நத்தையின் அடியில் ஃபெபிகாலை ஒட்டி வைத்தது போல் நகர அடம்பிடித்துக் கொண்டிருந்தது அன்றைய இரவு. 'ஒம்போதரைக்குக் கிளம்பிரலாம்' என எந்த தைரியத்தில் சரவணா கூறினானோ, பன்னிரெண்டைக் கடந்தும் கணினியுடன் போராடிக் கொண்டிருந்தோம். சீக்கிரம் கிளம்பலாம் என என்றைக்கு நினைக்கிறோமோ அன்றுதான் இப்படியெல்லாம் நடக்கும். யாரோ செய்த தவறை சரிசெய்யும் பணியில் சரவணா, அவனுக்கு துணையாக நான். இதுபோல் நடப்பது முதல்முறை அல்ல என்பதாலும் எதிர்பார்த்த சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்காததும் என்னுள் என்னென்னவோ சிந்தனைகளை தூண்டி விட்டிருந்தன. 'இனி சத்தியமா சீக்கிரம் கிளம்பலாம்னு சொல்லவே மாட்டேன்' விரக்தியின் உச்சத்தில் இருந்தான் சரவணா. விரக்தியோடு தூக்கம் பசி கலந்த கலவையில் நானிருந்தேன். மதியம் சாப்பிட்டது.
ஒருவழியாய் அலுவலகத்தை விட்டுக்கிளம்பிய பொழுது மணி நள்ளிரவு ஒன்றைக் கடந்திருந்தது. பழைய மகாபலிபுரம் சாலை எங்களைப் போன்ற இரவுப்பட்சிகளுக்கு வழிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்க ஒரு பெருத்த மௌனத்திற்கு இடையில் பயணத்தை தொடங்கினோம். இது எனக்கான இரவில்லை என்பது தீர்மானமாகத் தெரிந்தது. இருந்தபோதும் என் எண்ணத்தை மாற்றுவதற்காக மேடவாக்கம் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை அறியும் வல்லமை உடைய தீர்க்கதரிசி அல்லவே நான். இது தெரியாமல் மனம் அதன் போக்கிற்குப் புலம்பிக் கொண்டிருந்தது
சோழிங்கநல்லூர் டோல்கேட் அருகே ஒரு பெருங்கூட்டம் பூமியை தோண்டிக் கொண்டிருந்தது. அர்த்தராத்திரியில் வயிற்றுப் பிழைப்புக்காய் வியர்வை சிந்தும் அவர்கள் நிலமையுடன் என்னை ஒப்பிட்டுப்பார்த்தேன். பாதிசுமை குறைந்தது. சரவணாவை அவன் வீட்டில் விட்டுவிட்டு மேடவாக்கத்தின் வளைவில் திரும்பியபோதுதான் அந்த ஆச்சரியத்தைக் கவனித்தேன். ஓர் இரவு ஓராயிரம் ஆச்சரியங்களையும் சுவாரசியங்களையும் தரப்போகிறது என்பதை நான் உணரப்போகும் நொடியினுள் நுழைந்து கொண்டிருந்தேன், என்னை அறியாமலேயே.
ரோட்டின் ஓரத்தில் சாமியான கட்டப்பட்டு, கூட்டம் கூட்டமாய் நின்று கொண்டிருந்தனர் மக்கள். அவர்களில் சிலர் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருக்க, சிலர் ஒரு ஓரமாய் நின்றிருக்க, யாரோ சிலர் பெருங்குரலெடுத்து அழும் சத்தம் கேட்டது. ஒரு இழவு வீட்டிற்கு உண்டான அத்தனை அறிகுறியையும் உணர்ந்தேன். அதுஏனோ தெரியவில்லை எப்போது இழவு வீட்டைக் கடக்க நேரிட்டாலும் என்னையே அறியாமல் ஏதோ ஒரு வேதியல் மாற்றம் நிகழ்ந்து அதன் கூறுகள் அடிவயிற்றை நிரப்புகின்றன. அது எதனால் என்று தெரிந்தாலும், பாருங்கள் அது அதனால்தான் என்பதை எழுதக்கூட மனம் ஒப்பாமல் சாமர்த்தியமாக அடுத்த வரிக்கு நகர்கின்றேன்.
எங்கே கூட்டத்தைப் பார்த்தாலும் அதனருகே நின்று, அப்போதைய நிலவரம் என்ன என்பதை அறிந்துவிட்டுக் கடப்பதுதானே நம் மரபு. இந்த இடம் இழவு வீடுபோல் தோன்றியதால் கொஞ்சம் எட்ட நின்று கவனித்தேன்.
கணவான்கள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்திருக்க சீமாட்டிகள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தார்கள். அவ்விடத்தின் மத்தியில் இரு திருநங்கைகள் ஒப்பாரி பாடியபடி ஆடிக்கொண்டிருந்தார்கள். நிகழ்வு நடந்து கொண்டிருந்தது சாலையோரம் என்பதால் நிகழ்வின் நாயகனைத் தேடினேன். அகப்படவில்லை. சரி வீட்டினுள் இருப்பார்போல என அந்த சிந்தனையில் இருந்து வெளிவந்து ஒப்பாரியைக் கவனிக்கத் தொடங்கினேன். இங்கு ஒன்றைக் கூறியே ஆகவேண்டும். இந்த வில்லுப்பாட்டு ஒப்பாரி இன்னபிற கிராமியக்கலைகள் இவை அனைத்திற்கும் நான் அடிமை. விருமாண்டி படத்தில் கருமாத்தூர் காட்டுக்குள்ளே என்று ஒரு வில்லுபாட்டு உண்டே, வாரம் ஒருமுறையாவது கேட்டுவிட வேண்டும். சமீபத்தில் குக்கூவில் வந்த கல்யாணம் கல்யாணம் பாடல் கூட ஒப்பாரி வகையறாவே. இவ்வளவு ஏன் கடல் படத்தின் 'அடியே என்ன எங்க நீ கூட்டிப்போற' பாடல் கூட ஏதோ ஒருநாட்டின் ஒப்பாரி மெட்டு என்று விகடன் பேட்டியில் ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டும் கூட என் ஆஸ்தான அதிவிருப்பப் பாடல்கள்.
மாசி பங்குனியில் தென்காசிக்குச் சென்றால் ஏதேனும் ஒரு கோவிலிலாவது வில்லுப்பாட்டைப் பார்த்துவிடலாம். ஒருமுறை காற்றில் கலந்து வந்த வில்லுச்சத்தம் கேட்டு இடத்தை கண்டுபிடித்துச் சென்றால் அங்கோ வில்லுப்பாட்டை குழாயில் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். மனம் தளரவில்லையே. அங்கேயே நின்று முடியும் வரையிலும் கேட்டுவிட்டுத்தான் நகர்ந்தேன். சென்னையில் வில்லுப்பாட்டு பார்த்ததில்லை. ஆனால் குலவைப்பாட்டு பார்த்திருக்கிறேன். இருந்தும் இந்த ஒப்பாரியை மட்டும் நேரில் கேட்டதே இல்லை. இப்போது கிடைத்த வாய்ப்பை விடுவேனா என்ன! வண்டியை ஒரு ஓராமாய் நிறுத்திவிட்டு நானும் ஓரமாய் நின்று கொண்டேன். மணியைக் கவனித்தேன் இரண்டை நெருங்கியிருந்தது.
கூட்டத்தில் இருந்த பல கணவான்களும் கனத்த டாஸ்மாக் வாடையைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். அப்படி மருந்துவாடையைப் பரப்பிக் கொண்டிருந்த பலரில் பலர் இளைஞர்கள். நமக்கேன் வம்பு என கூட்டத்தில் ஐக்கியம் ஆகாமல் பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டேன். ஒப்பாரி நடந்து கொண்டிருந்த இடத்தில், யாருக்காக ஒப்பாரியோ அவரின் படத்தை பெரிதாய் பிளக்கஸ் அடித்து அதில் நினைவஞ்சலி என்று எழுதியிருந்தார்கள். கண்ணீர் அஞ்சலி தானே? யாரிடமாவது கேட்கலாம் என்றாலோ என்னை மதித்து பதில்சொல்வார்கள் என நான் நம்புகிற எந்தவொரு ஆசாமியும் தென்படவில்லை. மீண்டும் ஒருமுறை அந்த இடத்தை நோட்டம் விட்டேன். வில்லுபாட்டு அமைப்பு போலவே தான் அந்த இடமும் இருந்தது.
ஒரு பெஞ்சில் ஆறு பேர் அமர்ந்திருந்தனர். ஒருவர் கடம். ஒருவர் கொட்டு. இரண்டு ஜால்ரா. இரண்டு சும்மா. பெஞ்சில் அமர்ந்திருந்த அனைவரும் ஒப்பாரிக்குக் குலவை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த இரண்டு திருநங்கைகளில் ஒருவர் நல்ல ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் கனீர் குரலில் பாடிக் கொண்டிருந்தார். முகம் முழுக்க மஞ்சள் நிற மேக்கப். அவர் அழுது நம்மையும் அழ வைத்துக் கொண்டிருந்தார். அட்டகாசமான திறமை அவருடையது. துணைக்கு நின்ற மற்றொரு திருநங்கை மெலிந்ததேகம் அவ்வபோ து ஒப்பாரி வைத்தார். நல்லநேரத்தில் என்னருகே வந்தார் ஒரு அன்பர். 'என்னனா நடக்குது' என்றேன். நல்லவேளை திட்டவில்லை. 'இறந்துபோனவருக்கு நாளைக்கு பதினாறாவது நாள் காரியம். அதான் கூத்து கட்டுறாங்க. தெருக்கூத்து. சவுத்ல ரொம்ப பேமஸு' என்றபடி என்னை நோக்கி 'நீ எந்த ஊரு' என்றார். 'திருநவேலின்னே' என்றேன். 'இன்னாப்பா உங்க ஊருல தான் பேமஸு. என்னாண்டா கேட்னு இருக்கியே' என்றபடி நகர்ந்துவிட்டார். இன்னும் என்னிடம் கேள்விகள் இருந்தன. பதில்கூற ஆள் இல்லை.
எப்போது ஆரம்பித்தார்களோ, பாதியிலிருந் து கவனிக்க ஆரம்பித்ததால் ஒன்றுமே விளங்கவில்லை. ஒப்பாரிவைத்துக் கொண்டிருந்தவருக்கு தொண்டைத்தண்ணி வற்றியிருந்தது. மைக்கும் இல்லை. வித்தியாசமான தமிழில் பாடிகொண்டிருந்ததால் அவர் பாடியபாடலும் புரியவில்லை. போதாக்குறைக்கு தண்ணீரைக் கடத்திக்கொண்டிருந்த லாரிகளின் ஹாரன் சப்தம் என்னை மேலும் எரிச்சல் படுத்திக்கொண்டிருந்தன. அப்பார்ட்மென்டிற்கு, கம்பெனிகளுக்கு தண்ணீரைக் கடத்தும் லாரிகள் நள்ளிரவில் தான் ஓய்வில்லாமல் இயங்குகின்றன என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன். எத்தனை எத்தனை லாரிகள். நாட்கள் செல்லச்செல்ல தண்ணீர் லாரிகளின் உருவமும் பெரிதாகிக் கொண்டேதான் செல்கின்றன.
இந்நேரம் என்னருகே இன்னொருவர் வந்தார். வந்தவர் அவராக என்னிடம் 'ரெண்டும் ஆம்பளைங்க, பொம்பளையாட்டம் என்னா போடு போடுதுபாரு' என்றார். என்னால் அந்த திருநங்கைகளை ஆண்கள் என்று நம்ப முடியவில்லை, மேக்கப் கலைத்த அவர்களை ஆண்களாக பார்க்கும் வரையிலும்.
ஐம்பது பேருக்கும் மேல் தெருக்கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலானோர் அந்த ஏரியாவாசிகள். அதிலும் பெரும்பாலானோர் ஐம்பது வயதைக் கடந்தவர்கள். அவர்களில் போதையின் கிறக்கத்தில் இருந்தவர்களும், ஒப்பாரியின் சுகத்தில் லயித்தவர்களும் சாலையையே மெத்தையாக்கி ஆனந்த சயனதிற்குச் சென்றிருந்தனர். என்னைப் போல எங்கிருந்தோ வந்து வேடிக்கைப்பார்த்தவர்கள் மிகச்சிலரே. அவர்களில் ஒருவனை நெருங்கி 'தம்பி நீங்க எந்த ப்ளாக்ல எழுதுறீங்க' எனக் கேட்கலாமா என்று கூட சிந்தித்தேன் :-) . இந்நேரத்தில் கூத்து சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. அவர்களின் பாசைக்கு நான் பழகியிருந்தேன். அங்கிருந்த ஏரியாவாசிகளுக்கும் பழக்கமானவன் ஆகி அவர்களில் ஒருவனாய் ஐக்கியமானேன். முதலில் புகைப்படம் எடுக்கத் தயங்கியபோதும் சிறிது நேரத்தில் அந்த தயக்கமும் விலகி இருந்தது.
நடந்து கொண்டிருந்த முதலாவது கூத்து கோவலன் கண்ணகி கதையைக் கூறுவது.
இறந்துபோன கோவலன் எமலோகத்திற்கு சென்றுவிட்டான். அவனுக்கு இரண்டு பொண்டாட்டி. குடிகாரன். சூதாட்டதில் சொத்தை இழந்தவன். கோவலன் பாத்திரத்தை ஏற்றவன் அந்த குழுவினரில் ஜோக்கர் போன்றவன். அவன் வேலையே இரட்டை அர்த்தத்தில் பேசுவது, ஆபாசமாக நடந்துகொள்வது. நல்ல குள்ளமாக, இதற்கு இவன்தான் ஏற்றவன் என்பவன் போலவே இருந்தான். அவனுடைய பொண்டாட்டி கண்ணகியானவள் அவனையும் அவன் வப்பாட்டி மாதவியையும் முதுகும் முதுகும் சேர்த்தவாறு கட்டிவைத்து கூட்டத்தினரிடம் தனது குறைகளைக் கூறி ஒப்பாரி வைக்கிறாள். அதற்கு கோவலன், கண்ணகி என்ன கூறினாலும் இரட்டை அர்த்தத்தில் பகடி செய்கிறான், அதேநேரத்தில் உடன் கட்டபட்டிருக்கும் மாதவியை ஆபாசமாக தடவுகிறான். அவள் சேலையை கால்களால் தூக்குகிறான். அவளின் அந்தரங்க உறுப்புகளை தடவ முயல்வதன் மூலம் கூட்டத்தினரை கூத்தில் இருந்து நழுவாமல் பார்த்துக்கொள்கிறான். கடைசியாக கண்ணகி அவர்கள் இருவரையும் சாட்டையால் பயங்கராமாக அடிக்கிறாள். உண்மையான அடி. நிச்சயம் வலித்திருக்கும். அதேநேரம் அந்த அடியில் எவ்வளவு சூது என்பது தெரியவில்லை.
அடுத்ததாக கர்ணன் கதை.
கர்ணன் கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது. கர்ணன் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக குருஷேத்ர யுத்தம் செல்லத் தயாராகிறான். போருக்குச் செல்லும் முன் தன் மனைவியிடம் சென்று தாம்பூலம் கேட்பது மரபு என்பதால் தாம்பூலம் கேட்கிறான். தன் கணவன் தவறானவர்களுடன் இணைந்து போரிட இருக்கிறான். இந்த யுத்தத்தில் அவன் சாவது நிச்சயம். அதனால் அவனை போகவிடாமல் தடுத்து புத்திமதிகூற ஒப்பாரி வைத்து அழுகிறாள்.
தன் மனைவி நினைப்பது தவறு. தான் போருக்கு செல்ல வேண்டியதன் அவசியம் என்ன? அது எவ்வளவு முக்கியம் என்றெல்லாம் புரிய வைக்க முயல்கிறான் கர்ணன். அவளோ அவனைத் தடுப்பதிலேயே குறியாய் இருக்கிறாள். இந்நேரத்தில் இவர்கள் இருவருக்கும் வாதம் வலுக்கிறது. சண்டை தொடங்குகிறது. இருவரும் கூட்டத்தினரிடம் முறையிடுகிறார்கள். வேறுவழியில்லாமல் அவளும் தாம்பூலம் கொடுத்து போ என்கிறாள். அடியே போய்வா என்று கூறாமல் போ என்கிறாயே என்று கூறி வருந்தி அழுகிறான். குந்திமா தேவி கூறும் கர்ணனின் பிறப்பு. அதிரதன் கூறும் கர்ணனின் வளர்ப்பு. துரியோதனன் நட்பு. குருசேத்திர யுத்தம் என கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேல் கர்ணனின் கதை தொடர்ந்து நடந்துகொண்டிருநத்து.
யோசித்துபார்த்தால் ஒரு காலத்தில் தெருக்கூத்து ஒன்றுதானே நமது பிரதான பொழுதுபோக்கு. இன்றோ அவையெல்லாம் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் இந்த தெருக்கூத்தைக் காண காலம் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை எண்ணி வியக்கிறேன். நினைத்தபடி நினைத்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்து கிளம்பியிருந்தால் நிச்சயம் இந்த வாய்ப்பை தவற விட்டிருப்பேன். அப்படியெல்லாம் நடந்துவிடவில்லை. இந்த தெருக்கூத்து மூலம் கற்றுக்கொண்ட விசயங்களும் அவை என்னுள் ஏற்படுத்திய உணர்வுகளும் ஏராளம். இன்று நம் பொழுதுதைப்போக்குவதற்காக எவ்வளவோ விஷயங்கள் போட்டிபோடத் தொடங்கிவிட்டன. சொல்லபோனால் நம் பொழுதுப்போக்கு வியாபாரம் ஆக்கப்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் இந்த நிலையில் இக்கலையை நம்பியும் ஒரு கூட்டம் வாழ்கிறது. விடாப்பிடியாய் அதை நடத்துகிறார்கள் என்றால் தலை வணங்க வேண்டியவர்கள் இவர்கள்.
நமது நாட்டின் புராண கதைகளை இதிகாசங்களை அடித்தட்டு மக்கள் வரையிலும் அவர்களுக்கு புரியும் நாட்டார் பாஷையில் கதையாக கூறுகிறார்கள். அப்படிக் கூத்து நடத்தும் இவர்களின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. எங்குமே ஓவர் ஆக்டிங் இல்லை. presence of mind அதிகம் இருக்கிறது. கூத்தின் இடையில் தங்கள் உள்ளக் குமுறல்களை கூட்டத்தினரிடம் முறையிடும் போது நம்மை சிரிக்க வைக்கின்றனர். கர்ணன் கதையின் போது ஒரு கிழவி பாதியில் எழுந்து சென்று மீண்டும் வந்து அமர, 'ஏ கிழவி இந்த நேரத்துக்கு எங்க போய் கூத்தடிச்சிட்டு வர' என்று கேட்டார் கர்ணனின் மனைவி. அதில் அடங்கி இருக்கும் இரட்டை அர்த்தம் புரிய சில நிமிடம் தேவைப்பட்டது எனக்கு. ஆனால் அந்தக் கிழவிக்கோ கடுமையான கோபம். 'ஏம்மா கண்ணு தெரிலன்னு கண்ணாடி எடுக்க போனா வாய்ல வந்தத பேசுற பாரு' என்று கோபத்துடன் பதிலடி கொடுக்க அந்த இடமே கலகலப்பானது. கூத்தின் போது தொய்வு ஏற்படுவது போல் தோன்றினால் ஏதோ ஒருவிதத்தில் பகடி செய்து கூட்டத்தை தம் பக்கம் திருப்பிவிடுகிறார்கள்.
வெறும் மூன்று மணிநேரம் நின்று கொண்டிருந்த எனக்கே தொடை வலிக்கத் தொடங்கியிருந்தது. அவர்களோ தொண்டத் தண்ணி வற்ற பாடுகிறார்கள், கத்துகிறார்கள், கதறுகிறார்கள், ஆடுகிறார்கள், ஒற்றைக்காலில் ராட்சத்தனமாய் சுற்றுகிறார்கள். சாட்டையால் அடி வாங்குகிறார்கள். பார்க்கும் நமக்கே வலிக்கிறது. பாவம் அவர்களுக்கு எப்படி இருக்கும். என் மனதில் இருந்த மொத்த பாரமும் இறங்கி மனம் லேசாகியிருந்தது. சிலர் அவர்களுக்கு பத்து இருபது கொடுத்தார்கள். நானும் கொடுக்கலாம் என்று நினைத்தாலும் என் பெயரைக் கேட்டு தர்மபிரபு வள்ளல் பெருந்தைகையார் கொடுத்தார் என்பார்கள். அதற்கு சங்கோஜப்பட்டே பேசாமல் இருந்துவிட்டேன்.
குழுவில் மொத்தம் பதினைந்து பேர் இருந்தார்கள். கூத்தின் போது அவர்கள் பாடும் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஆரம்பத்திலும் தா தய் தத்தித்தோம். தா தஜும் தஜும் தஜும் தா தய் தத்தித்தோம். என அவர்கள் எழுப்பிய வித்தியாசமான ஓசையை கேட்டுக் கொண்டே இருக்கலாம். 'வாராயோ ஆட வாராயோ விளையாட வாராயோ பந்து விளையாட வாராயோ' போன்ற பாடல்கள் ஒரு காலத்தில் நம் முன்னோர்களின் சிறுவயது விளையாட்டுப் பாடல்களாகத் தான் இருந்திருக்க வேண்டும். ஆடாதடா ஆடாதடா மனிதா ஓத்தா ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா என்று அந்த ஜோக்கர் பாடும் போதும் கூட வண்டி வண்டியாய் கெட்ட வார்த்தைகள் பேசுகிறான். இதனாலோ என்னவோ ஜோக்கர் அடிவாங்கும் போது மட்டும் நமக்கு வலிக்காமல் சிரிக்கத் தோன்றுகிறது.
இப்படி ஒரு பக்கம் கூத்து நடந்து கொண்டிருக்க ஒரு கடையில் திருட முயன்ற இரண்டு திருடர்களை(சிறுவர்களை) கண்டுபிடித்து தர்ம அடிகொடுத்துக் கொண்டிருந்த கூத்தையும் காண நேரிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் தர்ம அடி வாங்கிய சிறுவனின் தந்தையும் என்னருகே நின்றுதான் கூத்தை ரசித்துக் கொண்டிருந்தார். 'ஏ உம் புள்ள தான் அடிவாங்குறான்' என்றதற்கு 'த்தா நீயும் வேணா போய் அடி. ஊர்ல அடிபட்டதான் இதெல்லாம் அடங்கும்' என்றபடி கூத்தின் பக்கம் திரும்பிவிட்டார். அழுக்கு ஏறிய வேஷ்டி சட்டையுடன் மிக மிக மிக அப்பாவியான முகம் அவருடையது. பார்க்கவே பரிதாபமாய் இருந்தார். கந்தல் துணியுடன் இங்கு நடக்கும் எதையுமே கண்டுகொள்ளாமல் கடந்து சென்றான் ஒரு பிச்சைக்காரக் கிழவன். இந்த உலகமே வித்தியாசமான நாடக மேடை. இந்த மேடையில் இரவில் தான் சுவாரசியமான மனிதர்கள் தங்கள் கூத்தை அரங்கேற்றுகிறார்கள். அதில் நீங்களும் விலக்கல்ல நானும் விலக்கல்ல.
மணி நாலரையைக் கடந்திருந்தது. கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நேரத்தில் எனது பின்புறம் இருந்து வித்தியாசமான ஒரு சிரிப்பொலி கேட்டது. யாரென்று பார்த்தேன். ஒரு பிச்சைக்கார கிழவி. கிழிந்து நைந்து போன சால்வையை தன் மீது போர்த்தியபடி விடியற்காலை நகர்வலத்தை துவக்கியிருந்தாள். அவள் சிரிக்கும் போது கவனித்தேன். தன் மேல்வரிசையின் முன்பக்க இரண்டு பற்களை எங்கோ தவற விட்டிருந்தாள். சிரிக்க ஆரம்பித்தவள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தாள். சிரித்தாள் என்றால் அவளுடைய சிரிப்பு இதுவரை கேட்டிராத பயங்கரமான சிரிப்பு. ஒருவிதமான ஏளனச் சிரிப்பு. அவளைப் பொறுத்தவரையில் அவளும் ஒரு கூத்தாடித்தான் நானும் ஒரு கூத்தாடித்தான் என்பது போன்ற சிரிப்பு. வீட்டிற்கு கிளம்பியே ஆக வேண்டியநிலை. கிளம்ப மனமே இல்லமால் அங்கிருந்து கிளம்பினேன். கிளம்பும் போதும் அவளை நோக்கினேன் விழுந்து போன பற்களின் இடைவெளிகளின் வழியே நிற்கவே நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது அவளுடைய மர்மச் சிரிப்பு. நான் வீட்டிற்குக் கிளம்பிவிட்டேன்.