19 Jan 2015

சென்னை புத்தகக் கண்காட்சி 2015 - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை

சென்னை புத்தகக் கண்காட்சி, முதல் நாள் மாலை அவ்வளவாகக் கூட்டம் இல்லை. கண்காட்சிக்கான ஏற்பாடுகளும் முழுமை அடைந்திருக்கவில்லை. கண்காட்சித் திடலும் சரி, புத்தக அரங்குகளும் சரி தங்களுடைய இறுதி கட்ட பணிகளில் மும்மரமாகி இருந்தன. பெரும்பாலான கடைகளில் அப்போதுதான் புத்தகங்களையே அடுக்கிக் கொண்டிருந்தார்கள். கூட்டமே இல்லாத அரங்க வீதிகளில் நான் ஆவி சூர்யா கூடவே வெற்றிவேலும் நடந்து கொண்டிருந்தோம். இவ்வளவு விசாலமான வீதிகள் விடுமுறை தினங்களில் மனிதக் கால்களால் நிரம்பி இருக்கும். தலையை கொஞ்சம் உயர்த்தி எக்கிப் பார்த்தால் மனிதத் தலைகளைத் தவிர வேறு எதுவும் தெரியாது. 



அடுக்கபட்டிருக்கும் புத்தகங்களையும், அடுக்கப்பட இருக்கும் புத்தகங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டு இருந்தோம். தரையில் பச்சைக் கம்பளம் விரித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் மக்கள் நடக்க ஆரம்பிக்கவில்லை என்பதால் ஆங்காங்கு துருத்திக் கொண்டு நின்றது. எங்கோ பார்த்தபடி நடந்து கொண்டிருந்த குழந்தைகள் தடுக்கி விழுந்து பெரியவர்களுக்கு எச்சரிக்கைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். புத்தகக் கண்காட்சியின் முதல் புத்தமாக சுஜாதாவின் பூக்குட்டியும், வைரங்களும் வாங்கினேன். அரங்கு எண் ஒன்றிலிருந்து எழுநூறு வரை மெல்ல நடந்து கொண்டிருந்தோம். முதல்நாள் முழுவதும் நடந்து கொண்டே இருந்தோம். ஆவி பேசிக் கொண்டே இருந்தார். அவர் பேசாமல் நடந்தால் தான் ஆச்சரியம்.

இம்முறை மொத்தமாக நான்கு தினங்கள் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு நாளைப் பற்றியும் தனித்தனியாக எழுதி உங்களை அறுக்க மனமில்லை. பிழைத்துப்போங்கள். இனி மொத்தமாக ஒரு குறுக்குவெட்டுப் பார்வை. 

தொடர்ச்சியாக நான்காவது வருடமாக புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதால் முதன்முறை தெரிந்த பிரம்மாண்டமும் பிரம்மிப்பும் இப்போது இல்லை என்றாலும் ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை. மேலும் புத்தக உலகினுள் நிகழும் சஞ்சாரம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று. பார்க்கும் புத்தகங்களை எல்லாம் அடுத்த நிமிடமே படித்து முடிக்க வேண்டுமென்ற வேட்கையை ஏற்படுத்தக் கூடியது. எத்தனை எத்தனை புத்தகங்கள். எவ்வளவு எழுத்தாளர்கள். மலைப்பாய் இருக்கிறது. எவ்வளவு பெரிய வாசக உலகம் நம்மிடம் இருந்திருந்தால் இவ்வளவு எழுத்தாளார்கள் முளைத்திருக்க முடியும். ஆனாலும் எழுதப்பட்ட அத்தனை புத்தகங்களும் உருப்படியானவை, ரசவாதத்தை உண்டாக்குபவை என்றெல்லாம் கூறிவிடமுடியாது.

எழுதப்பட்டதில் முக்கால்வாசி புத்தகங்கள் சுயுதிருப்த்திக்காக எழுதபட்டவையாகத்தான் இருக்க வேண்டும். ஆர்வத்தில் ஒன்றிரண்டு புத்தகங்கள் எழுதி இருப்பார்கள். சூடுபட்டிருக்க வேண்டும். பின்பு காணாமல் போய் இருப்பார்கள். ஆனால் அவர்களையும் கடந்து ஒரு இருபத்தி சதவிகிதம் பேர் இருக்கிறார்களே அவர்கள் எல்லாருமே நாயகர்கள் தான். தமக்கென நிச்சயம் குறைந்தது ஐநூறு வாசகர்களையேனும் சம்பாத்திருப்பர்கள். (ஏழுகோடி ஜனத்தொகையில் குறைந்தது ஐநூறு என்று கூறுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.) மேலும் இவர்களில் பெரும்பான்மையான எழுத்தாளர்களிடம் தனித்துவமான எழுத்துக்கள் இல்லையென்றாலும் சோர்வடையாமல் கதை சொல்லுகின்ற தன்மையைப் பெற்றிருப்பார்கள். பல குடும்ப நாவல்களின், திரில்லர் நாவல்களின் வெற்றிக்குப் பின் இருக்கும் விசயமாக இதையே நான் கருதுகிறேன். சீரியல்களும் தொலைகாட்சிப் பெட்டிகளும் சமூக வலைதளங்களும் நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்கியபின் இந்த குடும்ப நாவல்களுக்கான வாசகர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.   

ஜனரஞ்சக எழுத்துக்களில் இருந்து மெல்ல இலக்கியம் நோக்கி நகர்ந்தால் அங்கும் நமக்கான வாசிப்பு உலகம் பரந்து விரிந்ததாகவே இருக்கிறது. இலக்கிய வாசிப்புக்கான வாசகர்களின் எண்ணிக்கை ஜனரஞ்சக வாசகர்களின் எண்ணிக்கையை விட குறைவு என்ற போதிலும் சமூக வலைதள யுகத்தில் இலக்கியம் நோக்கி நகர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிலும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாவே படுகிறது. இது நிச்சயம் நல்ல முன்னேற்றம் தான். இந்த மாற்றத்திற்குப் பின் இருக்கும் விடயத்தை ஆராய முற்பட்டால் வாசிப்பு சார்ந்த வழிகாட்டுதல்கள் நம் சமுதாயத்தில் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. இல்லை முறையான வழிகாட்டிகள் கிடைத்திருக்கவில்லை. ஆசிரியர்கள், சுற்றத்தார் செய்ய வேண்டிய பணியை தற்போது இணையம் செய்து வருகிறது. எங்கோ நடந்து கொண்டிருந்த இலக்கியக் கூட்டங்களும் திண்ணை விவாதங்களும் இன்று பேஸ்புக் குழுமங்களில் நடக்கத் தொடங்கியுள்ளன. 

இன்னும் கொஞ்சம் தீவிரமாகப் பார்த்தால் இம்முறை அத்தனை பதிப்பகங்களும் பல முக்கியமான முன்னணி இலக்கியவாதிகளின்/எழுத்தாளர்களின் படைப்புகளை செம்பதிப்பாக கொண்டு வந்துள்ளன. எனக்குத் தெரிந்து நாவல் வெளியிடுவதில் அவ்வளவாக மும்மரம் காட்டாத கிழக்கு கூட காலச்சுவடு அளவிற்கு செம்பதிப்புகளை இறக்க தயராக இருக்கிறது. வம்சி, தமிழினி, க்ரியா, சந்தியா, காலச்சுவடு என்று எங்கும் மக்களின் கூட்டத்தை காண முடிக்கிறது. தேடித்தேடி வாங்குபவர்களை விட முன்பே தயாரித்த பட்டியலின் படி கேட்டு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராஜன் என்னும் இளம் இலக்கிய வாசிப்பாளர் துணிமணிகளை அள்ளிச் செல்வது போல் புத்தகங்களை மூட்டை மூட்டையாக அள்ளிக் கொண்டிருந்தார். தற்சமயம் நான் பொறாமைப்படும் நபர்களில் இவரும் ஒருவர். என்னைப் போன்றவர்கள் நன்கு அறிமுகமான புத்தகங்களை வாங்கினால் அரசனைப் போன்றவர்கள் நின்று நிதானமாக ஒரு புத்தகத்த்தின் ஒரு பக்கத்தையேனும் வாசித்து, அந்த வாசிப்பு ஈர்ப்பை அளித்தால் வாங்கிவிடுகின்றனர். என்ன உறை போட்டு வரும் புத்தகங்களை அப்படி வாங்க முடிவதில்லை என்பதால் இழப்பு புத்தகத்திற்கு தானே தவிர வாசகனுக்கு இல்லை என்பார் அரசன்.

குழந்தை இலக்கியங்கள் பரவலான வளர்ச்சியை அடைந்துள்ளது, முன்னணிப் பதிப்பகங்கள் குழந்தை இலக்கியங்களை பதிப்பிக்கத் துவங்கியுள்ளன. ரா.நடராசன், விழியன், யூமா வாசுகியின் புத்தகங்கள் பாரதி புத்தகாலயத்திலும் எஸ்ராவின் குழந்தை இலக்கியங்கள் வம்சி உயிர்மை ஸ்டால்களிலும் கிடைகின்றன. இவற்றை கேட்டு வாங்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. என்னை கேட்டல் குழந்தைகளின் வாசிப்பை வளர்த்தாலே போதும் அவர்கள் வளர வளர வாசிப்பின் வீச்சே அவர்களை வேறு கட்டத்திற்கு கொண்டு சென்றுவிடும். குறைந்தபட்சம் 'என்ன மச்சி புக்ஸ படிச்சிட்டு இருக்க', 'நமக்கு இந்த புத்தகமெல்லாம் படிக்க வராதுப்பா' போன்றவர்களின் எண்ணிக்கையாவது குறையும். 

எம் புள்ளைக்கு தமிழ் வாசிக்க தெரியாது என்பவர்களுக்கெல்லாம் குழந்தை இலக்கியங்களை வாங்கிக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். நீங்கள் படிக்க ஆரம்பியுங்கள் குழந்தைகள் உங்களை பின்தொடர்வார்கள். எத்தனை பேருக்குத் தெரியும் ஸ்கூல்பையன் வலைப்பூவில் எழுதுவதைப் பார்த்து அவர் பையன் அவருக்குத் தெரியாமலேயே நோட்டுப் புத்தகத்தில் கதை எழுதிக் கொண்டிருப்பது, நாம் நினைக்கமலேயே சில மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய வல்லமை வாசிப்புக்கு உண்டு. அதற்காகவேனும் கொஞ்சமாவது வாசிக்க வேண்டும். அதற்கு குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சி மிகமுக்கியமானது. தமிழ்ச் சூழலில் இன்றைக்கு அது நன்றாகவே உள்ளது. இருந்தும் நான் பார்த்தவரையில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில புத்தக ஸ்டாகளுக்கே அதிகம் கூட்டிச் சென்றதையும் கவனிக்க முடிந்தது.    

இளைஞர்கள். சுஜாதா புத்தகங்களுக்கு அப்புறமாக அவர்கள் கைகளில் கிளாசிக் நாவல்கள் அதிகம் காணக் கிடைக்க்கின்றன. சும்மா சுத்திப் பார்க்க வருவோமே என்று வந்து இரண்டு மூன்று புத்தகங்களை வாங்கியவர்களை பார்த்தேன். வினோத் அண்ணா. 'போடா நீயும் உன் புக்ஸும்' என்பவர் கைகளில் ஐந்து புத்தகளைப் பார்த்தேன். வா.மணிகண்டனையும், விநாயக முருகனையும், அபிலாசையும் பல இளைஞர்கள் தேடிவந்து சந்திப்பதாகக் கூறுகிறார்கள். லக்ஷ்மி சரவணகுமாரின் உப்புநாய்களும் கானகனையும் பலரின் கைகளில் பார்த்தேன். இதுபோன்ற நிகழ்வுகளுக்காகவாவது புத்தகக் கண்காட்சிக்கு நன்றி கூறவேண்டும். வாசிப்பு அறியாதவர்களுக்கு வாசிப்பின் அதீதத்தை ஏற்படுத்தும் உந்துசக்தி இது. 

உலகத்திலேயே கேப்ஷன் தேவைப்படாத ஒரே மனிதரல்லாத ஆவி

காலச்சுவடில் கிருஷ்ண பிரபு சில இளைஞர்களுக்கு 'எந்தப் புத்தகங்களை வாங்கலாம்' என்று பாடம் நடத்தி கொண்டிருந்தார். ஓரமாய் நின்று கொஞ்சநேரம் அவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு நண்பர் இருக்கிறார். தன் பங்குக்கு எது எது நல்ல நாவல் என்று புத்தகங்களைத் தேர்வு செய்வதில் வழிகாட்டுகிறார். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகப் பணிபுரிவதாகக் கூறினார். கிழக்குப் பதிப்பகத்தில் ஒருவர் என்னிடம் சர்வே எடுக்க நான் வாங்கிய புத்தகங்களின் பெயர்களைக் கூறியதும் நீங்க ப்ளாக்கரா என்றார். 

ரஞ்சனி அம்மா எழுதி இருக்கும் மலாலா புத்தகம் கிழக்குப் பதிப்பக டாப் டென் பெஸ்ட் செல்லரில் ஒன்றாக இருக்கிறதாம். முகநூல் வாயிலாகவே அறிமுகமாகி இருக்கும் கார்த்திக் புகழேந்தியின் புத்தகங்களை பல இணைய நண்பர்கள் கேட்டு வாங்கிச் செல்வதாகக் கூறினார். கேபிள் சங்கர் யுவா அதிஷா அராத்து கருந்தேள் ராஜேஸின் புத்தகங்களின் பெஸ்ட் சேல்ஸ்க்கும் இணையம் நிச்சயம் முக்கிய காரணியே.  

ஜெயமோகனையும், சாருவையும், எஸ்ராவையும் பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இம்முறை என்னுடைய டாப் புத்தகங்களில் இவர்கள் புத்தகங்களே அடங்கும். பெருமாள் முருகன் அத்தனை சின்ன ஸ்டால்களில் இருந்து பெரிய ஸ்டால்கள் வரைக்கும் முன் வரையில் உட்கார்ந்துள்ளார். மாதொருபாகன் கிடைக்காதவர்கள் ஆலவாயனையும் அர்த்தநாரியையும் வாங்கிச் செல்கிறார்கள். முன்பு கிழக்கு செய்த பணியை தற்போது மதி செய்து வருகிறது. பா.ராகவனும் அங்கே தான் அதிகமாகக் காணக்கிடைக்கிறார்.

விகடனின் கிளாசிக் வரிசை பலரது கைகளிலும் தவழ்கிறது, மற்றபடி விகடன் அப்படியேதான் இருக்கிறது, கிழக்கு, காலச்சுவடு ஸ்டால் வடிவமைப்பு அட்டகாசம். பனுவலில் இயற்கை சார்ந்த புத்தகங்கள் அதிகம் கிடக்கின்றன. அகநாழிகைக்கு கடைசி நேரத்தில் இடம் கிடைத்ததால் சின்ன ஸ்டாலாகவே போட்டிருந்தனர். இஸ்கான், ஈசா, நித்யானந்தா, ஓஷோ அசரமால் ஸ்டால் போடுகிறார்கள். மக்களும் செல்கிறார்கள். நித்யானந்தா ஸ்டாலில் மெட்ராஸ் பவனாருக்கு கிடைத்த தீட்சை குறித்து அவர் ஒரு நாவலே எழுதினாலும் எழுதக் கூடும்.  

நான், அண்ணன், ஆவி, அரசன், சக்தி, வாத்தியார், ஸ்கூல் பையன் ,வினோத் அண்ணா என்று பெருங்கூட்டமாக சென்றிருந்தோம். ஆங்காங்கு எதிர்பட்ட நண்பர்களாக மெட்ராஸ்பவன் சிவா,கே.ஆர்.பி, கேபிள், கிங் விஸ்வா, அதிஷா பிலாசபி பிரபா, அஞ்சா சிங்கம் மற்றும் அலுவலக நண்பர்களான சோழர் , ஆர்கே போன்றோரையும் சந்திக்க முடிந்தது. இதில் தற்செயலாக சந்தித்து பெருமகிழ்ச்சியைக் கொடுத்தவர்கள் அண்ணன் விவேகானந்தனும் நண்பன் காளிமுத்துவும், வெங்கட் நாகராஜ் & குடும்பமும். கிங் விஸ்வா உடனான சந்திப்பை தனி பதிவாகவே எழுதலாம். வெங்கட் சாரிடம் புகைப்படம் எடுப்பது எப்படி வகுப்பிற்கு செல்லலாம் என்று இருக்கிறேன். எப்போதும் பபாசி நடத்தும் மாலை நேர சொற்பொழிவுகளுக்கு செல்வது வழக்கம். இம்முறை அதற்கெல்லாம் நேரமில்லை. அதுமட்டும் தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. 

வாங்க சாப்பிடலாம் ஸ்டாலில் வழக்கம் போல் விலை அதிகம், தரமும் சுவையும் குறைவு. வேறுவழியில்லாமல் சாப்பிட வருபவர்களின் தலையில் நன்றாக மிளகாய் அறைக்கிறார்கள். நம்ம ஆட்டோவின் சேவை மீட்டருக்கு மேல் பாராட்டலாம். பேருந்து நிறுத்தம் வரை சென்று இறக்கிவிட இலவச வாகன வசதி இருந்தது. முதன்முறையாக சீசன் டிக்கெட் 50ரூபாய் என்றளவில் அறிமுகபடுத்தி உள்ளனர், முதல் மூன்று நாட்கள் புத்தகத் திடலினுள் நெட்வொர்க் சொதப்பியதால் கிரெடிட் டெபிட் கார்ட் மூலம் வாங்க நினைத்தவர்கள் தெறித்து ஓடிவிட்டார்கள். மேலும் மொபைல் சிக்னல் இல்லாததால் தொலைந்து போனவர்களை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கலாகிப் போனது. 

இந்தவருட புத்தகக் கண்காட்சி என்னளவில் இனிதே முடிவுக்கு வந்தது. பபாசிக்கும் பபாசி மூலமாக சாத்தியபடுத்திய பதிப்பங்களுக்கும். ஓய்வில்லாமல் வாசிக்க வைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றிகள். பின்வரும் அந்த பத்திகளையும் கூறியே ஆக வேண்டும்.

தீபாவளிக்கு முந்தைய இரவுகளில் அம்மாவும் கார்த்தியம்மாவும் புதுத்துணி எடுத்து வந்து வீடு முழுவதும் பரப்பி வைத்து ஒவ்வொன்றாக 'இது உனக்கு' 'இது அவனுக்கு' என்று காட்டிக் கொண்டிருப்பார்கள். அரை உறக்கத்தில் இருந்து எழுதிருந்தாலும் புதுத்துணியைப் பார்த்த உற்சாகம், அது தரும் வாசத்தில் உறக்கம் தொலைந்து மனம் முழுவதும் புதுத் துணியின் வாசம் பரவியிருக்கும்.


அப்படி ஒரு மோன நிலையில் இருக்கிறேன். எனக்கு முன்னால் புத்தகக் கண்காட்சியில் இருந்து வாங்கி வந்த புத்தகங்களை பரப்பி வைத்து ஒவ்வொன்றாக எடுத்து வாசம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த வாசங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து கொண்டிருக்கிறேன். எப்படியும் இந்நிலை அடுத்த மூன்று மாதங்களுக்காவது நீடிக்கலாம். இப்போது என்னுடைய கவலையெல்லாம் எங்கிருந்து ஆரம்பிப்பதில் என்று தான். 

படங்கள் - நன்றி வெங்கட் நாகராஜ் 

8 comments:

  1. என் புள்ளைக்கு தமிழ். வாசிக்க தெரியாதுய்யா .... நான் சொல்லாமலேயே புத்தகம் வாங்கி கொடுத்தீங்க .நன்றி தம்பி.
    இந்த புத்தக காட்சியிலும் கழிப்பறை உணவு வசதின்னு சொதப்பல்னு படிச்சன் ..அத கொஞ்சம் காட்டமா கேளுங்க தம்பி ...எவ்ளோ செலவானாலும் பரவால்ல.

    வழக்கம்போல நான் தவற விடும் நிகழ்வு.வவுறு. எரியுது. அடுத்தவாட்டி இது மாதிரி பதிவுல என் பெயர் வரும் இல்ல நான் எழுதனும் ஒரு பதிவு .பார்ப்போம் .

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமான்னே... உங்களோட சேர்ந்து ஒன்னு இல்ல பல கண்காட்சிகள் சுத்தணும்.. காலமும் களமும் நமக்காக காத்துள்ளது :-)

      Delete
  2. உங்கள் "நடையில்" புத்தகக் கண்காட்சி, செல்ல முடியாதவர்கள் எல்லோர் பார்வைக்கும், நன்றாக விரிந்துள்ளது. நானும் போயிருந்தேன்...புத்தகங்கள் வாங்கவில்லைதான்...சில காட்சிகள்....எழுதுகின்றேன். - கீதா

    ReplyDelete
  3. புத்தகக் கண்காட்சி சென்ற வருடத்தைவிட இந்த வருடம் வந்தவர்கள் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்குமோ என்பது என் எண்ணம். வைஃபி இருப்பதாகச் சொன்னார்கள். ஊ..ஹூம்! என்னதான் இருக்கும் இடத்துக்கு வந்து கொடுத்தாலும், டீ, காபியின் விலை 12 ரூபாய் என்பது ப.கொ!

    ReplyDelete
  4. கண் முன் கண்காட்சியே தெரிந்தது

    ReplyDelete
  5. முழு மன நிறைவை தந்த எழுத்து இது தலைவரே. முன்பெல்லாம் தங்களின் எழுத்தை வாசிக்கையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் பீலிங் இருக்கும் ஆனா என்னன்னு தெரியாது, இதை வாசிக்கையில் நிறைவான பீலிங் வருகிறது எனக்கு ....

    ReplyDelete
  6. ஜில்மோர் இணைப்புகளை தந்ததற்கு நன்றி சீனு.

    ReplyDelete
  7. போகமுடியாத நிலையை போக்கிவிட்டது உங்களின் பகிர்வு.

    ReplyDelete