30 Oct 2014

சகுந்தலா வந்தாள் - வாமுகோமு



கல்பனா என்னும் சிறுமி தன் இரண்டாவது அப்பாவால் சீரழிக்கப்பட அவளை விபச்சார விடுதியில் கொண்டு சேர்க்கிறாள் ஏற்கனவே பாலியல் தொழிலாளியாக இருக்கும் அவள் அம்மா. பருவம் அடைந்த சில நாட்களிலேயே விபச்சார விடுதில் சேர்க்கப்படும் கல்பனா, அங்கே தன் நாட்கள் எப்படி நகருகிறது, என்ன மாதிரியான மனிதர்களைச் சந்திக்கிறாள் அவர்களை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதில் இருந்து வளர்கிறது கதை. 



28 Oct 2014

பதிவர் சந்திப்பு (மதுரை) - 2014 - ஒரு பார்வை

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பில் நடைபெற்ற முதல் இரண்டு பதிவர் சந்திப்புகள் சென்னையில் இனிதே நடந்து முடிய மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பு இம்முறை மதுரையில். 

பதிவர் என்ற அடையாளம் உடன் வந்து ஒட்டிக் கொண்டதன் பின் இருந்தே பல புதிய அரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வருக்கிறது. ஒருவேளை பதிவராக மாறாமல் இருந்திருந்தால், இந்த புதிய உலகினுள் நுழையாமல் இருந்திருந்தால் இவர்களை எல்லாம் சந்தித்திருப்பேனா, இவர்கள் மூலம் வேறுபல தளங்கள் அறிமுகமாகியிருக்குமா என்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிகக் குறைவு என்றே எண்ணத் தோன்றுகிறது. 

அட்டகாசமான மேடை அமைப்பு 
எனக்குப் பிடித்த எழுத்தாளர்களை எந்த அளவிற்கு மனதிற்கு நெருக்கமானவர்களாக உணர்கிறேனோ அதைப்போலவே நான் விரும்பும் பதிவர்களையும், நேசிக்கும் பதிவர்களையும் உணர்கிறேன். ஒரே வித்தியாசம் எழுத்தாளர்களின் படைப்புகள் பிரபலமான பத்திரிக்கையின் மூலம் அச்சில் ஏறி நம்முள் நுழைகிறது. பதிவர்களோ தங்களுக்கென தாங்களே அமைத்துக் கொண்ட தளத்தில் தங்கள் ஓட்டத்தைத் தொடர்வதன் மூலம் நம்மையும் அவர்களோடு இணைந்து ஓடச்செய்கிறார்கள். 

கோடம்பாக்கத்தில் வைத்து நடைபெற்ற அந்த முதல் பதிவர் சந்திப்பு இன்றைய தினம் வரையிலும் அதன் ஈரம் குறையாமல் அப்படியே நினைவில் இருக்கிறது. பல வருடங்களுக்குப் பின் பலரையும் ஒரே இடத்தில் சந்திக்க வைக்கும் களமாக மாற்றியிருந்தது அந்த சந்திப்பு. நான் அப்போதுதான் பதிவுலகினுள் நுழைந்திருந்த புதிது. எவருக்கும் என்னைத் தெரியாது. அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் என்னைவிட வயதில் மூத்தவர்கள் மற்றும் பல வருடங்களாக தொடர்ந்து எழுதி வரும் மூத்த பதிவர்கள் என்பதால் நானாக நெருங்கிச் சென்று அறிமுகம் செய்துகொள்ள சிறு தயக்கம். ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கும் களமாக மாற்றிக்கொண்டேன் அந்த பதிவர் சந்திப்பை. இருந்தும் ஒருசிலரின் அறிமுகமும் கிடைக்காமல் இல்லை.

தமிழ்வாசி உடன் ரத்னவேல் அய்யா
இரண்டாவது பதிவர் சந்திப்பு சற்றே ஸ்பெசலானது மற்றும் நெகிழ்ச்சியானது. பதிவுலகில் கணிசமான நண்பர்கள் கிடைத்திருந்தார்கள், பிளாக்கர் நண்பனும் தீவிரவாதியும் கூட தொலைதூரத்தில் இருந்து வந்திருந்தார்கள். ஆவி பதிவர் சந்திப்பிற்கென தானே மெட்டமைத்து எழுதிய பாடலைப் பாடினார், கூடவே நாங்களும் படித்தோம். பதிவர் சந்திப்பிற்கான வேலைகளில் அரசனும் ரூபக்கும் ஓடி ஓடி ஓய்ந்திருந்தனர். அன்றைய தின நிகழ்வு முடிந்த அன்றைய மாலையில் நண்பர்களை விட்டுப் பிரியும் போது ஏதோ நெடுநாள் பழகிய நண்பர்கள் தூர தேசம் போவது போல் உணர்ந்தோம். வடபழனியின் விஜயா-மாலின் வெளிப்புறம் நின்று கொண்டு கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம் என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. விட்டால் ராம்குமாரும் தீவிரவாதியும் அங்கேயே தங்கியிருப்பார்கள் போல, அவரவர் ஊருக்குச் செல்வதற்கானப் பேருந்தைப் பிடிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்தால் கலைந்து சென்றோம்.

இம்முறை மூன்றாவது பதிவர் சந்திப்பு மதுரையில். அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் நானும் வாத்தியாரும் ஸ்பையும் மதுரையை அடைந்திருந்தோம். இதமான பனி எங்களை நனைத்துக் கொண்டிருக்க தூங்காநகரம் அதிகாலையின் உற்சாகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரைக்கு உய்வளிப்பதன் நிமித்தம் முந்தைய தினமே மதுரைக்கு திக் விஜயம் புரிந்திருந்தார் ஆவி. கூடவே நாய்நக்சும் இருக்கிறார் என்பது தெரிந்த போதுதான் சற்றே திக்திக் என்று இருந்தது. 

குடந்தையூர் சரவணன், கற்போம் பிரபு கிருஷ்ணா, கடற்கரை விஜயன் உடன் வானவல்லி சரித்திர நாவல் புகழ் வளரும் இளம் எழுத்தாளர் இரவின் புன்னகை வெற்றிவேலும் முன்னிரவே வந்து சேர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் மூங்கில்காற்று முரளிதரனும் அரசனும் ரூபக்கும் எங்களோடு இணைந்துகொள்ள அந்த அதிகாலையில் அங்கேயே ஒரு மினிபதிவர் சந்திப்பு அரங்கேறியது. திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு பதிவர் வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்நேரத்தில் திடீர் விஜயம் செய்தார் டிடி. ஒவ்வொருவராக பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. 'எலேய் சீக்கிரம் கிளம்புங்களே' என்று வாத்தியார் கையில் குச்சியை எடுத்தபோதுதான் மணி எட்டை நெருங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது, எட்டரைக்கெல்லாம் அரங்கில் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். 

ஒருவழியாக குளித்துமுடித்து கிளம்பி எதிரில் இருக்கும் கடைக்குள் நுழைந்து கண்டதையும் ஆர்டர் செய்துவிட்டுப் பார்த்தால் பில் தொகை ரூபாய் நூற்றியிருபது என்று இருந்தது,. இதுவே சென்னையாக இருந்திருந்தால் நாங்கள் உண்ட உணவுக்கு ரூபாய் ஐநூறு காலியாயிருக்கும். வாழ்க மதுரை. ஒருவழியாக காலை உணவை முடித்து அரங்கினுள் நுழையும் போது மணி சரியாக ஒன்பது. காலை சூரியன் உற்சாகமாக தன் வேலையைக் காண்பிக்கத் தொடங்கியிருந்தான். ஒரு பெருமழைக்குப் பின்னான வெப்பம் என்பதால் வெக்கை அதிகமாக இருந்தது. பதிவர்கள் ஒவ்வொருவராக அரங்கினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.

சீனா அய்யா தம் துணைவியாருடன் வந்திருந்தார். தமிழ்வாசி பிரகாஷ் - இந்தப் பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக அரங்கேற அதிகமான உடல் உழைப்பைக் கொடுத்தவர், அரங்கினுள் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார். ந்யுசிலாந்தில் இருந்து துளசி கோபால் வந்திருந்தார். சற்றும் எதிர்பாராத ஒருநபர் GMBwrites பாலசுப்பிரமணியன் அய்யா வந்திருந்ததுதான். பெங்களூரில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து மதுரை பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்தார். முதுமை அவருக்கு ஒருபொருட்டே இல்லை என்பது போல் உற்சாகமாக சுழன்று கொண்டிருந்தார். மதுரையின் மூத்த பதிவரான தருமி ஐயா அவர்கள் தன் நீண்ட கேமிராக் கண் மூலமாக வந்திருந்தவர்களை சுட்டுக் கொண்டிருக்க ஜோக்காளி பகவான்ஜீ, கில்லர்ஜீ ஆகியோரை இன்றுதான் முதன்முதலில் சந்திக்கிறேன், கில்லர்ஜீ தன் மீசைக்கு உரம் போட்டு வளர்க்கிறார் போல வீரப்பன் தோற்றுவிடுவான். பதிவர் சந்திப்பின் தொகுப்பாளரான வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்களை மண்டப வாயிலிலேயே சந்தித்திருந்தோம். மற்றுமோர் இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் இலக்கிய எழுத்தாளர் நா.மணிவண்ணன் அவர்கள். நெடுநாட்களுக்குப் பின் அவரை சந்திக்கறேன். மகிழ்ச்சியாய் இருந்தது. சமநேரத்தில் கடல் பயணங்கள் சுரேஷும் அரங்கினுள் நுழைந்திருந்தார். 

டிடி உடன் மகேந்திரன்
சரியாக ஒன்பதரை மணிக்கு விழா தொடங்கியது. சீனா அய்யா, அவர் துணைவியார், மதுரை சரவணன் ஆகியோர் உரையுடன் விழா தனது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருந்தது. தோழர் பிரபு கிருஷ்ணா, பிளாக்கர் நண்பன் அப்துல் பாஸித், வந்தேமாதரம் சசிகுமார் தமிழ்வாசி பிரகாஷ் திண்டுக்கல் தனபாலன் மற்றும் சிலருக்கு தொழில்நுட்ப பதிவர்களுக்கான சிறப்பு விருது கொடுத்து கவுரவித்தார்கள். பதிவர்களுக்கு தங்கள் வலைப்பூவை மேம்படுத்த உதவியவர்கள் என்ற அடிப்படையில் இந்த விருதினை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே மற்றோர் நிகழ்வும் அரங்கேறியது அது என் குருநாயர் சிவகாசிக்காரன் ராம்குமார் தனது திக் விஜயத்தை அரங்கினுள் நிகழ்த்தி இருந்தார், அவருடன் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அய்யா ரத்தினவேல் அவர்களும் அவர் துணைவியார் சகிதம் உடன் வந்திருந்தார். 

சிறப்புப் பேச்சாளராக அழைக்கப் பட்டிருந்த தா.கோ.சுப்பிரமணியன் அவர்கள் வரமுடியாத காரணத்தால் பதிவர் மற்றும் பேராசிரியர் மதுரை சரவணன் அவர்கள் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பெற்றார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு பெருங்கூட்டம் அரங்கினுள் நுழைய யார் என்று பார்த்தால் புதுக்கோட்டையில் இருந்து அய்யா முத்துநிலவன் அவர்களின் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட பதிவர்கள் அரங்கினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். இவர்களில் பலர் கடந்த ஒருவருடமாகத்தான் வலையில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்றபோதிலும் அனைவருமே சில புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள் என்பதை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. அதிலும் இவர்களில் பலர் கவிஞர்கள் என்பது கூடுதல் தகவல்.    

சிறப்புரைகளைத் தொடர்ந்து பதிவர்களின் அறிமுகம் அரங்கேறியது. இது நமக்கான களம் அல்லவா, களமாடத் தொடங்கினோம். நமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என அனைவரையும் கைத்தட்டி உற்சாகப்படுத்த அதுவரை அமைதியாக இருந்த அரங்கம் உற்சாகமானது. 

இந்த அரசன் ஆவி ஸ்கூல்பையன் போன்ற நமக்கு வேண்டாத பதிவர்கள் மேடையேறிய போது கத்தி கூச்சல் போட்டு அவர்கள் பேசுவதை கேட்காமல் செய்ததில் ஒருவித மனதிருப்தி. போன பதிவர் சந்திப்பின் போது இத்தகைய நிகழ்விற்கு தீவிரவாதி நல்ல கம்பெனி கொடுத்தார். இப்போது ஆர்மி அவரைப் பிடித்துவிட்டதால் டில்லியில் சிக்கிக்கொண்டார். அவர் இருந்திருந்தால் விசில் அனல் பறந்திருக்கும். இருந்தாலும் அரசனும் ஆவியும் உருப்படியான கம்பெனி கொடுத்தார்கள். இப்படியாக ஒவ்வொருவர் மேடையேறும் போதும் கலாய்த்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி 'யார்ரா இவிங்க சும்மாவே இருக்க மாட்டன்றான்களே' என்றபடியே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். கொஞ்ச நேரத்தில் பொறுமை இழந்தவர் 'ஏம்பா இப்படி கொடுத்த காசுக்கு மேல கூவுறீங்க' என்று அவர் கேட்க 'சார் இன்னும் மேடை ஏறல தான' என்று அவர் பெயரைக் குறித்துக் கொண்டோம். இந்தப் பதிவர் சந்திப்பின் புதிய நட்பு அவர் மூலம் அடிபோடப்பட்டது. 

மேடையில் என்னை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்பு கிடைத்த போது காமடி கும்மிக்கும் வாசகர் கூடத்திற்கும் ஒரு இலவச விளம்பர சேவையை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மேடையில் பேசி முடித்து கீழே இறங்கும் போது என்னை மறித்து ஒருவர் கை குலுக்கி நான் தான் அட்வகேட் ஜெயராஜ் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள எனக்கோ ஆச்சரியம் தாளவில்லை. என்னுடைய அத்தனைப் பதிவுகளையும் படித்து தொடர்ந்து ஊக்கம் அளித்துவரக் கூடியவர் அட்வகேட் ஜெயராஜ் அவரே வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. மிக்க நன்றி சார். 

தமிழ்வாசியுன் அட்வகேட் ஜெயராஜ் 

ஆவி தான் நடத்தபபோகும் 'வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை' போட்டி குறித்து மேடையில் அறிவித்தார். பதிவர்களின் அறிமுக சம்பவத்தின் போது அனைவரும் அவரவர் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருக்க கடல் பயணங்கள் சுரேஷ் மட்டும் கர்ம சிரத்தையாக நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த பதிவர் சந்திப்பிற்குள் அவரது புத்தகத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம். விரைவில் எதிர்பார்க்கலாம். மேலும் கேபிள் சங்கர் தொலைபேசி மூலம் உரையாடினார். தொட்டால் தொடரும் படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் வர இயலவில்லை என்றும் கூறினார். 

அதைத்தொடர்ந்து மகிழ்நிறை வலைப்பூவில் எழுதிவரும் தோழி மைதிலி கஸ்தூரி ரங்கன் மேடையேறினார். என்ன பேசப்போகிறார் என்பதை கவனித்துக் கொண்டிருக்கும் போதுதான் அந்த ஆயுதத்தைத் தூக்கி வீசினார். அவருடைய கணவர் பெயர் கஸ்தூரி ரங்கனாம், அவரும் பதிவராம், அவர் வேறு யாரும் இல்லை, இவ்வளவு நேரம் நாங்கள் யாரை ஓட்டிக் கொண்டிருந்தோமோ அவர் தான் அந்த கஸ்தூரி ரங்கனாம். இனிமே வாலாட்டுவோம். ஆங்கிலப் பதிவராக இருந்து தமிழ்ப் பதிவராக மாறியவர் மிஸ்டர் கஸ்தூரி ரங்கன் என்பதை அறிந்த போது மகிழ்வாய் இருந்தது. 

இந்திரா சௌந்தர்ராஜன், வாத்தியார், தமிழ்வாசி
மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க, லேசாக தலைவலிப்பது போன்ற உணர்வு. வெக்கையின் வீரியமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது ஜில் ஜில் ஜிகிர்ந்தண்டா, மதுரை பேமஸ் ஜிகிர்தண்டா இல்லை என்றாலும் அப்போதைய வெக்கைக்கு ஆபத்பாந்தவனாக இருந்தது. அனைத்து பதிவர்களும் தங்கள் அறிமுகத்தை நிறைவு செய்ய, சௌராஷ்டிரா ஸ்பெசல் சாப்பாடு தயாராக இருந்தது. சைவ சாப்பாடுதான் என்ற போதிலும் திருப்தியான சாப்பாடு. என்னவொன்று பக்கத்து மண்டப பாய் வீட்டு கல்யாணத்தில் சுடச்சுட தயாராகிக் கொண்டிருந்த சிக்கன் வறுவல் சுண்டி இழுத்த போதிலும் சுவர் ஏறிக் குதிக்காமல் கட்டுண்டு கிடந்தோம் என்பது இந்தப் பதிவுக்கு முற்றிலும் சம்மந்தம் இல்லாத விசயம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

மதிய உணவு இடைவேளைக்குப் பின் அதுவரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த குடந்தை ஆர்வி சரவணன் அவர்கள் தயாரித்து இயக்கி இருக்கும் 'சில நொடி சினேகம்' குறும்படம் திரையிடப்பட்டது. ஆவியும் அரசனும் திரையில் தோன்ற அரங்கில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பதிவர் இயக்க பதிவர்கள் நடித்து வெளியான படம் என்பதால் பதிவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. குறும்பட சுட்டி. இதைத் தொடர்ந்து இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார். மதிய உணவிற்குப் பின்னான உரை என்பதால் அனைவரின் கண்களிலும் தூக்கம் சொக்க ஆரம்பித்தது என்றபோதிலும் வசீகரிக்கும் கணீர் குரல் இந்திரா சௌந்தர்ராஜனுடையது. இவரது உரையைத் தொடர்ந்து கரந்தை ஜெயக்குமார், தேன்மதுரத் தமிழ்கிரேஸ், வேலுநாச்சியார் கீதா, சட்டப்பார்வை ஜெயராஜ் ஆகியோரின் புத்தக வெளியீடு இனிதே நடந்து முடிக்க தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. 

அடுத்த பதிவர் சந்திப்பை புதுகோட்டையில் நடத்துவதாக அய்யா முத்துநிலவன் அவர்கள் உறுதி கூறியுள்ளார்கள். மேலும் புதுகேகோட்டை நம் குருநாயரின் கோட்டை என்பதால் அடுத்த பதிவர் சந்திப்பை எதிர்நோக்கி ஆவலுடன் உள்ளேன்.

என் மேல என்ன கோவம்னு தெரியல, என்னைய கூப்டல ;-)
வெறும் இணையம் மூலம் உருவான நட்பு தான் என்றபோதிலும், இத்தனை பதிவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பயணித்து வந்து கலந்து கொண்டது மகிழ்வான விஷயம். பரந்து விரிந்த இந்தப் பதிவுலகில் நம்மால் அறிந்துகொள்ள முடிவது மிகச் சில பதிவர்களைத்தான். அவர்களில் சிலரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் இந்தப் பதிவர் சந்திப்பு என்பது எப்போதுமே தவறக்கூடாத நிகழ்வு. இதனை வெற்றிகரமாக இனிமையான ஒரு பொழுதாக மாற்றியமைத்த அத்தனைப் பதிவர் நண்பர்களுக்கும் என் நன்றி. மேலும் பல பதிவர்கள் வர நினைத்தும் கடைசி தருணத்தில் வர இயலாமல் போனதற்குக் காரணம் குடும்ப சூழல் மற்றும் எதிர்பாராத சந்தர்ப்ப சூழ்நிலை மட்டுமே அவர்களும் அடுத்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள், கோரிக்கை, அவா.  

மேலும் ஒரு நன்றி :

இந்த படத்திற்கும் நன்றிக்கும் துளியும் சம்மந்தம் இல்லை - அரசன்,ஆவி, ரூபக் (அ) சேம்புலியன் 
கடந்த மூன்று வருடமாக பதிவுகள் எழுதிக் கொண்டுள்ளேன் என்ற போதிலும் இப்போதுதான் இரண்டாவது சதத்தையே பூர்த்தி செய்கிறேன். ஆம் இது எனது வெற்றிகரமான இருநூறாவது பதிவு. என்னை உற்சாகமாக இயங்க வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...

23 Oct 2014

கத்தி - நடுஇரவில்

கத்தி குறித்து இனி எழுத என்ன இருக்கிறது. நான் எழுத நினைத்ததையும் எழுத நினைக்காததையும் பலரும் எழுதிக் குவித்துவிட்டார்கள். எங்கெங்கு காணினும் கத்தியடா. 

நேற்று இரவு படம் பார்த்து முடித்ததும் இருந்த மனநிலையில் இந்த விமர்சனத்தை எழுத வாய்ப்பு கிடைத்திருந்தால் 'கத்தியின் தாக்கம் இன்னும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்' என்பது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதிரசம் வடைசுட வராவிட்டால் வீட்டில் இருக்க இடம் கிடையாது என்று அம்மா மிரட்டியதால் இப்போது தான் சிஸ்டம் அருகிலேயே வருகிறேன். அதனால் நான் எழுத நினைத்த விசயங்களில் சிலவற்றை மட்டும் கூறுகிறேன்.  

கத்தி கதை இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும், இணையத்தில் தானே உலவுகிறீர்கள். நிச்சயம் தெரிந்திருக்கும். ஒருவேளை தெரியாவிட்டாலும் நான் சொல்லபோவதில்லை.  


இங்கே பலரும் கூறுகிறார்கள் கத்தி மிகப்பெரிய சமுதாய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது அல்லது ஏற்படுத்தப் போகிறது என்று. அப்படி கத்தி தான் உங்களுக்குள் மிகப்பெரிய சமுதாய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது என்றால் உறுதியாகக் கூறுகிறேன் இன்னும் பத்து நாட்களுக்குள் அந்த தாக்கம் உங்கள் மனதில் இருந்து காணமல் போயிருக்கும். கோலா கம்பெனி விவசாயியின் ரத்தத்தைத் உறிஞ்சி பணம் பண்ணுகிறான் என்பது போன்ற வீர வசனத்தை நாயகன் பேசிய முப்பதாவது நிமிடத்தில் ஆளுக்கொரு லார்ஜ் பாப்கானையும் ரெகுலர் கோக்கையும் கையில் தூக்கிக் கொண்டு மீண்டும் அரங்கினுள் நுழைந்த விந்தையைப் பார்த்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தேன். ஆச்சரியம் தாக்கம் முப்பது நிமிடம் கூட தாக்குப்பிடிக்கவில்லை.

வெல். நாயகன் ஹைட்ராலாஜி படிப்பதால் மட்டுமே நீர்ப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதாய் வைத்துக் கொண்டால் அதற்கான மெனக்கெடல் கொஞ்சம் கூட திரைக்கதையில் இல்லை. அதே நேரம் நீர்பிரச்சனையை மட்டுமே விவசாயிக்கு பூதாகரமான பிரச்சனை என்பது போல் பேசியது கொஞ்சம் டூ மச். சமீப காலமாக நம்மாழ்வார் அய்யா அவர்களின் புத்தகங்களையும் பசுமை விகடனையும் தொடர்ந்து படிப்பதால் நீராதாரத்திற்கு இணையான எவ்வளவோ விஷயங்கள் இன்னும் பொதுப்பார்வையில் வைக்கப்படாமல் இருப்பது புரிகிறது. பசுமைப் புரட்சியின் பின்விளைவுகள், உர உபாதைகள், மரபணு விதை, இயற்கை விவசாயம் என்று இன்னும் உரக்க பேச வேண்டிய விஷயங்கள் நீண்டுகொண்டே செல்கிறது. அவற்றை சேர்த்திருந்தால் ஒரு விவசாயின் பல பிரச்சனைகள் பொது வெளிக்கு வந்ததாய் உணரலாம். பாராட்டலாம் ஆனால் தண்ணீர்ப் பிரச்சனை என்பது ஏ.ஆர்.எம் கூறித் தான் நமக்குத் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனாலும் அதையாவது வைத்திருக்கிறார்களே என்ற எண்ணத்தில் வேண்டுமானால் பாராட்டலாம். 

ஒருவேளை இந்த சினிமாவை மக்கள்/விவசாயிகளின் பிரச்சனையைப் பற்றி பேசும் சினிமாவாக ரமணா இந்தியன் போல் தாக்கத்தை ஏற்படுத்திய சினிமாவாக பார்த்தீர்கள் என்றால் என் மேற்கூறிய பேரா உங்களுக்கானது. அப்படி இல்லை இது சினிமா தானே வெறும் சினிமாவாக பாப்போம் என்றால், 

முதல் இருபது நிமிடம் போர் என்று அனைத்து தரப்பினரும் கூறுகிறார்கள். வழக்கமாகவே பல தமிழ் சினிமா சந்திக்கும் தற்போதைய பிரச்சனை முதல் இருபது நிமிடம் மொக்க என்பது தான். முதல் இருபது நிமிடம் எவ்வளவு முக்கியமானது, பின் ஏன் அது போர். எல்லாம் இந்த இரண்டரை மணி நேர சாபக்கேடுக்காகத் தான். தமிழ் சினிமா என்றாலே இரண்டரை மணி நேரம் இருக்க வேண்டும், ஆனால் கதைக்கான சரக்கோ ஒன்றரை மணி நேரத்திற்கு தான் இருக்கிறது. பின் என்ன செய்வது, முதல் இருபது நிமிடம் இழுவை. பின்முப்பது நிமிடம் பாடல்கள். பைனலி டார்கட் அச்சீவ்ட். நமக்கும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் படம் ஓடவில்லை என்றால் ஏதோ குறைபட்டுவிட்டது போலவே தோன்றுகிறது பாருங்கள் அது நம் சாபக்கேடு.  சரி கத்திக்கு வருகிறேன். முதல் இருபது நிமிடத்தை விடுங்கள் போனால் போகிறது, ஆனால் அதற்கு அடுத்த நிமிடங்கள். 

இது ரமணா புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய திரைக்கதையே அல்ல. ஏழாம் அறிவு படத்தை அவரே ஏழுமுறை பார்த்துவிட்டு எழுதிய திரைக்கதை போல் இருக்கிறது. பல இடங்களில் வசனம் அருமை என்றாலும் குண்டடிபட்ட விஜயை விஜய் சந்திக்கும் போது அந்த விஜயைப் பார்த்து இந்த விஜய் சொல்கிறார் 'ரைட் சைட்ல தான் குண்டு பாயஞ்சிருக்கு, இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆஸ்பிடல் கொண்டுபோனா இவர காப்பாத்திரலாம்'. அது எப்படிங்க சார் துல்லியமா ஒரு மணிநேரம். கொஞ்ச நேரத்துலன்னு சொன்னா ரசிகனுக்கு அதோட தாக்கம் புரியாதா? ஆனாலும் படத்தின் மற்ற வசனங்கள் மொக்க இல்ல. இடைவேளைக்கு அப்புறம் பல இடங்கள்ள வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கிறது.

இசை. திரைக்கதைக்கு இன்னொரு முக்கியமான பலம் இசை, இசைக்கு மிக முக்கியமான பலம் மௌனம். படத்தில் மௌனம் இசையாக இருக்க வேண்டிய இடத்தில் சம்மந்தமே இல்லாம ஏதேதோ இசை கேட்கிறது. பொருந்தாத இடத்தில் வரும் பொருந்தாத பாடல் கூட கொடுமையே என்று சகித்துக் கொள்ளலாம் போலும் ஆனால் பொருந்தாத இடத்தில் வருகின்ற பொருந்தாத பின்னணி இசை, கொடுமை. 'இதை சொன்னா அனிருத் மேல எனக்கு காண்டு பொறாமன்னு சொல்வாங்க எதுக்கு ப்ரோ தொல்ல, ம்யுசிக் அட்டகாசம்'. ஒளிப்பதிவு ரியலி குட். இது ரியலி ரியலான பாராட்டு தான். சமந்தா - படத்துக்கு சம்மந்தமே இல்லாத ஒரு வஸ்து, டோன்ட் கேர். அந்த காயின் பைட் நல்லா இருந்தது, முருகதாஸ் டச் (வேற யாரு டச்சும் ண்ணா சத்தியமா எனக்கு தெரியாதுங் ண்ணா).       

இரண்டரை மணி நேரம் போர் அடிக்காம இருந்ததா என்று கேட்டால் என் பதில், 'மொத இருபது நிமிடம் போர், எல்லா பாட்டும் போர். வழக்கமா விஜய்க்கு சாங்க்ஸ் ஹிட்டாகும், இதில் படத்தில் ஒரு பாடல் கூட ஒட்டல, அப்புறம் எங்க மனசுல ஒட்ட'. மொதல்ல அஞ்சு பாட்டு வைக்கிற கலாச்சாரத்த மாத்துங்க சார். சோ இப்படியே மொத்த படத்தில் ஒருமணி நேரம் போர். 'இரண்டரை மணி நேரப் படத்தில ரொம்ப சாதாரணமாவே ஒரு மணி நேரம் போர் அடிக்கிற ஒரு படத்த எப்படி பாஸ் என்னால நல்ல படம்ன்னு சொல்ல முடியும்'. அதிலும் ஏ.ஆர்,முருகதாஸ் தன்னால் நூறு மதிப்பெண் எடுக்க முடிகிற ஒரு பாடத்தில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார் என்பது வியப்பான ஒன்று. அதையும் தமிழ் சினிமா கொண்டாடும் என்றால் ரசிகனையும் உங்கள் தரத்திற்கு கீழே இழுத்துவிட்டீர்கள் என்று தானே பொருள்.   

ஒன் மோர் - இந்த படத்தில எனக்கு விஜய பிடிச்சு இருந்தது, விஜய்க்கு இது ரொம்பவே நல்லா அமைஞ்சிருக்க வேண்டிய படம். ஜஸ்ட் மிஸ். விஜய்க்கு வயசாகிட்டே போறது ரொம்பவே நல்லா தெரியுது. அதனால அவரு அவரோட அடுத்த வெர்சனுக்கு அப்டேட் ஆனா நல்லா இருக்கும். காதல் டூயட் எல்லாம் வேணாம் ப்ரோ. அப்புறம் விஜய பிடிச்சதுக்கு இன்னொரு காரணம், ஹீரோயிசம். நிஜ வாழ்க்கையில நம்மால முடியாத சில விசயங்கள நிழல் உலக ஹீரோ செய்வானே அதாகப்பட்ட காட்சிகள் சில கத்தியில் இருக்கு, அதுவும் ரசிக்கும்படியா இருக்கு, அது எனக்கு பிடிச்சி இருந்தது. அஜீத் விஜய் ரெண்டுபேருமே ஏதாவது துப்பறியும் சீரிஸ் நடிச்சா பிரமாதமா இருக்கும். ஆனா அதுக்கு பிரயத்தனப்பட இயக்குனர்கள் தயாரா இல்ல, சோ எப்படியும் ரெண்டு பேரும் இப்படியேத்தான் இருக்க போறாங்க, நாமளும் வேற வழி இல்லாம நூத்தியிருபது ரூபாயா காணப் பணமா ஆக்கத்தான் போறோம். 

சரி இப்போ தலைப்புக்கு வருகிறேன். கத்தி படத்தில் மூன்று வெவ்வேறு லொக்கேசன்களில் காட்சிகள் நகரும். ஒன்று கல்கத்தா ஜெயில், இன்னொன்று அம்பத்தூர் இந்தியா லேண்ட் பில்டிங். மூன்றாவது முதியோர் இல்லம். இப்போ  இந்தியா லேண்ட் பில்டிங்கில் நடக்கும் காட்சி என்றால் இந்தியா லேண்ட் முகப்புப் பகுதியை ஒவ்வொரு முறையும் காட்டிவிட்டு பின்னரே திரைக்கதை நகரும், இது போல ஜெயில் என்றால் கல்கத்தா ஜெயிலை காட்டிவிட்டும் முதியோர் இல்லம் என்றால் அதனை காட்டிவிட்டும் நகரும். ஒருமுறை அல்ல இருமுறை அல்ல ஒவ்வொருமுறையும் இப்படித்தான் நகருகிறது திரைக்கதை. சுமார் அறுபது வருடங்களுக்கு முன்பு எஸ்.பாலச்சந்தர் என்ற இயக்குனர் நடு இரவில் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். (சுட்டி கூட கொடுத்திருக்கிறேன், படித்துப் பாருங்கள் - ஒரு விளம்பரந்தேன்) அதில் ஒரு பங்களாவைச் சுற்றி மட்டுமே கதை நகரும் ஒவ்வொருமுறை திரைக்கதை பங்களாவினுள் நுழையும் போதும் அதன் பங்களாவின் வெளிப்புறத்தைக் காண்பித்துவிட்டு அதனுள் நுழைவார்கள். கத்தியிலும் இதே போன்ற உத்தியைப் பார்த்ததும் எனக்கு நினைவிற்கு வந்தது நடுஇரவில் தான். ஆனாலும் நம்பினால் நம்புங்கள் கத்தி முழுக்க முழுக்க பிரஷ்ஷான திரைக்கதை.   

பின்குறிப்பு : என் அஜீத் ரசிக கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டுத்தான் இந்த விமர்சனத்தை எழுதியுள்ளேன். ஒருவேளை இதில் விஜய்க்கு பதில் அஜீத் நடித்திருந்தால் விஜய் என்று வருகிற இடத்தில் அஜீத் என்று எழுதியிருப்பேன் அவ்வளவுதான். 

18 Oct 2014

டெக்கான் ட்ராவல்ஸ் - பெங்களூர் டூ சென்னை


டெக்கான் ட்ராவல்ஸில் பெங்களூரு டூ சென்னை புக் செய்யும் போதே ஆவி கூறினார் 'முன்னபின்ன ட்ராவல் பண்ணாத பஸ்ஸு, எப்படி இருக்கும்னு தெரியாது வேணாம் என்றார். நன்கு அறிமுகமான ட்ராவல்ஸ் எல்லாவற்றிலும் செமி ஸ்லீப்பர் கட்டணம் எழுநூறு ரூபாயாக இருக்க டெக்கானிலோ ஏசி ஸ்லீப்பருடன் கூடிய பேருந்துக்குக் கட்டணம் 800 ரூபாய். நூறு ரூபாய் தான் வித்தியாசம். மற்றவை என்றால் உட்கார்ந்து கொண்டே வரவேண்டும். தூங்க முடியாது. இன்றைக்கு அலுவலகம் வேறு இருக்கிறது, ஸ்லீப்பர் என்றால் ஓரளவிற்கு தூங்கவாவது முடியும். அதற்காகவே ரிஸ்க் எடுக்கலாம் என்று தோன்றியது. ரிஸ்க்கும் எடுத்தாயிற்று. 



பேருந்தை அதன் வெளியில் இருந்து பார்க்கும் போது சாதாரண பேருந்து போல் இருந்தாலும், பேருந்தின் உள்ளே அட்டகாசமாக இருந்தது. படுக்கை பஞ்சனை போல் இருக்க, மிதமான குளிர். மெல்லிய கதகதப்பிற்கு ஒரு போர்வை. வாட்டர் பாட்டில் வைக்க ஓர் இடம், ரீடிங் லைட் என்று வசதி செய்யப்பட்டிருந்தது. இவை வழக்கமாக எல்லா பேருந்துகளிலும் இருப்பது தான்.  

ஆனால் இதிலோ அது மட்டுமில்லாமல் வேறொரு வசதியும் இருந்தது. அது தலைக்கு மேல் கண்ணாடி வைப்பதற்கென ஓர் இடம். கண்ணாடி அணிபவர்களுக்கு மட்டும் தான் தெரியும் பயணத்தின் போது கண்ணாடி எவ்வளவு இடையூறு என்று. கண்ணாடி வைக்கும் புட்டி இருந்தாலாவது பத்திரமாக அதில் வைத்துக் கொள்ளலாம், நானோ வாங்கிய மறுநிமிடமே அந்த டப்பாவை தூர எறிந்துவிடுபவன். அதன் அவசியம் இது போன்ற தருணங்களில் தான் தெரியும். 

எப்போதுமே பேருந்தில் ஏறியவுடன் கண்ணாடியை சொருக எங்காவது இடம் இருக்கிறதா என்பதைத்தான் முதலில் தேடுவேன். விண்டோ சீட் என்றால் திரை கட்டியிருக்கும் கயிற்றில் சொருகி விடலாம், அப்படியில்லை எனில் துணிமணிக்குள் பத்திரமாக ஒளித்து வைக்க வேண்டும். என்ன ஒன்று பல சமயங்களில் நான் எடுத்துச் செல்லக்கூடிய பை தான் எனக்கு தலையனையாகவும் பயன்படும். ஒருவேளை தூக்கத்தில் எசகுபிசகாக அழுத்தம் கொடுத்தால் கண்ணாடி உடைந்து போய்விடும் சாத்தியக்கூறுகள் மிக அதிகம். 

இப்போது யோசித்துப்பாருங்கள். என்னைப் போன்ற குணநலன்களை உடைய ஒரு ஆசாமிக்கு கண்ணாடி வைப்பதற்கென்றே கிடைத்திருக்கும் ஒரு இடம் எவ்வளவு சந்தோசத்தைக் கொடுத்திருக்கும் என்று. அதில் பத்திரமாக கண்ணாடியை வைத்துவிட்டு சுகமாக தூங்கத் தொடங்கினேன். அருகில் படுத்திருந்தவன் அவன் காதலியுடன் போனில் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தான். நல்லவேளை அவன் இந்திக்காரன். எனக்கு இந்தி தெரியாது என்பதால் தப்பித்தான். இல்லை எனின் இந்நேரம் அவன் பேசியதை வைத்தே மூன்று நான்கு பதிவு எழுதியிருப்பேன். புரியாத அந்த ரொமான்ஸை கேட்டபடியே நான் தூங்க, 'கோயம்பேடு வா, கோயம்பேடு வா, கோயம்பேடு வா' என்ற சத்தம் தான் என்னை எழுப்பிவிட்டது. 

மணி ஆறு. இரண்டு நாள் தொடர்ந்து பெங்களூரை சுற்றிய அலுப்பில் காட்டுத்தனமாக தூங்கியிருக்கிறேன். தூக்கம் கலைந்து எழும் போது ரொமான்ஸ் பார்ட்டி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். 'தூங்கித் தொல' என்று அவனை எழுப்பாமல் என்னுடைய சக உதிரிகளை எல்லாம் எடுத்துவிட்டு இறங்க ஆயத்தமானேன். 

பேருந்தைச் சுற்றிலும் திரை போட்டிருக்கவே வெளியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, அதன் முன்புறம் வந்த போதுதான் தெரிந்தது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பதை. அப்போதுதான் மற்றொன்றையும் கவனித்தேன், அவன் கோயம்பேடு என்று என்னை, எங்களை இறக்கி விடப்போவது கோயம்பேடு கிடையாது, அதற்கும் இரண்டு கிமீ முன்பு என்று. அவ்வளவு தான் அறச்சீற்றம் பீறிட்டது, 'சார், கோயம்பேடு இன்னும் டூ கிலோமீட்டர்ஸ் போகணும், செம மழை பெய்யுது, எப்படி போறது' என்றேன். 

என் முகத்தைப் பார்த்து முழித்தான். நன்றாக அவனை உற்று நோக்கினேன், பீகாரி முகசாயல். 'டேய் இப்ப இங்கயும் வந்துடீங்களா, அது சரி'. பேருந்தில் இருந்து இறங்கி ஒதுங்க ஒரு இடம் தேடினேன். அத்தனை இடங்களிலும் மக்கள் நீக்கமற ஒதுங்கியிருந்தனர். இச் ஜகத்தினில் எனக்கொரு இடம் இல்லாததைக் கண்டு மனம் குமுறியது. ஒரு டீக்கடையின் ஓரத்தில் பாதி நனைந்து பாதி நனையாமல் இருக்க ஓர் இடம் கிடைத்தது. ஓடிப்போய் சொருகிக்கொண்டேன். 

'தல சூடா காபி'

அட அந்த டீ கடைகாரனுக்கு என் மேல் எவ்வளவு அக்கறை. அருகில் ஒரு ஜக்கில் நீரும் இருந்தது. அடித்துப் பெய்து கொண்டிருந்த மழையில் எதுவுமே துல்லியமாக தெரியவில்லை. ஒரு காப்பி சொல்லிவிட்டு, நனைந்திருந்த தலையை கைகுட்டையால் ஈரமாக்கியபபின், கண்ணாடியைத் துடைக்கலாம் என்று கண்ணுக்கு அருகில் கையைக் கொண்டு சென்ற போதுதான் கவனித்தேன், கண்ணாடியைக் காணோம். மறதி ஒரு தேசியவியாதி இல்லை என்னுடைய தீரா வியாதி. 'வட போச்சா' என்று நினைத்துக் கொண்டே எதற்கும் என்னை இறக்கிவிட்ட இடத்திற்கு வேகவேகமாக ஓடினால், நல்லவேளை பேருந்தை பத்து நிமிடமாக அங்கேயே நிறுத்தி இருப்பான் போல, அப்போதுதான் கிளப்பிக் கொண்டிருந்தான். அவசர அவசரமாக பேருந்தின் முன்னால் போய் விழுந்தேன். முறைத்தான். மை ஸ்பெக்ஸ், மை ஸ்பெக்ஸ் என்றபடி மேலே ஏறினேன். 

உள்ளே சென்றால் வைத்த இடத்தில் கண்ணாடியைக் காணோம். வேறு எங்காவது விழுந்திருக்குமா என்றால் ம்கும் அதில் இருந்து கீழே விழ வாய்ப்பே இல்லை. பேருந்தே இருள் சூழ்ந்து எதுவுமே தெளிவாகத் தெரியாதநிலையில் கண்ணாடி கிடைக்கவில்லை என்றால் இனி எதுவுமே தெளிவாகத் தெரியபோவதில்லை.

என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கும் போதே,  சற்றே புரண்டுபடுத்த அந்த ரொமான்ஸ் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தான். 'க்யா' என்றான். 'மை ஸ்பெக்ஸ்' என்றேன். என்னை ஒரு நிமிடம் உற்று நோக்கியவன். அவசர அவசரமாக தன் பையைத் துழாவினான். இப்போது அவன் கையிலிருந்த கண்ணாடி என் கைக்கு மாறியிருந்தது. மீண்டும் புரண்டு படுத்துக் கொண்டான்.  


'டேய் அத ஏண்டா சுட்ட' என்று கேட்கலாம் போல் தோன்றியது. கேட்கவில்லை. கேட்டாலும் அவனுக்குப் புரியபோவதில்லை. புரிந்தாலும் அவன் கூறப்போகும் பதில் எனக்குப் புரியபோவதில்லை. பேருந்தில் இருந்து இறங்கினேன். அந்த டீக்கடையில் இதற்குமுன் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் வேறு ஒருவன் நின்று கொண்டு காபி குடித்துக் கொண்டிருந்தான். அடித்துப் பெய்துகொண்டிருந்த மழையில் கோயம்பேடை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினேன்.  முதலில் அந்த கண்ணாடி டப்பாவை தேட வேண்டும். 

14 Oct 2014

சில நொடி ஸ்நேகம் - குறும்பட அனுபவம்

குடந்தையூர் சரவணன் அவர்கள் இயக்கத்தில் ஆவியும் அரசனும் கூடவே துளசிதரன் அவர்களும் இணைந்து நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படத்தை சில நாட்களுக்கு முன்பும் நேற்றும் பார்த்தேன். அப்படத்தைப் பற்றி சில விஷயங்கள். 

குடந்தையூர் அவர்கள் சற்றே நீள, அந்த நீளத்திற்கு ஏற்ற பட்ஜெட்டில் ஒரு குறும்படம் தயாரித்து இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தபோது இருந்தே அவரைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர் தனது முதல் குறும்படத்திற்கான கதையை விவரித்த போதே நிச்சயம் அது வெகுஜன ரசிகர்களுக்கு (என்னைப் போன்ற குறும்படப் பிரியர்களுக்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன்) பிடிக்கும் என்பது புரிந்தது, அதேநேரம் அந்தப் படத்திற்கு நாம் எதிர்பார்க்கும் ஒரு பெர்பெக்சன் வர வேண்டுமென்றால் அதற்கான உழைப்பு மிக அபாரமாக இருக்க வேண்டும். தயாரிப்பு செலவுகளும் முன்னப்பின்ன வரலாம். திரைத்துறையில் நன்கு அனுபவமிக்க சில நண்பர்கள் சில அறிவுரைகள் கூறியதன் பேரில் அந்தத் திட்டத்தை தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளார் குடந்தையூரர். அதிலும் அண்ணன் கே.ஆர்.பி கூறியது இதைத்தான் 'ஒரு பத்து குறும்படம் எடுத்து அடிபட்டு, அனுபவபட்டு வாங்க சார், அதுக்கு அப்புறம் இந்தப் படம் எடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்' என்றார். 


அவ்வகையில் தனது முதல் குறும்படமாக சில நொடி ஸ்நேகத்தை எடுத்து முடித்துவிட்டார். அரசனும் ஆவியும் குடந்தையூரரின் கூடவே இருந்ததால் குறும்படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை என்னால் ஓரளவேனும் புரிந்து கொள்ள முடிந்தது. 

மேலும் இந்த குறும்பட டீமில் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். தங்கள் அலுவலகம் முடிந்த இரவுகளில் மட்டுமே குறும்படத்திற்கான எடிட்டிங் மற்றும் மற்ற டிங்கரிங் வேலைகளைப் பார்க்க முடியும். அப்படித்தான் பார்த்தார்கள். ஒவ்வொரு இரவுகளிலும் அவர்கள் தூங்கச் செல்லும்போது அடுத்தநாள் தனது விடியலை நெருங்கியிருக்கும். ஒரு குட்டித்தூக்கம் போட்டு பின் அலுவலகம் நோக்கி ஓடி மீண்டும் ஒரு கூரையின் கீழ் இயங்கத் தொடங்கும் போது அடுத்த இரவு அவர்களுக்காக முழித்திருக்கும். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு இதே நிலை தான். அந்த பத்து நாட்களில் குறும்படத்திற்காக தன்னை முழுமையாக அர்பணித்தவர் குடந்தையூரர்.  

கும்பகோணத்தில் வைத்து நடைபெற்ற ஷூட்டிங் அனுபவங்களை அவ்வபோது ஆவியும் அரசனும் பகிர்ந்து கொண்டே இருப்பார்கள், வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை தாங்கள் உணர்ந்த தருணம் என்றார்கள். பெரிய பெரிய படங்களின் படப்பிடிப்புகளில் crowd controlling என்பது மிகவும் கஷ்டமான காரியம் தான் என்றபோதிலும், அதைக் கட்டுபடுத்த சில நபர்கள் இருப்பார்கள். 

ஆனால் குறும்படம் எடுக்கும் போது, கேமெராமேன் தீர்மானிக்கும் frameற்குள் தேவையில்லாத நபர்வரின் அவரை வரவிடாமல் பார்த்துக் கொள்வதே உடன் இருபவர்களுக்குப் பெரும்பாடாய் இருக்கும். ஒருவேளை மீறி ஏதாவது கூறினால் சண்டைக்கு வருவார்கள் அல்லது எகத்தாளமாகப் பார்ப்பார்கள். இத்தனைக்கும் நடுவில் லைட்டிங் மிக மிக முக்கியம். இருளில் ஷூட்டிங் செய்யும் அளவுக்கு எல்லாம் நம்முடைய பட்ஜெட் நம்மை அனுமதிக்கப் போவதில்லை. மேலும் குறித்த நேரத்திற்குள் படத்தை எடுத்தும் முடிக்க வேண்டும். இதையெல்லாம் விட மிக முக்கிய விஷயம், நடிப்பதற்காக நம்மோடு வருபவர்களுக்கு நடிப்பதில் ஓரளவேனும் ஈடுபாடு வேண்டும். சு'ம்மா அவர் கூப்டாரு வந்தேன், நட்புக்காக, ஜாலியா தலைய காட்டலாம்னு வந்தேன்'னு சொன்னா நீங்க உங்க கனவுகளை மூட்டை கட்டிற வேண்டியது தான். 

அப்படியே நடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு ஒருவர் வந்தாலும் கேமெரா முன் நின்று நாலு பேர் முன் நடிக்கத் தொடங்கினால் அப்படியே ஒதரும். இதில் அவர் இயல்புநிலைக்கு வருதல் என்பது பெரும்பாடு. இத்தனை சவால்களும் ஒட்டுமொத்தமாக ஒரே ஒருவர் தோளின் மீது மட்டுமே சுமத்தப்படும் அவர் வேறு யாருமில்லை அக்குறும்பட இயக்குனரே. இவ்வளவையும் கடந்து அவர் தனது இயக்குனர் வேலையையும் பார்க்க வேண்டும். இத்தனை சாவல்களையும் மீறித்தான் குடந்தையூரும் தனது சூட்டிங்கை முடித்துள்ளார். கூடவே போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளையும். 

அரசனும் ஆவியும் நடித்திருந்ததாலோ என்னவோ படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது. குடந்தையூரும் நட்பின் அடிப்படையில் 'வாத்தியார் ஸ்கூல்பையன் சீனு இவங்களோட கருத்த தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கேன். அவங்ககிட்ட கேட்டு சொல்லுங்க' என்று அரசன் மற்றும் ஆவியிடம் கூறியிருந்தார். 

கடந்த வாரம் வாத்தியாரின் வீட்டில் வைத்து படத்தைப் பார்க்கத் தொடங்கினோம். படம் பதினைந்து நிமிடங்கள் ஓடுகிறது என்று நினைக்கிறன். தற்செயலாய் சந்திக்கும் இரு நபர்களுக்கிடையே நிகழும் ஸ்நேகம் என்பது தான் கரு. மற்றவற்றை நீங்கள் குறும்படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 


இந்தக் குறும்படம் பார்க்கும் போதும் சரி பார்த்து முடிக்கும் போதும் சரி வாத்தியாரும் ஸ்கூல்பையனும் சும்மாத்தான் இருந்தார்கள். நான் தான் ஆரம்பத்தில் இருந்தே இது இப்படி இருந்திருக்கலாம் அது அப்படி இருந்திருக்கலாம் என்று ஒவ்வொன்றாகக் கூற ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் ஆவி பொறுமையிழந்துவிட்டார். யோவ் பேசாம படத்தப் பாரு, அப்புறமா கருத்த சொல்லு என்றார். ஆனாலும் நான் விடவில்லை. இல்ல பாஸு என்று நான் ஆரம்பித்தால் முறைக்க ஆரம்பித்துவிடுவார். அப்புறம் சில காட்சிகள் நான் புரியவில்லை என்றால் அதனை விளக்குவார், நானோ  'அதெல்லாம் முடியாது, ஒரு காட்சி பார்த்தவுடன புரியணும், நீங்க ஒவ்வொருத்தர் கிட்டயா போய் விளக்குவீங்களா என்றேன். 'இல்லப்பா இது குறும்படம் மோர் டீடெயிலிங் எதுக்கு' என்பார். 'கேமரா வசனம் எல்லாம் ஒகே, ஆனா இசை'  என்று இழுத்தேன் என்றால் மீண்டும் முறைப்பார்.

கிட்டத்தட்ட கடந்த நான்கு வருடங்களாக வெறும் குறும்படங்களாக தேடித்தேடிப் பார்ப்பது மட்டுமே எனது முக்கியப் பொழுதுபோக்காக இருந்தது. (இப்போ கொஞ்சம் குறைச்சிட்டேன், அரைச்ச மாவையே அரைக்கிறாங்க). அதனால் என்னிடம் குறும்படப் பாதிப்பு அதிகம். குடந்தையூரிடம் இருந்தும் ரொம்பவே சிறப்பான ஒரு படைப்பை எதிர்பார்த்திருந்ததலோ என்னவோ என் எதிர்பார்ப்புகளின் உள் அவை வரமறுத்தது. படம் பார்க்கும்போது என்னுள்ளே இருந்த ஒருவன் தன்னுடைய வாதங்களை வைக்கத் தொடங்க ஆவி டென்சன் ஆகிவிட்டார். 'ப்பா இது முதல் படம்ப்பா போக போக நல்லா பண்ணிரலாம்' என்றார். அவர் சொன்னது சமாதானம் தருவதாய் இருந்தாலும் முழு சமாதானம் அடையவில்லை. 

அதேநேரம் படம் பார்த்து முடித்ததும் நான் கூறிய கருத்துக்களில் வாத்தியாரும் ஸ்கூல்பைனும் ஒத்துப்போனார்கள், சிலவற்றை மறுத்தார்கள். விமர்சனம் என்பது தலையில் கொட்டுவது போல் இருக்கலாம் ஆனால் பாறாங்கல்லைப் போடுவது போல் இருக்ககூடாது என்பார்கள். நான் ரெண்டு மூன்று பாறாங்கல்லை வைத்திருந்தேன் போலும். 

இருந்தாலும் நாங்கள் கூறிய விமர்சனங்கள் நிச்சயம் குடந்தையூரைப் பாதித்திருக்க வேண்டும், வருத்தபட்டிருப்பார் என்றும் தெரியும். விமர்சனங்கள் என்பது ஒருவர் வருத்தபடுவதற்காகக் கூறப்படுவதில்லை, அவர் தன்னை கூர்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அக்கறையில் கூறப்படுபவை. எல்லாருமே எல்லாவற்றையும் முதல் முறையே சிறப்பாக செய்துவிடவில்லை. இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா என்று நாம் நினைக்கும் சில விஷயங்கள் பெரிய பிரச்சனையாக வரும். இன்றைக்கு அலுவலகத்தில் கூட  ஒரு சில்லறைத்தனமான பிரச்னையை செய்துவிட்டு டெஸ்கை தடவிக் கொண்டிருந்தேன், அதனை என் டி.எல் கார்த்திக் சரிசெய்த போது 'ச்ச இது கூட தெரியலியா எனக்கு' என்று தான் தோன்றியது. ஆனால் அது ஒரு பாடம். அவ்வளவு தான், அடுத்தமுறை அதே தவறை செய்யக்கூடாது. புதியதாய் ஒன்றை தேடிப்போக வேண்டும். ச்ச என்று அங்கேயே தேங்கிவிட்டேன் என்றால் கடைசி வரைக்கும் தேங்கிக் கிடக்க வேண்டியதுதான். 

நாங்கள் கொஞ்சம் காட்டமான விமர்சனம் தான் வைத்தோம் என்றபோதிலும் முதலில் வருத்தப்பட்டவர் பின் அதனை சரி செய்வது எவ்வாறு என்பது குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அதற்காக இன்னொருமுறை ஷூட்டிங் எல்லாம் செல்ல முடியாது. இருப்பதை வைத்து இன்னும் பெட்டர் ஆக்குவது ஒன்றே சிறந்த வழி. 

நேற்றைக்க்கு மீண்டும் ஒருமுறை படம் பார்த்தேன். எனக்கு எதுவெல்லாம் உறுத்தியதாக உணர்ந்தேனோ அதையெல்லாம் வெட்டி இருக்கிறார். எதையெல்லாம் வெட்ட முடியாதோ அதையெல்லாம் வேறுவழிகளில் சீர்படுத்தியுள்ளார்.  குடந்தையூர் சார் உங்களிடம் உங்களின் முதல் படமாக எதிர்பார்த்தது கிட்டத்தட்ட இது போன்ற ஒரு படத்தைத்தான். இந்தப்படம் உங்களுக்குக் கற்றுகொடுத்த பாடம் உங்களின் அடுத்த படத்தை மெருகூட்டும் என்று நம்புகிறேன். 'அன்னிக்குப் பார்த்தப்பவிட இப்போ எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு' என்றார் ஸ்கூல்பைனும். வாத்தியார் இன்னும் பார்க்கவில்லை என்று நினைக்கிறன். இந்த நள்ளிரவில் வாத்தியாருக்கு போன் செய்து 'பார்த்துட்டீங்களா' எனக் கேட்பது சற்றே சிரமமான காரியம் என்பதால் அவர் டீலில் விட்டுவிடுகிறேன். 

இந்த போட்டோக்கு மட்டும் எனக்கு பேமன்ட் வந்த்ரனும் 
அப்புறம் உங்களின் அடுத்த படத்தில் மிஸ்டர் ஸ்கூல்பையனை ஹீரோவாக வைத்து இயக்க இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. அப்படம் இன்னும் மென்மேலும் மெருகூட்டப்பட்ட ஒன்றாக வெளிவர வாழ்த்துகள். இன்னொரு விஷயம் எப்படியேனும் என்னை உங்களின் ஏதேனும் ஒரு படத்தின் ஒரு காட்சியிலாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற தீவிரத்தில் இருப்பதாக அதே உளவுத்துறை கூறியது. நானெல்லாம் அமெரிக்க மாப்பிள்ளையாக நடிப்பதற்குக் கூட லாயக்கிலாதவன் என்பதை இச்சமூகத்தின் முன் கூறிகொள்கிறேன் :-)

10 Oct 2014

பெட்'ஸ் நேம் - Pet's Name

நேற்று வரைக்கும் எல்லாமே நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது எனக்கும் அலுவலகத்தில் எனக்குக் கொடுத்திருக்கும் மடிக்கணினிக்குமான உறவு. கிட்டத்தட்ட அது என்னிடம் வந்து சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது என்று நினைக்கிறேன். இருந்தாலும் ஒருமுறை கூட அதன் கடவுச்சொல்லை மறந்தது இல்லை. நேற்றைக்கும் மறக்கவில்லை, ஆனாலும் எப்படியோ தப்பாக டைப்பிவிட்டேன். சிவனே என்று அதுவும் அதுபாட்டுக்கு லாக் ஆகிவிட்டது. இதற்கு முன் இப்படி ஆனதே இல்லை. இது தான் முதல்முறை.  

இந்த அலுவலகத்தைப் பொறுத்தவரையில் கடவுச்சொற்களை நியாபகத்தில் வைத்திருப்பது என்பது மிகப்பெரிய இம்சை. அதிலும் மாதம் ஒருமுறை ஒவ்வொன்றையும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். மாற்றியதை நியாபகத்தில் வேறு வைத்திருக்க வேண்டும். போதாகுறைக்கு எந்த ஒரு பக்கத்தைத் திறக்க வேண்டுமாயினும் அதற்கென இருக்கும் பிரத்யோக கடவுச்சொல்லை கொடுக்கவேண்டும். அதுவும் முக்கா முக்கா மூணு முறை தான், நான்காவது முறை லாக் ஆகிக்கொ'ல்லு'ம். 

நேற்றைக்கு என்னுடைய மடிக்கணினியில் முதன்முறை மட்டும் தான் கடவுச்சொல்லை தவறாகக் கொடுத்ததாக நியாபகம். என் மேல் என்ன காண்டோ ஒவ்வொரு முறையும் தவறு என்றே கூறி, நான்காவது முறை இறுக்க ஒரு தாழ்ப்பாளைப் போட்டு மூடிக்கொண்டது. 

ஆண்டவன் முன்வாசல அடச்சா பொரவாசல தொறக்காமலா போயிருவான். பாஸ்வேர்ட் ரெகவரி ஆப்சன் என்று நான்கு கேள்விகளைக் கேட்டது. அவற்றிற்கான பதிலை ஒரு வருடம் முன்பு பதிந்தது. முதல் மூன்று கேள்விகளும் வழக்கமான பிறந்த ஊர் எது, பிடித்த கலர் எது, பிறந்த தேதி எது போன்ற கேள்விகள் தான். பதில் மறந்து போகக்கூடிய அளவுக்கு சிரமமான கேள்விகள் அல்ல என்பதால் பிரச்சனை இல்லை.

ஆனால் இந்த நான்காவது கேள்விதான் என்னைப் போட்டு படுத்திவிட்டது. whats your pet's name?. 

'பெட் நேம்', எனக்கென ஒரு ஈமெயில் கிரியேட் செய்யும் போதுதான் இந்த வார்த்தையையே கேள்விபட்டேன். பொதுவாகவே ஆக்ஸ்போர்ட் லிப்கோ போன்ற டிக்ஸ்னரிகளை விரல்நுனியில் வைத்திருப்பவன் தான் என்ற போதிலும், இந்த வார்த்தை இருந்த பக்கம் மட்டும் கிழிந்துவிட்டது போல. எனக்கு ஈமெயில் கிரியேட் பண்ண சொல்லிக்கொடுத்த அந்த அண்ணனிடம் கேட்டேன் 'ண்ணே அப்டின்னா என்னன்னே', 'அதுவாடா உன்ன வீட்ல செல்லம்மா கூப்டுவாங்க இல்ல, அது தான் பெட் நேம்' என்றார். அன்றிலிருந்து எங்கு பெட் நேம் என்று இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு சீனு என்று எழுதிவிடுவேன். அதுவும் ***** என்று தானே காட்டப் போகிறது, அதனால் என்ன எழுதினேன் என்று யாருக்கும் தெரியாது.

ஒரு முறை எதோ ஒரு பாரத்தில் பெட்'ஸ் நேம் என்று இருந்த இடத்திலும் சீனு என்று அடித்துத் தொலைய அதுவும் ****** என்று காண்பிக்காமல் சீனு என்றே காட்டித்தொலைய, அசிங்கபட்டான் சீனு. 'பாஸு பெட் நேம் ன்னு இருந்தா தான் உன் செல்ல பேரு, பெட்ஸ் நேம்ன்னு இருந்தா உங்க வீட்ல வளர்க்குற வளர்ப்புப் பிராணி பேர கொடுக்கணும்' என்றான் மணி. 'இல்ல மணி எந்த இடத்துல பெட் நேம்ன்னு இருந்தாலும் சீனுன்னு தான் கொடுப்பேன், மத்தபடி எனக்கு தெரியும்' என்று சமாளித்தேன். அதன்பின்னும் பெட் என்றாலும் பெட்'ஸ் என்றாலும் சீனு தான். காரணம் எங்கள் வீட்டில் நாங்கள் தான் பெட்டே வளர்க்கவில்லையே. 

ஆவடியில் இருந்த போது இரண்டு வருடம் ஒரு பூனையை வளர்த்தேன். நான் வளர்க்கவில்லை. அதுவாக என்னோடு சேர்ந்து வளரத் தொடங்கியது என்றும் சொல்லலாம். போனால் போகட்டும் என்று எனக்கு சோறு போட்ட அப்பா அதற்கு பால் ஊற்றி வளர்த்தார். அது எங்கள் வீட்டு பெட் இல்லை என்றாலும் அது எங்கள் வீட்டு பெட் தான். வேண்டுமானால் 'பேக் பெட்' என்று வைத்துக் கொள்ளுங்கள். காலையில் அது எழுந்துவிட்டால் நாங்களும் எழுந்து விடவேண்டும். இல்லை என்றால் வீட்டுக்குள் நுழைந்து அதன் அட்ராசிட்டியை தொடங்கிவிடும் அந்தக் குட்டிசாத்தான். அதைப்பற்றி பின்னொரு நாளில் ஒரு பெருங்குறிப்பு வரைகிறேன். இப்போது இந்த அளவில் போதும். 


லேப்டாப் ரெகவரிக்கு நான்காவது கேள்வியான 'யுவர்ஸ் பெட்'ஸ் நேம்' என்று கேட்ட கேள்விக்கு 'சீனு' என்று கொடுத்தேன். முறைத்தது. 'லேப்டாப்' என்று கொடுத்தேன் கெட்டவார்த்தையால் திட்டியது. இதுலும் மூன்று முயற்சியா இல்லை எத்தனை முயற்சி என்று தெரியவில்லை. இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லை. நன்றாக மூச்சை ஒருமுறை இழுத்து விட்டேன். சந்திரமுகியில் ரஜினி சந்திரமுகியிடம் இருந்து ஜோதிகாவை எப்படி காப்பற்றுவது என்று சிந்திப்பதற்காக தன் கைகள் இரண்டையும் முகத்தின் மீது வைத்து ஆழ்ந்து யோசிப்பரே அப்படித்தான் யோசித்தேன். அப்படியும் என்ன பெட் நேம் கொடுத்தேன் என்று தெரியவில்லை. எப்படியாவது கண்டுபிடித்தே ஆகவேண்டும். இதுவெல்லாம் ஒரு சாதனைன்னு எங்ககிட்ட சொல்றியான்னு நீங்க கேட்கலாம். இது என்னோட வேதனை பாஸ் வேதனை.

ஒருவேளை நீங்கள் அதிதீவிர தமிழ் சினிமா ரசிகர் என்றால் நான் இந்நேரம் என்ன பெட்நேம் கொடுத்து இருப்பேன் என்பதை நீங்கள் கண்டுபிடித்து இருக்கலாம். ஏன்னா ஹீரோக்கு தான் படத்தோட ட்விஸ்ட் என்னன்னு தெரியாது. பக்ஷே ரசிகனுக்கு தெரியும். எஸ் மூணாவது தடவ என்னோட ஆழ்மனசோட அடியாழத்துக்கு போய் சரியான பதில கண்டுபிடிச்சிட்டேன். ஐ ரெகவர்ட் மை பாஸ்வேர்ட். 

அப்ப பெட்'ஸ் நேம்ல என்ன பதில் கொடுத்தேன்னு கேட்கறீங்களா, நான் தான் என்னோட பெட்டுக்கு பேரே வைக்கலையே. அதுனால நான் கொடுத்த பதில் 'poonai'. 

இதன் மூலம் சொல்ல வரும் இலக்கியத்தரமான ஆகச்சிறந்த மெசேஜ் :

எங்க தாத்தா அடிக்கடி சொல்லுவாரு நான் ஐன்ஸ்டீனுக்குப் பேரனாப் பொறக்க வேண்டியவன் ஆனா அவருக்குப் பேரானாயிட்டேன்னு. அவரு சொன்னது எவ்ளோ உண்மைன்னு எனக்கு நேத்து தான் தெரிஞ்சது.  

2 Oct 2014

நவகாளி கலவரம் - மகான் காந்தி மகான் - சாவி


நவகாளி கலவரம் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன். ஒருசாரரைக் கேட்டால் கோத்ராவை விட மோசமான கலவரம் என்பார்கள், இன்னொரு சாரரைக் கேட்டால் ஹிந்துக்களுக்கு நிகழ்ந்த அநீதி, இதற்கு பலசாராரும் உடந்தை. காந்தியின் செயல்பாடுகளும் உவப்பானதாக இல்லை என்று கூறுவார்கள். அந்த பஞ்சாயதிற்குள் எல்லாம் நான் நுழைய விரும்பவில்லை. அவரவர், அவரவர் சிந்தனைகளின்படியும் ஆராய்ச்சியின்படியும் எது சரி என்று ஒரு முடிவுக்கு வருகிறீர்களோ அதற்கே வந்து கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். இப்போது நவகாளிக்கு வருவோம். 

நவகாளி வங்காளத்தில் இருக்கும் முக்கியமான பகுதி, இங்கு இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மிகப்பெரிய கலவரம் நடைபெற்றது. கலவரம் ஆரம்பித்த - நடைபெற்ற -  காந்தி உள்ளே வருவதற்கு முந்தைய பகுதியை உங்கள் வரலாற்று ஆர்வத்திணை வளர்க்கும் பொருட்டு சிரமேற்கொண்டு நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

கலவரம் கட்டுக்குள் அடங்காமல் காட்டுத்தீ போல் பரவுகிறது. போலீசாருக்கு அடங்கவில்லை எனில் வான்வழித் தாக்குதல் மூலம் கட்டுபடுத்துங்கள் என்று பிரிடீஷாரிடம் முறையிடுகிறார் நேரு. கலவரத்தை நிறுத்தக் கோரி அத்தனை இந்தியத் தலைவர்களும் நவகாளிக்கு வந்து குமிகிறார்கள். ஆனாலும் கலவரம் நின்றபாடில்லை. இப்போது காந்தியே களத்தில் இறங்குகிறார், அனைவருக்கும் தெரியும் காந்தி களத்தில் இறங்கினால் நிலைமை கட்டுக்குள் வரும் என்று, நடந்ததும் அது தான். நவகாளி முழுவதும் கலவரம் அடங்க வேண்டி அமைதி ஊர்வலம் நடந்ததத் தொடங்கினார் மகான் காந்தி மகான். கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வரத்தொடங்கியது கலவரம். நிற்க. இனி பேசப்போவது காந்தியைப் பற்றி மட்டும் அல்ல.


இப்போதெல்லாம் செய்தி சேகரிக்கும் பொருட்டு நிருபர்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்கள். அதையெல்லாம் விட அதிகமான ரிஸ்க் எடுத்து நேரடி ரிப்போர்ட் எடுப்பதற்காக தமிழகத்தில் இருந்து நவகாளி நோக்கி பயணிக்கிறார் தமிழ்ப் பத்திரிக்கையாளர் ஒருவர். இப்போது இருப்பது போல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நேரடிப் போக்குவரத்து இல்லாத காலம். பேருந்து ரயில் படகு நடை என்று கிடைத்த வழிகளில் எல்லாம் பயணம் செய்கிறார் அப்பத்திரிக்கையாளர். வங்காளத்தில் சந்திக்கும் தன் நண்பர் மூலம் காந்தியையும் கண்டுபிடித்து விடுகிறார். அவர் வேறு யாருமில்லை. அப்போது கல்கி நிறுவனத்தில் மூத்த பத்திரிக்கையாளராக பணிபுரிந்த திருவாளார் சாவி அவர்களே அந்தப் பத்திரிக்கையாளர். 

தான் காந்தியை முதன் முதலில் சந்தித்த நிகழ்வை கடவுள் சந்நிதானத்தில் சயனத்தில் இருக்கும் நிகழ்வுடன் ஒப்பிட்டு பேரானந்தம் அடைகிறார் சாவி. அதன்பின் நவகாளியில் காந்தியுடனான பயணத்தில் நிழல்போல் தொடர்கிறார். 

காந்தியின் நவகாளி அமைதி ஊர்வலத்தில் பங்கு கொள்ள வந்திருக்கும் இந்தி வங்காளம் ஆங்கிலம் தெரிந்த பத்திரிக்கையாளருடன் ஒருவராக சாவியும் ஐக்கியமாகிறார். அங்கு மாணிக்கவாசகம் என்ற தமிழ் தெரிந்த பத்திரிக்கையாளர் ஒருவரும் இருக்கிறார். மாணிக்கவாசகம் தமிழ் தெரிந்த அமெரிக்க பத்திரிகை நிறுவனத்திற்காக வேலை செய்யும் பத்த்ரிக்கையாளர். எனவே அங்கிருப்பவர்களில் சாவி மட்டுமே ஒரேஒரு தமிழ்ப் பத்திரிக்கையாளர். சாவியின் எழுத்து நடை ஒரு மெல்லிய குறும்பு கலந்தே வெளிப்படுவது சுவாரசியம்.  

நவகாளி பகுதியில் காந்தியுடன் சேர்ந்து அவர் பயணித்த அனுபவங்களை ஒரு பயணிக்கக் குறிப்பைப் போல எழுதியுள்ளார். வானதி வெளியீடாக வந்த அந்தப் புத்தகம் வாத்தியார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தது. காந்தி ஜெயந்தியான இன்று தற்செயலாக அதைப் படிக்க நேரிட்டு அதன் தாக்கத்திலேயே இதை எழுதி கொண்டுள்ளேன். 

காந்தி என்பவர் மனிதர் இல்லை, மகான் இல்லை, மகாத்மா இல்லை இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவரை ஒரு மாபெரும் சக்தியாக இறைவனுக்கு இணையாக இந்தியா உருவகித்துக் கொண்டிருக்கிறது என்பதை சாவியின் அனுபவங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கடவுள் ஏதாவது சொன்னார் என்றால் நீங்கள் மறுப்பீர்களா அப்படித்தான் காந்தியை ஒவ்வொரு இடத்திலும் எதிர்கொண்டிருக்கிறார்கள் இந்தியர்கள். அவர் வாக்கு கடவுள் கொடுக்கும் வரத்திற்கு இணையானது என்கிறார்கள். 

கலவரம் நடந்த ஒவ்வொரு பகுதியிலும் காந்தியின் பிராத்தனையில் கலந்து கொள்ளவும் அவர் பேச்சை (ஹிந்தியில் தான் பேசுவார், மக்களுக்கு ஹிந்தி புரியாது, வாங்காள மொழிபெயர்ப்பாளர் கூடவே சென்றுள்ளார்) புரியாவிட்டாலும் கேட்டு பயனுறவும் கூட்டம் கூட்டமாக வந்திருக்கிறார்கள் மக்கள்.

அந்தப் புத்தகத்தில் கொசுறாக காந்தி தமிழகத்தில் பங்கு கொண்ட கூட்டங்களையும் அதில் தான் பங்கு கொண்ட விதத்தையும் பற்றி எழுதியுள்ளார். அப்போதே மாம்பலத்தில் இருந்த ஜன நெருக்கடியையும் போக்குவரத்தையும் பற்றி எழுதியிருக்கிறார். அதாவது இப்போது இருக்கும் நிலைக்கு இம்மி பிசகாமல் அப்போதும் அப்படித்தான் இருந்துள்ளது.  

தென் இந்தியாவில், காந்தி தான் பங்குகொள்ளும் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாது வேறொரு விசயத்தையும் குறிப்பிட்டுள்ளார், அது

'மனிதனுக்கு பிராணவாயு எவ்வளவு அத்தியாவசியமோ, அதைப்போல இந்திய மக்களுக்கு ஹிந்துஸ்தானி பாசையும் அவசியமாகும். ஹிந்துஸ்தானி கற்பதை ஒரு முக்கிய தர்மமாகக் கருத வேண்டும். ஹிந்துஸ்தானி மிகவும் சுலபமான பாஷை. புத்திசாலிகளுக்கான தென்னிந்தியர்களுக்கு ஹிந்தி கற்பது ஒரு பிரமாதமான காரியம் அல்ல'   

(மேற்கூறிய அந்த வரிகளை சும்மா ஒரு தகவலுக்காகத்தான் கூறினான். வேறு எதனுடனும் தொடர்புபடுத்தி குழம்பிக்கொள்ள வேண்டாம். :-) )

இந்தப் புத்தகத்தைப் வாசித்த பின் காந்தி மீதான என் மதிப்பு இன்னும் ஒருபடி கூடியிருப்பது நிதர்சனம். இதுபோதாது. காந்தியைப் பற்றி இன்னும் அதிகமாக வாசிக்க வேண்டும்.