26 May 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - ஒரு மலைப்பிரதேசத்து இரவு

உள்ளூர் மக்கள் எல்லோரும் உறங்கப்போய்விட வெயிலும் வெயில் சார்ந்த இடங்களில் இருந்தும் வந்தவர்களுக்காக விழித்துக் கொண்டிருத்தது அந்த இரவு.  கிட்டதட்ட சாம்பலும் கருநீலமும் கலந்த மலைப்பிரதேசத்து இரவது.



இந்தியாவை அளந்து எல்லைகள் குறிக்கும் பணி பிரிடிஷ் இந்தியக் காலத்தில் ஆரம்பமாகிய போது, நில அளவையை மதராசப்பட்டிணத்தில் இருந்தே ஆரம்பித்திருந்தனர். ஒவ்வொரு இடமாக ஆய்வு செய்து அளந்து அளந்து மெல்ல மலையேறிய லெப்டினன்ட் வார்ட் கொடைக்கானலை அடைந்ததும் வெறும் நில அளவையோடு தனது பணியை முடித்துக் கொள்ளவில்லை. 

கொடைக்கானலின் சீதோஷ்ண நிலை அவரை உசுப்பிவிட்டது, இந்த மலைபிரதேசத்துக் குளுமை மற்றும் பசுமை அவருக்கும் அவரது வெள்ளை இனத்தவருக்கும் தேவையாய் இருப்பதை உணர்ந்த அவர், உடனடியாய் தனது எண்ணத்தைப் பிரிட்டீஷார் கவனத்திற்குக் கொண்டு சென்றார். மதராசப்பட்டிண வெயிலில் கொள்ளைநோய் தாக்கிச் செத்துக்கொண்டிருந்த வெள்ளையர்களுக்கு கொடைக்கானலின் அவசியம் புரிந்தது. நொடியும் தாமதிக்காத பிரிடிஷ் அரசாங்கம் தனது பங்களாக்களை அங்கு கட்டி குடியேறிவிட்டது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஆதி மரங்களை அகற்றிவிட்டு பைன் மரங்களையும் இன்னும் பல்வேறு தாவர இனங்களையும் இறக்குமதி செய்தது. இன்றும் பல பிரிடிஷ் அரசு பங்களாக்களை கொடைக்கானலில் பார்க்கலாம். 

மேலும் கொடைக்கானலின் வரலாறு சங்க இலக்கயங்களில் இருந்தே ஆரம்பிப்பதாக கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். சங்ககாலத்தில் கோடைமலை என்று அழைக்கப்பட்ட கொடைக்கானல், கோடையின் கொடையாகி இன்று கொடைக்கானலாக மருவியுள்ளது. 

கொடைக்கானலை அடைந்திருந்த போது மணி ஐந்து. சூரியன் மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தான். ஆளை உறைய வைக்கும் குளிர் இல்லை என்றாலும் ஒரு மலைப்பிரதேசத்திற்கு உண்டான அத்தனை அறிகுறிகளும் நீக்கமற நிறைந்திருந்தன. உடனடியாக இறங்கும் சரிவுகள், தகரம்போட்ட வீடுகள், ஸ்வெட்டர் அணிந்த மக்கள், காரெட் கொறிக்கும் காதலர்கள், போட்டோ எடுக்கும் யுவயுவதிகள். சந்தேகமே இல்லை. மிக உற்சாகமாய் இருந்தது கொடைக்கானல். பசி வயிற்றைக் கிள்ள, தங்குவதாய் இருந்த ரிசாட்டிற்குக் கூடச்செல்லாமல் நேரே சென்று வயிற்றை நிரப்பினோம். மலைப்பிரதேசத்து மாலை சீக்கிரம் இருட்டத் தொடங்கிவிடும் என்பதால் 'ரிசாட்டுக்கு போறோம் அரமணி நேரம் ரெஸ்ட் எடுக்குறோம் உடனே முருகன் கோவிலுக்குக் கிளம்பறோம்'. உத்தரவு வந்தது. 

'என்னது கோவிலுக்குப் போறோமோ' அலறினான் விக்ரம். 'ஏண்டா அதுல என்ன பிரச்சன', என்றேன். 'தல நாம இன்னும் குளிக்கவே இல்ல, போறபோக்க பார்த்தா குளிச்சே ஆகணும் போலையே' என்றான். கும்பக்கரையில் இருந்து கிளம்பும் போதே முடிவு செய்ததுதான் 'ரிசாட்டுக்குப் போறோம் குளிக்கிறோம்' என்று. ஆனால் கொடைக்கானலின் குளுமை ' குளிச்சே ஆகணுமா' என்று யோசிக்கவைத்த நேரத்தில்' இருட்டுறதுக்குள்ள கோவிலுக்குப் போறோம்' என்ற உத்தரவு குளித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு எங்களை தள்ளியது. 'விடு  இவ்ளோ பெரிய ரிசாட்டா இருக்கு ஒரு ஹீட்டர் கூடவா இருக்காது. குளிக்கிறோம்'. என்றேன். விதி பின்னால் நடத்த இருக்கும் விளையாட்டை அப்போது அறிந்திருக்கவில்லை நாங்கள். 

கிரீன் ரூக்ஸ் ரிசார்ட். கொடைக்கானலில் இருந்து சுமார் பன்னிரண்டு கிமீ தொலைவில் அமைந்துள்ள சற்றே பெரிய ரிஸார்ட். மலைச்சரிவினில் கட்டப்பட்ட கட்டிடம் என்றாலும் பார்ப்பதற்கு ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் போலவே இருந்தது. ஒவ்வொன்றிலும் இரண்டு படுக்கைகள் கொண்ட இரண்டு படுக்கையறைகள். மிகப்பெரிய ஹால். இரண்டு பாத்ரூம். கிட்டத்தட்ட சிறிய வீடுபோல் இருந்தது. இவ்வளவு பெரிய ரிஸார்ட்டில் தங்குவது இதுவே முதல்முறை. கொடைக்கானலிலும் இதுதான் என் முதல் இரவு. முந்தைய வாக்கியம் கொஞ்சம் கொச்சையாக இருக்கிறதோ. பரவாயில்லை ஒரு புன்சிரிப்புடன் கடந்துவிடுங்கள். 

மாலை மங்கமங்க குளிரும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. மலைப்பிரதேசம் கொடுத்த மகிழ்ச்சியோ என்னவோ பகல் முழுவதும் இருந்த அலுப்பு குறைந்திருந்து கொஞ்சம் தெம்பு கூடியிருந்தது. பொதுவாகவே மலைப்பிரதேசங்களில் நேரம் மெதுவாக நகரும் என்று கூறுவார்கள். அது தவறு. காலத்தின் காலில் யாரோ சக்கரம் கட்டிவிட்டது போல வேகவேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. 

'பாஸ் இன்னும் குளிக்கலியா. எல்லாரும் ரெடி உங்களுக்காகத்தான் வெயிட்டிங்' என்ற குரல் கேட்டபோது பாத்ரூமினுள் இருந்து வெளிவந்தான் விக்ரம். நடுங்கிக் கொண்டிருந்தான். 'தல ஹீட்டர் வொர்க் ஆகல, தண்ணி செம ஜில்லு. பாத்து குளிங்க. ஜன்னி கிண்ணி வந்த்ராம' என்றான். 'என்ன ஹீட்டர் வொர்க் ஆகலையா' மனதினுள் இந்த வார்த்தைகள் எதிரொலிக்கத் தொடங்கியபோது லேசான பயமும் சேர்ந்து கொண்டது. பேசாம கும்பகரையிலையே குளிச்சிருக்கலாம். மெல்ல தண்ணீரைத் தொட்டுப் பார்த்தேன். தண்ணீரும் அதையே உறுதி செய்தது. மாலை ஆறு மணிக்கு கொடைக்கானலின் குளிர்ந்த நீர் தான் என்று எழுதப்பட்டபின் யாரால் மாற்ற முடியும். 

வாளியில் நிரம்பியிருந்தது தண்ணீரா கண்ணாடியா எனத்தெரியாத அளவிற்குத் தெள்ளியநீர். பிஸ்தா படத்தில் நவரச நாயகனுக்கு நக்மா கொடுத்தாளே ஒரு தண்டனை. அது இவ்வளவு கொடூரமானதா என்ன. இதற்குக் கும்பிபாகமே தேவலைபோல. தண்ணீரைத் தொடவே பயமாய் இருந்தது. எப்போதுமே முதல்முறை ஊற்றத்தான் தயங்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டேன். சாமியே சரணம் ஐயப்பா. அய்யய்யோப்பா என்னா குளிரு. நடுங்கிக்கொண்டே வெளியில் வந்தேன். 'என்ன தல செமயா' என்றான் விக்ரம். என்ன ஒரு வித்தியாசமான அனுபவம். கும்பக்கரைக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். ஒரு சாயா குடித்தால் நன்றாய் இருக்குமெனத் தோன்றியது. பக்கத்தில் ஆயாகடை இருந்ததே தவிர சாயாகடை இல்லை. சனி நீராடல் சளி நீராடலாக மாறிவிடக் கூடாது என்பதால் அந்த ஆயாவிடம் மாத்திரை ஏதும் இருக்கிறதா கேட்டேன். மெடிக்கல் ஸ்டோர் போகணும்னா நாயுடுபுரம் போகணும் என்றார். மாத்திரை வேண்டாம். 

குறிஞ்சியாண்டவர் ஆண்டியாக நின்று கொண்டிருந்தார். பழனியிலும் ஆண்டிதானே. கோவிலில் சுத்தமாகக் கூட்டமில்லை. ஏதோ பக்கத்துத்தெரு கோவில் போல இருந்தது. மிகச்சிறிய கோவில். பாலபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. ஜெகன் மெய்மறந்து மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருந்தார். முருகனைப் பார்ப்பதை விட்டுவிட்டு சிறிது நேரம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தோழரும் சசியும் நாத்திகமென்பதால் வரவில்லை. முதலில் வரமறுத்த விக்ரம் குறிஞ்சியாண்டவரிடம் ஏதோ டீல் பேசிக் கொண்டிருந்தான். நான் வந்திருக்கிறேன், என்னையும் கொஞ்சம் கவனி என்பதைக் கூறிவட்டு குறிஞ்சி மரத்தைத் தேடினேன். மரம் இல்லை செடி. சன்னதிக்கு வலப்புறம் ஒரு ஓரமாய் இருந்தது. கோவிலின் தலவரலாறு 1936-ல் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஆனால் இந்தச் செடியின் வரலாறு தெரியவில்லை. தெரிந்திருக்கும் என நினைத்து ஒருவரிடம் கேட்டேன். முறைத்தார். ரைட்டுவிடு. 2006-ம் ஆண்டில் பூத்துக்குலுங்கிய குறிஞ்சி மலர்கள் 2018-ம் ஆண்டை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இனவிருத்தி செய்துகொண்டால் போதுமென நினைத்துவிட்டது. எவ்வளவு பொறுமை. 

டீக்கடைகளைத் தேடினோம். மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்ததால் பெரும்பாலான கடைகளை அடைத்திருந்தனர். ச்சாயா எவ்வளவு மோசம் என்றாலும் குடித்துவிடலாம். ஆனால் குளம்பி அப்படியில்லை. வாந்திவரச் செய்துவிடும். 'தல better go with coffee' என்றான் விக்ரம். சற்றே சூடு குறைவான வெந்நீர் என்றாலும் தேநீரின் சுவையைக் கொடுத்தது.

கோவிலின் வலப்புறம் ஒரு view point உள்ளது. பகலில் பார்த்தால் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. இரவில் மிக ரம்மியமாய் இருந்தது. சுற்றிலும் பள்ளத்தாக்கு, இருள் சூழ்ந்த பசுமை. தூரத்தில் சமவெளி. ஆளாளுக்கு ஒரு ஊரின் பெயரைச் சொன்னார்கள். விவாதித்தார்கள். முருகனிடம் டாட்டா காட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பியது டாட்டா குடும்பம். 

பழைய உற்சாகம் என்னுள் வந்திருந்தது. இப்போது எல்லாருமே தெளிவாகத் தெரிந்தார்கள். இதுவரை பேசாது இருந்தவர்கள், நான் பேச நினைத்தும் பேசாது போனவர்கள் என ஒவ்வொருவராய் சென்று பேசத் தொடங்கினேன். ராஜேஷ். சாரு பற்றி பேசுகிறார், கருந்தேள் பற்றி பேசுகிறார். பொன்னியின் செல்வன் பற்றி சிலாகிக்கிறார். சுஜாதா ரசிகன் என்கிறார். எங்கள் புத்தகக் கூட்டணியில் மேலும் ஒருவர். இரவு உணவு க்ரீன்ரூக்சில். டின்னரின் சுவை பற்றியெல்லாம் கவலையில்லை. நல்லபசி. கிடைத்த சிக்கனையும் சப்பாத்தியையும் உள்ளே தள்ளினோம்.  

மலைப்பிரதேசத்து இரவு கும்மென்று இருந்தது. எல்லாருமே ஸ்வெட்டருக்குள் நுழைந்திருந்தார்கள். விக்ரம் உறங்கச் சென்றுவிட்டான். அவனுடன் ஒரு நைட்வாக் போகலாமென்று இருந்தேன். ஆனால் அந்த இருளைப் பார்த்தாலே மிரட்ச்சியாய் இருந்தது. வெளிச்சம் ஊடுருவமுடியா இருள் அது. சாலையோரத்தில் விளக்குகள் என்று எதுவுமே இல்லை. அந்த இருளில் சிங்கம்புலி குறித்தெல்லாம் எனக்குப் பயமில்லை.ஒருவேளை என்னைப் பார்த்துப் புலி பயந்துவிட்டால். நமக்கேன் வம்பு. campfire நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது கிரீன் ரூக்ஸ். சத்தமில்லாமல் அவர்களோடு இணைந்து கொண்டேன். புலி பிழைத்துப் போகட்டும்.

உள்ளூர் மக்கள் எல்லோரும் உறங்கப் போய்விட எங்களுக்காக விழித்துக் கொண்டிருத்தது அந்த இரவு.  கிட்டதட்ட சாம்பலும் கருநீலமும் கலந்த மலைப்பிரதேசத்து இரவதுகுவிக்கப்பட்ட மரக்கட்டைகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்க எரிய மறுத்தபோது எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தார் ஒருவர். சுற்றிலும் நாங்கள். ஊருக்கே ஏசி போட்டது போல் இருந்த அந்த இரவில் அந்தக் குளுரில் காற்றில் கலந்து வந்து முகத்தை வருடிய அந்த வெப்பம் இதமாய் இருந்தது. தேவையாய் இருந்தது.    


சாம்பல் மேகங்களுக்கு மேலே நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்க மெல்லத்தேய்ந்து கொண்டிருந்தான் சந்திரன். பென்சிலால் வரையப்பட்ட கோடுகளா உயர்ந்து வளர்ந்து நீண்டு நெளிந்து கண்ணுக்கெட்டிய தூரத்திலிருந்து எட்டா தூரம் வரை பரவிக் கிடந்தது மேற்குமலைத்தொடர். தூரத்தில் ஆங்காங்கே வெளிச்சப்புள்ளிகளாய் மனிதன் ஏற்படுத்திய கரும்புள்ளிகள் மின்சாரத்தைக் கசிய விட்டுக்கொண்டிருந்தன. குளிர் கொஞ்சம் அதிகரித்திருந்தது. முந்தையநாளின் இதேநேரத்தில் வியர்வை வழியும் சென்னையின் பரபரப்பான இரவில் பேருந்தைப் பிடிப்பதற்காக ஓடிக் கொண்டிருந்தபோது இருந்த மனநிலைக்கும், இந்த மலைப்பிரதேசத்து இரவின் குளுமையில் நனைந்து கொண்டிருக்கும் தற்போதைய மனநிலைக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை, சம்மந்தப்பட்டவன் நான் என்பதைத்தவிர. 

ஒருவரை ஒருவர் பற்றிய முறையான அறிமுகம் இங்குதான் நடந்தது. கொஞ்சம் தாமதம் என்றாலும் தாமதமில்லை. அறிமுகம் செய்துகொண்டோம். ஆடினார்கள். பாடினோம்.சந்தோசமான இரண்டு மணி நேரங்கள். தூக்கம் கண்ணைச் சுழற்றியது. இரண்டு நாள் அலுப்பு. அவசரத்தேவை ஒரு தூக்கம். மெத்தையில் வந்து விழுந்தேன். ப்பா எவ்வளவு மிருதுவான மெத்தை. சுஜாதாவின் சொர்கத்தீவு படித்துள்ளீர்களா? கடத்தப்பட்ட நாயகன் அய்ங்காரை ஆடம்பரமான அறையில் அடைத்து வைத்திருப்பார்கள். களைத்துப்போன அய்ங்கார் மெல்ல அந்தக்கட்டிலின் மெத்தையைத் தொடுவான். தொட்ட அடுத்தநொடி, அந்த மெத்தை எவ்வளவு மிருதுவானது என்பதற்கு ஒரு உவமையும் கொடுப்பான். கிட்டத்தட்ட இந்த மெத்தைக்கும் அந்த உவமை சாலப்பொருத்தம். (அது என்ன உவமை என்பதை நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்). மெல்ல என்னை அரவணைத்தது  அந்த பஞ்சு மெத்தை. அருகில் விக்ரம் என்பதைத் தவிர எந்தவொரு கவலையும் இல்லாத மலைப்பிரதேசத்து இரவது:-) மெல்லத் தூங்கிவிட்டேன்.   

22 May 2014

கும்பக்கர சண்முகம் தெரியுமா...

பெரியகுளம் சுற்றுவட்டார மக்களுக்கு கும்பக்கரை குளியலை விட வேறு ஒரு நல்ல குளியல் கிடைக்க வாய்ப்பு இல்லை என நினைக்கிறன். மக்கள் வேன்களிலும் ஆட்டோக்களிலும் வந்த வண்ணமாக இருந்தார்கள். கோடைக்காலம் என்பதால் தண்ணீர் வரத்து மிகக் குறைவாகவே இருந்தது. குற்றால சீசன் சமயத்தில் குளிக்கவே முடியாதாம், அவ்வளவு தண்ணீர் கரைபுரண்டு ஓடுமாம். சூரியனுக்கு இது அப்ரைசல் காலம் போல மும்மரமாக தனது பணியை ஆற்றிக்கொண்டிருந்தது. சுற்றிலும் ஒரு நூறு மரங்கள் இருந்த போதிலும் அத்தனையும் கோமா ஸ்டேஜில் calm-ஆக இருந்தன. நா வறண்டு நீரைத் தேடியது.    

இந்த நேரத்தில்தான் பதநீர் விற்றுக் கொண்டிருந்த அந்த பெரியவரைப் பார்த்திருந்தேன்.அவரின் வயது எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கலாம். ஒல்லியான தேகம், எண்ணை தேய்த்து பல நாட்களான தேங்காய்ச் சவரி முடி - இலவம் பஞ்சு நிறம். வாயில் செய்யதோ சொக்கலாலோ புகைந்து கொண்டிருந்தது. ஒரு சொம்பு பதநீரை என்னிடம் விற்று முடித்திருந்த நல்ல நேரத்தில் ஆஜானுபாகுவான ஒரு பெண்மணி வாடிக்கையாளராக வந்தார். அவரோடு ஒரு துணைமணியும் கூடவே வந்தார். இருவருக்கும் வயது ஐம்பதைத் தாண்டி இருக்க வேண்டும். பார்த்தாலே பயனாகம் என்று தெரிந்தது. அருகில் ஒரு பெண்மணி சுடச்சுட மீன் சுட்டுக் கொண்டிருந்தார். 

'என்ன பெரியவரே பைனி எவ்ளோ' பேச்சிலும் பயானகம்.  

'சொம்பு இருபது ரூபா, ஓல ஐஞ்சு ரூபா' பீடி புகையுடன் சொற்கள் வெளிவந்து விழுந்தன   

'கும்பக்கர சண்முகம் தெரியுமா' 

பெரியவருக்கு தெரியாதென நினைக்கிறன், வாடிக்கையாள அம்மாவின் மனம் நொந்து பதனீ குடிக்காமல் போய்விட்டால். மையமாக தெரியும் தெரியாது என்பது போல் தலையை ஆட்டினார் பெரியவர். 

'அவரு மகதேன் நான், இப்போ பெங்களூருல இருக்கோம், இப்போ சொல்லுங்க பதனீ வில எவ்ளோ' அந்தம்மா எதற்கு அடி போடுகிறார் எனப் புரிந்துவிட்டது. பெரியவரும் விடவில்லை 'சொம்பு இருபது ரூபா, ஓல ஐஞ்சு ரூபா' அதே பீடி புகை.

'சொம்பு ஒரு ரூவாக்கு குடிச்ச ஊர்ல, இருபது ரூபாக்கு குடிக்க முடியுமா, பத்து ரூபா தாரேன் ரெண்டு சொம்பு குடுங்க'    

பெரியவர் எதுவுமே பேசவில்லை. அப்பெண்மணி தொடர்ந்தார். 'நாட்டுல தர்மம் கொறஞ்சு போச்சு பெரியவரே, அதான் மழையே இல்ல, விக்குற விலைவாசில எல்லாரும் கொள்ள அடிக்காங்க. என்ன பாருங்க எப்படி ஜம்ம்ன்னு இருக்கேன், நாங்கல்லாம் புண்ணியம் பண்ணின குடும்பத்துல பொறந்தவங்க, எல்லாரும் புண்ணியம் பண்ணனும், நல்லது பண்ணனும் இல்ல நாசமாயிருவாங்க' அம்மணியின் பிரசங்கம் எரிச்சலாக இருந்தாலும் பொழுதுபோனது. பெரியவரின் நிலைமைதான் பரிதாபமாக இருந்தது. தன்னுடைய மொத்த கோபத்தையும் கையிலிருந்த பீடியின் மீது காட்டினார். தரையில் போட்டு அதன் தலையில் ஒரு மிதி மிதித்தார்.     

'இப்பல்லாம் மொள்ளமாரித்தனம் பண்றவன் தாம்மா ஜம்ம்னு இருக்கான், நல்லவன் எல்லாம் என்னமாதிரி நொடிஞ்சு போய்ட்டான்' என்றார் பெரியவர் ஆதங்கத்தோடு. பெரியவரின் டைமிங் அம்மணிக்கு புரியவில்லை, 'அதெல்லாம் இல்ல என்ன பாருங்க ஜம்ம்னு இருக்கேன்' என்றவர் 'கர்த்தர் வேதத்துல என்ன சொல்லியிருக்காரு தெரியுமா...' என்று தொடர்ந்த அம்மணியை தொடரவிடாமல் ஒரு இளைஞர் பட்டாளம் பதனிக்காக பெரியவரை சூழ்ந்துகொள்ள தப்பிச்சோம்டா சாமி என பெரியவர் பதனீ ஊற்றிக் கொடுப்பதில் மும்மரமாகிவிட்டார்.

இந்த நல்ல நேரத்தில் அருகில் பொறிபட்டுக் கொண்டிருந்த மீனின் வாசனை அந்த அம்மாவின் மூக்கைத் துளைத்திருக்க வேண்டும். 

'என்னம்மா மீன் வில எவ்ளோ'                  

அந்தம்மா விலையைச் சொல்லிய அடுத்தநொடி இந்தம்மா  

''கும்பக்கர சண்முகம் தெரியுமா...' 

21 May 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - கொடைக்கானலை நோக்கி

வெள்ளிக்கிழமை இரவென்பதால் சென்னையை விட்டு ஓடும் அவசரத்தில் அதிதீவிரமாய் இருந்தன பெரும்பாலான வாகனங்கள். இவைகளுக்கு மத்தியில் தாம்பரத்தில் இருந்து மெல்ல நகரத் தொடங்கியது எங்கள் பேருந்து. இந்தப் பயணத்தில் என்னோடு பயணித்துக் கொண்டிருக்கும் வெகுசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் புதியவர்கள். பேருந்தில் ஏறியதுமே எங்களுக்குள்ளான அறிமுகம் தொடங்கியது. ஒவ்வொருவரிடமும் என்னை அறிமுகம் செய்துகொள்வதில் சவால் ஏதும் இல்லை என்றாலும் தொடர்ந்து பழகுவதில் ஏதோ ஒரு பொதுவான தயக்கம். 

'பேர் என்ன' 'நல்லா இருக்கீங்களா' 'எந்த ப்ராஜெக்ட்' 'ஓ நீங்கதான் அவரா' என்பதைத் தாண்டி கேட்பதற்கும் ஆச்சரியப்படுவதற்கும் கூறுவதற்கும் எதுவும் இல்லை என்றான போதுதான் ஏதோ ஒரு இடைவெளி உட்புகுவதை உணர்ந்தேன். இந்த இடைவெளியை நிரப்ப ஒரு தருணம் தேவை. இல்லையென்றால் பயணம் இனிக்காது. காரணம் இன்னும் இரண்டு நாட்களுக்குத் துணை வரபோகிறவர்கள் இவர்கள்தானே. போதாகுறைக்கு சிலரின் பெயர்கள் என் நியாபகசக்தியை சோதித்துக் கொண்டே இருந்தன. சில சமயங்களில் பலரும் என்னை தவறான பெயருடன் அழைத்த்த போதுதான் 'ரைட்டு நமக்கு மட்டும் இந்த பிரச்சன இல்ல' என்றெண்ணி மகிழ்ச்சியடைந்தேன். என்ன செய்வது இப்படியெல்லாம் கூட சந்தோசப்பட வேண்டியுள்ளது. 

பல தருணங்களில் அனைவரும் அனைருடனும் அவ்வளவு எளிதில் பழகி விடுவதிவதில்லை. சிலர் தாமாக வந்து பேசுவார்கள். சிலரிடம் நாமாக சென்று பேச வேண்டும். சிலரோ ம்கும் அசைந்து கூட கொடுக்க மாட்டார்கள். இது போன்ற நேரங்களில் ஏற்படும் இடைவெளியை நிரப்ப பொதுவான ஒருவர் தேவை. Ice breaker என்பார்களே அப்படியொருவர் தேவை. ஒருவேளை கூட்டத்தில் அப்படியொருவர் இல்லாது போனாலும் சிக்கலே, இருந்தும் தன் பணியை செய்யாது போனாலும் சிக்கலே. அறிமுகம் இல்லாத நண்பர்களுடனான பயணம் இப்படிப்பட்ட சவால்களுடன் தான் ஆரம்பமாகியது. இந்த சவால்களைக் கடப்பதில்தானே சுவாரசியமே அடங்கியுள்ளது.  

பேருந்தில் பிரம்மன் என்னும் மகா மொக்கை ஓடிக்கொண்டிருக்க, நானும் விக்ரமும் நாங்கள் சந்திக்காதிருந்த இரண்டு வருடத்துக் கதைகளையும் பேசத் தொடங்கியிருந்தோம். நடிகர் சசிகுமாரை வியக்காமல் இந்த வரியைவிட்டு நகர மனமில்லை. நம் ஹீரோக்கள் அனைவரும் வசனங்களுக்கு மத்தியில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்க, தலைவரோ நம் காதில் பஞ்சை வைத்து அடைக்கும் அளவிற்கு ஒவ்வொரு டயலாக்கையும் பஞ்ச் பஞ்சாக உதிர்த்துக் கொண்டிருந்தார். தியேட்டர்ல பார்த்தவன் காதுல ரத்தம்கக்கி செத்துருப்பான். என்ன படம்டா சாமி. சமநேரத்தில் பேருந்தின் பின்புறம் பயணங்களின் தேசிய விளையாட்டான அன்தாக்ஸரி விளையாடத் தொடங்கியிருந்தார்கள். கிட்டத்தட்ட அன்தாக்ஸரி கூட Ice breaking வகையறா விளையாட்டுதான். அவர்களிடமிருந்து அழைப்புவரவே நாங்களும் இணைந்து கொண்டோம். நாங்களும் என்றால் நானும் விக்ரமும். 

விளக்கணைக்கபட்ட பேருந்தில் ஒருவரின் முகமும் தெளிவாய்த் தெரியவில்லை. ஒருவர் கடைசி இருக்கையின் ஜன்னலின் வழியே பயண சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்க, மற்றொருவர் அன்தாக்ஸரியில் இருந்து விலகி விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தார். குடும்பம் சகிதமாக வந்தவர்கள் உறங்கிவிட ஒரு பத்து பேர் விளையாட்டில் மும்மரமாயிருந்தார்கள். இவர்களனைவரும் மறக்கமுடியாதொரு நட்பைவிட்டுச் செல்லப்போகிறார்கள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. 

ஒருமணி வரை இவர்களோடு சேர்ந்து நானும் விளையாடிக் கொண்டிருந்தேன். அலுவலக அலுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சோர்வடையச் செய்ய ஒதுங்கிக்கொண்டேன், நான் உறங்கும் வரையிலும் சிரிப்பு சத்தமும் ஒருவரை ஒருவர் கலாயித்தலும் தொடர்ந்துகொண்டே தான் இருந்தது. 'என்ன ஒரு ஸ்டாமினா பாரேன்' என்று விக்ரமிடம் கூறி வியந்து கொண்டிருந்தேன். எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை, அவர்களது சிரிப்பொலி தாலாட்டுபாட சுகமாய்த் தூங்கியிருந்தேன்.    

விழித்துப் பார்த்தால் திண்டுக்கல்லை அடைந்திருந்தோம். மணி நான்கரை. சித்திரை மாதத்து அதிகாலை அப்படியொன்றும் விஷேசமாய் இல்லை. திண்டுக்கல் வரை பேருந்து. அங்கிருந்து கொடைக்கானலைச் சுற்ற ஒரு ட்ரவல்ஸ் வேன். இதுதான் பயண ஏற்பாடு. இதுவரை சாலைகளில் மட்டுமே வந்துகொண்டிருந்த திருப்பம் முதல்முறையாக பயணத்திலும். குறித்த நேரத்திற்குள் வருவதாய்க் கூறியிருந்த வேன் வரவில்லை. இருபத்தியாறு பேர் கொண்ட எங்கள் குழு ஆங்காங்கு பிரிந்து சாயா குடிக்கச்செல்ல சிலம்பரசன் மட்டும் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தான். பரபரப்பாக யார்யாருக்கோ போன் போட்டுக் கொண்டிருந்தான், அதிகாலையிலும் வியர்த்திருந்தான். பயணத்திட்டதிற்கு வடிவம் கொடுத்தவன் இல்லையா, அந்த அவஸ்த்தை அவனிடம் இருந்தது. நல்லவேளையாக யாரும் அவனிடம் சென்று கோபப்படவில்லை, இப்டி நடுரோட்ல நிக்கவுட்டுட்டியே என கேள்வி எழுப்பவில்லை. நிலமையை உணர்ந்து கொண்டவர்கள் டீ குடிக்கக் கிளம்ப, சிலம்பரசன் மட்டும் ஒரு ஓரமாக நின்றுகொண்டு 'தம்பி வேன் இன்னும் வரல' என்று வருந்திக் கொண்டிருந்தான். பாவம் அதிகமாய் டென்சன் ஆகியிருந்தான். 

சிலம்பரசன் 
   
சனிக்கிழமையின் அதிகாலையிலும் திண்டுக்கல் உற்சாகமாக இருந்தது. மோடியின் வெற்றியையும் லேடியின் சாதனையையும் விவாதித்துக் கொண்டிருந்தது. பழவாசனை,  டீசல்வாசனை, மூத்திரவாடை, மங்கியும் மங்காத ட்யுப்லைட் வெளிச்சம் என கிட்டத்தட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தைப் பிரதி எடுத்தது போல் இருந்தது திண்டுக்கல் பேருந்து நிலையம். ஒரு டீயை குடித்துவிட்டு நாங்களும் அரசியல் பேசத்தொடங்கி இருந்தோம். சரியாக நாற்பதாவது நிமிடத்தில் வேன் வந்துசேர பெரியகுளம் நோக்கிய பயணம் ஆரம்பமானது

தேனிமாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் பெரியகுளம். திண்டுக்கலில் இருந்து சுமார் இரண்டு மணிநேரப் பயணம். சிலம்பரசனின் உறவினர் ஒருவரின் வயலில் குளியலைப் போட்டுவிட்டு அப்படியே காலை உணவையும் முடித்துவிட்டு பின் அங்கிருந்து கும்பக்கரை செல்வது என முடிவாகியிருந்தது. குறித்த நேரத்தைவிட சற்று தாமதமாகவே வயலைச் சென்றடைந்திருந்தோம். அதிகாலைப் பனியின் மிச்சம் புல் வெளிகளில் பரவிக்கடக்க வெறுங்கால்களுடன் அவற்றின் மீது நடப்பதற்கே சுகமாய் இருந்தது. ஒரு பக்கத்தில் கரும்புத் தோட்டம் செழித்து வளர்ந்திருக்க, இது உழவுக் காலம் என்பதால் மற்றபக்கங்களில் எல்லாம் வயலை உழுது போட்டிருந்தார்கள். இட்லி வடை மற்றும் சுவையான பணியாரத்துடன் அருமையான சாப்பாடு, பின் அங்கிருந்த தோப்பிற்குள் சென்று இளநீர் குடிக்கத் தொடங்கினோம். நேரம் மெல்ல கரைந்து கொண்டிருக்க சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தான் ஆதவன்.  
  

எல்லாம் சரி ஆனாலும் இந்த பயணத்தில் ஏதோ ஒன்று குறைவது போலவே இருந்தது. நான் என்ன உணர்கிறேன் என்பதை என்னாலேயே சரியாக சிந்திக்க முடியாத அளவிற்கு சோர்வடைந்திந்தேன். சோர்வென்றால் மொத்தமாய் தளர்ந்திருந்தேன். யாருடனும் உற்சாகமாய்ப் பேசக்கூட முடியவில்லை. உடல்வலியுடன் வயிறும் சேர்ந்து வலிக்கத் தொடங்கியிருந்தது. கிடைத்த இடங்களில் எல்லாம் பொசுக்பொசுக்கென உட்கார்ந்து கொண்டேன். ஒரு ஒருமணி நேரத்தில் சட்டுபுட்டென வயலில் இருந்து கிளம்பிவிடுவார்கள் என எதிர்பார்த்தால் இரண்டு மணிநேரமாகியும் இங்கேயே இருந்தார்கள். கிணறு வயல் வரப்பென உற்சாகமாய் படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். கும்பக்கரை அருவியில் குளிக்கலாம் என்று முடிவு செய்திருந்ததால் பம்புசெட்டில் குளிக்கும் திட்டம் கைவிடப்பட்டிருந்தது. 

இந்நேரத்தில் தான் தோழர் வந்தார். 'என்ன தோழர்' என்றேன். 'இல்லீங்க தோழர் இந்த வயல்வெளிய நம்ம ஊர்ல கூட பார்த்துக்கலாம், இதப் பார்க்கவா இவ்ளோ தூரம் வந்தோம்' என்றார், அவர் குரலில் சலிப்பில்லை ஆதங்கம் இருந்தது. 'ஆனாலும் தோழர் இதையெல்லாம் பார்க்காதவங்க இங்க நிறைய பேரு இருக்காங்க இல்லையா' என்றேன். 'அதான் தோழர் நானும் பொறுமையா இருக்கேன்' என்றார் சிரித்துக்கொண்டே. தெய்வீகச் சிரிப்பையா உமக்கு. இந்தப் பயணத்தில் ஏதோ ஒன்று குறைவது போலவே தோன்றுகிறது என்று கூறினேன் இல்லையா. தோழர் அதைத்தான் மிகச்சரியாகக் கூறியிருந்தார். இந்த வயல்வெளிச் சூழல் தென்காசியை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. சுற்றுல்லாவிற்கு வந்தது போலவே இல்லை. ஏதோ அரை கிமீ தூரத்தில் என் வீடு இருப்பது போன்ற உணர்வு. 


'தல நம்ம குழந்தைங்க காலத்திலதான் வயல்வெளி அபூர்வமாகும்ன்னு நினைச்சேன், நாமலே அபூர்வமா பார்க்க ஆரம்பிச்சிட்டோமே' என்றான் வருத்தத்துடன். என்ன செய்வது சென்னையின் வெயிலும் கான்கிரீட் வயலும் இப்படித்தான் பேசச்சொல்லும். சும்மாவா சொன்னார்கள் 'A single Indian is a great philosopher' என்று. 

பெரியகுளத்தில் இருந்து சுமார் பதினைந்து கிமீ தொலைவில் இருக்கிறது கும்பக்கரை அருவி. சனிக்கிழமை மற்றும் சம்மர் விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. குற்றாலத்தில் புலியருவி பார்த்திருக்கிறீர்களா அப்படியொரு அருவி. கோடைக்காலம் என்பதால் நீர் நூலாய் வழிந்து கொண்டிருந்தது. எங்கேயாவது குளிக்க இடம் கிடைக்குமா என விக்ரமோடு தேடிக் கொண்டிருந்த நேரத்தில் என்னோடு வந்தவர்களை தவறவிட்டிருந்தேன். சற்றுமுன் வரை கூடத்தானே இருந்தார்கள் அதற்குள் எங்கே சென்றார்கள் என்று தேடினால், ஒருவரையும் காணோம் எஸ் ஆகியிருந்தார்கள் 'தல மேல எங்கயாது குளிக்க போயிருப்பாங்க' என்றான் விக்ரம். பாறைகளின் இருபக்கமும் மரங்கள் அடர்ந்த அருவியில் அவர்களைத் தவறவிட்டிருந்தோம். 'நீ வேணா போயிட்டுவா, நா டயர்டா இருக்கேன் என்னால வர முடியாது' என்றேன். என்னைத் தனியே விட்டுச்செல்ல அவனுக்கு மனமில்லை என்பதால் அவனும் செல்லவில்லை.   

கும்பக்கரை அருவி காடுகள் அடர்ந்த பகுதிதான் என்றாலும் சுத்தமாய்க் குளுமை இல்லை. நல்லவேளையாக பதநீர் விற்றுக் கொண்டிருந்தார் ஒரு தாத்தா, பதநீர் குடிக்கலாம் என்று அருகில் சென்றால் 'தம்பி கள்ளு இருக்கு வேணுமா' என்றார் அவர். ஏற்கனவே ஒரு பான கள்ளு உள்ள போன மாதிரிதான் இருக்கு இதுல இது வேறயா. வெறும் பதநீரை மட்டும் வாங்கிக் கொண்டோம். நடுமதிய வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. ஒருமணி நேரத்தில் வருவதைக் கூறியவர்கள் இரண்டுமணி நேரம் ஆகியும் வரவில்லை. எவ்வளவு நேரம்தான் நானும் விக்ரமும் உலக விசயங்களைப் பற்றி மட்டுமே பேசி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது. அவர்களைத் தவற விட்டிருக்கக்கூடாது அவர்களுடனேயே சென்றிருக்கலாம் அல்லது அவர்களைத் தேடியாவது சென்றிருக்கலாம். என்னையே நான் நொந்து கொண்டேன். மேலும் குளித்து முடித்து வரும் அவர்கள் என்ன கூறுவார்கள் என்று எதிர்பார்த்தேனோ அதையேத்தான் இம்மி பிசகாமால் அவர்களும் கூறினார்கள் 'சீனு செம குளியல். சான்ஸே இல்ல, செம ஆட்டம்' என்றார்கள். நான் ஆரோக்கியமாய் இருந்து தவறவிட்டிருந்தால் தானே அதைப்பற்றி வருத்தப்பட, பரிதாபத்திற்குரியவன் விக்ரம்தான். 

எங்களின் பயணத்திட்டப்படி பெரியகுளம், சோத்துப்பாறை, கும்பகரை அருவி அதன் பின் அங்கிருந்து கொடைக்கானல் என்றுதான் வகுத்திருந்தார்கள். இடையில் ஏற்பட்ட சில மாறுதல்களாலும் தாமதங்களாலும் சோத்துப்பாறைக்குச் செல்ல முடியவில்லை. ஒருவழியாய் நாடோடி எக்ஸ்பிரஸ் கொடைக்கானலை நோக்கிக் கிளம்பியது. 
   
(க்நோமி - KNOWME எங்கள் அலுவலக ஊழியர்களுக்கான நாங்கள் மட்டும் உபயோகிக்கூடிய ஒரு சமூக வலைத்தளம். அதில் தமிழ் வலைப்பூக்கள் என்றொரு குழுமம் இயங்குகிறது. இக்குழுமத்தில் தமிழின்பால் ஈர்ப்பு கொண்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சகஅலுவலர்கள் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் எழுத்துக்களாக்கி வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் இக்குழுமம் பற்றி பின்பொருநாள் விரிவாக எழுதுகிறேன்). 

12 May 2014

சென்னை - நடுநிசியில் ஒருகூத்து


நத்தையின் அடியில் பெபிகாலை ஒட்டி வைத்தது போல் நகர அடம்பிடித்துக் கொண்டிருந்தது அன்றைய இரவு. 'ஒம்போதரைக்குக் கிளம்பிரலாம்' என எந்த தைரியத்தில் சரவணா கூறினானோ, பன்னிரெண்டைக் கடந்தும் கணினியுடன் போராடிக் கொண்டிருந்தோம். சீக்கிரம் கிளம்பலாம் என என்றைக்கு நினைக்கிறோமோ அன்றுதான் இப்படியெல்லாம் நடக்கும். யாரோ செய்த தவறை சரிசெய்யும் பணியில் சரவணா, அவனுக்கு துணையாக நான். இதுபோல் நடப்பது முதல்முறை அல்ல என்பதாலும் எதிர்பார்த்த சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்காததும் என்னுள் என்னென்னவோ சிந்தனைகளை தூண்டி விட்டிருந்தன. 'இனி சத்தியமா சீக்கிரம் கிளம்பலாம்னு சொல்லவே மாட்டேன்' விரக்தியின் உச்சத்தில் இருந்தான் சரவணா. விரக்தியோடு தூக்கம் பசி கலந்த கலவையில் நானிருந்தேன். மதியம் சாப்பிட்டது.   

ஒருவழியாய் அலுவலகத்தை விட்டுக்கிளம்பிய பொழுது மணி நள்ளிரவு ஒன்றைக் கடந்திருந்தது. பழைய மகாபலிபுரம் சாலை எங்களைப் போன்ற இரவுப்பட்சிகளுக்கு வழிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்க ஒரு பெருத்த மௌனத்திற்கு இடையில் பயணத்தை தொடங்கினோம். இது எனக்கான இரவில்லை என்பது தீர்மானமாகத் தெரிந்தது. இருந்தபோதும் என் எண்ணத்தை மாற்றுவதற்காக மேடவாக்கம் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை அறியும் வல்லமை உடைய தீர்க்கதரிசி அல்லவே நான். இது தெரியாமல் மனம் அதன் போக்கிற்குப் புலம்பிக் கொண்டிருந்தது

சோழிங்கநல்லூர் டோல்கேட் அருகே ஒரு பெருங்கூட்டம் பூமியை தோண்டிக் கொண்டிருந்தது. அர்த்தராத்திரியில் வயிற்றுப் பிழைப்புக்காய் வியர்வை சிந்தும் அவர்கள் நிலமையுடன் என்னை ஒப்பிட்டுப்பார்த்தேன். பாதிசுமை குறைந்தது. சரவணாவை அவன் வீட்டில் விட்டுவிட்டு மேடவாக்கத்தின் வளைவில் திரும்பியபோதுதான் அந்த ஆச்சரியத்தைக் கவனித்தேன். ஓர் இரவு ஓராயிரம் ஆச்சரியங்களையும் சுவாரசியங்களையும் தரப்போகிறது என்பதை நான் உணரப்போகும் நொடியினுள் நுழைந்து கொண்டிருந்தேன், என்னை அறியாமலேயே.   

ரோட்டின் ஓரத்தில் சாமியான கட்டப்பட்டு, கூட்டம் கூட்டமாய் நின்று கொண்டிருந்தனர் மக்கள். அவர்களில் சிலர் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருக்க, சிலர் ஒரு ஓரமாய் நின்றிருக்க, யாரோ சிலர் பெருங்குரலெடுத்து அழும் சத்தம் கேட்டது. ஒரு இழவு வீட்டிற்கு உண்டான அத்தனை அறிகுறியையும் உணர்ந்தேன். அதுஏனோ தெரியவில்லை எப்போது இழவு வீட்டைக் கடக்க நேரிட்டாலும் என்னையே அறியாமல் ஏதோ ஒரு வேதியல் மாற்றம் நிகழ்ந்து அதன் கூறுகள் அடிவயிற்றை நிரப்புகின்றன. அது எதனால் என்று தெரிந்தாலும், பாருங்கள் அது அதனால்தான் என்பதை எழுதக்கூட மனம் ஒப்பாமல் சாமர்த்தியமாக அடுத்த வரிக்கு நகர்கின்றேன்.        



எங்கே கூட்டத்தைப் பார்த்தாலும் அதனருகே நின்று, அப்போதைய நிலவரம் என்ன என்பதை அறிந்துவிட்டுக் கடப்பதுதானே நம் மரபு. இந்த இடம் இழவு வீடுபோல் தோன்றியதால் கொஞ்சம் எட்ட நின்று கவனித்தேன். 

கணவான்கள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்திருக்க சீமாட்டிகள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தார்கள். அவ்விடத்தின் மத்தியில் இரு திருநங்கைகள் ஒப்பாரி பாடியபடி ஆடிக்கொண்டிருந்தார்கள். நிகழ்வு நடந்து கொண்டிருந்தது சாலையோரம் என்பதால் நிகழ்வின் நாயகனைத் தேடினேன். அகப்படவில்லை. சரி வீட்டினுள் இருப்பார்போல என அந்த சிந்தனையில் இருந்து வெளிவந்து ஒப்பாரியைக் கவனிக்கத் தொடங்கினேன். இங்கு ஒன்றைக் கூறியே ஆகவேண்டும். இந்த வில்லுப்பாட்டு ஒப்பாரி இன்னபிற கிராமியக்கலைகள் இவை அனைத்திற்கும் நான் அடிமை. விருமாண்டி படத்தில் கருமாத்தூர் காட்டுக்குள்ளே என்று ஒரு வில்லுபாட்டு உண்டே, வாரம் ஒருமுறையாவது கேட்டுவிட வேண்டும். சமீபத்தில் குக்கூவில் வந்த கல்யாணம் கல்யாணம் பாடல் கூட ஒப்பாரி வகையறாவே. இவ்வளவு ஏன் கடல் படத்தின் 'அடியே என்ன எங்க நீ கூட்டிப்போற' பாடல் கூட ஏதோ ஒருநாட்டின் ஒப்பாரி மெட்டு என்று விகடன் பேட்டியில் ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டும் கூட என் ஆஸ்தான அதிவிருப்பப் பாடல்கள்.    

மாசி பங்குனியில் தென்காசிக்குச் சென்றால் ஏதேனும் ஒரு கோவிலிலாவது வில்லுப்பாட்டைப் பார்த்துவிடலாம். ஒருமுறை காற்றில் கலந்து வந்த வில்லுச்சத்தம் கேட்டு இடத்தை கண்டுபிடித்துச் சென்றால் அங்கோ வில்லுப்பாட்டை குழாயில் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். மனம் தளரவில்லையே. அங்கேயே நின்று முடியும் வரையிலும் கேட்டுவிட்டுத்தான் நகர்ந்தேன். சென்னையில் வில்லுப்பாட்டு பார்த்ததில்லை. ஆனால் குலவைப்பாட்டு பார்த்திருக்கிறேன். இருந்தும் இந்த ஒப்பாரியை மட்டும் நேரில் கேட்டதே இல்லை. இப்போது கிடைத்த வாய்ப்பை விடுவேனா என்ன! வண்டியை ஒரு ஓராமாய் நிறுத்திவிட்டு நானும் ஓரமாய் நின்று கொண்டேன். மணியைக் கவனித்தேன் இரண்டை நெருங்கியிருந்தது. 

கூட்டத்தில் இருந்த பல கணவான்களும் கனத்த டாஸ்மாக் வாடையைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். அப்படி மருந்துவாடையைப் பரப்பிக் கொண்டிருந்த பலரில் பலர் இளைஞர்கள். நமக்கேன் வம்பு என கூட்டத்தில் ஐக்கியம் ஆகாமல் பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டேன். ஒப்பாரி நடந்து கொண்டிருந்த இடத்தில், யாருக்காக ஒப்பாரியோ அவரின் படத்தை பெரிதாய் பிளக்கஸ் அடித்து அதில் நினைவஞ்சலி என்று எழுதியிருந்தார்கள். கண்ணீர் அஞ்சலி தானே? யாரிடமாவது கேட்கலாம் என்றாலோ என்னை மதித்து பதில்சொல்வார்கள் என நான் நம்புகிற எந்தவொரு ஆசாமியும் தென்படவில்லை. மீண்டும் ஒருமுறை அந்த இடத்தை நோட்டம் விட்டேன். வில்லுபாட்டு அமைப்பு போலவே தான் அந்த இடமும் இருந்தது. 

ஒரு பெஞ்சில் ஆறு பேர் அமர்ந்திருந்தனர். ஒருவர் கடம். ஒருவர் கொட்டு. இரண்டு ஜால்ரா. இரண்டு சும்மா. பெஞ்சில் அமர்ந்திருந்த அனைவரும் ஒப்பாரிக்குக் குலவை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த இரண்டு திருநங்கைகளில் ஒருவர் நல்ல ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் கனீர் குரலில் பாடிக் கொண்டிருந்தார். முகம் முழுக்க மஞ்சள் நிற மேக்கப். அவர் அழுது நம்மையும் அழ வைத்துக் கொண்டிருந்தார். அட்டகாசமான திறமை அவருடையது. துணைக்கு நின்ற மற்றொரு திருநங்கை மெலிந்ததேகம் அவ்வபோது ஒப்பாரி வைத்தார். நல்லநேரத்தில் என்னருகே வந்தார் ஒரு அன்பர். 'என்னனா நடக்குது' என்றேன். நல்லவேளை திட்டவில்லை. 'இறந்துபோனவருக்கு நாளைக்கு பதினாறாவது நாள் காரியம். அதான் கூத்து கட்டுறாங்க. தெருக்கூத்து. சவுத்ல ரொம்ப பேமஸு' என்றபடி என்னை நோக்கி 'நீ எந்த ஊரு' என்றார். 'திருநவேலின்னே' என்றேன். 'இன்னாப்பா உங்க ஊருல தான் பேமஸு. என்னாண்டா கேட்னு இருக்கியே' என்றபடி நகர்ந்துவிட்டார். இன்னும் என்னிடம் கேள்விகள் இருந்தன. பதில்கூற ஆள் இல்லை. 



எப்போது ஆரம்பித்தார்களோ, பாதியிலிருந்து கவனிக்க ஆரம்பித்தால் ஒன்றுமே விளங்கவில்லை. ஒப்பாரிவைத்துக் கொண்டிருந்தவருக்கு தொண்டைத்தண்ணி வற்றியிருந்தது. மைக்கும் இல்லை. வித்தியாசமான தமிழில் பாடிகொண்டிருந்ததால் அவர் பாடியபாடலும் புரியவில்லை. போதாக்குறைக்கு தண்ணீரைக் கடத்திக்கொண்டிருந்த லாரிகளின் ஹாரன் சப்தம் என்னை மேலும் எரிச்சல் படுத்திக்கொண்டிருந்தன. அப்பார்ட்மென்டிற்கு, கம்பெனிகளுக்கு தண்ணீரைக் கடத்தும் லாரிகள் நள்ளிரவில் தான் ஓய்வில்லாமல் இயங்குகின்றன என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன். எத்தனை எத்தனை லாரிகள். நாட்கள் செல்லச்செல்ல தண்ணீர் லாரிகளின் உருவமும் பெரிதாகிக் கொண்டேதான் செல்கின்றன.   

இந்நேரம் என்னருகே இன்னொருவர் வந்தார். வந்தவர் அவராக என்னிடம் 'ரெண்டும் ஆம்பளைங்க, பொம்பளையாட்டம் என்னா போடு போடுதுபாரு' என்றார். என்னால் அந்த திருநங்கைகளை ஆண்கள் என்று நம்ப முடியவில்லை, மேக்கப் கலைத்த அவர்களை ஆண்களாக பார்க்கும் வரையிலும். 

ஐம்பது பேருக்கும் மேல் தெருக்கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலானோர் அந்த ஏரியாவாசிகள். அதிலும் பெரும்பாலானோர் ஐம்பது வயதைக் கடந்தவர்கள். அவர்களில் போதையின் கிறக்கத்தில் இருந்தவர்களும், ஒப்பாரியின் சுகத்தில் லயித்தவர்களும் சாலையையே மெத்தையாக்கி ஆனந்த சயனதிற்குச் சென்றிருந்தனர். என்னைப் போல எங்கிருந்தோ வந்து வேடிக்கைப்பார்த்தவர்கள் மிகச்சிலரே. அவர்களில் ஒருவனை நெருங்கி 'தம்பி நீங்க எந்த ப்ளாக்ல எழுதுறீங்க' எனக் கேட்கலாமா என்று கூட சிந்தித்தேன் :-) . இந்நேரத்தில் கூத்து சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. அவர்களின் பாசைக்கு நான் பழகியிருந்தேன். அங்கிருந்த ஏரியாவாசிகளுக்கும் பழக்கமானவன் ஆகி அவர்களில் ஒருவனாய் ஐக்கியமானேன். முதலில் புகைப்படம் எடுக்கத் தயங்கியபோதும் சிறிது நேரத்தில் அந்த தயக்கமும் விலகி இருந்தது.  



நடந்து கொண்டிருந்த முதலாவது கூத்து கோவலன் கண்ணகி கதையைக் கூறுவது. 

இறந்துபோன கோவலன் எமலோகத்திற்கு சென்றுவிட்டான். அவனுக்கு இரண்டு பொண்டாட்டி. குடிகாரன். சூதாட்டதில் சொத்தை இழந்தவன். கோவலன் பாத்திரத்தை ஏற்றவன் அந்த குழுவினரில் ஜோக்கர் போன்றவன். அவன் வேலையே இரட்டை அர்த்தத்தில் பேசுவது, ஆபாசமாக நடந்துகொள்வது. நல்ல குள்ளமாக, இதற்கு இவன்தான் ஏற்றவன் என்பவன் போலவே இருந்தான். அவனுடைய பொண்டாட்டி கண்ணகியானவள் அவனையும் அவன் வப்பாட்டி மாதவியையும் முதுகும் முதுகும் சேர்த்தவாறு கட்டிவைத்து கூட்டத்தினரிடம் தனது குறைகளைக் கூறி ஒப்பாரி வைக்கிறாள். அதற்கு கோவலன், கண்ணகி என்ன கூறினாலும் இரட்டை அர்த்தத்தில் பகடி செய்கிறான், அதேநேரத்தில் உடன் கட்டபட்டிருக்கும் மாதவியை ஆபாசமாக தடவுகிறான். அவள் சேலையை கால்களால் தூக்குகிறான். அவளின் அந்தரங்க உறுப்புகளை தடவ முயல்வதன் மூலம் கூட்டத்தினரை கூத்தில் இருந்து நழுவாமல் பார்த்துக்கொள்கிறான். கடைசியாக கண்ணகி அவர்கள் இருவரையும் சாட்டையால் பயங்கராமாக அடிக்கிறாள். உண்மையான அடி. நிச்சயம் வலித்திருக்கும். அதேநேரம் அந்த அடியில் எவ்வளவு சூது என்பது தெரியவில்லை. 



அடுத்ததாக கர்ணன் கதை.

கர்ணன் கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது. கர்ணன் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக குருஷேத்ர யுத்தம் செல்லத் தயாராகிறான். போருக்குச் செல்லும் முன் தன் மனைவியிடம் சென்று தாம்பூலம் கேட்பது மரபு என்பதால் தாம்பூலம் கேட்கிறான். தன் கணவன் தவறானவர்களுடன் இணைந்து போரிட இருக்கிறான். இந்த யுத்தத்தில் அவன் சாவது நிச்சயம். அதனால் அவனை போகவிடாமல் தடுத்து புத்திமதிகூற ஒப்பாரி வைத்து அழுகிறாள்.



ன் மனைவி நினைப்பது தவறு. தான் போருக்கு செல்ல வேண்டியதன் அவசியம் என்ன? அது எவ்வளவு முக்கியம் என்றெல்லாம் புரிய வைக்க முயல்கிறான் கர்ணன். அவளோ அவனைத் தடுப்பதிலேயே குறியாய் இருக்கிறாள். இந்நேரத்தில் இவர்கள் இருவருக்கும் வாதம் வலுக்கிறது. சண்டை தொடங்குகிறது. இருவரும் கூட்டத்தினரிடம் முறையிடுகிறார்கள். வேறுவழியில்லாமல் அவளும் தாம்பூலம் கொடுத்து போ என்கிறாள். அடியே போய்வா என்று கூறாமல் போ என்கிறாயே என்று கூறி வருந்தி அழுகிறான். குந்திமா தேவி கூறும் கர்ணனின் பிறப்பு. அதிரதன் கூறும் கர்ணனின் வளர்ப்பு. துரியோதனன் நட்பு. குருசேத்திர யுத்தம் என கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேல் கர்ணனின் கதை தொடர்ந்து நடந்துகொண்டிருநத்து.    

யோசித்துபார்த்தால் ஒரு காலத்தில் தெருக்கூத்து ஒன்றுதானே நமது பிரதான பொழுதுபோக்கு. இன்றோ அவையெல்லாம் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் இந்த தெருக்கூத்தைக் காண காலம் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை எண்ணி வியக்கிறேன். நினைத்தபடி நினைத்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்து கிளம்பியிருந்தால் நிச்சயம் இந்த வாய்ப்பை தவற விட்டிருப்பேன். அப்படியெல்லாம் நடந்துவிடவில்லை. இந்த தெருக்கூத்து மூலம் கற்றுக்கொண்ட விசயங்களும் அவை என்னுள் ஏற்படுத்திய உணர்வுகளும் ஏராளம். இன்று நம் பொழுதுதைப்போக்குவதற்காக எவ்வளவோ விஷயங்கள் போட்டிபோடத் தொடங்கிவிட்டன. சொல்லபோனால் நம் பொழுதுப்போக்கு வியாபாரம் ஆக்கப்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் இந்த நிலையில் இக்கலையை நம்பியும் ஒரு கூட்டம் வாழ்கிறது. விடாப்பிடியாய் அதை நடத்துகிறார்கள் என்றால் தலை வணங்க வேண்டியவர்கள் இவர்கள்.



நமது நாட்டின் புராண கதைகளை இதிகாசங்களை அடித்தட்டு மக்கள் வரையிலும் அவர்களுக்கு புரியும் நாட்டார் பாஷையில் கதையாக  கூறுகிறார்கள். அப்படிக் கூத்து நடத்தும் இவர்களின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. எங்குமே ஓவர் ஆக்டிங் இல்லை. presence of mind அதிகம் இருக்கிறது. கூத்தின் இடையில் தங்கள் உள்ளக் குமுறல்களை கூட்டத்தினரிடம் முறையிடும் போது நம்மை சிரிக்க வைக்கின்றனர். கர்ணன் கதையின் போது ஒரு கிழவி பாதியில் எழுந்து சென்று மீண்டும் வந்து அமர, 'ஏ கிழவி இந்த நேரத்துக்கு எங்க போய் கூத்தடிச்சிட்டு வர' என்று கேட்டார் கர்ணனின் மனைவி. அதில் அடங்கி இருக்கும் இரட்டை அர்த்தம் புரிய சில நிமிடம் தேவைப்பட்டது எனக்கு. ஆனால் அந்தக் கிழவிக்கோ கடுமையான கோபம். 'ஏம்மா கண்ணு தெரிலன்னு கண்ணாடி எடுக்க போனா வாய்ல வந்தத பேசுற பாரு' என்று கோபத்துடன் பதிலடி கொடுக்க அந்த இடமே கலகலப்பானது. கூத்தின் போது தொய்வு ஏற்படுவது போல் தோன்றினால் ஏதோ ஒருவிதத்தில் பகடி செய்து கூட்டத்தை தம் பக்கம் திருப்பிவிடுகிறார்கள். 

வெறும் மூன்று மணிநேரம் நின்று கொண்டிருந்த எனக்கே தொடை வலிக்கத் தொடங்கியிருந்தது. அவர்களோ தொண்டத் தண்ணி வற்ற பாடுகிறார்கள், கத்துகிறார்கள், கதறுகிறார்கள், ஆடுகிறார்கள், ஒற்றைக்காலில் ராட்சத்தனமாய் சுற்றுகிறார்கள். சாட்டையால் அடி வாங்குகிறார்கள். பார்க்கும் நமக்கே வலிக்கிறது. பாவம் அவர்களுக்கு எப்படி இருக்கும். என் மனதில் இருந்த மொத்த பாரமும் இறங்கி மனம் லேசாகியிருந்தது. சிலர் அவர்களுக்கு பத்து இருபது கொடுத்தார்கள். நானும் கொடுக்கலாம் என்று நினைத்தாலும் என் பெயரைக் கேட்டு தர்மபிரபு வள்ளல் பெருந்தைகையார் கொடுத்தார் என்பார்கள். அதற்கு சங்கோஜப்பட்டே பேசாமல் இருந்துவிட்டேன்.       



குழுவில் மொத்தம் பதினைந்து பேர் இருந்தார்கள். கூத்தின் போது அவர்கள் பாடும் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஆரம்பத்திலும் தா தய் தத்தித்தோம். தா தஜும் தஜும் தஜும் தா தய் தத்தித்தோம். என அவர்கள் எழுப்பிய வித்தியாசமான ஓசையை கேட்டுக் கொண்டே இருக்கலாம். 'வாராயோ ஆட வாராயோ விளையாட வாராயோ பந்து விளையாட வாராயோ' போன்ற பாடல்கள் ஒரு காலத்தில் நம் முன்னோர்களின் சிறுவயது விளையாட்டுப் பாடல்களாகத் தான் இருந்திருக்க வேண்டும். டாடா டாடா மனிதா ஓத்தா ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா என்று அந்த ஜோக்கர் பாடும் போதும் கூட வண்டி வண்டியாய் கெட்ட வார்த்தைகள் பேசுகிறான். இதனாலோ என்னவோ ஜோக்கர் அடிவாங்கும் போது மட்டும் நமக்கு வலிக்காமல் சிரிக்கத் தோன்றுகிறது.    

இப்படி ஒரு பக்கம் கூத்து நடந்து கொண்டிருக்க ஒரு கடையில் திருட முயன்ற இரண்டு திருடர்களை(சிறுவர்களை) கண்டுபிடித்து தர்ம அடிகொடுத்துக் கொண்டிருந்த கூத்தையும் காண நேரிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் தர்ம அடி வாங்கிய சிறுவனின் தந்தையும் என்னருகே நின்றுதான் கூத்தை ரசித்துக் கொண்டிருந்தார். 'ஏ உம் புள்ள தான் அடிவாங்குறான்' என்றதற்கு 'த்தா நீயும் வேணா போய் அடி. ஊர்ல அடிபட்டதான் இதெல்லாம் அடங்கும்' என்றபடி கூத்தின் பக்கம் திரும்பிவிட்டார். அழுக்கு ஏறிய வேஷ்டி சட்டையுடன் மிக மிக மிக அப்பாவியான முகம் அவருடையது. பார்க்கவே பரிதாபமாய் இருந்தார். கந்தல் துணியுடன் இங்கு நடக்கும் எதையுமே கண்டுகொள்ளாமல் கடந்து சென்றான் ஒரு பிச்சைக்காரக் கிழவன். இந்த உலகமே வித்தியாசமான நாடக மேடை. இந்த மேடையில் இரவில் தான் சுவாரசியமான மனிதர்கள் தங்கள் கூத்தை அரங்கேற்றுகிறார்கள். அதில் நீங்களும் விலக்கல்ல நானும் விலக்கல்ல.             
         
மணி நாலரையைக் கடந்திருந்தது. கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நேரத்தில் எனது பின்புறம் இருந்து வித்தியாசமான ஒரு சிரிப்பொலி கேட்டது. யாரென்று பார்த்தேன். ஒரு பிச்சைக்கார கிழவி. கிழிந்து நைந்து போன சால்வையை தன் மீது போர்த்தியபடி விடியற்காலை நகர்வலத்தை துவக்கியிருந்தாள். அவள் சிரிக்கும் போது கவனித்தேன். தன் மேல்வரிசையின் முன்பக்க இரண்டு பற்களை எங்கோ தவற விட்டிருந்தாள். சிரிக்க ஆரம்பித்தவள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தாள். சிரித்தாள் என்றால் அவளுடைய சிரிப்பு இதுவரை கேட்டிராத பயங்கரமான சிரிப்பு. ஒருவிதமான ஏளனச் சிரிப்பு. அவளைப் பொறுத்தவரையில் அவளும் ஒரு கூத்தாடித்தான் நானும் ஒரு கூத்தாடித்தான் என்பது போன்ற சிரிப்பு. வீட்டிற்கு கிளம்பியே ஆக வேண்டியநிலை. கிளம்ப மனமே இல்லமால் அங்கிருந்து கிளம்பினேன். கிளம்பும் போதும் அவளை நோக்கினேன் விழுந்து போன பற்களின் இடைவெளிகளின் வழியே நிற்கவே நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது அவளுடைய மர்மச் சிரிப்பு. நான் வீட்டிற்குக் கிளம்பிவிட்டேன். 

9 May 2014

எழுதப்படாத நாட்குறிப்புகள்

இருபத்தி ஆறு வயதுதான் ஆகிறது. திரும்பிப்பார்த்தால் எத்தனையோ வருடங்களைக் கடந்து திரும்பிப்போகவே முடியாத தூரத்திற்கு ஓடிவந்துவிட்டது போல் தோன்றுகிறது. நிதர்சனமும் அதுதான் என்றாலும் சிலநேரங்களில் ஏன் ஓடுகிறோம் எதற்கு ஓடுகிறோம் என்பதெல்லாம் தெரியாமலேயே ஓடிக்கொண்டு இருப்பது போன்ற ஒரு உணர்வு. பள்ளிக்கூடம் முடிந்து தோள்மேல்தோள் கைபோட்டு காலார நடந்து செல்லும் சிறுவர்களைக் காணும் போதும்வட்டமாய்க் கூடி நின்று ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கலாய்த்து சந்தோஷமாய் சிரித்துப் பேசுகின்ற நண்பர்களைப் பார்க்கும்போதும் தான் ஓடிவந்த தூரத்தின் தொலைவு தெரிகிறது. 

நினைத்துப்பார்த்தால் இத்தனை காலமாய் நானும் அந்த சிறுவர்களில் ஒருவனாய்த்தானே அலைந்தேன். நாலுபேர் நிற்கும் உலகத்தில் நானும் ஒருவனாய்த்தானே நின்றிருந்தேன். இப்போதோ திடிரென யாரோ ஒருவர் வலுகட்டயாமாய் என்கரம்பற்றி அந்த உலகத்திலிருந்து இந்த உலகத்திற்கு கடத்தி வந்துவிட்டது போல தோன்றுகிறது. சரி என்னைக் கடத்தி வந்தவர் யாராய் இருக்குமென யோசித்துப்பார்த்தால் அது வேறுயாரும் இல்லை, சத்தியமாய் நானேதான். 

கேட்டபொருளை கேட்ட நேரத்தில் வாங்கித்தராத போதும், நினைத்த நேரத்தில் வாடகை சைக்கிள் ஓட்ட காசு தராதபோதும் 'ச்ச சீக்கிரமா வேலைக்கு போய்ட்டா வாடக சைக்கிள் என்ன சொந்த சைக்கிளே வாங்கிக்கலாம்' என நினைக்க ஆரம்பித்த நொடியிலிருந்தெல்லாம் கடத்தத் தொடங்கியிருக்கிறேன். இப்படியாக ஒவ்வொரு சந்தர்பத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக கடத்தி கடத்தி மொத்தமாக இங்கு வந்து சேர்ந்தபின், ஏன்தான் இங்கே வர ஆசைப்பட்டேனோ என நினைக்கச் செய்துவிட்டது இந்த காலம்.

என்னை விட்டுவிடுங்கள் மீண்டும் பள்ளிகூடத்திற்கே ஓடி விடுகிறேன். மிஞ்சிப் போனால் future continuous tense-ல் ஒரு செண்டன்ஸ் எழுதச்சொல்லி அடிப்பார் பிரிட்டோ டீச்சர். பித்தகோரஸ் தியரத்தை ஐந்துமுறை ஒப்பிக்காத வரை வீட்டிற்கு விடமாட்டார் மணிடீச்சர். அவ்வளவுதானே! பரவாயில்லை. நான் தயார். தயவுசெய்து யாராவது என்னை பள்ளிக்கூடத்தில் போய் சேர்த்து விடுங்களேன். உங்களுக்குக் கோடி புண்ணியமாய்ப் போகும். 

நினைப்பதற்கு நன்றாக இருந்தாலும் அப்படியெல்லாம் நடந்துவிடாதுதான். சரி நடந்தவற்றை நினைத்துப் பார்க்கலாம் என்றாலோ, வருடங்கள் நகரநகர முந்தைய வருடங்களில் நடந்தவை மொத்தமும் கொஞ்சமாக நினைவு நாளங்களில் இருந்து அழியத் தொடங்கிவிட்டன. 'செத்தாலும் இந்த விசயத்த மட்டும் மறக்க முடியாது' என நினைத்த விசயங்களில் பல இப்போது நினைவில் இல்லை. செத்தாலும் மறக்கமுடியாத விசயங்களையே மறந்துவிட்டேன் என்னும் போது இன்னபிற விஷயங்கள் எம்மாத்திரம். கடந்த சில வருடங்கள் வரை பள்ளிக்கூட நாட்களில் நடந்த பெரும்பாலான விசயங்களை அப்படியே நியாபகம் வைத்திருந்தேன். சமீபத்தில் வலுகட்டாயமாக அவற்றை நினைவு கூற முயன்றும் ம்கும் பாதிக்கும் மேல் மறந்துவிட்டது. அதனால்தான் நினைவு நாற்காலியில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அந்த கொஞ்சநஞ்ச விசயங்களையாவது இப்போதே எழுதிவிட முடிவு செய்துள்ளேன், குறைந்தபட்சம் கடைவழி வரும் வரையிலாவது துணைக்கு வருமே என்ற நப்பாசையில்தான்.       

என்னதான் என் நியாபகசக்தியின் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைத்தாலும் சிலவிஷயங்கள் நேற்று நடந்தது போல் நன்றாக நினைவில் உள்ளது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகாமைக்கும் அவற்றை நெருங்கிச்சென்று பார்க்கமுடிகிறது. அப்படிப்பட்ட நினைவுகளில் ஒன்று பதினோரு வருடங்கள் என்னை வளர்த்தெடுத்த ஆர்.சி.ஸ்கூலினுள் நான் நுழைந்த முதல்நாள்.     

அட்மிஷன் முடிந்து பேபிகிளாஸில் என்னைத் தள்ளிவிடுவதற்கா அழைத்துச் செல்கையில், எங்கே நான் ஓடிவிடுவேனோ என்ற பயத்திலும் 'அப்படியெல்லாம் உன்னை ஓடவிட மாட்டேன்' என்ற ஜாக்கிரதையிலும் கரம்பற்றி அம்மா அழைத்துச்சென்ற அந்த முதல்நாள் நன்றாக நியாபகம் உள்ளது. பேபி கிளாஸின் முதல்தினத்தில் நிச்சயம் கலர்டிரஸ்தான் அணிவித்திருப்பார்கள். இருப்பதிலேயே கொஞ்சம் புதிய காற்சட்டையும், மிக்கிமவுஸோ அல்லது பூ படமோ வரைந்த செருப்பும் அணிந்திருந்திருக்கலாம்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பிறக்கும் இக்காலத்துக் குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களின் ஒவ்வொரு தருணங்களையும் புகைப்படமாக்க, ஆவணபடுத்த அவர்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமே காத்துக்கிடகிறது. தற்போதைய நாட்களில் 'blessed with a baby girl/boy' என்று டெலிவரி முடிந்த அடுத்த நொடி புகைப்படத்துடன் ஸ்டேடஸ் போடும் அளவிற்குப் பரிணாம வளர்ச்சிஅடைந்த தினத்திற்குள் நுழைந்துவிட்டோம். ஆனால் நம்முடைய காலத்திலோ வருடத்திற்கு ஒருபுகைபடமேனும் எடுக்கப்பட்டவர்கள் பாக்கியசாலிகள். 

என்னோடு சேர்ந்து நானும் வளர்ந்துவிட்டதால் சிறுவயதில் நான் எப்படி இருந்தேன் என்பதை எப்போதோ எடுத்த சில புகைப்படங்கள் தான் அடையாளபடுத்துகின்றன. ஒருவேளை அவையும் இல்லாது போயிருந்தால் சத்தியாமாய் நான் எப்படி இருந்திருப்பேன் என்பது தெரியாமலேயே போயிருக்கும். புகைப்படம் எடுத்த அந்த நாலு பேருக்கு நன்றி. 

அம்மா விட்டுச்சென்ற சிறிது நேரத்திலேயே எனக்கு இருப்பு கொள்ளவில்லை, மெல்ல எழுந்து சுண்டு விரலை நீட்டினேன். 'ரீசஸ் போணுமா' என்றார் டீச்சர். 'ம்ம்ம்' என்றேன்.  புதுஇடம். புதுபள்ளி. பாத்ரூம் எங்கிருக்கிறதென எனக்குத் தெரியாதென்பதால் துணைக்கு என்னுடன் சேர்ந்திருந்த ஒரு சூட்டிப்பான மாணவியையும் அனுப்பிவைத்தார் ஆகச்சிறந்த என் ஆசிரியர். எந்த நேரத்தில் அப்படியொரு முடிவேடுத்தாரோ தெரியவில்லை இப்போவரைக்கும் நானும் அந்த மாணவியும் காதலித்தோம் என்றே நினைத்துக் கொண்டுள்ளான் கார்த்திக்

வேறவழியே இல்ல தொடரும்...