29 Jun 2019

+9-1-1


வெளியில் சற்றும் பழக்கம் இல்லாத மார்ச் மாதத்துக் குளிர், மணி நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. கதவு வேகமாக தட்டப்படும் சத்தம்.

ஓர் உள்ளுணர்வு. ஒருவேளை அது போலீசாக இருக்குமோ. ஒருவேளை போலீசாக இருந்தால் ! கதவின் துவாரம் வழியாக நோக்கினேன், நின்று கொண்டிருந்த இரண்டு பேருமே போலீஸ். ஒருவர் குள்ளமாக மற்றொருவர் மிக உயரமாக. இருவரின் கைகளும் இடுப்பில் இருந்த துப்பாக்கியின் மீது. துப்பாகிகள் பளீரென மின்னின. 

'மகேஷ் போலீஸ் வந்து இருக்காங்க, இப்போ என்ன பண்றது' இதைக் கேட்ட கணத்தில் மெத்தையில் இருந்த துள்ளிக் குதித்த மகேஷின் கண்களில் கோபம், முகத்தில் பரபரப்பு. என் உடல் முழுக்க ஜில் என்று இருந்தது. அமெரிக்கா வந்த முதல் வாரத்திலேயே, எது அமெரிக்கா என புரியும் முன்னமே வீட்டு வாசலில் போலீஸ் நின்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும்.     

'பாஸ் போலீஸ் வார அளவுக்கு என்ன செஞ்சீங்க', கேட்டுக்கொண்டே என்னை நெருங்கியவரின் முகம் இன்னும் சிவப்பாய் மாறியது.

'இப்போ என்ன பண்ண', இதற்குமேல் அப்பாவியாய்க் கேட்க முடியாது. அடுத்த கேள்வி கேட்டால் அவரே என்னைச் சுட்டுத்தள்ளிவிடுவார் போல் இருந்தார்.   

'என்ன பண்ணவா, மொதல்ல கதவ தொறங்க பாஸ்' பேசிக் கொண்டிருக்கும் போதே கதவு மீண்டும் பலமாக தட்டப்பட்டது. திறந்தேன். 

'ஹலோவ்வ், வீ ஆர் ப்ரம் ப்ளேனோ போலீஸ் டிபார்ட்மென்ட்', மூளை மிக வேகமாக செயல்படத் தொடங்கியது. எங்கே எப்போது எப்படிப் பிசகியது. அவர்களை அழைத்தது நான் தான். 

*****

அமெரிக்கா வந்து டி-மொபைல் வாங்கிய நாளில் இருந்தே பெரும் பஞ்சாயத்தாக இருந்தது எனக்கும் டி-மொபைலுக்கும். வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி எங்கு நின்று பேசினாலும் சிக்னல் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அமெரிக்காவின் மிக முக்கியமான நெட்வொர்க் என்றுதான் வாங்கிக் கொடுத்தார்கள். ஜெட்லாக் வேறு தீர்ந்தபாடில்லை. இதில் இரவு பதினோரு மணிக்குமேல் தான் offshore மக்கள் வந்து சேர்வார்கள். முதல்முறை ஆன்சைட், பழகாத மனிதர்கள், புரியாத மொழி, இடம், அலுவலகம். மூளை வெகுவாக சோர்வடைந்திருந்தது. இதற்கு மத்தியில் இந்த டி-மொபைல் வேறு.

ஜெட்லாக் போகாத அரைத்தூக்கத்தில், என்ன பேசப்போகிறோம் எனத்தடுமாறும் நள்ளிரவில், 'ஜீ உங்க சிக்னல் ரொம்ப வீக்கா இருக்கு, கொஞ்சம் தெளிவா பேசுறீங்களா' என்ற அதட்டலான குரல் அந்தப்பக்கம் இருந்து வரும். வீடு முழுக்க சுற்றுவேன், எங்கேயும் சிக்னல் இருக்காது. கால் கனெக்ட் ஆகும். டிஸ்கனெக்ட் ஆகும். இப்படியே சுற்றிச்சுற்றி ஒரு வழியாக நன்றாக சிக்னல் கிடைக்கும் இடத்தை கண்டுபிடித்தேன். வீட்டு பால்கனி. எப்போது திறந்தாலும் சில்லென்ற காற்று வெளியே வீசும் பால்கனி. அந்த நள்ளிரவில் அந்தக் குளிரில் இன்னும் ஒரு நிமிடத்திற்கு மேல் நின்றாலும் ஜன்னி வந்துவிடும்.

'பாஸ் ஒழுங்கா ரூம் உள்ள வந்து பேசுங்க, நாளைக்கு ஆபீஸ் போணுமா வேணாமா?' எச்சரித்தது மகேஷ் தான். 'இல்ல உள்ள சிக்னல் கிடைக்கல, அதான்' என்றேன். ஏதோ யோசித்தார். எதுவும் பேசாமால் சென்றுவிட்டார்.

அடுத்தநாளும் வந்தது. offshore காலுக்கான நேரமும் வந்தது. அறையில் இருந்த ஒரு பழைய கார்ட்லெஸ் போனைக் கொண்டுவந்து கையில் கொடுத்தார். 'இந்த போன்ல பேசுங்க. இன்டர்நெட் காலிங் போன். இதுக்கு எந்த சிக்னலும் அவசியம் இல்ல. நெட் இருந்தா போதும். இத ரொம்ப நாளா யூஸ் பண்ணல. உங்களுக்காகத்தான் தேடி கண்டுபிடிச்சேன். பட்டன் எல்லாம் கொஞ்சம் ஹார்டா இருக்கும். ஒரு தடவைக்கு ரெண்டு தடவ அழுத்தினாதா போகும்' என்றார். பலநாள் பயன்பாட்டில் இல்லாத பழைய டவுன் பஸ் போல் இருந்தது அந்த கார்ட்லெஸ்.

*****

கதவைத் திறந்த அடுத்தநொடி அந்த இரண்டு போலீஸ் உருவமும் உள்ளே நுழைந்தது. 'இந்த வீட்ல இருந்து தான் எங்களுக்கு அழைப்பு வந்தது, எதுவும் பிரச்சனையா?' துப்பாக்கியின் மீதிருந்த கைகளை அவர்கள் எடுக்கவே இல்லை

என்னசொல்வதெனத் தெரியாமல் நடந்து முடிந்த அத்தனை கதையையும் அவர்களிடம் விவரித்தேன். அவர்கள் நம்புவதாக இல்லை. உங்கள் எண்ணில் இருந்து அழைப்பு வந்து, எங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் மீண்டும் மீண்டும் அழைத்தோம், எதுவும் பதில் இல்லை. அதனால் தான் நேரில் வந்தோம் என்று விளக்கம் கொடுத்தார்கள்.

அவர்கள் கூறியது முற்றிலும் சரி, அவர்கள் மீண்டும் மீண்டும் அழைத்தபோது 'அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்' என்று கையில் இருந்த கார்ட்லெஸ் போனை அவரிகளிடம் காண்பித்தேன். இரண்டு மூன்று நிமிடம் அதை ஆராய்ந்தவர்கள் "உள்ளே வரலாமா?" என்றார்கள். அதுவரை வாசலிலே தான் நின்று கொண்டிருந்தார்கள். நுழைந்தர்வகள், நாங்கள் என்ன செய்கிறோம், எங்கே வேலை பார்க்கிறோம், அறையில் மொத்தம் எத்தனை பேர், மற்றவர்கள் எங்கே என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுகொண்டே சமையலறைக்குள் நுழைந்தார்கள். போலீஸ் நெடி கொஞ்சம் அச்சுறுத்துவதாக, விபரீதமாக இருந்தது. அரை முழுக்க மௌனம். பார்வையால் வீட்டை அளந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நெஞ்சில் இருந்த சீக்ரெட் கேமெரா எங்களைப் படம் பிடிப்பது தெரிந்தது. 

சௌசௌ வெட்டி வைத்திருந்தேன். அடுத்தநாளுக்கான சமையல் நடந்து கொண்டிருந்தது. அறைக்குள் அசம்பாவிதமான, அசாதாரணமான சூழல் எதுவும் நிகழ்கிறதா, நிகழ்ந்துள்ளதா என்பதை நோட்டம் விட்டுக்கொண்டே கொஞ்சம் நட்பாக பேச ஆரம்பித்திருந்தார்கள். அதுவரை இருந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருந்தது. சமையலறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த பெரிய கத்தியை எடுத்து கையில் வைத்துக்கொண்டார் அந்த உயர் அதிகாரி. கத்தி காய் வெட்ட மட்டுமே என் நம்பிக்கையின் மீது அவருக்கு நம்பிக்கை போலும். சௌசௌ என்றால் என்ன அது எப்படி இருக்கும், எப்படி அதை வைத்து சமைக்க வேண்டும், அதன் சுவை எப்படி இருக்கும். சாம்பார் என்றால் என்ன என்றெல்லாம் கேட்டுவிட்டு, தயவுசெய்து இனி இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளவும் என்ற அட்வைசி விட்டுச் சென்றனர். அவர்கள் கவனம் எண்ணம் செயல் என்னவாக இருந்தாலும் துப்பாக்கியின் மீதிருந்த கைகளை அவர்கள் கடைசிவரை எடுக்கவே இல்லை. அவர்கள் சென்ற பின் மகேஷ் என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே!!! 

*****         

மகேஷ் ஒரு கார்ட்லெஸ் போனை என்னிடம் கொடுத்து உபயோகிக்கச் சொன்னார் என்று சொன்னேன் இல்லையா அதுதான் நடந்த அத்தனை கூத்துகளுக்கும் காரணம். அதில் ஒரு எண்ணை அழுத்தினால் வேறோர் எண்ணும், மற்றோர் எண்ணை அழுத்தினால் சம்மந்தமே இல்லாத எண்ணும் பதிவாகிக் கொண்டிருந்தன, அதனுடன் போராடிக் கொண்டிருக்கும் போதே இந்திய அழைப்புக்கான 91 ஐ அழுத்துவதற்குப் பதிலாக 911 ஐ அழுத்தியிருக்கிறேன், என்னை அறியாமல் எதுவோ நடந்திருக்கிறது. சௌசௌ வைப்பது எப்படி எனக்கேட்க அம்மாவிற்கு அழைத்தால் என்னடா சம்மந்தமே இல்லாமல் யாரோ பேசுகிறார்கள் என அழைப்பை துண்டித்துவிட்டு சாவகாசமாக அம்மாவிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டால். சமூகம் வீட்டிற்கே வந்திருக்கிறது என்னவோ ஏதோ என்று.  

3 comments:

  1. ஹாஹா..... நல்ல அனுபவம் தான்....

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா சீனு நல்ல அனுபவம். அங்கு போலீஸ் வந்தால் முதலில் கிச்சனுக்குள் சென்று பார்ப்பது வழக்கம் என்றே தெரிகிறது!!!!!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
  3. ஓ அமெரிக்காவில் இப்படியான அனுபவமா! போலீஸ் என்றால் கொஞ்சம் திக் திக் தான் இல்லையா அதுவும் வேறு நாட்டில். நல்ல அனுபவப்பாடம்

    துளசிதரன்

    ReplyDelete