினிமா -

பகுதி 11 - கணேஷ் - மின்னல் வரிகள் -

பகுதி 12 - ஸ்ரீராம் - எங்கள் பிளாக் -

பகுதி 13 - அருண் - அவிழ்மடல்

இணைய விரும்பும் நண்பர்கள் இணையலாம்..


பகுதி பதிமூன்றைத் தொடர்பவர்கள் பற்றிய அறிவிப்பு நண்பன் ஹாரியின் மூலம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்  



27 Jul 2012

பதிவுலக நண்பர்களே... நமக்காக ஒரு பதிவு...



திவுலகம் புதுமையா! இல்லை புதிதாக வருபவர்களை தட்டிக் கொடுத்து மெருகேற்றும் பதிவுலக நண்பர்கள் புதுமையா! தெரியவில்லை. பதிவுலகில் புதிது புதிதாக நடைபெறும் ஒவ்வொரு அசைவுகளையும்  இருகரம் கூப்பி வரவேற்கும் பதிவுலக நண்பர்களை தமிழ் பெற்றிருப்பது நிச்சயம் புதுமை தான்... 



பதிவுலக நண்பர்களே... நமக்காக ஒரு பதிவு... என்பது நான் வைத்த தலைப்பு எதையுமே நகைச்சுவையாக பகிரும் நண்பன் ஹாரியோ இவ்விசயத்திற்கு வைத்த தலைப்பு சீரியஸ் பதிவு. ஆம் மிகவும் சீரியசாக நேர்த்தியாக வடிவமைத்து அதில் நம்மையும் பங்கெடுக்க வைக்கும் அளவிற்கு சிந்தித்த அவனது சிந்தனை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதற்காக முதல் நன்றிகள். அதில் பங்குபெற அழைக்கும் உங்களுக்கு என் முதல் வணக்கங்கள். 

பதிவுலக நண்பர்களாகிய நாமெல்லாம் சேர்ந்து ஒரு தொடர் கதை எழுதப் போகிறோம் அதில்வரும் ஒவ்வொரு பாகங்களையும்  ஒவ்வொரு பதிவர் எழுதப்போகிறார். ஒரு தொடர் சங்கிலி போன்ற நிகழ்வு இது. கிடைக்கும் பலன்கள்  

புதிய பதிவரின் அறிமுகம் 
நம் திறமையை அறிய நமக்கே ஒரு வாய்ப்பு
அதனை  சகபதிவர்கள் அறியும் வாய்ப்பு
கதையை தொடரவும் தொடர்ந்து படிக்கவும் ஒரு வாய்ப்பு
பெரிய அளவில் வெற்றி பெற்றால், பதிவுலக சாதனையாகும் வாய்ப்பு 

தோல்வி அடைந்தாலும் அதில் பங்கெடுக்கும் வாய்ப்பு 

தொடர் பதிவு எழுத விதிமுறைகள்

1. இது ஒரு தொடர் பதிவு மட்டுமே.. எழுதுபவர்கள் அவரவர் பிளாக்கில் அந்த பதிவை வெளியிடல் வேண்டும்.. ஆனால் முந்தைய பகுதி  லிங்குகள் கொடுக்க பட வேண்டும்.

2.  கதைக்கு அந்த வாரம் எழுதும் பதிவரே வித்தியாசமான பெயர்கள்  வைக்கலாம்..

3. நகைச்சுவையாக, கொலைவெறியோடு, காதலோடு, உலக சினிமா போல், கிராமத்து பின்னணியில், செவ்வாய் கிரகத்தில் எப்படியும் கதையின் பாதையை தொடரலாம்.. 


4. பதிவர்களின் விருப்பதிற்கு அமைய நீங்கள் இன்னும் எத்தனை கதாபாத்திரங்களைவேண்டுமானாலும் கதையில் இணைக்கலாம்.. புத்தகம், நாவல், பொது வாழ்க்கை, அரசியல் பிரபல கதாபாத்திரங்களை தெரியலாம். (ஸ்பைடர் மேன், சுஜாதாவின் கணேஷ் வசந்த், ஒபாமா)



5. அதிக கதாபாத்திரங்களை இணைத்தாலும் முக்கிய கதாபாத்திரங்களை பிரதான கதைக்குள் நகர்த்துங்கள். 



6. இங்கு கதை எழுதுபவர்கள் பல தரப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் ஆனாலும் பக்க சார்பாக எழுதமாட்டார்கள் என்பதை மற்ற நண்பர்களுக்கு கூற கடமை பட்டுள்ளேன்.(என்ன ஒரு ராஜ தந்திரம் ஹாரி அவர்களே)



7. மேலும் நகைச்சுவை, கிரைம் கலந்து எழுதினால் அடுத்த பகுதி எழுதும் நண்பருக்கு லீட் கிடைக்கும்.. அப்படி ஏனைய லீட் வைத்து எழுத கூடிய திறமைசாலிகள் அவர்கள் ஸ்டைலில் எழுதலாம். 



8. ஆனாலும் அந்த கதையில் ஒரு பதிவில் ஆரம்பமும் முடிவும் இருத்தல் வேண்டும்.. (X FILES போல அல்லது சில ஆங்கில தொடர்கள் போல)



9. இதுவரை ஓகே சொன்ன எழுத்தாள சிகாமணிகள்.. கதை முடிவில் கலைமாமணிகள் ஆனாலும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை.. 


மேற்கூறிய விதிமுறைகள்  கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே அடுத்த பதிவை எளிதில் தொடர முடியும்.  சுவாரசியம் நிறைந்த தொடராக நம்மால் மாற்ற முடியும் என்பது நிச்சயம்.  

ந்த அழைப்பும் விடுக்காமல் ஹாரி என்னை பதிவெழுத அழைத்தான், நானும் சிலருக்கு அழைப்பு விடுகிறேன் அவர்கள் இத்தொடருக்கு ஊக்கம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில்... நான் அழைப்பு விடுக்கும் பதிவர்களின் தளங்களில் அவர்கள் சிறுகதையை படித்துள்ள காரணத்தால் அழைக்கிறேன், நான் அழைக்காததால் உங்களுக்கு சிறுகதை எழுதத் தெரியாது என்றில்லை, ஆர்வம் இருப்பின் உரிமையோடு வந்து கலந்து கொள்ளுங்கள் அழைப்பு வரவில்லை என்று கோபம் மட்டும் கொள்ளாதீர்கள். 

மின்னல்வரிகள் கணேஷ் சார் 
சென்னை பித்தன் 
என் ஜன்னலுக்கு வெளியே நிரஞ்சனா 
எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார்  
பாலா பக்கங்கள் பாலா 
தூரிகையின் தூறல் மதுமதி 
வெங்கட் நாகராஜ் 
ரிஷபன் 
வெங்கட் ஸ்ரீநிவாசன் 


இந்தத் தொடர்கதை பற்றிய பதிவுகள் நண்பன் ஹாரியின் தளத்தில்



அறிவிப்பு வழங்கியதோடு மட்டுமில்லாமல் நம் பயணத்தையும் தொடங்கி விட்டான்...
தொடர் கதையின் ஆரம்பக் கதை படிக்க இங்கே சுட்டுங்கள் 



இந்தத் தொடர் பதிவின் அடுத்த பாகம் நான் எழுத இருப்பதால் வெகு விரைவில் என்னுடைய தளத்தில் வெளியிடப் படும் என்ற அறிவிப்பையும் சேர்த்துக் கொள்கிறேன்.

உங்கள் விருப்பத்தை நண்பன் ஹாரியிடம் சொல்லுங்கள் .

உங்கள் கருத்துகளை இங்கே  பகிர்ந்து செல்லுங்கள்.



26 Jul 2012

காமராஜரும் கதர்க்கடை ராமசாமியும்


வ்வாறு காமராஜருடன் நட்பாய் இருந்த அந்த கதர்கடை ராமசாமி என்பவர் யார் தெரியுமா! அவர் தான் என் தாத்தா, என்று தான் இந்தப் பதிவை முடிக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் அவ்வாறு முடிப்பதில் இருக்கும் சுவாரசியத்தை விட இவ்வாறு தொடங்குவது சுவாரசியத்தை சற்றே அதிகமாக்கும் என்று கருதியதால் தொடர்கிறேன்.


ன் தாத்தா கதர்க்கடை வைத்திருந்த அதே இடத்தில் தான் எனது மாமாவும் மளிகைக் கடை வைத்திருந்தார். சிறுவயது முதல் எனது பெரும்பாலான நேரங்கள் அந்தக் கடையில் வியாபாரம் செய்வதில் தான் கழியும். வழக்கமாய் கடைக்கு வரும் ஒரு பெரியவர் சொல்லிய தகவலில் இருந்து தான் 'கதர்கடை ராமசாமி' பற்றிய என் தேடல் தொடங்கியது. அந்த மாலையில் நானும் எனது மாமாவும் கடையில் அமர்ந்திருந்த வேளையில் அந்தப் பெரியவர் வந்தார். 

ல்லாப் பெட்டியில் அமர்ந்து இருந்த மாமாவைப் பார்த்துக் கூறினார் " இந்த இடத்துல உக்காந்து இருக்கதுக்கு நீயெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்" சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார் " இது யார் உக்காந்திருந்த எடம் தெரியுமா டே? கதகடை ராமசாமி உக்காந்திருந்த எடம்". சொல்லிவிட்டு என்னை பார்த்தார், நான் உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்துவிட்டு என்னிடமும் அதையே கூறினார், "இந்த இடத்துல உக்காந்து இருக்கதுக்கு நீயெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும் "

ப்போது அவரை நான் பேசவிடவில்லை, நான் கேட்டேன் "மாமா உக்காந்திருக்கது தாத்தா உக்காந்திருந்த இடம், நான் உக்காதிருந்த இடத்துலையும் ராமசாமி உக்காந்திருந்தாரா என்ன?" என் துடுக்கான பேச்சு அவரைக் கோபம் கொள்ளச் செய்ததது.

"ஏல ராமசாமின்னு சொல்லாதல, கதர்க்கடை ராமசாமின்னு சொல்லு" என்னை திட்டிவிட்டு என் வயதைக் கேட்டார் கூறினேன்.

"ன் வயசுல  காமராசர்  தேர்தல் பிரசாரம் பண்ணவும், நாட்டுக்காக உழைக்கவும் வந்துட்டாரு தெரியுமாடே" என்றார். 

"தெல்லாம் தெரியாது இப்போ நீங்க சொன்னதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்" என்றேன் பிடிவாதமாய்.

ப்போது தெளிவாக கூற ஆரம்பித்தார். "காமராஜர் உன்ன மாதிரி இருக்கும் போதே அரசியலுக்கு வந்துட்டாரு, அப்போ இந்த ஊர் காங்கிரஸ்ல உங்க தாத்தா தான் பெரிய ஆளு, அதனால காமராஜர் தென்காசிப் பக்கம் வந்தா நேர இந்தக் கடைக்கு தான் வருவாரு" கதை கேட்பதில் ஆர்வமானேன்.

"ங்க மாமன் உக்காந்த்ருக்கான் பாரு அங்க கதர்கடை ராமசாமியும் நீ உக்காந்ருக்க இடத்துல காமராசரும் உக்காந்த்ருப்பாறு, பெரும்பாலும் கட்சி கூட்டம் பத்தின பேச்சு இங்க தான் நடக்கும்" என்று கூறிவிட்டு என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், "காமராசர் இந்த வழியாப் போறார்னா உங்க கடைக்கு வராமப் போமாட்டாரு அது ஏன்னு தெரியுமாடே" அதற்கு என் மாமாவிடம் இருந்து பதில் இருந்து வந்தது. 

"காமராஜர் மொத தடவை நம்ம கடைக்கு வந்திருந்தப்போ அழுக்கு வேஷ்டியும் சட்டையும் போட்டிருந்தாரு, அப்ப அவரு கட்சியில ரொம்ப சின்ன பதவியில இருந்தாரு, தாத்தா கூட பேசி முடிச்சு கிளம்பும் போது உங்க தாத்தா கடையில இருந்த கதர் துணி கொடுத்து அழுக்கு வேஷ்டியோட போனா மதிக்க மாட்டாங்க புது துணி உடுதிட்டுப் போன்னு கொடுத்தாரு, அதினால உங்க தாத்தாவ காமராஜருக்கு ரொம்ப பிடிக்கும். எப்ப இந்த வழியாப் போனாலும் வண்டிய நிறுத்தி பேசிட்டு தான் போவாரு, அவரு முதலமைச்சரானதுக்கு அப்புறம் கூட கதர்கடை ராமசாமி மேல ரொம்ப மரியாத வச்சிருந்தாரு" என் மாமா முடித்துவிட்டு அந்தப் பெரியவரை பார்த்து " என்ன அய்யா நா சொன்னது சரிதான" என்று கேட்டார்.

"முளுக்க முளுக்க சரிதாம் டே இப்ப தெரியுதா நா ஏன் சொன்னேன்னு" என்று முடித்துவிட்டு வேற பேச்சில் திசை மாறினார்  ஆனால் அன்று தான் எனக்குத் தெரிய வந்தது எனது தாத்தாவும் கர்மவீரர் காமராஜரும் நண்பர்கள் என்று. அன்றைய நாளில் காமராஜர் என்பவர் முதல் மந்திரியாக இருந்தவர் என்றும் சுதத்ந்திரப் போராட்ட வீரர் என்ற அளவிலும் அறிந்திருந்த நான் காமராஜரைப் பற்றிய விசயங்களை அதிக அளவில் படிக்க ஆரம்பித்தேன். எனது தாத்தாவைப் பற்றிய தேடலும் தொடங்கியது. கதர்கடை ராமசாமி பற்றிய தேடல் தொடங்கியதும் நம்பமுடியாமல் வீட்டில் உள்ளவர்களிடம் சென்று அனைத்தையும் கேட்டேன். நான் படித்த அரசு மேல்நிலைப்பள்ளியில் தென்காசியில் இருந்து  சுதந்த்திரதிற்காகப் பாடுபட்ட வீரர்களின் பெயர் இருப்பதாகவும் அதில் கதர்கடை ராமசாமியின் பெயரும் உள்ளது என்றும் கூறினார்கள்.  

ன்றைக்கும் ஏதாவது ஒரு  குடும்ப விழாவில் பங்கெடுக்கும் பொழுது எனது தாத்தாவைப் பற்றி அறிந்தவர்கள் அவரைப் பற்றிய புதிய தகவலை சொல்லுவார்கள், அதில் காமராஜரின் பெயரும் சேர்ந்தே வரும் என்பது தான் ஆச்சரியமான விஷயம். 


24 Jul 2012

பிரபல பதிவருடன் திடீர் சந்திப்பு



ந்த நிமிடம் வரை எங்கள் இருவருக்குமே தெரியாது அன்று மாலையே நாங்கள் சந்திப்போம் என்று. அந்தப் பிரபல பதிவர் மனது வைத்ததால் அன்று மாலையே அவரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.  வெள்ளிக்கிழமை காலை அவரிடம் கேட்டேன் உங்களை சந்திக்கலாம் என்றால் எங்கே சந்திக்கலாம் என்று, எங்கேயும் சந்திக்கலாம் ஆனால் தற்போது மயிலையில் உள்ளேன் என்றார். மயிலாப்பூர் நான் இருக்கும் இடத்தில இருந்து தொலைவு என்றேன் சாதரணமாக, அப்போ எங்கு சந்திக்கலாம் என்று சொல் நான் வருகிறேன் என்றார் அசாதாரணமாக. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, நீங்கள் எல்லாம் வர வேண்டாம் சார் நானே வருகிறேன் என்றேன், "உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் சென்ட்ரல் ரயில் நிலையம் வா" என்றார். சென்ட்ரல் வருவதற்கு நான் மயிலாப்பூரே வந்துவிடுவேன் என்றேன். காரணம் இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை ( "ஐயோ அடங்க மாட்டன்றானே" பிரபலத்தின் மைன்ட் வாய்ஸ் ) . 

ருவழியாய் இருவருக்கும் பொதுவாய் ஒரு இடம் முடிவானது சைதாப்பேட்டை கார்நீஸ்வரர் கோவில் அருகில் இருக்கும் டீ கடை என்று. (பதிவர்களே உங்களுக்கு ஒரு தகவல், அந்தப் பிரபல பதிவர் தினமும் மாலை சரியாக 6.30  மணிக்கு இங்கு தான் டீ (சுகர் கொஞ்சம் கம்மியா) குடிப்பார் . வேண்டுமானால் அவரை இங்கேயும் சந்திக்கலாம்). நானும் வழி கண்டறிந்து சென்று விட்டேன். 6.30 மணிக்கு வரச் சொன்னார். நானோ 6.15 க்கே வந்துவிட்டேன் (தமிழன் பண்பாட்டை மீறி சரியான நேரத்திற்கு முன்பாகவே நான் வந்ததால் எங்கள் இருவருக்குமே கொஞ்சம் மனஸ்தாபம் தான்,' நானெல்லாம் ஒரு தமிழனா?' என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்). 

வரை இதற்கு முன் பார்த்து இல்லை, ஆனால் சில பதிவுகளில் அவர் புகைப்படம் பார்த்துள்ளேன், அவர் என்ன வாகனம் வைத்துள்ளார் என்பதையும் அவர் பதிவின் மூலமே அறிவேன் ( பயபுள்ள என்னா ஒரு புத்திசாலித்தனம்! ). இந்நேரத்தில் ஹெல்மட்டிற்குள் முகம் புதைத்த ஒருவர் சிரித்துக் கொண்டே அவர் வண்டியை என் அருகே நிறுத்தினார். அந்தப் பிரபல பதிவர் தானோ என்று எண்ணி சலாம் போடத் தயாரானேன். அதன்பின் தான் கவனித்தேன் அது அவர் வாகனம் இல்லை என்று. பின் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே "சார் கே கே நகர் எப்படி போகணும்" என்ற கேள்வி என் மீது வந்து விழுந்தது. "தெரியாது சார், நானும் ஏரியாக்கு புதுசு" என்று சொல்லிவிட்டு "அதுக்கு ஏன்யா ஐஞ்சு நிமிசமா பக்கதுல நின்னு சிரிசிகிட்டே இருக்க" என்று முனுமுனுத்தது நல்ல வேளை அவர் காதில் விழவில்லை. 

பிரபல பதிவர் வந்தார், சம்பிரதாயமான அறிமுகங்கள் எதுவும் இல்லாமலேயே டீ குடிக்க சென்றோம். தமிழனுக்கு "டீ குடிக்க வாரீங்களா சார்" என்பதை விட வேறு என்ன பெரிய அறிமுகம் தேவை. ஆச்சரியம் என்னவெனில் அந்தப் பிரபலமோ தன்னைப் பிரபலம் என்று காட்டிக் கொள்ளாமல் பலநாள் பழகிய நண்பரைப் போல் பழகியது தான். பதிவர் சந்திப்பு பற்றி சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்த பின் "மாம்பலம் ரயில் நிலையத்திற்கு மிக மிக அருகில் தான் என் வீடு , வா போயிட்டு வரலாம்" என்றார். சட்டென்று ஏதோ டிவி விளம்பரம் தானோ என்று பின்னால் திரும்பிப் பார்த்தேன், விளம்பரம் எல்லாம் ஒன்றும் இல்லை என் வீடு தான் அங்குள்ளது என்று அழைத்துச் சென்றார்.

ப்போது தான் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது, மாம்பலம் ரயில் நிலையத்திற்கு தானே அவர் வீடு அருகில்? எனக்கில்லையே.   இருந்தும் செல்வதென்று முடிவான பின், பின் வாங்குவது எப்படி? ( அண்ணாச்சி கடையில கேட்டா குடுப்பாங்கன்னு மொக்க காமெடி எல்லாம் சொல்லாதீங்க). வீடு வந்து சேர்ந்தோம். அவருடைய வாகனத்தை அதனிடத்தில் விட்டபின் ( இவ்ளோ டீடைல் தேவையா இப்ப?)   வீட்டிற்குள் நுழைந்தோம். வரவேற்பறையே மினி நூலகம் போல் இருந்தது. முக்கியமான விஷயம் புத்தகங்கள் அனைத்தும் முறையாக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்க்கவே பிரமிப்பாய் இருந்தது. நானெல்லாம் எடுத்த பொருளை எடுத்த இடத்தில வைப்பதே பெரிய விஷயம். 

ல புதிய பதிவர்களைப் பற்றி பேசினார், புத்தகங்கள் எங்கெங்கெல்லாம் கிடைக்கும் என்பது போன்ற தகவல் சொன்னார். சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். முன்னொருமுறை என்னிடம் சொல்லி இருந்தார் உன்னை சந்திக்கும் பொழுது மகாபலிபுரம் பற்றிய புத்தகம் தருகிறேன் என்று ஆனால் இப்போது கொடுத்ததோ வேறு ஒன்று( ஓசியில் வந்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்ப்பது தமிழனின் வழக்கம் என்பதை மீண்டும் மீண்டும் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.) எங்கே அந்தப் ப்த்தகதைப் பற்றி மறந்து விட்டாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே "அந்தப்புத்தகம் என்கிட்டே இப்போ இல்லை பதிவர் சந்துப்புக்கு நீ வரும் போது அதைத்தாரேன்" என்றார். சார் உங்க நியாப சக்திக்கு நீங்க ஐ ஐ டி ல கோல்ட் மெடல் வாங்கிருக்கணும் சார் என்று நினைத்துக் கொண்டேன். 

ற்ற பிளாக்குகளில் நான் குடுத்த கமெண்ட், எனக்கு வந்த கமெண்ட் என்று அசராமல் அவர் நியாபகத்தில் இருந்து சொல்லிக் கொண்டே சென்றார், 'கோல்ட் மெடல் கொடுக்கும் எண்ணம் இப்போது  வைர மெடல் ஆக மாறியது. ' ( சார் என்னால் நினைக்க மட்டும் தான் முடியும் அதற்காக கேட்டு விடாதீர்கள், பின் ஒரு தமிழனின் மானம் கப்பலேற காரணமாய் இருக்காதீர்கள்). அந்தக் காலத்தில் இருந்து அவர் சேமித்து வைத்து வரும் புத்தகங்களை பார்க்கும் பொழுது மலைபாயும் மகிழ்வாயும் இருந்தது, காரணம் நானுமொரு புத்தகக் காதலன். சரித்திர நாவல்களில் அக்காலங்களில் இடம் பெற்ற ஓவியங்களைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார். அக்கால சரித்திர நாவல் ஓவியரான ஓவியர் ஜெக்கு ஜெ எல்லாம் போட்டார்.  

ங்கள் வீட்டிற்கு நான் வந்தால் மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன காட்டுவீர்கள், இது ஊட்டியில் எடுத்த போட்டோ, இது எங்க அம்மா ஊட்டி விடும் போது எடுத்த போட்டோ என்று ஏகப்பட்ட போட்டோ ஆல்பத்தைக் காட்டுவீர்கள். இந்தப் பிரபலமோ இதிலும் சற்று வித்தியாசம் தான். பைண்ட் செய்த பல புத்தகங்களை என் கையில் கொடுத்து இது சுஜாதா கலெக்சன்ஸ், இது கல்கி இது சாண்டில்யன் கலெக்சன்ஸ் என்று அடுக்கிக் கொண்டே சென்றார், நானெல்லாம் அவர் வீட்டு பக்கத்தில் இருந்திருந்தால் நூலகம் பக்கமே சென்றிருக்கமாட்டேன். அனைத்தையும் அத்தனை அழகைப் பாதுகாத்து வருகிறார். வெகு நேரம் பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். வெகு நேரம் சிறிது நேரம் போலத் தான் தோன்றியது, ஆனால் நானோ வெகு தொலைவு செல்ல வேண்டும் என்பதால் அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டேன். பதிவுலகில்  நான் சந்தித்த முதல் சந்திப்ப்பு, அதுவும் பிரபல பதிவருடன் திடீர் சந்திப்பு. மறக்கமுடியாத சந்திப்பு. மிக்க நன்றி வாத்தியாரே.


பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடையில் அவரது சிறிய ஆசையை வெளிபடுத்தினார். அவரது சிறுகதைத் தொகுப்பை புத்தகமாக வெளியிட வேண்டுமென்பது தான் அந்த ஆசை. ( ஒருவேள அவர் இத ரகசியம்னு என்கிட்டே சொல்லி இருப்பாரோ, நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ). அவருடைய கற்பனை உலகைப் பற்றி சொல்லிய பொழுது நெஞ்சம் நெகிழ்ந்தது.            

ந்தப் பிரபல பதிவர் யார் என்று பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், இன்னும் கண்டு பிடிக்கவில்லையா? இல்லை அவர் மின்னல் வரிகளைப் படிக்க வில்லையா?

அவர் எனக்களித்த புத்தகத்தில் கையெழுத்துடன் அவர் எழுதி இருந்த வரிகள் மூலமே அவரை அறிமுகம் செய்கிறேன் ( பிரபல பதிவரை அறிமுகம் செய்யும் சாதாரணன் ) ' பிரபல பதிவரே எப்புடி' .

எனக்கு நண்பனாய்
என்  எழுத்தின் வாசகனாய் 
கற்றுக் கொள்வதில் சிஷ்யனாய்
பல நிலைகளில் என்னுடன் வரும் சீனுவுக்கு 
நல்வாழ்த்துக்களுடன்

21 Jul 2012

ஆடிவெள்ளி : சென்னை : ஈ வெ ரா


ப்பதிவை சகோதரி சசிகலாவும் தோழி நிரஞ்சனாவும் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆடி வெள்ளி தொடர் பதிவாகவும் கொள்ளலாம், சென்னையைப் பற்றி தொடர்ந்து  எழுதி வருவதால் சென்னையைப் பற்றிய  எனது  மற்றொரு பதிவாகவும் கொள்ளலாம்.   

சென்னையில் எதுவுமே கொஞ்சம் அதிகம் தான் அது வானிலையாக இருந்தாலும் சரி மக்களின் மனநிலையாக இருந்தாலும் சரி. வெயில் பனி மழை எல்லாமே அதிகம். அதுபோல் கண்மூடித்தனமான பக்தியும் இங்கு அதிகம்.  இதனை எனது சென்ற பதிவான சென்னையில் ஓர் ஆன்மீக உலாஎன்ற பதிவில் கூறி இருந்தேன், அதையே இங்கு மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கூறுகிறேன். ஆடி பற்றிய தொடர் பதிவு. ஆடி என்றால் ஆன்மீகம் இல்லாமல் எப்படி! எனது ஊரில் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி அன்று மட்டும் தான் சிறப்பு பூஜை செய்வார்கள் கூழ் ஊத்துவார்கள். சென்னையிலோ அப்படி இல்லை தினம் தினம் இவர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆயிரம் முகமுடையாளின் பாடல்களை அலற விட்டுக் கொண்டு இவர்கள் படுத்தும் பாட்டை சொல்லிமாளாது. 

ஆடி மாதம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் மாதம். வெயில், காற்று இரண்டுமே அதிகம் இருக்கும். மழையும் நினைத்த நேரங்களில் எல்லாம் பெய்யும். சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் பரவும் நோய்களுக்கும் குறைவே இல்லை. பெரியவர்களிடம் கேட்டுப் பாருங்கள் ஆடி மாதம் பிரசவித்த தாய்க்கும், பிறக்கும் குழந்தைக்கும் கவனிப்புகள் விஷேசமாக இருக்கும், தொற்றுவியாதி பரவும் காலம் என்பதால் அவர்களிடம் யாரையும் அண்ட விட மாட்டர்கள். மேலும் யாருக்கும் வியாதிகள் பரவக் கூடாது என்பதற்காகத் தான் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவார்கள். கூழ் உடம்பிற்கு குளிர்ச்சி, வேப்பிலை கிருமி நாசினி. கவனித்துப் பாருங்கள் அம்மன் கோவில்களில் கூழுடன் வேப்பிலையும் சேர்த்துக் கொடுப்பார்கள். நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்கள் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான் அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான். 

றை வழிபாட்டில் நாம் செய்யும் ஒவ்வொன்றின் பின்னும் கலாச்சாரம் இருக்கும் மகிமை இருக்கும் மருத்துவம் இருக்கும். சுருங்கச் சொன்னால் உளவியலின் மறு உருவமாக இறைவழிபாடு இருக்கும். இதே போல் எனக்குத் தெரிந்த மற்றொன்று, மார்கழி மாதம் வாயு சுத்திகரிப்பு நடை பெறுவதால், அதிகாலையில் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வெகு சுத்தமாக இருக்கும். அதனால் தான் மார்கழி அதிகாலையில் திருப்பாவை திருவெம்பாவை பஜனைகள் நடைபெறும். இதில் ஆண்கள் மட்டுமே பங்குபெறுவார்கள். சரி ஆண்களுக்கு சுத்தமான ஆக்சிஜன் கிடைக்க வழி செய்தாயிற்று பெண்களுக்கு! மார்கழி அதிகாலையில் மட்டும் அவளவு பொறுமையாக நிதானமாக பெரியதாக கோலம் போடுகிறார்களே ஏன்? வீட்டை அழகுபடுத்த இல்லை.அவர்களும் அந்த ஆக்சிஜனை உட்கொள்ள வேண்டும் என்பதக்காகத் தான் இத்தனையும். சென்னையில் நிலைமை வேறு,  மார்கழியில் இங்கு அளவிற்கு அதிகமான பனி விழும் என்பதால் முந்தின நாள் இரவே கோலம் போட்டு விட்டு  தூங்கிவிடுவார்கள். இங்கெல்லாம் மார்கழி பஜனை நான் பார்த்தது கிடையாது. ஒரு பதிவில் அத்தனையையும் சொல்லிவிட முடியாது. இனி சென்னைக்கு வருகிறேன்.

ங்கே எல்லாமே தலைகீழ். கருத்துக்களை அப்படியே தவறாக எடுத்துக் கொள்வதில் இவர்களை மிஞ்ச முடியாது. பக்கத்துப் பக்கத்து கோவில்களில் அடுத்து அடுத்து இருக்கும் கோவில்களில் இத்தனை ஆர்பாட்டமாக கூழ் ஊட்ற வேண்டும் சத்தமாக பாடல் ஒலிக்க விட வேண்டும் என்று அம்மன் சொல்லவில்லை, அவன் செய்கிறான் நானும் செய்வேன் என்ற போட்டி மனப்பான்மை தான் காரணம். தெய்வத்தின் பெயரால் மனிதன் சண்டை போட்டுக் கொண்டால் மூடநம்பிக்கையில் வீழ்ந்தால் அதற்க்கு தெய்வம் என்ன செய்யும். கடவுள் பற்றிய சரியான புரிதல் இல்லாததே இத்தனைக்கும் காரணம். கிறஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் முறையாக அவர்கள் மதம் போதிக்கப்படுகிறது. அவர்கள் இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு இந்துவால் முடிந்ததா. தேவாரமும் திவ்யப்பிரபந்தமும் திருவாசகமும் பிறந்த இம்மண்ணிலே  ஏன் சமகாலத்தில் எவ்வித நூல்களும் இயற்றப்படவில்லை. எனது முந்தைய தலைமுறைக்கே இவையெல்லாம் தெரியாத போது நான் யாரிடம் போய் கற்றுக் கொள்வேன். பாட்டி கதைகள் அழிந்து, கை வைத்தியம் அழிந்து, சித்த மருத்துவ நூல்களை அழித்து, சுகமான மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழும் இந்துவிற்கு எப்படி அத்தனையும் புரியும்.

புரிந்து கொள்ளமாட்டான். தெய்வம் என்ற பெயரிலே கண்மூடித்தனமாக எதாவது செய்து கொண்டுதான் இருப்பான். கடந்த இரு தலைமுறையினரை திருத்த முடியாது, வரப் போகும் சந்த்தயினரை திருத்த வழிகாட்டிகள் கிடையாது. பின் ஏன் நித்தியானந்தாக்களும் பிரேமானந்தாகளும் நடமாட மாட்டார்கள். கோவில்கள் மேல் குற்றம் சுமத்தாதீர்கள் கோவில்களை பராமரிப்பவன் மேல் குற்றம் சுமத்துங்கள், கோவில்களைக் கொண்டு கொள்ளை அடிபவர்கள் மீது குற்றம் சுமத்துங்கள். கோவில்களை வியாபார ஸ்தலமாக்கும் கயவர்கள் மீது குற்றம் சுமத்துங்கள். தன் வசதிக்காக தெருவிற்கு கோவில்கட்டும் முட்டாள்கள் மீது குற்றம் சுமத்துங்கள். தெய்வங்களின் மீதும் கலாச்சாரத்தின் குற்றம் சுமத்தாதீர்கள். கோவில்கள் கலாச்சாரத்தின் அடையாளம். 

நாத்திகர்கள் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லுபவர்கள் எளிதில் கேட்கும் ஒரு கேள்வி கடவுளை நீ பார்திருகிறாயா? பார்த்திருந்தால் என் கண் முன் காட்டு நான் நம்புகிறேன். ஒத்துக் கொள்கிறேன் கடவுளை என்னால் காட்ட முடியாது தான். ஆனால் என்னால் உணர முடியும். நான் உணரும் அதிர்வுகளை என்னால் அனுபவிக்க முடியும் கேள்வி கேட்க்கும் உன்னால்  எப்படி அதனை அனுபவிக்க முடியும். ஒருவரின் உணர்சிகள மற்றவர்கள் மீது திணிக்கக் கூட முடியாது, இதை உணராதவர்கள் பெயர் பகுத்தறிவாளர்கலாம். 

யத்தின் மறு உருவம் கடவுள் என்று வைரமுத்து சொல்கிறார், சொல்லிவிட்டுப் போகட்டும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே என்று கூறி ரௌத்திரம் பழகச் சொன்ன என்கவி பாரதி ஒரு ஆத்திகன், கண்ணனின் காதலன், காளியின் தீவிர பக்தன். காளியைத் தான் கண்டதாக் கூறுபவன்.விவேகானந்தரும்  பரமகம்சரும் கூட தேவியை தரிசித்துள்ளார்கள் முக்கயமான விஷயம் இவர்கள் யாரும் தாம் கண்ட தெய்வத்திற்கு உரு கொடுக்க வில்லை. வள்ளலாரும் ஒளி வடிவிலேயே இறைவனை தெரிசிதுள்ளர்.       

இனி பெரியார் 

.
தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் என்று ஏழாம் வகுப்பு உரைநடையில் தமிழ்நாடு அரசு இவரை ஒரு வைக்கம் வீரராக அறிமுகம் செய்து வைத்தது எனக்கு. இவர் கூறுகிறார் ஆதிக்கத்தில் இருந்து தான் மூட நம்பிக்கை வந்ததாம். வரலாறு தெரிந்த  யாரும் அவ்வாறு கூற  மாட்டார்கள். இந்தியாவில் இருண்ட காலம் என்று ஒன்று உண்டு. அக்காலத்தில் தான் மூட நம்பிக்கைகள் அதிகமாகப் பரவ ஆரம்பித்திருந்தது. மூவேந்தரிகளின் வீழ்ச்சிக் காலம் அல்லது அந்நிய நாட்டுப்படை எடுப்புக் காலம் என்று எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம். இவர் மூட நம்பிக்கையை ஒழிக்கப் பாடுபட்டார் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் மததுவேசத்தில் ஈடுபட்டார். உருவ வழிபாட்டை எதிர்த்த இவர் உருவத்தை ஏன் சாலைகளில் வைத்து அழகு பார்கிறார்கள், மாலை அணிவித்து மரியாதையை செலுத்துகிறார்கள். 

த எதிர்ப்பு மக்கள் சார்ந்த விஷயம் என்றால் வயது வித்தியாசம் பாராமல் தந்தை மகள் உறவு முறையில் பழகிய பெண்ணை ஏன் மணந்து கொண்டார்,  முறை தவறிய வயது தவறிய திருமணம் ஆகாதா? இது தனிப்பட்ட விஷயம் என்பதாலா. அப்படி பார்த்தால் இவர் கூறிய அனைத்தையும் தமிழன் தனிப்பட்ட விசயமாகத் தானே எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களை தகாத வார்த்தைகளால் கேலி செய்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு என்பது பெண்களுக்கு தெரியுமா? ம வெங்கடேசன் என்ற இளம் எழுத்தாளர்  எழுதிய பெரியாரின் மறுபக்கம் புத்தகம் படித்துப் பாருங்கள், பெரியாரின் உண்மை முகத்தை ஆதரங்களுடன் நிரூபித்து இருப்பார். 

பெரியார் பொறுப்பில் நீதிக்கட்சியின் கொள்கை என்ன தெரியுமா! தென் தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரித்து திராவிட நாடு உருவாகுவது தான், அவர்கள் பத்திரிக்கையின் பெயரும் திராவிட நாடு தான். அதனாலேயே அந்தக் கட்சி வலு இழந்த்தது. மக்கள் அனைவரும் தேசிய இயக்கமான காங்கிரசில் சேர்ந்தனர். ஒன்றுபட்ட இந்தியாவிற்காக பாடுபட்டனர். ஆத்திகம்  பிரிவனைவாதத்தை வளர்க்கவில்லை, தி க தான் ஆரியன் திராவிடன் என்ற பிரிவனைவாதம் வளர்க்க காரணமாய் இருந்தது. முறை தவறி திருமணம் செய்ய இருந்த பெரியாரை அண்ணா தட்டி கேட்டார், பெரியார் செவிமடுக்க வில்லை. உண்மை சீடன் என்று கூறிய அதே வாயாலேயே அண்ணாவை தி க விலிருந்து வெளியேற்றினார். திமுக வின் வரலாறு இது தான். 
தி மு க பிறந்தது.

கவியால் புரட்சி செய்த பாரதிதாசனை பகுத்தறிவாளனாய் ஏற்று கொள்கிறேன் 
கதையால் புரட்சி செய்த புதுமைப் பித்தனை குத்தறிவாளனாய் ஏற்று கொள்கிறேன் 
பாடல்களால் புரட்சி செய்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரை குத்தறிவாளனாய் ஏற்று கொள்கிறேன் 

ஆனால் முரண்பட்ட கருத்துக்களை உடைய சுயநலவாதி பெரியாரையோஇல்லை அவர் வழி வந்த எப்போது எந்தக் கட்சிக்கு ஜால்ரா போடுவாரோ என்று பகுத்தறிய முடியாத வீரமணியையோ, இல்லை பெரியாரின் உண்மை பக்தன் என்று தன் மார்தட்டிக் கொண்டு ஆ ராசா ஒரு தலித் அதனால் அவரை சிறையிலடைக்கக் கூடாது என்று பகுத்தறிந்து மேடை போட்டு முழங்கிய சுப.வீ யையோ என்னால் குத்தறிவாளனாய் ஏற்று கொள்ள முடியாது. 

சுஜாதா தன் கடவுள் இருகிறார புத்தகத்தில் இப்படித் தான் முடிப்பார், விஞ்ஞானமும் மெய்ஞானமும் இரு துருவங்களாக  கடவுளைத் தேடுகிறார்கள், இவ்விருவர்களின் தேடல் இருக்கும் வரை கடவுளும் இருப்பார்.

கல்லூரியின் இறுதி நாளில் பெரியார் பக்தனான என் நண்பனின் கையெழுத்துப் புத்தகத்தில் நான் எழுதிய முதல் வரியை இப்பதிவின் இறுதி வரியாக எழுதி நிறைவு செய்கிறேன்

ஆரியமோ திராவிடமோ 
மனித மனதில் மனிதம் பிறக்கும் பொழுது 
இறைவனின் இருப்பு 
உன்னதமாய் இருக்கும். 

பின் குறிப்பு : நான் சொல்ல நினைத்த மூன்று கருத்துகளையும் முழுமையாக அலசி இருக்கிறேன் என்று கருதுகிறேன். ஆழம் தெரியாமல் கலை விடும் பதிவு இது என்பதால் என்னால் செல்லக் கூடிய ஆழம் வரை சென்றுள்ளேன். தகாத வார்த்தைகளால் திட்டாதவரை மறுப்புகளையும் ஏற்கிறேன்