15 Nov 2013

பிட்ஸா II - வில்லா - சத்தியமாக இது விமர்சனமல்ல


நாவலூர் ஏ.ஜி.எஸ். அஜீத் விஜய் போன்ற மாஸ் ஹீரோ நடித்த படத்தின் முதல் காட்சியைக் கூட அமைதியாய் ரசிக்கும் அரங்கம், பேய் படம் என்றதும் கூடுதல் மவுனத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு ரசிக்கத் தொடங்கியிருந்தது. அரங்கில் நிலவிய மவுனமானது திரைப்படத்தின் பின்னணி இசையைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டு கூடுதல் திகிலை சேர்த்துக் கொண்டிருந்தது. 

முகேஸின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது கண்கூடாகத் தெரிகிறது. "நான் தான் முகேஷ்" என்றபடி முகேஷ் திரையில் தோன்றும் போது விசில் பறக்கிறது, போதாக்குறைக்கு நுரையீரல் பஞ்சு போன்ற மென்மையானது என்ற வாசகம் வரும்பொழுது துள்ளிக் குதிக்கிறார்கள். எ.மா.ச.வா.

பிட்ஸா II - வில்லா - சத்தியமாக இது விமர்சனமல்ல 


மிகப் பரிட்ச்சியமில்லாத நடிகர்கள், மிக மிக மெதுவாக நகரும் திரைக்கதை, கொஞ்சம் சஸ்பென்ஸ் இவற்றை மட்டுமே ஒரு படம் எடுக்க முடியும் என்று நிருபித்துள்ளார் இயக்குனர் தீபன். 

இது குறியீடுகளின்        காலம் என்று நினைக்கிறன். இந்தப் படத்திலும் குறியீடுகள் இல்லாமல் இல்லை. வில்லாவில் வசிப்பவர்கள் தனக்கும் தனக்கு அடுத்து வருபவனுக்கும் என்ன நேரும் என்பதை ஏதேனும் சில குறியீடுகளின் மூலம் கடத்துபவர்களாகவே வலம் வருகிறார்கள். கவிஞனாக, ஓவியனாக, எழுத்தாளனாக, சினிமா இயக்குனாராக என்று குறியீடுகள்  படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

பயப்படாதீர்கள் கதை எல்லாம் சொல்லப் போவதில்லை. சினிமா விமர்சனம் எழுதப் போவதில்லை என்று முடிவெடுத்து பலகாலமாகிவிட்டது. இருந்தும் சமீபகாலமாக எதுவுமே எழுதுவதில்லை, எழுதத் தோன்றுவதுமில்லை, ஒருவேளை சிந்தனை வறட்சியா என்றால் அதுவுமில்லை, சிந்திக்கத்தான் நேரமே கிடைப்பதில்லையே. 

பேய்படம் என்ற மாயையில் இருந்ததால் பேய் வரும் பேய் வரும் என்று நம்ப வைத்தே ஏமாற்றியது போன்ற உணர்வு. 

எண்ண அலைகளை சுற்றி நிகழும் ஒரு கதை, நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்பதை மையமாக வைத்து நகருகிறது, இறுதியில் நல்ல எண்ணம் ஜெயிக்கிறதா இல்லை கெட்ட எண்ணம் ஜெயிக்கிறதா என்பதை தமிழ் சினிமா பாணியில் சொல்லாமல் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் தீபன். 

வாயில் ரத்தம் சொட்ட சொட்ட வந்து நிற்கும் பேய், வெள்ளை உடையில் அங்குமிங்கும் அலைந்து கிலி ஏற்படுத்தும் பேய், திடிரென்று தோன்றி நாடி நரம்பை சீண்டிப் பார்க்கும் பேய், ம்ம்ஹூம் இப்படியான எந்தக் பேய்களுமே இல்லை. பேய்கள் இல்லை என்றாலும் திரைக்கதையை அதன் கடைசி காட்சி வரை ஒருவித அமானுஷ்யம் கலந்த சஸ்பென்ஸ் உடனேயே நகர்த்தியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம், பின்னணியும், ஒளிபதிவும் படத்தின் பக்க பலம். இது போன்ற படங்களுக்கு கலை தான் மிக முக்கியம், கலை இயக்குனர் அமர்க்களபடுத்தியுள்ளார். வில்லாவில் செய்யபட்டிருக்கும் கலை கனவு இல்லம். வசனம் அருமை.

*****

பிட்ஸா வாரி கொடுத்த மிதப்பில் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையறா கதைகளுக்கு பிட்ஸா 2,3,4.....n என்று பெயர் வைத்துவிட்டாலே படம் ஓடி விடும் என்று தயாரிப்பாளர் நினைத்துவிட்டார் போலும். இருக்கலாம் படத்தின் விளம்பரத்திற்கு, கவர்ச்சிக்கு, முன்னோட்டத்திற்கு வேண்டுமானல் இந்த உத்தி உதவியிருக்கலாம் ஆனால் வில்லாவிற்கு உதவியிருக்கிறதா என்றால்... படம் முடிந்து வெளியே வரும் பொழுது "*த்தா பீட்சா டூ-ன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க மச்சி... மொதோ வந்ததே, அது ன்னா படம் தெரியுமா மச்சி... நானே மெர்சசலாயிட்டேன்.. *த்தா நம்மள வச்சி காமெடி பன்றானுங்களா...?"

மேற்சொன்ன இந்த டயலாக்கை வெவ்வேறு நபர்களிடம் அவர்களின் பப்ளிக் டீசன்ஸியைப் பொறுத்து வெவ்வேறு டோன்களில் கேட்க முடிந்தது. இப்படி ஒரு ரியாக்ஷனை ரசிகர்களிடமிருந்து தயாரிப்பாளர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறன். எது தனக்கு வெற்றியைத் தரும் என்று தயாரிப்பாளர் நினைத்திருக்கக் கூடுமோ அதுவே அவரை சாய்த்து விட்டது. 

பிட்ஸாவுக்கும் வில்லாவுக்கும் இடையே இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால் இரண்டுமே வீட்டை மையமாக வைத்து, அந்த வீட்டைச் சுற்றி நடக்கும் கதை, மேலும் முன்னதில் நாயகி எழுத்தாளர் பின்னதில் நாயகன். இதைத் தவிர்த்து வேறொன்றுமில்லை. (இதிலும் பிட்ஸ்டாப் வருகிறது, நினைக்குதே... பாடல் வருகிறது )  

பிட்ஸாவின் தொடர்ச்சி அல்லாத ஒரு படத்திற்கு அதன் சாயல் இல்லாத ஒரு படத்திற்கு II என்று பெயர் வைப்பதை தயாரிப்பாளர்கள் வேண்டுமானால் வியாபார உத்தியாய் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தான் எதிர்பார்த்த ஒன்று தன்னை எதிர்பார்க்கச்  செய்த ஒன்று அந்த படத்தில் இல்லை எனும் பொழுது சராசரி சினிமா ரசிகனால் அதனை எப்படி வெறும் வியாபார உத்தியாய் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்.

ஒரு பதார்த்தம் நன்றாகவே சமைக்கப்பட்டு சிறப்பாகவே பரிமாறப்பட்டிருந்தாலும், தான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவனைத் துரத்திக் கொண்டே இருக்காதா... 

சிக்கன் பிரியாணியும் கறிசோறும் எதிர்பார்த்து சென்ற ஒருவனுக்கு சுவையான வெஜ் பிரியாணி பரிமாறப்பட்டால் எப்படி உணர்வானோ அது தான் இந்த பிட்ஸா || வில்லா.



ஒருவேளை இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் அரங்கில் சென்று பாருங்கள். அரங்கில் சென்று பார்க்கும் அளவிற்கு ஒர்த்தான படம் தான். பிட்ஸாவுடன் ஒப்பிட்டு இந்தப் படத்தை மொக்கை என்றால் மொக்கை தான். ஆனால் அது வேறு இது வேறு என்ற எண்ண அலையில் பார்த்தீர்கள் என்றால் வில்லா வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர்.    

7 Nov 2013

சுஜாதாவும் ஜெயமோகனும் தமிழும்


"யாருண்ணே இந்தாளு சுத்த லூசா இருப்பாரு போல, சுஜாதாவ போய் திட்டி எழுதி இருக்காரு..."

சில வருடங்களுக்கு முன்பு சுஜாதா பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருந்த சமயம் கூகிள் மூலம் அறிமுகமானவர் தான் ஜெயமோகன். அவரது தளத்தில் வாசகர் கடிதங்கள் மற்றும் அதற்கான மறுவினை என்று ஒரு பகுதி உண்டு, அதில் சுஜாதா பற்றி தனது வாசகர் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் நேரிடையாக மற்றும் கொஞ்சம் வெளிப்படையாகவே விமர்சித்து எழுதி இருந்தார் ஜெயமோகன். அன்றைய காலகட்டத்தில் சுஜாதா என்பவர் எனக்கு சூப்பர் ஸ்டார் போன்றவர், ஆதர்சநாயகன், இன்றும் அப்படித்தான், ஆனால் அது ஆரம்ப கட்டம் என்பதால் கொஞ்சம் சூடான இள ரத்தம் உடைய சுஜாதா ரசிகன் என்று சொல்லலாம். 

தனது வாசகர்களின் கேள்விகளுக்கு மறுவினையாற்றியிருந்த ஜெயமோகனின் பதில்கள் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை, அவர் சுஜாதாவை விமர்சனம் என்ற போர்வையில் தனது பார்வையைத் தான் பதிவு செய்திருந்தார். இருந்தும் என் சூடான வாசக ரத்தம் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தது, இன்றைக்கும் சுஜாதா குறித்த அவரது பார்வையை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு நான் தயாராயில்லை. சுஜாதாவைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் படித்துவிட்டு என்னுள் எழுத கோவத்தில் அண்ணனிடம் சொன்னேன் "யாருண்ணே இந்தாளு சுத்த லூசா இருப்பாரு போல, சுஜாதாவ போய் திட்டி எழுதி இருக்காரு... "

வழக்கமான தனது புன்னகையை உதிர்த்துவிட்டு என் அண்ணன் என்னிடம் சொன்னான் "அப்டி சொல்லாதல, அவரும் பெரிய எழுத்தாளர் தான், நல்லா எழுதுவாரு...படிச்சிப்பாரு". 

"ஓகோ அதான் சுஜாதா மேல இருக்க பொறாமையில பொங்கிட்டாறு போல.. அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேல" என்றேன் அதே கோவத்தோடு.

"ஜெயமோகன் சொன்னது எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது, ஆனா சுஜாதா பத்தின சில விஷயங்கள் ஏத்துகுற மாதிரி தான் சொல்லிருப்பாரு" என்றான்.

ஒரு நிமிடம் என்னையே என்னால் நம்ப முடியவில்லை. சுஜாதாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்த, என்னை விட அதிகமாய் சுஜாதாவை கொண்டாடுகிற என் அண்ணனா இதை கூறுகிறான் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

"நீயும் யாம்லே லூசுத்தனமா பேசுற, ;அந்தாளு என்ன சொல்றாரு பாரு, சுஜாதா அறிவியல் தமிழையும், நவீன தொழில்நுட்ப அறிவையும் வாசகன்கிட்ட முழுமையா கொண்டு போய் சேர்க்கலையாம், சுஜாதாவ அறிவியல் தமிழ் எழுத்தாளர்ன்னே சொல்ல முடியாதுன்னு எழுதி இருக்காரு"

அவன் எதுவும் பதில் பேசவில்லை, நானே தொடர்ந்தேன் 

"நீயே சொல்லுடே, சுஜாதா ஒரு எழுத்தாளான அறிவியல் தமிழ வாசகன் கிட்ட கொண்டு போலையா, இது தான்யா இன்டர்நெட் இப்படி தான் இது வேல செய்யும், இது தான் ஜீனோ, இப்படி ஒரு ரோபோட் உண்டு, அப்புறம் ஏன் எதற்கு எப்படி, இப்படி தன் எழுத்து மூலமா அறிவியல் அறிவ வாசகனுக்கு தூண்டி விடுற வேலைய மட்டும் தான் ஒரு எழுத்தாளனால செய்ய முடியும், முழுமையா ஒரு அறிவ புகுத்த முற்பட்டா அதுக்கு அவரு பாடப் புத்தகம் தான் எழுதணும் தலைமைச் செயலகம் மாதிரி"

"நீ சொல்றதும் கரெக்ட் தான், அதே நேரம் ஜெயமோகன் சொல்றதும் ஓரளவு கரக்ட் தான், அவரு சொல்றத முழுமையா ஏத்துக்கறதும், ஏத்துக்காம போறதும் உன் விருப்பம், ஆனா ஒண்ணு, ஜெயமோகனையும் படி நல்லா எழுதுவாரு"

அண்ணன் சொன்னால் மிகச் சரியாக இருக்கும், அவனுடைய வாசிப்பனுபவம் என்பது எல்லையற்றது, கொஞ்சம் பரந்துவிரிந்தது. சுஜாதாவின் அத்தனை கதைகளும் அவன் நியுரான்களில் தேங்கிக் கிடக்கின்றன, இதில் முக்கியமான விஷயம் சுஜாதாவின் எந்தவொரு நாவலையும் அவன் ஒருமுறைக்கு மேல் படித்ததில்லை, சமயங்களில் அவன் கூறுகின்ற சுஜாதா தகவல்களை வைத்து தான் நானே இங்கு ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறேன், அப்படிப்பட்ட அவனிடம் ஜெயமோகனைப் பற்றிக் கூறினால் பொங்கி எழுவான் என்று நினைத்த என் நினைப்பிற்கு நேரெதிராக பேசிக்கொண்டிருந்தான். 

என்னதான் அவன் ஜெயமோகனை நல்லவர் வல்லவர் என்றாலும் அவர் மீதான அவர் எழுத்துக்கள் மீதான வெறுப்பு என்பது என்னையறியாமலேயே என்னுள் வளர்ந்துவிட்டது. காரணம் சுஜாதாவை விமர்சிக்க அவர் யார் என்ற ஒரே ஒரு காரணம் தான். பின்னர் ஒருசமயம் அண்ணனின் நண்பன் கணேசன் அண்ணனிடமும் இதே விவாதத்தை முன் வைத்தேன். இவர் விகடனில் மாணவப் பத்திரிக்கையாளராக இருந்தவர், பல சுஜாதா புத்தகங்களை எனக்கு இரவலாக வழங்கியவர். இவரிடம் ஜெயமோகன் குறித்து பேசிய போது ஜெயமோகன் எழுதிய கன்னியாகுமரி என்ற நாவலை என்னிடம் கொடுத்து படி என்றார், ஏனோ தெரியவில்லை அந்த நாவலை நான் தொடக்கூட இல்லை, படிக்காமலேயே திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

"அண்ணனே சொல்றான் அவர் அப்படி என்னதான் எழுதுறாரு" என்ற எண்ணத்தில் சுஜாதா தவிர்த்து அவர் எழுதிய மற்ற கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன். ஆகச்சிறந்த அவதானிப்புகள் அடங்கிய இலக்கிய நடை! எனக்கு இவ்விடம் தான் பரிட்ச்சியமானது. எளிதில் புரிபடவில்லை, விளங்கவுமில்லை. ஒருமுறைக்கு இருமுறை வாசித்தாலும் வாசிப்பு என்பது கடினமாகவே இருந்தது.

"என்னல எழுதுறாரு இந்தாளு... ஒன்னும் புரிய மாட்டேங்குது" என்று சலித்துக் கொண்டேன்.

அவன் கூறினான் ஒருகாலத்தில் இதுபோன்ற இலக்கியம் ததும்பும் புத்தகங்கள் மட்டும் தான் அதிகம் உண்டு, ஜெயமோகன் போன்றவர்கள் தங்களை சுந்தர ராமசாமியின் பட்டறையில் இருந்து வந்தவர்களாக அறிமுகம் செய்து கொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே எளிதில் புரியும் தமிழ் இது. என்றபடி என்னிடம் மற்றொரு கேள்வி கேட்டான்,

"சரி சாருவோட ஜீரோ டிகிரி வாங்கிட்டு வந்தனே படிச்சியா"

"போண்ணே நீயும் உன் புக்கும், என்னால ஒரு பக்கத்த கூட தாண்ட முடியல, புக்கா அது.." 

"என்னாலையும் வாசிக்க முடியல தான், ஆனா அந்த புக்க கொண்டாடுறதுக்கும் ஒரு பெரிய கூட்டம் இருக்கு தெரியுமா?"

"சரி இவங்க ஏன் இப்படி எழுதுறாங்க"

"அதான் சொன்னேனே, அந்த காலத்துல தமிழ்ல பலபேர் இப்படி தான் எழுதினாங்க, இதையெல்லாம் உடச்சு தமிழ் புத்தக உலகத்துல பெரிய மாற்றம் கொண்டுவந்தவர் தான் சுஜாதா, சாதாரண படிப்பறிவு இருக்கவன் கூட சுஜாதவ விரும்பிப் படிக்கும் படியா எழுத ஆரம்பிச்சாரு, அதே நேரம் ஜெயமோகன் மாதிரி எழுதுறவங்களும் தமிழுக்கு வேணும், அது வேற ஸ்டைல், இது வேற ஸ்டைல்" என்றான். அதன் பிறகு நானும் ஜெயமோகனை மறந்தே போய்விட்டேன். நான் கடவுளுக்கு ஜெயமோகன் தான் வசனம் என்பது கூட அண்ணன் சொல்லி தான் தெரியும். 

ஆறு மாதங்களுக்கு முன்பு அரசன் என்னிடம் இரண்டு புத்தகங்களைக் கொடுத்து "தலைவரே இந்த புக்ஸ படிங்க ரொம்ப அருமையா இருக்கும், நீங்க கண்டிப்பா படிக்க வேண்டிய புத்தகம்" என்றார்.

"ஒன்று வேலராம மூர்த்தியின் கதைகள், மற்றொன்று ஜெயமோகனின் அறம்". 

அரசன் புத்தகத்தை என்னிடம் கொடுக்கும் பொழுது வாத்தியார் அருகில் தான் இருந்தார். அவர் அறம் புத்தகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு 'யானை டாக்டர் படி ராசா ரொம்ப நல்லா இருக்கும்' என்றார்.

எனக்கு யானையையும் பிடிக்கும், காடுகளையும் பிடிக்கும். போதாக் குறைக்கு வாத்தியாரும் யானை டாக்டரை பரிந்துரைத்துவிட்டார். இருந்தாலும் இப்புத்தகத்தைப் படிக்க ஒரு சிறு தயக்கம், எழுதியது ஜெமோவாயிற்றே. இருந்தாலும் ஒரு சிறிய தயக்கத்திற்கு பின் யானை டாக்டரை படிக்கத் தொடங்கினேன். யானை டாக்டரின் முதல் பக்கத்திலேயே // எண்ணங்கள்மேல் மணல்சரிந்து மூட ஆரம்பிக்க நான் என்னை இழப்பதன் கடைசி புல்நுனியில் நின்று மேலே தாவ உடலால் வெட்டவெளியை துழாவிக்கொண்டிருந்தபோது மீண்டும் அழைப்பு.// என்று ஒரு வரியை எழுதி இருப்பார்... ஷப்பா சத்தியமா முடியல, இப்பொழுது கூட இதன் அர்த்தத்தை யாராவது விளக்கினால் நலம். இருந்தும் இது போன்ற சவாலான வார்த்தைக் கோர்வைகள், மிகச் சரியாக சொல்வது என்றால் ஒரு எழுத்தாளனின் எண்ணக் கோர்வைகள் நிறைந்த ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது புதுமையான வாசிப்பனுபவமாகவே இருந்தது. 

யானை டாக்டர் கொடுத்த உற்சாகம் அறத்தில் இருக்கும் அத்தனை கதைகளையும் உடனே படித்து முடிக்கும் படி என்னை அவசரபடுத்தியது. இங்கே தான் சுஜாதாவின் தமிழும் ஜெயமோகனின் தமிழும் வேறுபடுவதை நான் உணர்ந்தேன். சுஜாதாவின் தமிழ் ஜெட் வேகத்தில் வாசித்தாலும் சுவாரசியம் குறையாது நம்மை தொடர்ந்து வாசிக்கச் சொல்லும், ஜெயமோகனின் தமிழ் நம்மை வேகமாகக் கூட நடக்க விடாது, நிதானமாக பொறுமையாக படித்தால் மட்டுமே அதன் சுவையை தெள்ளத்தெளிவாக உணர முடியும். அவசரகோலத்தில் படித்த பல சுஜாதா கதைகளை நான் மறந்ததுண்டு, ஆனால் அறம் புத்தகத்தில் இருக்கும் அத்தனை கதைகளும் அப்படியே நியாபகத்தில் நிற்கின்றன. 

நூறுநாற்காலிகள் கதை படிக்கும் பொழுது தீண்டத்தகாத நாயாடி சமுதாயத்தை சேர்ந்த நாயகனின் உலகம் என்னையும் அறியாமல் என்னுள் ஒருவித பாரத்தை ஏற்படுத்தி என்னை அழுத்திக் கொண்டே இருந்தது. பெருவலியில் கோமல் தனக்கு வந்த வலியை எப்படி வர்ணிப்பார் என்றால் கை சுண்டுவிரலை கதவிடுக்கில் வைத்து மெல்ல நசுக்கினால் எப்படி ஒரு வலி ஏற்படுமோ அப்படி உணருகிறேன் என்பார், இப்போது நினைத்தாலும் ஜெயமோகனின் எழுத்து அந்த வலியை எனது சுண்டு விரலிலும் ஏற்படுத்திச் செல்கிறது.

சமீபத்தில் அவரது இணையத்தில் தான் சென்ற இமயமலைப் பயணத்தை நூறு நிலங்களின் மலைகள் என்ற தலைப்பில் பயணக்கட்டுரையாக எழுதினார், ஒரு பயணக் கட்டுரை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுரை அது, இமயத்தில் தான் உலா வந்த ஒவ்வொரு பகுதிகளின் வரலாற்று சிறப்புகளையும் அதன் பின்னணிகளையும் சுருக்கமாக இணைத்திருப்பார். சமீப காலத்தில் என் மனம் கவர்ந்த, நான் பெரிதும் விரும்பிப் படிக்கும் ஒரு எழுத்தாளர் என்றால் அது நிச்சயம் அது ஜெயமோகன் தான்.   

கடந்த மாதம் தி.இந்துவில் வணிக நோக்கத்துடன் எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார், அதிகம் கவனம் ஈர்த்த கட்டுரை அது, அதைத் தான் சுஜாதா எப்போதோ செய்துகாட்டிவிட்டு சென்றுவிட்டார். சமீபத்தில் தங்கிலிஷ் பற்றிய ஜெமோவின் கட்டுரை மிகபெரிய தமிழ் அலையை இணையம் எங்கும் வீசிவருகிறது. 

ஜெமோ ஏன் அப்படி ஒரு கட்டுரையை எழுதினார், ஜெமோ கூறியது சரியா இல்லை மனப்பிறழ்வா, நாயரா, மலையாளியா என்றெல்லாம் விவாதம் செய்யும் அளவிற்கு எனக்கு தமிழ்ப்புலமை கிடையாது. ஆனால் என் சுயபுத்தி என்ன சொல்கிறது என்றால் எப்படி ஜெமோவின் சுஜாதா பற்றிய விமர்சனங்களை எப்படி நான் மதிக்கப் போவதில்லையோ,என் மனதில் ஏற்றிக்கொள்ளப் போவதில்லையோ அதே போல் இதையும் ஒரு மொக்கை கட்டுரையாக ஒதுக்கிவிட்டு அவரிடம் இருந்து வெளிபடப்போகும் அடுத்த நல்ல கட்டுரைக்காக காத்திருக்கப் போகிறேன். 

ஒருவேளை ஜெயமோகன் எழுதிய அந்த கட்டுரையின் மூலம் தமிழ் எழுச்சி அலை வானுயர வளர்ந்து தமிழுக்கு தமிழருக்கு நல்லது நடக்கப் போகிறது என்றால் மகிழ்ச்சியே, அதே நேரம் அந்த ஒரு கட்டுரை தமிழையே தமிழின் வரி வடிவத்தையே அழித்துவிடும் என்றளவில் பேசித்திரிபவர்களுக்கு இக்கட்டுரையின் இதற்கு முந்தைய பாராவின் இரண்டாவது வரியை சமர்ப்பிக்கிறேன்.