தனுஷ்கோடி இந்த பெயரும் பெயர் சார்ந்த இடமும் மீது எப்போது ஏன் எதற்கு எப்படி ஈர்ப்பு வந்தது என்று தெரியவில்லை. சற்றே அமானுஷ்யம் பரவிய மணற்பரப்பு, ஓயாமல் அடித்துக் கொண்டு இருக்கும் கடல் காற்று. ஒரு புறம் சாதுவான வங்கக் கடலையும், மறுபுறம் ஆற்பரிக்கும் இந்தியப் பெருங்கடலையும் தனக்கான எல்லைகளாக வரையறுத்துக் கொண்டு அழிந்தும் அழியாமலும் சோகங்களை, தொலைந்து போன ஆன்மாக்களைத் தேடி நிற்கிறது தனுஷ்கோடி. தனுஷ்கோடி சென்று வந்த கதையை பயணக் கட்டுரையாக மட்டும் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் வரலாறுக்குள் புதைந்து எஞ்சியிருக்கும் மணல்பரப்பும், மிஞ்சி இருக்கும் மக்களும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டனர்.
தனுஷ்கோடி பற்றி இணையத்தில் தேடிய பொழுது பல தகவல்கள் கிடைத்தது இருந்தும் நான் தேடிய தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கவில்லை, ஆங்காங்கு கிடைத்த தகவல்களை மொத்தமாக ஒரே இடத்தில தொகுத்துள்ளேன். இருந்தும் நூறு சதவீதம் முழுமையான தகவல்கள் அடங்கிய பதிவாக இருக்காது. இந்தப் பதிவை படிக்கும் உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் இரண்டு, எங்கேனும் தவறு செய்திருந்தால் திருந்துங்கள், காரணம் வரலாற்றைப் பிழையாக்கி விடக்கூடாது, ஏதேனும் தகவல் விடுபட்டிருந்தால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள், தொடர்புள்ள சுட்டி கொடுங்கள், பதிவுடன் இணைத்துக் கொள்கிறேன்.
குறைந்த கால இடைவெளிக்குள் இரண்டு முறை தனுஷ்கோடி சென்று வருவேன் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர்களுடன் ராமேஸ்வரம் தனுஷ்கோடி சென்று வந்த பயணக் கதை எங்கள் குடும்பத்தாருக்கு ஆர்வத்தை அத்துமீறி கிளப்பி இருக்க வேண்டும். அதனால் நாள் தான் என்னவோ முதல் நாள் இரவு ஆலோசித்து அடுத்த நாள் பயணித்தும் விட்டோம். இம்முறை தென்காசியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி பயணித்தோம். ஆறுமணி நேரப் பயணம், ராமேஸ்வரம் தீர்த்தங்களில் நீராடிவிட்டு தனுஷ்கோடி நோக்கிய பயணம் தொடங்கியது. (ராமேஸ்வரம் பற்றிய விரிவான பதிவை படிக்க இங்கு சுட்டுங்கள்).
தன்னிலை விளக்கம் சற்றே நீண்டமைக்குப் பொறுத்தருள்க. தாமதியாமல் நாடோடி எக்ஸ்பிரஸினுள் ஏறிக்கொள்ளுங்கள், தனுஷ்கோடி நோக்கிய நமது பயணத்தை, வரலாற்றுத் தேடலைத் தொடங்குவோம்.
நாம் பயணித்துக் கொண்டிருக்கும் காலம் 1964 டிசம்பர் 22. நாம் பயணிக்கும் நேரம், இருள் இருள், இருள் மட்டுமே பரவி இருந்த இரவு நேரம். கடந்த சில நாட்களாக பெய்திருந்த பேய் மழையில் தென்தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தன. மிகப்பெரும் மழைக்குப் பின்னான சிறு தூறல்கள் பாம்பன் ரயில் நிலையத்தைக் குளிர்வித்துக் கொண்டிருந்ததன. தனுஷ்கோடி செல்லும் கடைசி ரயிலான பாம்பன்-தனுஷ்கோடி பாசன்ஜர் 110 பயணிகளையும், 5 ரயில்வே அதிகாரிகளையும் சுமந்து கொண்டு புறப்படத் தயாராக இருந்தது. ஏழு பெட்டிகள் கோர்க்கப்பட்டிருந்த ரயிலில் 40 வட இந்தியக் கல்லூரி மாணவர்களும், துறவிகளும், யாத்ரீகர்களும், உள்ளூர்ப் பயணிகளும் இருந்தனர்.
டிசம்பர் 17ம் தேதியே வங்காள விரிகுடாவின் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருந்தது, அந்த காற்றழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வலுபெற்று 19ம் தேதி புயல் சினமாக வலுகொண்டது. எப்போது வேண்டுமானாலும் புயல் தாக்கலாம் என்ற நிலையில் தான் வங்களா விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலின் பெரும்பாலான கடற்கரை ஓரங்கள் இருந்தன. காரணம் புயல் கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது துரதிஷ்டவசமாக மக்கள் அதிகம் வாழும் மிக முக்கியமான பகுதிகளான இலங்கையின் வவுனியா வழியாக தலைமன்னாரையும் தனுஷ்கோடியையும் சேதப்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். புயல் அந்தமானில் இருந்து மன்னார் வளைகுடாவை வெகுவாக நெருங்கிய நேரம், பாம்பனில் இருந்து ரயில் மெதுவாக தனுஷ்கோடி நோக்கி நகரத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும் முன் தனுஷ்கோடியைப் பற்றிய வரலாற்றுப் பார்வை ஒன்றைப் பார்த்து விடுவோம்.
தனுஷ்கோடி தமிழகத்தின் மிக முக்கியமான வர்த்தக நகரம். சென்னை தூத்துக்குடிக்குப் பின் மிக முக்கியமான துறைமுக நகரமாகவும் விளங்கியது. பிரிட்டிஷ் அரசு, இந்தியாவையும் இலங்கையையும் ஒருசேர ஆண்டு கொண்டிருந்த 18 - 20 ம் நூற்றாண்டுகளில் கப்பல் போக்குவரத்து மூலம் வியாபாரமும் செழிப்பாக நடந்து கொண்டிருந்தது.
1911ம் ஆண்டு பிரிட்ஷ் அரசு தனுஷ்கோடியிலும் தலைமன்னாரிலும் ஒரே போன்ற துறைமுகக் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டி மூன்றே வருடங்களில் (1914) கப்பல் போக்குவரத்தையும் தொடங்கிவிட்டார்கள். இர்வின், போஷின் என்ற பெயருடைய இந்த இரண்டு நீராவிக் கப்பல்களும் இந்தத் துறைமுகத்தில் இருந்து தான் தங்கள் பயணத்தைத் தொடங்கின. கப்பல் போக்குவரத்து நடைபெற்ற காலத்தில் ஒரு நாளைக்கு ஆறு ரயில்கள் வரை தனுஷ்கோடி சென்று வந்து கொண்டிருந்தன.
சென்னை எக்மோரில் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள் தனுஷ்கோடி வரை சென்று வந்தன. இந்தோ-சிலோன் போட் மெயில் (BOAT MAIL) என்று அழைக்கப்பட்ட இந்த ரயிலின் சிறப்பம்சமே இந்தியாவையும் இலங்கையையும் இணைத்தது தான். எண்பது ருபாய் கட்டணத்தில் டிக்கெட் எடுத்தால் சென்னையில் இருந்து கொழும்பு வரை சென்று விடலாம்.
சென்னையில் இருந்து தனுஷ்கோடி துறைமுகம் வரை ரயில் பயணம், தனுஷ்கோடி துறைமுகத்தில் தயாராக இருக்கும் நீராவிக் கப்பலில் ஏறினால் அங்கிருந்து தலைமனார் துறைமுகம் வரை கப்பல் பயணம். தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரை மீண்டும் ரயில் பயணம். இந்தியாவையும் கொழும்புவையும் இணைத்த இந்த போட் மெயில் மூலம் தான் பெரும்பாலான இந்தியர்கள் வர்த்தகம் மேற்கொண்டனர். இந்தக் கால கட்டங்களில் வியாபாரம் நிமித்தமாக தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று குடியமர்ந்த தமிழர்கள் மலையக தமிழர்கள் என்று அறியப்படுகிறார்கள்.
இந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் சுதந்திரமாக பயணித்துக் கொண்டிருந்த இந்த ரயில்வழிபோக்குவரத்து 1964 புயலுக்குப் பின் முடிவுக்கு வந்தது. அதன் பின் இந்த ரயில் தற்போது சேது எக்ஸ்பிரஸாக பயணித்து வருகிறது. இர்வினும் போஷினும் தங்கள் பயணத்தை கணித மேதை ராமனுஜம் பெயரில் தொடர்ந்து கொண்டிருந்தன. 1984ல் ஏற்பட்ட இனப் போராட்டம் மூலம் நீர்வழி சேவையும் முடிவுக்கு வந்தது.
தனுஷ்கோடி கடலில் குளித்தால் காசி தீர்த்தத்தில் நீராடியதற்கு சமம் என்றொரு நம்பிக்கை உண்டு, மேலும் காசி புனித யாத்திரையை ராமேஸ்வரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு, அதனால் வாரனாசியில் இருந்து தனுஷ்கோடிக்கு வாரம் இருமுறை இரயில்கள் வந்து செல்லும். மேலும் பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு பாசன்ஜர் ரயிலும் உண்டு. பாம்பனில் இருந்து தனுஷ்கோடி செல்ல முதலில் ராமேஸ்வரம் வழியாகத் தான் ரயில் பாதையை அமைத்திருந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் பாதை இந்தியப் பெருங்கடலின் கடற்கரையோரம் அமைந்திருந்தது. சாதாரணமாகவே இந்தியப் பெருங்கடலில் காற்றின் வேகம் மிக அதிகம். இந்தக் காற்றானது அடிகடி இரயிலின் வழித்தடத்தை கடல் மணல் கொண்டு மூடிவிடுவதால் அடிக்கடி ரயில் போக்குவரத்து தடைபடுவது உண்டு.
இதற்கு மாற்று ஏற்பாடாக பாம்பனில் இருந்து தனுஷ்கோடி செல்லும் ரயில் பாதையை குந்துக்கல் என்ற இடம் வழியாக மாற்றி அமைத்தார்கள். மேலும் குந்துகல்லில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு இணைப்பு ரயில் உண்டு.
ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பற்றி புயலுக்கு முன் பயலுக்குப் பின் என்று பார்தோமானால் ராமேஸ்வரம் இராமன் வழிபட்ட தீர்த்தத் ஸ்தலம் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சி எதுவும் அடைந்திருக்கவில்லை. தனுஷ்கோடியோ துறவிகளும் யாத்ரீகர்களும் வியாபாரிகளும் வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்ற மிகவும் பரபரப்பான ஒரு நகரம். மிகப்பெரிய ரயில் நிலையம், தபால் நிலையம், தந்தி ஆபீஸ், கஸ்டம்ஸ் ஆபீஸ், மேல்நிலைப் பள்ளி, மாநிலத்தின் மிக முக்கியமான துறைமுகம் என்று பரபரப்பாக இயங்குகின்ற மிக முக்கியமான வர்த்தக நகரம். மீன் கருவாடு உப்பு ஒப்ன்றவை மிக முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள். மேலும் இந்தியாவில் இருந்து இலங்கை சென்று வர விசா தேவை இல்லை என்பதால் மக்கள் போக்குவரத்தும் அதிகம்.
பின்குறிப்பு : பதிவின் நீளம் பொருத்து இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வெளிவரும்.
மற்ற பதிவுகள்
Tweet |
ஓயாமல் அடித்துக் கொண்டு இருக்கும் கடல் காற்று. ஒரு புறம் சாதுவான வங்கக் கடலையும், மறுபுறம் ஆற்பரிக்கும் இந்தியப் பெருங்கடலையும் தனக்கான எல்லைகளாக வரையறுத்துக் கொண்டு அழிந்தும் அழியாமலும் சோகங்களை, தொலைந்து போன ஆன்மாக்களைத் தேடி நிற்கிறது தனுஷ்கோடி.
ReplyDeleteஇன்னும் மனக்கண்களில் மறையாமல்
இருக்கும் காட்சி ..
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா
Deleteவணக்கம் நண்பா.. அரிய தகவல்கள் பல இடங்களிலிருந்து சேகரித்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்..
Deleteஅரிதான படங்கள், அறியாத தகவல்கள், அருமையான விவரிப்பு...!
ReplyDeleteராமேஸ்வரம் பதிவு சுட்டி மிஸ்ஸிங்!
மிக்க நன்றி நண்பா, தங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து
Deleteஅருமை. தொடர்கின்றேன்.
ReplyDeleteமிக்க நன்றி டீச்சர்
Deleteநாங்களும் தனுஷ்கோடி அகதிகள் முகாம் இருந்தது. அவர்கள் சோகமோ ,இல்லை இன்னதென்று தெரியாது ஒரு துயரம் மனதை அப்பியது. சோழிகளை மட்டும் எடுத்துக் கொண்டு ரயில் தடங்களைத் தொடர்ந்து வண்டியில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம்.
ReplyDeleteஉங்களது பதிவு மிக சுவாரஸ்யமாகவும் சிறிதே திகிலூட்டுவதாகவும் இருக்கிறது.. நன்றி.புகைப்படங்கள் அருமை.சோகங்களின் எச்சம்.
//சோகங்களின் எச்சம்.//நிச்சயம் அம்மா
DeleteDhansush-kodi-Boat Mail...not this name..
ReplyDeleteஇந்தோ-சிலோன் போட் மெயில் (BOAT MAIL)
நான் அலசிய வரை அணைத்து பத்திரிக்கைகள் முதற் கொண்டு இந்தப் பெயர் தான் கொடுத்து உள்ளார்கள்... அடுத்த பதிவில் இது சமந்தமான செய்தித் தாள் ஒன்று பகிர்கிறேன்....
Deleteநல்லா இருக்கு சீனு...தொடர்ந்து வருகிறேன்.புகைப்படங்களில்,தகவல்களில் உன் உழைப்பு தெரிகிறது.அறிமுகமே தேவையில்லை...இதனை நீ கடும் தேடுதலுக்கு பின்னே பதிகிறாய் என்று பதிவே அறிமுகம் செய்கிறது.தொடர்கிறேன்..
ReplyDeleteகடந்த ராமேஸ்வரம் பதிவு தாங்கள் எதிர் போர்த்தது போல் இல்லை என்று கூறி இருந்தீர்கள்... இந்தப் பதிவை பாராட்டியது உற்சாகம் தருகிறது
Deleteஅருமையான பதிவு!
ReplyDeleteநன்றி திருவாளர் வரலாறு அவர்களே
Deleteவணக்கம் சீனு ...
ReplyDeleteநான் இதை பற்றி அறிந்து கொள்ளாமல் இத்தனை நாள் இருந்துவிட்டேன் ...
இனி உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொள்கிறேன் ...
நிறைய தகவல்கள் அடங்கிய பெரும்பதிவு ... தொடருங்கள் ...
நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய இடம்....
Deleteஒரு கட்டுரை தொடங்கினால் முழு முஸ்தீபுடன் தான் தொடங்குகிறீர்கள். இதிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது. தொடருங்கள், தொடர்கிறேன்.
ReplyDeleteதொடர்ந்து என்னை உற்சாகப் படுத்தும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சார்
Deleteஎனக்கும் தனுஷ் கோடி பற்றி நிறைய அறிந்து கொள்ள ஆவல் உண்டு! உங்கள் பதிவு மிகவும் சுவாரஸ்யம்! நிறைய அரிய தகவல்கள்! அறியாத விசயங்கள்! அருமை! தொடர்ந்து பயணிக்க காத்திருக்கிறேன்! நன்றி!
ReplyDelete//எனக்கும் தனுஷ் கோடி பற்றி நிறைய அறிந்து கொள்ள ஆவல் உண்டு! // மிக்க நன்றி சார்
Deleteவரலாற்றை சுவாரஷ்யமாக் நகர்த்துகிறீர்கள் நண்பரே
ReplyDeleteWONDERFUL JOB. THANKS TO VEEDUTHIRUMBAL.BLOGSPOT.COM
ReplyDelete//இந்தியாவையும் கொழும்புவையும் இணைத்த இந்த போட் மெயில் மூலம் தான் பெரும்பாலான இந்தியர்கள் வர்த்தகம் மேற்கொண்டனர். இந்தக் கால கட்டங்களில் வியாபாரம் நிமித்தமாக தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று குடியமர்ந்த தமிழர்கள் மலையக தமிழர்கள் என்று அறியப்படுகிறார்கள். //
ReplyDeleteமலையகத் தமிழர்கள் என்போர் பிரிட்டிஷ் அரசால் ஸ்ரீலங்கத் தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்ய அனுப்பப்பட்டவர்கள். பல தலைமுறைகளாக அங்கு வாழ்பவர்கள். ஆனால் இலங்கைக் குடியுரிமை அளிக்கப்படாமல் ஒரு ஒப்பந்தத்தின் மூலம் (சாஸ்திரி-பண்டாரநாயகா காலம்)ஆயிரக்கணக்கில் இதே துறைமுகத்தின் வழியாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர்கள். இது இந்திய - இலங்கை வரலாற்றின் இருண்ட பகுதி. தங்கிய மீதமுள்ளோர் இன்றும் யாழ்ப்பாணத் தமிழர்களால் அங்கீகரிக்கப்படாத மலைவாழ்-இந்தியத் தமிழர்களாக வாழ்கிறார்கள்.
"இலங்கை வரலாற்றின் இருண்ட பகுதி. தங்கிய மீதமுள்ளோர் இன்றும் யாழ்ப்பாணத் தமிழர்களால் அங்கீகரிக்கப்படாத மலைவாழ்-இந்தியத் தமிழர்களாக வாழ்கிறார்கள்."
Deleteஅங்கிருக்கும் யாழ்ப்பாணத் தமிழா்களே, ஏன் எந்தத் தமிழா்களுமே அங்கு இரண்டாந்தரக் குடிதான். இதற்குள் ஏன் ஐயா இந்த விசவார்தைப் பிரயோகம்.
எல்லாவற்றிற்கும் தொடக்கம் முதல் காரணம் இந்தியாதான். இலங்கையும் மலேசியா மாதிரி தூர இருந்திருந்தால் எல்லாத்தழிழரும் ஒற்றுமையாகத்தான்
இருந்திருப்பார்கள். எங்களைப் பிரித்ததே இந்தியாதான் (அவர் வெளிநாட்டுக்
கொள்கைக்காக)இலங்கைத் தமிழர்கள் இப்போது பரதேசிகள். இலங்கைத் தமிழர்கள் இப்போது பரதேசிகள், உலகெல்லாம் வசிக்கிறார்கள்...................வாழவில்லை!
"இலங்கை வரலாற்றின் இருண்ட பகுதி. தங்கிய மீதமுள்ளோர் இன்றும் யாழ்ப்பாணத் தமிழர்களால் அங்கீகரிக்கப்படாத மலைவாழ்-இந்தியத் தமிழர்களாக வாழ்கிறார்கள்."
Deleteஅங்கிருக்கும் யாழ்ப்பாணத் தமிழா்களே, ஏன் எந்தத் தமிழா்களுமே அங்கு இரண்டாந்தரக் குடிதான். இதற்குள் ஏன் ஐயா இந்த விசவார்தைப் பிரயோகம்.
எல்லாவற்றிற்கும் தொடக்கம் முதல் காரணம் இந்தியாதான். இலங்கையும் மலேசியா மாதிரி தூர இருந்திருந்தால் எல்லாத்தழிழரும் ஒற்றுமையாகத்தான்
இருந்திருப்பார்கள். எங்களைப் பிரித்ததே இந்தியாதான் (அவர் வெளிநாட்டுக்
கொள்கைக்காக)இலங்கைத் தமிழர்கள் இப்போது பரதேசிகள். இலங்கைத் தமிழர்கள் இப்போது பரதேசிகள், உலகெல்லாம் வசிக்கிறார்கள்...................வாழவில்லை!
வணக்கம்
ReplyDeleteஅறிய முடியாத பல அரிய தகவல் படிக்க கிடைத்தது அருமையான படைப்பு வாழ்த்துக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-