3 Oct 2019

களம் - புத்தக விமர்சனம்


களம்


சமீபகால கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் அரசியல் சார்ந்து எழுதபட்டிருக்கும் க்ரைம் த்ரில்லர் நாவல், களம். இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விஷாலின் திருமண வைபவத்தைச் சார்ந்த நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டுள்ளன. ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் நடைபெற இருக்கிறது. அந்த அசம்பாவித்த்தை யார்யாரெல்லாம் நிகழ்த்தியிருக்கக்கூடும் என்று இராஜேஷ் சந்தேகப்படுகிறாரோ அவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துவிட்டு கிரைமுக்குள் நுழைகிறார். விளக்குகள் அணைகின்றன. மீண்டும் அவை வெளிச்சத்திற்கு வரும்போது ஒரு குற்றம் நிகழ்ந்திருக்கிறது.

இதற்காகவே காத்திருந்த போலீஸ் ஆபீசர்களான விநாயக்கும் வசந்தாவும் கிரைம் சீனுக்குள் நுழைந்து கலைந்து போன சீட்டுக்கட்டுகளின் ஊடாக தங்கள் காயை நகர்த்துகிறார்கள்.கொலைகாரன் யார், கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும். இந்த சதிவலையின் ஆதிமூலம் யார் என நகரும் குற்றப்பின்னணியின் ஒவ்வொரு ஓவரைக் கடக்கும் போதும் விநாயக்கும் வசந்தாவும் புதிய புதிய தகவல்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.  கடைசி ஓவரின் கடைசிப்பந்தில் குற்றவாளியைக் கண்டுபிடித்தார்களா? இல்லை வைட் பாலா?. சுபம்   

*****

" Rashomon effect "அகிரா குரசோவா பயன்படுத்தின இந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணி நிறைய படம் வந்திருக்கு ( தமிழில் 'அந்த நாள் ') .

ஒரு சம்பவம் , அது நடந்த நேரத்திலிருந்து பின்னாடி போய் ஒரு கேரக்டரை அறிமுகப்படுத்தி அந்த சம்பவம் நடக்கும் நேரத்தொடு கனெக்ட் பண்ணிட்டு, பின் இன்னொரு கேரக்டரை அறிமுகப்படுத்தி அந்த சம்பவம் நடக்கும் நேரக்தொடு கனெக்ட் பண்ணி ... இப்படி எல்லா முக்கிய கேரக்டரை அந்த சம்பவத்தோட கனெக்ட் பண்ணிட்டு, அப்புறம் அந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து முன்னாடி போவாங்க .....

*****

மேலே அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தத் தகவல்கள் ஆசிரியர் தனது முகநூலில் தன் நாவல் குறித்துக் கூறியிருந்த கருத்துக்கள்.  தன் நாவலின் கட்டமைப்பை மிக எளிதாக அவரே கூறிவிட்டதால் அதனையே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.

களம். இராஜேஷ் ஜெயப்பிரகாசம் அவர்களின் முதல் நாவல் (என்றுதான் நினைக்கிறன்) என்பது முதல் பக்கங்களில் இருந்தே தெரிய ஆரம்பிக்கின்றன. ஒரு ஆரம்பகால எழுத்தாளர் என்னென்ன சோதனைகளுக்கு உள்ளாவாரோ அத்தனையையும் கடந்துதான் தன் நூலை வெளியிட்டிருக்கிறார். குறைகள் இருப்பினும், ஒரு புத்தகத்தை எழுதி அதனை சந்தைப்படுத்துவது என்பதே பெரியவிஷயம் ஆன காலகட்டத்தில் அதனை முயன்று பார்த்திருக்கும் இராஜேஷ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

விமர்சனம் என்பதே எதிர்மறையாகத்தான் இருக்கவேண்டும், எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் முதலில் குறைகளில் இருந்து நிறைகளை நோக்கிச் செல்வோம்.   

தன் முதல் பக்கத்தில் இருந்தே நாவலை மிகப்பரபரப்பாக கட்டமைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்ட இராஜேஷ், மிகச்சிறந்த கதைக்களத்தை அமைத்த பின்னும் குதிரையை வண்டியில் பூட்டிய பின் கடிவாளத்தைப் பிடிக்க மறந்த கதையாக சில அத்தியாயங்களுக்குக் கதை தன் போக்கில் சென்று பின் தளவாடத்தினுள்ப் புகுந்து தனக்கான பாதையில் சீராக பயணிக்கத் தொடங்குகிறது.  

சம்பவம்,  சம்பவம் நடந்த நேரத்தில் இருந்து பின்னாடி போய் ஒரு நபரை அறிமுகப்படுத்தி பின் மீண்டும் சம்பவ இடத்திற்கே வந்து அங்கிருந்து இன்னொரு நபர் என குற்றம் முழுமையாக நடந்து முடியும் வரைக்கும் பல நபர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இந்த அறிமுகப்படலம் மின்னல் வேகத்தில் நகர்கிறது. கதாப்பாத்திரங்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். வந்துகொண்டே இருக்கிறார்கள் என்பது பிரச்சனை இல்லை. கொஞ்சம் நிதானமாக வந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது. ஒவ்வொரு நபரையும் மிகஅழுத்தமாக வாசகனின் மனதில் பதியச்செய்துவிட்டு அடுத்தகட்டத்திற்குள் நுழைந்திருக்கலாமோ என்று தோன்றியது. 

ஏனென்றால் பின்னால் வரும் கண்ணிகளை எழுத்தாளன் இணைக்கும் போது அவனோடு சேர்ந்து இயைந்துகொள்ள வாசகன் தயாராக இருக்க வேண்டும். இப்படி ஒரு நபர் வந்தாரா? யார் இவர் என்ற ஐயம் எழுமாயின் அங்கே மிஞ்சி நிற்கப்போவது ஒரு சின்ன கேள்விக்குறி.

இதுபோன்ற குறைகள் அனைத்தும் களம் ஆரம்பமாகும் சிலபகுதிகளுக்குத்தான். அதன் பின் கதை மிகவும் சுவாரசியமாக நகர்கிறது. இராஜேஷ் இதனைக் கதையாக எழுதியுள்ளார் என்று சொல்வதைவிட ஒரு நல்ல திரைக்கதையாக கற்பனை செய்து பார்த்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். காட்சிக்கோர்ப்புகளும் அப்படியே நகர்கின்றன. இதனை நாவலின் பலமாகக் கருதுகிறேன்.

பல இடங்களில் மென்நகைக்க வைக்கிறார். வசந்தா மற்றும் விநாயக் தங்கள் பெயர்க்காரணம் கூறும் இடமாகட்டும், பெண்ணியப் போராளியா இருப்பாங்க போல கொஞ்சம் பார்த்துதான் பேசணும் என விநாயக் நினைத்துக்கொள்ளும் போதோகட்டும், எதவாது சொன்னீங்களா? இல்லை மேடம் நினைச்சேன், போன்ற இடங்களிலோ சரி போகிற போக்கில் அசரவைக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டார் என்றால் ஒரு முழுநீள விருந்தை இவரால் படைக்க முடியும். லைட் ரீடிங்கில் இராஜேஷ் ஜொலிக்க வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன.

என்ன யாராவது ஒருவர், அவர் கதையைக் கொஞ்சம் ப்ரூப் ரீடிங் செய்திருக்கலாம், ஒற்றுப் பிழையையும் சந்திப்பிழையையும் புத்தகமாகப் பார்க்கும்போது அவற்றை மனம் ஏற்பதில்லை. உறுத்தலாகாவே இருக்கிறது.

ஆக... குறைகளைக் கடந்து பார்த்தால்,

ஒரு கதையை மிக சுவாரசியமாக சொல்லிச்செல்லும் கலை இராஜிஷிடம் இருக்கிறது, இன்னும் கொஞ்சம் நேரமெடுத்து டீடெயிலிங் செய்திருந்தால் 'களம்' கிரைம் உலகின் தவிர்க்க முடியாத கதையாக மாறியிருக்கக்கூடும் அத்தனை சாத்தியக்கூறுகளும் இதில் இருக்கின்றன. இராஜேஷ் குமார், இராஜேந்திர குமார் வரிசையில் இராஜேஷ் ஜெயப்பிரகாசத்திற்கும் சிறந்த பாதை காத்திருக்கிறது தன் குதிரையின் கடிவாளத்தை ஒழுங்காகப் பிடிப்பாரே என்றால்.

- சீனு

29 Sept 2019

(திரை) அரங்கநாதன்

டிவிடிக்களும் பென்டிரைவுகளும் ஜியோக்களும் நம்மை ஆக்கிரமித்து இருக்காத வரைக்குமான நம் திரையரங்க அனுபவத்திற்கும் அதன்பின்னான அனுபவத்திற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. சிறுவயதிலிருந்து நாம் கொண்டாடிய ஒரு திரையரங்கம் கொடுத்த உள்ளார்ந்த அனுபவம் ஏக்கம் பூரிப்பு இன்னும் நம்முள் மிச்சம் இருக்கிறது. அரங்கம் சென்று படம் பார்க்க வேண்டும் என்பது ஏக்கமாகி கொண்டாட்டமாகிய, கொண்டாட்டமாக்கிய வரலாறைப் பின்னணியாகக் கொண்டவர்கள் நாம். வீட்டில் அனுமதி பெற்று, பின் தெரியாமல், பின் தெரிந்தும் தெரியாமல் என ஒரு திரையரங்கம் நம்மோடு உருவாக்கி வைத்திருந்த தொடர்புகள் ஏராளாம். இன்றைக்கும் அவை நம் நனவோடையில் கிழிந்து போன டிக்கெட்டுகளாக மிதந்து கொண்டுதான் இருக்கின்றன.

திரையனுபவம் என்பதும், சினிமா முழுமையடைதலும் திரையரங்கம் மூலம் மட்டுமே கிடைக்கும் என்று நம்புகிறேன்.

திரையரங்கமே பிரம்மாண்டமான ஒன்றுதான். அதன்பின் தான் அது கொடுக்கக்கூடிய திரை அனுபவம்.

ஒரு சிறுவனாக யானையைப் பார்த்த போது கிடைத்த அதே பிரம்மிப்பு தான் முதன்முதலில் திரையை உணர்ந்துகொள்ள ஆரம்பித்த போதும் கிடைத்திருக்கக் கூடும். மைதானம் போன்ற அந்த இடம், கும்மிருட்டு, தியானக்கூடத்தின் சாந்தமான அமைதி. அங்கங்கே ஓரிருவர் மட்டும் பேசிக்கொள்ளும் சலசலப்பு, கதவுகளைத் திறக்கும் போதோ இல்லை அந்த கவுகளின் மேல் போடப்பட்டிருக்கும் ஸ்க்ரீன் துணியை அகற்றும் போதோ வரும் பெரு வெளிச்சம் என எத்தனை அற்புதமான அனுபவத் துகள்கள் அவை. நினைக்கும் போதே பரதன் திரையரங்கினுள் சென்று வந்ததைப் போல் இருக்கிறது. எப்படி இந்த அனுபவம் மனதின் அடியாழத்தினுள் புதைந்து போனதோ அதேபோல் இன்றைக்கு பரதனும் மண்ணோடு மண்ணாகி விட்டது என்பது எத்தனை கவலையான விஷயம். நூறுநாட்கள் ஓடிய பல திரைப்படங்களுக்குச் சொந்தக்காரன் பரதன். இன்றைக்கு பாகம் பிரிக்கப்பட்டு வானம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு திரையரங்கம் அழியும் போது அதைச் சார்ந்த அடையாளங்களும் சேர்ந்தே அழிந்து போகின்றன. பரதன் தியேட்டரின் ஒருபுறம் கிடைக்கக் கூடிய ரோஸ்மில்க் அத்தனை சுவையாக இருக்கும், படம் முடித்துவிட்டு வெளியே வந்தால் நிச்சயம் ரோஸ்மில்க் வேண்டும், திரையரங்க காலம் அழிவின் ஆரம்பித்தில் இருந்தபோது முதலில் அழிந்த கடை அந்த ரோஸ்மில்க் கடையாகத்தான் இருக்க வேண்டும். திரையரங்கினுள் கிடைக்கும் முறுக்கு தனி சுவை. கடலை மற்றும் கிழங்கு மாவில் செய்யபட்ட அந்த முறுக்கை பரதன் தவிர வேறெங்குமே சாப்பிட்டதில்லை. மூத்திரவாடை அடிக்கும் அரங்கின் பின்புறம் ஆட்டுக்கால் சூப்பும், மீன் வறுவலும் பிரமாதமாக இருக்கும். இன்றைக்கு ஆட்டுக்காலும் இல்லை மூத்திரவாடையும் இல்லை. பிணமெடுத்த பின் வெறுமையாகிப் போன சாலையின் ஈரம் மட்டும் மிச்சம் இருக்கின்றது நினைவுகள் என்ற பெயரில்.

பத்மம் திரையரங்கின் நுழைவுச்சீட்டுக்கான வாயில் ஒரு குகையைப் போல வளைந்து வளைந்து பாம்பைப் போல் நகரும். நல்ல பெருங்கூட்டத்தில் அதன் மையத்தில் மாட்டிக்கொண்டோம் என்றால் மூச்சுமுட்டிக்கொள்ளுமோ என்றெல்லாம் பயந்தது உண்டு. அப்படியானதொரு அனுபவம் மன்மதனின் போது நிகழ்ந்தது. யாருமற்ற அந்த குகையினுள் படுத்திருந்த நாய்கள் துரத்திய அனுபவம் 'நேரம்' திரைப்படத்தின் முதல் காட்சியின் போது நிகழ்ந்தது. ஆன்லைன் டிக்கெட்டிங்கும் மல்டிப்ளெக்ஸ் வளாகமும் வாழ்க்கையின் ஜஸ்ட் லைக் தட் அனுபவங்களை, ஜஸ்ட் லைக் தட் எடுத்துக் கொண்டுவிட்டது.

பரதனை விட மிகப்பெரிய திரையாகப் பார்த்தது பாக்யலக்ஷ்மியை, பாக்யலக்ஷ்மி என்றாலே அதன் பால்கனி தான் கடல் போல் இருக்கும். அதில் மட்டும் குறைந்தது நூறுபேர் உட்கார முடியும். பால்கனியில் இருந்து கீழே பார்த்தால் அதைவிட மிகப்பெரிய அரங்கம் தெரியும். அத்தனை கதவுகளும் அடைக்கபட்ட பின், அத்தனை திரைகளும் மூடப்பட்ட பின், அங்கிருக்கும் கும்மிருட்டு, பேரமைதி, ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கான ஆரம்பமாக இருக்கும். மிகப்பெரிய மிகப்பிரம்மாண்டமான அந்த சிவப்புத்துணி மெல்ல மெல்ல மேல் எழும்பத் தொடங்கும் போது கிடைக்கும் அந்த போதை, ஒருவேளை மனம் ஒரு நிலைப்பட்டால் அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறன்.

ஆண்டவா நம்ம முன்னாடி எவனும் தலைய தூக்கிட்டு வந்து உட்காரக்கூடாது என்ற வேண்டுதல்கள் இல்லாது அரங்கினுள் நுழைந்ததே இல்லை. அப்படியும் நமக்கென்றே ஒய்யாரமாய் வந்து உட்காரும் ஜீவ ராசிகளும் உண்டு. இன்றைய மல்டிப்ளக்ஸ் பிள்ளைகளுக்கு அந்த அசௌகரியம் இருகாதென நினைக்கிறன்.

அந்தப் பெரியதிரையில் செய்திகள் முடிந்து, அரசு விளம்பரப் படங்கள் முடிந்து, திரை பிரகாசமாக ஆரம்பிக்கும் போது விசில் சத்தம் பறக்கும், ஆவூ கூக்குரல்கள் முட்டித் தெறிக்கும், இள ரத்தத்தின் வேகம் மிகவேகமாகப் பிரவாகம் எடுக்கும். முதல் ஒரு வாரத்திற்கு திரையரங்கம் இப்படித்தான் இருக்கும் என்பதை கில்லி படம் பார்க்கும் போது தெரிந்து கொண்டேன். நாம பெருசான டாக்டர் ஆகணும் இஞ்சினியர் ஆகணும் என்ற கனவுகளை விட முதல்ல விசிலடிக்கக் கத்துக்கணும் என்று மைல்ஸ்-ஸ்டோன் செட் செய்த தலைமுறைகள் நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும்.

ஷாக் படம் வெளிவந்திருந்த போது இந்தப்படத்தை தனியாக யாரேனும் அரங்கில் அமர்ந்து பார்த்தால் லட்சம் தருவதாக்க் கூறினார்கள், கோடி கொடுத்தாலும் பார்த்திருப்பேனா தெரியாது அப்படியொரு திகில் அனுபவத்தை அரங்கனைத் தவிர வேறு யாரால் கொடுத்திருக்க முடியும். உள்ளத்தை அள்ளித்தா பார்க்கும் போது ஒட்டுமொத்த அரங்கமும் பேய்ச் சிரிப்பு சிரித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. கிட்டத்தட்ட முண்டாசுப்பட்டி பார்க்கும் போதும் இதே போன்றதொரு அனுபவம் தான். விஸ்வரூபம் பார்த்தால் ஏரோ த்ரீடியில் தான், என்று வெறிபிடித்துத் திரிந்ததெல்லாம் அரங்கனின் மீதிருந்த காதலின் உச்சம். நகநகநக தினதினதின என உலகநாயகன் ஆரம்பிக்கும் போது அப்படியே உணர்வெழுச்சியின் உச்சத்தில் கொண்டு சேர்க்கும் கலை, அரங்க்கனை விட்டால் வேறு யாரேனும் தர முடியும் என நினைக்கிறீர்கள்.

கண்டிப்பா இந்தப் படத்தப் பாருங்க என்ற நிலையில் இருந்து கண்டிப்பா இந்தப் படத்தத் தியேட்டர்ல போயிப் பாருங்க என்று கூறும் நிலைக்கு நகர்ந்திருக்கிறோம். சினிமாவும் தன் முகத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த டிஜிடல் யுகத்தில் எத்தனையோ விஷயங்கள் நமக்கும் அரங்கிற்குமான இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொருமுறை சினிமா தியேட்டரைக் கடக்கும் போதும் "அடுத்து என்ன படம்" என யோசித்த தருணங்களில் இருந்து "அடுத்த்தடவ வரும்போது இந்த தியேட்டர் இருக்குமா" என்று எண்ணும் நிலைக்கு வந்திருக்கிறோம். சத்யம் தியட்டரில் படம் பார்க்க வேண்டும் என்பது ஒரு தலைமுறையின் பேராசை என்பது இனிவரும் யாருக்கேனும் தெரியும் என்று நினைகிறீர்கள்?

கலையின் மதிப்பீடுகள், கலைஞர்களின் மீதான மதிப்பீடுகள் என்று அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. விமர்சனங்களின் வீரியம் கூடியிருக்கிறது. நீ எத்தனை கோடிய வேணும்னாலும் சம்பாதி ஆனா என்னோட ஆயிரம் ரூபா ரொம்பவே முக்கியம் என்ற விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. என் பணத்திற்கான நியாயத்தைக் கலை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கியுள்ளது. எதையும் முரட்டுத்தனமாக நம்ப அவன் தயாராக இல்லை. இது திருட்டு, இது இதில் இருந்து எடுக்கபட்டது, இதனால் இது இப்படி இல்லை, இது இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கக்கூடும் என்று ஆராயும் ஆர்வம் அவனுள் அதிகமாகி இருக்கிறது. இந்த ஆர்வத்தை, இந்த்த் தேடலைப் பூர்த்தி செய்ய கலை தயாராக இருக்கிறதா என்றால்?



யாருமற்றப் பெருவெளியில் கலையும் அரங்கனும் எதிரெதிரில் நின்று கொண்டிருக்கிறார்கள். தன்னை மிகவேகமாக நகர்த்திக் கொண்டிருக்கிறது காலம் அரங்கநாதனிடமிருந்தும் நம்மிடமிருந்தும். யாருடைய துணையுமின்றி அங்கேயே நின்று கொண்டிருக்கிறது கலை நனவோடையின் சலசலப்புகளோடு.

9 Jul 2019

நம்பர் பதிமூன்று - 13

பதிமூன்றாம் எண்ணைப் பற்றி நான் என்ன எழுத இருக்கிறேன் என்பது கிடக்கட்டும், பதிமூன்றாம் எண்ணை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அமானுஷ்யமாகவா அல்லது அதுவும் ஓர் எண்ணாகவா! அதுவும் ஓர் எண் என்றால் பரவாயில்லை, நல்லது. ஒருவேளை அமானுஷ்யமாக என்றால்? இந்த எண்ணைப் பார்த்த நொடியில் உங்களுக்குள் லேசான குறுகுறுப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அய்யய்யோ பதிமூன்றா? மேற்கொண்டு படிக்கலாமா? படித்து அதுகுறித்து ஏதேனும் பிரளயமாகக் கூறிவிட்டால் என்று எப்போதோ நினைக்கத் தொடங்கி இருப்பீர்கள். 

நீங்கள் மட்டும் இல்லை உலகின் ஒரு பெரும்பாதி பதிமூன்றை கொஞ்சம் எட்டி நின்றே கவனிக்கிறது. குறிப்பாக மேலைநாட்டு கிறிஸ்துவ உலகம். ஜீசஸின் கடைசி விருந்தில் பதிமூன்றாவதாக அழைக்கபட்ட யூதாசை பதிமூன்றின் குறியீடாகக் கவனிக்கிறது அவ்வுலகம். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பதிமூன்று என்ற எண்ணை நினைத்துப் பார்க்கவே பயப்படுகிறார்களாம். பெரும்பான்மையான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பதிமூன்றாவது தளம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே இருந்து வருகிறது. அப்படியில்லை எனில் பன்னிரெண்டைத் தொடர்ந்து 12A என குறிப்பிடுகிறார்களாம். 

பதிமூன்று குறித்து இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அதுதான் உலக வழக்கம் எனினும், பதிமூன்றை அமானுஷ்யத்தின் குறியீடாக, பேய்களின் எண்ணாக குறிப்பிடக் காரணம். இலுமினாட்டிகளின் சதி என்கிறது ஒரு கூட்டம். 

ஒன்றின் மீது எப்போது உங்களுக்கு ஆர்வம் வரும்? யாரேனும் ஒருவர் ஒன்றைச் செய்யாதே எனும்போது? பதிமூன்று குறித்த மர்மமான விதையை என்னுள் யார் ஊன்றியது எனத் தெரியவில்லை, 2012-இன் ஆரம்பித்தில் இருந்து பதிமூன்றின் மீது ஒருவித கடிகாரத்தனமான ஈர்ப்பு. எப்போது மணியைப் பார்த்தாலும் அதில் பதிமூன்று இருக்கும், அல்லது எங்கேனும் ஓர் இடத்தில் பதிமூன்று எழுதியிருக்கும், ஒருகால் மணியைப் பார்க்கும் போது பன்னிரண்டு எனக்காட்டினாலும், நேரம் பதிமூன்றைக் கடக்கும் வரை ஒருவித குறுகுறுப்புடன் அந்த நொடிகளை கவனமாகக் கடந்து கொண்டிருப்பேன். நிச்ச்யமாக இது பதிமூன்று பைத்தியம் தான், இதனைப் போக்க என்னவழி? ஒன்றை எப்போது ஆழமாக நம்ப ஆரம்பிக்கிறோமோ அப்போதே அதனுடன் ஆழமான தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. இப்போதிலிருந்து பதிமூன்று வேண்டாம் என்று நினையுங்கள், அடுத்த கணத்தில் இருந்து பதிமூன்று உங்களைத் துரத்த ஆரம்பித்துவிடும், பேருந்து நிறுத்தத்தில் நீங்கள் பார்த்த அந்த தேவதையின் கண்களைப் போல!

பதிமூன்று சரி, இலுமினாட்டிகள் எங்கிருந்து வந்தார்கள்? இலுமினாட்டிகளின் வேலையே உங்களை புனிதத்தின் எதிர்திசையில் ஓடவைத்து உங்களின் ஓட்டத்தின் வேகத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவது என்று கூறப்படுகிறது. அப்படித்தான் பதிமூன்றையும் இலுமினாட்டிகள் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள் என்கிறது ஒரு கூட்டம். இருப்பதிலேயே சக்தி வாய்ந்த எண்ணாக இலுமினாட்டிகள் கருதுவது பதிமூன்றைத்தானாம், அதன் சக்தி மற்றவர்களுக்கு புரிந்து அவர்கள் அதனைக் கவர்ந்து விடக்கூடாது என்பதாலேயே அதன் மீது கொஞ்சம் அமானுஷ்யம் பூசி எட்ட நிற்க வைத்துவிட்டார்களாம்.

சரி பதிமூன்றாம் எண் குறித்து அதிகமாகக் கவலை கொள்ளும் நபரா நீங்கள், உங்களுக்காகவே ஒரு ஜென் கதை. 

ஒரு ஜென்குரு தன் சீடனிடம் பதிமூன்றாம் எண்ணைக் கைதுசெய்து வா என்று கூறினாராம்

இந்த உலகில் யாராலாவது ஒரு எண்ணைக் கைது செய்ய முடியுமா? குரு என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று சீடன் அங்கேயே நின்று கொண்டிருந்தானாம், காலங்கள் உருண்டோடியது, குருகேட்டதைக் கொடுக்க முடியாத சீடன் என்ன செய்வதெனத் தெரியாமல் எங்கும் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தானாம். பொறுமை இழக்கும் போது பதில் கொடுப்பதே ஜென் குருமார்களின் வேலை என்பதால், பொறுமையின் எல்லையில் நின்று கொண்டிருந்த சீடனை நோக்கி "பதிமூன்று உன்னைக் கைதுசெய்துவிட்டது பார்த்தாயா" என்று கூறி அங்கிருந்து நகர்ந்தாராம் அந்த ஜென்குரு. 

மேலே கூறிய அந்த ஜென்கதை உங்களுக்குப் புரிந்ததா? இதுவரைக்கும் நான் வாசித்த எந்த ஜென்கதையும் எனக்குப் புரிந்ததில்லை என்பதால், நானே ஒரு ஜென் கதை எழுதிப் பார்த்தேன்,  அதான் கேட்டேன்.  

8 Jul 2019

ஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் மார்வெல்



அயர்ன் மேன் டோனி ஸ்டார்க் இறந்துவிட்டார். மார்வலின் மொத்த கூட்டமும் கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கிறது. சூப்பர் ஹீரோஸ் உச்சத்தில் இருந்தாலே தீயசக்திகளுக்குப் பிடிக்காது, இப்போது அவர்களே இல்லை எனும் போது மக்களை அழிக்கவே காத்திருக்கும் தீயசக்திகளைப் பற்றி கேட்கவா வேண்டும்? நிலம், நீர், காற்று,ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களின் வடிவமெடுத்து மக்களைக் கொன்று, உலகை ஆட்கொல்ல முடிவு செய்கிறது தீமை.

அவஞ்செர்ஸின் தலைவன் நிக் ஃப்யூரிக்கு என்ன செய்வது, யாரைத் தேடுவது எனப் புரியாத நிலையில் ஸ்பைடர்மேன் ஞாபகம் வருகிறது. உண்மையில் ஸ்பைடர்-கிட் என்றோ ஸ்பைடர்-அடல்ட் என்றோதான் படத்தின் பெயரை வைத்திருக்க வேண்டும். மேன்!! அவருக்கு இன்னும் வயதிருக்கிறது மேன். பாவம் அந்தப் பச்சிளம் பாலகனைப் பிடித்து, ‘நீ தான் ஸ்பைடர்மேன். உங்கிட்ட பல அசாத்திய திறமைகள் இருக்கு. நீ தான் இந்த உலகைக் காப்பாற்ற வந்த அடுத்த அயர்ன்மேன்’என்று உசுப்பேத்தினால்? ஒரு கட்டிங்கில் மேட்டரை முடித்துவிட்டு, ‘அய்யகோ..’ என தலையில் கைவைக்கும் அந்தச் சிறுவனை நினைத்து வருந்துவதா இல்லை நிக் ஃப்யூரியின் ப்ராஜெக்ட் டெட்லைன் டெட் ஆகிக்கொண்டிருப்பதை நினைத்து வருந்துவதா எனத் தெரியவில்லை.

‘ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்’ என்று பெயர் வைத்தாயிற்று, ஆக அவரை அமெரிக்காவில் இருந்து கிளப்பியாக வேண்டும். அயர்ன் மேன் இறந்து போன துக்கத்தில் இருக்கும் பீட்டர் பார்க்கருக்கும், ‘நாம இதுவரை பண்ணினது எல்லாம் போதும். டோனியே போயிட்டார். இனி நமக்கென்ன போனி?’ எனச் சோர்ந்து போய் பொட்டியைக் கட்டுகிறார் ஐரோப்பா நோக்கி. தன் பள்ளித்தோழர்களுடன் ஐரோப்பா பயணிக்கும் பீட்டரை விடாது துரத்துகிறார் நரசிம்மா. சாரி நிக் ஃப்யூரி, ஒரே போன்ற திரைக்கதை என்பதால் சற்றே பெயர்க்குழப்பம்.

உங்களுக்கு வுட்டி ஆலன் பிடிக்குமா? பிடிக்கும் என்றால், இந்தப்படமும் பிடிக்கும், ஆக்ஷன் காட்சிகளைத் தவிர்த்து மற்ற அத்தனை காட்சிகளையும் அருமை இயக்குநர் வுட்டி தான் இயக்கியிருக்கிறார். என்ன இந்த மார்வல் அவருக்கான கிரெடிட்ஸ் கொடுக்க மறுத்துவிட்டது. To Rome with Love, Midnight in Paris போன்ற படங்களில் அழகாகக் காண்பித்த வுட்டியின் ஐரோப்பாவை அழிக்கின்றன தீய சக்திகள். இப்படி ஒரு கோலத்தில் ஐரோப்பாவைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது. இதற்கு ஸ்பைடர்மேன் அமெரிக்காவிலேயே இருந்திருக்கலாம். எவ்வளவு அடித்தாலும் தாங்கக்கூடிய ஒரே ஊர் அமெரிக்கா தான்.

இத்தாலியை அழிக்கக் கிளம்பிய நீர்ப்பிசாசை ஸ்பைடர்மேன் அழிக்கக் கிளம்பும் போதுதான் இன்னொரு சூப்பர்மேன் வந்து இறங்குகிறார். ‘அட நம்ம ஜேக்’ என்று வாயைப் பிளந்தால், வச்சான் பாருங்கய்யா பெரிய ஷாக். இந்தப் படமே மார்வெலுக்கு ஒரு ஸ்பாய்லர் தான் என்றால் அது மிகையில்லை. புதிய சூப்பர்மேன் மிஸ்டிரியோவிற்கு தன்னால் உதவ இயலாமல் போக தான் ஒரு சூப்பர்மேனே இல்லை என மீண்டும் மனது வெறுத்துப்போகும் நேரத்தில் அயர்ன்மேனிடம் இருந்து ஒரு தகவல் வந்து சேர்க்கிறது நம் ஸ்பைடர்மேனுக்கு.

டோனி பிரத்யேகமாக தயாரித்த அந்த மல்டிபவர் சன்கிளாஸ் கொண்டு உலகையே ஆட்டுவிக்கும் செயற்கைக்கோள் சக்தியைக் கொடுக்கிறார் அயர்ன் மேன். ‘நான் சூப்பர்மேன் இல்ல தல, ஒரு ஃபிகர உஷார் பண்ண முடியல. இத வச்சு நான் என்ன பண்ண போறேன்? நீயே வச்சிக்கோ தல’ என அந்த சூப்பர் பவர் கண்ணாடியை மிஸ்டிரியோவிடம் ஸ்பைடர்மேன் கொடுத்துவிட, ஒருவனுக்கு அஷ்டமத்து சனி ஏழரையில் உக்கிரம் அடைந்தால் என்ன நடக்குமோ அதுதான் பிற்பாதி கதையில் நிகழ்கிறது.

யார் என்ன சொல்லுங்கள், அந்த விஷுவல் எபஃகட் அப்பா ஹாலிவுட் தரத்த அடித்துக் கொள்ள ஆள் இல்லை. இந்த விஷுவல் விளையாட்டிற்காகவே படத்தை இன்னொருமுறை பார்க்கலாம். குறிப்பாகப் பெரிய திரையில். இதையெல்லாம் எங்க தல இன்செப்ஷன்லையே பண்ணிட்டாரு, டாக்டர் ஸ்ட்ரேஞ் பண்ணாத ரேஞ்சா என்று நீங்கள் கூறுவது கேட்டாலும், இந்தப் படத்தின் மிகப்பெரிய பிளஸ், நம்பமுடியாத அந்த விஷுவல் திரைக்கதைதான்.

மார்வெலைப் பொறுத்தவரை நம்பமுடியாததாக இருந்தால் தான் நம்மால் நம்பமுடியும் என்பதை எத்தனை அழகாக மூளைக்குள் ஏற்றிவிட்டார்கள்.

ஆக மற்றபடி ஸ்பைடர்மேன் எனும் அந்த சிறுவன் என்ன ஆனான், அவனால் அமெரிக்காவை, ஆஆஆஆ ஐரோப்பாவைக் காப்பாற்ற முடிந்ததா, அட்லீஸ்ட் தன்னையேனும் காப்பாற்ற முடிந்ததா எனும் கொஞ்சமும் பரப்பரப்பு இல்லாத திரைக்கதையை விறுவிறுப்பு என்ற பெயரில் நம்மை நோக்கிச் செலுத்தியிருக்கும் கதைதான் ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம், தியேட்டர் என்றும் வைத்திருக்கலாம்.

பின்குறிப்பு : நானும் ஒரு மார்வெல் ரசிகன்தான் என்று கூறிக்கொண்டு, வெற்றிவெல், வீரவெல் என்றும் கூறிக்கொண்டு..

7 Jul 2019

ஹார்ட்டுல தொழா


'ஹே யூ, ஹே யூ'

வண்டிக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக இறங்கியபோதுதான் உணர்ந்தேன், யாரோ என்னை அழைப்பதைப் போல. நல்ல பளபளப்பான, புத்தம் புதிய கருப்பு நிற ஜீப்பின் அருகில் நின்றுகொண்டிருந்த தாத்தா ஒருவர் என்னை அழைப்பது தெரிந்தது. பிரவுன் கலர் ஷார்ட்ஸ், வெள்ளை நிறை சட்டை, தலையில் கௌபாய் தொப்பி. பார்ப்பதற்கு வேட்டைகாரனைப் போல் நின்று கொண்டிருந்தார். வெள்ளை மீசையும், அடர் தாடியும் அவரது முதுமையைக் கொஞ்சம் வாளிப்பாகக் காட்டியது. அவரை நோக்கி என்ன என்றேன், "கொஞ்சம் இங்க வர முடியுமா" என்றார். அவர் நின்று கொண்டிருந்த தோரணை அப்படி. பரபரப்பான அந்த கேஸ் ஸ்டேஷனில் அத்தனை பேர் இருந்தும் என்னை அழைக்கக் காரணம் என்ன என்பது புரியாமல், அவரை நோக்கி நடந்தேன். 

"I need a favor", என்று ஆரம்பிக்கும் போதே உள்ளுக்குள் பொறிதட்டியது. அது என்னுடைய ராசியா இல்லை முகலட்சணமா தெரியவில்லை, கூட்டத்தில் ஆயிரம் பேர், ஏன் லட்சம் பேர் இருந்தாலும் "அண்ணே சாப்ட்டு நாலு நாள் ஆச்சு, ஊருக்குப் போக காசு இல்ல, பர்ச தொலைச்சிட்டேன்" ஆளுங்க மொத்தமும் என்னிடம்தான் வருவார்கள். கோவாவில் இருந்து சென்னை திரும்பும் போது மங்களூரில் ரயில் மாறுவதற்காக நின்று கொண்டிருந்த நேரத்தில், ஆவி, ரூபக் மற்றும் கௌதம் நின்று கொண்டிருக்க, அந்த நபர், அந்த மூன்று பேரையும் கடந்து என்னிடம் வந்து சட்டையைப் பிடிக்காத குறையாக காசு கொடு இல்லாட்டி கத்தில குத்திருவேன், ரயில் முன்னாடி பாஞ்சிருவேன் வரைக்கும் மிரட்டிவிட்டுச் சென்றார். கொடுமை என்னவென்றால் அவர் சரக்கடிக்க நான் காசு கொடுக்காத கோவத்தில் "தமிழனுக்கு தமிழன் உதவி செய்யாட்டா எப்படி" என்று கேட்டுவிட்டு தண்டவாளத்தில் துப்பினார். டேய் நான் பாட்டுக்கு சிவேன்னு தானடா போயிகிட்டு இருந்தேன். 

ச்ச ச்ச இந்த ஊர்ல அதும் அமெரிக்கால இப்படிலாம் இருக்காது என்று நினைத்துக்கொண்டே மேற்கொண்டு அவரோடு பேச ஆரம்பித்தேன். இல்லை அவர் என்னோடு பேச ஆரம்பித்தார். 

"தம்பி மே காட் பிளஸ் யூ" என்றவர் கண்களை சந்தேகத்தோடு நோக்கினேன். அமெரிக்காவின் பாதி நிலபுலங்களுக்கு சொந்தக்காரரைப் போல் இருந்தது அவர் தோரணை. அருகில் நின்று கொண்டிருந்த கம்பீரமான அவர் ஜீப், ஒரு நல்ல வேட்டைகாரனுக்கானது. அமெரிக்காவின் பல மாகாணங்களில் வேட்டையாட தடையில்லை என்பது கூடுதல் தகவல்.

"மூணு மைல் தள்ளி இருந்து வாறன். ப்ளேனோல தான் என் பேரக்குழந்தைங்க படிக்கிறாங்க. அவங்கள கூப்பிட வார அவசரத்தில பர்ஸ் எடுத்துட்டு வர மறந்துட்டேன். கிட்டவரும் போதுதான் பார்க்கிறேன் சுத்தமா கேஸ் இல்ல. வண்டிக்கு ரெண்டு கேலன் கேஸ் போட்டுக்கொடுத்தா புண்ணியமா போகும்" என்றார். எளிதில் மறுப்பு தெரிவிக்கத் தோன்றவில்லை. என்னுடைய பலவீனம் அது. இருந்தும் அவரையே சந்தேகமாகப் பார்த்தேன். அன்றைய தினத்திற்கு ரெண்டு கேலன் கேஸ் ஐந்து டாலர். என்ன சொல்லலாம் என யோசித்துகும் போதே மேலும் தொடர்ந்தார். 

"தம்பி எனக்கு ஹார்ட்ல ஒரு தொழ இருக்கு, இந்த வயசுக்கு மேல ஆப்பரேஷன் பண்ண பயமாவும் இருக்கு, நிறைய மாத்திரைகள் சாப்பிடுறேன், அதனால மறதி அதிகம் ஆகிருச்சு, நீ என்ன நம்பலைன்னா சொல்லு, உன்னோட அக்கவுண்டுக்கு நான் பணம் அனுப்பிவிடுறேன்" என்றார். அதே இந்திய வாசகங்கள். என்னுடைய தொடர்ந்த மௌனம் அவர் பேசுவதற்கு மேலும் நேரத்தைக் கொடுத்தது. "இங்க எத்தனையோ பேர் இருக்கும் போது நான் உன்கிட்ட வந்து உதவி கேட்கிறேன்னா அதுக்கு என்ன அர்த்தம், இப்போ கூட மதியம் சாப்பிட்ட மாத்திரை தல சுத்துது" என்றார். அதுதான் எனக்கும் புரியவில்லை. ஏன் எல்லாரும் என்கிட்ட வாறீங்க.  

"சரி ரெண்டு காலன் போட்டுகோங்க" என்றேன். நீயே போட்டு கொடுக்கிறியா என்றார். ஒருவகையில் அதுதான் சரி, எனக்கு பாதுகாப்பும் என்பதால், கார்டை தேய்த்துவிட்டு, பெட்ரோலை நிரப்ப ஆரம்பித்தேன், பணம் ஐந்து டாலரைக் கடக்கும் போது, இன்னும் ஒரு ரெண்டு கேலன் போட்டுகொடுத்தா ரொம்ப சந்தோசப்படுவேன் என்றார். அதுவரை அவர் மீது இருந்த சந்தேகம் வலுத்தது இங்கேதான். "நான் உனக்கு பணம் தருகிறேன்" என்பதை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தார். ஒரு சிறு இடைவெளி கூட விடாமல் பேசிக்கொண்டே இருந்தார். 

"நீ இந்தியன் தானே", "நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்க தான், ஆனா எங்க பூர்வீகம் ஈரான்", "நாங்களும் உங்கள மாதிரி ஆடு மாடுகள வேகவச்சி தான் சாப்பிடுவோம், அதுனால இந்திய உணவுகள் ரொம்பப் பிடிக்கும்" என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.  

பத்து டாலரை நெருங்கும் போது "டேங்க் பில் பண்ணி தரமுடியுமா" என்றார், முகத்தில் அதுவரை இருந்த மொத்த புன்னகையையும் மறைத்து முறைத்தேன். "பரவால்ல பரவால்ல, நீ பண்ணினது மிகப்பெரிய உதவி, இதைவிட பெரிய உதவி யாரும் பண்ண மாட்டாங்க, காட் பிளஸ் யூ, காட் பிளஸ் யூ" என்றபடி வாகனத்தை எடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். ஐந்து டாலரே பெரிய விஷயம். பத்தெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா? 

முன்பெல்லாம் யாருக்காவது உதவி செய்தால் மனம் அவ்வளவு மகிழ்ச்சியடையும். இப்போதெல்லாம் ஏமாற்றப்படுகிறோமோ என்கிற உணர்வு மேலோங்குகிறது. ஐந்து டாலரில் நிறுத்தி இருக்க வேண்டும், ஏன் பத்து டாலர் வரை கேஸ் நிரப்ப சம்மதித்தேன் என்றெல்லாம் ஒரே குழப்பம். 

அந்த கிழவரை வேறொரு தருணத்தில் வேறொரு கேஸ் ஸ்டேஷனில் சந்திப்பேனா? வேறொரு காரை எடுத்துக்கொண்டு வேறொரு நபரிடம் இதே கதைகளை கூறி கேஸ் நிரப்புவரா? அப்போது அவர் முன் சென்று நின்றால் எப்படி இருக்கும். அடுத்த சிலநாட்களுக்கு இதே யோசனையாக இருந்தேன்.  

வால்மார்ட் வாசலில் யாருக்கோ காத்திருக்கும் போது, சாண்டியிடம் நடந்த கதையைக் கூறும்போது, "யோவ் இதே மாதிரிதான் எனக்கும் நடந்தது, வயசான ஒருத்தர் தன்னோட குழந்தைக்கு மருந்து வாங்கனும்ன்னு காசு கேட்டாங்க, அத பார்த்தா உண்மையா கேக்குறமாதிரி இருந்தது, சரி வாங்க வால்மார்ட் பார்மசில நானே வாங்கித்தாறேன்னு கூட்டிடுப் போனேன், அப்படி ஒரு மருந்து அங்க இல்லைன்னு சொல்லிட்டான். அவங்களுக்கு ஒரு மாதிரி அழற மாதிரி ஆகிருச்சு. அங்க இருந்த எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா காசு போட்டு அந்த லேடிக்கு வேற சில திங்க்ஸ் வாங்கிக் கொடுத்து அனுப்பிச்சோம் என்றார். சரி நீங்க எவ்ளோ கொடுத்தீங்க சொல்லுங்க என்றேன் "Nah அதெல்லாம் சொல்ல மாட்டேன்" என்றார். 

"ஒரு அம்பது நூறு டாலர்" என்றேன், "Nah" என்றார் சிரித்துக்கொண்டே. எப்படியும் எவ்வளவு கொடுத்திருப்பார் என்று தெரியும். 

அடுத்த கேள்வி என்னை நோக்கிக் கேட்டார், "சரி உண்மைய சொல்லுங்க, புல் டேங்க் பில் பண்ணிதான அனுப்ச்சிவிட்டீங்க".

6 Jul 2019

போக்கு லாரி

போக்கு லாரி "அண்ணாச்சி பையன கொஞ்சம் மேல சருவாம வர சொல்லுறியளா, நா வண்டி ஓட்டவா வேணாமா", டிரைவரின் பேச்சில் கிண்டலும் கோபமும் கொஞ்சம் இயலாமையும் இருந்தது. "தம்பி கொஞ்சம் தூங்காம வாரியளா" என்று எத்தனையோ முறை கூறிவிட்டார், என்னால் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தகக் குளிரும், லாரியின் குலுங்களும், இளையராஜாவின் வரிகளும் போதுமானதாக இருந்தன, போதையான ஒரு தூக்கத்திற்கு. தூங்கவே கூடாது என கண்களை நன்றாக விரித்தாலும், என்னையே அறியாமல் சாமியாடுகிறேன். "எப்போதும் ஒம்போது மணிக்கெல்லாம் தூங்கிருவான், இப்ப டையம் நடுராத்திரி ஆச்சு, ஏல சீனா தூங்காம வாடே", மாமாவால் மட்டும் என்ன செய்துவிட முடியும்? தென்காசியில் இருந்து சென்னைக்குச் செல்லும் போக்கு லாரியில், வீட்டுச்சாமானை ஏற்றிக்கொண்டு திருவள்ளூருக்குப் புலம்பெயர்வதுதான் எங்கள் திட்டம். நண்பனின் அப்பாவின் மூலமாக சென்னை செல்லும் போக்கு லாரி ஒன்றைக் கண்டுபிடித்து, வாடகை கொடுத்து, தேதியும் குறித்தாயிற்று. போக்கு லாரியில் வாடகை குறைவு, சென்னை வரைக்கும் வெற்று வண்டியாகச் செல்லும் என்பதால் லாரி டிரைவரைப் பொறுத்தவரையில் அவருக்குக் கூடுதல் வருமானம். எங்களைத் தவிர வேறுயாரும் கிடையாது, எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்ளலாம் என்று கூறி இருந்தார்கள். எங்களுடைய பொருள் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு சின்ன கட்டில் ரெண்டு பீரோ, ஒரு டிவி இதர பாத்திரங்கள். பாதி லாரி கூடத்தாங்காது. இத்தனை நாட்கள் சென்னைக்குப் புலம் பெயர்வது தான் ட்விஸ்ட்டாக இருந்தது என்றால், சென்னைக்கு அழைத்துச் செல்லும் லாரியிலும் வந்து சேர்ந்தது ஒரு ட்விஸ்ட், திருச்சிக்கு இடம்பெயரும் குடும்பம் ஒன்றும் எங்களோடு வரவிருப்பதாகவும், லாரியில் ஏற்கனவே தாராளமான இடம் இருப்பதால், பாத்திர பண்டங்களோடு அவர்கள் மூவரும் பின்னாடியே இருந்துகொள்வதாக வாக்குக் கொடுத்திருந்தார்கள். எங்கள் யாருக்கும் இதில் உடன்பாடில்லை என்றாலும் நாமே போக்கு லாரியில் செல்கிறோம் என்பதால் மறுப்புத் தெரிவிக்க முடியா சூழல். சரியாக மாலை ஆறுமணிக்கு பயணம் ஆரம்பமாகியது. கிளீனர் சீட்டில் ஜம்மென்று அமர்ந்து பயணத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். தென்காசிக்கு விடை கொடுக்கும் உணர்வை விட சென்னைக்கு பயணமாகிறோம் என்ற உணர்வு அலாதியாக இருந்தது. பயணம் ஆரம்பித்து ஒரு மணிநேரத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. திடிரென லாரிக்குப் பின்புறம் இருந்து டம்டம் டம்மென பெரும் சப்தம். லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு, பின்பக்கக் கதவுகளைத் திறந்து பார்த்தால், அங்கிருந்த மூவரும் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக கீழேக் குதித்தார்கள். "இன்னும் ஒரு நிமிஷம் கூட இங்க உக்கார முடியாது, பயங்கர கொசுக்கடி, எங்கள முன்ன ஏத்திகோ" என்று வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள் அந்த மூவரும். முன்புறம் இன்னும் ஒருவரை வேண்டுமானால் ஏற்றிக்கொள்ளலாம், அவர்களோ மூன்று பேர். அந்த மூவரும் பேருந்தில் வருவதாகத் தான் கூறியிருக்கிறார்கள். இந்த டிரைவர் காசுக்கு ஆசைப்பட்டு அவர்களிடம் கணிசமான தொகையைப் பெற்றுக்கொண்டு லாரியின் பின்புறம் அமர்ந்து வரும் யோசனையைக் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் கொசுவுக்குத் தெரியுமா என்ன? இடுக்குப்பிடிப்பான, குறுகலான இடத்தில் நான்கு பேர் அமர்ந்திருந்தோம், கிளீனர் சீட்டில் இரண்டு பேர், இருப்பதிலேயே நான் தான் சின்னபையன் என்பதால், கியர்பாக்சுக்கு அருகில் இருக்கும் இடைவெளியில் உட்கார வைத்தார்கள். அடுத்த சில மணி நேரங்களுக்கு எதுவும் தெரியவில்லை. இரவு உணவை சாலையோரக் கடை ஒன்றில் முடித்துவிட்டு ஏறியது தான் தாமதம், தூக்கம் கண்களை சொக்க ஆரம்பித்தது. எவ்வளவோ முயன்று பார்த்துவிட்டேன் முடியவில்லை. ஏற்கனவே அன்றைய காலையில் இருந்து பயங்கரமான அலைச்சல், TANCET எழுத நெல்லை சென்றுவந்தது, வீட்டினை திருப்பிப் போட்டுக் கவிழ்த்தது என பயங்கர அலுப்பு. அத்தனையும் சேர்ந்து என்னை உருட்டி எடுத்துக் கொண்டிருந்தது. எங்கெங்கோ உடலை நெளித்து ஒருவழியாக படுத்துவிட்டேன். இருப்பதிலேயே சின்னப்பையன் என்பதால் யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. எப்போடா திருச்சி வரும் என்று இருந்தது. திருச்சி வந்து அவர்கள் பொருட்களை இறக்கி வைத்ததுதான் தாமதம், நேராக ஏறிச்சென்று க்ளீனர் சீட்டில் அமர்ந்து கொண்டேன். திருச்சியில் இருந்து ஆரம்பமான பயணம் மறக்க முடியாத ஒன்றாக மாறியிருந்தது. க்ளீனரும் மாமாவும் தூங்கியிருக்க, அதற்குப் பிறகான பயணத்தில் டிரைவரை தூங்காமல் பார்த்துக்கொண்டது நானாகத்தான் இருக்கவேண்டும். "நைட் இட்லி தோச சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும், பரோட்டா சால்னா சாப்பிடனும், அதுதான் செமிக்காமா நல்ல உள்ள கெடந்து பொறட்டிக்கிட்டு இருக்கும். அப்போதான் தூக்கம் வராது" என்றெல்லாம் இலவச டிப்ஸ் கொடுத்தார், லாரி டிரைவரான கதையில் இருந்து அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் என அவர் கடந்து வந்த பாதை அந்த இரவு மிக நீளமாக நீண்டு கொண்டிருந்தது. இருந்தும் அவருடைய கதைகள் எதுவும் உவப்பாக இல்லை. ஏதோ ஏமாற்றப்பட்டதைப் போன்ற உணர்வு. விழுப்புரம் நெருங்கும் போது நன்றாக விடிந்திருந்தது. வண்டி நகர முடியாத அளவிற்கு சாலையில் வாகனங்கள் தேங்கி நின்றன. புதிதாகப் போடப்பட்டிருக்கும் ரயில்வே கேட் ஒன்று பழுதானதால் அதை சரி செய்யும் வரைக்கும் எதுவும் நகராது என்று கூறிவிட்டார்கள். அதனை சரி செய்து, போக்குவரத்து சீராகி அங்கிருந்து கிளம்பும் போது நேரம் நண்பகலை நெருங்கி இருந்தது. "அந்த திருச்சி லோட" ஏத்தி இருக்கவே கூடாதுன்னே என்று மாமாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். "இந்தத் தாயோளி வண்டில நாமதாம்ல ஏறி இருக்கக் கூடாது என்று மாமா என்னிடம் புலம்பிக் கொண்டிருக்கும் போது பாத்திர பண்டங்கள் அனைத்தையும் இறக்கிவிட்டு பொதிகை அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தோம்.

5 Jul 2019

மீரா தியேட்டர்...


சுப்ரமணியபுரம் படம் வெளிவந்து பதினோரு வருடங்கள் என்றொரு பதிவு பார்த்தேன். ஒரேயொரு ஒரு வார்த்தை எத்தனையோ பழைய ஞாபகங்களைக் கிளறிவிடுகின்றது. வார்த்தைகளின் வழி ஞாபகங்களைத் துரத்துவதன் சுவாரசியம் வேறெதில் இருக்கப்போகிறது. 

சுப்ரமணியபுரம் படத்திற்கும் எங்களின் புலம் பெயர்வுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நாட்களில் தான் தென்காசியில் இருந்து சென்னைக்கு, திருவள்ளூருக்குப் புலம் பெயர்ந்தோம். பலகாலத்துப் போராட்டம் அது. ஒவ்வொரு ஆண்டுத்தேர்வின் முடிவிலும் நண்பர்களிடம் கூறுவேன் "நாங்க சென்னைக்குப் போகப்போறோம், இனி அடுத்த வருஷம் நாம ஒரே பள்ளிக்கூடத்துல படிப்போமோ தெரியாது" என்று. காலம் எப்போதுமே வேறு பதிலை வைத்திருக்கும். அடுத்த வருடம், அடுத்த வருடம் என அப்பா ஏதேனும் காரணம் சொல்ல, அண்ணன் வேலைக்குப் போன தைரியத்தில்தான் சென்னைக்குள் காலடி எடுத்து வைத்தோம். சென்னை என்றால் சென்னைக்கு மிக அருகில் திருவள்ளூரில். 

என்னைப் பொறுத்தவரை திருவள்ளுரே சென்னையைப் போல் பெரிதான, மிகவும் பரபரப்பான ஊராகத்தான் தோன்றியது. முதன்முறையாக நான்கு வழிச்சாலையில் சைக்கிள் ஓட்டியது திருவள்ளூரில் தான். திருவள்ளூர் என்ற பெயரே சென்னை என்கிற உணர்வை, ஒருவித மிதப்பைக் கொடுத்தது. நாம சென்னை வந்துட்டோம் என்கிற கொண்டாட்டத்தைக் கொடுத்தது. அம்மாவால் தான் தென்காசி ஞாபகங்களில் இருந்து வர முடியவில்லை. 

அப்பாவும் அண்ணனும் வேலைக்கு போன நாட்களில், முப்பது ரூபாய் டிக்கெட்டை எடுத்துவிட்டு சென்னையைச் சுற்றக் கிளம்பிவிடுவேன். திருவள்ளூரில் ஆரம்பிக்கும் பயணம், பூவிருந்தமல்லி வழியாக கரையான்சாவடி, குமணன்சாவடி, போரூர், கத்திப்பாரா, சைதை என திநகர் வரை நீளும், சமயங்களில் மெரீனா, தாம்பரம் வரைக்கும் கூட ஊர் சுற்றிவிட்டுத் திரும்புவேன். கத்திப்பாராவினுள் பேருந்து நுழையும் போதெல்லாம் கனவுபோல் இருக்கும். பேருந்தின் ஜன்னல்களின் வழி சென்னையை ஆராதித்துக் கொண்டிருப்பேன். ஆரத்தழுவிக் கொண்டிருப்பேன். சென்னை எவ்வளவு பிடிக்கும் என்பதை வார்த்தைகளில் கூறிவிட முடியாது. ஆந்த சென்னைகளின் சாலைகளின் வழி பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பது பேருணர்வு. பேர் உவகை.  

இளநிலை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த சமயம், கையில் சல்லி பைசா இருக்காது. அண்ணன் தரக்கூடிய தினசரிப்படி தான் வேலை தேட, ஊர்சுற்ற எல்லாவற்றுக்கும். சென்னை எனும் பிரமாண்டம் காசு இல்லாதவனை ஒன்றும் இல்லாதவன் எனப்பார்க்கும் மாயபிம்பம், வாழ்க்கையில் முன்னேறியே ஆகவேண்டும் என்ற மிகப்பெரிய உந்துதலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஐடி கம்பெனிகளின் பேருந்துகளையும், படோடமாகச் செல்லும் ஊழியர்களையும் பார்க்கும் போதெல்லாம் ஏக்கமாக இருக்கும். ஏதோ ஒன்றை இழக்கவிருப்பனைப் போல் நாட்களைக் கடத்திக்கொண்டிருப்பேன். பலநாட்கள் டி.எல்.எப் பின் வாசலில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறேன். அந்த பிரமாண்ட வாயில் ஒரு ராட்சனனைப் போல, தேவதையின் கண்களைப் போல இருக்கும். ஒருமுறையேனும் அதன் உள் நுழைந்து பார்த்துவிடத் துடிக்கும். ஐடி கூட வேண்டாம், பிபிஓ போதும். அதுவும் டி.எல்.எப்பினுள். 

பிசிஏ படிப்புக்கு ஐடி வேலை அத்தனை எளிதில்லை, முதுநிலை படி என என்னை முதுநிலைக்கல்வி படிக்க வைப்பதில் அண்ணனும் கார்த்தியம்மாவும் மிகத்தீவிரமாக இருந்தார்கள். ஒருவேளை அவர்களில் ஒருவர் பிசிஏ போதும் எனக் கூறியிருந்தாலும் வாழ்க்கை எந்த பாதையில் எதை நோக்கிப் பயணித்திருக்கும் எனத் தெரியவில்லை. நான் ஒரு மந்தை ஆடு என்றால், என் மேய்ப்பன் அவர்கள் இருவரும் தான். 

திருவள்ளூர் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டம். ஒருவேளை திருவள்ளூரில் இருந்து தியாகராய நகர் வரை தினமும் பயணித்திருக்காவிட்டால், டி.எல்.எப் என்னுள் மிகப்பெரும் உந்துதலை ஏற்படுத்தி இருக்காவிட்டால், அண்ணனும் கார்த்தியம்மாவும் என் போக்கில் விட்டிருந்தால்? நல்லவேளை அவை கேள்விகளாகவே காலத்தின் ஓட்டத்தில் தங்கிவிட்டன.

வெறும் ஆறு மாதங்கள் தான் திருவள்ளூரில் இருந்தோம் என்றாலும் மறக்கமுடியா பல நினைவுகளைக் கொடுத்திருக்கிறது அந்த ஊர். எங்கிருந்தோ வந்தவர்களை நெருங்கிய சொந்தம் போல் அரவணைத்துக்கொண்ட ஹவுஸ்ஓனர், அக்கம்பக்கத்து நட்புகள், வீரராகவர், மீரா தியேட்டர், துளசி தியேட்டர், ரயிலடி, தேரடி, அழுக்கடைந்த அந்த பேருந்திநிலையம் என சென்னை எங்களை முழுமையாக அரவணைத்துக்கொண்டது திருவள்ளூரில் இருந்துதான். 

திருவள்ளூர்ல எங்க என யார் கேட்டாலும் சொல்லும் பதில், 'மீரா தியேட்டர் பக்கத்தில'. இரண்டு நிமிடம் நடந்தால் மீரா தியேட்டர். திருவள்ளூருக்கு வந்து சேர்ந்த இரண்டாவது நாள் அம்மாவிடம் இருபது ரூபாய் வாங்கிகொண்டு மீரா தியேட்டரின் பால்கனியில் போய் அமர்ந்தேன். சுப்ரமணியபுரம் ஓடிக்கொண்டிருந்தது.

4 Jul 2019

ஆலங்கட்டி


தென்காசியில் ஒருமுறை ஆலங்கட்டி மழை என்றார்கள், அப்போது தான் முதல்முறையாக அந்த வார்த்தையைக் கேள்விப்படுகிறேன். வானில் இருந்து ஐஸ்கட்டியாக மழை பெய்யுமாம், ஒரு கோலிக்காய் அளவில் இருந்து குண்டுக்காய் அளவு வரைக்கும் இருக்கும், மண்டையில் விழுந்தால் பொளீர் என வலிக்கும் என்றெல்லாம் கணேசன் சொல்லித்தான் தெரியும். அதன் பின்னும் சில முறை ஆலங்கட்டி வந்து போனதாகச் சொன்னார்கள். மின்னல் வேகத்தில் வந்து மறைந்துவிடுமாம். "அதெப்பாக்கெல்லாம் ஒரு யோகம் வேணும்டே" என்றான் கணேசன். ஆலங்கட்டி பற்றி கூகுள் என்ன சொல்கிறது எனப்பார்க்கலாம் என்று தேடினால், ஆத்தூரில் ஆலங்கட்டி மழை மக்கள் சந்தோசம் என்றொரு செய்தியைப் பார்த்தேன். நமக்கெல்லாம் ஆலம் மனது வைத்து இதுபோன்று ஒன்றிரண்டு ஐஸ்கட்டிகளை அனுப்பினால் தான் உண்டு. ஆனால் அமெரிக்க மாகாணங்களில் அப்படியில்லை.  

அமெரிக்கா வந்த இரண்டாவது வாரம், ஒரு மாலையில் வானம் பொத்துக்கொண்டு ஊற்றியபோது வெளியில் யாரோ சரவெடி போடுவது போன்ற சப்தம். "ஜீ இதுக்கு பேர்தான் ஹெயில்" என்றார் ரகு. ஆலங்கட்டி ஹெயிலாக உருமாற்றம் பெற்றது இங்கேதான். அந்த வருடத்தின் முதல் ஹெயிலே பொத்துக்கொண்டு ஊற்றியதால் பல கார்கள் நாசமாயின. ஹெயில விழுந்த கார்கள், புண் வந்து மறைந்த வடுக்களைப் போல் பொத்தல் பொத்தலாக பார்ப்பதற்கே கொஞ்சம் அகோரமாக இருக்கும். இங்கே மக்கள் எதற்குப் பயப்படுகிறார்களோ இல்லையோ ஹெயில் என்றால் வரும் பதற்றம் உச்சத்தில் இருக்கும். கார் என்ன ஓசியிலா கிடைக்கிறது. சமீபத்தில் வந்த ஹெயிலில் புதிதாக வாங்கிய பெராரி ஒன்று அப்பளமாக நொறுங்கியதில், அந்த இளைஞர், காரின் அருகிலேயே உருண்டு பொரண்டதாக ஆல்பர்ட் சொன்னார், அவர் காரும் அதில் கண்டமாகி இருந்தது வேறு விஷயம். 

ஆலங்கட்டி எப்படி உருவாகிறது என்பதே ஒரு சுவாரசியமான நிகழ்வாக இருக்கிறது. 

if (வெப்பச்சலனம் அதிகம் இருக்கும் நாட்களில்) and (காற்றின் ஓட்டம் கீழிருந்து மேலாக நகரும் தருணங்களில்) and (நீரோட்டமுள்ள மழை மேகங்கள் இருக்கும் பகுதியில்) and (அவை இடி மின்னலை உருவாக்கும் மேகங்களாக இருக்கும் பட்சத்தில்) and (அதே மேகங்கள் உறைநிலை வெப்பநிலைக்கு அருகே இருக்கும் சமயங்களில்)

ஹெயிலுக்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது அறிவியல். நல்ல ஈரப்பதமுள்ள காற்றானது மழை மேகங்களின் உள்ளே மேலும் கீழுமாக நகரும் போது, அவற்றின் ஈரப்பதம் உறைநிலையில், உறைந்து பனித்துகளாக மாறி, பனித்துகள் மேலும் கீழும் நகர்கையில், பனித்துகளைச் சுற்றிலும் மென்மேலும் படியும் பனித்துகற் படிமங்கள் பனிக்கட்டியாக மாறி, மேகத்தின் அடர்வையும், புவி ஈர்ப்பு விசையின் அழுத்தத்தையும் பொறுத்து தங்களின் அளவை கட்டமைத்துக் கொள்கின்றன. அடர்வு அதிகம் உள்ள மேகங்களில் உருவாகும் பனிக்கட்டிகள் மிகுந்த சேதாரத்தை விளைவிக்கக் கூடியனவாக உள்ளன. 

பொதுவாக இடியும் மின்னலையும் உருவாக்கக் கூடிய மேகங்கள், புவியின் தரைத்தளத்தில் இருந்து மிக அதிக உயரத்தில் உறைநிலை பகுதிகளில் காணப்படுவதால், வெப்பச்சலனம் ஏற்படும் சமயங்களில், பனிக்கட்டிகளின் எடையைத் தாங்க முடியாமல் தங்கள் உருவத்தை ஆலங்கட்டிகளாக வெளியிடுகின்றன என்று சொன்னால், இப்போது இன்னும் தெளிவாகப் புரியும் என நினைக்கிறேன். 

ஆலங்கட்டியின் புவியின் மீதான தாக்குதல் அதன் வேகத்தைப் பொறுத்தே அமையும். நல்லவேளையாக காக்கும் தெய்வமான நம் வளிமண்டலம், நம்மைச் சுற்றி ஒரு பெரும் பாதுகாப்பு அரணை கட்டுவித்திருப்பதால், பெரும்பாலான சமயங்களில் ஆலங்கட்டிகள் பனித்துகள்களாக மட்டுமே மண்ணை வந்து சேர்கின்றன. கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இருக்கும் நிலப்பரப்புகளை கொஞ்சம் அதிகமாக பதம் பார்க்கின்றன இந்த ஆலம் கட்டிகள். ஆலம் என்றால் ஆகாசம் என்று இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறன். 

இப்போது இத்தனை விலாவாரியாக இதனை எழுதுவதன் காரணம், புவியின் வெப்பச்சலனம் மற்ற எல்லா ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு மிக அதிகமாக உயரந்திருப்பதும், மெக்சிகோவில் நிகழ்ந்த ஒரு கொடூரமான ஆலங்கட்டி தாக்குதலும். டெக்சாசில் நான் வசிக்கும் பகுதியில் மட்டும் வாரத்திற்கு ஒருமுறையேனும் ஹெயில் தன் இருப்பை காட்டிவிட்டுச் செல்கிறது. மற்ற எல்லா வருடங்களையும் விடவும் ஹெயிலின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகம் என்பது கவலை அளிக்கிறது என்கிறது அமெரிக்க வானிலை மையம். 

சரி அதை விடுங்கள், நல்ல சுள்ளென வெயில் அடிக்கும் மொரட்டு சம்மரில், உங்கள் காரை மறைக்கும் அளவுக்கு ஆலங்கட்டி பெய்தால் உங்கள் நிலைமை எப்படி இருக்கும். அதுதான் நடந்திருக்கிறது மெக்சிகோவில் இருக்கும் உதலகாரா (Guadalajara) என்ற பகுதியில். இதற்குக் காரணமாக அவர்கள் கூறும் மற்றொரு முக்கிய காரணம், ஆலங்கட்டியுடன் சேர்ந்து பெய்த கனமழையும் என்கிறார்கள். 

தொடர்ந்து ஆலங்கட்டி மழை பெய்ய, கூடவே பெய்த கனமழை ஆலங்கட்டிகளை தாழ்வான பகுதிகளுக்கு கொண்டு சென்று, அந்த தாழ்வான பகுதி மொத்தத்தையும் சுமார் மூன்றடி உயரத்திற்கு ஆலங்கட்டிகளால் நிரப்பிவிட்டுச் சென்றுள்ளது. யாரும் எதிர்பராத இந்த ஆலங்கட்டி நல்லவேளை பொருட்சேதத்தோடு தன் விளையாட்டை நிறுத்தி இருக்கிறது. ஒருவேளை ஆலங்கட்டிகளின் சுற்றளவு இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்திருந்தாலும் பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.

இயற்கை தன்னாலான அத்தனை பிரயத்தனங்களையும் முன்னெடுத்துக்கொண்டே தான் இருக்கிறது. அடிக்கும் அத்தனை எச்சரிக்கை மணியும் அவை எடுத்துரைக்கும் அபாயமும் நமக்குத்தான் புரிந்தபாடில்லை. புரியும் போது இயற்கை நம்மை என்ன செய்திருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கத்தான் சற்றே அச்சமாக இருக்கிறது.        

3 Jul 2019

Bless You!!!


முதலில் அவர் கூறியது புரியவில்லை. அவர் அதனைக் கூறிவிட்டு நடந்து கொண்டே இருக்க, பிரபு மீண்டும் தும்மினார். மீண்டும் அவரிடம் இருந்து அதே வார்த்தை. இப்போதும் அதனை அவர் கூறிவிட்டு எவ்வித சலமும் இல்லாமல் திரும்பிக் கூடப் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தார். என்ன சொல்கிறார், ஏன் அதனைச் சொல்கிறார் எனப் புரியாமல் நானும் பிரபுவும் ஒருவரை ஒருவர் பார்க்க, பிரபு மீண்டும் தும்மினார். இப்போது அந்தநபர் அலுவலக காரிடாரின் மறுமுனைக்கு சென்றிருந்தபோதும் அதனை அவர் கூறுவதைக் கேட்க முடிந்தது. எங்கள் இருவரைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை என்பதால் யாரிடம் போய் இதனைக் கேட்பது?. நம்மூரில் துப்பினால் ஆயுசு நூறு என்போமே அப்படியான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டோம். 

ஆனாலும் அந்த கேள்விக்கான பதிலை மனம் ஆராய்ந்து கொண்டே இருந்தது. டெக்சாஸில் நிறைய மெக்சிகன்ஸ் உண்டு என்பதால் ஒருவேளை அவர் மெக்சிகோவில் ஏதேனும் கூறினாரா என்றால் அவரைப் பார்க்க மெக்ஸிகன் போன்றும் இல்லை. நல்ல உயர்ந்து வளர்ந்த அமெரிக்கர். அன்றைக்கு எங்களுக்கு யோகம் போலும். இது நடந்த அடுத்த அரை மணிநேரத்தில் பிரபு மீண்டும் தும்மினார். இப்போது எங்கள் அருகில் இருந்த வேறோர் அன்பர் அந்த வார்த்தைகளை மிகத்தெளிவாகக் கூறினார், "ப்ளஸ் யூ". அங்கிருந்தான் அவருக்கும் எனக்குமான உரையாடல் தொடங்கியது.

"தும்மினா ஏன் இத சொல்றீங்க" என்றேன். "தொற்றுவியாதிகள் அதிகம் பரவும் பனிக்காலங்களில், போதிய மருத்துவவசதி இன்றி பலரும் இறந்து போனதால், "ப்ளஸ் யூ" ஆரம்பித்திருக்கலாம், கொடிய நோய்களின் ஆரம்பம் தும்மலின் மூலமே பரவுவதாக இன்றும் நம்புகிறோம்", என்றார்.

"எங்க ஊர்ல சின்ன கொழந்தைங்க தும்மினா கிட்டதட்ட இதே மாதிரியான வார்த்தைகள் தான் பயன்படுத்துவோம்" என்றேன். சுவாரசியமானவர் "அப்படியா" என்றார். பின் அவரே தொடர்ந்தார் "இங்க பள்ளிக்கூடத்தில இருந்தே இந்தப்பழக்கம் ஆரம்பம் ஆகிரும், சில வகுப்பறைகள்ள ஒரு மாணவன் தும்மினாலும், ஒட்டுமொத்த வகுப்பறையும் ப்ளஸ் யூ சொல்லும், அது ஓர் ஆனந்தம், மனநிறைவு, ஆசீர்வதிக்கபடுகிறோம்" என்றார்.

அந்த பேச்சுவார்த்தை முடிந்த சில நிமிடங்களில் ப்ளஸ் யூ குறித்து கூகுளை நாடினேன், முதலில் ரோமர்களும் கிரேக்கர்களும், தும்மல் வருவதை நல்ல சகுனமாகவேப் பார்த்திருக்கிறார்கள் என்கிறது கூகுள். பின் ஆறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பெருகிய கொள்ளை நோய்கள், மக்களின் மனதில் பதற்றத்தை உருவாக்க, ஐரோப்பிய பாதிரியார்கள், தும்மல் சாத்தனானின் வருகை, அவனிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற "ப்ளஸ் யூ" கூற ஆரம்பித்ததாக மேலதிக தகவலைக் கொடுத்தது. ஆக ப்ளஸ் யூவின் வேர் ஐரோப்பா, கிளை அவர்கள் சென்ற இடமெல்லாம் பரவியிருக்கிறது.

யோசித்துப்பார்த்தால் நூறாயிசு நம் வழக்குச் சொல்லா இல்லை ஐரோப்பியர்களிடம் இருந்து நம்மை நோக்கி வந்ததா என்ற கேள்வி எழுகிறது. இப்போதெல்லாம் யார் தும்மினாலும் "ப்ளஸ் யூ" என்கிற வார்த்தையைக் கேட்கறேன். அமெரிக்கர்கள் அதனை ஒரு சடங்காகவே செய்கிறார்கள், உடன் பணிபுரியும் இந்தியர்கள் "ப்ளஸ் யூ" சொல்லும்போது அந்நியமாகப்படுகிறது. அதேநேரம் அமெரிக்கர்கள் "ப்ளஸ் யூ" எதிர்பார்ப்பார்கள் என்பதும் உண்மை. "ப்ளஸ் யூ" உலக மக்களை தும்மலின் மூலம் உலகமயமாக்கல் ஆக்கியிருக்கிறது போலும்.

முகில் தும்மும் போதெல்லாம் வர்ஷனா "Hundred Years" என்று கூறுவாள். வேறொன்றுமில்லை அவள் படித்தது இங்க்லீஷ் மீடியம்.

2 Jul 2019

கோயிந்தா கோயிந்தா


நல்ல உறக்கத்தில் நல்ல பசியில் இருப்பவனை எழுப்பி, யாரேனும் மிளகு பாலும் உப்புமாவும் கொடுத்தால் அவனை எப்படிப் பார்ப்பீர்கள். தெய்வமாக? தெய்வத்தின் தெய்வமாக? அதே தெய்வம் கோயிந்தா கோயிந்தா என உங்களையே தெய்வம் என்றழைத்தால்!

திருப்பதிக்கு வந்து சேர்ந்திருந்த போது நள்ளிரவு, அப்படி ஒன்றும் குளிரில்லை. ஏழுமலையேறும் பேருந்தைப் பிடித்து மலையேறி, மொட்டையடிக்கும் இடம் கண்டுபிடித்து மொட்டையடித்து, குளித்து, பெருமாள் தரிசனத்திற்காக நகரும் போது நேரம் அதிகாலையை நெருங்கி இருந்தது. நல்ல குளிரானது சூடான மொட்டையின் வழியாக மூளைக்குள் புகுந்து தண்டுவடத்தினுள் நுழைந்து பற்களின் வழியே தந்தியடித்துக் கொண்டிருந்தது.

"இங்கயே ரொம்ப நேரம் நிக்க வேணாம். அப்புறம் கூட்டம் ரொம்ப அதிகமாயிரும்" என்று ராகவன் எங்களை இழுத்துக்கொண்டு இலவச தரிசனத்துக்கான கூண்டுக்குள் அழைத்துச் சென்றான். காத்திருப்பு நேரம் குறைந்தது ஆறு மணி நேரம் என்று எழுதியிருந்தார்கள். தூக்கம் கண்ணை சொக்கிக் கொண்டிருந்தது.

நாங்கள் அடைபட்டிருந்த கூண்டு முழுவதும் கோவிந்தா கோஷம். திடிரென யாருள்ளேனும் ஆன்மீக ஊற்று பெருக்கெடுத்தால் 'ஏழுகுண்டலவாடா வெங்கட்ரமணா' என ஆரம்பிக்க, மொத்த கூட்டமும் கோவிந்தா கோவிந்தா என ஆர்ப்பரிக்கும். இதையெல்லாம் கேட்டுகொண்டே இருந்தவன் எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை,

சர்வமும் அமைதியாக இருக்க, திடிரென மொட்டை மண்டையில் டம் டம் டம் என்று அடி விழும் சப்தம். யாரோ காதுக்குள் ஏறி கோயிந்தா கோயிந்தா என்று கத்துவது கேட்டது. அசதி தூக்கம் பசி, எதுவும் கண்களைத் திறக்க விடவில்லை. முகத்தின் மிக அருகில் மொட்டை அடித்த ஒரு பளாபளா நபர், ஆந்திரத் திரைப்படத்தில் வரும் வில்லனைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு கப் நிறைய பாலை என்னிடம் நீட்டினார். நல்ல பெரிய கப். பாதியை குடித்துவிட்டு மீதியை ஆன்டோவிடம் கொடுத்தேன். 

"யாருப்பா அது இப்படி அடிக்கிறான். உன் மண்டைய அடிச்ச அடியில நானே எந்திச்சிட்டேன்" என்றார் ஆன்டோ. பதில் சொல்லும் மனநிலையில் இல்லை. மிளகுப்பால் இன்னும் அதிக தூக்கத்தை வரவழைத்தது. கண்ணை மூடி ஒரு நொடி கூட ஆகியிருக்காது, மீண்டும் யாரோ, அதே டம் டம் டம். முதலில் கனவு என்றுதான் நினைத்தேன். அடியின் வலி இன்னும் ஓங்கி உறைக்க, கண்களைத் திறந்தால் அதே நபர். கைகளில் தட்டு நிறைய சேமியா உப்புமாவை வைத்துக் கொண்டு, "கோயிந்தா லெய் கோயிந்தா, தீசுக்கோ கோயிந்தா" என்றார். அருகிலேயே மணிக்குமாரும், ராகவனும் ஒரு தட்டு நிறைய சேமியா உப்புமாவை வைத்துக்கொண்டு, என்னையே வெறித்துக்கொண்டிருந்தார்கள்.

மணிதான் கேட்டான், "ஏல யார் அவரு, ஆறு மணிக்கு கொண்டு வந்து பால் கொடுத்தாரு, இப்போ ஒம்போது மணிக்கு உப்புமா கொடுக்காரு, நாங்க பாரு அரை மணி நேரமா க்யுல நின்னு வாங்கிட்டு வந்திருக்கோம்" என்று கூறும்போதுதான் முழுவதுமாக முழித்திருந்தேன். அதுவரைக்கும் நடந்து முடிந்த அத்தனையும் கனவு என நினைத்துக் கொண்டிருந்தது மனம். கோயிந்தாவின் முகம் நன்றாக நினைவில் இருந்தது. அவரைத் தேடினேன். எங்கே இருக்கிறார் என கண்கள் சுற்றும் முற்றும் உருண்டன. பார்க்குமிடமெல்லாம் மொட்டை. மொட்டைகளுக்கு மத்தியில் மொட்டை. கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு சில அடி தள்ளி வெகு அருகிலேயே அமர்ந்து, தன் குழந்தைகளோடு பசியாறிக் கொண்டிருந்தார் என் கோயிந்தா. முகம் வில்லனைப் போல் எல்லாம் இல்லை. அப்பாவியான முகம், நிறைய கருணை பொங்கும் கண்கள். 

அற்புதங்கள் எதுவும் நிகழாத நாட்களில் உன்னையே நினைத்துக் கொள்கிறேன். ஆம் நீயே என் அற்புதம். நானே சாட்சி. சீனு - 7:02

1 Jul 2019

ஆப்பிள் வெஸ் ஆண்ட்ராயிட் (கூகுள் பிக்ஸல் 3)

ஒன்று சொல்வார்கள் ஆண்ட்ராயிட் உபயோகித்தவர்களால் ஆப்பிளும்... வைஸ் வெர்சாவும் என்று.

ஆண்ட்ராயிடைப் பொறுத்தவரை அது User friendly, ஆப்பிளைப் பொறுத்தவரையில் அது Performance  friendly. இந்த user friendly என்பதை - எளிதாக ரிங்டோன் மாற்றுவது என்பதாகவும், சுலபமாகத் தரவுகளைத் தரவிறக்கம் மற்றும் பரிமாற்றம் செய்வது என்பதாகவும் மட்டுமே புரிந்து கொண்டிருப்பதால் ஆண்ட்ராயிட் user friendly யாகவும் ஆப்பிள் பல கஜம் தள்ளியும் நின்று கொண்டிருக்கிறது. ஆப்பிளின் சந்தை விலை கைக்கெட்டாக்கனி என்பது முற்றிலும் உண்மை என்றாலும், "ச்சீ இந்தப்பழம் புளிக்கும்" என்று சொல்ல முக்கிய காரணம் "உன்னால ஒரு ரிங்டோன் ஈசியா மாத்த முடியுமா" என்பதுவாகத்தான் இருக்கிறது.

ஸ்மார்ட்போன் உபயோகிக்கத் தொடங்கிய புதிதில் பெரும்பாலானோரைப் போல என் வாழ்வும் ஆண்ட்ராயிடில் இருந்தே தொடங்கியது. சோனி எக்ஸ்பீரியா. உள்ளங்கைக்குள் சொர்க்கம் போல் வந்து சேர, நாளொரு வால்பேப்பரும் தினமொரு ரிங்டோனுமாக கடந்த நாட்களில், "ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் லீலையோ ரோபா" தான் எக்ஸ்பீரியா கோமாவுக்குள் நுழையும் வரைக்குமான ரிங்டோன். வாங்கிய ஒரு வருடத்திலேயே ஆண்ட்ராயிட் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. ஒன்று அதிகமாக சூடாக ஆரம்பித்தது அல்லது சரக்கடித்த கோழியைப் போல் மட்டையாக ஆரம்பித்தது. ஹேங்ஓவரும், ஆட்டோ ரீஸ்டார்ட்டும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம். இதற்கு விடையே இல்லயா என்று நினைக்கும் போதுதான் 'ஆண்ட்ராயிட் செயலியை மட்டையாக்கமால் பாதுகாப்பது எப்படி?' என நூற்றுக்கணக்கான செயலிகள் சந்தைக்குள் நுழைந்தன, அவற்றை தரவிறக்கி, செயலாக்கம் செய்தால், அடுத்த பத்து நிமிடத்திற்கு புல்லட் ரயிலாகவும், பத்தாவது நிமிடத்தில் 'புல்'லட் ரயிலாகவும் தள்ளாட ஆரம்பித்திருக்கும் நம் ஆண்ட்ராயிட்.

இப்போது நாம் உபயோகிக்கும் செயலிகளின் எண்ணிக்கையை விட, அவற்றை வேகமாக உபயோகிக்க வேண்டுமென தரவிறக்கம் செய்த செயலிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். ஆனாலும் நம் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கும். சரி நீ சூடாயிக்கோ, மெதுவா வேலபாரு, ஆனா ஹேங் ஆகாத, ரீஸ்டார்ட் ஆகாத என்று குலதெய்வத்தை வேண்டுவோம். குலசாமியா ஓ.எஸ் எழுதியது பாவம் அவரால் என்ன செய்துவிட முடியும்.     

இந்தத் தீராத்தலைவலியில் இருந்து தப்பிப்பது எப்படி என யோசித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த தகவல் வரும்; ஆண்ட்ராயிட் தரும் இலவச ஆப்புகளைத் தரவிறக்கம் செய்யாதீர்கள் அவை உண்மையிலேயே "இலவச ஆப்புகள்" என்றொரு கட்டுரையை விகடன் வெளியிடும். இதில் கசப்பான உண்மை என்னவென்றால் ஆண்ட்ராயிட் தரும் 99 சதவீத ஆப்புகள் இலவசமான ஆப்புகள் தான். இலவசமாகக் கிடைக்கிறதென பாடலுக்கு ஒரு ஆப்பு, பாடலை கத்தரிக்க ஒரு ஆப்பு, கத்தரித்த பாடலை மடைமாற்ற ஒரு ஆப்பு, புகைப்படம் எடுக்க ஒரு ஆப்பு, அதை மெருகேற்ற ஒரு ஆப்பு அதற்கொரு ஆப்பு இதற்கொரு ஆப்பு என ஒரு கட்டத்தில் ஆறேழு பக்கத்திற்கு ஆப்பு வைத்திருப்போம். ஆனாலும் மொபைல் ஹேங் ஆகக்கூடாது என்ற பேராசையும் இருக்கும். அதற்கும் ஒரு ஆப்பு இருக்கும்.

கணக்கற்ற செயலிகளின் காரணமாக பேட்டரியும் தன் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட ஆரம்பித்து ஒரு கட்டத்தில் மொத்தமாக கடைசிக் கட்டத்தை எட்டியிருக்கும். மொபைல் விழிப்புணர்வு என்ற ஒன்று வராத காலத்தில் நம்மால் காலாவதியாகிப் போன ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை ஏராளம். இன்றைக்கு நம் தலைமுறைக்கு ஓரளவிற்கு மொபைல் போனை அணுகுவது எப்படி என்பது தெரிந்திருக்கிறது. கைபேசி தயாரிக்கும் நிறுவனங்களும், மென்பொருளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வன்பொருளை மேற்கேற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள், ஆனாலும் ஆதிகாலத்துப் பிரச்சனைகள் தீர்ந்ததா என்றால்?

சோனி எக்ஸ்பீரியாவில் இருந்து லெனோவா வைப் மாறி, அதிலிருந்து வேறு வழியில்லாமல் ஆப்பிள் 6S க்கு மாறினேன். ஆரம்பகால ஆப்பிள்போபியா இருந்தாலும், போகப்போக அது ஆப்பிள்மேனியாவாக மாறத்தொடங்கியது. குறைந்தது வருடத்திற்கு ஒரு ஸ்மார்ட்போன் மாற்றிக் கொண்டிருந்த நிலையில், ஆப்பிள் 6S மூன்று வருடங்கள் என்னோடு பயணித்தது என்பதை நம்ப முடியாமல் தான் திரும்பிப் பார்க்கிறேன்.

ஆப்பிளுக்குண்டான மரியாதையைக் கொடுக்காமல் பலமுறை அதனைக் கீழே போட்டு வன்கொடுமை செய்து, ஒரு கட்டத்தில் குத்துயிரும் குலையுயிருமாக உயிரை விட, நிதிப்பற்றாக்குறை காரணமாக ஆண்ட்ராயிட் வாங்க வேண்டிய கட்டாயம்.

அன்றைய தினத்தில், அன்றைய தினம் என்றால் ஒரு மூன்று மாதத்திற்கு முன் என்ன மொபைல் போன் வாங்கலாம் என்றொரு கருத்துக் கணிப்பு நடத்தினேன். ஆண்ட்ராயிட் என்று முடிவாகிவிட்டதால் அத்தனை ஆண்ட்ராயிட் பயனாளர்களிடமும் சென்று நிறைகுறைகளைக் கேட்டேன். ஒருவர்விடாமல் ஒட்டுமொத்தமாக அனைவரும் சொன்னது "ஆண்ட்ராயிட் தான் வாங்கப் போறன்னா இந்த போன் வேண்டாம்"  என அவர்கள் உபயோகித்த மாடலைக் கூறினார்கள். கிட்டதட்ட அத்தனை மாடல்களும் அதில் அடக்கம். சாம்சாங் S8 வகையறா ஓரளவிற்கு உத்தமம் என்றார்கள்.

கடந்த மூன்று வருடத்தில் என்னுடைய மொபைல் பயன்பாடு எப்படி இருந்தது என யோசித்துப் பார்க்கிறேன், பேச, வாட்சப்ப, பேஸ்புக் நோண்ட. ஆண்ட்ராயிட் காலத்திலும் இதே அளவில் தான் மொபைலை உபயோகப்படுத்தினேன் என்பதும் முக்கியமான விஷயம். இதுவரை டெம்பிள் ரன் கூட என் மொபைலில் தரவிறக்கம் செய்ததில்லை. அடிப்படைவசதிகள் மட்டும் போதுமென்றால் ஆண்ட்ராயிட் நோ ப்ராப்ளம் என்றார்கள். பொதுவாகவே மொபைலில் புகைப்படம் எடுப்பது என் வழக்கம் இல்லை என்பதால் கேமரா எனக்கொரு பிரச்சனை இல்லை. கூட்டிக்கழித்துப் பார்த்து பிக்ஸல் 3 முடிவானது. கூகுள் ஒருவன்தான் என் ஆப்பிளை கணிசமான விலைக்கு வாங்கிக்கொள்ள தயாராக இருந்தான்.

கூகுள் பிக்ஸல் 3 வாங்கியது முதல் இந்த நிமிடம் வரை ஆப்பிள் ஞாபகமாகவே இருக்கிறேன். காரணம் ஆண்ட்ராயிடில் சந்தித்த அத்தனை ஆதிகாலப் பிரச்சனைகளும் அப்படியே இருக்கின்றன.

1. வாட்சப் கால் பேசினால் மொபைல் அதிகமாக சூடாகிறது. வாட்சப் வீடியோ கால் என்றால் தொடவே முடியாத அளவிற்கு கொதிக்கிறது
2. ப்ளுடூத் படுத்தி எடுக்கிறது. எந்த காரிலும் ஒழுங்காகக கனெக்டாக மறுக்கிறது. மொபைல் ஒருவேளை பேன்ட் பாக்கெட்டில் இருந்தால் சுத்தம் 
3. குறைந்த இணைய இணைப்பு இருந்தாலும் ஆப்பிளில் பேஸ்புக் அட்டகாசமாக வேலை செய்யும், இதில் அப்படியில்லை. சரியான இணைய இணைப்பு இருக்கும் போதுகூட ஃபேஸ்புக் செயலி சரிவர வேலை செய்வதில்லை   
4. Graphic appearance. ஆப்பிளில் content appearance தரமாக இருக்கும். இதிலே சொங்கியாக இருக்கிறது
5. Outlook - not up to the mark in android
6. App updates - ஆண்ட்ராயிட்க்கான application updates, ஆப்பிளை விட தரம் குறைவாகவே இருக்கின்றன என்பது வேதனையான உண்மை. அதற்குக் காரணம் ஆப்பிள் நிறுவனத்தின் விதிமுறைகளும் தரக்கட்டுபாடுகளும்.

இருந்தும் ப்ளஸ் என்று எதுவுமே இல்லையா என்றால்

1. இவ்ளோ பேசுறியே அப்போ ஏன் ஆப்பிள் வாங்கல என்பதற்கான பதில் ஆண்ட்ராயிட் வாங்க தான் காசு இருக்கு
2. Picture and Video Clarity, அட்டகாசம். ஆப்பிள் x-ல் கூட இப்படி ஒரு தரம் இல்லை என நினைக்கிறன்.  DSLR-க்கு நிகராக இருக்கிறது
3. Unlimited data storage - only for google pixel - இது ஆண்ட்ராயிட் தரும் வசதி இல்லை. கூகுள் தரும் வசதி

இதில் மற்றோர் முக்கியமான விஷயம் என்னவென்றால், முறையாகப் பராமரித்தால் ரெண்டு ஆண்ட்ராயிட் போன் வாங்கும் காசும், ஒரே ஒரு ஆப்பிள் போன் வாங்கும் காசும் ஒன்று தான் என்று கூறிக்கொண்டு. ஆக ஆப்பிளே சிறந்த போன் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்படுவதால், சண்டை போடாமல் யாரேனும் ஒருவர் ஒரேயொரு ஆப்பிள் X போன் வாங்கிக்கொடுத்தால் தன்யனாவேன் என்றும் கூறிக்கொண்டு.

30 Jun 2019

அன்னபெல் - கம்ஸ் கோம்

நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் செல்வது என்பார்களே அப்படி ஒரு அனுபவம் தான் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு பேய்படம் பார்ப்பதும். அந்த இரவில் அந்த அமைதியில் அந்த திகிலில் ஜிலீரென நம்முன் வந்து நிற்கும் அந்தப் பேயை நினைத்துப்பாருங்கள். கற்பனை செய்து பார்க்கவே ஜிலீரென்று இல்லை! அன்னபெல் - கம்ஸ் கோம் நள்ளிரவு காட்சிக்கு முன்பதிவு செய்யும் போது என்னையும் சாண்டியையும் தவிர அரங்கில் வேறு யாரும் முன்பதிவு செய்திருக்கவில்லை. ஒருவேளை கடைசிவரை யாருமே முன்பதிவு செய்யாதிருந்தால் அந்த அனுபவம் இன்னும் திகிலாக இருந்திருக்கும். விதி வலியது. பாதி அரங்கம் நிறைந்திருந்தது. AMC Dolby Sound system உடனான அரங்கம். இசையின் துல்லியமும் உச்சத்தில் இருக்கும். ***** காஞ்ஜூரிங் சீரஸ் பார்க்கும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், இவை அனைத்தும் உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டவை என்பது தான். எட் மற்றும் வாரன் தம்பதியினர் நடத்தி வரும் அருங்காட்சியகத்தில் அன்னபெல் இன்னும் பேயுள்ள ஒரு காட்சிப்பொருளாக வைக்கபட்டிருகிறது என்பது மிக முக்கியமான விஷயம். அன்னபெல் - கம்ஸ் கோம் வெளிவருவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் வாரன் தனது 92-வது வயதில் மரணித்துள்ளார். அவருக்கே இந்தத் திரைப்படத்தினை சமர்ப்பித்துள்ளார்கள் என்பது கூடுதல் தகவல். ***** அன்னபெல் முடியும் இடத்தில் இருந்து தொடங்குகிறது அன்னபெல் - கம்ஸ் கோம். தீயசக்தி புகுந்து பேயாட்டம் ஆடிய அன்னபெல் பொம்மையைக் கைப்பற்றி அதனை தங்களுடைய வீட்டிற்கு எடுத்து வருகின்றனர் எட் மற்றும் வாரன் தம்பதியினர். எடுத்து வரும்முன்னரே அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டகப்படுகிறது, இந்த பொம்மையை அழித்துவிட்டால் என்ன? அதற்கு எட் கூறுகிறார், பேயானது இதனுள் இருக்கும் வரைதான் நம்மால் இதனை கட்டுக்குள் வைத்திருக்க முடியும், அழித்துவிட்டால் இதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இது மிக மிகப் பத்திரமாகப் பாதுக்காக்கப்பட வேண்டிய ஒரு பொருள். நள்ளிரவில் தன்னந்தனியாக எட் மற்றும் வாரன் அன்னபெல்லை பின்னிருக்கையில் வைத்தபடி தங்கள் வீடு நோக்கிப் பயணிக்கிறார்கள். சாலையில் ஏற்கனவே நிகழ்ந்திருந்த விபத்து, இவர்கள் பயணத்தை வேறுபாதையில் மாற்றியமைக்கிறது. அதிலிருந்து சரியாக சில நிமிடங்களில் கார் மக்கர் செய்ய, மயானத்தின் முன் வண்டி நிற்கிறது, அன்னபெல் லேசாக தன் வேலையைக் காண்பிக்கிறது. வாரனுக்கு ஆவிகளைக் காணும், அவற்றோடு பேசும் சக்தி உண்டென்பதால், அந்த சம்பவத்தை மிக லாவகமாக கையாள்கிறார். அன்னபெல் வீடு வந்து சேர்க்கிறது. மந்திர உச்சாடனத்திற்குப் பின், அன்னபெல் ஒரு கண்ணாடிப் பேழைக்குள் வைக்கபடுகிறது. அந்த அறை முழுவதுமே அமானுஷ்ய சக்திகள் அடங்கிய பொருள்களாக நிறைந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு தருணத்தில் பிடிபட்டவை. அவையனைத்தும் சுதந்திரமாக காற்றாட இருக்க, புதிதாக வந்த அன்னபெல் மட்டும் இரண்டடுக்குப் பாதுகாப்புக் கருதி கண்ணாடிப் பேழையினுள் நுழைகிறது. "எக்காரணத்தைக் கொண்டும் திறக்காதீர்கள்" என்ற எச்சரிக்கையின் பின் அன்னபெல் மிக சுவாரசியமாக அமரிந்திருக்கிறாள். அமானுஷ்ய சமாச்சாரங்கள் பாதுகாத்து வைக்கபட்டிருக்கும் அறை என்பதால் அதன் பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு வாரமும் அறை முழுமையும் மந்திரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. எட் வாரன், அலுவல் காரணமாக வெளியூர் பயணப்பட, அவர்களது குழந்தை ஜுடியை கவனித்துக்கொள்ளும் பொருட்டு மேரி எலனும், டேனியலும், வாரனின் வீட்டிற்கு வருகிறார்கள். டேனியலின் குறுகுறுப்பு காரணமாக, அமானுஷ்ய அறை திறக்கபடுகிறது. சிறுவயதிலேயே இறந்து போன அவள் அப்பாவை அங்கு தேட முயல்கிறாள். நிஜமாகவே அது ஓர் அமானுஷ்ய அறை என்றால் அதை நிரூபிக்கும் பொருட்டு ஏதுனும் ஒரு சமிக்ஷை வேண்டும் எனப் பேய்களிடம் கட்டளையிட, கெஞ்ச, பேய்கள் எதுவும் அசைந்து கொடுக்காத விரக்கதியில் டேனியலா அங்கிருந்த கிளம்ப எத்தனிக்க, அந்த நொடியில் ஓர் ஆச்சரியம் நிகழ்கிறது. இங்கிருந்து ஆரம்பமாகிறது ரோல்ஸ் ghoester ரைட். அன்னபெல் உருவாகிய கதை தெரியும், காஞ்சஜுரிங்கில் அன்னபெல் எவ்வாறு விளையாட்டுக் காட்டியது என்பதும் தெரியும். அன்னபெல் - கம்ஸ் கோம், இரண்டுக்கும் இடைப்பட்ட கதை என்பதால், நல்லவேளை பிளாஷ்பேக் எதுவும் இல்லை என்பது லேசான மன ஆறுதல். வழக்கமான ஒரே வீடு, ஓர் அறைக்குள் நிகழும் வகையறா திரைக்கதை என்றாலும், கதை என ஒரு ஓரத்தில் சில உணர்ச்சிகரமான மென்மையான சம்பவங்களும் நிகழ்கின்றன. அன்னபெல் - ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொருவரையும் வகைவகையாய் மிரட்ட, முழுமையான சுழலுக்குள் சிக்குவது என்னவோ டேனியலா தான். எட் வாரன் தம்பதிகள் வீட்டில் இல்லாத போது அன்னபெல்லின் அட்டகாசத்திற்குள் சிக்கிக்கொண்ட இந்த மூவரும் என்னவாகிறார்கள், யாரேனும் பிழைத்தார்களா, அன்னபெல் என்னவானது என்பதை மிக ஜாலியான திரைக்கதையாக எழுதி இருக்கிறார்கள். மூவரின் நடிப்பும் அபாரம். ஒரு பேய்ப்படத்திற்கான அத்தனை பேயம்சங்களும் உள்ள படம். படத்தின் ஒரேகுறை பேய்த்தனமான காட்சிகளுக்கான வாய்ப்புகள் திரைக்கதையில் ஏராளமாக இருந்தாலும் அவற்றை ஏன் முறையாக உபயோகபடுத்தவில்லை என்பதுதான். பேய்ப்படத்தில் திடீர் ஜிலீர் காட்சிகள் இல்லை என்பது ஒரேகுறை மட்டுமில்லை பெருங்குறையும் கூட. அதற்காக படம் ரசிக்கும் படி இல்லையா என்றால், என்னைப்பொறுத்தவரை கொண்டாட்டமாகவே இருந்தது. என்ன சிக்கன் பிரியாணியை எதிர்பார்த்து சென்றவனுக்கு பரோட்டா சால்னாவைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். மற்றபடி படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.

29 Jun 2019

+9-1-1


வெளியில் சற்றும் பழக்கம் இல்லாத மார்ச் மாதத்துக் குளிர், மணி நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. கதவு வேகமாக தட்டப்படும் சத்தம்.

ஓர் உள்ளுணர்வு. ஒருவேளை அது போலீசாக இருக்குமோ. ஒருவேளை போலீசாக இருந்தால் ! கதவின் துவாரம் வழியாக நோக்கினேன், நின்று கொண்டிருந்த இரண்டு பேருமே போலீஸ். ஒருவர் குள்ளமாக மற்றொருவர் மிக உயரமாக. இருவரின் கைகளும் இடுப்பில் இருந்த துப்பாக்கியின் மீது. துப்பாகிகள் பளீரென மின்னின. 

'மகேஷ் போலீஸ் வந்து இருக்காங்க, இப்போ என்ன பண்றது' இதைக் கேட்ட கணத்தில் மெத்தையில் இருந்த துள்ளிக் குதித்த மகேஷின் கண்களில் கோபம், முகத்தில் பரபரப்பு. என் உடல் முழுக்க ஜில் என்று இருந்தது. அமெரிக்கா வந்த முதல் வாரத்திலேயே, எது அமெரிக்கா என புரியும் முன்னமே வீட்டு வாசலில் போலீஸ் நின்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும்.     

'பாஸ் போலீஸ் வார அளவுக்கு என்ன செஞ்சீங்க', கேட்டுக்கொண்டே என்னை நெருங்கியவரின் முகம் இன்னும் சிவப்பாய் மாறியது.

'இப்போ என்ன பண்ண', இதற்குமேல் அப்பாவியாய்க் கேட்க முடியாது. அடுத்த கேள்வி கேட்டால் அவரே என்னைச் சுட்டுத்தள்ளிவிடுவார் போல் இருந்தார்.   

'என்ன பண்ணவா, மொதல்ல கதவ தொறங்க பாஸ்' பேசிக் கொண்டிருக்கும் போதே கதவு மீண்டும் பலமாக தட்டப்பட்டது. திறந்தேன். 

'ஹலோவ்வ், வீ ஆர் ப்ரம் ப்ளேனோ போலீஸ் டிபார்ட்மென்ட்', மூளை மிக வேகமாக செயல்படத் தொடங்கியது. எங்கே எப்போது எப்படிப் பிசகியது. அவர்களை அழைத்தது நான் தான். 

*****

அமெரிக்கா வந்து டி-மொபைல் வாங்கிய நாளில் இருந்தே பெரும் பஞ்சாயத்தாக இருந்தது எனக்கும் டி-மொபைலுக்கும். வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி எங்கு நின்று பேசினாலும் சிக்னல் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அமெரிக்காவின் மிக முக்கியமான நெட்வொர்க் என்றுதான் வாங்கிக் கொடுத்தார்கள். ஜெட்லாக் வேறு தீர்ந்தபாடில்லை. இதில் இரவு பதினோரு மணிக்குமேல் தான் offshore மக்கள் வந்து சேர்வார்கள். முதல்முறை ஆன்சைட், பழகாத மனிதர்கள், புரியாத மொழி, இடம், அலுவலகம். மூளை வெகுவாக சோர்வடைந்திருந்தது. இதற்கு மத்தியில் இந்த டி-மொபைல் வேறு.

ஜெட்லாக் போகாத அரைத்தூக்கத்தில், என்ன பேசப்போகிறோம் எனத்தடுமாறும் நள்ளிரவில், 'ஜீ உங்க சிக்னல் ரொம்ப வீக்கா இருக்கு, கொஞ்சம் தெளிவா பேசுறீங்களா' என்ற அதட்டலான குரல் அந்தப்பக்கம் இருந்து வரும். வீடு முழுக்க சுற்றுவேன், எங்கேயும் சிக்னல் இருக்காது. கால் கனெக்ட் ஆகும். டிஸ்கனெக்ட் ஆகும். இப்படியே சுற்றிச்சுற்றி ஒரு வழியாக நன்றாக சிக்னல் கிடைக்கும் இடத்தை கண்டுபிடித்தேன். வீட்டு பால்கனி. எப்போது திறந்தாலும் சில்லென்ற காற்று வெளியே வீசும் பால்கனி. அந்த நள்ளிரவில் அந்தக் குளிரில் இன்னும் ஒரு நிமிடத்திற்கு மேல் நின்றாலும் ஜன்னி வந்துவிடும்.

'பாஸ் ஒழுங்கா ரூம் உள்ள வந்து பேசுங்க, நாளைக்கு ஆபீஸ் போணுமா வேணாமா?' எச்சரித்தது மகேஷ் தான். 'இல்ல உள்ள சிக்னல் கிடைக்கல, அதான்' என்றேன். ஏதோ யோசித்தார். எதுவும் பேசாமால் சென்றுவிட்டார்.

அடுத்தநாளும் வந்தது. offshore காலுக்கான நேரமும் வந்தது. அறையில் இருந்த ஒரு பழைய கார்ட்லெஸ் போனைக் கொண்டுவந்து கையில் கொடுத்தார். 'இந்த போன்ல பேசுங்க. இன்டர்நெட் காலிங் போன். இதுக்கு எந்த சிக்னலும் அவசியம் இல்ல. நெட் இருந்தா போதும். இத ரொம்ப நாளா யூஸ் பண்ணல. உங்களுக்காகத்தான் தேடி கண்டுபிடிச்சேன். பட்டன் எல்லாம் கொஞ்சம் ஹார்டா இருக்கும். ஒரு தடவைக்கு ரெண்டு தடவ அழுத்தினாதா போகும்' என்றார். பலநாள் பயன்பாட்டில் இல்லாத பழைய டவுன் பஸ் போல் இருந்தது அந்த கார்ட்லெஸ்.

*****

கதவைத் திறந்த அடுத்தநொடி அந்த இரண்டு போலீஸ் உருவமும் உள்ளே நுழைந்தது. 'இந்த வீட்ல இருந்து தான் எங்களுக்கு அழைப்பு வந்தது, எதுவும் பிரச்சனையா?' துப்பாக்கியின் மீதிருந்த கைகளை அவர்கள் எடுக்கவே இல்லை

என்னசொல்வதெனத் தெரியாமல் நடந்து முடிந்த அத்தனை கதையையும் அவர்களிடம் விவரித்தேன். அவர்கள் நம்புவதாக இல்லை. உங்கள் எண்ணில் இருந்து அழைப்பு வந்து, எங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் மீண்டும் மீண்டும் அழைத்தோம், எதுவும் பதில் இல்லை. அதனால் தான் நேரில் வந்தோம் என்று விளக்கம் கொடுத்தார்கள்.

அவர்கள் கூறியது முற்றிலும் சரி, அவர்கள் மீண்டும் மீண்டும் அழைத்தபோது 'அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்' என்று கையில் இருந்த கார்ட்லெஸ் போனை அவரிகளிடம் காண்பித்தேன். இரண்டு மூன்று நிமிடம் அதை ஆராய்ந்தவர்கள் "உள்ளே வரலாமா?" என்றார்கள். அதுவரை வாசலிலே தான் நின்று கொண்டிருந்தார்கள். நுழைந்தர்வகள், நாங்கள் என்ன செய்கிறோம், எங்கே வேலை பார்க்கிறோம், அறையில் மொத்தம் எத்தனை பேர், மற்றவர்கள் எங்கே என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுகொண்டே சமையலறைக்குள் நுழைந்தார்கள். போலீஸ் நெடி கொஞ்சம் அச்சுறுத்துவதாக, விபரீதமாக இருந்தது. அரை முழுக்க மௌனம். பார்வையால் வீட்டை அளந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நெஞ்சில் இருந்த சீக்ரெட் கேமெரா எங்களைப் படம் பிடிப்பது தெரிந்தது. 

சௌசௌ வெட்டி வைத்திருந்தேன். அடுத்தநாளுக்கான சமையல் நடந்து கொண்டிருந்தது. அறைக்குள் அசம்பாவிதமான, அசாதாரணமான சூழல் எதுவும் நிகழ்கிறதா, நிகழ்ந்துள்ளதா என்பதை நோட்டம் விட்டுக்கொண்டே கொஞ்சம் நட்பாக பேச ஆரம்பித்திருந்தார்கள். அதுவரை இருந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருந்தது. சமையலறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த பெரிய கத்தியை எடுத்து கையில் வைத்துக்கொண்டார் அந்த உயர் அதிகாரி. கத்தி காய் வெட்ட மட்டுமே என் நம்பிக்கையின் மீது அவருக்கு நம்பிக்கை போலும். சௌசௌ என்றால் என்ன அது எப்படி இருக்கும், எப்படி அதை வைத்து சமைக்க வேண்டும், அதன் சுவை எப்படி இருக்கும். சாம்பார் என்றால் என்ன என்றெல்லாம் கேட்டுவிட்டு, தயவுசெய்து இனி இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளவும் என்ற அட்வைசி விட்டுச் சென்றனர். அவர்கள் கவனம் எண்ணம் செயல் என்னவாக இருந்தாலும் துப்பாக்கியின் மீதிருந்த கைகளை அவர்கள் கடைசிவரை எடுக்கவே இல்லை. அவர்கள் சென்ற பின் மகேஷ் என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே!!! 

*****         

மகேஷ் ஒரு கார்ட்லெஸ் போனை என்னிடம் கொடுத்து உபயோகிக்கச் சொன்னார் என்று சொன்னேன் இல்லையா அதுதான் நடந்த அத்தனை கூத்துகளுக்கும் காரணம். அதில் ஒரு எண்ணை அழுத்தினால் வேறோர் எண்ணும், மற்றோர் எண்ணை அழுத்தினால் சம்மந்தமே இல்லாத எண்ணும் பதிவாகிக் கொண்டிருந்தன, அதனுடன் போராடிக் கொண்டிருக்கும் போதே இந்திய அழைப்புக்கான 91 ஐ அழுத்துவதற்குப் பதிலாக 911 ஐ அழுத்தியிருக்கிறேன், என்னை அறியாமல் எதுவோ நடந்திருக்கிறது. சௌசௌ வைப்பது எப்படி எனக்கேட்க அம்மாவிற்கு அழைத்தால் என்னடா சம்மந்தமே இல்லாமல் யாரோ பேசுகிறார்கள் என அழைப்பை துண்டித்துவிட்டு சாவகாசமாக அம்மாவிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டால். சமூகம் வீட்டிற்கே வந்திருக்கிறது என்னவோ ஏதோ என்று.  

28 Jun 2019

தென்காசி - வளைவுகளின் ஊடாக

விகடனில் கிக்கி கதை படிக்க ஆரம்பித்த கணத்தில் இருந்தே தென்காசி ஞாபகமாக இருக்கிறேன். அதற்காக கிக்கியை உயர்த்து மதிப்பிடாதீர்கள், நேர விரயம். இருந்தும் சில கதைகளில் வரும் சில வரிகள் போதுமானது காணாமல் போன கடந்த காலத்தினுள் நம்மைக் கொண்டுசேர்க்க. கிக்கியில் திருடன் போலீஸ் விளையாடும் சிறுவர்கள் வழியாக கள்ளாம் போலீஸ் நினைவுகள் வந்து போகின்றன. சின்னச்சின்ன சந்துபொந்து என தென்காசியின் அத்தனை முடுக்குகளிலும் திருடனாகவும் போலீசாகவும் ஓடியிருக்கிறோம். எங்கிருந்து எப்படி எவனை வளைப்பது என்பது முதற்கொண்டு ஓடிக்கொண்டே கட்டம் கட்டுவோம். சொல்லபோனால் திருடனாக இருப்பது மிக எளிது, வளையைக் கண்டுபிடித்து அதனுள் ஒளிந்துகொள்வது மட்டுமே வேலை. அவ்வப்போது வளையை மாற்றிக்கொண்டே இருந்தால் போதும். ஆனால் போலீசாக இருப்பதற்கு கொஞ்சமே கொஞ்சமேனும் மூளை வேண்டும். திருடனின் பாதையிலேயே சென்று திருடனை வளைத்துப் பிடிக்கும் உத்தி தெரிய வேண்டும். தெருவில் எத்தனை வளைகள் இருக்கின்றன, எத்தனை வழிகள் இருக்கின்றன, திருடன் ஓட ஆரம்பித்தால் அவன் ஓடும் திசையில் மற்றொருவனை நிறுத்தி எப்படி அணை கட்ட வேண்டும் என்பது முதற்கொண்டு அனைத்தும் விரல் நுனியில் இருக்க வேண்டும்.

தொட்டுப்பிடிச்சி, கல்லா மண்ணா, கண்ணாம்பொத்தி, கபடி, செவண்டிஸ் என பல விளையாட்டுக்கள் இருந்தாலும் அவை எதுவும் திருடன் போலீசின் அருகில் கூட வர முடியாது.

ஐந்து பேர் திருடன். ஐந்து பேர் போலீஸ். போலீஸ்கள் கண்ணை மூடிக்கொள்ள திருடன் தனக்கான வளையைத் தேடி ஓட வேண்டியதுதான் பாக்கி. ஒரே விதிமுறை யாரும் யாருடைய வீட்டினுள்ளும் ஒளியக் கூடாது. இதுதான் மிகமுக்கியமான விதியும் கூட. இந்த விதியில் இருந்துதான் தென்காசியின் எல்லைகள் எனக்குள் விரியத் தொடங்கின. கீழப்பாளையத்தின் அத்தனை முடுக்குகளிலும் நாங்கள் இருந்தோம். 'ஏலப்பிடில அவன', 'தொரத்துல அவன' எனப் பம்பரங்க்களாய் சுழன்று கொண்டிருந்த வளைவுகள் அவை. அத்தனை வளைவுகளும் ஏதோ ஒரு வளைவினுள் நுழைந்து எங்கெங்கோ சென்று மீண்டும் ஒரு வளைவினுள் கொண்டுபோய் சேர்ந்திருக்கும், பலநூறு புள்ளிகளை இணைத்த கோலம் போல, வளைந்து நெளிந்து ஓடும் ரத்த நாளம் போல, முடிவில்லா முடிவிலியைப் போல.

தொண்ணூறுகளின் மத்தியில் எனக்குத் தெரிந்த தென்காசிக்கும் இன்றைய தென்காசிக்கும் துளியும் சம்மந்தமில்லை. இத்தனைக்கும் கால ஓட்டத்தில் வெறும் இருபது வருடங்கள் மட்டுமே நகர்ந்திருக்கிறோம். இந்த இருபது வருடங்களில் தென்காசி பெரும்பாலும் கான்கிரீட்டாக மாறிவிட்டது. குறைந்தது ஐந்து கிமீ சுற்றளவிற்காவது நகரம் தன்னை விரித்து மாற்றிக் கட்டமைத்திருக்கிறது. அன்றைய தென்காசி அப்படி இல்லை. வாய்க்காபாலம், யானைப்பாலம், ரயில்வே பாலத்தை மீறி விரிந்திருக்கவில்லை. இருள் மங்கிய நேரங்களில் யாரும் தங்கள் அலுவல்களை வைத்துக்கொள்வதில்லை. சுற்றிலும் நதியும், தென்றலும், அதன் பின் மலைகளும், அருவியும் சூழ்ந்த பேரூர் அது.
நகரம் விரிவடைகையில் 'ஏல இப்டி ஒரு அத்ததுல போயா பஸ்டாண்ட வப்போனுவ கிறுக்குத் தாயோளியோ' என பலரும் வசை பாடியதை கேட்டதுண்டு. இன்றைக்குப் புது பஸ்டாண்டு நகரின் மத்தியைப் போல ஆகிவிட்டிருக்கிறது. அன்றைக்கு தென்காசிக்கு என இருந்த அந்த ஒரேயொரு பேருந்து நிலையமும் அத்தனைப் பெரிதாகத் தெரிந்ததுண்டு, புது பஸ்டாண்ட் பழைய பேருந்து நிலையத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டிருந்தது. பல வருடங்களுக்கு ஒரு பாழடைந்த பங்களாவைப் போல், வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கடைசி மதில் சுவரைப் போல் நின்று கொண்டிருந்தது பழைய பேருந்து நிலையம். அதனுள் நிறைந்திருந்த ஜனத்திரள் இன்றைக்கும் மங்கலான வெளிச்சத்தில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. தென்காசிக்கான பெரிய மாற்றம் அந்த பேருந்து நிலையத்தில் தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

ஊரின் முகம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. திண்ணை வைத்துக் கட்டப்பட்ட அத்தனை வீடுகளும் வழக்கொழிந்து போய்விட்டன. ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் பெரும்பாலும் இல்லாமல் ஆகிவிட்டன. தகரம் வேய்ந்த எங்கள் வீட்டுக்கூரை இன்றைக்கு கான்கிரீட்டாக மாறி நிற்கிறது. பல வளைவுகள் வீடுகளாக வீட்டு மதில்களாக மாறி நிற்கின்றன. மிக நெருக்கமான வீடுகள், வீதிகள். ஊரின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் தெரியும் தென்காசி பெரிய கோவில் கோபுரம் கூட கான்கிரீட்டின் கூரைகளுக்கு மத்தியில் தனியொருவனாக நின்று கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் அது ஒன்றுதான் தென்காசியின் பழைய கட்டிடமாக நிற்கும் என நினைக்கிறேன். இன்றைக்கும் தென்காசியில் மாறாதிருக்கும் ஒன்று என்றால் அது பெரிய கோவில் காத்துதான். ஒரு கடற்கரையைப் போல மாறிவருகிறது அந்த இடம்.

இரவு நேரங்களில் தென்காசி ரயில்வே கேட்டைத் தாண்டிப் போவதற்கே பயப்படுவார்களாம், நிஜ கள்ளன் போலீஸ் விளையாட்டு நடைபெறும் இடமாக இருந்திருக்கிறது அந்தப்பகுதி. ரயில்வே கேட்டைத்தாண்டி இருந்த ஒரேயொரு முக்கியமான இடம் நாங்கள் படித்து வளர்ந்த கவர்மென்ட் ஸ்கூல். ஏழுமணிக்கு மேல் ஒரு ஈ காக்கா அங்கு இருக்காதாம்.

நகரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. காற்றாலைகள் ஒருபுறம் ஈரப்பதத்தையும் நிலத்தடி நீரையும் இல்லாமல் செய்தாலும், பலபேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது என்னவோ உண்மை. முன்னெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியும் வயக்காடுகள் அருகி வருகின்றன. நகரின் குளுமை வெகுவாக குறைந்துவிட்டது. ஐந்து தெருவுக்கு ஒரு அடிபம்பு இருந்த காலம் போய், தெருவுக்கு ஐந்து அடிபம்பு வந்து அதுவும் போதாமலாகி இன்றைக்கு போர்வெல் குழாய்க்கும் அடிபிடி சண்டை நடக்குமளவிற்கு தீவிரம் அடைந்திருக்கிறது தென்காசியின் தண்ணீர்ப் பிரச்சனை.

ஊர்முழுக்க செண்பகவனம் நிறைந்திருந்த சிற்றாற்றுக் கரை ஓரங்களில் நீர் அருந்த புலி வருமாம். இதைக் கேட்ட என்னால் அந்தக்காட்ச்சியை கற்பனை செய்ய முடிந்ததே தவிர நம்ப முடியவில்லை. சிற்றாற்றில் கடல் போல் வெள்ளம் போகும் என்பதையும் மிகப்பெரும் கற்பனையாகவே உணர்கிறேன். நாளை சிற்றாரே மிகப்பெரும் கற்பனை என்றாகிவிடுமோ என்பதை நினைக்கும் போதுதான் புலி நீர் அருந்தி இளைப்பாறிச் சென்ற கதையை என்னால் வெறும் கதையென நம்ப முடியவில்லை. நதிக்கரையில் கட்டமைக்கப்பட்ட நாகரீகம் அதே நதிக்கரைகளை உடைத்தெடுப்பதன் மூலம் தன் அடுத்த பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நீங்களும் நானும் ஒரு நாடோடியாக, ஒரு பார்வையாளனாக, ஒரு சாட்சியாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு நாமே சாட்சி.

27 Jun 2019

சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார்!!!

சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சுந்தர் பிச்சையிடம் இருந்து நட்பு அழைப்பு வருமென. மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன். அது அவர்தானா. இல்லை அவருடைய போலியா என. சுந்தர் பிச்சையின் பக்கத்திற்குள் நுழைந்து அத்தனை தகவல்களையும் ஆராய்கிறேன், அவையனைத்தும் 'சுந்தர் பிச்சையாகிய நான்' என்கிறது. உலகம் ஒருமுறை நின்று சுற்றுவது போல் இருக்கிறது இல்லையா. இல்லை. உங்களுக்கெப்படித் தெரியும். அவர் நட்பழைப்பு விடுத்தது எனக்கல்லவா. ஆகலையால்...

அவருடைய முகப்புப் படத்தையே மிகக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதெப்படியெனத் தெரியவில்லை, பெரிய மனிதர்களுக்கெல்லாம் அட்டகாசமான முகப்புப்படம் கிடைத்துவிடுகிறது. முகம் முழுக்கப் பிரகாசம், லேசாக ஒரு பக்கம் திரும்பிய, அதீத மலர்ச்சியுடனான, பாந்தமான முகம். தேவையை விட கொஞ்சம் கூட அதிகமாக சிரிக்காத விழிகள். கொஞ்சமே கொஞ்சம் நரைத்த தாடி என பக்கத்து வீட்டு அண்ணனைப் போல் இருக்கிறார் சுந்தர் பிச்சை. கூகுள் சுமந்தாலும் தமிழ்ப்பிள்ளை அல்லவா (முக்கிய குறிப்பு : சாதி அல்ல). 

சுந்தர் பிச்சையிடம் பிடித்ததே அந்த பவ்யம் தான். என்றைகாவது ஒருநாள் அவரோடு அமர்ந்து காபி சாப்பிடும்போது அவரிடம் இதைக் கூற வேண்டும் என்று நினைத்திருந்தேன். கூறியிருந்தால் அதற்கும் அதே பவ்யத்தோடு சிரித்திருப்பார், லேசாக தலையசைத்திருப்பார். உள்ளுக்குள் கொஞ்சம் பெருமைப்பட்டிருப்பார். 

சுந்தர் பிச்சையின் மீது அதீத நேசம் வந்த சம்பவத்தைக் கூற வேண்டும் எனில் அது தமிழன் ஒருவன், அகில உலகின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவன், உலகின் மெத்தப் படிப்பையெல்லாம் படித்ததாக நம்பும் உலகில் தலைசிறந்த நீதிபதிகளாக தங்களைக் கூறிக்கொள்பவர்களின் முன் அதே பவ்யத்தோடு அமரிந்திருந்த, கதைத்த அந்த நொடிகளைத்தான். அரியாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துகொண்டு பவ்யமாக பதில் கூறுபவனை விட, பவ்யமாக அமர்ந்துகொண்டு கம்பீரமாக பதில் கூறுவதில்தான் சாமர்த்தியமும் திறமையும் இருக்கிறது என சுந்தர் பிச்சை நிகழ்த்திக் காட்டிய கணங்கள் அவை. நீங்கள் அந்த காட்சியை பார்த்திருக்கிறீர்களா தெரியவில்லை. ஆனால் நான் பார்த்ததில்லை. பார்த்தவர்கள் சொன்னார்கள். பார்த்தவர்கள் சொன்னதையெல்லாம் நம்பிவிடும் ஆசாமி நான் இல்லை என்றாலும் சுந்தர் பிச்சையைக் குறித்து யார் சொன்னாலும் நம்பியிருப்பேன். (குறிப்பு : நல்ல விதமாக). 

கூகுளை கூக்ளி என அழைத்த நாட்களில் இருந்தே கூகுள் அறிமுகம் எனக்கு. ஆனால் சுந்தர் பிச்சை அப்படியில்லை. அவருக்கும் எனக்குமான நட்பு இன்னும் கணங்களைக் கடந்திருக்கவில்லை. அவரோடு பேசவேண்டியதும் நட்பு பாராட்ட வேண்டியதும் ஏராளம் இருக்கிறது. எத்தனை பெரிய மனிதர். தனக்குக் கிடைத்த அப்ரைசல் ஹைக்கை உதறித்தள்ளவெல்லாம் தனி மனதைரியம் வேண்டும்.  

கூகுளில் ஒரு தொழிற்பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது எனக்கூறி சாண்டி என்னை அங்கு அழைத்துச் சென்றபோது கூட நம்பவில்லை, நானும் அமேரிக்கா வருவேன், கூகுள் நிறுவத்தினுள் காலடி எடுத்து வைப்பேன் என, ஆனால் பாருங்கள் இன்றைக்கு சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார். நண்பர் சுந்தர் நிர்வகிக்கும் கூகுள் நிறுவனம் பூலோக சுவர்க்கம். அப்படித்தான் இருக்கிறது அங்கிருக்கும் பணிச்சூழல். ஸ்டார்பக்ஸ் காபி இலவசமாக தருகிறார்கள் என்பதைவிட வேறென்ன எளிமையான உதாரணத்தைக் காண்பித்துவிட முடியும் உங்களுக்கு. 

பல மாடி கட்டிடத்தின் உயரத்தில் அமர்ந்திருக்கும் அந்த காபிடேரியாவில் இருந்து பார்த்தால் ஆஸ்டினின் மொத்த அழகும் தெரியும், அதன் வலது ஓரத்து இருக்கைகளில் அமர்ந்து "வணக்கம் சுந்தர்" என்றபடி அவரோடு ஒரு காபி குடிக்க ஆசைப்பட்டேன். ஆசைப்பட்டதெல்லாம் நடந்துவிடுமா என்றால்? அதற்காக ஆசைப்படாமல் இருக்க முடியுமா? தர்க்க அதர்க்கங்களை எல்லாம் விடுங்கள் இதோ சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார். அப்படி அவரோடு காபி குடிக்கும் போது அவரிடம் சிக்மென்ட் ஃப்ராய்ட் படித்திருக்கிறீர்களா என்று கேட்க வேண்டும். அவரிடம் அவரைப்பற்றி அதிகம் பேச வேண்டும். இந்த அவரிடம் என்ற இடத்தில் சுந்தர் பிச்சையையும், அவரைப்பற்றி என்ற இடத்தில் நண்பர் ஃப்ராய்டையும் என்று வாசித்துக்கொள்ளுங்கள். 

ஃப்ராய்ட் மனித இயல்புகளை மிக நுப்டமாக கவனித்து அதை மனிதர்களுக்கு சற்றும் எளிதில் புரியாதபடி மனிதர்களிடமே சொல்வதில் வல்லவர். பல்கோண முக்கோணத்தின் எண்கோண கணிதத்தை மனம்போன போக்கில் எழுதவெல்லாம் தனித்திறமை வேண்டும். அப்படி ஒரு திறமை அவருடையது. அவர் எழுத்துகளைப் படிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது எனக்கு. தலையைப் பிய்த்துக் கொள்ளலாமா, பதினைந்து மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து விடலாமா என்றெல்லாம் தோன்றும். என்னைப் போல எளிமையாக எழுதக் கற்றுக்கொள்ளுங்கள் ஃப்ராய்ட் என்று அவரிடம் கூறவேண்டிய நிமித்தம் ஒன்று இருக்கிறது. சரி அதை விடுங்கள் சுந்தர் பிச்சைக்கு வருவோம். சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார்.    

மனிதனின் மனதை மிகத்துல்லியமாக காண்பிக்கும் கண்ணாடி ஒன்று இருக்கிறது. ஃப்ராய்ட் அதனைக் கனவு என்கிறார். நான் அதனை சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார் என்கிறேன்.