4 Jul 2019

ஆலங்கட்டி


தென்காசியில் ஒருமுறை ஆலங்கட்டி மழை என்றார்கள், அப்போது தான் முதல்முறையாக அந்த வார்த்தையைக் கேள்விப்படுகிறேன். வானில் இருந்து ஐஸ்கட்டியாக மழை பெய்யுமாம், ஒரு கோலிக்காய் அளவில் இருந்து குண்டுக்காய் அளவு வரைக்கும் இருக்கும், மண்டையில் விழுந்தால் பொளீர் என வலிக்கும் என்றெல்லாம் கணேசன் சொல்லித்தான் தெரியும். அதன் பின்னும் சில முறை ஆலங்கட்டி வந்து போனதாகச் சொன்னார்கள். மின்னல் வேகத்தில் வந்து மறைந்துவிடுமாம். "அதெப்பாக்கெல்லாம் ஒரு யோகம் வேணும்டே" என்றான் கணேசன். ஆலங்கட்டி பற்றி கூகுள் என்ன சொல்கிறது எனப்பார்க்கலாம் என்று தேடினால், ஆத்தூரில் ஆலங்கட்டி மழை மக்கள் சந்தோசம் என்றொரு செய்தியைப் பார்த்தேன். நமக்கெல்லாம் ஆலம் மனது வைத்து இதுபோன்று ஒன்றிரண்டு ஐஸ்கட்டிகளை அனுப்பினால் தான் உண்டு. ஆனால் அமெரிக்க மாகாணங்களில் அப்படியில்லை.  

அமெரிக்கா வந்த இரண்டாவது வாரம், ஒரு மாலையில் வானம் பொத்துக்கொண்டு ஊற்றியபோது வெளியில் யாரோ சரவெடி போடுவது போன்ற சப்தம். "ஜீ இதுக்கு பேர்தான் ஹெயில்" என்றார் ரகு. ஆலங்கட்டி ஹெயிலாக உருமாற்றம் பெற்றது இங்கேதான். அந்த வருடத்தின் முதல் ஹெயிலே பொத்துக்கொண்டு ஊற்றியதால் பல கார்கள் நாசமாயின. ஹெயில விழுந்த கார்கள், புண் வந்து மறைந்த வடுக்களைப் போல் பொத்தல் பொத்தலாக பார்ப்பதற்கே கொஞ்சம் அகோரமாக இருக்கும். இங்கே மக்கள் எதற்குப் பயப்படுகிறார்களோ இல்லையோ ஹெயில் என்றால் வரும் பதற்றம் உச்சத்தில் இருக்கும். கார் என்ன ஓசியிலா கிடைக்கிறது. சமீபத்தில் வந்த ஹெயிலில் புதிதாக வாங்கிய பெராரி ஒன்று அப்பளமாக நொறுங்கியதில், அந்த இளைஞர், காரின் அருகிலேயே உருண்டு பொரண்டதாக ஆல்பர்ட் சொன்னார், அவர் காரும் அதில் கண்டமாகி இருந்தது வேறு விஷயம். 

ஆலங்கட்டி எப்படி உருவாகிறது என்பதே ஒரு சுவாரசியமான நிகழ்வாக இருக்கிறது. 

if (வெப்பச்சலனம் அதிகம் இருக்கும் நாட்களில்) and (காற்றின் ஓட்டம் கீழிருந்து மேலாக நகரும் தருணங்களில்) and (நீரோட்டமுள்ள மழை மேகங்கள் இருக்கும் பகுதியில்) and (அவை இடி மின்னலை உருவாக்கும் மேகங்களாக இருக்கும் பட்சத்தில்) and (அதே மேகங்கள் உறைநிலை வெப்பநிலைக்கு அருகே இருக்கும் சமயங்களில்)

ஹெயிலுக்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது அறிவியல். நல்ல ஈரப்பதமுள்ள காற்றானது மழை மேகங்களின் உள்ளே மேலும் கீழுமாக நகரும் போது, அவற்றின் ஈரப்பதம் உறைநிலையில், உறைந்து பனித்துகளாக மாறி, பனித்துகள் மேலும் கீழும் நகர்கையில், பனித்துகளைச் சுற்றிலும் மென்மேலும் படியும் பனித்துகற் படிமங்கள் பனிக்கட்டியாக மாறி, மேகத்தின் அடர்வையும், புவி ஈர்ப்பு விசையின் அழுத்தத்தையும் பொறுத்து தங்களின் அளவை கட்டமைத்துக் கொள்கின்றன. அடர்வு அதிகம் உள்ள மேகங்களில் உருவாகும் பனிக்கட்டிகள் மிகுந்த சேதாரத்தை விளைவிக்கக் கூடியனவாக உள்ளன. 

பொதுவாக இடியும் மின்னலையும் உருவாக்கக் கூடிய மேகங்கள், புவியின் தரைத்தளத்தில் இருந்து மிக அதிக உயரத்தில் உறைநிலை பகுதிகளில் காணப்படுவதால், வெப்பச்சலனம் ஏற்படும் சமயங்களில், பனிக்கட்டிகளின் எடையைத் தாங்க முடியாமல் தங்கள் உருவத்தை ஆலங்கட்டிகளாக வெளியிடுகின்றன என்று சொன்னால், இப்போது இன்னும் தெளிவாகப் புரியும் என நினைக்கிறேன். 

ஆலங்கட்டியின் புவியின் மீதான தாக்குதல் அதன் வேகத்தைப் பொறுத்தே அமையும். நல்லவேளையாக காக்கும் தெய்வமான நம் வளிமண்டலம், நம்மைச் சுற்றி ஒரு பெரும் பாதுகாப்பு அரணை கட்டுவித்திருப்பதால், பெரும்பாலான சமயங்களில் ஆலங்கட்டிகள் பனித்துகள்களாக மட்டுமே மண்ணை வந்து சேர்கின்றன. கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இருக்கும் நிலப்பரப்புகளை கொஞ்சம் அதிகமாக பதம் பார்க்கின்றன இந்த ஆலம் கட்டிகள். ஆலம் என்றால் ஆகாசம் என்று இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறன். 

இப்போது இத்தனை விலாவாரியாக இதனை எழுதுவதன் காரணம், புவியின் வெப்பச்சலனம் மற்ற எல்லா ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு மிக அதிகமாக உயரந்திருப்பதும், மெக்சிகோவில் நிகழ்ந்த ஒரு கொடூரமான ஆலங்கட்டி தாக்குதலும். டெக்சாசில் நான் வசிக்கும் பகுதியில் மட்டும் வாரத்திற்கு ஒருமுறையேனும் ஹெயில் தன் இருப்பை காட்டிவிட்டுச் செல்கிறது. மற்ற எல்லா வருடங்களையும் விடவும் ஹெயிலின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகம் என்பது கவலை அளிக்கிறது என்கிறது அமெரிக்க வானிலை மையம். 

சரி அதை விடுங்கள், நல்ல சுள்ளென வெயில் அடிக்கும் மொரட்டு சம்மரில், உங்கள் காரை மறைக்கும் அளவுக்கு ஆலங்கட்டி பெய்தால் உங்கள் நிலைமை எப்படி இருக்கும். அதுதான் நடந்திருக்கிறது மெக்சிகோவில் இருக்கும் உதலகாரா (Guadalajara) என்ற பகுதியில். இதற்குக் காரணமாக அவர்கள் கூறும் மற்றொரு முக்கிய காரணம், ஆலங்கட்டியுடன் சேர்ந்து பெய்த கனமழையும் என்கிறார்கள். 

தொடர்ந்து ஆலங்கட்டி மழை பெய்ய, கூடவே பெய்த கனமழை ஆலங்கட்டிகளை தாழ்வான பகுதிகளுக்கு கொண்டு சென்று, அந்த தாழ்வான பகுதி மொத்தத்தையும் சுமார் மூன்றடி உயரத்திற்கு ஆலங்கட்டிகளால் நிரப்பிவிட்டுச் சென்றுள்ளது. யாரும் எதிர்பராத இந்த ஆலங்கட்டி நல்லவேளை பொருட்சேதத்தோடு தன் விளையாட்டை நிறுத்தி இருக்கிறது. ஒருவேளை ஆலங்கட்டிகளின் சுற்றளவு இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்திருந்தாலும் பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.

இயற்கை தன்னாலான அத்தனை பிரயத்தனங்களையும் முன்னெடுத்துக்கொண்டே தான் இருக்கிறது. அடிக்கும் அத்தனை எச்சரிக்கை மணியும் அவை எடுத்துரைக்கும் அபாயமும் நமக்குத்தான் புரிந்தபாடில்லை. புரியும் போது இயற்கை நம்மை என்ன செய்திருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கத்தான் சற்றே அச்சமாக இருக்கிறது.        

1 comment:

  1. இதுக்குதான் நீயூஜெர்ஸியில் வசிக்கனும் என்கிறது ஹீஹீ

    ReplyDelete