19 Mar 2018

பார்பியும் சில புனைவுகளும்

கதை சொல்வதில் பல வழிமுறைகள் உள்ளன. கதையானது கதைசொல்லியின் விருப்பத்திற்கேற்ப ஆரம்பித்து வளர்ந்து பின் முடிவை நோக்கிச் செல்பவையாக அமையும். இந்த வளர்ச்சிப் பரிமாற்றம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். ஒரு படைப்பு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும் ஒரு கதையின் கட்டமைப்பில் சில முக்கியக்கூறுகள் இருக்கின்றன. கதைக்களம், கதை மாந்தர்கள், கதை வளரும் போக்கு என. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது கதையின் தேவை, கரு அல்லது மையம். கருவானது பெரும்பாலும் கதைக்களத்தினுள் அடங்கிவிடும் என்றபோதிலும் கதையின் களம் எப்போதும் ஒரே தளத்தில் நிகழ வேண்டும் என்ற அவசியமில்லை. வேறு வேறு களங்கள் ஒரு புள்ளியில் இணையலாம் அல்லது ஒரு புள்ளி வெவ்வேறு தளங்களாக விரியலாம்.

ஆழி சூழ் உலகு ஒரே களத்தில் நிகழும் வெவ்வேறு மனிதர்களைப் பற்றிக் கூறும் கதை. காடு (நீலி) , சாய்வு நாற்காலி போன்ற நாவல்கள் வரலாற்றுப் புனைவுகளின் வழி சென்று அதன் தேவையை நிகழ் கதைக்குள் இணைப்பவை. பூனைக்கதை இருவேறு களங்களை ஒரு மெல்லிய இழையின் மூலம் கோர்ப்பவை. இதைக்கூறுவதன் காரணம் மேற்சொன்ன எதுவுமே கதையின் தேவையை அதன் காரணத்தை எவ்வகையிலும் குலைக்காது குறைக்காது என்பதை மேற்கோள்காட்டவே. 

பார்பி புனைவு நிகழ்த்திய கேள்விகளின் வழியே நாவலின் தன்மையை அதன் கட்டமைப்பைப் புரிந்துகொள்ள எனக்குள் சில கேள்விகளை எழுப்பினேன். கதைசொல்லி எப்போதுமே தனக்கான கட்டற்ற சுதந்திரத்தை எடுத்துக்கொள்பவன். அந்த சுதந்திரம் எல்லைக்கு அப்பாற்பட்டது. விதிமுறைகள் அற்றது என்ற போதிலும் படைப்பானது கண்ணுக்குத் தெரியாத மெல்லிய இழையால் கோர்க்கப்பட்டிருக்கும். அந்த இழையை லாவகமாக வடம் பிடிக்க வேண்டியது படைப்பாளியின் பொறுப்பு. அந்த இழை கட்டற்று அலையும் போது சில பிரச்சனைகள் வரலாம். தவிர்க்கவும் செய்யலாம். பிரச்சனைகளைத் தவிர்த்தல் என்பதும் கட்டுமீறல் என்பதும் படைப்பாளியின் திறமை சார்ந்தது. தனித்துவமான படைப்பை மீட்டிக்கொடுப்பது.   



பார்பி நாவல் ஹாக்கி விளையாட்டு வீரனை மையமாகக் கொண்டு அவனது அனுபவங்களின் வாயிலாக, அவனுடைய பின்னணியாக இருக்கும் சமுக சாதிய அரசியல் மற்றும் விளையாட்டு அரசியல் வழியாக அவன் அடையும் இழப்புகளையும் முன்னேற்றங்களையும் பற்றிப் பேசுகிறது. கூடவே பார்பி குறித்தும்.

சரவணன் சந்திரனின் பலமே அவருடைய அலுக்காமல் சலிக்காமல் கதை சொல்லும் குணம். அவருடைய பலவீனமும் அதுதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. எங்கே எந்தக் கதை வர வேண்டும் என்று முடிவு செய்வதை விட எது வரக்கூடாது என முடிவெடுப்பது அவசியம். அப்படியில்லை என்றால் கூற வந்ததை விட்டுவிட்டு கதை எனகென்ன என வேறெங்கோ போய்க்கொண்டிருக்கும். பார்பி சிக்கித் தவிப்பது கூட இப்படி ஒரு சூழலில் தான். 

இதுவரை யாரும் பேசாத அல்லது யாராலும் பெரிதாக கவனிக்கபடாத ஹாக்கி உலகத்தையும் அது சார்ந்த அரசியலையும் அந்த அரசியலையும் மீறிய சாதியப் பிரச்சனைகளையும் களமாக எடுத்துவிட்டு கதை எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதில் தெளிவில்லாமல் போனது வருத்தத்திற்குரியது. கதைக்கான ஆரம்பம் மிகக் கச்சிதமாகவே நிகழ்ந்திருக்கிறது. ஆனால் கதையினுள் பார்பி நுழையும் தருணத்தில் இருந்து கதையும் வேறெங்கோ நழுவிப்போகத் தொடங்குகிறது.   

ரோலக்ஸ் வாட்ச்சில் கவனித்த ஒரு விஷயம், சரவணன் சந்திரன் யாரையேனும் குறிப்பிட வேண்டுமென்றால் அந்தத் தம்பி, ஒரு தம்பி, அந்த அண்ணன், அந்தத் தம்பியின் அண்ணனின் இன்னோர் தம்பி என்றெல்லாம் எழுதுவார். அந்தத் தம்பி யார்? அந்தத் தம்பியின் பெயர் என்ன? தம்பி எப்படி இருப்பார் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாததாகி இருக்கும். இப்படி எழுதிவதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் அந்தத் தம்பியின் கதாப்பாத்திரத்தை நம்மால் தகவல் ரீதியாக கடந்து போக இயலுமே தவிர உணர்வு ரீதியாக ஒன்ற முடியாது. ஒன்றிரண்டு தம்பிகள் தகவல் ரீதியாக வந்தால் பரவாயில்லை வரும் அத்தனைத் தம்பிகளும் தகவலாகவே வந்தால் உணர்வுப் பிணைப்பு நிகழ்வது எங்கே? அதே பிரச்சனை தான் பார்பியிலும். செல்லம்மா மதினியைத் தவிர அனைவருமே அந்த மதினியாகவும், அந்தத் தம்பியாகவும், அந்த அண்ணனாகவும் வந்து போகிறார்கள். இப்படியான கதாப்பாத்திரங்கள் உள்நுழையும் போதெல்லாம் கதை தனக்கான பாதையில் இருந்து விலகி தகவல்களாக சம்பவங்களாக உருமாற்றம் கொள்கிறது. சில சமயங்களில் 'ஏன் இதையெல்லாம் கூறுகிறார்' என்ற எண்ணம் வருகிறது.  

பார்பி நாவல் முழுக்கவே ஒருவகையான புலம்பலின் கீதம் வெளிப்படுகிறது. இழந்தவைகளைப் பற்றியும் இழக்க இருப்பவற்றைப் பற்றியும். சில இடங்களில் இவை தன்மீதான கழிவிரக்கத்தின் மூலமும் வெளிப்படும். கதையின் நாயகன் எந்த ஒரு பணியிலுமே உச்சம் தொடாதவன். உச்சம் தொடும் வாய்ப்பு இருந்தும் அதனை துச்சமாக மதித்து ஆற்றில் இருக்கும் காலை எடுத்து சேற்றில் வைத்து போய்க்கொண்டே இருப்பான். கிட்டத்தட்ட இந்நாவல் சரவணன் சந்திரனின் பயோபிக் உணர்வை அளிப்பதால் மேற்சொன்ன வரிகளை இவரோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதில் தடையேதுமில்லை. காரணம் நாவல் எங்குமே உச்சமடையவில்லை. முழுமை பெறவில்லை பார்பியின் கதாநாயகனைப் போல. 

கதை சிவகாசி விருதுநகரில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே நெல்லைக்குத் தாவும் அங்கிருந்து சென்னைக்கு சென்னையில் இருந்து எங்கு தாவி இப்போது எங்கு நிகழ்கிறது என்றத் தெளிவின்மையின் மூலம் நாவல் பல இடங்களில் கட்டுப்பாடில்லாமல் அலைகிறது. இதற்குக் காரணம் நாவல் முழுக்கவே கதைகளும் சம்பவங்களும், சம்பவங்களும் கதைகளுமாக மாறிமாறி எழுதப்பட்டிருப்பதுவே.

அட நம்மூர்ல இவ்ளோ தீவிரமா ஹாக்கி விளையாடுவாங்களா என்று தென்மாவட்டங்களை வியப்பாகப் பார்க்கவைக்கும் அழுத்தப்பூர்வமான காட்சிகள் எங்குமே இல்லை. 

"பல்பீந்தர் சிங் ரைட் எக்ஸ் பொசிஷன். நான் ரைட் இன்னர். இரண்டு பொசிஷன்களும் புருஷன் பொண்டாட்டி மாதிரி இருக்க வேண்டும் ஹாக்கியில். ஒருத்தன் மூஞ்சியைத் தூக்கினாலும் அந்த கெமிஸ்ட்ரி கோல் ஆகவே ஆகாது." நாவலின் ஆரம்பித்தில் வரும் இதைப்போன்ற டீடெயிலிங், ஆங்காங்கு தென்படும் ஒற்றைவரிகளோடு முடிந்து போவது பெருஞ்சோகம். தகவல்களைச் சொல்வதில் வெளிப்படும் ஆர்வம் டீடெயிலிங்கில் இருந்திருந்தால் நாவல் நிச்சயமாக வேறொரு தளத்திற்கு சென்றிருக்கும். 

நாவலின் பிற்பாதி ஓரளவுக்கு நன்றாக வந்திருக்கிறது. இழப்பின் மூலமும் வஞ்சிக்கப்படுதலின் மூலமும் நாட்களைக் கடத்தும் ஒருவனின் காமத்தை, அவனை அடுத்தபடி நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய விளையாட்டின் மீதான தீவிரத்தைப் பற்றிக் கூறும் பிற்பகுதிகள் ஓரளவிற்கு மூச்சுவிட வைக்கின்றன. இருந்தும் அந்த இறுதிப் போட்டியை இன்னமும் பரபரப்பாக விவரித்திருக்கலாம் என்ற ஏக்கம் இல்லாமல் இல்லை. 

பொதுவாகவே ஒரு புத்தகத்தைப் படித்துமுடித்த பின்னரே முன்னுரையையும் பிற உரைகளையும் படிப்பது என் வழக்கம். முன்னுரையில் ஜெயமோகன் உங்களிடம் கூறியதாக ஒன்றை எழுதி இருக்கிறீர்கள் சரவணன். அது "எழுதுவதற்கு பொறுமை தேவையில்லை. திருத்துவதற்குதான் பொறுமை தேவை." என்பது எத்தனை சரி என்பதை ஒருமுறை பொறுமையாக பார்பியைப் படித்துப் பாருங்கள் புரியும். 
   
   
நன்றி
நாடோடி சீனு

10 Mar 2018

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்

இந்த புத்தகத்தின் சில சிறுகதைகளை வாசிக்கும் வரையிலும் இதுதான் எனக்கும் போகன் சங்கருக்குமான முதல் பந்தம் என்ற நினைப்பிருந்தது. அப்படியெல்லாம் இல்லை சில சிறுகதைகளை விகடனிலோ வேறெங்கோ வாசித்த ஞாபகம் இருக்கிறதென உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. நடிகன் மற்றும் யாமினி அம்மா. இந்த இரண்டு சிறுகதைகளையும் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அதிலும் நடிகன் கதையை வாசித்த சில நாட்களுக்கு பாலவிளை கணேசன் நினைப்பாகவே இருந்தது. ஏதோ ஓர் இனம்புரியா பாதிப்பை அல்லது அச்சத்தை ஏற்படுத்திய கதை எனலாம். மிக சரளமான கதைசொல்லி போகன் என்பதையும் தாண்டி அந்தக்கதை ஏற்படுத்திய பாதிப்பு ஏனோ வீரியம் மிக்கதாகத் தெரிந்தது. அதேபோன்ற ஒன்று யாமினி அம்மா கதை. கதை வாசித்த சில நாட்களுக்கு யாமினியின் நினைவு. இவ்வளவுதான் வாழ்க்கையா அல்லது இதுதான் வாழ்க்கையா என ஒரு பெரும் கேள்விக்குறியை வரையும் கதையது. 

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு கதைகள். பன்னிரெண்டுமே வாழ்வின் தீராத சோகத்தை, அந்த சோகத்தின் ஊடாகப் பாயும் காமத்தை அல்லது வலியைப் பேசும் கதைகள். இந்தநூலில் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கிறது. இப்படியெல்லாம் கதை எழுத முடியுமா என்பதைத் தாண்டி இப்படியெல்லாம் கதையை வளர்க்க முடியுமா என்று பாடம் எடுத்திருக்கிறார் போகன். கதை எங்கோ ஓர் புள்ளியில் ஆரம்பித்து அதிலிருந்து வேறெங்கோ நூல் பிடித்து நகர்ந்து பின் முடிவை அடையும் கதைகள்.

சிறுகதை என்றாலே திடீர் பகிர் திருப்பங்கள் என்றெல்லாம் இல்லாமல் சோக கீதம் கதைக்கும் ஒரு வயலின் கம்பிகளின் மென் நரம்புகளின் மீட்டலைப் போல் நம்முள் கடந்து நிறைகின்றன. கதை ஆரம்பிக்கும் தருணங்களைப் போலவே அவை வளரும் தருணங்கள் மிக முக்கியமானவை. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கையில் கையில் வைத்திருக்கும் முட்டையை பட்டென தரையில் போட்டுடைக்கும் தந்திரமல்ல இவர் கதைகள். முதல் சில பத்திகளுக்குள்ளாகவே கதையின் மையத்தை, ஒரு மாபெரும் சுமையை நம்மில் பொதித்துவைத்துவிட்டு சாவகாசமாக பின்கதை முன்கதை என்று அதன்போக்கிற்கு கதையை நகர்த்துகிறார் போகன் சங்கர்.



ஆடியில் கரைந்த மனிதன் என்ற சிறுகதையில் ஒரு வரி எழுதி இருப்பார் 'என் மனத்தில் இதுபோல நிறைய உணர்வுகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பின்றிச் சிக்கிக் கிடக்கின்றன. அல்லது விழித்திருக்கும் புத்தியின் கண்ணுக்குப் புலப்படாத எதோ ஒரு தர்க்கத்தில் அவை கோக்கப்பட்டுக் கிடக்கின்றன.' கிட்டத்தட்ட ஒட்டுமொத்த கதைகளுமே இதுபோன்ற ஒரு உணர்வுப் பெருக்கில் கோர்க்கப்பட்ட கதைகளாகவே எனக்குப் புலனாகின்றன. கொஞ்சம் இலகுவான கதை சுரமானி என்று நினைத்தால் அதிலும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தைத் தந்து முடிக்கிறார். 

ஜெயமோகனின் பாதிப்பில் உருவான கதைகள் என்று போகன் கூறியிருந்தாலும் ஜெயமோகனுக்கு சமர்ப்பித்திருந்தாலும் சில இடங்களில் வலிந்து திணித்த ஜெயமோகத்தனங்களை மட்டும் தவிர்த்திருக்கலாம். பூ, நடிகன், யாமினி அம்மா, மீட்பு, பொதி கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. விட்டால் அனைத்தையுமே கூறிவிடுவேன். தவறக்கூடாத சிறுகதைத் தொகுப்பு. 

நன்றி
நாடோடி சீனு

5 Mar 2018

மாஷா அல்லாஹ்

மாஷா அல்லாஹ் 

கென்யா தலைநகர் நைரோபியாவில் இருந்து மண்டீராவை நோக்கிக்  கிளம்பும் பேருந்தில் ஏறும் முன்பே பேருந்து நிறுத்த ஊழியரிடம் 'போலீஸ் பாதுகாப்பு உண்டா, இல்லை வழக்கம் போல் தீவிரவாதிகள் எங்களை கொன்றுவிடுவார்களா?' என விசாரித்திருந்தார் யுவா எனும் கிறஸ்தவப் பெண்மணி. 

கென்யா மற்றும் சோமாலிய எல்லையில் அல்-ஷபாப் எனும் பயங்கரவாத இயக்கத்தின் அச்சுறுத்தல் அதிகமாகி இருந்த டிசம்பர் 2015. கண்ணில் தென்படும் கிறஸ்தவர்கள் அனைவரையும் ஈவிரக்கம் இல்லாமல் கொன்று சாய்த்துக் கொண்டிருந்தது அந்த இயக்கம். கிறஸ்தவ மதமாற்றம் இஸ்லாமை அழிக்கிறது அதனால் அவர்களை நாங்கள் அழிக்கிறோம் என்கிறது இவ்வியக்கம். 

நாடு முழுக்க பலரும் மாண்டு போகிறார்கள். குழந்தைகள் பெண்கள் என யாரையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை.  

இப்படியொரு பதட்டமான சூழலுக்கு மத்தியில் யுவாவின் பயணம் நிகழ்கிறது. கிட்டத்தட்ட முப்பத்தியிரண்டு மணிநேர பேருந்துப்பயணம். அவரிடம் எஞ்சியிருப்பது உயிரும் அதன் மீதான பயமும் மட்டுமே. கண்களில் கொலைநடுக்கம். கண்ணில் தென்படும் இஸ்லாமியர்கள் அனைவரையும் விரோதியாகவேப் பார்க்கிறாள். சொல்ல முடியாத பெருஞ்சோகம் ஒன்று அவளை சூழ்ந்திருக்கிறது. பேருந்தில் ஏறி அதன் பின் பகுதியில் தனக்கென ஒரு இடம் தேடி அமர்கிறார். ஒரு கண் அவரை தீவிரமாக உற்று நோக்குகிறது. பயந்து மிரளுகிறாள். அவசர அவசரமாக தன் பையினுள் இருக்கும் சிலுவை பூட்டிய பச்சைநிற மாலையை எடுத்து தேவனின் பாதுகாப்பை நாடுகிறார். பேருந்தினுள் நுழையும் எவரையும் ஒருவித பயத்துடனேயே அணுகுகிறார். பயணம் தொடர்கிறது. அப்பேருந்தில் உடன் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் இஸ்லாமியர்கள். அந்த இரவைக் கடந்த அடுத்த நாள் காலையில் பேருந்தில் தண்ணீர் விற்கும் சிறுவனின் மீது வெறுப்பை உமிழ்கிறாள் யுவா. காரணம் அவன் மதம் இஸ்லாம். அவளின் அருகில் அமர்ந்திருக்கும் இஸ்லாமியப் பெண்ணையும் வெறுப்புடன் அணுகுகிறாள். பின்னொரு சமயத்தில் அவளிடம் பேச்சு கொடுக்கும் இஸ்லாமிய ஆசிரியர் எதனால் எங்கள் மீது இவ்வளவு வெறுப்பு நாங்கள் மனிதர்கள் தானே என்கிறார். என் மனைவிக்கு இது ஐந்தாவது பிரசவம் நான் ஊருக்கு செல்கிறேன் என்கிறார். 

நாங்களும் மனிதர்கள் தான் ஏன் எங்களைக் கொல்கிறீர்கள். போனவராம் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் என் கணவன் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். எஞ்சியிருப்பது நான் மட்டுமே என்று கூறிவிட்டு அழுகிறாள். அவள் மீதான அனைவரது பார்வையும் மாறுகிறது. ஒருவித இரக்க மனப்பான்மையோடு அவளை அணுகத் தொடங்குகிறார்கள். 

இடைநிறுத்தமாக பேருந்து நின்ற ஊரில் அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த போலீஸ் வாகனம் பழுதாகிப்போக அங்கிருந்து எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் தன் பயணத்தைத் தொடர்கிறது பேருந்து. 

பாலைவனம் போல் இருக்கும் கென்யாவின் வெம்மை அடர்ந்த பகுதியில் அல்-ஷாபாப் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் பேருந்தைச் சுற்றி வளைக்கிறார்கள். எது நிகழக்கூடாது என யுவா நினைத்தாரோ அது நிகழ இருக்கிறது. நடக்கப்போகும் அபாயம் பேருந்து முழுக்க பற்றிக்கொள்கிறது. யுவாவின் அருகில் அமர்ந்திருக்கும் பெண்மணி துரிதமாக செயல்பட்டு யுவாவின் கைகளில் இருக்கும் சிலுவை கொண்ட அந்த ஜெபமாலையைப் பிடுங்குகிறார். யுவா அதனைத் தரமறுக்க அவள் எதிர்ப்பையும் மீறி பிடுங்கி பின் யுவாவின் முகத்தில் புர்காவை அணிவித்து இஸ்லாமியத் தோற்றத்திற்கு மாற்றுகிறாள். பேருந்து மொத்தமும் பலரையும் இதுபோல் இஸ்லாமியத் தோற்றத்திற்கு மாற்றுகிறது. இவையனைத்தும் துரிதகதியில் நிகழ்கின்றன.



பேருந்தில் இருந்து அனைவரையும் இறங்கச் சொல்லும் பயங்கரவாதிகளின் தலைவன், இஸ்லாமியர்கள் தனியாகவும் கிறிஸ்தவர்கள் தனியாகவும் பிரிந்து நிற்கச்சொல்கிறான். அனைவரின் முகத்திலும் அங்கு நிகழ இருக்கும் பயங்கரவாதத்தின் கோரம் தெரிகிறது. அனைவரும் நடுங்குகிறார்கள். தப்பியோடும் ஒரு சிறுவனை சுட்டுக்கொல்கிறார்கள் பயங்கரவாதிகள். 

யாருமே எதிர்பார்க்காத வகையில் இங்குதான் அந்த அற்புதம் நிகழ்கிறது. இஸ்லாமியர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களுக்கு அரணாக மாறுகிறார்கள். 

ஓர் உண்மையான இஸ்லாமியன் என்றால் இங்கிருக்கும் கிறிஸ்துவர்களை அடையாளம் காட்டுங்கள் என்று ஆணையிடுகிறான் கூட்டத்தலைவன். 

மிகப்பெரிய இறைவன் அடுத்த உயிர்களைக் கொல்ல நமக்கு அனுமதியளிக்கவில்லை. இங்கு அனைவரும் இறைவனின் குழந்தைகள் என வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் அந்த ஆசிரியர். வாக்குவாதம் வலுத்து முற்றும் நிலையில் அனைவரையும் மொத்தமாக கொல்லப்போவதாக மிரட்டுகிறான். அதன் முதல்பலியாக ஆசிரியர் மீது குண்டு பாய்கிறது. அனைவரும் பயந்து நடுக்கும் வேளையிலும், தங்கள் உயிரே போனாலும் யாரும் யாரையும் காட்டிகொடுப்பதாயில்லை என்ற உறுதியோடு அங்கு நிற்கிறார்கள். யுவாவின் கண்களில் பயத்தையும் மீறிய ஆச்சரியம். நிகழும் அற்புதத்தின் மத்தியில் அங்கு தலைதூக்கி இருக்கும் மனிதத்தைத் எண்ணி வியக்கிறார். நல்லவேளையாக போலீஸ் வாகனம் வந்து சேர பயங்கரவாதிகள் பயணிகளை விடுத்து தப்பி ஓடுகிறார்கள். 

அனைவரும் நிம்மதிப் பெருமூச்சுவிட, அந்த இஸ்லாமியப் பெண் யுவாவின் கைகளில் அவளுடைய ஜெபமாலையை மீண்டும் கொடுப்பதைப் போல நிறைவடைகிறது அந்தக் குறும்படம். டிசம்பர் 2015, 21 அன்று கென்யாவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் சொதப்பினாலும் ஒரு ஆவணப்படம் ஆகியிருக்கக் கூடிய நிலையில் அங்கு நிகழ்ந்த சம்பவத்தை நம் கண்முன் நிகழச் செய்திருக்கிறார்கள். ஆஸ்கர் பரிந்துரையில் இருக்கும் இப்படத்தின் பெயர் watu wote - all of us

மனிதம் எத்தனை மகத்துவமானது என்பதை மிக அழகாக வெளிப்படுத்தி, இதுதான் உண்மையான இஸ்லாம் என்று கூறியிருக்கிறார்கள் அன்றைய தினத்தில் அப்பேருந்தில் பயணித்த இஸ்லாமியர்கள். அந்தப் பேருந்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் மாஷா அல்லாஹ் - இறைவனின் விருப்பம்.