29 Jun 2014

பிரியாணி - எ ஜர்னி பிரம் O.M.R டூ மேடவாக்கம்

சனிக்கிழமை இரவென்பதால் ஓ.எம்.ஆரே வெறிச்சோடிக் கிடந்தது. அடித்துபெய்த மழையில் சாலையோரத்து நாய்களும் பக்குவமாய் ஒதுங்கியிருந்தன. டோல்கேட்டில் காசு வாங்குபவன் கூட தூங்கிப் போயிருந்தான். வங்காள விரிகுடாவின் குளிர்ந்த காற்றை அனுபவித்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

ஊரே அமைதியாயிருக்க இந்தப் பசிதான் முந்தாநாள் காதலி போல் என்னோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தது. மதியம் சரியாக சாப்பிடாததன் எபெக்ட்டை இப்போது அனுபவித்துக் கொண்டிருந்தேன். எட்டு மணியில் இருந்தே பசிக்கத் தொடங்கியிருந்தாலும் மறை கழண்ட சில நட்டு போல்டுகளை சரி செய்து முடிப்பதற்கு இரவு ஒன்பது மணியாகியிருந்தது. குறித்த நேரத்திற்குள் அவற்றைச் சரி செய்யாவிட்டால் என் அமெரிக்க அக்காவிற்குக் கோபம் வந்துவிடும். உடனே எஸ்கலேட் செய்துவிடுவாள். சரி பசிக்கிறது என்று எனக்குத் தெரியும். அவளுக்குத் தெரியுமா என்ன? மதியம் ஒழுங்காக சாப்பிட்டிருக்க வேண்டும்.  

மதியம் பிரியாணி சாப்பிடலாம் என்று கிரிம்சனை நோக்கிப் படையெடுத்தால் டுடே மெயிண்டனன்ஸ் டே, திரும்பிப் போடே என்று வந்த வழியே அனுப்பிவிட்டார்கள். ஆசையாகச் சென்ற என் பிரியாணி ஆசையில் விழுந்தது மண். இன்றைக்கு பிரியாணி சாப்பிடவேண்டும் என்ற எண்ணமே எனக்கில்லை. மதியம் சாப்பிடச் செல்லும் போது இந்த பிரபுதான் சும்மா இருக்காமல் 'கிரிம்சன்ல பிரியாணி இருக்கும். போலாமா' என்று அழைத்தார். பிரியாணி இல்லை என்றானவுடன், பிரியாணி பட கார்த்தி போல் என கை கால் எல்லாம் உதறத் தொடங்கிவிட்டது. ஆனாலும் இனி சரவணபவனை விட்டால் சாப்பிடுவதற்கு வேறு கடை இல்லை. சலித்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம். 


சர்வமும் சைவ மயம். நமக்கு இந்த சைவ வாடையே ஆகாது. குமட்டிக் கொண்டு வந்தது. வேறுவழியில்லாமல் தோசையை வாங்கினேன். சிக்கன் பிரியாணியை எதிர்பார்த்து வந்தவனை வெண்டைக்கா சாம்பார் ஊத்தித் தின்னு என்றால் அவனால் எப்படித்திங்க முடியும். வாங்கிய தோசையையே மொறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஐம்பது ரூபாய் நான்கு வாய்க்குக் கூட இல்லை. தோசை இருந்ததற்கான எந்தத் தடயமும் இல்லாமல் இலை துடைத்து எடுக்கபட்டிருந்தது. 

சிறுசேரி சிப்காட் தொழில் முனைவோருக்கான சிறப்புநிலை தொழில் வளாகம் என்பதால் அங்கு தனியார் உணவகங்கள் தொடங்குவதற்குத் தடா. அந்தந்த அலுவலகங்கள் வேண்டுமானால் அவரவர் வளாகங்களுக்குள் உணவகம் ஆரம்பித்துக் கொள்ளலாம். சிறுசேரி வளாகத்தினுள் ஆரம்பிக்கக் கூடாது. ஒருவேளை வெளி உணவகங்களில் சாப்பிட வேண்டுமானால் சில கி.மீட்டர்கள் பயணித்து ஓ.எம்.ஆருக்குத்தான் வர வேண்டும். 

அதனால் இரவும் வேறுவழியில்லை. அதே சரவணபவன். அதே தோசை சப்பாத்தி பரோட்டா. இதைத் தவிர வேறு எதவாது கிடைக்குமா என விலைப் பட்டியலில் தேடினேன். எல்லாமே தோசை வகையறா. ஒவ்வொன்றின் விலையும் ஐம்பதுக்கும் மேல். ஐம்பது ரூவாய்க்கு இந்த காஞ்சு போன தோசைய சாப்பிடனுமா? நெவர். 'போடா நீயும் உன் தோசையும்' ச.பவனுக்கு ஒரு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் என் இருக்கைக்கே வந்துவிட்டேன். பசி இப்போது தலைக்கேறியிருந்தது. வீடு திரும்பும்போது நாவலூரில் வழக்கமாக சாப்பிடும் மரியாவில் சாப்பிட்டுக் கொள்ளலாமென வயிறைச் சமானதானம் செய்தேன். அப்படி இப்படியென்று அலுவலகத்தை விட்டுக் கிளம்பிய போது மணி இரவு பத்து. 

மெல்ல மரியாவை நெருங்கும் போதுதான் பிரியாணி ஆசை தலைதூக்கியது. 'நாம ஏன் பிரியாணி ட்ரை பண்ணகூடாது?'. நேற்றே மரியாவில் விசாரித்திருந்தேன். இந்த நேரத்தில் அங்கே பிரியாணி கிடையாது என்று கூறியிருந்தார்கள். இவனை விட்டால் நமக்கு வேறு கடையா இல்லை?. 

ஆனால் என் கெட்ட நேரம் ஓ.எம்.ஆரில் இருக்கும் சிறிய சிறிய கடைகள் அத்தனையும் சாத்தபட்டிருந்தது. கடைகளே இல்லை. பெரிய பெரிய ஹோட்டலுக்குச் செல்லும் அளவுக்கு நான் இன்னும் அப்பாடக்கர் ஆகவில்லை. அடுத்து இருக்கும் ஒரே கடை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை எதிரில் ஒரு பிரியாணி கடைதான். அதன் பெயர் எதோ தலப்பாகட்டி என்ற பெயரில் வரும். நானும் சரவணாவும் ஒருமுறை சாப்பிட்டோம். சுவை பிரமாதம். அதன் சுவையை நினைத்துப் பார்த்தபோதே பசி இன்னும் வேகமாய்ப் பசிக்கத் தொடங்கியது. 

மணி பத்தேகால். இன்னும் பத்து கிமீ செல்ல வேண்டும். இந்நேரம் அந்தக் கடை திறந்திருக்குமா அடைத்திருக்குமா எதுவும் தெரியாது. 'எனக்கு பிரியாணி வேணும் டாட்'

பெரும்பாக்கத்தை நெருங்க நெருங்க பசி கூடிக்கொண்டே இருந்தது. வானத்தில் மின்னல். சுற்றிலும் குளிர்ந்த காற்று. நல்ல பசி. மனம் முழுக்க பிரியாணி. வண்டி தன் போக்கில் சென்று கொண்டிருந்தது. இருந்தும் பிரியாணி கடையை நெருங்க நெருங்க கடை திறந்திருக்க வேண்டுமே என்ற எண்ணம் உச்சபட்ச பயமாய் மாறியிருந்தது. நல்லவேளை கடை திறந்திருந்தது. உள்ளே சிலர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வெளியே பிரியாணி அண்டாவும் இருந்தது. இதுபோதாதா. 

வண்டியை நிறுத்தினேன். உள்ளே நுழையும் போதே வாசலில் கேட்டுப் போட்டான் சர்வர். டேய் பிரியாணி இல்லன்னு சொல்லிராதடா. நான் அழுதுருவேன் என்று நினைத்துக் கொண்டே மெல்ல அவனிடம், 'பிரியாணி என்றேன்'. 'சாரி சார் பிரியாணி ஓவர்' என்றான் மூஞ்சியை நாளை வெட்டுப்பட இருக்கும் கோழிபோல் வைத்துக் கொண்டு. அவன் கூறிய அச்சொல்லைக் கேட்டதும் மின்னல் ஒரு நிமிடம் நின்றுபோனது. காற்று போன இடம் தெரியவில்லை. 'என்னது இல்லையா' என்றேன். 'ஆமா சார் க்ளோசிங் டைம் முடிஞ்சது' என்றான். 'குஸ்கா கூட இல்லையா' என்றேன். அண்டாவை தரையில் டொம் என்று கவிழ்த்தான். இதற்கு மேல் ஒருவார்த்தை பேசினால் உன் தலையில் கவிழ்த்திருவேன் என்பது போல் இருந்தது அவன் செய்கை.                     

'வேற என்ன இருக்கு'

'பிரைட் ரைஸ், நூடுல்ஸ்' 

'வேற'

'நான், பாராட்டோ, சப்பாத்தி, தோசை'

தோசை. அந்த வார்த்தையைக் கேட்டதுமே அங்கிருந்து கிளம்பிவிட்டேன். இந்த பிரைட் ரைஸ், நூடுல்ஸ் எல்லாம் என் விருப்ப மெனு கிடையாது. 'நான், பாராட்டோ, சப்பாத்தி'க்கு சைட்டிஷ் கிடையாது. காசு கொடுத்து வாங்க வேண்டும். அடுத்து இருக்கும் ஒரே ஆப்சன் தோசை. இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தேன். பெரும்பாக்கம் இல்லை என்றால் என்ன? மேடவாக்கம் இருக்கிறதே. பிரியாணியைத் நோக்கிய தேடல் மீண்டும் தொடர்ந்தது. ஒருவேளை மேடவாக்கத்திலும் கடை அடித்திருந்தால், அங்கே தோசை சாப்பிடக் கூட நல்ல கடை கிடையாதே. பெரிய கடை என்றால் சங்கீதா ஹாட்சிப்ஸ் தான். அங்கு போய் சாப்பிடுவதற்கு அலுவலகத்தில் இருக்கும் சரவணபவனிலேயே சாப்பிட்டிருக்கலாம். விலையாவது ஒரு பத்து ரூபாய் குறைவாயிருக்கும்.               

மனதை திடப்படுத்திக் கொண்டு மேடவாக்கத்தை நோக்கிக் கிளம்பினேன். இங்கே தான் எனக்குக் காத்திருந்தது அடுத்த ட்விஸ்ட். பெ.பாக்கத்தில் இருந்து மேடவாக்கதிற்கு இருவழிகளில் செல்லலாம். ஒன்று நேர் வழி. அதில் சென்றால் நான் வழக்கமாக சாப்பிடும் ஹைதராபாத் தலப்பாகட்டிக்குச் செல்லலாம். ஆனால் இந்நேரம் அக்கடை அடைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்னொரு வழி சித்தாலப்பாக்கம் ரோடு. அங்கே பிரியாணி-இன் என்று ஒரு கடை உள்ளது. முழுக்க முழுக்க பிரியாணிக்கான கடை. சுவை பிரமாதம் இல்லை என்றாலும் தற்போதைய தேவை ஒரு பிரியாணி. அதனால் அங்கு செல்வது என முடிவு செய்தேன். 

வழியில் விருதுநகர் பிரியாணி என்றொரு கடை இருந்தது. நமக்கும் இந்த விருதுநகர் என்ற பெயருக்கும் ஏழாம் பொருத்தம். தி.நகர் உஸ்மான் ரோட்டில் 'விருதுநகர் அய்யனார்' என்றொரு ஹோட்டல் உள்ளது. சுத்த வேஸ்ட். அங்கு சாப்பிட்ட அனுபவத்தை தனிபதிவாக எழுதலாம். இன்னொருமுறை விருதுநகர் பரோட்டா என்று நண்பன் வாங்கிக் கொடுத்தான். அதைத் தின்னுத் தொலைத்துவிட்டு ஏற்பட்ட பின்விளைவுகள் எனக்கு மட்டும் தான் தெரியும். உசுரு முக்கியம் பாஸு. அதனால் பிரியாணி-இன் இருக்க பயமேன். 


இந்த இடத்தில் மெட்ராஸ் பிரியாணியைப் பற்றி கூறியே ஆக வேண்டும். உங்கள் ஊரில் பிரியாணி எப்படி என்று தெரியவில்லை. நெல்லை பிரியாணிக்கும் மெட்ராஸ் பிரியாணிக்கும் ஆறில்லை நூறு வித்தியாசம். நெல்லை மாவட்டத்தில் எல்லா முக்கிய நகரங்களிலும் பிரியாணி சாப்பிட்டுவிட்டேன் எங்குமே சென்னை டேஸ்ட் இல்லை. பரோட்டாவுக்கு பேமஸான பார்டர் ரஹ்மத்தில் கூட பிரியாணி கேவலமாய்த்தான் இருக்கும். தென்காசி செல்லப்பா கொஞ்சம் ஓக்கேப்பா. நெல்லை முழுவதுமே சம்பா அரிசி பிரியாணி. இங்கோ பாஸ்மதி அரிசி பிரியாணி. திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கூட எனக்குப் பிடிக்காது. எங்கள் வீட்டில் எல்லாரும் தி.த பிரியாணி வாங்கி சாப்பிட்டால் நான் மட்டும் ஹைதராபாத் பிரியாணி வாங்கிச் சாப்பிடுவேன். அம்புட்டுப் பிடிக்கும். 

மழைத் தூறல் வலுத்திருந்தது. நனையத் தொடங்கியிருந்தேன். பிரியாணி-இன் முன் வண்டியை நிறுத்தியபோது வெளியில் நான்கு திண்டுக்கல் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. கடையை ஒழுங்காக அடைதிருக்கோமா என்று சரிபார்க்க அந்த பூட்டில் தொங்கிக் கொண்டிருந்தார் மொதலாளி. 'என்னடா சீனு உனக்கு வந்து சோதனை'. பேசாம தி.த பிரியாணிக்கு போயிரலாமா என்று யோசிக்கும் போதே அதுக்கு பட்னி கிடந்திரலாம் என்றது என் மனம். கடைசி முயற்சியாக நான் வழக்கமாக சாப்பிடும் ஹைதராபாத் தலப்பாகட்டிக்குச் சென்று பார்க்கலாம் என்று மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தியன் தன் பயணத்தைத் தொடங்கினான்...

மேடவாக்கம் மெயின் ரோடில் இருக்கும் அந்த கடைக்கு வந்து சேர்ந்தேன். கடைக்காரச் சிறுவன் பிரியாணி அண்டாவை கடைக்குள் நகர்த்திக் கொண்டிருந்தான். மொதலாளி வெளியில் எரிந்த லைட்டை அணைத்துக் கொண்டிருந்தார். வண்டியை கடையின் முன் நிறுத்தியதும் அவர் முகத்தைப் பார்த்தேன். 'என்ன' என்றார். 'பிரியாணி' என்றேன். 'முடிஞ்சிருச்சு' என்றார். உள்ளிருந்து பையனின் குரல். அண்ணே இருக்குண்ணே. ஒரு ஐஞ்சு பிரியாணி இருக்கும் என்றான். அவருக்கு அது புரியும் முன் எனக்குப் புரிந்திருந்தது. மெல்ல கடைக்குள் நுழைந்தால் ஒரு காதல்சோடி ஒரே தட்டில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. 'எங்க போனாலும் இவங்க தொல்ல தாங்க முடியல' என்று பொறாமைப்பட்டுக் கொண்டே வழக்கமாய் உட்காரும் நாற்காலியில் சென்று அமர்ந்தேன். 

தட்டு நிரம்பி வழிய வழிய பிரியாணி வைத்திருந்தான் அந்த சிறுவன். சிக்கனை மானாவாரியாய் அள்ளி இரைதிருந்தான். 'வேட்ட ஆரம்பமாயிருச்சு டோய்' சந்தோசத்தில் துள்ளிக் குதித்தது மனது. என்ன சூடுதான் ஆறிப்போய் இருந்தது. 'உனக்கு பிரியாணி கிடைச்சதே பெருசு இதுல இது வேறயா' என்று என்னை நானே கடிந்து கொண்டு சிக்கனைக் கடித்தேன். சுவை அறுசுவை. என் பசி மெல்ல பிரியாணியின் முன் மண்டியிட்டுக் கொண்டிருந்தது. சாப்பிட்டுக் கொண்டே அந்த சிறுவனைக் கவனித்தேன். காதல் சோடிகளின் லீலைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். கல்லாவில் மொதலாளியும் அவர் நண்பரும் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். பிரியாணி நல்ல குழைவாக பதமாக இருந்தது. சிக்கனும் நன்றாக வெந்திருந்தது.   

மொத்த பிரியாணியையும் சாப்பிட்டு முடிக்கும் நேரம், கடை மொதலாளி அந்தச் சிறுவனை அழைத்தார் 'டேய் ரஹீம் இங்க வா'. பவ்யமாய் அவர் அருகில் சென்றான் அந்தச் சிறுவன். பதின்ம வயதின் மாற்றங்கள் அவனிடம் ஆரம்பமாகியிருந்தது. கையில் நூறு ரூபாயைக் கொடுத்து 'போயிட்டு வா' என்றார். இதைப் பார்த்ததும் அருகில் இருந்த அவர் நண்பர் அந்த மொதலாளியிடம் 'என்ன பாய் பேட்டா நூறு ரூவா கொடுக்ற நல்ல வருமனந்தான் போல' என்று கேட்டார். 


அதற்கு மெல்ல சிரித்துக் கொண்டே அந்த மொதலாளி, 'டெய்லி பிரியாணி துன்னு துன்னு வெறுப்பா இருக்குதுன்னான் அதான் சங்கீதால போய் தோச சாப்ட்னு வாடான்னு அனுப்ச்சேன்' என்றார். டாட் 

27 Jun 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளினூடே ஓர் பயணம்


பிச்சாவரம் - இரண்டு மணி வெயில் எங்களை நனைத்துக் கொண்டிருந்தது. எங்களைச் சுற்றிலும் நீர்பரப்புதான் என்றபோதும் தூரத்தில் தெரிந்த சுரபுன்னைக் காடுகளினுள் ஒளிந்துகொண்டு வர மறுத்தது காற்று.


இந்த மதிய வெயிலில் கடற்கரைக்குச் செல்வது வீண் வேலை. அங்கு ஒன்றுமே இல்லை. அதனால் வெறும் படகுப்பயணத்தை மட்டுமே தேர்ந்தெடுப்பது நலம் என அறிவுறுத்தினார்கள் டிக்கட் கவுண்ட்டர் அதிகாரிகள். எங்களுக்கும் அதுவே சரியாய்ப்பட்டது. மோட்டார் படகிற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு படகு நோக்கி  நகர்ந்தோம். பதினான்கு பேர் கொண்ட எங்கள் குழு இரு படகுகளாகப் பிரிந்து பயணத்தைத் தொடர ஆயத்தமானது. ஒவ்வொரு பயணியும் லைப் ஜாக்கெட் அணிவது அவசியம் என்று அருகில் ஒரு போர்ட்டு வைக்கபட்டிருந்தது. யாருக்கும் அதுபற்றி கவலையில்லை. லைப் ஜாக்கெட் இல்லாமலேயே எங்கள் பயணம் தொடங்கியது. 

மோட்டார் படகு - கட்டணம் அதிகம். குறைந்த நேரத்தில் மொத்த இடத்தையும் சுற்றிப் பார்த்துவிடலாம் என்றாலும் ஒரு மணிநேரம் மட்டுமே பயணிக்க முடியும். இதுவே துடுப்புப் படகு என்றால் நல்ல நிறுத்தி நிதானமாக சுற்றிப் பார்க்கலாம். மோட்டார்ப் படகுடன் ஒப்பிடுகையில் இதன் விலை குறைவு. பயணிக்கும் நேரம் அதிகம். வெயில் குறைவாக இருக்கும் காலை அல்லது மாலை என்றால் துடுப்புப்படகில் சென்று வருவது உத்தமம். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் படகில் உலா வரலாம். நீர்பரப்பின் முடிவில் கடற்கரை அமைந்திருப்பதால் அங்கு சென்றுவரவும் அனுமதி உண்டு. 

கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் நிறைந்து காணப்படும் நீர் மற்றும் சுரப்புன்னைக் காடுகளைத் தவிர பார்ப்பதற்கு வேறு எதுவும் இல்லை. வேண்டுமானால் படகுசவாரி செய்யலாம். கேட்பதற்கு அவ்ளோதானா என்றளவில் நினைக்க வைத்தாலும் இந்தப் படகுசவாரியில் தான் சுவாரசியமே நிறைந்துள்ளது. (படகுசவாரிக்கான கட்டண விபரம் பார்க்க படம்). 


ஆற்று நீரில் இருந்து பிரிந்து வரும் நீர், கடல் ஓதங்கள் கடத்தி வரும் நீர் மற்றும் காற்று மழை போன்றவையும் இப்படியான நீர்பரப்புகள் உருவாகக் காரணியாக அமைகின்றன. அதனால் இது போன்ற இடங்களில் ஆழம் அதிகமிருப்பதில்லை. அதிகபட்சம் பத்தடி வரை வேண்டுமானால் நீர் இருக்கலாம். உப்பு நீர் தான் என்றபோதும் கடல் நீரின் அளவிற்கு உப்பாக இருக்காது. இதுபோன்ற நீர்பரப்புகள் தோன்றுவதற்கே பலநூறு வருடங்கள் தேவைப்படுமாம். 

கொஞ்சம் கொஞ்சமாக இவற்றைச் சுற்றி நீர்வாழ் மரங்கள் செடிகள் கொடிகள் மற்றும் இன்னபிற நீர்வாழ் உயரினங்கள் என முற்றிலும் நீர் சார்ந்த ஒரு சமுதாயம் உருவாகத் தொடங்குகிறது. அப்படியாக வளர்ந்து காலத்தை மிஞ்சி நிற்கும் பல்வேறு வகையான மரங்கள் அடர்ந்த ஒரு பகுதிதான் பிச்சாவர சதுப்புநிலக் காடுகள். மேலும் இதனை உலகின் இரண்டாவது மிகபெரிய சதுப்பு நிலக்காடு என்கிறது இணையம். நீர்நிலையின் ஆரம்பப்பகுதி முழுமையுமே பழுப்பு நிறத்தில் பாசி படர்ந்து காணப்படுவதால் அந்த சாக்கடை நீரில் கை வைக்கவே அருவருப்பாய் இருந்தது. தொடர்ந்து உள்ளே பயணிக்கப் பயணிக்க நீரின் நிறமும் தரமும் மாறிக்கொண்டே இருப்பதைக் காணமுடிந்தது.


இயற்கையின் எந்த ஒரு விஷயத்திற்குப் பின்னும் இருக்கும் காரணம் ஆச்சரியமானது. அதே போன்றதொரு ஆச்சரியம்தான் இவ்வகை சதுப்பு நிலக்காடுகளினுள்ளும் ஒளிந்து கிடக்கின்றன. எப்போதெல்லாம் கடலில் சீற்றம் அதிகமாயிருக்கிறதோ அப்போதெல்லாம் அதன் சீற்றத்தை மட்டுப்படுத்தும் வகையிலோ அல்லது நிலபரப்பில் வாழும் உயிரினங்களை பாதிக்கா வகையிலோ தடுக்கும் அரணாக செயல்படுகின்றன இந்த உப்பங்கழிகள். அலையின் சீற்றைத்தை மட்டுப்படுத்தி வெகுவாக தணிப்பதால் இவற்றிற்கு அலையாத்திக் காடுகள் என்று பெயர் சூட்டியுள்ளான் நம் ஆதித் தமிழன். சுனாமியின் போதும் தானே புயலின் போதும் மாபெரும் நீர் அரணாக இருந்து நிலத்தைக் காத்தவை இந்த சதுப்பு நிலக்காடுகளே என்பது குறிப்பிடப்பட்ட வேண்டிய விஷயம். 

கொஞ்ச நேரம் அமைதியாக படகை செலுத்திக் கொண்டிருந்த எங்கள் படகோட்டி மெல்ல பேச ஆரம்பித்தார். அதன் பின்னால் ஒளிந்திருந்த வியாபார தந்திரம் அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. 'மனுஷனுக்கு ஓராயிரம் வழி நாரைக்கு நாலாயிரம் வழின்னு ஒரு பழமொழி உண்டு அப்படிப்பட்ட நாரையாலையே உள்ள வரமுடியாத பலவழி இங்க உண்டு, இன்னும் கண்டுபிடிக்கப் படாமயும் இருக்கு' 

கிட்டத்தட்ட ஆயிரம் ஹெக்டேருக்கும் மேல் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நீர்பரப்பில் எங்கெங்கு என்னென்ன இருக்கிறது என்பது இவர்களிலேயே பலருக்குத் தெரியாதாம். மேலும் இதன் முழுபகுதியையும் எவருமே இன்றுவரை சுற்றியதில்லையாம். வனத்துறையின் கீழ் இருப்பதால் சில குறிப்பிட்ட இடங்களைத் தவிர சுற்றுல்லா வாசிகளுக்கு வேறு எங்கும் அனுமதி இல்லை. சமீப காலத்தில் பயணித்த பல இடங்களிலும் கவனித்த ஒரு விஷயம், இதுபோல் வழிகாட்டியாக வருபவர்கள் தங்களுக்குத் தேவையான அத்தனை ஆங்கில வார்த்தைகளையும் தெரிந்து வைத்துள்ளார்கள். பிழைக்கத் தெரிந்தவர்கள். 


ஒரு போட்டுக்கு ஐநூறு ரூவா கொடுத்தா பாரஸ்ட் அனுமதி இல்லாத சில பகுதிகளுக்கு கூட்டுப்போறேன். உங்களுக்கு சம்மதம்ன்னா சொல்லுங்க போயிட்டு வரலாம் என்றார். மனுஷன் எங்கு வந்து எப்படி ஆசையைக் காட்ட வேண்டுமோ அப்படிக் காட்டினார். இந்த எரியில நிறைய இடத்துல ஷூட்டிங் எடுத்து இருக்காங்க. எம்ஜியாரோட இதயக்கனி படம்தான் இங்க எடுகப்பட்ட முதல் ஷூட்டிங்.  ஜெயம் ரவி நடிச்ச பேராண்மை, தசாவதராம், படத்துல மொத பாட்டு வருமே அந்த பாட்டு கூட இங்க தான் ஷூட் பண்ணினாங்க. என்ற போது தசாவதாரம் பாடல் கட்சிகள் என கண்முன் தத்ரூபமாக விரிந்து கொண்டிருந்தன. அந்தப் பாடலானது எங்கோ பாரினில் எடுக்கப்பட்டு சிலபல கிராபிக்ஸ் ஒட்டு வேலைகளுடன் வெளியான ஒன்று என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பார்த்தால் தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு இடம் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது.


மேலும் தொடர்ந்தார், அனகோண்டா படத்துல வருமே அதேமாதிரியான ஏரியா எல்லாம் இருக்கு. நீங்க ஓகே சொன்னா நாம போயிட்டு வரலாம் என்றார். எங்களை விடுவதற்கு அவருக்கு மனமில்லை. இன்னும் எப்போ வரப்போறோம் கழுத போயிட்டு வந்த்றலாம் என்ற மனநிலைக்கு நாங்களும் வந்திருந்தோம். அவருடைய வியாபார தந்திரம் வொர்க் அவுட் ஆகிவிட்டது. அவர் காட்டுவதாய்க் கூறிய பகுதிகளை நோக்கி மெல்ல நகரத் தொடங்கினோம். 

அதுவரை பரந்து விரிந்த நீர்பரப்பு, அதன் எல்லைகளில் அடர்ந்து வளர்ந்த சுரபுன்னை மரங்கள் என்று பயணித்துக் கொண்டிருந்த எங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் காத்திருந்தது. 

சுரபுன்னை மரங்கள் மற்றும் சதுப்புநில வாழ் மரங்கள் அனைத்தும் அடர்ந்து வளரும் மரங்கள். மேலும் இம்மரங்களின் வேரானது சதுப்புநிலத்தில் குலைவான இலகுவான கொழ கொழ மணலில் பரவி இருப்பத்தால் இயற்கைச் சீற்றங்களில் இருந்து தங்களை தாக்குபிடித்துக்கொள்வதற்காக தமது உடல் முழுவதில் இருந்தும் விழுதுகளை வளர்த்து அவற்றினை நீரினுள் பரவ விடுகின்றன. அப்படி நெருக்கமாக வளர்ந்த மரங்களின் ஊடாக சில நீர்த்தடங்கள் செல்கின்றன. ஒரு படகு உள்நுழைந்து வெளிவரும் அளவில் இடைவெளி இருக்கிறது அந்தப் பாதைகளில். அந்தப் பாதையில் தான் எங்கள் படகும் இப்போது நுழைந்து கொண்டிருந்தது. நாங்கள் தருவதாய் சம்மதித்திருந்த ஐநூறு ரூபாய் இப்போது வேலை செய்யத் தொடங்கியிருதது.


சுற்றிலும் விழுதுகள் மூடி, ஒளிபுக முடியா ஒரு அடர்ந்த வனத்தினுள் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது அந்தப் பயணம். எங்கள் அனைவரின் முகமும் ஆச்சரியத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எங்கள் படகோட்டியும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப்பகுதிகள் குறித்து விளக்கத் தொடங்கினார். இந்த விழுதுகளின் மீது மனிதர்களின் கை பட்டால் அவை இறந்து விடுமாம். அதன்பின் அந்த விழுதுகள் தொடர்ந்து வளராமல் பட்டுப்போய் விடுமாம். இதை கேட்டதும் எங்களுக்கு ஆர்வம் தாங்கவில்லை. நாங்களும் எங்கள் பங்கிற்கு சில விழுதுகளை கொலை செய்துவிட்டே அங்கிருந்து நகர்ந்தோம். சில மரங்களின் இலைகளில் இருந்து வடியும் பால் போன்ற திரவம் கண்களில் பட்டால் கண் எரிச்சல் ஏற்படுமாம். சமயங்களில் பார்வை பறிபோகவும் சாத்தியம் உண்டென்று கூறினார்.    


இந்தவழிகள் நேரே சமுத்திரத்தில் போய் இணையக் கூடியவை. ஒரு காலத்தில் இந்த வழிகளின் வழியே போதைப் பொருள் கடத்தல் அமோகமாக நடந்து கொண்டிருந்தாமாம். 

ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறையும் இங்கிருக்கும் நீரின் மட்டம் கூடி குறைந்து கொண்டே இருக்கும் என்றார். சில இடங்களில் தரைப்பகுதிகளைக் காண முடிந்தது. அந்த பகுதி முழுவதும் குச்சி குச்சியாக ஏதோ ஒன்று நீட்டிக் கொண்டிருந்தன. அங்க பாருங்க அது பேருதான் ஏரியல். இந்த தண்ணியில ஆக்சிஜன் ரொம்ப கம்மியா இருக்கும். அதனால மரங்கள் உயிர் வாழுறதுக்காக வேர் பகுதியில இருந்து இந்த மாதிரியான ஏரியல வெளில நீட்டி சுவாசிக்கும் என்றார். என்னே இயற்கையின் விந்தை என்று வியந்து கொண்டே மிதந்து கொண்டிருந்தோம். 

படகில் நாங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்கவில்லை. பயணித்த ஒருமணி நேரமும் ஏதோ மைதானத்தில் விளையாடுவது போல் ஓடியாடிக் கொண்டிருந்தோம். அத்தனை கவலைகளையும் அந்த நீர்பரப்பில் தொலைத்துக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட இயற்கையின் அற்புதத்தின் மத்தியில் நிகழ்ந்து கொண்டிருந்த உல்லாசப் பயணம் அது.  இன்னும் சில மணி நேரங்கள் அங்கேயே படகு சவாரி செய்யலாம் போல் இருந்தது. நேரம் இல்லை (டப்பும் இல்லை என்பது வேறு விஷயம்).    


பிச்சாவரம் படகு சவாரி முடிந்ததும் அங்கிருந்து சில கிமீ தொலைவில் இருக்கும் எம்.ஜி.யார் திட்டு என்ற இடத்தில் இருக்கும் கடலில் சென்று ஒரு மணிநேரம் நல்ல ஆட்டம் போட்டோம். இந்த எம்.ஜி.யார் திட்டில் இருந்து கடற்கரை செல்வதற்கும் படகில் தான் பயணிக்க வேண்டும். தலைக்கு ஐம்பது ரூபாய் கட்டணம். பின் அங்கிருந்து கிளம்பி கொள்ளிடம் என்ற இடத்தில் இருக்கும் ஆற்றுநீரில் ஆட்டம் போட்டுவிட்டு மெல்ல கும்பகோணத்தை நோக்கிக் கிளம்பினோம். என்றாவது சிதம்பரம் கடலூர் செல்ல வாய்ப்பு கிடைத்தால் பிச்சாவரத்தை தவறவிட்டு விடாதீர்கள். 

நீங்கள் பறவைக் காதலர்கள் என்றால் ஏப்ரல் - செப்டம்பர் பறவைகளின் சீசன் கிடையாது. மற்ற மாதங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகளைக் கண்டு களிக்கலாம் என்பது கூடுதல் தகவல். ஒருவேளை நீங்களும் என்னைபோல 'கருப்பா இருந்தா காக்கா, வெள்ளையா இருந்தா கொக்கு' என்று நினைக்கும் ஜாதியா, அப்ப நமக்கு எல்லா மாசமும் சீசன்தான் பாஸு. எந்த மாசம் வேணா போகலாம். பிச்சாவரத்த என்சாய் பண்ணலாம்.   

26 Jun 2014

உங்கள் கேள்விக்கென் பதில் - தொடர்பதிவு

ரொம்பநாள் ஆகிவிட்டது இப்படி ஒரு தொடர்பதிவு எழுதி. பதிவுலகமும் இந்த தொடர்பதிவை மிக உற்சாகமாகவே எழுதிவருகிறது என்று நினைக்கிறன். என்னை எழுத அழைத்த வாத்தியாருக்கும் அப்புறம் இப்படி ஒரு சம்பவத்தைத் தொடங்கிவைத்த மதுரைத் தமிழனுக்கும் நன்றி நன்றி நன்றி. 



10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்? 

எழுதத் தொடங்கியதன் பின் பெரும்பாலான நேரம் என் கணினியுடன் தான் கழிகிறது. அதனால் தனிமையில் இருந்தாலும் சரி வீட்டில் நாலு பேருடன் இருந்தாலும் சரி என் கணினி என் உரிமை டாட் :-) 

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்? 

இனிதான் எல்லாவனுக்கும் அந்த நல்ல காரியம் நடக்க போகுது.. அதுக்குள்ள எதுக்கு காரியம் அது இதுன்னுட்டு. இருந்தாலும் என் பதில் - நான் அவன் அருகில் இருப்பதே அவனுக்கு மிகபெரிய ஆறுதல் தானே!

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்? 

இதுவும் எனகொன்றும் புதிதில்லை. இதுபோல் எத்தனையோ விசயங்களைக் கடந்து பக்குவப்பட்டு விட்டேன். தவறான தகவல் பரப்பிய நபர் யார் என்று தெரிந்தால் அந்த நபரைப் பொறுத்து என் செயல்பாடுகளின் அளவு மாறும். நெருங்கிய நண்பர் என்றால் சட்டை கிழியும் வரை சண்டை போட்டதெல்லாம் உண்டு. ஒருவேளை கூறியவன் எனக்குத் தேவையில்லாதவன் என்றால் தேவையில்லாதவன் தான் மொறைச்சுக்கவும் மாட்டேன் சிரிச்சுக்கவும் மாட்டேன் :-) 

 7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்? 

என் விசயத்தைப் பொறுத்தளவில் இந்த ஒட்டு மொத்த சமுதாயமே எனக்கு அட்வைஸ் செய்யக் காத்துக் கிடக்கிறது. அதனால் நானாய் சென்று யாரிடமும் அட்வைஸ் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் நல்ல வார்த்தைகள் யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வதில் தப்பில்லை. சிறுவயதில் இருந்து தங்கள் உயிரைக் கொடுத்து வளர்த்து ஆளாக்கிய என் நெருங்கிய உறவினர்கள் மற்றும் என் உயிரை எடுக்கக் காத்திருக்கும் தோழர்களிடம் இருந்து வரும் அட்வைஸ் என்றால் டபுள் ஓகே. 

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்? 

என்னால் தீர்க்கமுடிந்த ஒரே ஒரு பிரச்சனை, நான் யாருக்கும் பிரச்சனையாய் இல்லாமல் இருப்பதுதான். ஆனால் அதற்கே அதிகம் பிரயத்தனப்பட வேண்டி இருக்கிறது. 

சரி பரவாயில்ல இந்த ஆன்சரையே  லாக் பண்ணிக்கோங்க கம்ப்யுட்டர் ஜீ. 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?  

தெர்லயேப்பா... 

 4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன? 

மாலை வரை புத்தகவாசிப்பு. கொஞ்சநேரம் ஊர்சுற்றல். நள்ளிரவு வரை அல்லது போலீஸ் அனுமதித்தால் விடியவிடிய கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு கடலை ரசிப்பது. என் மனதிற்குப் பிடித்தவர்கள் யாரேனும் துணைக்கு இருந்தால் உத்தமம். தனியாக என்றாலும் பிரச்சனை இல்லை அதான் துணைக்குக் கடல் இருக்கிறதே (யே நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா இதையெல்லாம் வருங்காலத்துல வரலாறு பேசணும்). 

 3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக? 

யாரேனும் என்னைத் திட்டினால் கூட முதலில் முறைத்துவிட்டு பின் சிறிது நேரத்தில் சிரித்துவிடக் கூடிய ஆள் நான். அதனால் என்னிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பது திருநெல்வேலியில் சென்று அல்வா கேட்பதற்குச் சமம். இருந்தும் கூறுகிறேன். அரங்கம் அதிர அதிர சிரித்தது போனவாரமும் இன்றும் முண்டாசுப்பட்டி பார்த்த போதுதான். 

(யோவ் மதுர, கடைசியாக என்று போட்டுள்ளீரே வாத்தியார் இன்னுமா இதைக் கண்டு பொங்காமல் இருக்கிறார் :-) 

 2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? 

என்னைவிட யாரெல்லாம் எதையெல்லாம் சிறப்பாக செய்கிறார்களோ அதையெல்லாம் நானும் சிறப்பாகச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக ஆட பாட ஓட எல்லாம் முயலமாட்டேன். எனக்கு எதுவெல்லாம் முடியுமென்று என்னிடம் ஒரு வரைமுறை உண்டே. அவ்வகையில் இவ்விருப்பம் வரமுறைக்கு உட்ப்பட்டதே! 

 1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்? 

முதல் கேள்வியே கொஞ்சமும் சாத்தியம் இல்லாத கேள்வி. தெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்க்கையின் புற அகக்காரணிகள் நம் வாழ்நாளை பாதியாகக் குறைக்க ஆரம்பித்துவிட்டன. (ரொம்ப சீரியஸா போறனோ. ரைட்டு டாட்). இதை முழுக்க முழுக்க ஒரு கற்பனைக் கேள்வியாய் அணுகினால், ம்ம்ம்ம் எம்புட்டோ யோசிச்சிட்டேன் பதில் சொல்லத் தெரியல. இருந்தும் யோசிச்சதுல மொதல்ல வந்த பதில், சந்திராயன்ல பயணித்துக் கொண்டே பதிவர் திருவிழா கொண்டடானும்ன்றது தான். 

*****

யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவர்கள் :

மொ.ரா @ மொக்க ராசு-  யோவ் மொக்க எழுதல கண்ணீர்விட்டு அழுதுருவேன் சொல்லிபுட்டேன் ஆமா 

ஹாரி - அடேய் நீ மட்டும் எழுதல ஸ்ரீலங்கா வந்து அடிப்பேன் 

செங்கோவி - உங்க மேல எனக்கு நம்பிக்க இருக்கு (எப்புடி கோர்த்துவுட்டேன்)  

அப்துல்பாசித் - விகடன்ல மட்டும்தான் எழுதுவேன், இதையெல்லாம் கண்டுக்க மாட்டேன்னு அடம் புடிக்கக் கூடாது 

வரலாற்றுச் சுவடுகள் - யோவ் வசு உங்க ரீ என்டிரியை இங்கிருந்து ஆரம்பிக்கவும் 

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் 

அப்பா சார் - உங்களை மிரட்டல்லாம் முடியாது அதுனால சமத்தா எழுதிருங்க ( ஆனாலும் உங்களை எழுதச்சொல்ல எனக்கொரு தனி மனதைரியம் வேணும் :-) ) 

 *பெயர்களைச் சுட்டினால் அவர்கள் வலைப்பூவை அடையலாம்

15 Jun 2014

அடல்ட் ஒன்லி - இணையத்திற்கு முன்/ இணையத்திற்குப் பின்


'அந்த ஆக்சிடென்ட்ல இறந்து போன பசங்க வீடியோ காமில' என்றார் அம்மா. இரண்டு நாட்களாக அந்த வீடியோவைக் காண்பிக்காமல் டபாய்த்துக் கொண்டிருந்த கோபம் என் அம்மாவின் பேச்சில் இருந்தது. அந்த வீடியோவைக் காண்பிக்காமல் இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 

ஹிமாச்சலப் பிரதேச விபத்து வீடியோவைப் பார்த்து விட்டு எனக்கே மனசு தாங்கவில்லை. ஒருவேளை என் அம்மா பார்த்துத்தொலைத்தால் நிச்சயம் நாள் முழுவதும் புலம்பிக் கொண்டிருப்பார். நான் சும்மாவே ஆறு குளம் என ஊர் ஊராய் சுற்றுபவன். இனி எங்கு சென்றாலும் இதையும் தன் புலம்பலில் சேர்த்துக் கொள்வார்  என்ற காரணத்தாலேயே அதைக் காண்பிக்கவில்லை. இன்று வேறு வழியே இல்லை. அருகில் வந்து அமர்ந்து கொண்டார். கூடவே கெளதமும் சேர்ந்து கொண்டான். 'பார்த்துட்டு சும்மா பொலம்பக் கூடாது' என்ற கண்டிசனோடு அந்த வீடியோவைப் பேஸ்புக்கில் தேடினேன். கிடைக்கவில்லை. ஏன் பேஸ்புக்கில் தேடினேன் என்ற காரணத்தை பின்னால் நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

இப்போ வேறுவழியில்லை என்றானதும் மெல்ல யுட்யுபை ஓபன் செய்து வீடியோவைத் தேடினேன். வீடியோ கிடைத்துவிட்டது. கூடவே இலவச இணைப்பாக வேறு பல வீடியோக்களும் ஓரத்தில் வந்து விழுந்தன. அத்தனையும் மிட் நைட் மசாலாவை விட மோசமான XXX வீடியோக்கள். அம்மா அதைப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக ஸ்க்ரீனைப் பெரிதாக்கி தேவையான வீடியோ மட்டும் தெரியும்படி பார்த்துக்கொண்டேன். அந்த விபத்து வீடியோவைப் பார்க்கும்போது நான் எதிர்பார்த்தபடியே புலம்பத் தொடங்கினார் அம்மா. 'பொலம்பக் கூடாதுன்னு சொன்னம்லா' என்று சத்தம் போட்டதும் நிறுத்திவிட்டார். ஆனால் அதிலிருந்து சிறிது நேரம் கழித்ததும் யூட்யுப் பற்றியும் அதை யார் எல்லாம் பார்க்கமுடியும், என்னமாதிரியான வீடியோ இருக்கும், குழந்தைகளும் பார்க்கமுடியுமா என்பது குறித்தெல்லாம் விசாரித்தார். கேள்வியின் உள்ளர்த்தம் எனக்குப் புரிந்ததால் - யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்றபடி மையமாக முடித்துக் கொண்டேன். இனி என் அம்மாவின் புலம்பல்கள் எல்லாம் இந்த இணையத்தைப் பயன்படுத்தப் போகும் குழந்தைகளைச் சார்ந்ததாகத்தான் இருக்கப்போகிறது.




ஏழு கழுத வயசான பையன் இருக்கும் என் அம்மாவே கவலைப்படும்போது, இன்றைய தினத்தில் இணையம் சர்வ சாதாரணமாக எல்லா இடங்களிலும் நுழைந்துவிட்ட நிலையில், இன்றைய ஜெனரேசன் பெற்றோர்களின் நிலை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால் கவலையும் கவலையை மீறிய அச்சமும்தான் ஏற்படுகிறது. காரணம் மாணாக்கர்கள் மடிவரை கணினி வந்துவிட்டது. இணையவசதி உள்ள கைபேசி அவர்களின் கைகளினுள் புகுந்துவிட்டது. பெற்றோர்களை விட பிள்ளைகள் புத்திசாலிகளாக இருப்பதாக பெற்றோரே பெருமகிழ்ச்சி அடைகின்றனர். இப்போது இந்த சிறுவர்கள் இணையத்தை வைத்து என்ன செய்வார்கள். நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுரையையோ அல்லது தாமஸ் ஆல்வா எடிசனின் ஆராய்ச்சி தரவுகளையோ படிப்பான்/ள் என்று நம்புகிறீர்களா! இதனை இன்றைய தலைமுறை அப்பாவி அப்பா அம்மாக்கள் வேண்டுமானால் வேறு வழியில்லாமல் நம்பித்தொலைக்கட்டும். ஆனால் உண்மை வேறு மாதிரியானது. ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியது.  


நம்முடைய காலத்தில் அதாவது இணையம் பிரபலமாகாத 2004க்கு முந்தைய காலத்தில் விடலையாக இருந்தவர்கள், இளவட்டங்ள், எக்ஸட்ரா எக்ஸட்ராக்கள் அனைவருக்கும் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு கில்மா தியேட்டர் இருந்திருக்கும். இப்போதும் இருக்கலாம் பாழடைந்த நிலையில். அங்கு போடுவானா மாட்டானா என்ற நிலையில் ஓட்டப்படும் பிட்டுப்படம் பார்க்க, தலையில் துண்டு போட்டுக் கொண்டு மறைந்து மறைந்து போன தலைமுறை நம்முடையது. மேலும் சிறார்களுக்கு சுவறுகளில் ஒட்டப்பட்ட பிட்டுப்பட போஸ்டரின் அந்த இடத்தில் கரி பூசப்பட்ட நாயகியின் ஸ்டில் தான் அதிகபட்ச ஆபாசமாக இருந்திருக்க வேண்டும். நாம் அந்த போஸ்டரைப் பார்ப்பதை வேறுயாரும் பார்த்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் ஓரக்கண்ணால் வெறிக்க வெறிக்க பார்த்த நாட்கள் எல்லாம் உண்டு. 'பிள்ளையோ நடமாடுற இடத்துல போஸ்டர் ஒட்டிருக்கானுவோ பாரு போஸ்டரு' என்று போஸ்டரைக் கிழித்தெறிந்த ஆட்களையும் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு அதை விட ஆபாசமான போஸ்டர்கள் நாளிதழ்களில் கூட சர்வசாதாரணமாக உலவத் தொடங்கிவிட்டது என்பது வேறு விஷயம். 


அரசுப் பள்ளியில் படித்த எங்களுக்கு வாத்தியார் என்பவர் அவருக்குப் பொழுதுபோகாவிட்டால் பாடம் நடத்த வருபவர் என்று பொருள். அப்படியிருக்க எங்களுக்குப் பொழுதுபோக வேண்டாமா. பள்ளிக்கு வந்ததும் முதல் காரியமாக ஆளுக்கொரு ஆலமரத்தடியில் கூடுவோம். எங்களுக்கென வகுப்பறைகள் எல்லாம் கிடையாது. ஒவ்வொரு மரத்தடியின் கீழும் பத்துபேர் அமர்ந்துகொள்வோம். பாக்கெட் மணியாக எங்களிடம் ஒரு ரூபாய் இருந்தாலே நாங்கள் பணக்கார்கள். தலைக்கு ஒரு ரூபாய் வசூலிப்பு முடிந்ததும் தென்காசி புதிய பேருந்து நிலையத்தை நோக்கி ஓடுவோம். மஞ்சப்பத்திரிகை வாங்குவதற்காக. எந்த கடையில் என்ன புத்தகம் கிடைக்கும் என்று எங்களுக்கு வழிகாட்டியவர்கள் எங்கள் சீனியர்கள்.



அந்த நம்பர் நடிகையின் குளியலறைக் காட்சியின் பிளாக் அண்ட் வொயிட் பக்கங்கள் அடங்கிய புத்தகம் தான் நாங்கள் முதன்முதலாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த புத்தகம். நாட்கள் நகரநகர நாளொரு புத்தகமும் தினமொரு புத்தகமுமாய் வந்துபோய்க் கொண்டிருந்தது எங்கள் வாழ்க்கையில். ஒருகட்டத்தில் இது மட்டுமே எங்கள் தினசரி வாடிக்கைகளில் ஒன்றாக மாறியிருந்தது. ஆலமரத்தடி புளியமரத்தடி புட்பால் கிரவுண்ட் பேஸ்கட் பால் கிரவுண்ட் மூலை முடுக்குகள் என்று பார்த்த இடங்களில் எல்லாம் புக்கும் கையுமாக அலைந்து கொண்டிருந்தார்கள். கூடிக்கூடி புத்தகம் வாசித்தார்கள். புக்கும் கையுமாக அலைவதில் தப்பில்லை என்ன மாதிரியான புக்கும் கையுமாக அலைந்தோம் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இங்கே இதனை ஏன் இவ்வளவு அழுத்தமாகக் குறிப்பிடுகிறேன் என்றால் சாதாரண ஒரு புத்தகதிற்கே இவ்வளவு கவர்ச்சி எனின் பால்ய வயதில் பதிவு செய்யப்பட்ட ஆபாசக் காட்சிகள் என்பது இன்னும் எவ்வளவு கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாய் இருக்கும்.


கிட்டத்தட்ட புத்தகங்களில் இருந்து இணையத்திற்கு மாறிய முதல் தலைமுறை மாணவர்கள் நாங்களாகத்தான் இருப்போம் என நினைக்கிறன். இந்த நாட்களில் எங்கள் பள்ளியின் கம்ப்யுட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கு மற்ற க்ரூப் மாணவர்கள் மத்தியில் ஒருதனி கிராக்கி உண்டு. ஏனெனில் அவர்களுக்குத் தான் கணினியைக் கையாள்வது பற்றி தெரியும். எந்த வெப்சைட்டில் என்ன இருக்கிறது என்பது தெரியும். அதிலும் கணினியில் புகுந்து விளையாடக் கூடிய மாணவர் என்றால் அவனைக் கொத்திக்கொண்டு போக ஒரு கூட்டமே காத்திருக்கும் நான் கூறுவது 2005ன் தொடக்கத்தில். நான்கு பக்கமும் அடைத்து வைக்கப்பட்ட பிரவுசிங் செண்டர்களின் காட்டில் மழையடித்தக் காலம் அது. வெறும் ஒரு மணி நேரம் பார்க்கக் கூடிய அந்த படங்களுக்காக ஒரு மாதம் துட்டு சேர்த்து வைத்தவனை எல்லாம் எனக்குத் தெரியும். 

வெறும் ஆறேழு ஆண்டுகளில் எப்படியிருந்த நாம் எப்படியாகிவிட்டோம் என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாய் இருக்கிறது. காமம் எவனையும் சபலப்பட வைக்கும். கற்பு காமம் என்பது மூடி போற்றிப் பாதுகாத்து வளர்க்கப்படும் ஒரு சமுதாயத்தில் நாம் என்னமாதிரியான நிலையை நோக்கிப் பயணிக்கிறோம். இது நம்மை எங்கு கொண்டு போய்ச் சேர்க்கப்போகிறது என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கவேமுடியவில்லை. மறைத்து மறைத்து பார்க்கப்பட்ட ஒன்றை பாரு பாரு என்றால் அவன் பார்க்கத்தான் செய்வான். அதைதான் இன்றைய இணைய தளங்களும் செய்கின்றன. அவர்களுக்கு அது வருமானம். நமக்கு?

இந்நேரத்தில் சிறுவர்களை மட்டும் குறைசொல்லி எதுவும் ஆகபோவதில்லை. சமுகத்தில் முன்னோடிகாளக இருக்க வேண்டிய நாம் சமுகவலைதளத்தில் என்னமாதிரியான முன்னோடிகளாக இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒரு பெண்ணின் முகம்கூட இங்கு பலருக்கும் முக்கியமாயில்லை. அவளது தகவல் பக்கத்தில் அவள் பதிந்திருக்கும் FEMALE என்ற வார்த்தையே பலருக்கும் போதுமானதாய் இருக்கிறது. ஒரு பெண் புள்ளி வைத்தாலே நூறு லைக் போட சிலநூறு ஆண்கள் காத்துக்கிடக்கிறார்கள். சில பெண்களும் அதையே விரும்புகிறார்கள். இந்த விசயத்தில் பெண்களின் மீது பெண்களே பொறாமை கொள்கிறார்கள். இன்னும் சில ஆண்கள் ஆபரேசன் செய்து கொள்ளாமலேயே சமூக வலைதளங்களில் பெண்களாக மாறிவிடுகிறார்கள். இவர்களின் அட்டூழியம் கொடுமையிலும் கொடுமை.

உலகம் முழுவதும் இதே பிரச்சனையா என்றால் நிச்சயம் இல்லை. என்னுடைய அமெரிக்கத் தோழி சமீபத்தில் தனது ப்ரோபைல் பிக்சர் மாற்றி இருந்தாள். அழகானவள். அவள் அழகைக் (அங்கங்களை மூடியும் மூடாமலும்) காண்பிக்கும் சமீபத்திய புகைப்படத்தை பதிவேற்றி இருந்தாள். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அந்தப் படத்திற்குக் கிடைத்தது வெறும் இரண்டு லைக்குகள் மட்டுமே. இரண்டுமே பெண்களிடம் இருந்து வந்தவை. இங்கே இதனைக் குறிப்பிடுவதன் காரணத்தை நீங்களே புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது  சொல்லுங்கள் பிரச்சனை நமது ஆண்களிடமா பெண்களிடமா இல்லை ஒட்டு சமூகத்திடமா என்று? 

இணையயுகத்திற்கு முன் காமமே இல்லையா. இல்லை காம தூண்டல்கள்தான் இல்லையா என்ற கேள்வி எழலாம். இருந்தது. அப்போது லிமிடட் மீல்ஸாக கிடைத்த ஒன்று இன்று அன்லிமிட்ட மீல்ஸாக பரிமாறப்படுகிறது. எதையுமே அரைகுறையாக, நமக்குப் பாதகம் தராத வரைக்கும் நல்லது என்ற நிலையில் ஏற்றுக்கொள்பவர்கள் நாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காதல் திருமணத்தையே ஏற்றுக்கொள்ளாத ஒருசூழலில் வாழ்கிறோம். நாளை இந்த சமுதாயம் காமத்தை நேரிடையாக அறுவடை செய்யும் போது நமது நிலை என்னவாக இருக்கப்போகிறது. ஒருவேளை நீயாநானாவில் கள்ளகாதலையும் ஒரு பேசுபொருளாக சேர்த்து விடுவார்களோ?

பிள்ளைகள் மீது ஓவராய் பாசம் வைத்து அவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக ஆக்க இருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் சார்ந்தவரும் சிந்திக்க வேண்டிய தருணமிது.

சமீபத்தில் தென்காசியில் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய குட்டி பையனுக்கு இணைய வசதியுடனான டேப்லட் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அதைக் என் கையில் கொடுத்து எப்படி இருக்கு பார் என்றார். அதுவரை வேறு எதோ செய்து கொண்டிருந்த சிறுவன் என்னருகில் ஓடிவந்துவிட்டான். பையனின் முகம் போன போக்கு சரியில்லை. நான் அதில் என்னவெல்லாம் நோண்டுகிறேன் எங்கல்லாம் செல்கிறேன் என்பதை நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தான். நம் புத்தி சும்மா இருக்குமா! நேரே ஹிஸ்டரியைத் திறந்தேன். எஸ்டிடி மிக முக்கியம் அமைச்சரே. அவ்வளவு தான் சடாரென என் கையில் இருந்து டேப்லெட்டைப் பிடுங்கினான். பிடுங்கியவன் அவனுக்கு என ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி ஓடினான். ஓடியவன் பத்து நிமிடம் கழித்து மீண்டும் என்னிடம் தனது டேப்லெட்டை நீட்டினான். ஹிஸ்டரி துடைத்து வைக்கபட்டிருந்தது. நானும் அதையேதான் எதிர்பார்த்திருந்தேன். அவன் அப்பா அதாவது என் நண்பர் கூறினார் 'எம்புள்ளக்கி எல்லாமே தெரியும். எனக்கு தெரியாதது கூட அவனுக்கு தெரியும் என்றார்' பெருமை பொங்க. யோவ் நிசாமவே உனக்குத் தெரிஞ்சத விட உம்புள்ளைக்கு நிறைய தெரிஞ்சிருக்கும்யா' என்பதை மனதில் நினைத்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினேன். அந்தச் சிறுவனும் அவனுடைய அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டான் இணைய வசதியுடன் கூடிய அந்த டேப்லெட்டுடன். 

11 Jun 2014

திருமணம் என்னும் நிக்காஹ்


இந்தியா போன்ற கலாச்சாரப் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், மாறுபட்ட கலாச்சாரங்களைப் பின்பற்றும் பலரையும் பல்வேறு சூழல்களில் பார்த்திருக்கிறேன், பழகி இருக்கிறேன் என்றாலும் கூட அவர்களின் திருவிழாக்கள் அல்லது குடும்ப விழாக்களில் நாமும் ஒரு உறுப்பினராய்ப் பங்கேற்கும் போதுதான் அவர்களுக்கும் நமக்குமான கலாச்சார மாற்றங்களை முழுமையாக உணர முடிகிறது. உள்வாங்கிக் கொள்ளமுடிகிறது. இப்போ ஏன் இவ்ளோ நீட்டி முழக்குகிறேன் என்கிறீர்களா? எல்லாவற்றிற்கும் காரணம் கடந்த வாரத்தில் நான் கலந்து கொண்ட திருமணம் என்னும் நிக்காஹ்தான். திருமணம் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் தோழிக்கு.  

கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிமீ தொலைவில் இருக்கும் அந்த கிராமமும் அங்கு நடைபெற்ற திருமணமும் அதன்பின் எங்களுக்குள் ஏற்பட்ட கேள்விகளும் விவாதங்களும் உரையாடல்களும் தான் நான் இந்தப் பதிவை எழுதுவதற்கான முழுமுதற் காரணம். 

அலங்கார தோரணங்கள், காதுகிழியும் மைக் செட். தெரு முழுக்க சேர் போட்டு கூடிக் கொட்டமடிக்கும் ஊர்க்காரர்கள், அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் அழுதுகொண்டும் ஆரவாரப்பட்டுக் கொண்டும் திரியும் சிறுவர்கள். பட்டுப்பாவடைகள் தாவணிகள் என ஒரு கல்யாண வீட்டிற்கு உண்டான எந்த அறிகுறியும் அவ்விடத்தில் இல்லை. மாறாக இயல்புக்கு மீறிய ஒருவித அமைதியே அந்த இடம் முழுவதும் வியாபித்திருந்தது. 

மணி காலை பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மணப்பெண்ணின் வீட்டினுள் நுழைந்தோம். டிப்டாப்பாக இன் பண்ணிய ஒருவர் எங்களனைவரையும் வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றார். இயல்பாகவே தன்னைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் நாம் நிபுணர்கள் என்பதால் ஒவ்வொரு தருணங்களிலும் நாமும் அவர்களும் எங்கெல்லாம் மாறுபடுகிறோம் எந்த விசயங்களில் எல்லாம் மாறுபடுகிறோம் என்பதை ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது இந்த பாழாய்ப்போன மனசு. சில ஒப்பீடுகள் ஆச்சரியமாய் இருக்கின்றன, சில ஆச்சரியத்தையும் மீறிய வியப்பைத்தருகின்றன. சில 'அட'வையும் சில 'அடடா'வையும் ஏற்படுத்துகின்றன. அந்த திருமணத்தில் நான் கண்ட காட்சிகள் சுவாரசியமானவை. ஒரு புதிய சூழலை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவை.  

பசி வயிற்றைக் கிள்ளியது. வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடியே சாப்பிட அழைத்தனர். இங்கே அதிக வியப்பை ஏற்படுத்தியது அவர்கள் அளித்த விருந்தோம்பல் தான். நாங்கள் பதிமூன்று பேரும் அமர்ந்ததும் அவர்கள் உறவினர்களில் ஒருவர் கையில் ஒரு சிறிய வாளியையும் ஜக்கு நிறைய நீரையும் எடுத்துக் கொண்டு எங்கள் அருகில் வந்தார். முதலில் எங்களுக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். அந்த வாளியினுள் கையைவிடும்படிக் கூறி நீரை ஊற்றினார். அப்படி கைகழுவுவதற்கு கொஞ்சம் சங்கோஜமாய் இருந்தாலும் ஆச்சரியமாய் இருந்தது. மட்டன் சால்னாவும் பரோட்டா இட்லி வடையுடன் கூடிய அருமையான காலைச் சாப்பாடு.

வீட்டில் இருந்த உறவினர்கள் திருமண பரபரப்பில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க, வீடு முழுக்க உறவினர்கள் நிறைந்து இருந்தாலும் அவ்வீட்டுப் பெண்கள் ஒருவர் கூட கண்ணில் தென்படவில்லை. ஏன் எங்கள் அலுவலக தோழிகளே அவர்கள் இருந்த அறையைவிட்டு வெளியே வரவில்லை. மேலும் இஸ்லாம் வழக்கப்படி சிலநாட்களுக்கு மணப்பெண்ணைக் குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து வேற்று ஆண்கள் யாரும் பார்க்கக்கூடாதாம். அதனால் மணப்பெண்ணையும் பார்க்கமுடியவில்லை. ஒரு சாயாவைக் குடித்துவிட்டு மெல்ல அங்கிருந்து பள்ளிவாசலை நோக்கிக் கிளம்பினோம்.  
  
எங்களில் பெரும்பாலானோர் ஒருமுறை கூட இஸ்லாமிய திருமண விழாவில் கலந்து கொண்டிராதவர்கள். கலந்து கொண்டிராதவர்கள் என்பதைவிட கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காதவர்கள் எனலாம். அதனால் அவர்களின் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி இருந்தது. கூடவே பரிமாறப்பட இருந்த பிரியாணிக்கும் சேர்த்துதான். 

கடந்த வருடம் இதே கும்பகோணத்தில் வேறொரு அலுவலக நண்பரின் திருமணதில் கலந்து கொண்டவன் என்பதால் எனக்கு தெரிந்த விசயங்களை நண்பர்களிடம் கூறிக் கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு எங்களோடு வந்திருந்த மஸ்தானை கேள்விமேல் கேள்விகேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தார்கள் என் சகாக்கள். முஸ்லீம் வீட்டுக் கல்யாணம் எப்படி நடக்கும்? எவ்வளவு நேரம் நடக்கும்? என்னவெல்லாம் பண்ணுவாங்க?' என்பதுதான் எங்களில் பெரும்பாலானோரின் கேள்வி. 

மணி பதினொன்றைக் கடந்திருந்தது. பள்ளிவாசலில் அவர்கள் கொடுத்த சேமியா கலந்த ரோஸ்மில்க் வெயிலுக்கு இதமாய் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வரத்தொடங்கினார்கள். அங்கிருந்தவர்களில் நாங்கள் மட்டுமே சொல்லிவைத்தாற்போல் ஜீன்ஸ் அணிந்திருந்தோம். மற்றவர்கள் அனைவருமே எளிமையான வெள்ளை நிறக்கைலி வெள்ளைச் சட்டையுடனேயே வலம் வந்தனர். அவ்வப்போது யாரேனும் ஒருவர் எங்களுடன் வந்து கைகுலுக்கிச் சென்றபடி இருந்தார்களே தவிர நான் இன்னார் என ஒருவருமே அறிமுகம் செய்துகொள்ளவில்லை. நாங்களும் கைகுலுக்கிக் கொண்டோம். 

சிறிது நேரத்தில் ஆட்டோ ஒன்றில் ஸ்பீக்கர் கட்டி அதன் பின்னால் சிலர் பக்திப் பாடல்களைப் பாடியபடி வர, அவர்களுக்குப் பின்னால் வந்த காரில் மணமகனும் அவருக்குப் பின்னால் வந்த காரில் மணமகளும் வந்து சேர்ந்தார்கள், மணமகனை பள்ளிவாசலுக்கும், மணமகளை பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த முஸ்லீம் சமுதாய நலக்கூடத்திற்கும் அழைத்துச் சென்றவுடன் கடந்த சில வாரங்களாக நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திருமண வைபோகம் ஆரம்பமானது.     




பள்ளிவாசலுக்கு அருகே நீச்சல் குளம் போன்ற அமைப்பில் கால் கழுவுவதற்கு வசதியாக ஒரு தொட்டி கட்டி வைத்துள்ளார்கள். அங்கு சென்று கால்களை சுத்தப்படுத்திவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமானோம். திடிரென்று எங்களுக்குள் ஒரு பரபரப்பு. ஒரு பெரிய டப்பாவில் பிளாஸ்டிக்கால் ஆன குல்லாக்களை எடுத்து வந்து ஒருவர் வைக்க எங்களோடு வந்த சிலநண்பர்கள் அதனை எடுத்து அணிந்து கொண்டார்கள். என்னுடைய மாற்று மதத்து நண்பர்கள் என்னுடன் கோவிலுக்கு வரும்போது சில சமயங்களில் விபூதி வைத்துவிடும்படி கேட்டு ஆர்வத்துடன் வைத்துக் கொள்வார்கள். அதே போன்றதொரு ஆர்வம் இவர்கள் குல்லா அணிந்துகொள்ளும் போது வெளிப்பட்டதை உணர்ந்தேன்.  

மசூதியின் வெளியே இருக்கும் பெரிய மண்டபத்தில் வைத்துதான் திருமணம் நடைபெற்றது. மண்டபத்தின் நடுவில் மணமகன் அமர்ந்துகொள்ள அவருக்கு வலப்புறம் மணமகளின் தந்தையும் இடப்புறம் மணமகனின் தந்தையும் அமர்ந்திருந்தார்கள், மணமகனின் எதிர்புறம் அந்தப் பள்ளியின் தலைமை இமாம் அமர்ந்துகொண்டார். இவர்தான் திருமணத்தை வழிநடத்துகிறார். 

தொழுகையுடன் ஆரம்பிக்கும் திருமணத்தில் ஓதி முடித்தும் திருமண சங்கல்ப்பம் வாசிக்கபடுகிறது. இன்னாரின் மகன் இன்னாரின் மகளை இவ்வளவு கிராம் தாலியுடன் இறைவனின் திருபெயரால் மணமுடிக்கிறார் என்ற வகையில் செல்கிறது அந்த சங்கல்ப்பம். அதை அரபிக்கிலும் சொல்கிறார்கள் என நினைக்கிறன், பின் சிறிது நேரம் தொழுகை நடக்கிறது. இருபதாவது நிமிடத்தில் கண்ணாடி டம்ளர்களில் தண்ணீரும் (தண்ணீர் போல் தான் இருந்தது) பாலும் வருகிறது. ஒவ்வொன்றிலும் மூன்று மடக்கு அருந்துகிறார். 




இந்த சமநேரத்தில் மணமகளுக்கு மணமகனின் தாயார் தாலி அணிவித்து விடுவதாக கூறினார்கள். மணமகளும் நீரும் பாலும் அருந்த திருமணம் நிறைவு பெறுகிறது. பின்னர் உறவினர்கள் நண்பர்கள் என ஒவ்வொருவராக வந்து மணமகனைத் ஆரத்தழுவி தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அதிகபட்சமாக மணமகனின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்

மணமேடை இல்லை. மணமகனும் மணமகளும் அருகே அருகே நின்று விதவிதமாக போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை. குடும்பம் குடும்பமாக மேடையேறி தங்கள் வருகைகளை டிஜிட்டலில் பதிந்து கொள்ளவில்லை. போகஸ் லைட், பிளாஷ் லைட், மணமேடையைச் சுற்றிலும் குடை, இன்னிசைக் கச்சேரி, ஆட்டம் பாட்டம் என எதுவுமே இல்லை. இத்தனையும் இல்லாமல் ஒரு திருமணமா என்றால் நிச்சயமாய் இஸ்லாமில் சாத்தியமே! 

சமீபத்தில் வியாசர்பாடியில் நடந்த நண்பனின் திருமண வரவேற்பிற்குச் சென்றிருந்தேன், பப்களில் நடத்தப்படும் இன்னிசைக் கச்சேரியை தன்னுடைய திருமண வரவேற்பிலும் ஏற்பாடு செய்திருந்தான். மண்டபத்தின் உள்ளே இருந்த மொத்தபேரும் வைப்ரேட் மோடில் அதிர்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு எந்திரம் அவ்வபோது புகையைக் கக்கிக் கொண்டிருக் இன்னொரு எந்திரம் விதவிதமான வெளிச்சங்களை உமிழ்ந்து கொண்டிருந்தது. நகர்ப்புற திருமணங்களில் மேலைநாட்டு ஆதிக்கம் அதிகமாய் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டதை அந்த நிகழ்வில் உணர்ந்தேன்.

அங்கே அப்படியிருக்க இவர்கள் இன்னும் தங்கள் ஆதிகாலத்து எளிமையை மாற்றாமல் அதையே பின்பற்றி வருவது வியப்பாய் இருந்தது. அனைவருமே திருமணம் முடிந்ததும் சாப்பிட்டார்கள் வீட்டை நோக்கிக் கிளம்பிவிட்டார்கள். குடும்பத்து ஆண் பெண் தவிர வேறு யாருமே பொதுவெளியில் பேசிக்கொள்ளவில்லை. வட்டமாய் அமர்ந்து சிரித்துப் பேசும் யாரையும் பார்க்க முடியவில்லை. திருமணதிற்கு வந்திருக்கிறோம் என்பதை விட நண்பனின் வீட்டு விருந்திற்கு வந்துள்ளோம் என்பது போலவே உணர்ந்தோம். இஸ்லாம் எவ்வளவு கட்டுக்கோப்பான மார்க்கம் என்பதை நெருங்கிச் சென்று பார்க்கும் போதுதான் புரிகிறது.   

பெரும்பாலானவர்கள் மசூதியை விட்டுக் கிளம்பியதும் மஸ்தானுடன் மெல்ல மசூதிக்குள் நுழைந்தோம். ஒரு பெரிய ஹால். பெரிய என்றால் சுமார் இருநூறு முன்னூறு பேர் அமரக்கூடிய பெரிய ஹால். மிகவும் சுத்தமாக பெருக்கப்பட்டிருந்தது. தூரத்தில் ஒரு அலமாரியில் குண்டுகுண்டான புத்தகங்கள் அடுக்கபட்டிருந்தன. நிச்சயம் அவை குரானாகத்தான் இருக்க வேண்டும். இரண்டு மூன்று பெரியவர்கள் கூட்டமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் திருமணத்தை நடத்தி வைத்தப் பெரியவர். நாங்கள் உள்ளே நுழையவும் எங்களை யார் என்று தலையை உயர்த்திப் பார்த்தார்கள். ஏதேனும் திட்டுவார்களோ என்று நாங்கள் தயங்க, நாங்கள் தயங்குவதைப் பார்த்ததும் தங்கள் முகத்தை வேறுபக்கம் திருப்பி மீண்டும் தாங்கள் விட்ட இடத்தில் இருந்து பேசத்தொடங்கிவிட்டார்கள். நாங்களும் எங்களுக்கு வசதியாய் ஒரு ஓராமாய்ச் சென்று அமர்ந்து எங்கள் பங்குக்குப் பேசத்தொடங்கினோம். 



விக்கிதான் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்தான். 'மச்சி அந்த மூணு பேரும் யாரு?, ஏன் இங்க இருக்காங்க?, அது என்ன புக்கு?, அங்க ஏன் பேன் போட்ருக்காங்க?' என்றபடி அவன் கேள்விகள் அளவே இல்லாமல் சென்று கொண்டிருந்தன. மஸ்தான் பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தான். விக்கியின் கேள்விகள் எனக்கு எவ்வித வியப்பையும் தரவில்லை. ஒருவேளை அவன் 'டேய் மச்சி சாமி சிலைய எங்கடா காணோம்' என்று கேட்டிருந்தாலும் கூட நான் வியந்திருக்க மாட்டேன். காரணம் மசூதிக்குள் நுழையும் சில நிமிடங்களுக்கு முன்னர்தான் என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தான் விக்கி'அண்ணே அந்த கோவிலுக்குள்ள நம்மள எல்லாம் விடுவாங்களான்னே, பாக்கணும் போல இருக்கு' என்று.