27 Apr 2020

300-வது பதிவு



ஆம் அபீஷியலாக இதுதான் என்னுடைய முன்னூறாவது பதிவு. பேஸ்புக்கில் இல்லை. வலைப்பூவில். வலைப்பூவில் இதுபோன்ற சடங்குகள் சாதாரணமாக நிகழ்ந்த ஒன்று. கொண்டாட்டமானவையும் கூட. ஒவ்வொருவரின் ஐம்பதாவது நூறாவது இருநூறாவது பதிவுகளும் பதிவு செய்யப்படும் கொண்டாடப்படும். அவ்வகையில் என் கொண்டாட்டத்தை என்னுடைய இருபத்தி ஐந்தாவது பதிவில் இருந்தே தொடங்கிவிட்டேன்.

கடந்த நான்கு வருடங்களில் நான் எழுதுவதே குறைவு என்றானபின் வலையில் எழுதுவது சுத்தமாக நின்றுவிட்டது. ஒருகாலத்தில் அதுவே கதியென்று கிடந்தேன். நள்ளிரவில் எழுதத் தொடங்கினால் விடிகாலையிலும் தொடரும். நினைப்பதை நினைத்து முடிக்கும் முன் எழுதி எழுதிய வேகத்தில் பதிவு செய்து கொண்டிருந்தேன். காலையில் கண்விழித்தால் அது பதிவுகளுக்கான கமென்ட்களில்தான். அவை கொடுத்தது உற்சாக போதை. அந்த போதையே தள்ளாடாமல் ஓட வைத்துக்கொண்டிருந்தது. என்னால் எழுத முடியும் என்றும் எழுத எழுத எழுத்தை மெருகேற்ற முடியும் என்று கற்றுக்கொடுத்த தளம் என் வலைப்பூ. திடங்கொண்டு போராடு.

யாராவது எதை எழுதுவீர்கள் என்று கேட்டால் மருத்துவத்தையும் வேதியியலையும் தவிர அத்தனையையும் எழுதுவேன் என்று கூறும் அளவுக்குக் கண்டதையும் கிறுக்கியிருக்கிறேன். அதில் பிரதானமாக எழுதியவை என்றால் சினிமா விமர்சனங்களும், நாடோடி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் எழுதிவந்த பயணக் கட்டுரைகளும். தொடர்ந்து காத்திரமாக எழுதியிருந்தால் இந்நேரம் சிலபல பயணக் கட்டுரை புத்தகத்தையேனும் வெளியிட்டு இருக்கலாம்.

சிலபல பயணக் கட்டுரைகளை எழுதி பாதியிலேயே நிறுத்தியிருக்கிறேன். ஒருமுறை துபாயில் இருந்து அழைத்த ஒருவர் “இன்னாபா இப்படி பாதியிலேயே விட்டுட்ட, எவ்ளோ ஹெல்ப்புல் தெரியுமா நீ கொடுக்கிற ஒவ்வொரு டீடெயிலும்”, என்று கிட்டத்தட்ட என்னைக் கடிந்துகொண்டார். அத்தனை பேர் என்னைப் பின்தொடர்கிறார்கள் என்பதே நம்ப முடியாததாக இருந்தது. அதுவும் இப்படி போன் செய்து கோபப்படுவார்கள் என்பதெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்காத ஒன்று. என்னைக் கேட்டால் வலைப்பூ என்னுடைய டைரி. எனக்கான ஆவணம்.

என்னுடைய இருநூற்றைம்பது பதிவுகளை முதல் நான்கு வருடத்தில் எழுதிய எனக்கு அடுத்த ஐம்பது பதிவுகளை எழுத அதற்குச் சமமான வருடங்கள் ஆகியிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. வலைப்பூ இப்போது பாழடைந்த வீட்டைப் போல் இருக்கிறது. சமீபத்தில் எழுதிய பதிவுகளை ஐந்து பேர் வாசித்திருந்தால் அதிகம். நல்லவேளையாக இன்னமும் இரண்டு பேர் கமென்ட் இடுகிறார்கள். அந்த அவ்வகையில் அது கொஞ்சமேனும் மூச்சை இழுத்துக்கொண்டுதான் இருக்கிறது.

கடந்த வருடத்தின் இறுதியிலேயே எடுத்த ஒரு முடிவு, முன்பைப் போல் தீவிரமாக எழுத வேண்டும் என்பது. தீவிரமாக எழுத வேண்டும் என்பதை நினைப்பதற்கு சாதாரணமாக இருக்கிறது. ஆனால் அதுகோறும் உழைப்பு அசாதாரணமானது. அதற்கான நேரமோ மனநிலையோ என்னிடம் இல்லை.  ஒருவித சோம்பேறித்தனமும் கூட. பல நேரங்களில் என்னத்த கண்ணையாவாகி விடுகிறேன்.

நேற்று எழுதியிருந்தேனே ஒரு பதிவு. கேமரா தொலைந்த கதை. அது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. இப்போதுதான் எழுதும் மனநிலை வாய்த்திருக்கிறது. அதேநேரம் தீவிரமாக எழுத வேண்டும் என்று யோசித்து அப்படி எழுதவும் ஆரம்பித்த கட்டுரைகள் தொகுப்பாகவும் வெளிவந்துவிட்ட அதிசியம் எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது.

அந்தப் புத்தகத்திற்கு இறுதி வடிவம் கொடுத்தவர்கள் வலைப்பூவின் மூலம் கிடைத்தவர்கள்.

என் எழுத்தில் இருக்கும் வாக்கிய அமைப்பை திருத்துவதன் அவசியத்தைக் கற்றுக்கொடுத்தவர் வலைப்பூவின் மூலம் கிடைத்தவர்.

என் எழுத்தில் இருக்கும் பிழைகளை எப்போதும் சுட்டிக்காட்டி பகடி செய்வதன் மூலமே என் எழுத்துப் பிழைகளைக் குறைத்தவர்கள் வலைப்பூவின் மூலம் கிடைத்தவர்கள். (எழுத்துப்பிழை என்பதை விட கவனப்பிழை என்பதே சாலச்சிறந்தது)

பள்ளி கல்லூரி அலுவலக நண்பர்களைப் போல கிடைத்த ஆத்ம நண்பர்கள் வலைப்பூவின் மூலமும் கிடைத்திருக்கிறார்கள் என்பதே நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. கடந்த எட்டு வருடத்தில் என் வாழ்வில் முழுமையாக ஆதிக்கம் செய்பவர்களுமாகவும் கூட அவர்கள் இருந்து வருகிறார்கள்.

வலைப்பூ கொடுத்த சுதந்திரத்தில் இருந்து மீண்டு பேஸ்புகை எழுத்துக்கான களமாக மாற்றிக்கொள்வதே எனக்கு மிகப்பெரிய கலாச்சாரா அதிர்ச்சியாக இருந்தது.

எழுதினால், அந்தப் பதிவில் குறைந்தது ஆயிரம் வார்த்தைகளாவது இருக்க வேண்டும் என்ற கொள்கையில் எழுதும் ஆசாமி நான். ஆயிரத்துக்கு ஒன்று குறைந்தாலும் அந்தப் பதிவில் திருப்தி இருக்காது எனக்கு. நீளத்தை குறைத்து எழுதச் சொல்லாத பதிவர்களே கிடையாது.

“உன் போஸ்ட் படிக்கிற நேரத்துல மூணு போஸ்ட் படிச்சிருவேன் கம்மியா எழுதுப்பா”, என்றெல்லாம் ஒரு பதிவர் அழைத்துப் பேசினார். அப்படிப்பட்ட என்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முயன்றதைப் போல் இருந்தது பேஸ்புக்கின் வருகை. பேஸ்புக் தீவிரமான பின்னும், 2015 – வரையிலும் வலையிலேயே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தேன். ஒரு பழமைவாதியைப் போல. சீனு இங்க வாங்க என்று கூறினார்கள். ‘’சின்னதா எழுதத் தெரியாது பாஸு”, என்றேன்.

வாசகர்களின் வருகையைப் பற்றி எழுத்தாளன் கவலைப்படக்கூடாது. நல்ல பதிவென்றால் நிச்சயமாக அது வாசகனைச் சென்றுசேரும். அந்த நம்பிக்கையில்தான் என் முதல் பதிவையே எழுத ஆரம்பித்தேன். இன்று வரைக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது. 2016 – 2019 காலங்களில் எழுதுவதற்குக் கிடைத்த குறுகிய நேரத்தில், எழுதும் சின்னச்சின்ன பதிவுகளையும் பேஸ்புக்கில் மட்டுமே எழுதி வருகிறேன். வலை தூசியடைந்து கிடக்கிறது.  

எழுத்தை மீட்டெடுப்பதற்காக மீண்டும் புத்தக விமர்சனங்களை எழுத ஆரம்பித்திருக்கிறேன். அவற்றையே வலையிலும் பதிவு செய்கிறேன். இனிமேலாவது ஓரளவிற்கு உருப்படியாகவும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

வலையோ முகநூலோ, வாசிக்கும் வாசகர்கள் எங்கிருந்தாலும் வாசிப்பார்கள். எவ்வளவு பெரிது என்றாலும் வாசிப்பார்கள். அவர்கள் கொடுக்கும் நேரத்திற்குப் பிரதிபலனாக நம்மால் ஏதேனும் கொடுக்க முடிகிறதா என்பதே கேள்வி.

அதற்கு விடையாக நீங்கள் இருக்கிறீர்கள்.

உங்கள் அனைவருக்கும் என் நன்றி.


10 comments:

  1. வாழ்த்துகள்...

    ஒன்றை அழிப்பதற்கு அதை உருவாக்கியவர்களே காரணம் என்பதை மட்டும் நினைவில் கொள்க...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி டிடி

      Delete
  2. 350 பதிவிற்கு வாழ்த்துகள் சீனு.
    //வலைப்பூ கொடுத்த சுதந்திரத்தில் இருந்து மீண்டு பேஸ்புகை எழுத்துக்கான களமாக மாற்றிக்கொள்வதே எனக்கு மிகப்பெரிய கலாச்சாரா அதிர்ச்சியாக இருந்தது.// எனக்கு இன்னும் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முரளி சார்.. :-)

      Delete
  3. 300ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்.
    உங்கலொட பதிவுகள் அதிகம் நான் வாசித்தது கிடையாது
    ஆனால் வாசித்த ஒரு சில பதிவுகள் நினைவில் இருக்கிரது.

    நாகலாபுரம் ட்ரக்கிங் அனுபவம்,
    ச்சாருவொட ஏதோ ஒரு புத்தக விமர்சனம்,
    அமேரிக்கா சென்றதும் new york சுத்தி பார்க்க சென்ற அனுபவத்தை வாசித்த பதிவுகள் நினைவில் இருக்கிரது.

    இன்னைக்கு வாசிச்ச
    காணாமல் போய் திரும்ப கிடைச்ச உஞ்க தங்கம் அனுபவம்
    மரக்க முடியாது.
    நேரம் கிடைக்கும்போது எழுதுங்கல்.

    ReplyDelete
    Replies
    1. வாவ் அட்டகாசம் மகேஷ். உங்கள் நினைவாற்றலை எண்ணி வியக்கிறேன். என்றைக்கோ எழுதிய பழைய பதிவுகளை அதன் சாராம்சம் மாறாமல் நீங்கள் குறிப்பிடுவது மிக்க மகிழ்ச்சி ..

      நிச்சயமாக தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்..

      Delete
  4. 300-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள் சீனு. நீங்கள் தொடர்ந்து வலைப்பூவில் எழுத வேண்டும். உங்களைப் போன்ற திறமைசாலிகள் தொடர்ந்து இங்கே எழுதுவது வலைப்பூக்களுக்கும் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் சார்... முன்பு போல் எழுத வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. நிச்சயமாக அதனை செயல்படுத்த முயல்கிறேன் :-)

      Delete
  5. 300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சீனு :)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ம்ம்ம்ம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன்... நீங்கள் இன்னும் வலையில் இயங்குகிறீர்கள் என்பதே மகிழ்ச்சி :-)

      Delete