20 Aug 2013

திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்

எனக்குத் தெரியும் நான் இங்கு எழுதும் எதையுமே படிக்காமல் நேராக உங்கள் கண்கள் பரிசுப்பட்டியலைத் தான் தேடி ஓடும்என்று... இருந்தாலும் எழுதுவது என்று முடிவெடுத்த பின் சொல்ல வந்ததை எழுதுவதற்கு தயக்கம்ஏன்...

நன்றிகள் :

காதல் கடிதம் பரிசுப் போட்டியில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் நன்றிகள். இந்தப் போட்டியின் மூலம் பலருக்கும் பல பதிவர்களது அறிமுகம் கிடைத்துள்ளது என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.  





புரட்சி F.M நடத்தி வரும் நிரூபன் அவர்கள் தனது பண்பலையில் நமது கடிதப் போட்டியில் இடம்பெற்ற கடிதங்களை தனது நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் தனது நிகழ்ச்சியில் பங்குகொண்ட கடிதங்களின் ஒலி வடிவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதுவும் நமக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம். மேலும் தானாக முன்வந்து பதிவர்களின் படைப்புக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கும் நிருபன் அவர்களுக்கும் அவர் நடத்தும் புரட்சி F.M -மிற்கும் மனமார்ந்த நன்றிகள்.



காதல் கடிதம் பரிசுப் போட்டி குறித்த விளம்பரத்தை பகிர்ந்த மற்றும் தங்கள் தளங்களில் பதிவு செய்த அத்தனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் தளங்களில் பதிவு செய்த விளம்பரம் மூலம் இந்தப் போட்டியில் பங்கு கொண்டவர்கள் ஏராளம். அதனால் நீங்கள் செய்த உதவி அளப்பரியது. மிக்க நன்றி.


காதல் கடிதம் விளம்பரதிற்கான படக்கலவை மற்றும் பரிசுக்கான போஸ்டர் செய்து கொடுத்த நண்பர் மற்றும் சாவி குறும்பட கதாநாயகன் சுரேஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 




நடுவர்கள் : 

இவர்கள் இல்லை என்றால் இந்தப் போட்டி எந்தத் திசையில் எந்தப் பாதையில் பயணித்து இருக்கும் என்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. 




போட்டிக்கான விதிமுறைகள் நிர்ணயிப்பதில் ஆரம்பித்து சிறந்த கடிதங்கள் தேர்ந்தெடுப்பது வரை கூடவே பயணித்து போட்டியை வழிநடத்தியவர்கள் இவர்கள். இவர்களின் அனுபவங்கள் மூலம் நான் கற்றுக்கொண்ட அனுபவங்கள் ஏராளம்.

பூகோளரீதியாக நால்வரும் வேறுவேறு இடங்களில் இருந்தாலும், கடிதங்களை நால்வருமே தனித்தனியாக திறனாய்வு செய்தாலும் நால்வரின் மதிப்பெண்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியானதாக இருக்கும், தங்கள் விவாதங்களிலும் அதையே பகிர்ந்து கொண்டிருப்பதை எண்ணி வியந்துள்ளேன்.

நால்வரும் வேறு வேறு இடங்களில் இருந்து வடம் பிடித்தாலும் தேரை இழுத்த திசை என்னவோ தேர் பயணிக்க வேண்டிய திசையில் தான். 

தங்கள் கடுமையான பணிச்சுமை, பயணச்சுமைகளுக்கு மத்தியிலும் சிறப்பாக நடுவர் பணியாற்றிய வாத்தியார் பாலகணேஷ் மூன்றாம்சுழி அப்பா சார், எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் மற்றும் ரஞ்சனி அம்மா இவர்களுக்கெல்லாம் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. நன்றி நன்றி நன்றி...!

பரிசுத் தொகை :

சமீபத்தில் சாருநிவேதிதா விமர்சகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியின் முதல் பரிசுத் தொகை ரூபாய் 13,000/- காதல் கடிதம் பரிசுப் போட்டியின் முதல் பரிசுத் தொகை 500/- :-) . ஏணி இல்லை ஏரோபிளேன் வைத்தாலும் எட்டாது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து நடத்துவதால் இது சாத்தியமாயிற்று, நானும் பதிவுலக நண்பர்களுடன் இணைந்து நடத்துவது குறித்து கேட்டிருக்கலாம், ஆனால் பணம் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் கேட்பதற்கு ஒரு சிறிய தயக்கம். 

இது முதல் முயற்சி தானே அதனால் முயன்று பாப்போம் என்ற நம்பிக்கையில் களம் இறங்கினேன், இத்தனை பெரிய வெற்றி கிடைத்திருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் இன்னும் பல முன்னேற்பாடுகளோடு களமிறங்கி இருக்கலாம். இருந்தும் பரிசுத்தொகையில் தங்கள் பங்களிப்பை பகிர்ந்து கொள்ள சில நண்பர்கள் விரும்பியதால் பரிசுகளின் எண்ணிக்கை அதிகபடுத்தப்பட்டுள்ளது. தங்கள் பெயர் வெளியிடவேண்டாம் என்று கண்டிப்பாக கேட்டுக் கொண்டதால் மட்டுமே அவர்கள் பெயர்கள் வெளியிடவில்லை. அவர்களுக்கும் எனது நன்றிகள்.

முதல் மூன்று பரிசுகள் மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகள் என்றளவில் தான் முதலில் திட்டமிட்டிருந்தோம். ஒரு கட்டத்தில் பல கடிதங்கள் சிறப்பாக அமையப்பெறவே எதை சேர்ப்பது எதை விடுப்பது என்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பரிசுகளின் எண்ணிகையில் மேலும் மூன்று அதிகரித்துள்ளது என்பது  சந்தோசமான விஷயம்.

பரிசு:

பரிசை பணமாகக் கொடுப்பதைவிட புத்தகமாக கொடுக்கலாம் என்று நினைத்துள்ளோம். இது குறித்து டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனிடம் பேசியபொழுது பரிசுக்கூப்பன்களாக கொடுக்கலாம், வெற்றி பெற்றவர்கள் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கிக் கொள்ளட்டும் என்று கூறினார்.  இது சிறப்பான வழி, ஆனால் சென்னையில் இருப்பவர்களால் மட்டுமே டிஸ்கவரி சென்று புத்தகம் வாங்க சாத்தியப்படும் என்பதால், சென்னையைத் தவிர பிற பகுதிகளில் வசிக்கும் நண்பர்கள் தங்களது வீட்டு முகவரியையும், பரிசுத்தொகைக்குள் அடங்கும் புத்தக பெயரையும் குறிப்பிட்டால் அவர்களுக்கு கொரியர் மூலமாக புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.




செப்டம்பர் 1 அன்று நடைபெறும் பதிவர் சந்திப்பு மண்டபத்திலும் டிஸ்கவரி புக்பேலசின் விற்பனை நிலையம் இருக்கும், பதிவர் சந்திப்பிற்கு வரும்பொழுது கூட தங்கள் பரிசுக் கூப்பனை உபயோகப்படுத்தி புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். 

காதல் கடிதம் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் :




முதல் பரிசு

சுபத்ரா - வார்த்தைகள் தேவையா   கடிதம் படிக்க 



திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்..
எனக்குச்
சொர்க்கம் என்பதே
நம் திருமணத்தில் தான்
நிச்சயிக்கப்படுகிறது!

இரண்டாம் பரிசு 

கோவை மு சரளா - என் உள்ளம் கவர் கள்வனுக்கு  கடிதம் படிக்க



"என்னை தொட்டு விடுவாயோ
என தூரம் செல்ல கட்டளையிடுகிறது மூளை
என்னை தொடமாட்டாயா ?
என நெருங்கி வருகிறது மனம்"



இரண்டிற்கு மத்தியில் நான்


"யார் பேச்சை நான் கேட்பது
கடைசியில் பட்டிமன்ற நடுவரை போல நான்

இருதரப்பையும் ஏற்றுக்கொண்டேன்"  

மூன்றாம் பரிசு 

ஜீவன் சுப்பு - கலவரக்காரனின் காதல் கடிதம் கடிதம் படிக்க 


நான் வண்ணத்திரையின் நடுப்பக்கத்தை புரட்டிக்கொண்டிருக்கின்றேன்,
நீயோ வண்ணதாசனை (சு)வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நான் சத்தம் போட்டு பேசுவது எனக்கே கேட்கவில்லை ,
நீ ரகசியம் பேசுவது ஊருக்கே கேட்கிறது .
நான் அடங்கிக்கொண்டிருகின்றேன் ,
நீ வெடித்துக்கொண்டிருக்கின்றாய் .
நான் பேசாத வார்த்தைகள் தான் அழகென்கின்றேன் ,
நீயோ பேசும் வார்த்தைகள் தான் அழகென்கின்றாய் .
இப்படி அனைத்திலுமே நீயும் நானும் முரண்பட்டுத்தான் இருக்கின்றோம் ,
அதனாலென்ன ...? அனைத்திலும் ஒத்திருக்க நாமென்ன வியாபாரமா செய்யப்போகிறோம் ....!
காதல் தானே பண்ணப்போகின்றோம் ...!
காதலில் முரண் தானே அழகு ...!

மற்றும் 

கண்மணி - உறங்கும் கடிதம் கடிதம் படிக்க 


காலையில் எழும் போது, நீ எனக்கு நெற்றியில் முத்தம் வைத்து எழுப்புவதாய்த் தொடங்கும் என் கற்பனை, மதியம் நாம் ஒன்றாகச் சாப்பிடுவதாய் நீண்டு, மாலை நீயும் நானும் ஒன்றாய் கை கோர்த்து நடப்பதாக விரிந்து, இரவு நீ என் வயிற்றின் அருகே வந்து, மெதுவாய்க் கை வைத்து, முத்தமிட்டு, ராகுலுக்குக் கதை சொல்வதாய் முடிகிறது! பிறகு பெரும்பாலான நேரம், ராகுலுக்கு உன்னைப் பற்றி, ரானுவத்தைப் பற்றிக் கதை சொல்லியே செலவாகிறது. ஒவ்வொரு நாள் முடியும் போதும், ஒரு ஆனந்தம், உன்னைக் காணப் போகும் நாள் நெருங்குவதால்!

ஆறுதல் பரிசு 


முரளிதரன் - கவுத்துட்டியே சரோ கடிதம் படிக்க

அப்புறம்  உன்மேல எனக்கு ஒரு இதுன்னு என்கூட சுத்திகினி இருப்பானுங்களே அந்த பசங்களுக்கு தெரிஞ்சிபோச்சா!..என்னாடா உன் ஆளு சரோஜானு பழய பேர் வச்சுக்குனு கீதுன்னு கடுப்பேத்துனானுங்க! எனக்கு வந்துச்சே கோவம். கழுத்தாமுட்லயே ஒன்னு உட்டு, "சரோஜாலதான் ரோஜா இருக்குடா பேமானிங்களா" ன்னு கத்துனனா? பசங்க மெர்சல் ஆயிட்டானுங்க.  

ஹிசாலி - எழுத நினைத்த காதல் கடிதம் கடிதம் படிக்க 

நீ சாலையில் வருவதற்கு முன்  உன் நிற ஆடையைக் கண்டு என் நிற ஆடையாக மாற்றிக்கொள்ளும் மறைமுக காதலை விரும்புகிறேன் 


ஒவ்வொரு அழைப்பிலும் உன் குரல் கேட்காதா என ஏங்கும் தவிப்பை தேடுகிறேன் 

கடைதனிலே குவிந்திருக்கும் பூக்களை கண்டால் உனக்காக தவமிருப்பதாக கற்பனை செய்கிறேன்


தமிழ்செல்வி - என் எழுத்தின் உயிர்ப்பானவனுக்கு கடிதம் படிக்க 

என் விழிகள் பொய் சொல்லாது. அது வெளிப்படுத்தும் காதலை நான் மறைத்துவிட முடியாது. என்னால் உனக்கு நட்பாக வரமுடியாது. என் காதல் கருவாய் இருந்திருந்தால் கலைக்கப்படும் வலி குறைவாக இருக்கும். என்னுள் கருவாகி உருவான காதல் இப்போது வாலிபத்தில் நிற்கிறது. நான் கல்லறைக்குள் போனால் ஒழிய அதனால் இறந்துவிட முடியாது. நானும் என் காதலும் வேறு வேறா?.

சசிகலா - என்னைப் புதுப்பித்த புதியவனுக்கு கடிதம் படிக்க 


இன்னும் எத்தனை
நாட்களுக்கு மௌனத்தோடு
மல்யுத்தம் செய்யப்போகிறாய் ?
காதலை சொல்ல 
நீ தவிப்பதையும்
தாங்க முடியாதவளடா நான் !

ரேவதி சதீஷ்  - உன் காதலே அன்றி கடிதம் படிக்க

பார்க்க மறுத்த பயம் ...
பார்க்க வைத்த தைரியம் ...
இரண்டுக்கும் நடுவில் இருந்த
காதல் தான் நீ!!  

மொத்த காதலும் நிறைகிறது
முதல் முத்தத்தில் ....
உனது ஒவ்வொரு முத்தமும்
எனக்கு
முதல் முத்தமே !!


பரிசு பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. போட்டியில் உடன் பயணித்த அத்தனை சக பயணிகளுக்கும் நிறைவான நன்றிகள். வேறொரு தளத்தில் வேறொரு களத்தில் சந்திப்போம்...


என்றும் நட்புடன் 
சீனு  

68 comments:



  1. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    அயராது உழைத்த நடுவர்களுக்கு Hats off

    மிகவும் வித்யாசமான போட்டி. பங்கு கொண்டதில் எனக்கு பெருமிதம். இந்த கடிதத்தால் என் வாழ்வில் நிறைய மாற்றங்கள். என் காதலில் ஒரு மறுமலர்ச்சிக்கு வித்திட்டது...

    நன்றி சீனு.

    FM ஒலி வடிவு கலக்கல் :)

    திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி season 2 - வருமா ?

    ReplyDelete
    Replies
    1. //என் காதலில் ஒரு மறுமலர்ச்சிக்கு வித்திட்டது//

      சொல்லவே இல்ல..

      Delete
    2. //இந்த கடிதத்தால் என் வாழ்வில் நிறைய மாற்றங்கள். என் காதலில் ஒரு மறுமலர்ச்சிக்கு வித்திட்டது... //

      என்னது ரூபக்... இப்படி பப்ளிக்கா? அதுவும் முதல் கமேன்ட்லயே?

      Delete
    3. ரூபக் காதலில் மறுமலர்ச்சியை ஏற்"படுத்திய" சீனுவுக்கு இந்த பாடலை டெடிகேட் பண்றேன் ....!

      "நன்றி சொல்ல ஒனக்கு வார்த்தை இல்ல எனக்கு" ....!

      Delete
  2. வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்...


    நான் அரசன், சத்ரியன் யாரேனும் ஒருவர் பரிசைத் தட்டுவார்கள் என எதிர்பார்த்தேன்...

    புத்தக யோசனை மிக அருமை... அதையே கொடுக்கலாம்...

    ReplyDelete
  3. இந்த போட்டியை திறம்பட நடத்திய நண்பர் சீனு அவர்களுக்கு என் பாராட்டுகள். மேலும் நண்பர்கள் எழுத்துலகை முன்னோக்கி கொண்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

    ReplyDelete
  4. Hello Seenu, Hearty Congrats for Successfully Conducting and
    Organizing the Love Letter Contest. Those who are in Love and those who feel the pain of Love can only get such Ideas. Congrats to all the Winners of the Contest. Best Wishes for all the Participants. Participation is more Important than Winning.

    ReplyDelete
  5. பரிசு பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்...


    சிறப்பான பணியை முடித்த சீனுவுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாவ்! மிக்க நன்றி ஸ்ரீ. பால கணேஷ், ஸ்ரீராம், அப்பாதுரை சார் மற்றும் ரஞ்சனி அம்மா அனைவருக்கும் நன்றி! ஒவ்வொரு கடிதமாகப் படித்துவிட்டுக் கருத்துகள் பதிந்த உங்களது உழைப்பு போற்றத்தக்கது!

    என் கடிதத்தைப் படித்து உற்சாகப்படுத்திக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி!

    சிறுகதைப் போட்டி வேறு. காதல் கடிதம் போட்டி வேறு :) இரண்டையும் ஒப்பிட வேண்டாமே :)

    இரண்டிலுமே, பரிசுத்தொகையைக் காட்டிலும் பரிசு பெற்றவர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரமே முதன்மை. அது விலைமதிப்பற்றது..

    இரண்டிலுமே நான் முதல் பரிசு வாங்கியிருப்பது - இறைவனின் தூய கருணை அன்றி வேறில்லை.

    நன்றி!!!!!!!!!!!!!!!! :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் ங்க!!

      Delete
    2. வாழ்த்துக்கள் சுபத்ரா... தங்களது தளத்திலும் வாழ்த்துகிறேன்...

      Delete
    3. நன்றி கோவை ஆவி & ஸ்கூல் பையன் :)

      Delete
  8. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வெற்றிபெற்றவர்களுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. நல்லபடியாகப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பொறுமையான நடுவர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறீர்கள்.
    நல்ல பலன் கிடைத்திருக்கும்.மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. ஒவ்வொரு கடிதங்களும் முத்து முத்தாக இருந்தது. எல்லோரும் தங்கள் கற்பனை, எழுத்துத் திறன் ஆகியவற்றை கொண்டு படித்திருந்த கடித/கவிதைகளை படித்து நடுநிலைமையான தீர்ப்பு வழங்குவது என்பது கடினமான ஒன்று. அந்த மகத்தான தீர்ப்பை வழங்கிய நடுவர்களுக்கும் இப்படி ஒரு போட்டியை நடத்தி பதிவர்களின் கற்பனைக் குதிரையை ஓட விட்ட சீனுவுக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்..!

    ReplyDelete
  13. வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    போட்டியில் கலந்துக் கொண்டோரின் கடிதங்களைப் படித்த போது யாருக்கு யாரும் சளைத்தவர்கள் அல்லர் என்பதாகவே இருந்தது.

    நடுவர்களின் பாடு தான் திண்டாட்டம் மிக்கதாக இருந்திருக்கும். நடுவர்கள் மூவருக்கும் என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. போட்டி என்று இருந்தால்தான் திறமை என்பது வெளிப்பட ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே இப்படி ஒரு வித்தியாசமான தலைப்பில் ஒரு போட்டி வைத்த சீனுவுக்கும் அதற்கு நடுவர்களாக இருந்து மிகச்சிறந்த முறையில் தம் பணிகளுக்கிடையில் இப்பணியை முடித்துகொடுத்துள்ள நால்வருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
    இப்போட்டியின் மூலம் பல புதிய பதிவுலக நட்புக்களும் ஏற்பட்டுள்ளது!
    போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. முதல்ல பரிசு பெற்றவங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    ஆனால் இந்தப் போட்டி என்னோட அனுமதி இல்லாம நடந்ததால இந்தப் பரிசுகள் எல்லாம் செல்லாது என்பதைத் தெரிவிப்பதுடன் அனைத்துப் பரிசுகளையும் என் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு சீனு தரத் தயங்கிய மேலதிக தகவல் ஒன்றைத் தருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...தம்பி...:) (Y) இப்படியெல்லாம் கிளம்பியாச்சா..??

      Delete
  16. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    சிறப்பாக நடத்திய உங்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. சைதை அஜீஸ் சொல்லியிருப்பது போல போட்டிகள் திறமை வெளிப்படுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு. எத்தனை‌ எத்தனை புதிய திறமைகளை நான் இனங்கண்டு ரசிக்க முடிந்தது. காதல் ரசத்தில் திளைத்த அந்த இனிய தினங்கள் இனியில்லை என்று நினைக்கையில் மெல்லிய வருத்தம்தான். என்னையும் இதில் இணைத்து பெருமை சேர்த்தமைக்கு நன்றி சீனு!

    இங்கே வெற்றிபெற்றவர்கள் தவிர, மற்றும் பலர் எழுதியவையும் பரிசுக்குத் தகுதி ‌பெற்றவைகளே... மிகச் சிறு மெல்லிய வித்தியாசங்கள்தான் வென்றவர்களை முன்னிலைப்படுத்தியுள்ளன. ஆகவே போட்டியில் கலந்து கொண்டு பரிசை வென்ற அனைவருக்கும், மற்றும் ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வளவு பேர்கள் கலந்து கொண்டதால்தான் மகத்தான இந்தப் போட்டி சாத்தியமாயிற்று.

    வெற்றி பெற்றவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள். மதிப்பெண்கள் இட்டு, பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பது சுகமான சுமையாக இருந்ததற்குக் காரணம் போட்டி காதல் பற்றி என்பதால். இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்த சீனுவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்! வேறு ஏதாவது தலைப்பு என்றால் கொஞ்சம் போரடித்திருக்குமோ என்னமோ! எங்கள் காதல் கடிதங்கள் பழசாகி விட்டன என்பது இப்போதைய கடிதங்களைப் படிக்கும்போது புரிந்தது!!

    வெற்றி பெற்றவர்களையும் கலந்து கொண்டவர்களையும் வாழ்த்தியதோடு புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்று நடுவர்களையும் வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு எங்கள் நன்றிகள்! இந்தக் கடிதங்கள் படித்து எங்கள் மனதில் ஏற்கெனவே குடிகொண்டிருந்த காதல் புதுவர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப் பட்டுள்ளது!

    பாராட்டுகளும், வாழ்த்துகளும், நன்றிகளும்!

    ReplyDelete
  19. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மிக குறுகிய காலத்திலே பதிவுலகில் குணத்தாலும் சிறப்பான எழுத்தாலும் எல்லோர் மனத்திலும் இடம் பிடித்து இந்த போட்டியை நடத்தி சிறப்பான பணியை முடித்த சீனுவுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. வென்றவர்களுக்கு உங்கள் முயற்சிகளுக்கு உங்களுடன் கரம் கோர்த்து செயல்பட்டவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. பதிவுலக வரலாற்றில் இந்த காதல் கடிதப்போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. நிறைய தெரியாத பதிவர்களை அறியப்பெற்றேன். அனைவருக்குமே அப்படித்தான் என்று நினைக்கிறேன்... ஒவ்வொருவரின் முயற்சிகளும் பாராட்டத்தக்கவை. போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  22. பரிசுகளை தட்டிச்சென்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

    ReplyDelete
  25. இப்போட்டில் பங்குபெற்றவர்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கும், இந்நிகழ்வோட சேர்ந்து இயங்கிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துகள்..அத்தனை கடிதத்தையும் படித்தேன்.. காதல் மீதே காதல் கொள்ளச்செய்கிற வரிகள்... இ ந் நிகழ்வுக்கு அடித்தளமைத்து இதுவரை இணைந்திருந்த இவ்வலைப்பக்க சகோதரனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் அன்பும்...

    ReplyDelete
  26. களமிறங்கிய அனைவருக்கும் களமமைத்த சீனுவுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

    ReplyDelete

  27. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சீனு மற்றும் நடுவர்களுக்கு எனது பாராட்டுக்கள் :)

    ReplyDelete
  28. Congrats to the winners and organizers.

    ReplyDelete
  29. என் தானை தலைவன் ந்க்கீரனுக்கு ஒரு புளிப்பு மிட்டாய் கூட பரிசாக அளிக்காததை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு பதிலடி பதிவர் சந்திப்பில் கொடுக்கப்படும்

    ReplyDelete
  30. என் தானை தலைவன் ந்க்கீரனுக்கு ஒரு புளிப்பு மிட்டாய் கூட பரிசாக அளிக்காததை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு பதிலடி பதிவர் சந்திப்பில் கொடுக்கப்படும்

    ReplyDelete
    Replies
    1. யோவ் நக்கீரா சந்திப்புக்கு வரும்போது ரெண்டு வீச்சருவாளை வண்டியில போட்டு எடுத்துட்டு வா. ஒரு ஆடு காத்துக்கிட்டு இருக்கு

      Delete
  31. அட எனக்கும் பரிசா ...? எதுக்கும் ஒருதடவ ரீவேல்யூசன் பண்ணி பாருங்களேன் ... எதுனா தவறுதலா செலக்ட் பண்ணீருக்க போறீங்க ...!

    எனிவே எல்லார்க்கும் நன்றிங்கோ ...!

    ReplyDelete
  32. போட்டிகள் என்னை பொருத்தவரைக்கும் பரிசுகானது மட்டும் அல்ல உள்ளே அமிழ்ந்து கிடக்கும் எழுத்தின் தாகத்தை தணிக்கும் நீர் .......அப்படிதான் நான் போட்டிகளை எதிர்கொள்கிறேன் ......
    எதுவுமற்ற வெற்றிடமாக இருக்கும்
    மனதில் மரங்களையும் அதில் தங்க சில பறவைகளையும் அவற்றின் பறத்தலையும் தருவது இந்த போட்டித் தலைப்புக்கள் ..நமக்குள் கொட்டிக் கிடக்கும் சிந்தனையை ஒருமுகபடுதுகிறது .

    நன்றி சீனு எனக்குள் சிதறிய காதலை கடிதமாக வெளிக்கொண்டு வந்ததற்கு ....மேலும் போட்டியில் கலந்துகொண்ட ஒவ்வொருவரின் கடிதமும் பரிசுகுரியதுதான் படிக்க படிக்க வியப்பாய் இருந்தது அவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .

    என்னுடைய காதல் கடிதத்தை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கு என் நன்றிகள் .

    அது போட்டிக்கான காதல் கடிதம் இல்லை உண்மையில் நான் எழுதிய கடிதம் இப்போது என்னவர் அதை கண்டு மகிழ்ந்து போனார் நன்றி சீனு

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்காக... போட்டிக்காக எழுதினதுன்னுல்ல நெனச்சோம்... ஏமாத்திப்புட்டீங்களே தோழி...!

      Delete
    2. அசல் காதல் கடிதமா ?...ட்விஸ்டு

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. FM அறிவிப்பாளரின் கவனத்திற்கு...//அது போட்டிக்கான காதல் கடிதம் இல்லை உண்மையில் நான் எழுதிய கடிதம் இப்போது என்னவர் அதை கண்டு மகிழ்ந்து போனார்//

      Delete
  33. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். எனது இளமைக் காலத்தை திரும்பிப் பார்க்கவைத்த கடிதங்களை வாசிக்க வாய்ப்பு கொடுத்த சீனுவிற்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகள் உணவைத் தேடி உழைக்கின்றன உணவு உண்கின்றன குறித்த நேரத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன ஓய்வுக்காக தூங்கவும் செய்கின்றன. நேரமில்லை நேரமில்லை என்று சொல்லும் மனிதர்களும் நான் நாகரீக மனிதன் என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்களும் இதைத்தானே செய்கின்றார்கள்

      உங்களைப் போன்று சில மனிதர்களால் மட்டுமே சிந்தித்து சமுதாய நலம் எதிர்காலம் பற்றி சிந்திக்க முடிகின்றது அதை நோக்கி பயணம் செய்ய முடிகின்றது

      Delete
  34. வெற்றிபெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

    என்னுடைய கடிதம் முதல் பரிசு பெற்றது என்று அறிவித்து விடுவார்களோ என்று கடந்த ஒரு மாதமாக ஒரே படபடப்பாக இருந்தது எனக்கு நல்லவேளை நடுவர்களின் கடும் முயற்சியால் அப்படி எதுவும் நடந்துவிடவில்லை மகிழ்ச்சி

    இந்த போட்டியில் கலந்துகொண்டதன் மூலம் எனக்கு பல நண்பர்கள் அறிமுகம் கிடைத்தது உண்மையே.

    நண்பர்களே நம் தேசத்தில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது அதனால் குற்றங்கள் பெருகி கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பெருகிவருவது அச்சமாக இருக்கின்றது

    கடந்த கால திருடர்கள் பசிக்காக உணவுக்காக குடும்ப வருமை காரணமாக திருடினார்கள் இன்றோ ஆடம்பரம் பகட்டான வாழ்க்கைக்கு திருடுவதும் கொள்ளையடிப்பதும் தடுத்தால் கொலை செய்து விடுவதும் பெருகி வருவது மிகவும் ஆபத்தானது.

    குற்றங்களுக்கெதிரான சட்டங்களோ செயலற்றுக் கிடக்கின்றன.

    இதற்கெல்லாம் கரணம் இலஞ்சம் ஊழல் ஒழுக்கமற்ற அரசியல் வாதிகள் மட்டுமல்ல விழிப்புணர்வு பெறாத மக்களும் தான்

    இந்நிலை தொடர்ந்தால் எதிர்கால நம் சந்ததிகள் தங்களின் சொத்துக்களை இழந்து உணவுக்காகவும் உயிர் பிழைப்புக்காக பிச்சை எடுப்பார்கள் அல்லது கத்தி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை அறிந்துள்ள நாம் அப்படிப்பட்ட நிலையில் நம் பிள்ளைகளை நம் சந்ததிகளை விட்டுவிட்டு செல்ல இருக்கின்றோம். இதற்காகவா ஆயிரம் ஆயிரம் பேர் தங்கள் இன்னுயிர் ஈந்து சுதந்திரம் பெற்றோம் இதற்கு தீர்வு உங்கள் கரங்களில்

    ReplyDelete
  35. பரிசு பெற்ற தோழமைகள் அனைவருக்கும் மனம் கனிந்த பாராட்டுக்கள் ... மற்றும் பல சிரமத்திற்கு மத்தியிலும் போட்டியை உயிர்ப்புடன் கொண்டு சென்று நிறைவாய் முடித்த தோழர் சீனுவுக்கும், மற்றும் உறுதுணையாய் இருந்த நடுவர் குழுமத்திற்கும் நெஞ்சு நிறை நன்றிகள்

    ReplyDelete
  36. நடுவர்களுக்கு முதலில் பூஸ்ட் ஆர்லிக்ஸ் கொடுங்கப்பா அப்பப்பா இன்னமும் நான் இறுதி வார கடிதங்கள் சில படிக்கவேயில்ல இவர்கள் எப்படித்தான் எல்லா கடிதங்களையும் படித்து அனைவரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்களோ ?

    தோழி சரளா சொன்னதைப்போல என்னுடைய கடிதம் போட்டிக்காக எழுதியது என்றாலும் என் வாழ்வின் காதல் அனுபவமே அது இன்னமும் என்னவர் இந்த கடிதத்தை படிக்கவில்லை .

    பரிசு பெற்ற தோழமைகளுக்கும் எழுதிய தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள் .

    சீனு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வாட்டி ஒரு கொலையப் பத்தி எழுதச் சொல்லலாம்னு உத்தேசம்... அப்ப நீங்க, சரளால்லாம் எப்படி அனுபவத்துலருந்து எழுதுவீங்கன்னு பாக்கறேன் தென்றல்!

      Delete
    2. அதையும் எழுதுவோம் கொலைக்கான முயற்சி என்று முதலில் உங்களை வைத்து பயிற்சி எடுத்து எழுதுவோம்.

      Delete
  37. வென்றவர்களுக்கும் பின்னணியில் நின்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
    பாராட்டுக்கள் !

    ReplyDelete
  38. என் பேரு இந்த லிஸ்ட்ல வரலை. இது கள்ள ஆட்டம். எல்லாத்தையும் அழிங்க. நாம முதல்ல இருந்து வருவோம்!!

    ReplyDelete
  39. தோழமைகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்..தொடரட்டும் சிந்தனைச்சிதறல்கள்..வாழ்க வளமுடன்..:)

    ReplyDelete
  40. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். நடத்திய உங்களுக்கும் நடுவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  41. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சீனு, மற்றும் நடுவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  42. பதிவுலகில் புதுமுயற்சியாய் முன்னின்று வழிநடத்தி சென்ற சீனுவுக்கு பாராட்டுகள்.சிறந்த பதிவுகளுக்கான பரிசை சரியாக தேர்ந்தெடுத்த நடுவர் குழுவினருக்கு நன்றிகள்,வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.,

    ReplyDelete
  43. நானும் பதிவுலக நண்பர்களுடன் இணைந்து நடத்துவது குறித்து கேட்டிருக்கலாம், ஆனால் பணம் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் கேட்பதற்கு ஒரு சிறிய தயக்கம்.  ///

    அட, நம்மகிட்ட கேட்டிருந்தா தந்திருக்க மாட்டோமா? ஏன் பாஸ் தயக்கம்?

    ReplyDelete
  44. போட்டியில் வெற்றிபெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!! சிறப்பாக நடத்திய உங்களுக்கும், நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  45. ஹூ..ம்!எப்படியெல்லாம் உருகி உருகி காதலிச்சிருக்காங்க!
    இதை வெளிக்கொணர்ந்த சீனுவுக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  46. அன்பார்ந்த சீனு அண்ணாவிற்கு
    தாமதமாய் போட்டியில் பதிவை தருவதற்கு மனிக்கவும், பல்வேறு வேலை பளுவினால் குறித்த நேரத்தில் பதிவேற்ற முடியவில்லை . இதை படித்து தாங்கள் கருத்தினை கூறினால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

    http://deepakbioinfo.blogspot.in/2013/08/blog-post.html

    மீண்டும் தாமத்திற்கு மன்னிகவும்

    ReplyDelete
  47. போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  48. போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  49. வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.


    அன்புள்ள சீனு

    போட்டியில் கலந்துகொண்டதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. இப்படி ஒரு platform ஏற்படுத்தி தமிழ்ப் பதிவுலகில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்திய உங்களுக்கு என் அன்பு கலந்த பாராட்டுக்கள். நேரம் ஒதுக்கி கடிதங்களைத் தேர்வு செய்த நடுவர்களின் பணி அளப்பரியது.


    அன்புடன்

    மோ சி பாலன்

    ReplyDelete
  50. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  51. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!!
    சிறந்த கடிதங்களை தேடிப்பிடித்த நடுவர்களுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  52. congrats subathra....

    ReplyDelete
  53. அவ்வ்வ்வ்வ்வ்வ் இப்படிதான் காதல் கடிதம் எழுதணுமா ? ம்ம் .இது தெரியாம போச்சே ?

    ReplyDelete