வலைப்பூவில் எழுத ஆரம்பித்த புதிதில் குழந்தைத்தனமானதாக, ஏதோ தேசியக் கடமையை ஆற்றுவது போல் சினிமா விமர்சனமாக எழுதிக் கொண்டிருந்தேன். தற்போது சினிமா விமர்சனங்கள் எழுதுவது இல்லை என்றாலும் அந்தக் குழந்தையை தட்டி எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
2013, 2014-களில் தமிழ் சினிமாவை புரட்டிப் போடப்போகிற என்று விளம்பரம் செய்யப்பட்டு வெளியான படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்த்து, பார்த்த பீதி தெளியும் முன், தமிழ் சினிமாவை புரட்டிப் போடப்போகிற வேறொரு படம் வந்து நொந்து, இப்படி முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருந்ததால், ஐ-க்கு இந்த FDFS என்று சொல்கிறார்களே அந்தக் காட்சிக்குப் போகும் எண்ணமே என்னிடம் இல்லை. திங்கட்கிழமை மாலை சற்றும் எதிர்பார்க்காத வகையில் ' ராசா டிக்கெட் பண்ணிட்டேன் வந்து சேரு' என்று ஆவி கூறிய போதுதான் 'ஓ ஐ ரிலீஸ் ஆகுதுல்ல' என்ற நினைப்பே வந்தது. இவ்வளவு தான் ஐ மீதான எனது எதிர்பார்ப்பு. இருந்தாலும் 'எந்த தியேட்டர்' என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் 'சைதை ராஜ்'. ஏற்கனவே அங்குதான் பில்லா-2 FDFS பார்த்து சுகானுபவம் அடைந்தேன்.
'யோவ் ஏன்யா அங்க போய் டிக்கெட் புக் பண்ணின, அது மொக்கையிலயும் மொக்க தியேட்டர்' என்று அவருடைய சட்டையையும் பிடிக்க முடியாது. தானமாக வரும் மாடு பல்லோடு வந்தால் என்ன பல்செட்டோடு வந்தால் என்ன. இருந்தாலும் என்றோ எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட பழியை இதன் மூலமாக தீர்த்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டார் என்பது மட்டும் உண்மை.
சைதை ராஜ் சென்றிருக்கிறீர்களா, இல்லை என்றால் போய் விடாதீர்கள். காரணம் நீங்களும் என்னைப் போல் கொசுவாக இருந்து உங்கள் முன் இருக்கையில் ஆஜானுபாகுவாக எவரேனும் உட்கார்ந்துத் தொலைத்தால் திரை தெரியாது, அந்த ஆசாமியின் பின்புறம் தான் தெரியும். அவ்வளவு அட்டகாசமான அரங்கம். மரக்கட்டையின் மீது உட்கார்ந்து படம் பார்த்தால் ஞானம் வரும் என்று யாரேனும் தியேட்டர் அதிபரிடம் கூறியிருக்க வேண்டும். அதனால் அவர் இன்னும் குஷனுக்கு மாறவில்லை. கட்டையில் உட்கார்ந்துதான் படம் பார்க்க வேண்டும். ஆச்சா, மிகப்பெரிய திரை தான் என்றாலும் படம் ஓடும் போதெல்லேம் யாரோ திரையில் சுண்ணாம்பைக் கோரி ஊற்றியது போலவே உணர்வீர்கள். அதற்குக் காரணம் எல்லாம் தேடக் கூடாது. மேலும் ஸ்பீக்கருக்குள் யாரோ உட்கார்ந்து கொண்டு தவில் வாசிப்பது போலவே இருக்கும், அதையும் உதாசீனபடுத்தி விடுங்கள். காரணம் இது அதுக்கும் மேல.
சரி என் கவலை என்னோடு போகட்டும் ஐ-க்கு வருவோம். ஐ எனக்குப் பிடித்திருக்கிறது என்றே ஆரம்பிக்கிறேன். இல்லையென்றால் கடைசி வரைக்கும் இவன் என்ன சொல்லவாறான் என்பது போலவே நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்புறம் 'இவன் புடிச்சிருக்குன்னு சொன்னானா, புடிக்கலன்னு சொன்னானா' என்று தெரியாமலையே போய்விடும் வாய்ப்புகள் அதிகம். என்னுடைய நிலைப்பாடு இது தான் என்று தெரிந்துவிட்டால் ஏற்றுகொள்ளவோ, ஏற்றுகொல்லவோ வசதியாய் இருக்குமில்லையா. சோ 'ஐ' இம்ப்ரெஸ்ட்.
ஜிம் வைத்திருக்கும் இளைஞன், சிலரின் பொறாமை மற்றும் பழியுணர்ச்சியால் சாகவும் முடியாமல், சாவும் வராமல் சாவுக்கும் மேலான மரண வேதனையை அனுபவிக்கிறான். அழகு இழந்து கொடூரம் ஆகிறான். காதலி போகிறாள், வாழ்க்கை போகிறது. வழக்கமான தமிழ் சினிமா பாணியில் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார் என்று தெரிந்து கொள்கிறான். லாஜிக் பார்க்கமால் படம் பார்ப்பது நமக்கு புதிது இல்லை என்பதால் அவர்களை பழியும் வாங்கி விடுகிறான். அவ்ளோ தான் கதை. ஆமா சங்கர் படம்ன்னு போட்டாயிங்க இதுல எங்கடா சோசியல் மெசேஜ் இருக்கு என்று மெர்சலாகிறவர்களையும், எண்ட் கார்டில் விகாரமான விக்ரம் மெர்சலாயிட்டேன் என்று வந்து நிற்கும் போது எழுந்து நின்று கைதட்டுபவர்களையும் ஒரே தராசில் வைத்தால் எனக்கு கைதட்டல் ஓசைதான் மிக அதிகமாகக் கேட்டது. இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாய் இருந்தது.
படத்தை தாங்கிப் பிடிப்பது விக்ரம் விக்ரம் விக்ரம் என்றால், அவரை அவ்வளவு வேலை வாங்கி இருப்பது சங்கர் சங்கர் சங்கர். நிச்சயம் இது சங்கர் இயக்க வேண்டிய கதை அல்ல. ஆனால் சீயானால் மட்டுமே நடிக்க முடிகிற , நடிக்கத் துணிவு இருக்கிற கதை. வேறு யாரிடமாவது சங்கர் இந்தக் கதையைக் கூறியிருந்தால் தெரித்து ஓடியிருப்பார்கள். ஓடியிருக்கக் கூடும். படத்தின் பாதி காட்சிகளில் விகாரமான முகத்தோடு பார்த்தாலே அருவருக்கக் கூடிய பாவனையில் நடிப்பதற்கே மிகபெரிய துணிவு வேண்டும். விக்ரம் வாழ்ந்திருக்கிறார். பின்னணி இசையில் ஏ.ஆர்.ஆர் மிரட்டி இருக்கிறார். அதிலும் சைனாவில் வைத்து நடைபெறும் அந்த சைக்கிள் சண்டையில் வரும் பின்னணி இசை சூப்பர். ஆனால் ஏனோ சங்கர் படத்தில் மட்டும் அடியாட்கள் புதிது புதிதாக எங்கிருந்தோ முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
சண்டைக் காட்சிகளின் நீளத்தையும், பாடலின் நீளத்தையும் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இப்போது நம்மாட்களால் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு எல்லாம் பொறுமையாக உட்கார முடிவதில்லை. பரபரவென்று ஏதாவது நடந்து கொண்டே இருக்க வேண்டும் என நினைகிறார்கள். எங்காவது தொய்வு ஏற்பட்டுவிட்டால் அவர்களைத் தட்டி எழுப்புவதே பெரும்பாடாய் இருக்கிறது. அதனால் படத்தின் நீளத்தில் கொஞ்சம் கத்திரி வைத்தால் சண்டைக் காட்சிகளின் போது புகைபிடிக்கச் செல்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
ஏமி ஜாக்சன், லிப் கிஸ்சடிக்கும் நேரங்களைத் தவிர வேறெங்கும் அவருடைய லிப் சிங்க்கே ஆகவில்லை. மற்றபடி கதைக்கு பொருத்தமான பாத்திரம். மாடலிங் காட்சிகளில் நன்றாக துலங்கி இருக்கிறார். டிவா விளம்பர மாடலாக வரும் இடங்களில் அவ்வளவு அழழழழகு. சேரிப் பையனில் இருந்து மிகப்பெரிய மாடலாக, ரோமியோவாக மாறும் காட்சிகளில் விக்ரம் அவ்வளவு அழகு. பிசி.ஸ்ரீராம் புழக்கத்தில் இல்லாத பிலிம் சுருள்களைக் கொண்டு படம் பிடித்ததாகக் கூறுகிறார். அதை ஒட்டி வெட்டத்தான் போஸ்ட் ப்ரோடக்சனில் பெரும்பாடு பட்டிருப்பார்கள் போலும். பிசி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை முழுமையாகக் கண்டு களிப்பதற்காக வேணும் படத்தை வேறொரு நல்ல திரையரங்கில் பார்க்க வேண்டும்.
படத்தில் குறைகளே இல்லையா என்றால், இருக்கிறது. கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். சங்கர் என்றாலே பிரம்மாண்டம், வித்தியாசம் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டதால் வழக்கமான ரிவெஞ் ஸ்டோரி என்றளவில் நின்றுவிடும் ஐ-யை பெரும்பாலானோருக்குப் பிடிக்கவில்லை. அப்புறம் மனிதர்களின் ஊனங்களை எள்ளி நடகையாடும் காட்சிகளை தவிர்த்திருக்காவிட்டாலும் குறைத்திருக்கலாம். காரணம் கதைப்படி நாயகன் வில்லன்களால் அகோரமாக்கப்படுகிறான், அதற்குப் பழிவாங்க 'அதற்கும் மேல' என்ன செய்வது என்பது தான் நாயகனின் உத்தியாய் இருக்க, சரி படம் பாருங்கள். ஆமாம் படம் பாருங்கள். இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் படம் முடியும் வரை உறுத்தலாகவே இருந்தது.
சந்தானத்தின் காமெடி சூப்பர். பவர் ஸ்டார் வரும் காட்சிகளையெல்லாம் கத்தரித்து விடலாம் என்று கூறினால் பவர் வெறியர்கள் என் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் அப்பீட். வழக்கமாகவே சங்கர் படங்களில் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதில் மிகக் குறைவான நடிகர்களை திறம்பட உபயோகபடுத்தி இருக்கிறார். மஜா பீமா ராஜபாட்டை அஞ்சான் என்றெல்லாம் கூறுகிறார்கள். படம் அந்தளவுக்கு மோசமெல்லாம் இல்லை. நிச்சயம் பார்க்கலாம். மூன்று மணி நேரப் படத்தில் சில இடங்களில் கத்தரி போட்டால் ஆங்காங்கு ஏற்படும் தொய்வு கூட இல்லாமல் போகும்.
அலுவலகத்தில் ஹரீஷிடம் படம் பிடிச்சிருக்கா என்று கேட்டதற்கு 'வழக்கமாவே சங்கர் படம் முடிஞ்சதும், முடியும் போது ஒரு சோஷியல் மெசெஜோட முடிப்பாரு, இந்தப்படத்தில அப்படி ஏதும் இல்ல. அதுனால படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தல. மத்தபடி படம் புடிச்சிருக்கு' என்றான். கிட்டத்தட்ட நான் நினைத்ததும் கூட அதையே தான். இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் படம் முடியும் வரை உறுத்தலாகவே இருந்தது. அது எனக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பிசாசு ஹேர் ஸ்டைல் நபர். நானும் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு எக்கி எக்கி பார்த்து விட்டேன். ம்ஹும் பலனில்லை. திரையின் பாதியை அவரது அடர்ந்த கூந்தல் நிறைந்த மண்டை மறைத்துக் கொண்டே இருந்தது என்பது மட்டும் தான் கடைசி வரைக்கும் உறுத்தலாகவே இருந்த விஷயம் மற்றபடி மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் ஐ - இம்ப்ரெஸ்ட்.
ஆங் சொல்ல மறந்துட்டேன். சரி வேணா விடுங்க. அப்புறம் சொன்னா அதையே எல்லாரும் காப்பி பண்ணி கமெண்ட்டா போடுவீங்க. யு என்ஜாய் கைஸ்.
Tweet |
படம் இன்னும் பார்க்கவில்லை ஆதலால் கருத்துக்களை முன்வைக்கமுடியவில்லை.தவறுக்கு வருந்துகிறேன்.ஆங் :p
ReplyDeleteம்ம்ம்.....!
ReplyDeleteதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
//ஐ - இம்ப்ரெஸ்ட். //
ReplyDeleteசூப்பர் சீனு. சங்கரிடம் அதிகபட்ச எதிர்பாப்பு வைத்திருப்பதால் ஏமாற்றம் அளிப்பதாக உணர்கிறார்கள்
இது நான் படிக்கும் பத்தாவது விமர்சனம்
இன்னும் பத்து விமர்சனங்கள் படித்து விட்டு லிங்கா படத்திற்கு பார்க்காமலே விமர்சனம் எழுதியது போல ஐ க்கும் எழுதலாம் என உத்தேசித்திருக்கிறேன்
இப்பொழுது தான் சிவாவின் விமர்சனம் படித்தேன். இரண்டு மாறுபட்ட விமர்சனங்கள்!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அதற்குள் பார்த்தாச்சா...? குழந்தையை அடிக்கடி தட்டு எழுப்புங்கள்...
ReplyDeleteஎனது பார்வையில் விரைவில் I !
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணே ! தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் , உறவினர்கள்ள , நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் ணா
ReplyDeleteஇனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்....
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteசுவாரஸ்யமான விமர்சனம். எமியின் லிப் சிங்க் பற்றி விவரித்த விதம் பிரமாதம். ஐ எம் சீயிங் ஆன் சன்டே .. வாழ்த்துக்கள்..
ReplyDelete***ஆங் சொல்ல மறந்துட்டேன். சரி வேணா விடுங்க. அப்புறம் சொன்னா அதையே எல்லாரும் காப்பி பண்ணி கமெண்ட்டா போடுவீங்க. யு என்ஜாய் கைஸ். **
ReplyDeleteஏன் இதையும் காப்பி பண்ணி காமெண்ட் போட மாட்டோமா என்ன?
அதென்ன ஆங்கிலம் எழுதும்போதும் உங்க தமிழ்ப் பற்றை காட்டுறீங்களா?
"You enjoy guys" would have been better! Try that next time! :-)
ஓ!! ஐ ஃபர்காட், யூ ஆர் எ சுஜாதா ஃபேன்!! தட்ஸ் வை!! :)))
துளசி : பார்த்துட்டேன் பிடித்திருந்தது. குறைகள் இருந்தாலும். நீங்கள் சொல்லியிருப்பது போல்....நல்ல விமர்சனம்....இங்கு பாலக்காட்டில், சின்ன ஊரில் ஒரு படம் ஒரு வாரம் ஓடுவது என்றாலே அதுவும் ஃபுல்லாக ஓடுவது என்றாலே பெரிய விஷயம். இந்தப் படம் நல்லா ஓடுது...இன்னும்...
ReplyDeleteகீதா: உங்கள் முன் இருக்கையில் ஆஜானுபாகுவாக எவரேனும் உட்கார்ந்துத் தொலைத்தால் திரை தெரியாது, அந்த ஆசாமியின் பின்புறம் தான் தெரியும். // ஹஹஹ்ஹ உங்க லிஸ்ட்ல என்னையும் சேர்த்துக்கங்க சீனு...நீங்க கொசு என்றால் நான் மாம்பழக் கொசு அப்படின்னா பார்த்துக்கங்க...எந்த தியேட்டர் போனாலும் இந்தக் கஷ்டம்...இருக்கைகள் படிப்படியாக உயர்ந்து நல்ல உயரத்தில் இருந்தால் மட்டுமே...இல்லைனா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டம். படம் பார்க்கலை....ஆனா உங்க விமர்சனம் நேர் விமர்சனமாக இருக்கு நிறைய எதிர் விமர்சனம்...எழுத்து .ஊடகங்கள் உட்பட..