27 Jun 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளினூடே ஓர் பயணம்


பிச்சாவரம் - இரண்டு மணி வெயில் எங்களை நனைத்துக் கொண்டிருந்தது. எங்களைச் சுற்றிலும் நீர்பரப்புதான் என்றபோதும் தூரத்தில் தெரிந்த சுரபுன்னைக் காடுகளினுள் ஒளிந்துகொண்டு வர மறுத்தது காற்று.


இந்த மதிய வெயிலில் கடற்கரைக்குச் செல்வது வீண் வேலை. அங்கு ஒன்றுமே இல்லை. அதனால் வெறும் படகுப்பயணத்தை மட்டுமே தேர்ந்தெடுப்பது நலம் என அறிவுறுத்தினார்கள் டிக்கட் கவுண்ட்டர் அதிகாரிகள். எங்களுக்கும் அதுவே சரியாய்ப்பட்டது. மோட்டார் படகிற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு படகு நோக்கி  நகர்ந்தோம். பதினான்கு பேர் கொண்ட எங்கள் குழு இரு படகுகளாகப் பிரிந்து பயணத்தைத் தொடர ஆயத்தமானது. ஒவ்வொரு பயணியும் லைப் ஜாக்கெட் அணிவது அவசியம் என்று அருகில் ஒரு போர்ட்டு வைக்கபட்டிருந்தது. யாருக்கும் அதுபற்றி கவலையில்லை. லைப் ஜாக்கெட் இல்லாமலேயே எங்கள் பயணம் தொடங்கியது. 

மோட்டார் படகு - கட்டணம் அதிகம். குறைந்த நேரத்தில் மொத்த இடத்தையும் சுற்றிப் பார்த்துவிடலாம் என்றாலும் ஒரு மணிநேரம் மட்டுமே பயணிக்க முடியும். இதுவே துடுப்புப் படகு என்றால் நல்ல நிறுத்தி நிதானமாக சுற்றிப் பார்க்கலாம். மோட்டார்ப் படகுடன் ஒப்பிடுகையில் இதன் விலை குறைவு. பயணிக்கும் நேரம் அதிகம். வெயில் குறைவாக இருக்கும் காலை அல்லது மாலை என்றால் துடுப்புப்படகில் சென்று வருவது உத்தமம். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் படகில் உலா வரலாம். நீர்பரப்பின் முடிவில் கடற்கரை அமைந்திருப்பதால் அங்கு சென்றுவரவும் அனுமதி உண்டு. 

கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் நிறைந்து காணப்படும் நீர் மற்றும் சுரப்புன்னைக் காடுகளைத் தவிர பார்ப்பதற்கு வேறு எதுவும் இல்லை. வேண்டுமானால் படகுசவாரி செய்யலாம். கேட்பதற்கு அவ்ளோதானா என்றளவில் நினைக்க வைத்தாலும் இந்தப் படகுசவாரியில் தான் சுவாரசியமே நிறைந்துள்ளது. (படகுசவாரிக்கான கட்டண விபரம் பார்க்க படம்). 


ஆற்று நீரில் இருந்து பிரிந்து வரும் நீர், கடல் ஓதங்கள் கடத்தி வரும் நீர் மற்றும் காற்று மழை போன்றவையும் இப்படியான நீர்பரப்புகள் உருவாகக் காரணியாக அமைகின்றன. அதனால் இது போன்ற இடங்களில் ஆழம் அதிகமிருப்பதில்லை. அதிகபட்சம் பத்தடி வரை வேண்டுமானால் நீர் இருக்கலாம். உப்பு நீர் தான் என்றபோதும் கடல் நீரின் அளவிற்கு உப்பாக இருக்காது. இதுபோன்ற நீர்பரப்புகள் தோன்றுவதற்கே பலநூறு வருடங்கள் தேவைப்படுமாம். 

கொஞ்சம் கொஞ்சமாக இவற்றைச் சுற்றி நீர்வாழ் மரங்கள் செடிகள் கொடிகள் மற்றும் இன்னபிற நீர்வாழ் உயரினங்கள் என முற்றிலும் நீர் சார்ந்த ஒரு சமுதாயம் உருவாகத் தொடங்குகிறது. அப்படியாக வளர்ந்து காலத்தை மிஞ்சி நிற்கும் பல்வேறு வகையான மரங்கள் அடர்ந்த ஒரு பகுதிதான் பிச்சாவர சதுப்புநிலக் காடுகள். மேலும் இதனை உலகின் இரண்டாவது மிகபெரிய சதுப்பு நிலக்காடு என்கிறது இணையம். நீர்நிலையின் ஆரம்பப்பகுதி முழுமையுமே பழுப்பு நிறத்தில் பாசி படர்ந்து காணப்படுவதால் அந்த சாக்கடை நீரில் கை வைக்கவே அருவருப்பாய் இருந்தது. தொடர்ந்து உள்ளே பயணிக்கப் பயணிக்க நீரின் நிறமும் தரமும் மாறிக்கொண்டே இருப்பதைக் காணமுடிந்தது.


இயற்கையின் எந்த ஒரு விஷயத்திற்குப் பின்னும் இருக்கும் காரணம் ஆச்சரியமானது. அதே போன்றதொரு ஆச்சரியம்தான் இவ்வகை சதுப்பு நிலக்காடுகளினுள்ளும் ஒளிந்து கிடக்கின்றன. எப்போதெல்லாம் கடலில் சீற்றம் அதிகமாயிருக்கிறதோ அப்போதெல்லாம் அதன் சீற்றத்தை மட்டுப்படுத்தும் வகையிலோ அல்லது நிலபரப்பில் வாழும் உயிரினங்களை பாதிக்கா வகையிலோ தடுக்கும் அரணாக செயல்படுகின்றன இந்த உப்பங்கழிகள். அலையின் சீற்றைத்தை மட்டுப்படுத்தி வெகுவாக தணிப்பதால் இவற்றிற்கு அலையாத்திக் காடுகள் என்று பெயர் சூட்டியுள்ளான் நம் ஆதித் தமிழன். சுனாமியின் போதும் தானே புயலின் போதும் மாபெரும் நீர் அரணாக இருந்து நிலத்தைக் காத்தவை இந்த சதுப்பு நிலக்காடுகளே என்பது குறிப்பிடப்பட்ட வேண்டிய விஷயம். 

கொஞ்ச நேரம் அமைதியாக படகை செலுத்திக் கொண்டிருந்த எங்கள் படகோட்டி மெல்ல பேச ஆரம்பித்தார். அதன் பின்னால் ஒளிந்திருந்த வியாபார தந்திரம் அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. 'மனுஷனுக்கு ஓராயிரம் வழி நாரைக்கு நாலாயிரம் வழின்னு ஒரு பழமொழி உண்டு அப்படிப்பட்ட நாரையாலையே உள்ள வரமுடியாத பலவழி இங்க உண்டு, இன்னும் கண்டுபிடிக்கப் படாமயும் இருக்கு' 

கிட்டத்தட்ட ஆயிரம் ஹெக்டேருக்கும் மேல் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நீர்பரப்பில் எங்கெங்கு என்னென்ன இருக்கிறது என்பது இவர்களிலேயே பலருக்குத் தெரியாதாம். மேலும் இதன் முழுபகுதியையும் எவருமே இன்றுவரை சுற்றியதில்லையாம். வனத்துறையின் கீழ் இருப்பதால் சில குறிப்பிட்ட இடங்களைத் தவிர சுற்றுல்லா வாசிகளுக்கு வேறு எங்கும் அனுமதி இல்லை. சமீப காலத்தில் பயணித்த பல இடங்களிலும் கவனித்த ஒரு விஷயம், இதுபோல் வழிகாட்டியாக வருபவர்கள் தங்களுக்குத் தேவையான அத்தனை ஆங்கில வார்த்தைகளையும் தெரிந்து வைத்துள்ளார்கள். பிழைக்கத் தெரிந்தவர்கள். 


ஒரு போட்டுக்கு ஐநூறு ரூவா கொடுத்தா பாரஸ்ட் அனுமதி இல்லாத சில பகுதிகளுக்கு கூட்டுப்போறேன். உங்களுக்கு சம்மதம்ன்னா சொல்லுங்க போயிட்டு வரலாம் என்றார். மனுஷன் எங்கு வந்து எப்படி ஆசையைக் காட்ட வேண்டுமோ அப்படிக் காட்டினார். இந்த எரியில நிறைய இடத்துல ஷூட்டிங் எடுத்து இருக்காங்க. எம்ஜியாரோட இதயக்கனி படம்தான் இங்க எடுகப்பட்ட முதல் ஷூட்டிங்.  ஜெயம் ரவி நடிச்ச பேராண்மை, தசாவதராம், படத்துல மொத பாட்டு வருமே அந்த பாட்டு கூட இங்க தான் ஷூட் பண்ணினாங்க. என்ற போது தசாவதாரம் பாடல் கட்சிகள் என கண்முன் தத்ரூபமாக விரிந்து கொண்டிருந்தன. அந்தப் பாடலானது எங்கோ பாரினில் எடுக்கப்பட்டு சிலபல கிராபிக்ஸ் ஒட்டு வேலைகளுடன் வெளியான ஒன்று என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பார்த்தால் தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு இடம் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது.


மேலும் தொடர்ந்தார், அனகோண்டா படத்துல வருமே அதேமாதிரியான ஏரியா எல்லாம் இருக்கு. நீங்க ஓகே சொன்னா நாம போயிட்டு வரலாம் என்றார். எங்களை விடுவதற்கு அவருக்கு மனமில்லை. இன்னும் எப்போ வரப்போறோம் கழுத போயிட்டு வந்த்றலாம் என்ற மனநிலைக்கு நாங்களும் வந்திருந்தோம். அவருடைய வியாபார தந்திரம் வொர்க் அவுட் ஆகிவிட்டது. அவர் காட்டுவதாய்க் கூறிய பகுதிகளை நோக்கி மெல்ல நகரத் தொடங்கினோம். 

அதுவரை பரந்து விரிந்த நீர்பரப்பு, அதன் எல்லைகளில் அடர்ந்து வளர்ந்த சுரபுன்னை மரங்கள் என்று பயணித்துக் கொண்டிருந்த எங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் காத்திருந்தது. 

சுரபுன்னை மரங்கள் மற்றும் சதுப்புநில வாழ் மரங்கள் அனைத்தும் அடர்ந்து வளரும் மரங்கள். மேலும் இம்மரங்களின் வேரானது சதுப்புநிலத்தில் குலைவான இலகுவான கொழ கொழ மணலில் பரவி இருப்பத்தால் இயற்கைச் சீற்றங்களில் இருந்து தங்களை தாக்குபிடித்துக்கொள்வதற்காக தமது உடல் முழுவதில் இருந்தும் விழுதுகளை வளர்த்து அவற்றினை நீரினுள் பரவ விடுகின்றன. அப்படி நெருக்கமாக வளர்ந்த மரங்களின் ஊடாக சில நீர்த்தடங்கள் செல்கின்றன. ஒரு படகு உள்நுழைந்து வெளிவரும் அளவில் இடைவெளி இருக்கிறது அந்தப் பாதைகளில். அந்தப் பாதையில் தான் எங்கள் படகும் இப்போது நுழைந்து கொண்டிருந்தது. நாங்கள் தருவதாய் சம்மதித்திருந்த ஐநூறு ரூபாய் இப்போது வேலை செய்யத் தொடங்கியிருதது.


சுற்றிலும் விழுதுகள் மூடி, ஒளிபுக முடியா ஒரு அடர்ந்த வனத்தினுள் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது அந்தப் பயணம். எங்கள் அனைவரின் முகமும் ஆச்சரியத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எங்கள் படகோட்டியும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப்பகுதிகள் குறித்து விளக்கத் தொடங்கினார். இந்த விழுதுகளின் மீது மனிதர்களின் கை பட்டால் அவை இறந்து விடுமாம். அதன்பின் அந்த விழுதுகள் தொடர்ந்து வளராமல் பட்டுப்போய் விடுமாம். இதை கேட்டதும் எங்களுக்கு ஆர்வம் தாங்கவில்லை. நாங்களும் எங்கள் பங்கிற்கு சில விழுதுகளை கொலை செய்துவிட்டே அங்கிருந்து நகர்ந்தோம். சில மரங்களின் இலைகளில் இருந்து வடியும் பால் போன்ற திரவம் கண்களில் பட்டால் கண் எரிச்சல் ஏற்படுமாம். சமயங்களில் பார்வை பறிபோகவும் சாத்தியம் உண்டென்று கூறினார்.    


இந்தவழிகள் நேரே சமுத்திரத்தில் போய் இணையக் கூடியவை. ஒரு காலத்தில் இந்த வழிகளின் வழியே போதைப் பொருள் கடத்தல் அமோகமாக நடந்து கொண்டிருந்தாமாம். 

ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறையும் இங்கிருக்கும் நீரின் மட்டம் கூடி குறைந்து கொண்டே இருக்கும் என்றார். சில இடங்களில் தரைப்பகுதிகளைக் காண முடிந்தது. அந்த பகுதி முழுவதும் குச்சி குச்சியாக ஏதோ ஒன்று நீட்டிக் கொண்டிருந்தன. அங்க பாருங்க அது பேருதான் ஏரியல். இந்த தண்ணியில ஆக்சிஜன் ரொம்ப கம்மியா இருக்கும். அதனால மரங்கள் உயிர் வாழுறதுக்காக வேர் பகுதியில இருந்து இந்த மாதிரியான ஏரியல வெளில நீட்டி சுவாசிக்கும் என்றார். என்னே இயற்கையின் விந்தை என்று வியந்து கொண்டே மிதந்து கொண்டிருந்தோம். 

படகில் நாங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்கவில்லை. பயணித்த ஒருமணி நேரமும் ஏதோ மைதானத்தில் விளையாடுவது போல் ஓடியாடிக் கொண்டிருந்தோம். அத்தனை கவலைகளையும் அந்த நீர்பரப்பில் தொலைத்துக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட இயற்கையின் அற்புதத்தின் மத்தியில் நிகழ்ந்து கொண்டிருந்த உல்லாசப் பயணம் அது.  இன்னும் சில மணி நேரங்கள் அங்கேயே படகு சவாரி செய்யலாம் போல் இருந்தது. நேரம் இல்லை (டப்பும் இல்லை என்பது வேறு விஷயம்).    


பிச்சாவரம் படகு சவாரி முடிந்ததும் அங்கிருந்து சில கிமீ தொலைவில் இருக்கும் எம்.ஜி.யார் திட்டு என்ற இடத்தில் இருக்கும் கடலில் சென்று ஒரு மணிநேரம் நல்ல ஆட்டம் போட்டோம். இந்த எம்.ஜி.யார் திட்டில் இருந்து கடற்கரை செல்வதற்கும் படகில் தான் பயணிக்க வேண்டும். தலைக்கு ஐம்பது ரூபாய் கட்டணம். பின் அங்கிருந்து கிளம்பி கொள்ளிடம் என்ற இடத்தில் இருக்கும் ஆற்றுநீரில் ஆட்டம் போட்டுவிட்டு மெல்ல கும்பகோணத்தை நோக்கிக் கிளம்பினோம். என்றாவது சிதம்பரம் கடலூர் செல்ல வாய்ப்பு கிடைத்தால் பிச்சாவரத்தை தவறவிட்டு விடாதீர்கள். 

நீங்கள் பறவைக் காதலர்கள் என்றால் ஏப்ரல் - செப்டம்பர் பறவைகளின் சீசன் கிடையாது. மற்ற மாதங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகளைக் கண்டு களிக்கலாம் என்பது கூடுதல் தகவல். ஒருவேளை நீங்களும் என்னைபோல 'கருப்பா இருந்தா காக்கா, வெள்ளையா இருந்தா கொக்கு' என்று நினைக்கும் ஜாதியா, அப்ப நமக்கு எல்லா மாசமும் சீசன்தான் பாஸு. எந்த மாசம் வேணா போகலாம். பிச்சாவரத்த என்சாய் பண்ணலாம்.   

24 comments:

  1. அருமையான கட்டுரை. ...

    ReplyDelete
  2. ஒருமுறை பார்த்திருக்கிறேன். அவசரமாக பார்த்து திரும்பிவிட்டோம். முழுமையாக பார்க்க வேண்டும். விவரிப்பு அருமை

    ReplyDelete
  3. மரங்களின் விழுதுகள் இருபக்கமும் தோரண வாயில் போல அமைந்திருக்க நடுவில் படகில் நீங்கள் பயணிக்கும் படம் சூப்பர். இதயக்கனி க்ளைமாக்ஸில் வாத்யார் போட்டில் இருந்தபடி துப்பாக்கி சுடுவது நினைவுக்கு வந்தது உடனே.

    விழுதுகள் மனிதக் கை பட்டால் இறந்துவிடும் என்றதும் ஒன்றிரண்டு விழுதுகளைக் கொலை செய்த உங்களுக்கு, இலைகளில் வடியும் பாலை கண்ணில் விட்டுக் கொண்டு எரிச்சலை அனுபவிக்கணும்னு தோணிச்சா...? அதான்லே மனுசப்பய மனசு!

    அலையாத்தி காடுகள்ன்ற பேர் நான் கேள்விப்படாதது. படங்களோட பதிவைப் படிச்சதும் ஒருமுறை விசிட் அடிச்சிரணும்னு மனசுல பட்ருச்சு. மிஸ்டர் ஆவி.... உடனே ஒரு திட்டம் போடுங்க ப்ளீஸ்...!

    ReplyDelete
    Replies
    1. ஆவி திட்டம் போடுறதுல கில்லாடி. ஆனா விஷயம் நடக்கும்போது அவரு ஆடி அசைஞ்சு வருவாரு, நாம ரெண்டு பேர் மட்டும் தேமேன்னு ஸ்பாட்ல நிப்போம்....

      Delete
    2. இன்று பிச்சாவரம் சென்று வந்தோம்...மிக்க மகிழ்ச்சி. கிள்ளை பேரூராட்சிக்கு நுழைவு கட்டணம் கார் ஒன்றுக்கு 50 என்பது அதிகம்....அதேபோல மோட்டார் படகு கட்டணமும் மிகவும் அதிகமாக உள்ளது..தமிழக அரசு கட்டணத்தை குறைத்தால் மீண்டும் மீண்டும் வரலாம்....

      Delete
  4. ஒருமுறை செல்ல வேண்டும்... ம்...

    ReplyDelete
  5. ஒருமுறை செல்ல வேண்டும்... ம்...

    ReplyDelete
  6. நான் பிச்சாவரம் சென்றுள்ளேன். படகு சவாரியின்போது மரங்களைத் தலைகீழாகப் பிடுங்கி நட்டதுபோல அப்போது நான் உணர்ந்தேன். வாழ்க்கையில் ஒரு முறையாவது இவ்விடத்தை அனைவரும் பார்க்கவேண்டும். இவ்வாறான ஓர் இடம் தமிழகத்தில் உள்ளது நமக்குப் பெருமையே.

    ReplyDelete
  7. ம்ம்ம்.... லைப் ஜாக்கெட் போடாம படகில சவாரி செஞ்சிருக்கீங்க, அதுவுமில்லாம வனத்துறை அனுமதி இல்லாத இடத்துக்கெல்லாம் போயிருக்கீங்க.... ஏதாவது அசம்பாவிதம் நடந்தா யார் பொறுப்பு?

    ReplyDelete
  8. தசாவதாரம் காட்சி எனக்கும் கண் முன்னால் விரிந்தது.

    ReplyDelete
  9. உங்களின் படங்கள் அங்கே என்னையும் செல்லவேண்டுமென்ற எண்ணத்தை தந்தன !
    த ம 5

    ReplyDelete
  10. பிச்சாவரம் ஒரு இயற்கையான அரண். இந்தியாவில் இரண்டு இடங்களில்தான் இந்த அலையத்தி காடுகள் இருக்கின்றன. நல்ல பகிர்வு!.

    ReplyDelete
  11. அருமையான இடம் போலிருக்கு. கேள்விப்பட்டிருக்கிறேன். சென்றதில்லை. வாய்ப்பு கிடைத்தால் சென்று வர வேண்டும்.

    ReplyDelete
  12. பிச்சாவாரத்துக்குலாம் ஃப்ரெண்ட்ஸ் கூடப் போயிட்டு உன்னைப்போல சைவமாய் போய் வரக்கூடாது. ஒரு கையில் பாட்டில், ஒரு கையில் மீன் இல்லன்னா சிக்கன் பீஸ் வச்சுக்கிட்டு படகுல போஸ் கொடுத்திருந்தா எப்படி இருந்திருக்கும்!?

    ReplyDelete
  13. இப்பவே நாவுல தண்ணி வடியுதே.... உம் எழுத்து வேற போதையே ஏத்துதே...
    இப்படியான இடங்களைக் காண எங்களுக்கு எப்பதான் சந்தர்ப்பம் கிட்டுமோ :(

    ReplyDelete
  14. நீ கலக்கு சித்தப்பு ..

    ReplyDelete
  15. தகவல்கள் செம தல ..

    ReplyDelete
  16. இதுவரை சென்றதில்லை! ஆசையை கிளப்பிவிட்டீர்கள்! பார்ப்போம்! அருமையான தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  17. ஏரியல் மேட்டர் ஓகே!
    //விழுதுகளின் மீது மனிதர்களின் கை பட்டால் அவை இறந்து விடுமாம். /// இதுக்கு என்ன லாஜிக்?

    ReplyDelete
  18. //'கருப்பா இருந்தா காக்கா, வெள்ளையா இருந்தா கொக்கு'/// தி சேம் பறவைகள் சரணாலய விசிட் பீலிங்க்ஸ்!

    ReplyDelete
  19. ஆஹா அருமையாக இருக்கிறதே !

    ReplyDelete
  20. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது இங்கே நண்பர்களுடன் சென்றதுண்டு..... நல்ல அனுபவம் அது! அதைப் பற்றி எழுதினால் நானகைந்து பகுதிகள் எழுதலாம் - அத்தனை விஷயங்கள் அதில் நடந்தன. :)

    மீண்டும் செல்ல வேண்டும் - குடும்பத்தோடு!

    ReplyDelete
  21. செமையா என்ஜாய் பண்ணியிருக்கீங்க போல

    ReplyDelete