13 Nov 2015

அன்புள்ள அரசியல்வாதிகளுக்கு - ஓர் அவசரகால கடிதம்

அன்புள்ள அரசியல்வாதிகளுக்கு,

வணக்கம். நலமா? மக்களின் அருளால் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது என நம்புகிறேன். நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை என்பது வேறுவிசயம். 

சரி விசயத்திற்கு வருகிறேன். தமிழகத்தில் அதுவும் குறிப்பாக சென்னையில் அடைமழை விடாது பெய்வதால் வீட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஏசியின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். பாவம் சளி பிடித்து விடப்போகிறது. ஒருவேளை தொகுதி பக்கம் செல்லும் எண்ணம் இருந்தால் இந்த மழைக்காலம் முடியும் வரைக்கும் அதனையும் ஒத்திப்போட்டு விடுங்கள். காரணம் இருக்கிறது. சொல்கிறேன். அதற்குத்தானே இந்தக் கடிதமே. 



எவ்வளவு அழகாக மழை பெய்கிறது பாருங்கள். ஒவ்வொரு துளி மழை நீரும் மறக்கவே முடியாத பல ஞாபகங்களை தன்னுள் அடைத்து வைத்துள்ளது. ஒவ்வொரு மழைத்துளியும் நம்முள் இருக்கும் அத்தனை சுகமான ஞாபகங்களையும் கிளறிவிடுகின்றது. இந்த ரம்யமான வேளையில் சூடாக ஒரு காபியும் சுடச்சுட வறுத்த முந்திரியும் சாப்பிட்டால் எவ்வளவு இதமாக இருக்கும்? கூடவே கொஞ்சம் இளையராஜா! யோசித்துப் பாருங்கள் இதுதான் சொர்க்கம். வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். வாழவேண்டும். ஆனால் பாருங்கள் இதையெல்லாம் ரசிக்கக் கூட நேரமில்லாமல், அனுபவிக்கத் தெரியாமல் ஒரு கூட்டம் அல்லல் படுகிறது. கேட்டால் அடுத்தவேளை உலை எரிய வேண்டுமாம். ஏன் உங்கள் வீட்டில் உலை எரியாமலா இருக்கிறது? 

அதற்கு முன் இன்னொரு கேள்வி? வீட்டைச் சுற்றிலும் கொசு நுழையாத வகையில் வலை அடித்து விட்டீர்களா? நல்ல தண்ணீரில் தான் டெங்கு பரவுமாம். டெங்கு மிகவும் கொடிய நோய். ஆம் மிகவும் கொடிய நோய். சமயங்களில் உயிரையும் குடிக்குமாம். பாவம் பல குடிசைவாழ் குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பார்த்தேன். அவர்கள் ஏழைகள். மத்யமர்கள். ரோட்டோரம் தேங்கி நிற்கும் சாக்கடையின் அருகில் வசிப்பவர்கள். வரத்தானே செய்யும். ஏழையாய் இருப்பதும் சாக்கடையின் அருகில் வசிப்பதும் அவர்கள் தவறு. ஒரு சாதாரண அரசியல்வாதியான உங்களால் என்ன செய்துவிட முடியும். காபி ஆறுகிறது பாருங்கள். குடியுங்கள். குடித்துவிட்டு நிதானமாகப் படிக்கலாம். 

ஆச்சா. சரி உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். இன்றைக்கு அதிகாலையில் எனக்கு நடந்த கதை. மணி ஐந்து அம்பது இருக்கும். பெருங்குளத்தூரில் மக்களை இறக்கிவிட்ட ஆம்னி பஸ் தாம்பரத்தினுள் நுழைவதற்கான இடத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது கதை. 

சாலையின் நடுவில் கொட்டும் மழையில் நின்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரி எங்கள் பேருந்தை மறித்து 'தாம்பரம் உள்ள அலவுட் கிடையாது, பைபாஸ்ல போ' என்று கூறிக்கொண்டிருந்தார். டிரைவருக்கு என்ன செய்வதென தெரியவில்லை. கூடவே எங்களுக்கும். எங்களோடு சேர்த்து மொத்தம் பத்து பேர் தாம்பரத்தில் இறங்க தயாராக நின்றோம். டிரைவர் எங்களைப் பார்த்து 'வேற வழியில்ல, கோயம்பேடுதான் போயாகனும்' என்றார். 'மேடவாக்கம் போறதுக்கு நான் ஏன் கோயம்பேடு போகணும்'. எனக்கவாது பரவாயில்லை என் பின்னால் நின்று கொண்டிருந்த தாத்தா ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள ஒரு கிராமத்திற்கு போக வேண்டுமாம். வெளியே நல்ல மழை. நல்ல மழை என்றால் நல்ல மழை. நடுரோட்டில் நிராதரவாக நின்று கொண்டிருந்தோம். இன்னும் முடிவெடுக்கவில்லை. வழக்கமாக ஆறு மணிக்கு மேல்தான் தாம்பரம் உள்ளே நுழைய அனுமதி கிடையாது. இன்றோ மழைக்காக கொஞ்சம் நேரமே மாற்றி இருக்கிறார்கள். அப்படியென்றால் இந்த மாற்றத்தை பெருங்குளத்தூரிலேயே அறிவித்திருக்க வேண்டும் தானே. எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் மக்களை தங்கள் இஷ்டத்திற்கு வளைப்பதன் பெயர் குடியாட்சியா? சர்வாதிகாரமா?. மன்னிக்க வேண்டும் கொஞ்சம் கோபப்பட்டுவிட்டேன் என நினைக்கிறன். 

தீபாளிக்கு சென்று திருப்புவதால் அம்மா கொடுத்துவிட்ட பலகாரங்கள் வேறு ரெண்டு பை நிறைய இருக்கிறது. 'பஸ்தான சொமக்கு, இத கொண்டு போவ முடியாதா' என அவள் கேட்கும் போது மறுக்க முடியவில்லை. இப்போது எப்படியொரு அவஸ்தை பாருங்கள். இதையும் மழையில் நனையாமல் காப்பற்ற வேண்டும். இந்நேரம் எங்களைக் கடந்து ஒரு SETC தாம்பரம் சாலையில் நுழைந்து கொண்டிருந்தது. அதனை காவலரும் தடுக்கவில்லை. அப்படியென்றால் அரசு பேருந்து என்றால் சிறப்பு சலுகையா? அதில் இருப்பவர்களும் மக்கள் தான் நாங்களும் மக்கள் தானே. 

'சரி, நீயும் அரசு பேருந்தில் வர வேண்டியதுதான' என்று கேட்கலாம். நல்ல கேள்வி. சாமர்த்தியமான கேள்வியும் கூட. அதற்கும் என்னிடம் ஒரு கிளைக்கதை இருக்கிறது. இப்படித்தான் ஒருமுறை நெல்லையில் இருந்து குளிர்சாதன வசதியுடைய பேருந்தில் ரிசர்வ் செய்து பயணிக்க ஆரம்பித்தால், வண்ணாரப்பேட்டையை தாண்டுவதற்கு முன் பேருந்து செயலிழந்துவிட்டது. ஏ.ஸி வேலை செய்யவில்லையாம். இரண்டு மணிநேரம் வண்ணாரப்பேட்டை பணிமனையில் பேருந்தை நிறுத்தி பழுதுபார்க்க முயன்று 'ஸ்பேர் இல்ல, நாங்க ஸ்பேர் பஸ் அரேஞ் பண்றோம்' என்று வேறொரு டப்பாவில் ஏற்றி அனுப்பினார்கள். அதில் ஏசியும் கிடையாது, ஒழுங்கான சீட்டும் கிடையாது. எங்கள் குழுவில் ஐந்து பேர் இருந்தோம். கிட்டத்தட்ட அறுநூறு ரூபாய் நஷ்டம். நடத்துனரிடம் கேட்டால் 'தாம்பரம் ரிஸர்வேசன் கவுண்டர்ல போய் வாக்கிக்கோ' என்றார். அந்த பயணசீட்டில் தனது கையெழுத்தையும் போட்டுக் கொடுத்தார். அறுநூறு ரூபாய் ஆச்சே விடமுடியுமா. பத்து கிலோமீட்டர் பயணித்து தாம்பரம் சென்று கேட்டால் 'அந்தாளு சொன்னாருன்னு நீயும் இங்க வந்து கேக்கிற, இந்த ஜென்மம் இல்ல அடுத்த ஜென்மம் எடுத்தாலும் உனக்கு இந்த காசு கிடைக்காது' என்று கூறிவிட்டு ஒரு ஃப்ரீ அட்வைஸும் கொடுத்தார், 'SETC டப்பா வண்டி அதில வராத, வேற வழியே இல்லன்னா AC பஸ்ல வராத, ஒண்ணும் சரி கிடையாது' என்றார். அய்யா அப்படிச் சொன்னது அரசு ஊழியர் தான். இப்படி ஒரு நல்ல சம்பவத்திற்குப் பின் யாருக்காவது SETC-ல் பயணிக்க மனசு வருமா? அப்படியும் கல் மனது கொண்டு SETC-இல் பயணித்த என் நண்பன் சற்று முன் அழைத்திருந்தான் 'மாப்ள அது பஸ்ஸா ஸ்விம்மிங் பூலான்னு தெர்ல. உள்ள அம்புட்டும் தண்ணி' என்றான், இதுதான் ஒரு அரசு இயந்திரத்தின் இன்றைய நிலைமை. எங்கு திரும்பினாலும் ஓட்டை. சரி பஸ்ஸில் இருக்கும் ஓட்டைக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம். அந்த முந்திரி பக்கோடாவை ஒரு கடி கடித்துக் கொள்ளுங்கள். 



மழை விட்டபாடில்லை. விடுவதற்கான அறிகுறியும் இல்லை. ஆம்னி பஸ் டிரைவரிடம் கூறினேன், 'அடுத்த யு டர்ன்ல திரும்பி எங்கள பெருங்குளத்தூர்ல விட்டுட்டு நீங்க கோயம்பேடு போங்க' என்று. 'அங்கயும் போலீஸ் நிக்கிறான். அவன் விட்டா நான் போறேன். இல்லாட்டா என்ன செய்ய' என்றார் டிரைவர். வேற வழி கோயம்பேடுதான். எதிர்பார்த்தது போலவே அந்த யு டர்னில் நின்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரி எங்களை திரும்பவிடவில்லை. பேருந்து பைபாஸில் ஓடத் தொடங்கியது. ஐந்தாவது கிலோ மீட்டரில் கொப்பும் கொலையுமாக ஒரு பேருந்து ப்ரேக் டவுன் ஆகி நின்று கொண்டிருந்தது. பேருந்தில் SETC என்று எழுதியிருந்த வாசகம் என்னை ஆச்சரியபடுத்தவில்லை என்பதை இங்கே அதனை பதிவு செய்தே ஆகவேண்டும். வேண்டுமானால் நிர்வாகத்தின் பெயரை SஈஈஈஈTC என்று மாற்றி விடுங்களேன். மிகப் பொருத்தமாக இருக்கும். 

இந்த நேரத்தில் சமயோசிதமாக யோசித்த என் தம்பி 'நாம போரூர் டோல்ல இறங்கி, அங்க இருந்து ஒரு பஸ் பிடிச்சி பெருங்குளத்தூர் வந்த்ருவோம்' என்றான். நல்ல யோசனை. குறிப்பிட்ட அந்த டோலில் இறங்கி நல்லவேளை உங்கள் புண்ணியத்தில் ஒரு பேருந்து கிடைத்து அவசராவசரமாக ஏறி இரண்டு பெருங்குளத்தூர் டிக்கெட் என்றால் தலா 25ரூபாய் என்றார். வேறவழி அரசாங்கம் செழிக்க கொடுத்துதானே ஆக வேண்டும்.

அல்லாடி தள்ளாடி பெருங்குளத்தூர் வந்து இறங்கினால் பேய்மழை பெருங்கூட்டம். அத்தனை பேரும் எங்க ஊர்க்காரர்கள். 'ஆமாங்க அய்யா நமக்கு சவுத்து திர்நவேலி பக்கம் தெங்காசி. எங்கூர்ல நாம்படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கெடக்கலீங்க. பொட்டிய தூக்கிட்டு வந்துட்டோம். மொதல்ல அப்பா, அப்புறம் அண்னே.அப்புறம் நானு அம்மான்னு மொத்த குடும்பமும் சென்னைக்கு வந்தாச்சு. பாருங்க இந்த மாதிரி பல குடும்பம் வந்து சேர்ந்து இந்த ஊரே நாசமுத்துப் போச்சு. அதுக்கு காரணம் நாங்க இல்லீங்க அய்யா. யாருன்னு உங்களுக்கும் தெரியும். எங்க ஊர்ல படிப்புக்கு ஏத்த தொழில் வசதி செஞ்சி தராத சில அரசியல்வாதிங்க தாங்கயா. சரி விடுங்க, பாவம் அவங்களுக்கு இருக்கிற சொந்த பிரச்சனைய பார்க்கவே நேரம் சரியா இருக்கு. இதில மக்கள் பிரச்சனையா முக்கியம். ஆனாபாருங்க அறுநூறு எழுநூறு கிலோமீட்டர் போய் வரவே டங்குவாரு அந்து போகுதுன்னு புலம்பினான் என் நண்பன். இதில ஒவ்வொருவாட்டியும் போக்குவரத்து செலவு ஆயிரம் ரெண்டாயிரம் ஆகுது. முந்தா நேத்து எங்கூர்ல இருந்து மெட்ராஸ்க்கு பொறப்பட்ட ரயில்ல நிக்க இடம் இல்லாம ஒரு தம்பி கீழ விழுந்து கால ஒடஞ்சிருச்சாம். அது குடும்பத்துக்கு ஒரே புள்ளையா இருந்தா அந்த குடும்பத்தோட நிலமைய நினைச்சுப் பாருங்க. சரி பாவம் நீங்க என்ன செய்வீங்க! நீங்க முந்திரி பக்கோடா சாப்பிடுங்க'. 

'பெருங்குளத்தூர்ல பஸ் இல்ல, வந்த பஸ்ல ஏற்கனவே பெருங்கூட்டம் இப்ப நாங்கவேற. இதில பாதி பேருகிட்ட பலகாரப்பை. மனுசனுக்கே இடமில்லன்னு ஒருத்தன் என்ன மொறாச்சான். எங்க அம்மா ஆசையா கொடுத்துவிட்டது. நான் என்ன செய்ய? ஆசப்படக்கூடாதுன்னு புத்தர் சொல்லிட்டுப் போயிட்டாரு. ஆனா பாருங்க நாம புத்தர் இல்லையே. பஸ் ஏறுனா கண்டக்டர் பொலம்புறாரு'. 'த்தா ஆறுவா சில்லற கொடு, இல்லீன்னா இறங்கு'. பாவம் அவர் என்ன செய்வார். பெருங்கூட்டத்தையும் சமாளித்து டிக்கெட் போட வேண்டும். 'பாதி டிரைவர் கண்டக்டர் வேலைக்கு வரலையாம். பாதி பேர் வீட்டு முன்னாடி வெள்ளம் போவுது எப்படி வருவான்' என்றார் அவரே. 

ஒருவழியாக தாம்பரம் வந்து சேர்ந்தால் மழை விட்ட பாடில்லை. தாம்பரம் மேற்கில் இருந்து கிழக்குக்கு வந்து பஸ் பிடிக்கபோகும் முன் கால் டாக்ஸி ஒன்றை விசாரித்தால் 'ஐநூறுவா கொடு' என்றான் மனசாட்சியே இல்லாமல். எனக்கு சந்தோசமாக இருக்கிறது அய்யா உங்கள் ஆட்சியில் ஐநூறுவா எவ்வளவு சாதாரணம் ஆகிவிட்டது பாருங்களேன். ப்பா புல்லரிப்பாக இருக்கிறது. என்ன கொடுக்க எங்களிடம் தான் காசு இல்லை. கிடைத்த பஸ்ஸில் ஏறி மேடவாக்கம் நோக்கி நகர்ந்தால் பஸ் போவது சாலையிலா இல்லை புழல் ஏரியிலா என்ற சந்தேகம் வந்துவிட்டது. ஊர் முழுக்க தண்ணீர் தண்ணீர் தண்ணீர். மக்கள் இன்றைக்கு பேருந்துக்குப் பதிலாக படகுகளில் பயணிக்கிறார்கள். 

ஆனால் பாருங்கள் நம் மக்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது. பொறுமை கிடையாது. இந்த மழையில் வேகமாக வாகனம் ஓட்ட முடியுமா? ஆனால் வேகமாகத்தான் வாகனம் ஓட்டுவார்கள், நடந்து செல்பவன் மேல் சேற்றை வாறி இறைப்பார்கள். அது வெறும் சேறு இல்லீங்க அய்யா, சாக்கடை வேறு கலந்திருக்கிறது உவ்வக். இதுபோல் தீண்டத்தாகத பணிகளில் ஈடுபடுவர்களின் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களால் மழையையும் கட்டுபடுத்த முடியாது, மழையால் ஏற்படும் பதிப்புகளையும் கட்டுபடுத்த முடியாது. ஆனால் நடவடிக்கை எடுக்க முடியுமே. போலீசிடம் சொல்லி நடவடிக்கை எடுங்கள். அப்படி செய்பவர்களை உள்ளே தூக்கி போடுங்கள். 

மாநகரம் முழுக்க இன்றைக்கு கடுமையான வாகன நெரிசல் ஏற்படுவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. பாவம் போக்குவரத்துக் காவல்! எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறது. தீபாவளிக்கு சென்ற கூட்டம் வேறு சென்னைக்கு வந்து வேலைக்கும் செல்ல ஆரம்பித்திருக்கும். அது ஏன் என்று தெரியவில்லை அய்யா சில அரசியல்வாதிகளுக்கு சென்னை மீது அவ்வளவு காதல். சென்னையைத்தவிர வேறு எந்த நகரையும் செழுமைப்படுத்தவே மாட்டேங்கிறார்கள். நான் பிறந்த போது என் அப்பா சென்னைக்கு வந்தார். ஒவ்வொரு வருடமும் என் தெருக்காரர்கள் வந்தார்கள் இதோ நானும் இங்கு வந்து ஆச்சு ஏழு வருஷம். இந்த திருநெல்வேலி மதுரை திருச்சி கோவை என்று சில ஊர்கள் இருப்பதையே மறந்துவிட்டீர்கள் அய்யா. ஐயோ உங்களையும் சேர்த்துவிட்டேனா. சிலர். சிலர்.    

அய்யா மூன்று மாதங்களுக்கு முன்னரே சொன்னார்களே, அக்டோபரில் மழை குறைவாக இருக்கும், நவம்பரில் வெளுத்து வாங்கும் என்று. ஒருவேளை நம் மக்கள் இதனை மறந்துவிட்டார்களோ. பெருமழை அடித்தால் ஏறி உடையும் குளம் உடையும் வீட்டுக்குள் தண்ணீர் வரும். அவர்களுடைய பழைய வீடு இடிந்து விழும். உயிரிழப்பு ஏற்படும் என்பதையெல்லாம் மறந்துவிட்டார்களோ. கொஞ்சம் கூட அக்கறையில்லாதவர்கள். பாவம் இப்போது பாருங்கள் உயிரும் உடமையும் போனபின் நிவாரண உதவி செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு. வெயில்காலம் வந்தாலும் தண்ணீர் தண்ணீர் என்கிறார்கள். மழைக்காலம் வந்தாலும் தண்ணீர் தண்ணீர் என்கிறார்கள். உடைந்து போகும் ஏரி குளம் அருகில் வாழும் இவர்களுக்கு என்னதான் பிரச்சனை என்று தெரியவில்லை அய்யா.      
இந்த மழைக்கு ஒரு சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் இல்லையா. சாப்பிடுங்கள் அய்யா. எனக்கு வேலைக்கு நேரமாகிவிட்டது. மழை வேறு அடித்துப் பெய்கிறது. சரி என் கஷ்டம் என்னோட. நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க நல்லா சாப்பிடுங்க அய்யா.

இப்படிக்கு

தங்கள் ஆட்சியில் 
சேறும் சி'ர'ப்புமாக வாழ்ந்து வரும் ஒருவன்