30 Apr 2020

நிலம் பூத்து மலர்ந்த நாள் – கே.வி. ஜெயஸ்ரீ


வேள்பாரியை நான் வாசிக்கிறேன் என்று தெரிந்தபோதே வாசு முருகவேல் என்னிடம் கூறியிருந்தார் “சீனு, நிலம் பூத்து மலர்ந்த நாள் தவற விடாதீங்க.”, என்று. வேள்பாரி கொடுத்த உச்சகட்ட வாசிப்பனுபவம் நிலம் பூத்து மலர்ந்த நாளை உடனடியாக வாசிக்கத் தூண்டியது. இதில் எனக்கு ஏமாற்றமான விஷயம் கிட்டத்தட்ட வேள்பாரி கொடுத்த அதேபோன்ற ஒரு வாசிப்பனுபவத்தை இதில் எதிர்பார்த்தது. 

(இடைக்குறிப்பு : வேள்பாரி வாசித்து விட்டீர்கள் என்றால் இந்த நாவலை தவறவிடாதீர்கள், கிட்டத்தட்ட இந்நாவல் வேள்பாரியின் சீக்வெல் போல)



என்னைப் பொறுத்தவரையில் ஒரு கதை எப்படி சொல்லப்படுகிறது என்பதை மிக தீவிரமாகக் கவனிப்பேன். அவ்வகையில் முதல் சில அத்தியாயங்களுக்கு இந்தக் கதையின் போக்கை புரிந்துகொள்வதில் கொஞ்சம் திணறினேன். சில புதினங்கள் சட்டென நம்மை உள்  இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது. இது அப்படியில்லை. ஒருவேளை வேள்பாரிக்கு இணையான கதைகளத்தை, கதை சொல்லலை எதிர்பார்த்தது கூட காரணமாக இருக்கலாம். இவையெல்லாமே எனக்கிருந்த ஆரம்பகட்ட வாசிப்புச் சிக்கல்கள். வேள்பாரியில் இருந்து வெளியேறி நிலம் பூத்து மலர்ந்த நாளுக்குள் நுழைவதற்கான இடைவெளி -  அந்த முதல் சில அத்தியாயங்கள். இத்தனைக்கும் இவ்விரண்டிற்கும் இதற்கிடையே சில நூல்கள் வாசித்திருந்தேன் என்பது வேறுவிஷயம்.

ஒரு சில அத்தியாயங்களுக்குப் பின் வேள்பாரியை தூர வைத்துவிட்டு இந்த உலகத்தினுள் நுழைந்துவிட்டேன்.

இந்த நாவலுக்கும் வேள்பாரிக்கும் இருக்கக்கூடிய தொடர்பு இரண்டுமே ஒரே காலத்தில் ஒரே மன்னனை மையமாகக்கொண்டு புனையப்பட்ட கதைக்களம். அதில் பாரி வாழ்ந்த கதை என்றால் இதில் பாரி...

கடும் வறுமையில் இருக்கும் பாணர்கள் கூட்டம் ஒன்று தங்கள் தாய்பூமியை விட்டு இடம்பெயர்ந்து, மன்னன் ஒருவனை சந்தித்து, அவன் சபையில் கூத்து இயற்றி, பரிசில் பெற்றுத் தம் துயரைப் போக்கலாம் என்று நினைகிறார்கள். கூடவே தொலைந்துபோன தங்கள் தலைமகன் மயிலனையும் கண்டுபிடிக்க நினைக்கிறார்கள். பயணம் தொடங்குகிறது. பயணத்தின் வழியில் பெரும்புலவர் பரணரைச் சந்திக்கிறார்கள். அவரிடம் மயிலன் குறித்த சில குறிப்புகள் இருகின்றது என்றாலும் அவர் அதனைக் கூறமறுக்கிறார். மேலும் பெருவள்ளல் வேள்பாரியைச் சந்தித்து அல்லல் தீர்த்துக்கொள்ளச் சொல்கிறார்.

மேலும் சில தகவல்களாக, “வேள்பாரியுடன் கபிலர் இருக்கிறார். அவரிடம் பரணரைச் சந்தித்ததாகக் கூறுங்கள். கபிலர் மற்றதைப் பார்த்துக்கொள்வார்”, என்று நம்பிக்கை அளித்து வழியனுப்புகிறார். கிடைத்த நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு பறம்பு நோக்கி விரைகிறது பாணர் கூட்டம். அங்கே கபிலரைச் சந்திக்கிறார்கள், பாரியையும் சந்திக்கிறார்கள். கூடவே வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையையும் சந்திக்கிறார்கள். அதன் பின் என்னவானது என்பதே மீதிக்கதை.

இந்தப் புதினம் மூன்று சிறு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு  வெவ்வேறு நபர்களின் பார்வையில் கூறப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது. முதல் பார்வை மயிலனின் தந்தையின் மூலமும், பின் மயிலனின் சகோதரி சித்திரை மூலம், பின் மயிலன் மூலமும் கூறப்படுகிறது.

மயிலனின் அப்பாவின் பார்வையில் கூறப்படும் கதையானது, பாணர் கூட்டத்தினர் படும் அவஸ்தைகளையும், பிறந்த நாய்க்குட்டிக்குப் பால்கொடுக்க முடியாத வறுமையால் அக்குட்டிகளைக் கூடக் காப்பாற்றமுடியாத தம் நிலையையும், பின் நாடோடிகளாகப் பெயர்ந்து, சிலர் மூலம் சுடு சொல்லுக்கு ஆளாகி, சிலர் மூலம் அரவணைக்கப்பட்டு, பின் அங்கிருந்து பறம்பு தேசம் நகர்வது போலவும், இடையிடையே மயிலனைப் பற்றிய சிந்தனைகளாகவும் அவர் சொல்லும் கதை நகர்கிறது. ஒரு கட்டத்தில் அவர் மூச்சு நிற்கிறது.   

அங்கிருந்து சித்திரையின் மூலம் கதை நகர்கிறது. எதை எதிர்பார்த்து பறம்பின் உள் நுழைந்தார்களோ அது கிடைக்காமல் அவப்பெயருக்கு ஆளாகி பின் எதிர்பார்ப்பும் ஏமாற்றுமுமாக அல்லல்பட்டு இறுதியில் பெருங்கிழவி அவ்வையிடம் தஞ்சம் அடைகிறாள். இடையே வாழ்வின் பெரும்சுமைக்கும் ஆளாகிறாள்.

இங்கிருந்து மயிலன் தன் கதையைத் தொடங்குகிறான். சிறுவயதில் வீட்டை விட்டு ஓடியதில் இருந்து தன் திறமையின் மூலம் அடுத்தடுத்த படிநிலைகளுக்கு உயர்ந்தபோதும் வாழ்க்கை அவனை அலைகழித்துக்கொண்டே இருக்கிறது. எத்தனை தூரம் அவன் உயர்ந்தபோதும், எத்தனை அறிவு அவன் பெற்றபோதும் அவன் உள்ளத்தில் ஊறிப்போன சூது அவன் வாழ்வை நிலைகுலையச் செய்கிறது. தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாருக்கும் பள்ளம் தோண்டுகிறான். பின்னொரு கட்டத்தில் அவன் செய்த சூது ஊழ்வினையாக உருகொள்கிறது.

இந்த நாவலின் மிக முக்கியமான முடிச்சாக நான் கருதுவதே, கதை கூறும் இம்மூவருமே கதையோட்டத்தில் எதோ ஒரு காரணத்திற்காகப் பகடையாக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் என்ன காரணத்திற்காக அலைகழிக்கப் படுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது இருக்கும். இந்த மூவரையும் சுழன்றடிக்கும் மைய விசையில் மயிலன் நின்று கொண்டிருப்பான். அவனையே அறியாமல் அவனையும் வீழ்த்தி, அவன் குலத்தையும் வீழ்த்தி கூடவே ஒரு பெரும் குலத்தையும் வீழ்த்தி இருப்பான்.

முதல் கதை மயிலனையும், வாழ்வையும் தேடிய கதையாகவும், அடுத்த கதை மயிலனின் வாழ்வில் நிறைந்திருக்கும் புதிர்த்தன்மைகளைத் தேடிய கதையாகவும், இறுதியில் இவை அனைத்திற்கும் மயிலனே விடை கூறும் கதையாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

மலையாள நாவல் ஒன்றின் மொழிபெயர்ப்பு என்ற போதிலும் அந்த சுமை தெரியாமல் மொழிபெயர்ப்பு நிகழ்த்தபட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. கதையின் முதல் சில அத்தியாயங்களுக்கு நாவல் எதை நோக்கி நகர்கிறது என்பதையே புரிந்துகொள்ள முடியாதது மட்டும் வாசிப்பு வேகத்தை மட்டுப்படுத்தியதைப் போல் இருந்தது. சங்ககால இலக்கியம் சார்ந்த என்ற வகைமையில் நிச்சயமாக வாசிக்கப்பட வேண்டிய புதினம் என்றே கருதுகிறேன்.

இந்த நாவலின் மைய முடிச்சை கூறாமல் தவிர்ப்பதன் காரணம், அதனை நீங்கள் வாசிப்பின் மூலமே கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக. ஏனெனில் நாவலின் சுவாரசியமே அதில்தான் அடங்கி இருக்கிறது. நன்றி.

வம்சி வெளியீடு. வாசிப்பு கிண்டில் வழியாக.

29 Apr 2020

வேள்பாரி – கதாபாத்திர வடிவமைப்பும், கதைக் கட்டுமானமும்


வேள்பாரி – கதாபாத்திர வடிவமைப்பும், கதைக் கட்டுமானமும்

சங்ககால வாழ்வை நோக்கியப் பயணங்கள் பெருங்களிப்பு நிறைந்தவை. இதுவரை நாம் கடந்திராத பேரனுபவத்தைத் தரவல்லவை. ஒரு நிலம் ஒரு குலமாக உருவெடுத்து, அதிலிருந்து பல்வேறு குலங்களாகப் பிரிந்து, தங்களுக்குள் இணக்கமாகவும், இணக்கம் மறைந்து சண்டையிட்டும் வாழ்ந்த கதைகளுக்கான குறிப்புகளை நம்மால் அங்கிருந்தே பெற முடிகிறது. 

பல நூறு ஆண்டுகள் கடந்த பின்னும் ஆதி மனிதனை நோக்கிய நம் தேடலும் பயணமும் அதன் மூலம் கிடைக்கும் தரவுகளும் தொடர்ந்து நம்மை வியப்படையச் செய்கின்றன.



நம்மை நாமே ஏன் பின்சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியத்தையும் வரலாற்றை மீண்டும் மீண்டும் பிரதி எடுப்பதன் கட்டாயத்தையும் வரலாற்று ஆசிரியர்களின் மூலம் காலம் நிகழ்த்தியபடியேதான் இருக்கிறது. காலத்தின் வேர் பிடித்து நடக்கும் அவர்களும் அந்தப் பிரதியை மீட்டெடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவ்வகையில் வேள்பாரி எனும் புதினம் சமகாலத்தில் எழுதபட்ட சங்ககாலம் குறித்தான மிகமுக்கியமான வரலாற்றுப் புனைவு என்றே நான் கருதுகிறேன்.

*****

பறம்பு நாட்டை வழிநடத்தும் வேள்பாரி எனும் தலைவனின் வள்ளல் தன்மை குறித்து அறியும் பெரும்புலவர் கபிலர், அதனை உறுதிசெய்யும் பொருட்டு பறம்பு நாட்டை நோக்கிய தன் பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணத்தின் ஊடாக அவர் தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு தகவலும் அவருக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. பின் கோடைகாலத்தில் பறம்பு நாட்டினுள் நுழையும் கபிலர், அடர் மழைக்காலத்திற்குள் பறம்பில் இருந்து கீழ் இறங்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார். காலமோ வேறொரு பதிலை வைத்திருக்கிறது.

பாரியின் ஒப்பற்ற பண்பு நலன்களின் மூலம் ஈர்க்கப்படும் கபிலர் குறிஞ்சி நிலத்திலேயே தன்னையும் ஒருவனாக மாற்றிக் கொள்கிறார். பறம்பு நிலத்தின் ஒருவனாக மாறிப்போகிறார். இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் நாவல் ஆரம்பித்து முடிவடைவது ஒரு பின்கோடைக் காலத்திற்கும் மற்றொரு பின்கோடை காலத்திற்குமான இடைப்பட்ட பகுதியில். அதற்குள் இவ்வளவும் நடந்து விடுகிறது.

பெரும் புலவர் என்று மூவேந்தர்களாலும் கொண்டாட்டப்படும் கபிலர் தன்னை முற்றும் அறிந்தவனாகவே உணர்கிறார். பெரும்புலவன் என்ற கர்வம் அவரிடம் சிறிதேனும் இருந்திருக்கக்கூடும் அதே எண்ணத்துடன் பறம்பை நோக்கியத் தன் பயணத்தை ஆரம்பிக்கிறார்.

கபிலரிடம் ஒரு முன் முடிவு இருக்கிறது அது பாரி எனும் தலைவன் புகழ் போதையில் மயங்கிக் கிடப்பவன் என்று. அப்படிப்பட்ட கபிலரின் மனமாற்றமே பாரியின் பாதையில் நம்மையும் தொடர்ந்து பயணிக்கச் செய்கிறது. பாரி குறித்தும் பறம்பு நாடு குறித்தும் கபிலருக்குச் சொல்லப்படும் விவரணைகளின் மூலமாகவே கபிலரோடு இணைந்து நாமும் பயணிக்கிறோம்.

பறம்பின் எல்லைக்குள் நுழைந்த மறுகணமே கபிலருக்குப் புரிந்து விடுகிறது அந்த நிலம் குறித்தும் அங்கு வசிக்கும் மக்கள் குறித்தும் தனக்கு எதுவுமே தெரியாது என்று. அனைத்தும் அறிந்தவன் எனும் எண்ணம் இருப்பவனால் எதையும் தெரிந்துகொள்ள முடியாது. தன் பலவீனத்தை உணரும் கபிலர், நொடிப்பொழுதில் அதிலிருந்து வெளியேறி தெளிந்த மனதுடன் தனக்கான கேள்விகளை கேட்கத் தொடங்குகிறார்.

கேட்கும் ஒருவனுக்கே பதில் கிடைக்கும் என்றாலும் “அனைத்தும் அறிந்தவனுக்கு இதுகூடத் தெரியவில்லையா?” என்று தன் அறியாமை எள்ளி நகைக்கப்படும் அவஸ்த்தைக்கும் ஆளாகிறார் கபிலர். கற்றுக்கொள்வது என்று முடிவான பின் தன்னை நோக்கி வரும் கேலிகளையும் சேர்த்தேதான் கடந்தாக வேண்டும். எனவே கேள்விகேட்பதை மட்டும் ஒருபோதும் நிறுத்துவதில்லை அவர். ஒருவன் புலமை கொள்வது தன் கேள்விகளின் மூலமே என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

*****

வேள்பாரி புதினத்தின் தலைசிறந்த அம்சம் அதன் கதாபாத்திரக் கட்டமைப்பு. மிக நீண்ட ஒரு வரலாற்றுப் புனைவில், பலவிதமான கதாபாத்திரங்கள் வந்து செல்கின்ற கதைக்களத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான குணங்கள் கொடுக்கப்பட்டு அந்த குணங்கள் மிகக்கச்சிதமாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. நாவல் நிறைவடையும் வரையிலும் நம்மால் அவற்றை நினைவில் நிறுத்திக்கொள்ளவும் முடிகிறது. இந்த நாவலின் பெரும்பலங்களில் இதுவும் ஒன்று.

நாவலின் மைய கதாபாத்திரங்கள் பறம்பும் பாரியுமே என்றாலும் இவர்கள் அனைவரையும் ஒரு புள்ளிக்குள் கொண்டுவரும் கதாபாத்திரம் கபிலர். கபிலருக்குச் சொல்லப்படும் கதையே நமக்குச் சொல்லப்படும் கதை. பின் கபிலர் பார்க்கும் கதையே நாம் அறியும் கதை. கபிலர் பறம்பின் கதையை முதலில் நீலனின் மூலமும் பின் வேட்டுவப் பழையனின் மூலமும் அதன் தொடர்ச்சியாக அதிரன் மற்றும் பாரியின் மூலமும் தெரிந்து கொள்கிறார்.

இவ்வாறு கதை கேட்கும் கபிலர் என்ற கதாபாத்திரம் மீது வைக்கப்படும் பிரம்மாண்டமான சித்திரமானது எங்குமே தன் பிரம்மாண்ட்டத்தை வெளிப்படுத்தி இருக்காது என்பதும் உண்மை. என்னளவில் கபிலர் எனும் பிரம்மாண்டம் வெளிப்படும் தருணம் ஒன்றை நாவலின் இறுதி வரைக்குமே எதிர்பார்த்திருந்தேன். அப்படியொரு சித்திரம் அமையப்பெறவில்லை என்பது என்னளவில் சிறிது ஏமாற்றமே.

அதேநேரம் கபிலரின் உருவம் நாவலின் துவக்கத்திலேயே மிக வலுவாகக் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பதால் அதனையும் மீறி அது தன்னை வெளிப்படுத்த வேண்டிய தேவையும் இல்லை என்ற கூற்றும் ஏற்புடையதே.

‘பாரியைச் சந்திக்கச் செல்கிறேன்’, என்று கபிலர் கூறிய அடுத்தநிமிடம் அறுகநாட்டு அரசன் செம்பன், தானே அவர்தம் தேரை செலுத்தி வந்து விடுகிறேன் என்று கூறும் ஆரம்பக்காட்சியாகட்டும், ஆளிக்காட்டில் கபிலரை முதல்முறை சந்திக்கும் வேள்பாரி வீடு வரைக்கும் கபிலரை தன் தோளில் சுமந்து வரும் காட்சியாகட்டும் இப்படியாக கபிலர் எனும் பெரும்புலவரின் புகழ் ஆரம்பத்திலேயே நமக்குக் கூறப்பட்டு விடுகிறது. அதற்கு மேலும் தன் புலமையை விசாலமாக்க அவருக்கு இருக்கும் ஒரு வாய்ப்பு பறம்பை பற்றித் தெரிந்துகொள்வது மட்டுமே. ஆக கபிலரின் கதாபாத்திரம் கதைகேட்டு அதன்மூலமே தன் புலமையை விருத்தி செய்துகொள்ளும் ஒன்றாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. IT யில் ரிவர்ஸ் KT என்று ஒன்று உண்டு. கற்றுக்கொண்டதை மீட்டுக்கூறல். அதவாது கற்றுக்கொடுப்பதை நாம் ஒழுங்காகக் கற்றுக்கொண்டோமா என்பதற்கான பயிற்சி.

இங்கே கபிலருக்கு அதுபோன்ற பயிற்சிகள் இல்லை என்றாலும் கபிலர் தனக்குத்தானே அந்த பயிற்சியை வைத்துக்கொள்கிறார். தனக்கு வைக்கப்பட்ட நாவல் பழ பயிற்சியை தன் ஆசான் திசைவேழருக்கு வைப்பதாகட்டும், குதிரை ஓட்டிவருகையில் பறம்பு மக்களின் கண்களுக்கு அவர் முடியனை ஒப்ப காட்சியளிப்பதாகட்டும், கபிலர் வெகுவேகமாகத் தன்னை பறம்பு நாட்டுக்கு இயைந்தவனாக மாற்றி இருப்பார்.

மூவேந்தர்களுடனான போரில் கபிலர் கூறும் ஆலோசனைகள் முக்கிய திருப்பமாக அமையும் என்று நினைத்தேன். அப்படியெந்த காட்சிகளும் இல்லை (அதுவும் ஏமாற்றமே). நல்லவேளை புலவர் கடைசிவரை புலவராகவேதான் இருக்கிறார்.

கபிலர் முதல்முறை பாரியை சந்திப்பதற்கான முந்தைய இரவில், பழையனும் கூழையனும் பேசிக்கொள்ளும் சம்பாஷனைகளின் மூலம் கபிலர் ஒருவேளை பறம்பு நிலத்தை வேவு பார்க்கவந்த ஒற்றனாகத்தான் பறம்பின் உள் நுழைகிறாரோ என்ற சந்தேகம் அவர்களைப் போலவே எனக்கும் எழாமல் இல்லை. அதன்பின் நிகழும் மாயாஜாலம் வேள்பாரி கொள்ளும் உச்சம். கதை நகர்வின் சுவாரசியத்தை இவ்வாறு சிறுசிறு காட்சிகளின் மூலமும் கச்சிதமாக நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர் என்றே கூறவேண்டும்.     

*****

கபிலருக்கு அடுத்து கவனிக்கப்படும் கதாபாத்திரம் நீலன். முதல் அத்தியாயத்தில் பறம்பு நாட்டின் முதல் சாட்சியாக வெளிப்படும் நீலனின் கதை, நெடுக வளர்ந்து முடிவில் கதையின் நிறைவை நோக்கியும் அவனே அழைத்துச் செல்கிறான் என்பதன் மூலம் அவன் முக்கியத்துவத்தை உணர முடிகிறது.

இந்த நாவலின் சுவாரசியத்தை அதிகரிக்கும் கட்டுமானங்களில் மற்றொன்று கதை சொல்லல் முறை. இத்தனைப் பெரிய நாவலை எளிதில் புரிந்துகொள்ள அதன் கட்டுமானத்தைப் புரிந்துகொள்வது அவசியம். புதினம் முழுக்கவே, நாவலின் ஆசிரியர் எது ஒன்றை நமக்கு முதலில் அறிமுகம் செய்கிறாரோ அதுவே இப்புதினத்தின் அடுத்த அத்தியாயத்தில் பேருருகொள்ள இருக்கிறது அல்லது    திருப்புமுனையாகப் போகிறது. நாவலின் தொடக்க அத்தியாயங்களிலேயே கண்டுகொள்ள முடிகிற இந்த உத்தியை கதையின் கடைசி அத்தியாயம் வரைக்கும் மிக சுவாரசியமாகவே பயன்படுத்தி இருக்கிறார் ஆசிரியர் என்பது அட்டகாசமான ஒன்று.

நீலனை நாம் சந்திக்கும் முதல் தருணமே அவன் படபடவென்று ஓடுகிறான், செய்ய வேண்டிய காரியங்களை சடுதியில் செய்கிறான். தன்னுடைய வேகத்திற்கு ஈடுகொடுத்து நடக்க முடியாத கபிலர் குறித்து அவன் கூறும் “வீரர்களின் வாழ்நாள் மிகக்குறைவு, காத தூரத்தை இத்தனை நாழிகைக் கடக்க மாட்டார்கள்”, வார்த்தைகளின் மூலமே அவனுள் இருக்கும் துடிப்பை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

நாவலின் போக்கில் குறிஞ்சி நில மூப்பர்களான முருகன் வள்ளியின் கதை எத்தனை முக்கியமானதோ அதேயளவு முக்கியமானது கொற்றவைக் கூத்தும் அதன் மூலம் கூறப்படும் கதைகளும். நிலத்தின் மீது எப்படி குலங்கள் தோன்றின. அந்தக் குலங்கள் அழிந்து எப்படி மன்னராட்சி தோன்றியது என கதையின் போக்கை மிகத் தெளிவாகக் கட்டமைக்க உதவும் இடம் கொற்றவைக் கூத்து. இந்த ஒவ்வொரு கூத்தும் அதன் மூலம் கூறப்படும் கதைகளுமே தனித்துவம் வாய்ந்தவை. இந்த கூத்தின் மூலமே நீலன் குறித்தும் அதிரன் குறித்தும் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

*****

நீலனுக்கு அடுத்த முக்கியத்துவம் அதிரனுக்கு. அதிரன், நாகர்களின் குலத்தைச் சேர்ந்தவன். அங்கவையின் மனதில் இடம்பிடிக்க இருப்பவன். மூவேந்தர்களுடனான போரில் தன் படையை முன்னின்று வழிநடத்தப் போகிறவன் என்பதையும் மீறி எப்போதும் பாரியின் கண்காணிப்பிலேயே இருக்கக் கூடியவன் என்ற பொறுப்பும் அவனுக்கு இருக்கிறது.

அதிரனுக்கும் அங்கவைக்கும் இடையே வளரும் காதலை பாரி கண்டுகொள்ளக்கூடிய தருணமே அற்புதமான ஒன்று. இந்தக் கதையில் நமக்கு விடை தெரியாத கேள்விகள் இரண்டே இரண்டு. ஒன்று கபிலருக்கான அரசவை விருந்துக்குத் தேவையான அறுபதாங்கோழி எப்படிக் கிடைத்தது? மற்றொன்று பாண்டிய இளவரசி பொற்சுவையின் முன்னாள் காதலன் யார்? இரண்டாம் கேள்வியை அப்புறம் பார்ப்போம். இந்த அறுபதாங்கோழி செம மேட்டர்.

விடை தெரியாத இரண்டு கேள்விகள் என்று கூறக்காரணம், கதை முழுக்க கபிலர் கேள்வி கேட்டுகொண்டே இருக்க, அவர் கேட்காத இரண்டு கேள்விகள் இவையாகத்தான் இருக்க வேண்டும் என்பதால்தான். அதில் ஒன்றிற்கு ஏற்கனவே அவருக்குப் பதில் தெரியும். இரண்டாவது இந்த அறுபதாங்கோழி.

அறுபதாங்கோழி கிடைத்துவிட்டது என்ற தகவலை சங்கவை பாரியிடம் கூறும் நொடியே அது அங்கவையின் மூலமே கிடைத்திருக்கக்கூடும் என்ற விஷயத்தை பாரி கண்டுபிடித்திருப்பார். காரணம் அங்கவை காதலில் விழுந்துவிட்டாள் என்பதை அதற்கு முந்தைய அத்தியாயத்தில் அவள் அந்த சந்தன வேங்கையை கூர்ந்து நோக்கும்போதே கண்டுபிடித்திருப்பார். மேலும் அறுபதாங்கோழி முட்டையிடும் தீப்புல் காதலர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும் என்ற தகவலை நீலனின் காதலி மயிலா, அங்கவை தன்னிடம் கூறியதாக நீலனிடம் கூறுவாள். இவையனைத்தையும் கணிக்கும் பாரி பேரெலி வேட்டையின்போது அதிரனையும் சேர்த்தே துரத்திச் சென்றிருக்கக்கூடும் - இவன் தன் மகளுக்கு ஏற்றவன்தானா என்பதை கண்டுபிடிக்கும் பொருட்டு. ஒரு நாவலின் சுவாரசியமான பகுதிகள் சொல்லப்படாத தகவல்களே.

நீலனுக்கு அதிரனுக்கும் அடுத்த இடம் வாரிக்கையனுக்கும் தேக்கனுக்கும். வாரிக்கையன் ஊரில் மிக மூத்தவன். தலைவனே மதிப்பு கொடுக்கும் பெருங்கிழவன். நடக்கும் அத்தனை யுத்தங்களிலும் தலைமை ஆலோசகன் மற்றும் முடிவெடுப்பவன். தேக்கன், அந்தப் பெருங்காட்டின் பேராசான். தன் குலத்தவருக்குக் காடறியத் தேவையான சகல நுட்பங்களையும் கற்றுக்கொடுப்பவன். காட்டு வாழ்க்கைக்கு அவர்களைத் தயார் செய்பவன்.   

இந்த நாவலில் ஒரு பகுதி மிக அழகாகக் கூறப்பட்டிருக்கும்.

வாரிக்கையன், பழையன் – முதல் தலைமுறை

தேக்கன், கூழையன் – இரண்டாம் தலைமுறை

பாரி, முடியன் – மூன்றாம் தலைமுறை

அதிரன், நீலன் – நான்காம் தலைமுறை

இந்த நான்கு தலைமுறை கதாபாத்திரங்களும் மையமாகச் சுழன்று கட்டமைத்திருப்பதே இந்த நாவலின் ஒட்டுமொத்த சித்திரமும்.

*****

வேள்பாரியில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் கற்றலும் கற்றுக்கொடுத்தலும். இந்த நாவல் முழுக்கவே யாரோ ஒருவர் இன்னொருவருக்குக் கற்றுக் கொடுப்பவராகவும் கற்றுக் கொள்பவராகவுமேதான் வருகிறார்கள். வள்ளி முருகனுக்கோ, முருகன் வள்ளிக்கோ கற்றுக்கொடுப்பதாகட்டும். பறம்பில் வசிக்கும் ஒரு குலத்தவர் மற்றொரு குலத்தவருக்குக் கற்றுக்கொடுப்பதாகட்டும், இப்படி கற்றலின் மூலம் அறிவை விருத்தி செய்த ஒரு இனமாகவும், தொடர்ந்து கற்றுக்கொடுத்தலின் மூலம் தொடர்பை இழந்துவிடாத ஒரு இனமாகவுமே நம் வரலாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நாம் எதை இழந்தோம், நம்மிடம் இப்போது எது இல்லை என்பதை இந்த குணத்தின் மூலம் உணர முடியும்.

அதேநேரம் இதில் எனக்குக் கேள்வி எழக்கூடிய பகுதி எதுவென்றால் முருகன் வள்ளிக்கு ஏழிலைப்பாலை என்ற மரத்தை அறிமுகம் செய்து வைக்கும் காட்சி. வள்ளி கொடிகுலம் சார்ந்தவள். அதாவது காட்டின் அத்தனை பச்சயங்களை பற்றியும் மிகுந்த அறிவுவாய்ந்த ஒரு குலத்தில் இருந்து வந்தவள் அவளுக்கு ஏன் ஏழிலைப்பாலை குறித்துத் தெரியவில்லை என்ற கேள்வி எழுந்தது.

காதல் மற்றும் திருமணம் என்ற வகையில் இங்கு யாரும் யார் மீதும் ( குலங்களுக்கு இடையே) காதல் கொள்ளலாம், திருமணத்திற்கு முன்பே உறவும் கொள்ளலாம் என்றே திருமணம் சார்ந்த சமூகவியல் சித்தரிக்கப்பட்டுள்ளது. சங்க காலம் பற்றிய புரிதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு தகவலாக இதனைப் பார்க்கிறேன். அதேநேரம் உடன்கட்டை ஏறும் பழக்கமும் இந்த காலத்தில் இருந்திருக்கிறது – இந்தநாவலில் அதற்கான தரவுகள் இல்லை என்றாலும் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்றே நினைக்கிறன்.

அதேபோல்தான் காட்சிகள் முன்னுக்குப் பின்னாக நகரக்கூடிய இடங்கள். கபிலர் பாரியையும் பறம்பையும் அறியவந்தவர் என்றபோதும் வேட்டுவன்பாறையில், மக்களின் வீட்டில் இருக்ககூடிய திறளி மரத்துப் பலகையைப் பார்க்கும்போது, சமவெளி மக்கள் அந்தப் பலகையை எவ்வாறு யவன வணிகத்திற்குப் பயன்படுத்துகின்றனர் என்ற நினைவுகளாகக் காட்சிகள் வணிகத்தை நோக்கி விரிந்து பின் பறம்பை நோக்கி வரும்.

நாவல் முழுக்கவே கபிலர் சந்திக்கும் அனைவரும் பாரியின் பெருமைகளைப் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள் பாரியைத் தவிர. ஒரு காட்சியில் சேர நாட்டு அமைச்சன் கோளூர்சாத்தான் வாணிபம் பேசும் நோக்குடன் பாரியை சந்திக்க வருகிறார். பறம்பு நாட்டுக் கொள்கையின்படி எதற்காகவும் யாருடனும் வாணிபம் செய்வதில்லை என்பதால் அவனை திரும்ப அனுப்பிவிடுகிறான் பாரி. ஆனால் என்ன வாணிபம் என்பதை கேட்டுத்தெரிந்திருக்க மாட்டான். அதேநேரம் இந்தக் கேள்வியை பறம்பு நாட்டின் எல்லைக்காவல் வீரன் கூழையன் அறிந்திருப்பான். அதாவது எந்த கேள்வியை யார் யாரிடம் கேட்க வேண்டும் என்ற முறைமைக்கான சான்று இந்தக்காட்சி. இதுபோன்ற நுட்பமான விவரணைகளுடனேயே இந்த நாவல் பயணிக்கிறது.

சங்ககாலம் தொட்டே உப்பு நம்மிடையே தவிர்க்க முடியாத பதார்த்தமாகத்தான் இருந்து வருகிறது. பறம்பு நாட்டின் பிரதான குலம் வேளீர்குலம்தான் என்றபோதிலும் பறம்பு நாடு முழுக்கவே அழிந்துபோகும் தருவாயில் இருக்கும் பல குலத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரணாக பறம்பு நாடு இருக்கிறது. இதில் பெரும்பாலான குலங்கள் அழிவைச் சந்திப்பதற்குக் காரணமாக உப்பு விற்கும் குலமான உமணர்கள் இருக்கிறார்கள். என்ற போதிலும் பறம்புநாடு உப்பை உமணர்களிடம் இருந்து தொடர்ந்து பண்டமாற்றம் செய்தபடியேதான் இருக்கிறார்கள்.

பறம்புநாட்டைப் பொறுத்தவரையில் குற்றங்களுக்கான தண்டனையோ அல்லது அவர்களை அடைத்து வைக்கும் சிறைசாலையோ கிடையாது. தலைவனை அழிக்கவந்த குலம் சிக்கிக்கொண்ட போதும் கூட இனி நீங்கள் பறம்பில் இருக்கும் வரை ஆயுதங்களை தொடக்கூடாது என்ற நிபந்தனையையே விதிக்கிறார்கள். இதைக்கூறுவதன் காரணம் பறம்பு நாடும் மொத்தமுமே குற்றமற்றவர்கள் நிறைந்தநாடாகத்தான் இருக்கிறது. குற்றமற்றவர்கள்தானே தவிர அவர்கள் மனதிற்குள் கோபமும் பழியுணர்ச்சியும் இல்லாமல் இல்லை. தங்களை அழித்த மன்னர்களை அழிப்பதற்கான நேரத்தை எதிர்பார்த்தே காத்திருக்கிறார்கள். அப்படியொரு வாய்ப்பாகவே மூவேந்தர்கள் உடனான யுத்தத்தை எதிர்கொள்கிறார்கள்.

பறம்பு நாட்டிற்குக் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் முக்கியத்துவம் பெரும் இரண்டு கதாபாத்திரங்கள் பாண்டிய நாட்டு இளவரசி பொற்சுவை மற்றும் சிற்பி காராளி. பொற்சுவை முன்னாள் காதலன் யார் என்பதை கண்டுபிடித்து விட்டீர்களா? அதற்கான என் யூகத்தை இந்த விமர்ச்சனத்திலேயே பதிவு செய்துள்ளேன். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

கதையின் தொய்வு நிறைந்த பகுதிகளாக நான் உணர்வது, இரண்டாம் பாகத்தில் கதை பரபரவென்று நகரும் தருணங்களில் இடைச்செருகல்களாக வந்து செல்லும் காதல் காட்சிகள்.

பெண்களுக்கான முக்கியத்துவம் என்ற வகையில். பெண்கள் எவரும் போர்க்களங்களில் இறங்கி போர் புரியவில்லை. அதேநேரம் கொற்றவை யட்சி என்ற இரண்டு பெண் தெய்வங்களே போர்த்தெய்வங்களாகவும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பறம்பு நாட்டுப் பெண்கள் போர்த்தொழிலில் ஈடுபடவில்லையே தவிர பறம்பு நாட்டைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் நாகப்பச்சை வேலியை அவர்களே கட்டமைத்திருக்கிறார்கள். அவ்வகையில் பாதுகாப்பு விஷயத்தில் சமபங்கு வகிக்கிறார்கள்.

இந்த பதிவில் நான் குறிப்பிட்டவை மொத்தமும் வேள்பாரி புதினத்தின் கதாபாத்திரக் கட்டமைப்பும் கதையின் வடிவம் குறித்தும் மட்டுமே. எழுதாது எவ்வளவோ இருக்கின்றன. மிக முக்கியமாக பாரியின் கதாபாத்திர கட்டமைப்பு குறித்து நான் எதுவுமே எழுதவில்லை. அதையே தனி பதிவாக எழுதமுடியும். பாரி சறுக்கும் இடங்கள், பாரி மேலெழும் இடங்கள் என்று. இதில் குறிப்பிட முனைந்த தகவல்கள் இந்தப் புதினம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை என்னளவில் உணர்ந்த காரணங்களாகத்தான்.

(இதில் பல இடங்களில் வரலாறு பிழையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிற சர்ச்சையும் இருக்கிறது. அவற்றை இனிதான் தேடி வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். முடிந்தால் அது குறித்தும் பேசுவோம்)

இந்த பதிவை பறம்பு நாட்டுத் தேறலின் ஒரு சொட்டாகப் பாவித்துக்கொள்ளுங்கள். நன்றி.

28 Apr 2020

ஹிப்பி - அய்யனார் விஸ்வநாத்


ஹிப்பி – அய்யனார் விஸ்வநாத்

என்றைக்காவது நீங்கள் ஒரு ஹிப்பியாக மாற ஆசைப்பட்டிருகிறீர்களா?

ஹிப்பி - இந்த வார்த்தையே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? இந்த வார்த்தையை யார் எனக்கு அறிமுகம் செய்திருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்க்கிறேன். சத்தியமாகத் தெரியவில்லை. ஆனால் மனதளவில் நான் ஒரு ஹிப்பியாக வேண்டும் என்று ஆசை கொண்டிருக்கிறேன். அதாவது ஹிப்பி என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியும் முன்னமே. எனக்குத் தெரிந்தளவில் ஹிப்பி என்பவர்கள் வீடற்றவர்கள். நாடற்றவர்கள். கட்டுப்பாடற்று தங்கள் விருப்பம்போல் சுற்றக்கூடியவர்கள். இதுவும்தான். ஆனால் இதற்கும் மேலானாவர்கள் என்பது புரியும்போது ஏனோ ஹிப்பிகளின் மீது இருந்த ஆர்வம் நீர்த்துப் போய் இருந்தது.



ஹிப்பிக்களும் நாடோடிகளும் ஒரே போன்றவர்களா என்ற கேள்வியை என்னுள்ளே கேட்டிருக்கிறேன். ஹிப்பிகள் அனைவரும் நாடோடிகளே ஆனால் நாடோடிகள் அனைவரும் ஹிப்பிகள் அல்ல. ஹிப்பிகள் கலகக்காரர்கள். ஒரு கட்டமைப்பிற்குள் வராதாவர்கள். தங்களை சுற்றி எழுப்பப்படும் வரையறைகளை கேள்வி கேட்பவர்கள். உயிரின் மீது ஆசையற்றவர்கள். அதனால் பயமற்றவர்கள்.

ஒரு நைட்ஷிப்ட் அன்று பீகாரி நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நல்ல போதையில் அலுவலகம் வந்திருந்தான். ஆனால் துளி வாசம் இல்லை. எப்படி என்றேன். ஒரு போதைப் பொருளின் பெயரைச் சொல்லி இது ஹிப்பிகள் உபயோகிப்பது என்றான். அவனுடைய தலைமுடி கூட ஹிப்பியைப்போலவே இருக்கும்.

“எனக்கு கூட ஹிப்பிக்கள் மேல ஆர்வம் உண்டு”, என்றேன்.

“சரக்கடிப்பியா? தம்?, போதை?”, என்று அடுக்கிக்கொண்டே சென்றான். அனைத்திற்கும் இல்லை என்றேன். “அப்போ உன்னால ஹிப்பியாக முடியாது”,  என்றான். அன்றைய இரவில்தான் ஹிப்பிகள் குறித்து பாடம் எடுத்தான். “இன்னும் சில மாதங்களில் இந்த வேலையைவிட்டுவிட்டு என் அப்பாவின் தொழிலில் இறங்கிவிடுவேன். அதன்பின் ஆறுமாதம் ஹிப்பி ஆறுமாதம் வீடு என்று இருக்கலாம்”, என்று கூறினான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் சொன்னதைப் போலவே சில வாரங்களில் வேலையை விட்டுவிட்டேன் என்று மெசேஜ் அனுப்பினான். ஹிப்பியாக மாறினானா என்றெல்லாம் தெரியவில்லை.

அவன் கூறியதைப்போன்ற கலகக்காரர்கள் நம்மிடையே உண்டா? அதுவும் நம் ஊரில்? என்றெல்லாம் யோசித்து உண்டு. எனக்குத் தெரிந்து ஹிப்பிகள் யாரையும் இதுவரையும் சந்தித்தது இல்லை. ஒருவேளை என்னையுமறியாமல் எங்கேனும் ஓரிடத்தில் அவர்களைக் கடந்து சென்றிருக்கக் கூடும். யோசித்துப் பார்த்தால் கற்றது தமிழ் பிரபாகரன் கூட தன் ஆனந்தியைத் தேடி ஒரு ஹிப்பிபோல்தானே அலைந்து திரிந்தான். அவனைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் உதாரணம் சொல்வதற்கு.

அப்படி இதுவரை நான் சந்தித்திராத மனிதர்கள் நம்மூரிலேயே இருக்கிறார்கள், நம்முடனேயே இருக்கிறார்கள். அவர்கள் இன்னின்ன காரியங்கள் எல்லாம் செய்கிறார்கள் என்று அந்த ஹிப்பி கூட்டத்தைச் சுற்றி ஒரு புனைவை எழுப்பியிருக்கிறார் அய்யனார் விஸ்வநாத்.
  
குடிகார அப்பாவின் மூலம் குடும்பத்தை இழக்கும் பதின்ம வயது இளைஞன் ஒருவன், திருவண்ணாமலையில் தான் சந்திக்கும் ஹிப்பி கூட்டத்தின் மூலமாக அவனும் ஒரு ஹிப்பியாக மாறுகிறான். அந்த சூழ்நிலையில் அவனைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு சம்பவமும் அதிர்சிகள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அதை அவன் எப்படிக் கடக்கிறான். ஒரு சாதாரண ஆட்டோ டிரைவரான அவனை அந்த ஹிப்பி கூட்டம் முழுமையாக ஏற்றுக்கொண்டதா இல்லை அங்கேயும் போட்டி பொறாமை வஞ்சம் சூழ்ச்சிகள் எல்லாம் இருக்கிறதா என ஹிப்பி கதைக்களத்தை மையமாகக் கொண்டு தன் நாவலை எழுதியுள்ளார் அய்யனார் விஸ்வநாத்.

உங்களுக்குக் ஹிப்பி கலாச்சாரத்தின் மீது ஆர்வம் இருந்து அதுகுறித்த ஒரு புனைவை வாசிக்க வேண்டும் என்றால் இந்நாவல் நல்லதொரு ஆரம்பம். குறுநாவல் என்பதால் சில மணிநேரங்களில் வாசித்துவிடலாம். ஆனாலும் ஒரு பெரு நாவலுக்கான கதைக்களமாக இருந்தபோதிலும் அதனை வளர்க்காமல் குறுநாவலாக முடித்துக் கொண்டது ஏன் என்று தெரியவில்லை. எழுத்தென்ற வகைமையில் சுவாரசியமாக இருந்தபோதிலும் ஆரம்பிக்கும் முன்பே கதை முடிந்ததைப் போல் தோன்றியது எவ்வித அதிர்வுகளையும் ஏற்படுத்தாமல்.

27 Apr 2020

நிலம் எனும் நல்லாள் – சு.வேணுகோபால்

நிலம் எனும் நல்லாள் – சு.வேணுகோபால்

இந்த புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயத்தைக் கடக்கும் முன்பே இதை தொடர்ந்து வாசிக்கலாமா எனும் கேள்விக்கு ஆளாகினேன். அரசன் என்னிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுக்கும்போது “உனக்கு இது கண்டிப்பா பிடிக்கும்ன்னு சொல்ல முடியாது. பிடிக்கலாம்யா!”, என்று கூறித்தான் கொடுத்திருந்தார். அவர் அப்படிக்கூறும் ஆள் அல்ல. எனக்கு பிடிக்குமா இல்லையா என்பதை ஓரளவுக்குக் கணித்துவிடுவார்.



சில புத்தகங்கள் வாசிக்கும் வேகத்தில் அதிரிபுதிரியாகப் பறக்கக் கூடியவை. சில நிதானமாக நகரக் கூடியவை. சில எவ்வளவு முயன்றாலும் அழுத்திப் பிடித்து ஒரே இடத்தில் நிற்க வைக்கக்கூடியவை. இந்த புத்தகம் மூன்றாவது ரகம் என்பது புரிந்தது. இணையத்தில் யாரேனும் இது குறித்து எழுதியுள்ளார்களா என்று தேடிப் பார்த்தேன். ஆச்சரியம் இதே பெயரில் மூன்று புத்தகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று அ.முத்துலிங்கம் எழுதியது. அதற்கான விமர்சனங்களும் அதிகமாக இருந்ததன்.

சு.வேணுகோபால் எழுதிய நிலம் எனும் நல்லாள் விமர்சனத்தை தேடிக் கண்டடைந்தபோது அவர் எழுதியவற்றில் இது மிக முக்கியமான நாவல் என்ற குறிப்பு கிடைத்தது. அப்படியென்றால் வாசித்தே ஆக வேண்டும். வாசித்துமாயிற்று

கணவன் மனைவிக்கு இடையே நிகழக்கூடிய வாழ்வியல் சிக்கல்கள் நிறைந்த எளிமையான கதை. கூடவே நிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. (அடிக்குறிப்பாக ஒன்றை கூறிகொள்கிறேன் -  குடும்ப சண்டைக்குப் பின்னான நாட்களில் இந்த நாவலை வாசிக்காதீர்கள் குடும்ப வாழ்க்கையையே வெறுத்து விடுவீர்கள்).

பழனிகுமார் என்பவன் பணி நிமித்தமும், வாழ்க்கை நிமித்தமும் தன் சொந்த ஊரான தேனியை விட்டுப்பிரிந்து மதுரைக்கும் கோயமுத்தூருக்குமாக அல்லாடுகிறான். அவனுடைய விருப்பு வெறுப்புகளின் காரணமாக அவனுக்கும் மனைவிக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்படுகிறது. பழனிகுமார், தன் மனைவி ராதா தன்னைப் புரிந்துகொள்ளவில்லை. தன்னுடன் வர மறுக்கிறாள். தன் குடும்பத்துடன் இணக்கமாக இருக்க மறுக்கிறாள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அவள் மீது வைக்கிறான். ராதாவும் அதற்கு ஏற்றாற்போல் சரிக்கு சமமாக மல்லுக்கு நிற்கிறாள். கணவன் என்கிற கிஞ்சித்து மரியாதையும் அவளிடத்தில் இல்லை. தன்னைக் கொல்ல வந்த சாத்தானாக அவனைப் பார்க்கிறாள்.

பழனிகுமார் தன்னுடைய குடும்பம் தன்னுடைய பூர்வீகம் என்று அல்லாடுகிறான். மனைவி தன்னிடம் எதிர்பாப்பது அத்தனையும் ஆடம்பரம் என்று புலம்புகிறான். இதற்கிடையே தாம்ப்தயம் முற்றிலுமாக அற்றுப்போகிறது, இவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை மணம் முடித்துக் கொள்ளலாமா என்று அல்லாடுகிறான். கள்ளத் தொடர்புக்கும் தயாராகிறான். நிறைவேறாத ஆசைகளை தன்னுடைய புலம்பல்களாக மாற்றி உள்ளுக்குள்ளே போட்டுக் குமைகிறான். நாவல் ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரைக்கும் இப்படியே நகர்கிறது (இது ஒருவிதத்தில் எனக்கு அயற்சியைக் கொடுத்தது).

இந்த கதையின் ஊடாக விவசாயத்தின் பின் இருக்கும் வலி வேதனைகள் விளைச்சலின் மூலம் அவ்வபோது கிடைக்கும் சந்தோசங்கள் ஏமாற்றங்கள் என நகர வாழ்வில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் விவசாயம் குறித்தும் பேசுகிறார் வேணுகோபால். இந்த நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது பழனிகுமாரின் தம்பியாக வரக்கூடிய குமரன்தான். கதை நகர்வின் பெரும்பலமும் அவனே.  

கதை என்றளவில் புரிந்துகொள்ளக் கஷ்டமில்லாத கதைதான். பழனியின் மன ஓட்டங்கள் ஊரை விட்டுப் பிரிந்த யாரொருவரும் எதிர்கொள்ளகூடியதே. புரிந்துகொள்ள முடியாத ஒன்று அந்தக் கதாபாத்திர சித்தரிப்பு. நியாயப்படி இந்தக் கதையின் ஓட்டத்தில் பழனிகுமாரின் மீதுதான் நமக்குப் பரிதாபம் வந்திருக்க வேண்டும். அதைத்தான் ஆசிரியரும் சித்தரிக்க முயன்றிப்பார் என்று நினைக்கிறன்.

ஆனால் பழனிகுமாரின் மீது உருப்படியான பரிதாபம் ஏற்பட இந்த நாவலில் நமக்கு இருக்ககூடிய ஒரே காரணம் அவன் நிலத்தை விட்டுப் பிரிந்து நிலங்களுக்கு இடையே அல்லாடுபவன் என்ற ஒற்றைத்தரவு மட்டுமே. அதைத்தவிர வேறொன்றும் அவனுக்கு நியாயமாக இல்லை.

இந்த நாவலில் என்னால் பரிதாபப்பட முடிந்தது பழனிகுமாரின் மனைவி ராதாவிற்காக. இப்படியொரு குழப்பவாதி கணவனுடன் எப்படி அவளால் இத்தனை காலம், காலம் கடத்த முடிகிறது என்று. பழனிகுமார் எதிலுமே உருப்படியில்லை. வாசிங் மெஷினில் இருக்கும் துணிகளை காயப்போட மறக்கிறான். கொண்டு வந்த கடலையை உலறப்போடவில்லை. வாடகைப் பணம் கொடுக்க மறக்கிறான். ஏன் பள்ளிவிட்டு வரும் தன் பிள்ளைகளை அழைத்துவரகூட அவனுக்கு மனம் ஒப்பவில்லை. ஆற்றங்கரையில் அவன் சந்திக்கும் மனநிலை பிறழ்ந்த பெண்ணின் மீது வரும் பரிதாபம் கூட தன் மனைவியின் மீது வர மறுக்கிறது.

அவளை ஒரு பேயை ஒப்ப பார்க்கிறான். ஆனால் அவளோ பம்பரம் போலச் சுழல்கிறாள். நிதானமாக உணவு உண்ண முடியாமல் நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுகிறாள். நோயுற்று அவதியுறும் பிள்ளைகளைத் தாங்குகிறாள். பிள்ளைகளுக்காக பழம் வாங்கிவரச் சொல்லி, இவன் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையில் அவளே வாங்கி வருகிறாள். இப்படி ராதா எனும் பெண்ணை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவளைப் பற்றிச் சொல்லப்படாத பக்கங்களின் மூலமே. இந்த நாவல் முழுக்கவே ராதாவுக்காகப் பேசும் குரல் என்று எதுவுமே இல்லை. ஆங்காங்கு கிடைக்கும் தகவல்களின் மூலமே ராதாவைப் பற்றிப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் பழனிகுமாரோ கடந்த காலத்தில் உழல்கிறான். காமத்திற்காக ஏங்குகிறான். தன்னைச் சுற்றி நிலவும் பிரச்சனைகளையே பூதாகரமாகப் பார்க்கிறான். தன் மனைவி தான் நினைப்பதைப் போல இல்லையே என்று உழல்கிறான். தன் இளமையை அழிக்க வந்தவள் என்ற பிம்பத்தை அவள் மீது சுமத்துகிறான். அதற்காக ராதாவும் குறையற்ற பெண்ணா என்றால் அவளுக்கும் பலவீனங்கள் இருக்கின்றன. அதைச் சீண்டிப்பார்க்கும் குணம் பழனிகுமாருடையது. அவளும் அதற்கு ஏற்றார் போல் ஆடுகிறாள் அவ்வளவுதான்.

பிரச்சனை என்பது இருமுனைக் கத்தி, எப்படி வீசினாலும் இருவரையும் பதம் பார்க்கும். பழனிகுமாருக்கு இணையாக ராதாவும் கத்தி வீசுகிறாள் என்ற காரணத்திற்காக பழனிகுமார் மேலானவனும் இல்லை, ராதா தாழ்ந்து போவதும் இல்லை. பழனிகுமார் எப்போதுமே தன்னைக் கடந்து எதுகுறித்தும் யோசிக்க முயன்றதுமில்லை.

நாவலில் நான் கண்ட இன்னொரு வியப்பான பகுதி பழனி கோயமுத்தூர் நிலத்தாரையும், ராதா தேனிவாசிகளின் மீதும் வைக்கும் நிலம் சார்ந்த நேரடிக் குற்றச்சாட்டு. இதுவரைக்கும் வேறெந்த நாவலிலும் இதுபோல் வாசித்ததில்லை என்பதால் அதுவொரு புதுமையான வாசிப்பனுபவம்.

இந்த நாவல் நிலம் சார்ந்த பிறழ்வு குறித்து பேசமுனைந்த ஒன்று. அதற்காக அவர் கட்டமைக்க முயன்ற பழனிகுமார் என்ற பிம்பம் ஒழுங்காக கட்டமைக்கப்படவில்லையோ என்று தோன்றியது. பழனிகுமாரின் மீது எனக்கும் கிஞ்சித்தும் மரியாதை வராதபோது எப்படி அவன் உணர்வுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்?

நிலம் எனும் நல்லாள் வாசிப்புக் கடந்து என்னுள் ஏற்படுத்திய சிந்தனைகள் இவையே. அந்தவிதத்தில் இந்த எழுத்து என்னைப் பாதித்திருக்கிறது. அதேநேரம் முழுமையாகக் கட்டமைக்க முயன்று தோற்றுப்போன பழனிகுமாரின் சித்திரத்தை விட ராதா எனும் பெண்ணே என்னுள் உயர்ந்து நிற்கிறாள். அவளே பூரணத்துவம் பெறுகிறாள். அவளே நிலம் எனும் நல்லாள்.
  

300-வது பதிவு



ஆம் அபீஷியலாக இதுதான் என்னுடைய முன்னூறாவது பதிவு. பேஸ்புக்கில் இல்லை. வலைப்பூவில். வலைப்பூவில் இதுபோன்ற சடங்குகள் சாதாரணமாக நிகழ்ந்த ஒன்று. கொண்டாட்டமானவையும் கூட. ஒவ்வொருவரின் ஐம்பதாவது நூறாவது இருநூறாவது பதிவுகளும் பதிவு செய்யப்படும் கொண்டாடப்படும். அவ்வகையில் என் கொண்டாட்டத்தை என்னுடைய இருபத்தி ஐந்தாவது பதிவில் இருந்தே தொடங்கிவிட்டேன்.

கடந்த நான்கு வருடங்களில் நான் எழுதுவதே குறைவு என்றானபின் வலையில் எழுதுவது சுத்தமாக நின்றுவிட்டது. ஒருகாலத்தில் அதுவே கதியென்று கிடந்தேன். நள்ளிரவில் எழுதத் தொடங்கினால் விடிகாலையிலும் தொடரும். நினைப்பதை நினைத்து முடிக்கும் முன் எழுதி எழுதிய வேகத்தில் பதிவு செய்து கொண்டிருந்தேன். காலையில் கண்விழித்தால் அது பதிவுகளுக்கான கமென்ட்களில்தான். அவை கொடுத்தது உற்சாக போதை. அந்த போதையே தள்ளாடாமல் ஓட வைத்துக்கொண்டிருந்தது. என்னால் எழுத முடியும் என்றும் எழுத எழுத எழுத்தை மெருகேற்ற முடியும் என்று கற்றுக்கொடுத்த தளம் என் வலைப்பூ. திடங்கொண்டு போராடு.

யாராவது எதை எழுதுவீர்கள் என்று கேட்டால் மருத்துவத்தையும் வேதியியலையும் தவிர அத்தனையையும் எழுதுவேன் என்று கூறும் அளவுக்குக் கண்டதையும் கிறுக்கியிருக்கிறேன். அதில் பிரதானமாக எழுதியவை என்றால் சினிமா விமர்சனங்களும், நாடோடி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் எழுதிவந்த பயணக் கட்டுரைகளும். தொடர்ந்து காத்திரமாக எழுதியிருந்தால் இந்நேரம் சிலபல பயணக் கட்டுரை புத்தகத்தையேனும் வெளியிட்டு இருக்கலாம்.

சிலபல பயணக் கட்டுரைகளை எழுதி பாதியிலேயே நிறுத்தியிருக்கிறேன். ஒருமுறை துபாயில் இருந்து அழைத்த ஒருவர் “இன்னாபா இப்படி பாதியிலேயே விட்டுட்ட, எவ்ளோ ஹெல்ப்புல் தெரியுமா நீ கொடுக்கிற ஒவ்வொரு டீடெயிலும்”, என்று கிட்டத்தட்ட என்னைக் கடிந்துகொண்டார். அத்தனை பேர் என்னைப் பின்தொடர்கிறார்கள் என்பதே நம்ப முடியாததாக இருந்தது. அதுவும் இப்படி போன் செய்து கோபப்படுவார்கள் என்பதெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்காத ஒன்று. என்னைக் கேட்டால் வலைப்பூ என்னுடைய டைரி. எனக்கான ஆவணம்.

என்னுடைய இருநூற்றைம்பது பதிவுகளை முதல் நான்கு வருடத்தில் எழுதிய எனக்கு அடுத்த ஐம்பது பதிவுகளை எழுத அதற்குச் சமமான வருடங்கள் ஆகியிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. வலைப்பூ இப்போது பாழடைந்த வீட்டைப் போல் இருக்கிறது. சமீபத்தில் எழுதிய பதிவுகளை ஐந்து பேர் வாசித்திருந்தால் அதிகம். நல்லவேளையாக இன்னமும் இரண்டு பேர் கமென்ட் இடுகிறார்கள். அந்த அவ்வகையில் அது கொஞ்சமேனும் மூச்சை இழுத்துக்கொண்டுதான் இருக்கிறது.

கடந்த வருடத்தின் இறுதியிலேயே எடுத்த ஒரு முடிவு, முன்பைப் போல் தீவிரமாக எழுத வேண்டும் என்பது. தீவிரமாக எழுத வேண்டும் என்பதை நினைப்பதற்கு சாதாரணமாக இருக்கிறது. ஆனால் அதுகோறும் உழைப்பு அசாதாரணமானது. அதற்கான நேரமோ மனநிலையோ என்னிடம் இல்லை.  ஒருவித சோம்பேறித்தனமும் கூட. பல நேரங்களில் என்னத்த கண்ணையாவாகி விடுகிறேன்.

நேற்று எழுதியிருந்தேனே ஒரு பதிவு. கேமரா தொலைந்த கதை. அது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. இப்போதுதான் எழுதும் மனநிலை வாய்த்திருக்கிறது. அதேநேரம் தீவிரமாக எழுத வேண்டும் என்று யோசித்து அப்படி எழுதவும் ஆரம்பித்த கட்டுரைகள் தொகுப்பாகவும் வெளிவந்துவிட்ட அதிசியம் எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது.

அந்தப் புத்தகத்திற்கு இறுதி வடிவம் கொடுத்தவர்கள் வலைப்பூவின் மூலம் கிடைத்தவர்கள்.

என் எழுத்தில் இருக்கும் வாக்கிய அமைப்பை திருத்துவதன் அவசியத்தைக் கற்றுக்கொடுத்தவர் வலைப்பூவின் மூலம் கிடைத்தவர்.

என் எழுத்தில் இருக்கும் பிழைகளை எப்போதும் சுட்டிக்காட்டி பகடி செய்வதன் மூலமே என் எழுத்துப் பிழைகளைக் குறைத்தவர்கள் வலைப்பூவின் மூலம் கிடைத்தவர்கள். (எழுத்துப்பிழை என்பதை விட கவனப்பிழை என்பதே சாலச்சிறந்தது)

பள்ளி கல்லூரி அலுவலக நண்பர்களைப் போல கிடைத்த ஆத்ம நண்பர்கள் வலைப்பூவின் மூலமும் கிடைத்திருக்கிறார்கள் என்பதே நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. கடந்த எட்டு வருடத்தில் என் வாழ்வில் முழுமையாக ஆதிக்கம் செய்பவர்களுமாகவும் கூட அவர்கள் இருந்து வருகிறார்கள்.

வலைப்பூ கொடுத்த சுதந்திரத்தில் இருந்து மீண்டு பேஸ்புகை எழுத்துக்கான களமாக மாற்றிக்கொள்வதே எனக்கு மிகப்பெரிய கலாச்சாரா அதிர்ச்சியாக இருந்தது.

எழுதினால், அந்தப் பதிவில் குறைந்தது ஆயிரம் வார்த்தைகளாவது இருக்க வேண்டும் என்ற கொள்கையில் எழுதும் ஆசாமி நான். ஆயிரத்துக்கு ஒன்று குறைந்தாலும் அந்தப் பதிவில் திருப்தி இருக்காது எனக்கு. நீளத்தை குறைத்து எழுதச் சொல்லாத பதிவர்களே கிடையாது.

“உன் போஸ்ட் படிக்கிற நேரத்துல மூணு போஸ்ட் படிச்சிருவேன் கம்மியா எழுதுப்பா”, என்றெல்லாம் ஒரு பதிவர் அழைத்துப் பேசினார். அப்படிப்பட்ட என்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முயன்றதைப் போல் இருந்தது பேஸ்புக்கின் வருகை. பேஸ்புக் தீவிரமான பின்னும், 2015 – வரையிலும் வலையிலேயே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தேன். ஒரு பழமைவாதியைப் போல. சீனு இங்க வாங்க என்று கூறினார்கள். ‘’சின்னதா எழுதத் தெரியாது பாஸு”, என்றேன்.

வாசகர்களின் வருகையைப் பற்றி எழுத்தாளன் கவலைப்படக்கூடாது. நல்ல பதிவென்றால் நிச்சயமாக அது வாசகனைச் சென்றுசேரும். அந்த நம்பிக்கையில்தான் என் முதல் பதிவையே எழுத ஆரம்பித்தேன். இன்று வரைக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது. 2016 – 2019 காலங்களில் எழுதுவதற்குக் கிடைத்த குறுகிய நேரத்தில், எழுதும் சின்னச்சின்ன பதிவுகளையும் பேஸ்புக்கில் மட்டுமே எழுதி வருகிறேன். வலை தூசியடைந்து கிடக்கிறது.  

எழுத்தை மீட்டெடுப்பதற்காக மீண்டும் புத்தக விமர்சனங்களை எழுத ஆரம்பித்திருக்கிறேன். அவற்றையே வலையிலும் பதிவு செய்கிறேன். இனிமேலாவது ஓரளவிற்கு உருப்படியாகவும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

வலையோ முகநூலோ, வாசிக்கும் வாசகர்கள் எங்கிருந்தாலும் வாசிப்பார்கள். எவ்வளவு பெரிது என்றாலும் வாசிப்பார்கள். அவர்கள் கொடுக்கும் நேரத்திற்குப் பிரதிபலனாக நம்மால் ஏதேனும் கொடுக்க முடிகிறதா என்பதே கேள்வி.

அதற்கு விடையாக நீங்கள் இருக்கிறீர்கள்.

உங்கள் அனைவருக்கும் என் நன்றி.


26 Apr 2020

நியூயார்க் – Are you Lucky? - 2

நான் கொண்ட உச்சபட்ச அதிர்ச்சியில் என் முகம் மாறுவதை கவனித்து விட்டாள் வர்ஷனா. முதல் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை. அதற்குள் இன்னொன்றா. ஒருவனால் எத்தனை அதிர்ச்சியைத்தான் தாங்க முடியும். 

“என்னாச்சு?”

“கேமரா பேக்க காணோம்?”

“என்னது காணோமோ?”, அவள் முகம் தீவிரமாவது தெரிந்தாலும் சூழ்நிலை காரணமாக அமைதியாக இருந்தாள். அடுத்து என்ன என்பதுபோல் பார்த்தாள். நல்லவேளையாக யோசிக்க நேரம் கொடுத்தாள். கேமரா தொலைந்த அதிர்ச்சியைவிட ‘எங்க இவன் இன்னொன்னு வாங்கனும்ன்னு சொல்லுவானோ’, என்ற அதிர்ச்சியும் அவளிடத்தில் இருந்திருக்க வேண்டும். நான் இன்னும் அந்தளவிற்கு யோசிக்கவில்லை. எனக்கு என் கேமரா வேண்டும். அதுவும் இதே கேமரா. கேமரா இல்லை. என் தங்கம் அது.

ரொம்ப ஆசை ஆசையாய் வாங்கிய கேமரா. பல வருடங்களாக நானும் கேமராவும் ஓருயிராக சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

அந்தக் கேமராவை வாங்கிய நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. பீனிக்ஸ் மால் கேனான் ஷோ ரூமில் ஆவி, கௌதம் மற்றும் நான் என நாங்கள் மூவருமாக சென்று வாங்கினோம். ஐம்பத்தி ஐந்தாயிரம் என்று பில் வந்தபோதுகூட அது ஒரு சுமையாய்த் தெரியவில்லை. எட்டாக்கனி ஒன்றை எட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் இருந்தேன். என் சம்பாத்தியத்தில் நான் வாங்கும் இரண்டாவது பெரிய பொருள். (முதலில் வாங்கியது பைக்). இவ்ளோ காசு செலவு பண்ணி இந்த டப்பாவ வாங்கனுமா என்பதுவே அம்மாவின் கேள்வியாய் இருந்தது. அம்மாவின் முகம் நினைவுக்கு வந்து போனது. நல்லவேளை இங்கே இல்லை.

பரப்பரப்பான அந்த சூழலுக்கு மத்தியில் யோசிப்பது கடினமாக இருந்தது. டாலஸ் விமான நிலையத்தில் ஏறியதில் இருந்து நியூயார்க் மெட்ரோ வரைக்குமாக பல இடம் மாறியாகிவிட்டது. அத்தனை லக்கேஜும் வெவ்வேறு இடங்களில் வேறு வேறு கைகளுக்கு மாற்றப்பட்டு விட்டது. எங்கே எப்படி?

“வீட்ல இருந்து எடுத்துட்டு வந்தீங்களா?”

“கடைசிய அத எங்க வச்சீங்க?”

“டாலஸ் ஏர்போர்ட்ல நாம உக்காந்த இடத்தில விட்டீங்களா?”

“ஸ்டார்பக்ஸ் போனீங்களே அங்க?”

“மெட்ரோ கார்ட் எடுக்க போகும்போது?”

நாங்கள் பயணித்த அதே காலக்கோட்டின் வழியே அவளும் பயணித்தாள். அவள் கூறிய ஒவ்வொரு இடமும் கூட்டம் நிறைந்த பகுதிகளாகக் கண்முன் தோன்றி மறைந்தன. யாரோ ஒருவர் என் தங்கத்துடன் உறவாடுவது போல் காட்சிகள் உருவெடுத்தன. எதுவும் சொல்லாமல் அமைதியாக யோசிப்பது அவளுக்கு மேலும் பதற்றத்தைக் கொடுத்தது. விட்டால் போன பயணத்தின் சம்பவங்களுக்கும் செல்லக்கூடும். அவளுக்குத் தெரிந்த ஒன்றேயொன்று அந்த கேமரா எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது. லட்சத்தைத் தொலைத்துவிட்டேன் என்பதையும் கடந்து என் தங்கத்தைத் தொலைத்துவிட்டேனே என்பதுதான் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. 

கேமராவின் கவரைப் பிரித்து முதன்முதலில் அதனைக் கையில் சுமந்தபோது குளிர்ச்சியாக இருந்தது. கருகரு என பளபளப்பாக. கருப்புத் தங்கம் என்று பெயர் வைத்திருந்தேன். தங்கம் என்றே அழைக்கத் தொடங்கினோம். எங்கு சென்றாலும் உடன் வரத்தொடங்கியது. என்னைப் போலவே தங்கத்திற்கும் மிகப்பெரிய பயணம் கோவா.

கோவா பயணம் முடிந்து மங்களூரில் இருந்து கேரளா வழியாக சென்னை வந்து கொண்டிருந்தோம். ரயிலில் ஆரம்பத்தில் கூட்டம் இல்லை. கேரளாவின் உள்ளே நுழைய நுழைய கூட்டம் தாறுமாறாக எகிறிக்கொண்டே சென்றது. முன்பதிவு பெட்டிதான் என்றபோதிலும் தினசரி பயணிகள் அது குறித்ததெல்லாம் கவலை கொள்ளவில்லை. அப்பர் பெர்த்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை கூட எழுப்பி அந்த இடங்களில் அமர்ந்து கொண்டார்கள்.

பகல்நேரப் பயணம். எனவே அந்த மாலை வேளையில் உறங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மேலும் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் இறங்குவோர் ஏறுவோரின் எண்ணிக்கைக் கூடிக் குறைந்துகொண்டு இருந்தது. “ஒரு பத்து டேசனுக்கு இப்டிதான் இருக்கும். அதுக்கப்றம் எல்லாம் காணாம போயிரும். டிடியும் ஒண்ணு சொல்ல மாட்டான்”, என்றார் ரெகுலர் பாசஞ்சர் ஒருவர்.

அப்பர் பெர்த்தில் எங்களுடைய லக்கேஜ் இருக்கிறது. அந்த லக்கேஜ் ஒன்றின் உள்ளே தங்கமும் இருக்கிறது. அவ்வபோது எக்கி எக்கி அதனைப் பார்த்துக் கொண்டேன். “நான் கவனிச்சிக்கிறேன் பதறாத”, என்றார் அதன் அருகில் அமர்ந்திருந்த ஒரு சேட்டன். அந்தக் கூட்டத்தில் அவ்வளவு பெரிய லக்கேஜையாரும் லவட்டிக்கொண்டு போக முடியாது என்றாலும் தங்கத்தை லவட்ட முடியும். ஒருவேளை பைக்கட்டை திறந்து எடுத்துவிட்டால்? அந்த சேட்டனின் பதிலில் மனம் சமாதானமாகவில்லை.

அவர் பேச்சை மதிக்காமல் சிறிது நேரம் கழித்து எக்கிப் பார்த்தால் - சேட்டன் என் பைக்கட்டின் மீது தலையை வைத்துப் படுத்திருந்தார். அவர் தலை வைத்திருந்த இடத்தில்தான் தங்கம் இருக்கிறது. யோவ்.... அவரைத் தட்டி எழுப்பி அந்தப் பையைப் பிடுங்கி வேறுபக்கம் வைத்துவிட்டு அமர்ந்தேன். இப்போது மீண்டும் ஏதோ ஒன்று உள்ளுக்குள் உதைக்க எக்கிப் பார்த்தால் என் பைக்கட்டின் மீது ஒய்யாரமாக கால்களை வைத்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தான் அந்த மாபாவி.

அதன்பின் சென்னை வரும் வரையிலும் தங்கம் என் மடியிலேயே இருந்தது. பின்வந்த எல்லா பயணங்களிலும் தங்கம் என் மடியில்தான் இருக்கும். அப்படிப்பட்ட தங்கத்தை தொலைத்துவிட்டேன் என்பது எத்தனை கொடூரமான செயல்.

கேமரா தொலைந்த அதிர்ச்சி இந்த ஒட்டுமொத்த பயணத்தையும் உருக்குலைக்கக் கூடும் என்பது அதைவிட பயமாய் இருந்தது. விமானம் ஏறும்போது கேமரா என்னிடம் இருந்த நினைவு இருக்கிறது. இறங்கும்போதும் இருந்ததா? ஒவ்வொரு இடமாக லக்கேஜ் மாற்றும் போதும் இருந்ததா போன்ற ஞாபகங்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களாக குழப்ப அதிர்வுகளாகத் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

விமானத்தினுள் நுழைந்த போது கையோடு கொண்டுவந்த லக்கேஜை தலைக்கு மேல் வைத்துவிட்டு, கேமராவை மடியில் வைத்த ஞாபகம் முதலில் வந்தது. அதன்பின் காலுக்கு அடியில் வைத்தேன். பணிப்பெண் அங்கு வைக்ககூடாது என்று சொல்லி மேலே வைக்கச் சொன்னார். இருக்கையில் இருந்து சற்று தள்ளி இருந்த பகுதியில் தங்கத்தை வைத்த ஞாபகம் வந்தது. அதனை வைக்கும்போது அங்கே ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதில் இருக்கும் தண்ணீர் கேமராவை பதம் பார்த்துவிடக் கூடாது என அந்தப் புட்டியை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டே கேமராவை அங்கே வைத்தேன். என் ஞாபகத்தில் முதலில் அசைவு கொடுத்தது தண்ணீர் புட்டியே. அதில் இருந்தே ஒவ்வொன்றாக நினைவுக்கு முன் ஆரம்பித்தன. விமானம் தரையைத் தொட்ட அதிர்ச்சி தாங்காமல் முகில் அழத் தொடங்க, அந்த சமயத்தில் கேமராவை மறந்திருக்கிறேன்.

“எனக்கு நல்லா தெரியும், அது பிளைட்ல தான் மிஸ் ஆகிருக்கு”, என்று மொத்த கதையையும் அவளிடம் கூறினேன். விமானம் குறித்த தகவலை தேடியபோது அது மீண்டும் டாலஸ் நோக்கிப் பறந்து கொண்டிருப்பதாகக் கூறியது.

“நீங்க இப்பவே ஏர்போர்ட் போயிட்டு வாங்க”, என்றாள் வர்ஷனா. அத்தனை லக்கேஜையும் எடுத்துக்கொண்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு ஏர்போர்ட் செல்வது ஆகாத காரியும். பாவம் ஏற்கனவே நியூயார்க் நெரிசலில் நொந்து போயிருந்தார்கள்.

“அப்டில்லாம் தனியா விட்டுடுப் போக முடியாது. இன்னொன்னு அந்த கேமரா இப்போ டால்ஸ்க்கு போயிருந்தா? இல்ல வேற யாராச்சும் தூக்கிட்டுப் போயிருந்தா?”, அந்தக் கடைசிக் கேள்வியைக் கேட்கும் போது வார்த்தையில் தெம்பில்லை. நியூயார்க் திருடர்கள் நிறைந்த பகுதி என்பது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.

ரயில் அதளபாதாளத்தில் சென்று கொண்டிருந்ததால் மொபைலில் சிக்னல் விட்டுவிட்டுத் தலையாட்டியது. சாண்டிக்கு அழைத்தேன். நியூயார்க் டாலஸ் நேர வேறுபாடு அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. “யோவ் இப்போதான் எந்திக்கிறேன். பசிக்குதே”, என்றார். நிலைமையின் தீவிரத்தைக் கூறினேன்.

“சரி எப்படினாலும் பிளைட் வாறதுக்கு ரெண்டு மணிநேரம் இருக்கு. நான் சாப்டுட்டு ஏர்போர்ட் போறேன்”, என்றார்.

கேமரா விமானத்தில் இருக்க வேண்டும். சாண்டி போய் கேட்கும்போது அவரிடம் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதையாவது உறுதி செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். விமானத்தில் பொருட்கள் தொலைந்து போனால் என்னவாகும் என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.

பெரும்பாலான பயணிகள் தங்களுக்கு நிகழ்ந்த மிக மோசமான அனுபவத்தையே பதிவு செய்திருந்தார்கள். குறிப்பாக நான் பயணம் செய்த விமான சேவையைக் கழுவிக் கழுவி ஊற்றியிருந்தார்கள். அதை வாசித்தபோதே பாதி நம்பிக்கை கழன்றுவிட்டது.

எங்களோடு வந்தவர்கள் அனைவரையும் One World Observatoryயினைச் சுற்றிப் பார்க்கும்படி கூறிவிட்டு, சாண்டியோடும் இணையத்தோடும் போராட்டிக் கொண்டிருந்தேன். சாண்டியும் தனக்குத் தெரிந்த தகவல்களை ஒவ்வொன்றாகக் கூறத் தொடங்கினார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

தொடர்ந்த ஆராய்ச்சிக்குப் பின் கஸ்டமர் கேர் நிர்வாகத்தின் பொருட்கள் தொலைந்து போனால் புகார் அளிக்கும் எண்ணைத் தேடிக் கண்டுபிடித்தேன். இந்த எண்ணையே ஒரு புதையலைப்போல ஒளித்து வைத்திருக்கிறார்கள். தொடர்ந்த முயற்சி மற்றும் காத்திருப்புக்குப் பின் அவர்களைத் தொடர்பு கொண்டேன். ஆதியில் இருந்து அந்தம் வரைக்கும் கதை கேட்டார்கள். கூறினேன். எனக்கிருக்கும் பயம் மற்றும் அந்த பொருள் எனக்கு எத்தனை முக்கியம் என்பதைக் கூறினேன். முதல் சில ஊழியர்கள் வேண்டுமென்றே அழைப்பை துண்டித்தார்கள் அல்லது மீண்டும் அழைப்பதாக சாக்குபோக்கு சொன்னார்கள். விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்தேன். இப்போது ஒரு பெரியம்மா கிடைத்தார். முன்னவர்களை விட மிகக் கனிவாகப் பேசினார். ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவாகக் கூறினார்.

“விமானம் ஒரு நிலையைத்தில் இருந்து இன்னொரு நிலையம் நோக்கிப் புறப்படும் முன் அதனை சுத்தம் செய்வோம். அப்போது பயணிகள் தவறவிட்ட பொருட்கள் ஏதேனும் கிடைத்தால் அதனை அந்த விமான நிலையைத்தில் இருக்கும் எங்கள் அலுவலகத்தில் ஒப்படைத்துவிடுவோம். அப்படி ஒப்படைக்கபட்ட பொருட்களின் விபரங்களை கணினியிலும் ஏற்றிவிடுவோம். இதுபோல் யாரேனும் விசாரித்தால் தகவல்களைக் கூறுவோம். நீ தவறவிட்ட பொருள் இதுவரை கணினியில் ஏற்றப்படவில்லை. அப்படியென்றால் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதானே அர்த்தம்”, என்றார்.

என்னிடம் இருந்த நம்பிக்கை முற்றிலுமாகத் தொலைந்திருந்தது. பின் அவரே தொடர்ந்தார். “கனெக்டிங் பிளைட் என்றால் நாங்கள் சுத்தம் செய்ய மாட்டோம். அதாவது இரண்டு மூன்று நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் சமயங்களில் எது கடைசி நிறுத்தமோ அங்கு மட்டுமே இந்த சோதனை நிகழும். நீ கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, நீ பயணித்த விமானத்திற்கு நியூயார்க் கடைசி நிறுத்தம். எதற்கும் அந்த அலுவலகத்திற்கு அழைத்துப் பேசிவிட்டு உன்னை மீண்டும் அழைக்கிறேன்”, என்று கூறினார். அவர் நிச்சயமாக அழைப்பார் என்ற நம்பிக்கை வந்தது.

சாண்டி இனி டாலஸ் விமான நிலையத்திற்கு சென்றாலும் அது வீண். அதனால் அவரை அழைத்து இத்தனை நேரம் நடந்த உரையாடலைக் கூறினேன். இடைப்பட்ட நேரத்தில் அந்த பெரியம்மா அழைத்தார் “எங்கள் நிர்வாகிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மணி அடிக்கிறது. எடுப்பதற்கு ஆள் இல்லை. உனக்காக நான் ஒரு உதவியைச் செய்கிறேன். அப்படிச் செய்வது சரியா தெரியவில்லை. அந்த அலுவலகத்தின் நேரடி தொடர்பு எண் தருகிறேன். நீயும் தொடர்புகொள்ள முயற்சி செய்”, என்றார். அவர் கொடுத்த எண்ணிற்கு மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டதில் என்னுடைய நூறாவது அழைப்பிற்குப் பதில் கிடைத்தது.

“கேமரா பேக் போன்ற ஒன்று எங்களிடம் இருக்கிறது. ஆனால் அது உங்களுடையதா என்றெல்லாம் தெரியாது. பயணிகள் நேரில் வராமல் அது குறித்த மேலதிகத் தகவலை எங்களால் தர முடியாது”, என்ற கடுமையான பதில் கிடைத்தது. லேசான நிம்மதி அவர்களிடம் ஒரு கேமரா பேக் இருக்கிறது.

அது என்னுடைய தங்கம்தானா என்பதை உறுதி செய்வதற்காகப் போராடினேன். அந்தப் பெண் மசியவில்லை. நான் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் பொருத்தமற்ற பதிலைக் கூறினார். போதாக்குறைக்கு வேறொன்றையும் கூறினார், “இங்க ரெண்டு கேமரா பேக் இருக்கிறது. இரண்டும் பார்ப்பதற்கு ஒரேமாதிரி இருக்கு. என் தலைக்கு மேல் கேமரா இருக்கிறது. ஆக நான் உன்னிடம் இதற்குமேல் பேச முடியாது”, என்று கூறி என் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தார்.

என்னடா லேசா மூச்சு விடுறதுக்குள்ள மூச்ச நிறுத்திட்டீங்க என்று தோன்றியது. அடுத்த வேலை விமான நிலையம் செல்ல வேண்டும். தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசம். ஆனால் இங்கிருந்து ஒருமணி நேர தொலைவில் இருக்கிறது விமான நிலையம். உள்ளே சுற்றிப்பார்க்கச் சென்றவர்கள் வர நேரமாகும் போல் தெரிந்தது. சூழ்நிலை சாதகமாக அமையுமா? சந்தோஷப்படலாமா கூடாதா என்கிற ரெண்டுங்கட்டான் மனநிலை.

சிறிதுநேரத்தில் ஓர் அழைப்பு. அதே பெரியம்மா. “நியூயார்க் விமான நிலைய ஊழியரிடம் பேசிவிட்டேன். உன் கேமரா பை மிக பத்திரமாக எங்களிடம் இருக்கிறது. உன் பயணச் சீட்டு மற்றும் ஐடி இரண்டையும் காண்பித்து அவர்களிடம் சென்று வாங்கிக்கொள்ளலாம்”, என்று கூறினார். மீண்டும் மீண்டும் அவர் வாயால் அதனை உறுதி செய்வதற்காக வேறுவேறு வழிகளில் ஒரே கேள்வியைக் கேட்டேன்.

“மிக்க நன்றி”, நன்றேன். அந்த விமான நிலைய அதிகாரி என்னிடம் கூறிய இரண்டு பேக் குறித்துக் கூறினேன்.

“அது டகால்டி. உன்னைக் குழப்புவதற்காகச் சொன்ன பதில். நீ வந்த விமானத்தில் உன்னுடைய கேமரா பேக் மட்டுமே கிடைத்ததாகக் கூறினார். கணினி கோளாறு காரணமாக அதனை இன்னும் சர்வரின் ஏற்றவில்லை. இல்லையென்றால் எப்போதோ உன் பதட்டத்தைக் குறைத்திருப்பேன்”, என்றார்.

“உன் பேச்சில் மிக அதிகமான பதட்டம் தெரிந்தது. அதற்காகவே பலமுறை அவர்களைத் தொடர்புகொள்ள முயன்று, மிகத் தெளிவாக மிக நிதானமாக அத்தனை தகவல்களையும் பெற்றேன். அதன்பின்னே உன்னை அழைத்தேன்.”, என்றார். மிக அதிகமாக சிரித்தார். என்னையும் புன்னகைக்க வைத்தார். பேசும்போதே அவருக்கு மூச்சு வாங்கியது.

“உனக்கு ஒண்ணு தெரியுமா?”, என்றார்.

“இன்னிக்கு எனக்கு இங்க கடைசி நாள். அண்ட் யூ ஆர் மை லாஸ்ட் காலர்.”, என்றார்.

Unfortunately you are a lucky caller”, என்றார்.

“நான் கிளம்பிப் போறதுக்கு முன்னாடி உன்னோட சோகத்தையும் சேர்த்து எடுத்துட்டுப்போக விரும்பல. உன் பை உனக்குக் கிடைக்கனும்ன்னு உன்னவிட அதிகமாக பதறினது நான்தான் தெரியுமா?”, என்றார்.

Yes, you are lucky”, என்றார்.

Yes I’m lucky because you listened me”, என்றேன்.

மிகப்பெரிதாகச் சிரித்தார். இப்போதெல்லாம் ஒவ்வொருமுறை அந்த கேமரா பையைப் பார்க்கும்போதும் பெரியம்மாவும் அவர் கூறிய சொற்களும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகின்றன. தொலைந்து கிடைத்ததற்கான இடைவெளி அசாதாரணமானது. சர்வ சாதாரணமாக்  கடக்கச் செய்தவர் அவர்.. கோடி நன்றிகள் தெய்வமே.  


-    சுபம்