30 Jan 2015

இசை - அட்டகாசமான த்ரில்லர்

மதியசாப்பாடு முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தான் அந்த போஸ்டர் கண்ணில் தென்பட்டது, இசை @ மேடவாக்கம் குமரன் என்று. உடனடியாக மெட்ராஸ் பவனுக்கு போன் செய்தேன் 'சிவா இசை எப்படி இருக்கு, பார்க்கலாமா', 'சீனு கொஞ்சம் வொர்க் இருந்தது. பார்க்க முடியல, நீங்க பார்த்துட்டு சொல்லுங்க' என்றார். அடுத்த போன் ஆவிக்கு 'பாஸ் இசை' என்றேன். 'சாரி பாஸ் ஈவ்னிங் தான்' என்றார். சரி இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை நாமே களத்தில் இறங்கிவிடலாம் என்று முடிவெடுத்தேன். ஒருவேளை இவர்கள் 'மொக்கையா இருக்கு' என்று கூறியிருந்தால் கூட பார்த்துவிடலாம் என்ற மனநிலையில் தான் இருந்தேன். காரணம் 'படம் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன் டாட்'.



நானும் நண்பனும் சரியாக இரண்டு மணிக்கெல்லாம் அரங்கிற்கு சென்றிருந்தாலும் 'படம் இன்னும் முடியல, வெயிட் பண்ணுப்பா' என்ற பதில்தான் கிடைத்தது. சிவா முன்பே கூறியிருந்தார் 'படம் மூனே கால் மணிநேரம் சீனு, பொறுமைய சோதிக்குதான்னு பார்த்து சொல்லுங்க' என்று. அப்படி இப்படி என்று படம் முடியும் போது மணி மூன்றே கால். கல்லூரி மாணவர்களின் பெரிய பட்டாளம் ஒன்று வந்திருந்தது. அவர்கள் வரவில்லை என்றால் தான் ஆச்சரியம். காரணம் எஸ்ஜே சூர்யா இளசுகளின் பல்ஸ் அறிந்தவர். நியு, அஆ தென்காசியில் நண்பர்களோடு பார்த்த நாட்கள் நிழலாடியது. 

அரங்கம் நிறையவில்லை என்றாலும் ஒரு நூறு பேர் கூடியிருந்தோம். குமரன் தியேட்டர் குறித்து என் பரதேசி விமர்சனத்தில் ஒருவரி எழுதியிருந்தேன் பரதேசி கதை நடந்த காலத்தில் கட்டப்பட்ட தியேட்டர் என்று. இன்னமும் அரங்கு அப்படித்தான் இருக்கிறது. ஏரியாவின் முக்கியமான பகுதியில் இருக்கும் அரங்கத்தை இன்னும் கொஞ்சம் மோசமாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை வேண்டுமானால் பெஸ்ட் இம்ப்ரூவ்மென்ட் என்று கூறலாம். 

சாதாரண நாட்களிலேயே நான் கதையை எழுதமாட்டேன். அதிலும் இது த்ரில்லர் வகையறா வேறு. தயவுசெய்து எங்கேனும் கதையைப் படித்துவிட்டு படம் பார்க்க சென்று விடாதீர்கள். அப்புறம் ஒரு நல்ல திரைக்கதை அனுபவத்தை இழந்து விடுவீர்கள்.  

இசை திரைப்படம் குறித்து ஒரு செய்தி உலவி வந்தது. இரு இசையமைப்பாளர்களுக்கு இடையில் நடக்கும் போட்டி/சண்டையே கதை,  அவ்விருவரும் இளையராஜா ரஹ்மான் என்று. இரண்டு இசையமைப்பாளர்களுக்கு இடையில் நடக்கும் சண்டை என்பது மிகச்சரியே என்றாலும் தயவுசெய்து அவ்விடத்தில் இளையராஜாவையும் ரஹ்மானையும் பொருத்திப் பார்க்காதீர்கள். சில சம்பவங்கள் படத்தில் வருவது போல் நடந்திருக்கலாம் என்றாலும் அந்த சம்பவங்களின் அதீத கற்பனையாக எஸ்.ஜே.சூர்யா வளர்த்திருக்கும் கதையே இசை. 

சத்யராஜ் குரு, மிக மிக தலைக்கனம் பிடித்த ஆள், அந்த அகம்பாவம் அவருடைய இசைச் சக்கரவர்த்தி நாற்காலியை அவருடைய சிஷ்யன் எஸ்.ஜே.சூர்யா விடம் கொடுக்கிறது. தன்னை மிஞ்சி வளர்ந்து நிற்கும் சிஷ்யனைப் பழிக்குப் 'பலி' வாங்க சத்யராஜ் செய்யும் சாகசமே இசை என்று கதையை ஒற்றை வரியில் சுருக்கலாம்.

சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் போட்டி போட்டுக் நடித்திருகிறார்கள் என்பது நிச்சயம் டெம்ப்ளேட் தான். அதிலும் சத்யராஜின் பாடி லாங்க்வேஜ், செம.     

முதல் பாதி கொஞ்சம் நீளம், இழுவையும் கூட. தேவையில்லாத காட்சிகள் என்று நிறைய இருக்கிறது. சிவாவுக்கும் ஜெனிக்கும் இடையில் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் அப்படியே எஸ்.ஜே.சூர்யாத்தனம். இதுபோன்ற குறும்புக் காட்சிகளை வைக்க அவரால் மட்டுமே முடியும். இப்படியான காட்சிகளில் எல்லாம் கல்லூரி மாணவர்களின் விசில் பறக்கிறது என்பது ஆங்காங்கு மானே தேனே பொன்மானே போல் சேர்த்துக் கொள்ளுங்கள். ரொமான்ஸில் வசனம் எப்படி என்பதை என்ன வார்த்தை கொண்டு நிரப்ப என்று தெரியவில்லை, படம் முழுக்கவே வசனம் செம. வசனங்களில் ந்யு பாதி அஆ மீதியாக எழுதியுள்ளார். அதே போல் சத்யராஜை கெட்டவனாக காண்பிக்க பிரயத்தனப்படும் காட்சிகள் கொஞ்சம் ஓவராக துருத்திக் கொண்டு நிற்கின்றன. அதன் நீளத்தைக் குறைத்திருக்கலாம். சில இடங்களில், வெகு சில இடங்களில் மட்டும் இசை இரைச்சலாக இருக்கிறது. சில ரொமான்ஸ் காட்சிகள் ஒரு மெல்லிசான கோட்டிற்கு அந்தப்புரம் இருக்கும் அடல்ட் ஒன்லி காட்சிகள். குழந்தைகளோடு/குடும்பத்தோடு பார்ப்பது உங்களுக்கு நல்லதல்ல!

ஆனால் இரண்டாம் பாதி அப்படியே உல்ட்டா. தேவையில்லாத காட்சி என்று ஒரு காட்சியைக் கூட கூற முடியாது. தேவையில்லாமல் ஒரு பாடல் காட்சி கூட கிடையாது. ரியல் இசையமைப்பாளராக எஸ்.ஜே.சூர்யா பிரமிக்க வைக்கிறார். சத்யராஜுக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இடையே நிகழும் இசையைப் பற்றிய விவரிப்பு அட்டகாசமான கவிதை. 

இசை இசை இசை என்று வெறியெடுத்து அலையும் சத்யராஜ், இசை இசை இசை என்று அதனைக் காதலிக்கும் எஸ்.ஜே.சூர்யா. எஸ்.ஜே.சூர்யாவிற்குள் இருக்கும் இசையை அழித்து மீண்டு வரத் துடிக்கும் சத்யராஜ் என்று இரண்டாம் பாதியின் காட்சிகள் பரபரப்பாக நகரத் தொடங்குகின்றன. எஸ்.ஜே.சூர்யாவான சிவாவிற்கு தன்னுடைய ஆட்கள் மூலமாக மெண்டல் டார்ச்சர் கொடுக்கிறார் சத்யராஜ். அப்பாவி எஸ்.ஜே.சூர்யா இசையைத் தவிர ஏதும் அறியாதவர் என்பதால் தன் மீது திணிக்கப்படும் தொல்லைகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக வலு இழக்கிறார். 

ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் தன்மீது செலுத்தப்படும் இயல்பான உளவியல் தொல்லைகளின் மூலம் தன்னையே தான் ஒரு பைத்தியம் என்று நம்பும் அளவுக்கு தொல்லைகள் அதிகரிக்க கொஞ்சம் கொஞ்சமாக வீழத் தொடங்குகிறார். படம் தன்னுடைய இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. இங்கு எஸ்.ஜே.சூர்யா ஒரு இயக்குனராக விஸ்வரூபம் எடுக்கிறார். மொத்த அரங்கமும் எழுந்து நின்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. இதுதான் இசை. 


கேமெரா எடிட்டிங் இசை வசனம் இவையெல்லாமே படத்தின் தூண்கள். அதிலும் வசனம் செம கிளாஸ். மிக ரிச்சான ஒளிப்பதிவு பல காட்சிகளில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. மேலும் இந்தப்படத்தில் சற்றே வித்தியாசமாக ஒரு ஆணைக் கற்பழிக்கும் காட்சி கூட இடம் பெற்றிருக்கிறது. அந்த ஆண் எஸ்.ஜே.சூர்யா தான் என்பதையும் குறிப்பிட வேண்டுமா என்ன! கிட்டத்தட்ட வெகுநாட்களுக்குப் பின் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த திருப்தி, முதல்பாதியின் சில இழுவைகளைத் தாங்கிக் கொள்ளவேண்டும் என்பதைத் தவிர அட்டகாசமான த்ரில்லர் இந்த இசை. வேண்டுமானால் டோன்ட் மிஸ் இட் என்ற வரியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். 

கொசுறு : புகைப்பழக்கம் உடல்நலனுக்கு தீங்கை உண்டாக்கும் உயிரைக் கொல்லும் என்று நாயகன் பேச வேண்டிய இந்த வசனத்தை எங்க ஊர்க்காரரான எஸ்.ஜே.சூர்யா புகைப்பழக்கம் உடல்நலனுக்கு தீங்கை உண்டாக்கி உயிரைக் கொல்லும் என்றவாறு பேசும் நெல்லைத் தமிழை கவனிக்கத் தவறாதீர்கள் :-)

21 Jan 2015

செண்பகாதேவி - வேலம்மா பாட்டியும் அகஸ்தியரும்

செண்பகாதேவி கோவிலைக் கடந்து அருவியை நோக்கி நடந்து கொண்டிருக்கையில் நெற்றி நிறைய விபூதி பூசியிருந்த ஒரு பாட்டி கோவிலில் இருந்து வெளிப்பட்டு அருவியை நோக்கி நடந்து கொண்டிருந்தார். குறைந்தது எழுபத்தி ஐந்து வயதாவது இருக்கும் அவருக்கு. லேசாக கூன் விழுந்திருந்தது என்றாலும் தெம்பாக நடந்து கொண்டிருந்தார். எங்களுடன் வந்து கொண்டிருந்த ஸ்ரீ அண்ணாவைப் பார்த்ததும் 'கோவிலுக்குப் போய்ட்டு அய்யாவப் பார்க்க வா' என்றார். 'அண்ணே யாருன்னே அவங்க, இதுக்கு முன்னாடி வந்தப்பவும் அவங்களப் பார்த்திருக்கேன்' என்றேன். 

'அந்தப் பாட்டி தன்னோட பதினேழு வயசில இருந்து செண்பகாதேவில தான் இருக்காங்க. இப்ப எண்பது வயசாது. கிட்டத்தட்ட அறுபது வருஷம் இங்கதான் இருக்காங்க. குளிச்சிட்டு கோயிலுக்குப் போயிட்டு அவங்களைப் பார்க்கலாம்' என்றார். 

யாருமற்ற வனத்தில் வெறும் பத்து பேருக்கும் குறைவாகவே ஆட்கள் இருந்ததால் தொல்லை இல்லாமல் குளித்துக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரக் குளியல். குளித்து முடித்து கரையேறிய போது பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கி இருந்தது. அங்கே எதுவுமே கிடைக்காது. முன்பெல்லாம் செண்பகாதேவி ஏறும் பாதையில் பட்டாணி சுண்டல் மாங்காய் சோடா எல்லாம் கிடைக்கும். மலைப்பாதையில் ஆங்காங்கு விற்றுக்கொண்டு இருப்பார்கள். இப்போது யாருக்குமே அனுமதி இல்லை என்பதால் எல்லாவற்றுக்கும் கீழேதான் சென்றாக வேண்டும். அதுவரைக்கும் பசியும் தாங்கியாக வேண்டும். 




இன்றைக்குத்தான் முதல்முறையாக செண்பகாதேவி அம்மன் கோவிலுக்குள் நுழைகிறேன். இதற்குமுன் வந்த போதெல்லாம் யாருமற்று பூட்டிக் கிடக்கும் கோவிலை மட்டுமே பார்த்திருந்த எனக்கு, இன்றைக்கு அம்மனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது நிச்சயம் அதிர்ஷ்டம் தான். குரங்குகள் கோவிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து விடக்கூடாது என்பதற்காக கோவிலின் கதவுகளை அடைத்தே வைத்திருந்தார்கள். மிகப் பழைய கோவில். 

பழமையான கோவில்களுக்கே உண்டான விபூதி வாசம். சுத்தமான பொதிகைமலைக் காற்று. நிரம்பிக்கிடக்கும் மௌனத்தின் ஊடாக கோவிலுக்குள் நுழைந்தோம். பௌர்ணமி என்பதால் கோவில் சுத்தமாகக் கழுவி விடப்பட்டிருந்தது. வனம் வனத்தின் மத்தியில் இருக்கும் கோவில் என்று மனம் தன்னையே அறியாமல் ஒருவித சமநிலைக்கு வந்திருந்தது. சிலநிமிட வேண்டுதல்களுக்குப் பின் அங்கிருந்து வேறோரு கட்டிடம் நோக்கி நடந்தோம். 

பாறை மீது கட்டப்பட்ட மற்றுமொரு சிறிய கட்டிடம். அதனுள் நான்கைந்து பேர் உணவருந்திக் கொண்டிருந்தனர். சிறிய அகஸ்தியர் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யபட்டு அவர் அருகில் ஒரு ஜோடி பாதம் கல்லில் செதுக்கபட்டிருக்க கிட்டத்தட்ட அதுவும் சிறிய கோவில் போன்ற அமைப்பிலேயே இருந்தது. அங்கும் ஒரு சிறிய வழிபாட்டிற்கு பின் எங்களையும் உணவருந்தச் சொன்னார்கள். தயிர்சாதம் ஊறுகாய். தேவாமிர்தமாய். இது அடுத்த அதிர்ஷ்டம். பௌர்ணமி தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான சிறப்பு அன்னதானம் என்ற தகவல் பின்னர் கிடைத்தது. குளியல் கோவில் உணவு என்று எதிர்பார்க்காத விஷயங்கள் ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருக்க, அங்கிருந்து நேராக ஒரு அந்தப் பாட்டி தங்கியிருக்கும்  குகைக்கு சென்றோம். அதற்கு அவ்வையார் கோவில் என்றும் ஒரு பெயர் உண்டு. 

தென் மாவட்டங்களில் அவ்வையார் பூஜை என்று ஒன்று நடைபெறும் (மற்ற மாவட்டம் பற்றி தெரியவில்லை) விதவிதமான வடிவங்களில் (வட்டம், சதுரம் நீள் உருளை) மிக சிறியதாக அரிசி கொளுக்கட்டை செய்து அதனை நள்ளிரவில் அவ்வையாருக்குப் படைத்து பூஜை செய்வார்கள், அந்தக் கொளுக்கட்டையை ஆண்கள் பார்க்கக் கூடாது. நாடோடிகள் படத்தில் அனன்யா சசிகுமாருக்கு ஒரு கொழுக்கட்டை ஊட்டி விடுவரே அதேதான். அந்தப் பூஜை செண்பகாதேவியில் விமர்சையாக நடைபெறும். தன்னுடைய சின்ன வயதில் எங்கள் பாட்டி அம்மா சித்தியை இங்கு நடைபெறும் பூஜைக்குக் கூட்டி வந்துள்ளதாகக் கூறியுள்ளார். இதுவரை வெளியில் இருந்து மட்டுமே பார்த்த அந்த கோவிலினுள் இன்றுதான் நுழைகிறேன். மனம் முழுவதும் ஆனந்தம் நிறைந்திருந்தது.

வேலம்மாள் பாட்டி உள்ளே அமர்ந்திருந்தார். கதவைத் திறந்தால் எங்களுக்கு முன் உள்ளே நுழைய குரங்குகள் தயாராய் இருந்தன. உள்ளே ஒரு சிறிய அவ்வையார் சிலை இருந்தது. பாட்டி டார்ச் லைட் ஒன்றை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குள் நுழைய, நாங்களும் நுழையும் போதுதான் தெரிந்தது அது அறையல்ல குகை என்று. மிகபெரிய குகை. குகையின் முடிவில் அகஸ்தியர் நின்று கொண்டிருந்தார். பாட்டி அவருக்கு சூடம் காண்பித்துவிட்டு வெளியில் செல்ல கொஞ்சம் நேரம் குகையின் இருளில், விளக்கொளியில் பிரகாசமாகி இருந்த அகஸ்தியரைப் பார்த்தபடி கண்களை மூடி தியானம் செய்தோம். செண்பகாதேவி சலசலத்து இறங்கி கொண்டிருந்தாள்.  அதன் சத்தம் குகைக்குள் துல்லியமாக ஒலித்துக் கொண்டிருந்தது. மற்றவர்கள் தியானம் செய்து கொண்டிருக்க மெல்ல வேலம்மாள் பாட்டியிடம் வந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். 


வேலம்மாள் பாட்டி

அவருடைய இளவயது போட்டோ ஒன்றை காண்பித்தார். ஆர்ப்பரிக்கும் செண்பகாதேவிக்கு முன் ஜடாமுடியுடன் நின்று கொண்டிருந்தார். நல்ல சிரித்த முகம். 'இத எடுத்து நாப்பது அம்பது வருஷம் இருக்கும்' என்றார். 

குற்றாலத்திற்கு கீழ் இருக்கும் கிராமத்தில் இருந்து தன்னுடைய பதினேழாவது வயதில் இங்கு வந்துவிட்டதாகக் கூறியவர், இடி மழை புயல் வெள்ளம் அத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இந்த அத்துவானக் காட்டில் தான் வசித்து வருகிறார். தினமும் செண்பகாதேவியில் நீராடல், அகஸ்தியர் பூஜை, இருவேளை மட்டுமே உணவு என்று கூறினார். இந்தியாவின் முக்கியமான திருத்தலங்களுக்கு சென்று வந்துள்ளதாகவும், இரண்டு மூன்று தொலைக்காட்சி சேனலில் இருந்து வந்து படம்பிடித்து சென்றதாகவும் கூறினார். அந்தக் குகைக்கு உள்ளேயே சமையல் செய்து சாப்பிட அடுப்பு வைத்திருக்கிறார். பயமா இல்லையா என்றால் சிரித்தார். உள்ளே நிரம்பி இருக்கும் சாமிகளைப் பார்த்தார். வார்த்தைகளால் கேட்ட கேள்விக்கு பாவனையால் புரிய வைத்துவிட்டார். 

இது சித்தர் வாழுற காடுன்னு சொல்றாங்களே நீங்க சித்தர்கள பார்த்து இருக்கீங்களா என்றேன். இது வழக்கமாக அவர் எதிர்கொண்டிருக்கக் கூடிய கேள்வி தான், அதனால் அவர் என்ன கூறுவார் என்று யூகித்திருந்தேன். இருந்தாலும் கேட்டேன். ஆர்வம். 'பார்த்திருந்தா சொல்லுவனாய்யா' என்றார். சிரித்தேன். 'சொல்லலாமா' என்றார். கூடாது என்று தலையாட்டினேன். ஆனால் அவர் பார்த்ததாக அவருடைய கண்களும் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியும் கூறியது. குகைக்குள் தியானம் செய்து கொண்டிருந்த எல்லாருமே இப்போது பாட்டியின் முன் அமர்ந்திருந்தோம்.

'இத்தன வருசமா தனியா இருக்கீங்களே பயமா இல்லையா பாட்டி' மீண்டும் கேட்டேன். மீண்டும் சிரித்தார். எனக்கென்ன பயம். 'அய்யா துணைக்கு இருக்காரு இல்ல'. இங்கே அனைவருமே அகஸ்தியரை அய்யா என்றே குறிப்பிடுகிறார்கள். 'இங்க ரொம்ப நாளா ஒரு கருநாகம் இருக்கு. அதுபாட்டுக்கு அது வேலைய பார்க்கும். நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்ப்பேன். ஒருநாள் அய்யா பக்கத்தில நின்னுட்டு இருந்திருக்கு. இங்க வெளிச்சம் இல்ல பார்த்தியா, கண்ணு தெரியாம மிதிச்சிட்டேன். தீண்டிருச்சு. ஆனா விசப்பல்லு இல்ல. ஆனாலும் கடுமையான வலி. அப்புறம் ஒரு பெரியவர் வந்து பச்சிலை கொடுத்துட்டு போனார். அவர் யார் என்னன்னு தெரியாது. ஆனா யாரா இருக்கும்னு எனக்குத் தெரியும்', என்று தனக்கு நடந்த அனுபத்தைக் கூறினார். 


அவ்வையார் குகை

'என்னது கொகைக்குள்ள கருநாகம் இருக்கா' எங்களுக்கெல்லாம் ஒரு நிமிடம் திக் என்று இருந்தது. பாட்டி அதனை முதலிலேயே கூறியிருந்தால் தைரியமாகக் குகையினுள் சென்றிருப்போமா தெரியவில்லை. அவரோடு மேலும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து செண்பகாதேவிக்கு மேற்புறம் இருக்கும் அகஸ்தியர் குகைக்குச் சென்றோம். அகஸ்திய குகை மிக மிகப் பெரிய குகை. உள்ளே உள்ளே சென்று கொண்டே இருக்கிறது. அங்கே ஒரு சாமியார் தங்கி இருக்கிறார். அவர் இங்கு வந்து ஒரு சில வருடங்கள் தான் இருக்கும் என்று ஸ்ரீ அண்ணா கூறினார். அவரைச் சுற்றி நெல்லையில் வந்திருந்த யோகா மாஸ்டர்கள் உட்கார்ந்திருந்தனர். அகஸ்தியரை வழிபட்டுவிட்டு மீண்டும் வெளியில் வந்தோம். மேலே தேனருவி நடக்கும் தூரம் தான் என்றாலும் இன்னொருநாள் போய்க் கொள்ளலாம் என்று மெல்ல கீழே இறங்கத் தொடங்கினோம். இப்படி ஒரு அற்புதமான பயணத்தை சாத்தியபடுத்திய ஸ்ரீ அண்ணாவுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும். மாறாக கீழே இறங்கும் வரை அவர் எங்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருந்தார். எங்களால் தான் இந்தப் பயணம் சாத்தியாமாயிற்று என்று.  

எங்களுக்கு எதிர்புறம் உள்ளூர் மக்கள் வரத்து அதிகரித்துக் கொண்டு இருந்தது. நிதானமாக மலையேறிக் கொண்டிருந்தார்கள். எப்படியும் அவர்கள் அனைவரும் மாலை வரை அங்கிருந்துவிட்டுத்தான் வருவார்களாம். 

அவ்வையார் குகைக்கும் அகஸ்தியர் குகைக்கும் இடையே தெட்சிணா மூர்த்தி குகை இருக்கிறது. ஆனால் அடைத்திருந்தது என்பதால் உள்ளே செல்ல முடியவில்லை. அவ்வையார் குகையில் இருந்து வெளியில் வரும்போது வேலம்மாப் பாட்டி என்னை அழைத்தார். 'சொல்லுங்க பாட்டி' என்றேன். என்னைப் பார்த்து சிரித்தவர் அடுத்தவாட்டி வரும்போது அய்யாவுக்கு நல்லெண்ண வாங்கிட்டு வா, விளக்குக்கு ஊத்தணும் என்றார். 'இனி அடிக்கடி இங்க வரணும்' நினைத்துக் கொண்டே கீழே இறங்கத் தொடங்கினேன். 

படங்கள் : நன்றி இணையம்

முந்தைய பதிவு செண்பகாதேவி - ஒரு வனாந்திரப் பயணம்

19 Jan 2015

சென்னை புத்தகக் கண்காட்சி 2015 - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை

சென்னை புத்தகக் கண்காட்சி, முதல் நாள் மாலை அவ்வளவாகக் கூட்டம் இல்லை. கண்காட்சிக்கான ஏற்பாடுகளும் முழுமை அடைந்திருக்கவில்லை. கண்காட்சித் திடலும் சரி, புத்தக அரங்குகளும் சரி தங்களுடைய இறுதி கட்ட பணிகளில் மும்மரமாகி இருந்தன. பெரும்பாலான கடைகளில் அப்போதுதான் புத்தகங்களையே அடுக்கிக் கொண்டிருந்தார்கள். கூட்டமே இல்லாத அரங்க வீதிகளில் நான் ஆவி சூர்யா கூடவே வெற்றிவேலும் நடந்து கொண்டிருந்தோம். இவ்வளவு விசாலமான வீதிகள் விடுமுறை தினங்களில் மனிதக் கால்களால் நிரம்பி இருக்கும். தலையை கொஞ்சம் உயர்த்தி எக்கிப் பார்த்தால் மனிதத் தலைகளைத் தவிர வேறு எதுவும் தெரியாது. 



அடுக்கபட்டிருக்கும் புத்தகங்களையும், அடுக்கப்பட இருக்கும் புத்தகங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டு இருந்தோம். தரையில் பச்சைக் கம்பளம் விரித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் மக்கள் நடக்க ஆரம்பிக்கவில்லை என்பதால் ஆங்காங்கு துருத்திக் கொண்டு நின்றது. எங்கோ பார்த்தபடி நடந்து கொண்டிருந்த குழந்தைகள் தடுக்கி விழுந்து பெரியவர்களுக்கு எச்சரிக்கைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். புத்தகக் கண்காட்சியின் முதல் புத்தமாக சுஜாதாவின் பூக்குட்டியும், வைரங்களும் வாங்கினேன். அரங்கு எண் ஒன்றிலிருந்து எழுநூறு வரை மெல்ல நடந்து கொண்டிருந்தோம். முதல்நாள் முழுவதும் நடந்து கொண்டே இருந்தோம். ஆவி பேசிக் கொண்டே இருந்தார். அவர் பேசாமல் நடந்தால் தான் ஆச்சரியம்.

இம்முறை மொத்தமாக நான்கு தினங்கள் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு நாளைப் பற்றியும் தனித்தனியாக எழுதி உங்களை அறுக்க மனமில்லை. பிழைத்துப்போங்கள். இனி மொத்தமாக ஒரு குறுக்குவெட்டுப் பார்வை. 

தொடர்ச்சியாக நான்காவது வருடமாக புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதால் முதன்முறை தெரிந்த பிரம்மாண்டமும் பிரம்மிப்பும் இப்போது இல்லை என்றாலும் ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை. மேலும் புத்தக உலகினுள் நிகழும் சஞ்சாரம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று. பார்க்கும் புத்தகங்களை எல்லாம் அடுத்த நிமிடமே படித்து முடிக்க வேண்டுமென்ற வேட்கையை ஏற்படுத்தக் கூடியது. எத்தனை எத்தனை புத்தகங்கள். எவ்வளவு எழுத்தாளர்கள். மலைப்பாய் இருக்கிறது. எவ்வளவு பெரிய வாசக உலகம் நம்மிடம் இருந்திருந்தால் இவ்வளவு எழுத்தாளார்கள் முளைத்திருக்க முடியும். ஆனாலும் எழுதப்பட்ட அத்தனை புத்தகங்களும் உருப்படியானவை, ரசவாதத்தை உண்டாக்குபவை என்றெல்லாம் கூறிவிடமுடியாது.

எழுதப்பட்டதில் முக்கால்வாசி புத்தகங்கள் சுயுதிருப்த்திக்காக எழுதபட்டவையாகத்தான் இருக்க வேண்டும். ஆர்வத்தில் ஒன்றிரண்டு புத்தகங்கள் எழுதி இருப்பார்கள். சூடுபட்டிருக்க வேண்டும். பின்பு காணாமல் போய் இருப்பார்கள். ஆனால் அவர்களையும் கடந்து ஒரு இருபத்தி சதவிகிதம் பேர் இருக்கிறார்களே அவர்கள் எல்லாருமே நாயகர்கள் தான். தமக்கென நிச்சயம் குறைந்தது ஐநூறு வாசகர்களையேனும் சம்பாத்திருப்பர்கள். (ஏழுகோடி ஜனத்தொகையில் குறைந்தது ஐநூறு என்று கூறுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.) மேலும் இவர்களில் பெரும்பான்மையான எழுத்தாளர்களிடம் தனித்துவமான எழுத்துக்கள் இல்லையென்றாலும் சோர்வடையாமல் கதை சொல்லுகின்ற தன்மையைப் பெற்றிருப்பார்கள். பல குடும்ப நாவல்களின், திரில்லர் நாவல்களின் வெற்றிக்குப் பின் இருக்கும் விசயமாக இதையே நான் கருதுகிறேன். சீரியல்களும் தொலைகாட்சிப் பெட்டிகளும் சமூக வலைதளங்களும் நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்கியபின் இந்த குடும்ப நாவல்களுக்கான வாசகர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.   

ஜனரஞ்சக எழுத்துக்களில் இருந்து மெல்ல இலக்கியம் நோக்கி நகர்ந்தால் அங்கும் நமக்கான வாசிப்பு உலகம் பரந்து விரிந்ததாகவே இருக்கிறது. இலக்கிய வாசிப்புக்கான வாசகர்களின் எண்ணிக்கை ஜனரஞ்சக வாசகர்களின் எண்ணிக்கையை விட குறைவு என்ற போதிலும் சமூக வலைதள யுகத்தில் இலக்கியம் நோக்கி நகர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிலும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாவே படுகிறது. இது நிச்சயம் நல்ல முன்னேற்றம் தான். இந்த மாற்றத்திற்குப் பின் இருக்கும் விடயத்தை ஆராய முற்பட்டால் வாசிப்பு சார்ந்த வழிகாட்டுதல்கள் நம் சமுதாயத்தில் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. இல்லை முறையான வழிகாட்டிகள் கிடைத்திருக்கவில்லை. ஆசிரியர்கள், சுற்றத்தார் செய்ய வேண்டிய பணியை தற்போது இணையம் செய்து வருகிறது. எங்கோ நடந்து கொண்டிருந்த இலக்கியக் கூட்டங்களும் திண்ணை விவாதங்களும் இன்று பேஸ்புக் குழுமங்களில் நடக்கத் தொடங்கியுள்ளன. 

இன்னும் கொஞ்சம் தீவிரமாகப் பார்த்தால் இம்முறை அத்தனை பதிப்பகங்களும் பல முக்கியமான முன்னணி இலக்கியவாதிகளின்/எழுத்தாளர்களின் படைப்புகளை செம்பதிப்பாக கொண்டு வந்துள்ளன. எனக்குத் தெரிந்து நாவல் வெளியிடுவதில் அவ்வளவாக மும்மரம் காட்டாத கிழக்கு கூட காலச்சுவடு அளவிற்கு செம்பதிப்புகளை இறக்க தயராக இருக்கிறது. வம்சி, தமிழினி, க்ரியா, சந்தியா, காலச்சுவடு என்று எங்கும் மக்களின் கூட்டத்தை காண முடிக்கிறது. தேடித்தேடி வாங்குபவர்களை விட முன்பே தயாரித்த பட்டியலின் படி கேட்டு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராஜன் என்னும் இளம் இலக்கிய வாசிப்பாளர் துணிமணிகளை அள்ளிச் செல்வது போல் புத்தகங்களை மூட்டை மூட்டையாக அள்ளிக் கொண்டிருந்தார். தற்சமயம் நான் பொறாமைப்படும் நபர்களில் இவரும் ஒருவர். என்னைப் போன்றவர்கள் நன்கு அறிமுகமான புத்தகங்களை வாங்கினால் அரசனைப் போன்றவர்கள் நின்று நிதானமாக ஒரு புத்தகத்த்தின் ஒரு பக்கத்தையேனும் வாசித்து, அந்த வாசிப்பு ஈர்ப்பை அளித்தால் வாங்கிவிடுகின்றனர். என்ன உறை போட்டு வரும் புத்தகங்களை அப்படி வாங்க முடிவதில்லை என்பதால் இழப்பு புத்தகத்திற்கு தானே தவிர வாசகனுக்கு இல்லை என்பார் அரசன்.

குழந்தை இலக்கியங்கள் பரவலான வளர்ச்சியை அடைந்துள்ளது, முன்னணிப் பதிப்பகங்கள் குழந்தை இலக்கியங்களை பதிப்பிக்கத் துவங்கியுள்ளன. ரா.நடராசன், விழியன், யூமா வாசுகியின் புத்தகங்கள் பாரதி புத்தகாலயத்திலும் எஸ்ராவின் குழந்தை இலக்கியங்கள் வம்சி உயிர்மை ஸ்டால்களிலும் கிடைகின்றன. இவற்றை கேட்டு வாங்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. என்னை கேட்டல் குழந்தைகளின் வாசிப்பை வளர்த்தாலே போதும் அவர்கள் வளர வளர வாசிப்பின் வீச்சே அவர்களை வேறு கட்டத்திற்கு கொண்டு சென்றுவிடும். குறைந்தபட்சம் 'என்ன மச்சி புக்ஸ படிச்சிட்டு இருக்க', 'நமக்கு இந்த புத்தகமெல்லாம் படிக்க வராதுப்பா' போன்றவர்களின் எண்ணிக்கையாவது குறையும். 

எம் புள்ளைக்கு தமிழ் வாசிக்க தெரியாது என்பவர்களுக்கெல்லாம் குழந்தை இலக்கியங்களை வாங்கிக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். நீங்கள் படிக்க ஆரம்பியுங்கள் குழந்தைகள் உங்களை பின்தொடர்வார்கள். எத்தனை பேருக்குத் தெரியும் ஸ்கூல்பையன் வலைப்பூவில் எழுதுவதைப் பார்த்து அவர் பையன் அவருக்குத் தெரியாமலேயே நோட்டுப் புத்தகத்தில் கதை எழுதிக் கொண்டிருப்பது, நாம் நினைக்கமலேயே சில மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய வல்லமை வாசிப்புக்கு உண்டு. அதற்காகவேனும் கொஞ்சமாவது வாசிக்க வேண்டும். அதற்கு குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சி மிகமுக்கியமானது. தமிழ்ச் சூழலில் இன்றைக்கு அது நன்றாகவே உள்ளது. இருந்தும் நான் பார்த்தவரையில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில புத்தக ஸ்டாகளுக்கே அதிகம் கூட்டிச் சென்றதையும் கவனிக்க முடிந்தது.    

இளைஞர்கள். சுஜாதா புத்தகங்களுக்கு அப்புறமாக அவர்கள் கைகளில் கிளாசிக் நாவல்கள் அதிகம் காணக் கிடைக்க்கின்றன. சும்மா சுத்திப் பார்க்க வருவோமே என்று வந்து இரண்டு மூன்று புத்தகங்களை வாங்கியவர்களை பார்த்தேன். வினோத் அண்ணா. 'போடா நீயும் உன் புக்ஸும்' என்பவர் கைகளில் ஐந்து புத்தகளைப் பார்த்தேன். வா.மணிகண்டனையும், விநாயக முருகனையும், அபிலாசையும் பல இளைஞர்கள் தேடிவந்து சந்திப்பதாகக் கூறுகிறார்கள். லக்ஷ்மி சரவணகுமாரின் உப்புநாய்களும் கானகனையும் பலரின் கைகளில் பார்த்தேன். இதுபோன்ற நிகழ்வுகளுக்காகவாவது புத்தகக் கண்காட்சிக்கு நன்றி கூறவேண்டும். வாசிப்பு அறியாதவர்களுக்கு வாசிப்பின் அதீதத்தை ஏற்படுத்தும் உந்துசக்தி இது. 

உலகத்திலேயே கேப்ஷன் தேவைப்படாத ஒரே மனிதரல்லாத ஆவி

காலச்சுவடில் கிருஷ்ண பிரபு சில இளைஞர்களுக்கு 'எந்தப் புத்தகங்களை வாங்கலாம்' என்று பாடம் நடத்தி கொண்டிருந்தார். ஓரமாய் நின்று கொஞ்சநேரம் அவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு நண்பர் இருக்கிறார். தன் பங்குக்கு எது எது நல்ல நாவல் என்று புத்தகங்களைத் தேர்வு செய்வதில் வழிகாட்டுகிறார். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகப் பணிபுரிவதாகக் கூறினார். கிழக்குப் பதிப்பகத்தில் ஒருவர் என்னிடம் சர்வே எடுக்க நான் வாங்கிய புத்தகங்களின் பெயர்களைக் கூறியதும் நீங்க ப்ளாக்கரா என்றார். 

ரஞ்சனி அம்மா எழுதி இருக்கும் மலாலா புத்தகம் கிழக்குப் பதிப்பக டாப் டென் பெஸ்ட் செல்லரில் ஒன்றாக இருக்கிறதாம். முகநூல் வாயிலாகவே அறிமுகமாகி இருக்கும் கார்த்திக் புகழேந்தியின் புத்தகங்களை பல இணைய நண்பர்கள் கேட்டு வாங்கிச் செல்வதாகக் கூறினார். கேபிள் சங்கர் யுவா அதிஷா அராத்து கருந்தேள் ராஜேஸின் புத்தகங்களின் பெஸ்ட் சேல்ஸ்க்கும் இணையம் நிச்சயம் முக்கிய காரணியே.  

ஜெயமோகனையும், சாருவையும், எஸ்ராவையும் பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இம்முறை என்னுடைய டாப் புத்தகங்களில் இவர்கள் புத்தகங்களே அடங்கும். பெருமாள் முருகன் அத்தனை சின்ன ஸ்டால்களில் இருந்து பெரிய ஸ்டால்கள் வரைக்கும் முன் வரையில் உட்கார்ந்துள்ளார். மாதொருபாகன் கிடைக்காதவர்கள் ஆலவாயனையும் அர்த்தநாரியையும் வாங்கிச் செல்கிறார்கள். முன்பு கிழக்கு செய்த பணியை தற்போது மதி செய்து வருகிறது. பா.ராகவனும் அங்கே தான் அதிகமாகக் காணக்கிடைக்கிறார்.

விகடனின் கிளாசிக் வரிசை பலரது கைகளிலும் தவழ்கிறது, மற்றபடி விகடன் அப்படியேதான் இருக்கிறது, கிழக்கு, காலச்சுவடு ஸ்டால் வடிவமைப்பு அட்டகாசம். பனுவலில் இயற்கை சார்ந்த புத்தகங்கள் அதிகம் கிடக்கின்றன. அகநாழிகைக்கு கடைசி நேரத்தில் இடம் கிடைத்ததால் சின்ன ஸ்டாலாகவே போட்டிருந்தனர். இஸ்கான், ஈசா, நித்யானந்தா, ஓஷோ அசரமால் ஸ்டால் போடுகிறார்கள். மக்களும் செல்கிறார்கள். நித்யானந்தா ஸ்டாலில் மெட்ராஸ் பவனாருக்கு கிடைத்த தீட்சை குறித்து அவர் ஒரு நாவலே எழுதினாலும் எழுதக் கூடும்.  

நான், அண்ணன், ஆவி, அரசன், சக்தி, வாத்தியார், ஸ்கூல் பையன் ,வினோத் அண்ணா என்று பெருங்கூட்டமாக சென்றிருந்தோம். ஆங்காங்கு எதிர்பட்ட நண்பர்களாக மெட்ராஸ்பவன் சிவா,கே.ஆர்.பி, கேபிள், கிங் விஸ்வா, அதிஷா பிலாசபி பிரபா, அஞ்சா சிங்கம் மற்றும் அலுவலக நண்பர்களான சோழர் , ஆர்கே போன்றோரையும் சந்திக்க முடிந்தது. இதில் தற்செயலாக சந்தித்து பெருமகிழ்ச்சியைக் கொடுத்தவர்கள் அண்ணன் விவேகானந்தனும் நண்பன் காளிமுத்துவும், வெங்கட் நாகராஜ் & குடும்பமும். கிங் விஸ்வா உடனான சந்திப்பை தனி பதிவாகவே எழுதலாம். வெங்கட் சாரிடம் புகைப்படம் எடுப்பது எப்படி வகுப்பிற்கு செல்லலாம் என்று இருக்கிறேன். எப்போதும் பபாசி நடத்தும் மாலை நேர சொற்பொழிவுகளுக்கு செல்வது வழக்கம். இம்முறை அதற்கெல்லாம் நேரமில்லை. அதுமட்டும் தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. 

வாங்க சாப்பிடலாம் ஸ்டாலில் வழக்கம் போல் விலை அதிகம், தரமும் சுவையும் குறைவு. வேறுவழியில்லாமல் சாப்பிட வருபவர்களின் தலையில் நன்றாக மிளகாய் அறைக்கிறார்கள். நம்ம ஆட்டோவின் சேவை மீட்டருக்கு மேல் பாராட்டலாம். பேருந்து நிறுத்தம் வரை சென்று இறக்கிவிட இலவச வாகன வசதி இருந்தது. முதன்முறையாக சீசன் டிக்கெட் 50ரூபாய் என்றளவில் அறிமுகபடுத்தி உள்ளனர், முதல் மூன்று நாட்கள் புத்தகத் திடலினுள் நெட்வொர்க் சொதப்பியதால் கிரெடிட் டெபிட் கார்ட் மூலம் வாங்க நினைத்தவர்கள் தெறித்து ஓடிவிட்டார்கள். மேலும் மொபைல் சிக்னல் இல்லாததால் தொலைந்து போனவர்களை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கலாகிப் போனது. 

இந்தவருட புத்தகக் கண்காட்சி என்னளவில் இனிதே முடிவுக்கு வந்தது. பபாசிக்கும் பபாசி மூலமாக சாத்தியபடுத்திய பதிப்பங்களுக்கும். ஓய்வில்லாமல் வாசிக்க வைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றிகள். பின்வரும் அந்த பத்திகளையும் கூறியே ஆக வேண்டும்.

தீபாவளிக்கு முந்தைய இரவுகளில் அம்மாவும் கார்த்தியம்மாவும் புதுத்துணி எடுத்து வந்து வீடு முழுவதும் பரப்பி வைத்து ஒவ்வொன்றாக 'இது உனக்கு' 'இது அவனுக்கு' என்று காட்டிக் கொண்டிருப்பார்கள். அரை உறக்கத்தில் இருந்து எழுதிருந்தாலும் புதுத்துணியைப் பார்த்த உற்சாகம், அது தரும் வாசத்தில் உறக்கம் தொலைந்து மனம் முழுவதும் புதுத் துணியின் வாசம் பரவியிருக்கும்.


அப்படி ஒரு மோன நிலையில் இருக்கிறேன். எனக்கு முன்னால் புத்தகக் கண்காட்சியில் இருந்து வாங்கி வந்த புத்தகங்களை பரப்பி வைத்து ஒவ்வொன்றாக எடுத்து வாசம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த வாசங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து கொண்டிருக்கிறேன். எப்படியும் இந்நிலை அடுத்த மூன்று மாதங்களுக்காவது நீடிக்கலாம். இப்போது என்னுடைய கவலையெல்லாம் எங்கிருந்து ஆரம்பிப்பதில் என்று தான். 

படங்கள் - நன்றி வெங்கட் நாகராஜ் 

17 Jan 2015

ஆதலால் ஒரு தற்கொலை - சிறுகதை

'மின்சார ரயிலில் பாய்ந்து மென்பொருள் இஞ்சினியர் தற்கொலை - தன்னுடைய இந்த முடிவுக்கு தானே காரணம் என்று அவர் எழுதிய வாக்குமூலம் சிக்கியது.' நாளைய தினசரியில் இப்படியொரு செய்தி தலைப்புச் செய்தியாக இடம் பெற்றிருக்கா விட்டாலும் குறைந்தபட்சம் ஒரு தற்கொலைச் செய்தியாகவாவது இடம் பெற்றிருக்கக்கூடும். யாரோ நால்வர் இறந்தவனுக்காக வருத்தப்பட்டிருப்பார்கள், எதோ ஒரு டீக்கடையின் மரபெஞ்சில் அமர்ந்திருக்கும் சிலருக்கு இது விவாதப் பொருளாயிருக்கக்கூடும். மென்பொருள் துறை என்பதால் விவாதம் மேலும் சில இடங்களில் சூடு பிடிக்கலாம். இரண்டுமணி நேரங்களுக்கு முன்பாகவே தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டியவன், ரயிலில் பாய்வதற்கான கடைசி நொடியில் யுகங்களை மென்று கொண்டிருந்தான் செல்வா. மரணம் அவன் காதுகளினுள் ரீங்கரித்துக் கொண்டிருந்தது. 'டடக்டடக் டடக்டடக் டடக்டடக்'.



சட்டைப் பையில் இருந்த தற்கொலைக் கடிதத்தைத் ஒருமுறை தொட்டுப்பார்த்தான். மடிப்பு கலையாமல் வைத்தது வைத்தபடி இருந்தது. மனதில் ஆழமாக உருவேறி இருந்த விரக்தியும் வெறுப்பும் வலியும் கூட அப்படியே இருந்தது. அவமானம் அவ்வளவு எளிதில் ஜீரணிக்கக் கூடிய விஷயம் அல்ல. இருபத்தி நான்கு வயத்தில் தற்கொலை என்பது யோசிக்கக் கூடிய விசயமா என்ன? அதிலும் இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனத்தில், வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகியிருக்காத நிலையில்?. மெல்லிய தூறல் உடலை நனைக்க, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். 

ரம்யாவின் முகத்தை, அவளால் ஏற்பட்ட அவமானங்களை தன் வாழ்நாளில் இருந்து அழிக்க வேண்டுமானால் தன்னை அழித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. 

'ஜானி ஜானி எஸ் பாப்பா தெரியுமா' 

'சப்பி சீக்ஸ்' டேன்ஸ் ஆடிட்டே சொல்லு பார்க்கலாம்'

'அட்லீஸ்ட் ஏ.பி.சி.டியாவது தெரியுமா உனக்கு'. 

காலையில் இருந்து தொடர்ச்சியாக ரம்யா அவனை அவமானப்படுத்திய நிகழ்வுகள் ஒவ்வொன்றாக வந்து போய்க் கொண்டிருந்தன. விபரம் தெரிந்ததில் இருந்து எத்தனையோ வலிகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டவன் என்றபோதிலும் இன்றைக்கு அத்தனை பேர் முன்னிலையிலும் அவள் தன்னை அசிங்கபடுத்தியதையும், தான் அவமானப்படுவதை மற்றவர்கள் ரசித்துக் கொண்டிருந்ததையும் செல்வாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 'அட்லீஸ்ட் ஏ.பி.சி.டியாவது தெரியுமா உனக்கு' என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. அவனையும் அறியாமல் அழுது கொண்டிருந்தான்.   

'ஜஸ்ட் ஓபன் யுவர் லிப்ஸ் மேன், யு ஆர் நாட் எ லிவ்விங் ஸ்டேட்யு' ரம்யாவின் குரலில் கொஞ்சம் கடுமை கொஞ்சம் கூடியிருந்தது. முதலில் அவள் கூறியது அவனுக்குப் புரியவில்லை என்றாலும் தன்னை ஒரு கல்லுடன் ஒப்பிடுகிறாள் என்பது புரிந்தபோது இதயம் முன்னிலும் வேகமாகத் துடித்தது. சுற்றி அமர்ந்திருக்கும் மொத்த கண்களும் கூர்மையான ஆயுதத்தில் தாக்குவதைப் போல் உணர்ந்தான். 

விழுப்புரம் வழியாக திருச்சி மதுரை செல்லும் ரயில்கள் தமக்கான பாதையில் ஓடிக் கொண்டிருந்தன. விழுப்புரத்திற்கும் திருச்சிக்கும் இடையே இருக்கும் சிறுகிராமம் தான் செல்வாவிற்கு. கூடபிறந்தவர்கள் இரண்டு பேர். ஒரு அண்ணன். ஒரு அக்கா. தூங்கும் போதே போய்ச் சேர்ந்துவிட்ட பாக்கியசாலி அவனுடைய அக்கா. அண்ணன் அப்போவோடு சேர்ந்து கொத்தனார் வேலைக்குச் செல்கிறான். 

கடைசிப் பையனையாவது கல்லூரிக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற முனைப்பில்தான் செல்வாவை எம்.சி.ஏ வரைக்கும் படிக்க வைத்தார் வீரன் செல்லமுத்து. அவர் பெயர் செல்லமுத்து மட்டும்தான். தன்னுடைய குலச்சாமி பெயரான எல்லைவீரனில் இருக்கும் வீரனை தன்னோடு சேர்த்துக் கொண்டார். யாராவது அவரை 'வீரா' என்று விளித்துவிட்டால் போதும் அப்படியே பூரித்துவிடுவார். 'வீரன் வீரன் வீரன்' என்று மனதிற்குள் கூறிக்கொண்டே இருக்கவேண்டும். அப்படிக் கூறுகையில் தன்னையே அறியாமல் தன்னுள் ஒருவித மாற்றம் நிகழ்வதை கவனித்திருக்கிறார். இக்கட்டான சூழ்நிலைகளில் அவரை வழி நடத்துவதே அவருக்குள் இருக்கும் அந்த வீரன்தான்.  

வீரனுக்கு இதுதான் வேலை என்று கிடையாது. மேஸ்திரி,  டீ மாஸ்டர், சுண்ணாம்பு அடிக்க, மரம் வெட்ட, தேங்காய் பறிக்க, வீடு காலி செய்ய என்று என்ன வேலை கிடைத்தாலும் அசராமல் செய்யக்கூடிய ஆள். வீரனுக்கு என்று சில கனவுகள் இருக்கின்றன. பெரியவனுக்கு ஒரு வீடு, சின்னவனுக்கு கல்லூரிப் படிப்பு மெட்ராஸில் வேலை. இதற்காக எவ்வளவு தூரத்திற்கு வேண்டுமானாலும் தன்னை வருத்திக் கொள்ள தயாராய் இருந்தார். 

'தம்பி எங்கப்பன்தான் என்ன படிக்க வைக்காம அல்லாட வைச்சிட்டான், நீயாவது படிச்சு நல்லா இருக்கணும்டா, மெட்ராசு போகணும், கண்ணாடி வச்ச பில்டிங்கல சூட்டு போட்டு வேல செய்யனும். எப்போதும் சந்தோசமா இருக்கனும்டா, வீரன் நம்ம கூட இருக்க வரைக்கும் நமக்கு நல்லதுதாண்டா நடக்கும்' கூறிக்கொண்டே இருப்பார். செல்வாவின் பெரும்பான்மையான பொழுதுகள் வீரனின் கனவுகளாலேயே நிறைந்திருக்கும்.

அரசுப்பள்ளி, அரசுக் கலைக்கல்லூரியில் இளநிலை கணிதம், மாநகர் சென்னையில் ஓர் பொறியியல் கல்லூரியில் எம்.சி.யே என்று எதுவுமே சவாலாக இல்லை. ஆங்கிலம் என்ற ஒற்றை சொல்லைத் தவிர. என்னென்னவோ செய்தும் ஆங்கிலம் மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. டுடோரியலில் ஆங்கில பயிற்சி வகுப்பு, பிரிலியன்ட், லிப்கோ, ரெபிடெக்ஸ் என்று விதவிதமான ஆங்கில வழிகாட்டிகள், ஹிந்து, எக்ஸ்பிரஸ், டெக்கன் கிரானிக்கிள் என்று கண்ணில்படும் தினசரிகளை எல்லாம் வாசிக்க முயன்றது என்று எதுவுமே ஆங்கிலத்தை அண்டவிடவில்லை. 

மேலும் எந்த ஒரு முயற்சியயையும் ஒரு வாரத்திற்கு மேல் தொடர முடிந்ததில்லை. ஆங்கிலத்திற்கும் அவனுக்கும் இடையில் இருந்த மாயத்திரை விலக மறுத்தது. ஆங்கிலம் மட்டும் தான் தெரியாதே தவிர சி.சி++, ஜாவா என்று ஆங்கிலம் தவிர்த்த மற்ற எல்லா மொழிகளிலும் புகுந்து விளையாடுவான். அவனுடைய கணிதமூளை எப்போதும் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும். எவ்வளவோ யோசித்துவிட்டான் ஆங்கிலம் எந்த விதத்தில் மிகபெரிய சவால் என்பதை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையெல்லாம் நினைத்து வருத்தபடுவானே தவிர மனதில் பாரமாய் எற்றிக்கொண்டது கிடையாது. அவனுக்குத் தெரியும் அவன் பயணிக்க வேண்டிய பாதை மிகவும் தூரமானது, உயரமானது. 

இந்தப் பாதையில் ரம்யா இப்படி ஒரு வில்லியாக குறுக்கிடுவாள் என்பது சற்றும் எதிர்பாராத ஒன்று. ரம்யா, கம்யுனிகேசன் ஸ்கில் ட்ரையினர்.

'ஹே ஷேல் வீ நோ, வாட் ஆர் யு திங்கிங் நவ்' தன்னுடைய ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு நக்கலாக முறைத்தாள். அவளுடைய தோற்றம் இவள் தன்னைப் புரிந்துகொள்ளக் கூடியவள் இல்லை என்பதை பட்டவர்த்தனப்படுத்தியது. அத்தனை பேர் முன்னிலையில் தனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை அத்தனை சீக்கிரம் அவளும் தன்னை விட்டுவிடுவாள் என்ற நம்பிக்கையும் இல்லை.

கேம்பஸ் இண்டர்வியு மூலமாக இந்தியாவின் முன்னணி நிறுவனத்தில் செல்வாவிற்கு வேலை  கிடைத்த சேதியை அறிந்த வீரன், அந்த நாளை கொண்டாடித் தீர்த்துவிட்டார். தன் மகன் மெட்ராசில் பணிபுரிய வேண்டும் என்கிற எண்ணம், கனவு, லட்சியம் நிறைவேறிய நாள் அது.  ஆனால் செல்வாவோ பயத்தில் குழப்பத்தில் இருந்தான். அலுவலக பயிற்சியின் போது தனக்கு முன் இருக்கையில் அமர்ந்தவர்களிடம் ஆங்கிலம் விளையாடிக் கொண்டிருந்தது. பேசினால் ஆங்கிலத்தில் பேசு என்கிற விதி அவனது வாயைக் கட்டிப்போட்டிருந்தது. 

போதாக்குறைக்கு யாருமே அவனோடு பேசுவதில்லை. தனித்து விடபட்டவனைப் போல் உணர்ந்தான். அங்கு நிலவிய பேரமைதி அவனுக்குள் ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. தன்னைச் சுற்றிலும் வேட்டை மிருங்கங்கள் சூழ்ந்திருக்க தான் மட்டும் இரையாக்கப்பட இருக்கும் மானைப்போல் உணர்ந்தான். முதல் இரண்டு நாட்கள் எந்தப்பிரச்சனையும் இல்லை, மூன்றாவது நாளில் இருந்து தான் ரம்யா அவனை வேட்டையாடத் தொடங்கியிருந்தாள். 

பிளாட்ப்பாரத்தில் அமர்ந்து கடந்து கொண்டிருக்கும் ரயில்கலையே கவனித்துக் கொண்டிருந்தான். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அதன்முன் பாய்ந்து விடும் உறுதி அவனுக்குள் ஊறிக் கொண்டிருந்தது. மறந்தும்கூட வீட்டையும் வீரனையும் நினைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். டடக் டடக் டடக், டடக் டடக் டடக்.  

ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு தலைப்பில் பதினைந்து நிமிடம் தங்களுக்குப் பிடித்த விசயங்களைப் பற்றிப் பேச வேண்டும். ஒவ்வொருவராக வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சில பெண்களின் கை அசைவுகள், பாவனைகள் செல்வாவுடைய தாழ்வு மனப்பான்மையை மேலும் கிளறிவிட்டுக் கொண்டிருந்தன.  

மூன்றாவது வரிசையில் தன்னை யாரும் கவனித்து விடக்கூடாத கட்டாயத்தில் தலைமறைவாக அமர்ந்திருந்தான் செல்வா. ஒவ்வொருவராக முன்னே சென்று வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள், காதலித்து வீட்டில் சிக்கியது, நண்பர்களுடன் தண்ணியடித்து மாட்டியது என்று ஒவ்வொன்றையும் பிரதானப்படுத்திக் கொண்டிருக்க, ரம்யாவும் அதைப் போன்ற சம்பாஷனைகளைத் தான் எதிர்பார்த்திருக்க வேண்டும், அனைவரையும் ஏதாவது பேசும்படி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள். நடப்பவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா. அவனுடைய இருக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் எழுந்து சென்றான். குளிரூட்டப்பட்ட அறையிலும் வியர்த்து ஒழுகத் தொடங்கியது. கைகள் நடுங்கத் தொடங்கியிருந்தன. வயிற்றைக் கலக்கியது. 

வெகுநேரமாக தன்னைக் கடந்து தடதடத்துக் கொண்டிருக்கும் புறநகர் ரயில்களையே பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா. அவனுக்குள் நிகழ்வது மொத்தமும் தேவையற்ற குழப்பங்கள் தான் என்ற போதிலும் அவற்றில் இருந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

இத்தனை நாட்கள் தன்னைப் புரிந்த கொண்ட ஒரு சமுயாத்தில், தன்னுடைய பிழைகள் பொறுத்துக் கொள்ளப்பட்ட இடத்தில் இருந்து வந்தவனுக்கு தன் முன் நடப்பவை அனைத்தும் செயற்கையாக இருந்தன. இங்கு யாரும் யாரையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. ஏற்றுகொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இது ஒரு பந்தயம், ஓடித்தான் ஆகவேண்டும். வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு இங்கு இடம் இல்லை.  

'செல்வா, மிஸ்டர் செல்வா', எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவன், தான் அழைக்கப்படுவதை உணர்ந்ததும் இயல்புநிலைக்குத் திரும்பினான். பெரும் தயக்கத்திற்குப் பின் அத்தனை பேரின் முன்னிலையிலும் நின்று கொண்டிருந்தான். ரம்யாவின் உடலில் பூசியிருந்த இருந்த வாசனைத் திரவியம் அவனுள் மயக்கத்தை உண்டு பண்ணுவது போல் இருந்தது. ஏற்கனவே பயந்திருந்தான். நிலைகொள்ளாமையின் மொத்த உருவமாக தன்னம்பிக்கை நிறைந்த ஒரு கூட்டத்தின் முன் தற்கொலைக்குத் தயரானவனாக நின்று கொண்டிருந்தான். 

'எஸ் ப்ளீஸ், திஸ் இஸ் யுவர் டர்ன், சே சம்திங் இன்ட்ரெஸ்டிங் பிரேம் யுவர் லைப் சார்' 

என்ன பேசுவது, எதைப் பேசுவது, எங்கிருந்து ஆரம்பிப்பது. குழப்பம். வார்த்தைகள் அற்ற உலகத்தில் சஞ்சரிப்பது போல் இருந்தது அவனுக்கு. இந்த வேலை கிடைத்ததை விட மிகப்பெரிய இன்ட்ரெஸ்டிங் திங் வேறு எதுவும் இல்லை, பிறந்ததில் இருந்தே கஷ்டங்களுடனும், ஏமாற்றங்களுடனும் வளர்ந்தவன். அவனுடைய மொத்த நம்பிக்கையும் குடும்பம்தான். குடும்பத்தைக் கூறலாம் என்றால் அவர்களின் மத்தியில் பரிதாபத்திற்காக அலைவதைப்போல் இருக்கும், தன்னைப் பார்த்து யாரும் பரிதாபப்படத் தேவையில்லை. 

'ஓகே லிசன், டூ யு நோ இங்க்லீஸ்' 

ஆம் என்பது போல் தலையாட்டினான். ஆங்கிலம் தெரியாதவனுக்கு இங்கு இடம் இல்லை, ஆங்கிலம் தெரியும் புரியும் ஆனால் கோர்வையாய் பேசுவதில் தயக்கம். அந்த தயக்கத்தை உடைத்தெறிய உதவ வேண்டிய பயிற்சியாளர் அவனுடைய தாழ்வு மனப்பான்மையை மேலும் நிரடி விட்டுக்கொண்டிருந்தார். 'சரி நீ எதுவும் பேச வேண்டாம் ரெண்டு ரைம்ஸ் சொல்லு உன்ன விட்டுர்றேன்', விதி இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. மெளனமாக தரையையே பார்த்துக் கொண்டிருந்தான். உடல் ஒருமாதிரி கூனிக்குறுகிப் போய் இருந்தது. அறை முழுவதும் மௌனம். வெடித்துச் சிதற இருக்கும் அணுகுண்டின் பேராற்றல் பொருந்திய மௌனம். 

'ஜானி ஜானி எஸ் பாப்பா தெரியுமா' 

'சப்பி சீக்ஸ்' டேன்ஸ் ஆடிட்டே சொல்லு பார்க்கலாம்' 

'அட்லீஸ்ட் ஏ.பி.சி.டியாவது தெரியுமா உனக்கு'. 

ரம்யா கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் வெற்றுப் பார்வைகளையே பதிலாக கொடுத்துக் கொண்டிருந்தான். அவனால் அங்கு நிற்க முடியவில்லை. ஒரு அறிவுஜீவி சமுகத்தின் முன் 'தான் எதற்கும் லாயக்கற்றவன்' என்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்குத் தெரியும் அவன் எந்தளவிற்குத் திறமையானவன் என்று, இருந்தும் அவனுக்கு மட்டுமே தெரிந்து என்ன புண்ணியம். அவன் எதிர்பார்த்த அன்யோன்யமான தன்னை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை தன்னை அந்நியபடுத்திவிட்டதைப் எண்ணி நொந்து கொண்டான்.

'ஹலோ சார், இப் யு கேன் ஸ்பீக் இங்க்லீஷ் பீ ஹியர், அதர்வைஸ் ஹெட் அவுட்'. இதை கேட்டதும் அறையில் முணுக்கென்று சிரிப்பொலி. இதற்கு மேலும் தான் இரையாக்கப்படுவதை அவன் விரும்பவில்லை. கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது. அவசரமாக அந்த அறையைவிட்டுக் கிளம்பிவிட்டான். இனியும் இந்த காட்டினுள் அவனால் தப்பிப் பிழைக்கமுடியுமா என்பதே மிகப்பெரிய கேள்வியாய் இருந்தது. எப்போதுமே தன்னை மிகவும் பலம் பொருந்தியவனாய் உணர்பவன் பலமற்றுக் கிடந்தான். இந்தக் காட்டில் தான் எதிர்கொள்ள இருக்கும் மனிதர்களை நினைக்கும் போதே பயமாய் இருந்தது. அடிமட்டத்தில் இருந்து மேல ஏறிவரத் துடிக்கும் ஒரு இளைஞன், அவனை வைத்து பகடி செய்யும் கூட்டம். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது தன் மீதான கழிவிரக்கம் விரக்தியாக மாறி வெறுப்பாக உருவெடுத்து தற்கொலைக்குத் தூண்டியிருந்தது. 

ரயிலின் முன் குதிக்க நினைக்கும் நொடியை வீரன் தடுத்துக் கொண்டே இருந்தார். 'அப்பா இந்த வேலை வேண்டாம்பா, இங்க இருக்க ரொம்ப பயமா இருக்குப்பா'. அவர் தோள்களில் சாய்ந்து கதறி அழ வேண்டும் போல் இருந்தது. இதற்காகவா இத்தனைக் கஷ்டப்பட்டார். எம்.சி.யே படிக்க வாங்கிய கடன். வீடு கட்ட வாங்கிய கடன், அண்ணினின் திருமணதிற்கு வாங்கிய கடன் இப்படி வெவ்வேறான கடன்கள் வீரனின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்ததன. ரயில்கள் கடந்து கொண்டிருந்தன. டடக்டடக் டடக்டடக் டடக்டடக்.

ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் செல்வா உயிரோடு வேண்டும். ஆனால் அவனுக்கோ தன்னைப் புரிந்துகொள்ளக் கூடிய சூழல் வேண்டும். 'அப்பா வேற வேலைக்குப் போறேன்ப்பா, இந்த வேலை வேணாம்ப்பா', அவரைப் புரிய வைத்துகொள்ளலாம் என்று மனதைத் தேற்றியவன் வீட்டை நோக்கிக் கிளம்பினான். விதவிதமான எண்ணங்கள் குழப்பங்கள் சிந்தனைகள் அவனை மேலும் வதைத்துக் கொண்டிருந்தன. ஆறுதலாக முழு நிலவும், கொஞ்சம் மழையும்.  

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க செல்வா பயணித்த பேருந்து கிராமத்தைச் சென்று சேருவதற்கும் தூறல் நிற்பதற்கும் சரியாக இருந்தது. நள்ளிரவில் யாருமற்ற இருளில் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். அடையாளம் கண்டுகொண்ட தெருநாய்கள் வாலை ஆட்டிக்கொண்டே தொடர புதிதாக வந்து சேர்ந்த நாய்கள் தூரத்தில் இருந்தே குலைக்கத் தொடங்கின. 'ஏன் வந்த' என்று கேட்டால் என்ன பேசுவது, அவனிடம் பதில் இல்லை. 'வேலைய விடப்போறேன்' என்றால் அவரால் அதைப் புரிந்துகொள்வார். புரிந்துகொள்ள வேண்டும். ஒரு முடிவுக்கு வர முடியாமல் யாரும் தன்னைப் பார்த்துவிடாதபடி வீட்டின் ஓரமாய் நின்று கொண்டு நிலவைப் பார்த்தான். தன்னைப் போலே யாருமற்று தனித்துத் தொங்கிக் கொண்டிருந்தது முழு நிலவு.

அண்ணனின் ஆறுமாதக் குழந்தை அனைவரையும் எழுப்பி விட்டிருக்க வேண்டும். வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீரன் தன் பேரனின் அழுகையை நிறுத்த சமாதானம் செய்து கொண்டிருந்தார். 'யே வீரா' தன் பேரனையும் அப்படித்தான் கூப்பிடுவார். 

'யே வீரா ஏண்டா கண்ணு அழுவுற, உன் தாத்தா வீரன் இருக்கன்டா உன்கூட. உங்கப்பன படிக்க வைக்காம இருந்தமாரி உன்னையும் விட்ற மாட்டேன், உன் சித்தப்பன் பாரு மெட்ராஸ்ல பெரிய உத்தியோகத்துல இருக்கான், அவன் பாத்துபாண்டா உன்ன ராசா மாதிரி. உன் தாத்தன் வீரன்னா உன் அப்பங்க ரெண்டு பேரும் மாவீரங்கடா. உன்ன அழ விடமாட்டன்னுங்க வீரா. மெட்ராசுல உன் சித்தப்பன் பார்த்து பயப்படாத பூதத்தையாடா இந்த ராத்திரியில நீ பார்த்து பயந்துட்ட, அவன மாதிரி தைரியமா இருக்கனும்டா வீரா. அவனும் உன்ன மாதிரி அழுதுட்டு கிடந்தான்னு வையி இந்த கிராமத்திலையே நம்மகூட அடஞ்சுகிடக்க வேண்டியது தான். உன் அப்பன் தைரியமா இல்லன்னு வையி பஞ்சாயத்து காண்ட்ராக்ட் நமக்கு வந்த்ருக்காது. வாழ்க்கைய நினைச்சு பயந்தன்னு வையி எங்கப்பன நாயா அலைய வச்ச காசு நம்மையும் அலைய விட்ரும்டா. அழாதடா, வீரன்ன்னா எதையும் பார்த்து பயப்படாம எதிர்த்து நிக்கனும்டா. எல்லை வீரன் துணைக்கு இருக்க வரைக்கும் நாம எதுக்கும் அழ கூடாது பயப்படக் கூடாதுடா'. தோளில் கிடந்த குழந்தையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே அங்குமிங்கும் உலாத்திக் கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் ஒருவித பெருமிதம் குடிகொண்டிருந்தது. சவரம் செய்யப்படாத நான்கு நாள் தாடியும் முறுக்கிவிட்ட மீசையும் அவரை இன்னும் கம்பீரமாக்கி இருந்தது.


அப்பா தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த தோளில் தானே சாய்ந்து கிடப்பதைப் போல் உணர்ந்தான் செல்வா, அவன் தேடி வந்ததும் இதைத்தான். தேடியது கிடைத்துவிட்ட திருப்தியில் மீண்டும் நடையைக் கட்டினான். இழந்த பலம் மீண்டு வந்ததைப் போல் இருந்தது. ரம்யா நடந்துகொண்ட விதம் தவறுதான் ஆனாலும் அவள் இடத்தில் யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கக்கூடும். தைரியமற்றவர்களை படுகுழியில் தள்ளிவிடும் இந்த உலகத்தில் வீரனாய் இருப்பதைத் தவிர  வேறு வழியில்லை.

நாம் நினைப்பது அல்ல உலகம். அவளை எதிர்கொள்ள வேண்டும். மதங்கொண்ட யானையே வந்தாலும் அடிபணிய வைத்த வீரர்கள் பிறந்தமண் இது. மனிதர்களைச் சமாளிக்க முடியாதா என்ன! தனக்கான மறுஜென்மத்தில் தன்னை ஓர் மாவீரனாக உணர்ந்து கொண்டிருந்தான் செல்வா. ஊரின் எல்லையில் இருக்கும் பேருந்து நிறுத்தம் நிலவொளியில் அலம்பிவிட்டது போல் இருந்தது. ஊரைக் காவல் காக்கும் பொருட்டு குதிரையில் கிளம்பத் தயாராய் இருந்தான் எல்லைவீரன், அந்தக் குதிரையின் பின்புறம் தன்னை மறைத்துக் கொண்டு செல்வாவையே பார்த்துக் கொண்டிருந்தார் வீரன். கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. எல்லைவீரன் காவல்காக்க கிளம்பி விட்டிருந்தான்.

படங்கள் - நன்றி இணையம்

15 Jan 2015

செண்பகாதேவி - ஒரு வனாந்திரப் பயணம்

சிற்றருவியைக் கடந்து செண்பகாதேவியை நோக்கி ,மலையேறத் தொடங்கும் பொழுது மணி ஏழை நெருங்கி இருந்தது. அவ்வளவாக குளிர் இல்லை. சூரியனும் முழுதாக முளைத்திருக்கவில்லை. எங்கும் பரவி இருக்கும் அமைதி, வனத்தின் மௌன சாட்சியாக எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. 

காட்டினுள் பயணிப்பது என்றாலே என்னையும் அறியாத கூடுதல் உற்சாகம் என்னோடு வந்து ஒட்டிக் கொள்ளும். இப்போது வனவிலங்குகள் நிறைந்த அடர் கானகத்தினுள் பயணிக்கப் போவதில்லை என்றாலும் அடுத்த நான்கு கிலோ மீட்டர்கள் மனிதர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட பாதைகளின் ஊடாகத்தான் நடக்க இருக்கிறோம். ஆம் பொதுமக்கள் செண்பகாதேவி அருவிக்கு சென்று குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணமில்லாமல் இல்லை. அருவிக்குச் சென்ற இடத்தில் போனோமா குளித்தோமா என்று வராமல் உயர இருக்கும் பாறை மீது ஏறி 'தலைகீழாகக் குதித்து தடாகத்தினுள் இருக்கும் பாறை மீது மோதி அல்பாயுசில் மேலோகம் போனவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூறைத் தொடும். 

செண்பகாதேவி

மேலும் செண்பகாதேவிக்கு செல்லும் பாதையில் தான் மெயின் அருவியின் மேற்பக்கம் இருக்கிறது. கிட்டத்தட்ட 520 அடி உயரம். அங்கு இருந்து எட்டிப் பார்த்தால் பேரருவியின் பொங்குமாங்கடல் தெரியும். மேலும் அங்கிருந்து பொங்குமாங்கடலுக்குச் செல்ல பாறையில் செதுக்கப்பட்ட படிகளும் உண்டு. அதன் வழியாக இறங்கும் போது இறந்தவர்களும், மேலே இருந்து பொங்குமாங்கடலை எட்டிப் பார்க்கிறேன் பேர்வழி என்று தலைசுற்றி கீழே விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் நூறைத் தாண்டும். அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அபாய எச்சரிக்கைப் பலகை யாருக்கோ தேவுடு காத்துக் கொண்டிருந்தாலும், அதில் எந்தெந்த வருடங்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற புள்ளி விபரக் கணக்கைப் பார்க்கும் போது பயமாகத்தான் இருக்கிறது. இருந்தும் இவற்றையெல்லாம் கடந்து சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படும் இந்த மலையில் இன்னும் ஏராளமான ஆச்சரியம் தரும் சங்கதிகள் இருக்கின்றன.  

மூன்று நாள் பயணமாக அலுவலக நண்பர்களுடன் தென்காசி செல்வது என்று முடிவான போது இரண்டு நாட்களுக்கு தேவையான பயணத் திட்டம் எங்களிடம் இருந்தது. முதல் நாள் குற்றாலம் முழுவதையும் சுற்றுவது பார்டரில் பரோட்டா சாப்பிடுவது. இரண்டாம் நாள் காரையாறு பாநாசம் முடிந்தால் மணிமுத்தாறு அப்படியே தென்காசி பெரியகோவில். மூன்றாம் நாள் திட்டத்தில் தான் மிகப்பெரிய குழப்பம். எங்கு செல்லப்போகிறோம் என்பது குறித்த தீர்மானமான திட்டம் எங்களிடம் இல்லை. உடன் வந்த நண்பர்கள் திருத்தலங்கள் வேண்டாம் என்றதால் ஆரியங்காவு அச்சன் கோவில் செல்லும் திட்டம் கைவிடப்பட்டது. மாஞ்சோலை முயற்சி செய்தோம் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் தான் 'ஏன் செண்பகாதேவி செல்வதற்கு முயன்று பார்க்கக் கூடாது' என்ற யோசனை தோன்றியது. 

செண்பகாதேவிக்கு அனுமதி இல்லை, உள்ளூர்வாசி என்று கூறினாலும் விடுவார்களா தெரியவில்லை. ஸ்ரீ அண்ணனுக்கு போன் செய்தேன். அவரும் அதையே கூறினார். இருந்தாலும் மேலே செண்பகாதேவி அம்மன் கோவிலுக்குச் செல்வோம் அப்படியே குளித்துவிட்டு வரலாம், ஆனால் உடன் வரும் நண்பர்கள் மிகவும் பாதுகாப்பாக நடந்துகொள்ள வேண்டும், ஒருவேளை போலீஸ் அனுமதி கொடுக்காவிட்டால் கீழே இறங்கிவிட வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் தானும் உடன்வருவதாகக் கூறினார். 

செண்பகாதேவியின் மேற்புறம் இருந்து

வீட்டிலோ செண்பகாதேவி செல்வதாகக் கூறிய அடுத்த நொடி 'ஏம்ல அங்கலாம் போயிட்டு இருக்க, பசங்கள ஊருக்கு கூட்டிவந்த இடத்துல ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டுன்னா என்ன செய்வ' என்று வழக்கம் போல் அர்ச்சனை செய்ய, 'இல்ல ஸ்ரீ அண்ணா தொணைக்கு வாராங்க' என்றதும் கொஞ்சம் சமாதானம் அடைந்தார்கள். 'ஸ்ரீ அண்ணாவோ தனக்கு வேறு ஏதேனும் வேலை வந்துவிட்டால் வரமுடியாது' என்று கூறவிட, செண்பகாதேவி பயணத்தின் மீதிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. மேலும் தென்காசிக்கு சென்று இறங்கியதில் இருந்து அவரை நச்சரித்துக் கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் என் நச்சரிப்பு பொறுக்காமல் சரி நாம போறோம். என்னவானாலும் போறோம் என்று சந்தேகத்திற்கு முற்றுபுள்ளி வைத்தார். 

செண்பகாதேவி யாருக்கும் அனுமதிக்கப்படாத மலைப்பாதை என்பதால் மிக மோசமாக இருந்தது. சிற்றருவி வரைக்கும் சிமின்ட் ரோடு, அங்கிருந்து செங்குத்தாக ஏறும் சிமின்ட் படிகள். இப்படிகள் உபயோகத்தில் இல்லாமல் இருப்பதாலும், முறையான பராமரிப்பு இல்லதாதாலும் மோசமான நிலையில் இருக்கின்றன. மேலும் செங்குத்தாக வேறு கட்டபட்டிருப்பதால் ஏறுவதற்கும் சிரமமாக இருக்கிறது. இப்படியாக ஐம்பது படிகளை ஏறினால் அங்கிருந்து நீளுகின்ற ஒத்தயடிப்பாதை நம்மை கொஞ்சம் ஆசுவாசபடுத்துகிறது. வனம் தனக்குள் ஒளித்து வைத்திருக்கக் கூடிய பிரம்மாண்டமும் இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது.

குற்றாலம் குறித்த பல பயணக் கதைகள் நிலாச் சோறு ஊட்டப்பட்ட காலத்தில் இருந்து சேர்த்தே ஊட்டப்பட்டவை. அம்மாவும் பாட்டியும் மாமாவும் தாங்கள் சென்று வந்த குற்றாலத்தையும் இப்போது இருக்கும் குற்றாலத்தையும் குறித்தும் கதை கதையாகக் கூறுவார்கள். 

செண்பகாதேவியை நோக்கி ஓடிவரும் சிற்றாறு 

இப்போது இருப்பது போல் பயணம் அவ்வளவு எளிதாக மாறி இருக்காத காலத்தில் குற்றாலத்தில் ஐம்பதுக்கும் குறைவான குடும்பங்களே வாழ்ந்திருக்கின்றன. எந்தவொரு அத்தியாவசியத் தேவைக்கும் தென்காசிக்குத் தான் வர வேண்டும். பொழுது போகவில்லை என்றால் தென்காசிக்காரர்கள் சோறுகட்டிக் கொண்டு குற்றாலம் நோக்கி நடக்க ஆரம்பித்தது விடுவார்களாம். எங்கும் சூழ்ந்திருக்கும் வயல்வெளியும், பாதையோர மரங்களும் அவர்கள் பயணத்தை இலகுவாக்கி இருக்கின்றன. மிகவும் அமைதியான சாவகாசமான வாழக்கையை அனுபவித்து வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கோ நம் வாழ்க்கையில் நமக்கு நடந்த சம்பவங்களைக் கூட அசைபோட்டுப் பார்க்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

வனம் அமைதியான மனநிலையை கொடுத்துக் கொண்டிருந்தது. ஸ்ரீ அண்ணா மேலும் பல கதைகளை, தான் படித்த கேட்ட நிகழ்வுகளை எல்லாம் கூறிக் கொண்டே நடந்து கொண்டிருந்தார். எங்கும் உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரம் செடி கொடிகளுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது சிற்றாறு. மலையின் மீதிருந்து விழும் போது மட்டும் அதன் பெயர் பேரருவியாகயோ ஐந்தருவியாகவோ செண்பகாதேவியாகவோ மாறிவிடுகிறது. தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தோம். என்றைக்கோ ஒருநாள் என் பாட்டனும் பூட்டனும் கதைபேசிக் கொண்டே நடந்த இடத்தின் வழியே நானும் பயணித்துக் கொண்டு இருக்கிறேன் என்பது எத்தனை அலாதியான அனுபவம். கார்த்திக்கும் சரவணாவும் விஜயும் எங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்னரே அருவிக்குச் சென்ற சில குளித்து முடித்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.    

நான்கு கிலோமீட்டர்கள் நடந்ததே தெரியவில்லை அருவியை நெருங்கி விட்டோம். செண்பகாதேவி அம்மன் பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அருவியை நெருங்கிய போதுதான் தெரியும் அன்றைக்கு பௌர்ணமி என்று. இங்கு பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். திரளான உள்ளூர்க்காரகள் வந்து வழிபட்டுச் செல்வார்கள். பௌர்ணமி இரவில் கோவிலில் தங்கி பூஜை செய்பவர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு முன்னரே வந்து சென்றவர்களின் காரணம் புரிந்தது. 

செண்பகாதேவி. வெறும் இருபது அடி உயரத்தில் இருந்து இறங்கும் அருவி என்றாலும் ஆக்ரோசமானது. இப்போது நீர்வரத்து குறைவாக இருப்பதால் அருவியின் ஆர்ப்பாட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. நின்று குளிக்கும் இடமும் பாறையால் ஆனது. வழுக்கி விடாமல் இருக்க கொஞ்சம் சிமின்ட் போட்டு மெழுகி விட்டிருக்கிறார்கள். அருவியின் நீர், வேகமாக விழுந்து விழுந்து கைபிடிக் கம்பிகள் வளைந்து போய்க் கிடக்கின்றன. நீர் விழும் இடத்தில் தடாகம் மிகவும் ஆழமானது என்ற போதிலும் முழுவதும் பாறைகளால் ஆனது. நீச்சலிடிக்கும் போதே பாறை இடுக்குகளில் கால் மாட்டி உயிர் இழந்தவர்களும் இருகிறார்கள் காப்பாற்றபட்டவர்களும் இருக்கிறார்கள். இது போன்ற அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக பத்து வருடங்களுக்கு முன் அப்போதைய கலெக்டர் வலைகளைக் கொண்டு தடாகத்தை மூடியிருந்தார். நீரின் வேகத்தைத் தாக்குபிடிக்க முடியாமல் ஒரே பருவத்தில் அந்த வலைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின. வலை இருந்த தடயமாக அவை கட்டபட்டிருந்த இரும்புக் கம்பிகள் மட்டும் ஆங்காங்கு நீட்டிக் கொண்டுள்ளன. 

செண்பகாதேவி

தண்ணீர் குளிர்ந்து போய்க் கிடந்தது. எங்கள் ஐந்து பேரைத் தவிர மேலும் மூன்று பேர் மட்டுமே குளித்துக் கொண்டிருந்தார்கள். குரங்குகளிடம் இருந்து துணிமணிகளைப் பாதுகாத்துவிட்டு மெல்ல அருவியை நோக்கி நடந்தோம். தூரத்தில் பார்க்கும் போது அமைதியாகத் தெரிந்த அருவி நெருங்கிச் சென்றால் மண்டையிலேயே அடித்தது. அவ்வளவு வேகம். அங்கிருக்கும் கைபிடிக் கம்பிகள் மட்டும் இல்லை என்றால் நம்மால் அருவியில் குளிக்கவே முடியாது. அவ்வளவு வேகமாக செண்பகாதேவி கீழிறங்கிக் கொண்டிருந்தது. மிகவும் பத்திரமாக கவனமாக குளிக்கத் தொடங்கினோம், நீர் பனிக்கட்டிகளாக எங்கள் மீது பரவிக் கொண்டிருந்தது. முதல் நாள் பேரருவியிலும், ஐந்தருவியிலும் குளித்தது திருப்தியாகவே இல்லை எனக்கு. அருவி நம்மீது ஆர்பரித்து இறங்க வேண்டும். உள்ளுக்குள் அதிர்வுகளை உண்டாக்க வேண்டும். இது சீசன் இல்லை என்பதால் எல்லா அருவிகளிலும் நீர் வெண்ணையாக வடிந்து கொண்டிருந்தது. நல்லவேளை செண்பகாதேவி மட்டும் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொண்டிருந்தாள். அற்புதமான குளியல். பின் கொஞ்ச நேரம் தடாகத்திலும் குளித்துவிட்டு கரை ஏறினோம். 

செண்பகாதேவி அம்மன் கோவிலில் அப்போதுதான் பௌர்ணமி பூஜை முடிந்திருந்ததால் இனிப்பு அப்பம்/அதிரசம் கொடுத்தார்கள். குளியலுக்குப் பின்னான பசியை அது மேலும் கிளறிவிட்டது. கிட்டத்தட்ட எழுபது வருடங்களாக செண்பகாதேவியை மிக அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கும் அந்த பாட்டியை சந்திப்போம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. 
- தொடரும் 

ஐ - இம்ப்ரெஸ்ட்

வலைப்பூவில் எழுத ஆரம்பித்த புதிதில் குழந்தைத்தனமானதாக, ஏதோ தேசியக் கடமையை ஆற்றுவது போல் சினிமா விமர்சனமாக எழுதிக் கொண்டிருந்தேன். தற்போது சினிமா விமர்சனங்கள் எழுதுவது இல்லை என்றாலும் அந்தக் குழந்தையை தட்டி எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். 


2013, 2014-களில் தமிழ் சினிமாவை புரட்டிப் போடப்போகிற என்று விளம்பரம் செய்யப்பட்டு வெளியான படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்த்து, பார்த்த பீதி தெளியும் முன், தமிழ் சினிமாவை புரட்டிப் போடப்போகிற வேறொரு படம் வந்து நொந்து, இப்படி முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருந்ததால், ஐ-க்கு இந்த FDFS என்று சொல்கிறார்களே அந்தக் காட்சிக்குப் போகும் எண்ணமே என்னிடம் இல்லை. திங்கட்கிழமை மாலை சற்றும் எதிர்பார்க்காத வகையில் ' ராசா டிக்கெட் பண்ணிட்டேன் வந்து சேரு' என்று ஆவி கூறிய போதுதான் 'ஓ ஐ ரிலீஸ் ஆகுதுல்ல' என்ற நினைப்பே வந்தது. இவ்வளவு தான் ஐ மீதான எனது எதிர்பார்ப்பு. இருந்தாலும் 'எந்த தியேட்டர்' என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் 'சைதை ராஜ்'. ஏற்கனவே அங்குதான் பில்லா-2 FDFS பார்த்து சுகானுபவம் அடைந்தேன். 

'யோவ் ஏன்யா அங்க போய் டிக்கெட் புக் பண்ணின, அது மொக்கையிலயும் மொக்க தியேட்டர்' என்று அவருடைய சட்டையையும் பிடிக்க முடியாது. தானமாக வரும் மாடு பல்லோடு வந்தால் என்ன பல்செட்டோடு வந்தால் என்ன. இருந்தாலும் என்றோ எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட பழியை இதன் மூலமாக தீர்த்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டார் என்பது மட்டும் உண்மை. 

சைதை ராஜ் சென்றிருக்கிறீர்களா, இல்லை என்றால் போய் விடாதீர்கள். காரணம் நீங்களும் என்னைப் போல் கொசுவாக இருந்து உங்கள் முன் இருக்கையில் ஆஜானுபாகுவாக எவரேனும் உட்கார்ந்துத் தொலைத்தால் திரை தெரியாது, அந்த ஆசாமியின் பின்புறம் தான் தெரியும். அவ்வளவு அட்டகாசமான அரங்கம். மரக்கட்டையின் மீது உட்கார்ந்து படம் பார்த்தால் ஞானம் வரும் என்று யாரேனும் தியேட்டர் அதிபரிடம் கூறியிருக்க வேண்டும். அதனால் அவர் இன்னும் குஷனுக்கு மாறவில்லை. கட்டையில் உட்கார்ந்துதான் படம் பார்க்க வேண்டும். ஆச்சா, மிகப்பெரிய திரை தான் என்றாலும் படம் ஓடும் போதெல்லேம் யாரோ திரையில் சுண்ணாம்பைக் கோரி ஊற்றியது போலவே உணர்வீர்கள். அதற்குக் காரணம் எல்லாம் தேடக் கூடாது. மேலும் ஸ்பீக்கருக்குள் யாரோ உட்கார்ந்து கொண்டு தவில் வாசிப்பது போலவே இருக்கும், அதையும் உதாசீனபடுத்தி விடுங்கள். காரணம் இது அதுக்கும் மேல. 

சரி என் கவலை என்னோடு போகட்டும் ஐ-க்கு வருவோம். ஐ எனக்குப் பிடித்திருக்கிறது என்றே ஆரம்பிக்கிறேன். இல்லையென்றால் கடைசி வரைக்கும் இவன் என்ன சொல்லவாறான் என்பது போலவே நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்புறம் 'இவன் புடிச்சிருக்குன்னு சொன்னானா, புடிக்கலன்னு சொன்னானா' என்று தெரியாமலையே போய்விடும் வாய்ப்புகள் அதிகம்.  என்னுடைய நிலைப்பாடு இது தான் என்று தெரிந்துவிட்டால் ஏற்றுகொள்ளவோ, ற்றுகொல்லவோ வசதியாய் இருக்குமில்லையா. சோ 'ஐ' இம்ப்ரெஸ்ட். 

ஜிம் வைத்திருக்கும் இளைஞன், சிலரின் பொறாமை மற்றும் பழியுணர்ச்சியால் சாகவும் முடியாமல், சாவும் வராமல் சாவுக்கும் மேலான மரண வேதனையை அனுபவிக்கிறான். அழகு இழந்து கொடூரம் ஆகிறான். காதலி போகிறாள், வாழ்க்கை போகிறது. வழக்கமான தமிழ் சினிமா பாணியில் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார் என்று தெரிந்து கொள்கிறான். லாஜிக் பார்க்கமால் படம் பார்ப்பது நமக்கு புதிது இல்லை என்பதால் அவர்களை பழியும் வாங்கி விடுகிறான். அவ்ளோ தான் கதை. ஆமா சங்கர் படம்ன்னு போட்டாயிங்க இதுல எங்கடா சோசியல் மெசேஜ் இருக்கு என்று மெர்சலாகிறவர்களையும், எண்ட் கார்டில் விகாரமான விக்ரம் மெர்சலாயிட்டேன் என்று வந்து நிற்கும் போது எழுந்து நின்று கைதட்டுபவர்களையும் ஒரே தராசில் வைத்தால் எனக்கு கைதட்டல் ஓசைதான் மிக அதிகமாகக் கேட்டது. இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாய் இருந்தது.

படத்தை தாங்கிப் பிடிப்பது விக்ரம் விக்ரம் விக்ரம் என்றால், அவரை அவ்வளவு வேலை வாங்கி இருப்பது சங்கர் சங்கர் சங்கர். நிச்சயம் இது சங்கர் இயக்க வேண்டிய கதை அல்ல. ஆனால் சீயானால் மட்டுமே நடிக்க முடிகிற , நடிக்கத் துணிவு இருக்கிற கதை. வேறு யாரிடமாவது சங்கர் இந்தக் கதையைக் கூறியிருந்தால் தெரித்து ஓடியிருப்பார்கள். ஓடியிருக்கக் கூடும். படத்தின் பாதி காட்சிகளில் விகாரமான முகத்தோடு பார்த்தாலே அருவருக்கக் கூடிய பாவனையில் நடிப்பதற்கே மிகபெரிய துணிவு வேண்டும். விக்ரம் வாழ்ந்திருக்கிறார். பின்னணி இசையில் ஏ.ஆர்.ஆர் மிரட்டி இருக்கிறார். அதிலும் சைனாவில் வைத்து நடைபெறும் அந்த சைக்கிள் சண்டையில் வரும் பின்னணி இசை சூப்பர். ஆனால் ஏனோ சங்கர் படத்தில் மட்டும் அடியாட்கள் புதிது புதிதாக எங்கிருந்தோ முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். 

சண்டைக் காட்சிகளின் நீளத்தையும், பாடலின் நீளத்தையும் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இப்போது நம்மாட்களால் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு எல்லாம் பொறுமையாக உட்கார முடிவதில்லை. பரபரவென்று ஏதாவது நடந்து கொண்டே இருக்க வேண்டும் என நினைகிறார்கள். எங்காவது தொய்வு ஏற்பட்டுவிட்டால் அவர்களைத் தட்டி எழுப்புவதே பெரும்பாடாய் இருக்கிறது. அதனால் படத்தின் நீளத்தில் கொஞ்சம் கத்திரி வைத்தால் சண்டைக் காட்சிகளின் போது புகைபிடிக்கச் செல்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

ஏமி ஜாக்சன், லிப் கிஸ்சடிக்கும் நேரங்களைத் தவிர வேறெங்கும் அவருடைய லிப் சிங்க்கே ஆகவில்லை. மற்றபடி கதைக்கு பொருத்தமான பாத்திரம். மாடலிங் காட்சிகளில் நன்றாக துலங்கி இருக்கிறார். டிவா விளம்பர மாடலாக வரும் இடங்களில் அவ்வளவு அழழழழகு. சேரிப் பையனில் இருந்து மிகப்பெரிய மாடலாக, ரோமியோவாக மாறும் காட்சிகளில் விக்ரம் அவ்வளவு அழகு. பிசி.ஸ்ரீராம் புழக்கத்தில் இல்லாத பிலிம் சுருள்களைக் கொண்டு படம் பிடித்ததாகக் கூறுகிறார். அதை ஒட்டி வெட்டத்தான் போஸ்ட் ப்ரோடக்சனில் பெரும்பாடு பட்டிருப்பார்கள் போலும். பிசி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை முழுமையாகக் கண்டு களிப்பதற்காக வேணும் படத்தை வேறொரு நல்ல திரையரங்கில் பார்க்க வேண்டும். 

படத்தில் குறைகளே இல்லையா என்றால், இருக்கிறது. கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். சங்கர் என்றாலே பிரம்மாண்டம், வித்தியாசம் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டதால் வழக்கமான ரிவெஞ் ஸ்டோரி என்றளவில் நின்றுவிடும் ஐ-யை பெரும்பாலானோருக்குப் பிடிக்கவில்லை. அப்புறம் மனிதர்களின் ஊனங்களை எள்ளி நடகையாடும் காட்சிகளை தவிர்த்திருக்காவிட்டாலும் குறைத்திருக்கலாம். காரணம் கதைப்படி நாயகன் வில்லன்களால் அகோரமாக்கப்படுகிறான், அதற்குப் பழிவாங்க 'அதற்கும் மேல' என்ன செய்வது என்பது தான் நாயகனின் உத்தியாய் இருக்க, சரி படம் பாருங்கள். ஆமாம் படம் பாருங்கள். இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் படம் முடியும் வரை உறுத்தலாகவே இருந்தது.

சந்தானத்தின் காமெடி சூப்பர். பவர் ஸ்டார் வரும் காட்சிகளையெல்லாம் கத்தரித்து விடலாம் என்று கூறினால் பவர் வெறியர்கள் என் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் அப்பீட். வழக்கமாகவே சங்கர் படங்களில் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதில் மிகக் குறைவான நடிகர்களை திறம்பட உபயோகபடுத்தி இருக்கிறார். மஜா பீமா ராஜபாட்டை அஞ்சான் என்றெல்லாம் கூறுகிறார்கள். படம் அந்தளவுக்கு மோசமெல்லாம் இல்லை. நிச்சயம் பார்க்கலாம். மூன்று மணி நேரப் படத்தில் சில இடங்களில் கத்தரி போட்டால் ஆங்காங்கு ஏற்படும் தொய்வு கூட இல்லாமல் போகும். 

அலுவலகத்தில் ஹரீஷிடம் படம் பிடிச்சிருக்கா என்று கேட்டதற்கு 'வழக்கமாவே சங்கர் படம் முடிஞ்சதும், முடியும் போது ஒரு சோஷியல் மெசெஜோட முடிப்பாரு, இந்தப்படத்தில அப்படி ஏதும் இல்ல. அதுனால படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தல. மத்தபடி படம் புடிச்சிருக்கு' என்றான். கிட்டத்தட்ட நான் நினைத்ததும் கூட அதையே தான். இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் படம் முடியும் வரை உறுத்தலாகவே இருந்தது. அது எனக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பிசாசு ஹேர் ஸ்டைல் நபர். நானும் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு எக்கி எக்கி பார்த்து விட்டேன். ம்ஹும் பலனில்லை. திரையின் பாதியை அவரது அடர்ந்த கூந்தல் நிறைந்த மண்டை மறைத்துக் கொண்டே இருந்தது என்பது மட்டும் தான் கடைசி வரைக்கும் உறுத்தலாகவே இருந்த விஷயம் மற்றபடி மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் ஐ - இம்ப்ரெஸ்ட்

ஆங் சொல்ல மறந்துட்டேன். சரி வேணா விடுங்க. அப்புறம் சொன்னா அதையே எல்லாரும் காப்பி பண்ணி கமெண்ட்டா போடுவீங்க. யு என்ஜாய் கைஸ்.