11 Jun 2014

திருமணம் என்னும் நிக்காஹ்


இந்தியா போன்ற கலாச்சாரப் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், மாறுபட்ட கலாச்சாரங்களைப் பின்பற்றும் பலரையும் பல்வேறு சூழல்களில் பார்த்திருக்கிறேன், பழகி இருக்கிறேன் என்றாலும் கூட அவர்களின் திருவிழாக்கள் அல்லது குடும்ப விழாக்களில் நாமும் ஒரு உறுப்பினராய்ப் பங்கேற்கும் போதுதான் அவர்களுக்கும் நமக்குமான கலாச்சார மாற்றங்களை முழுமையாக உணர முடிகிறது. உள்வாங்கிக் கொள்ளமுடிகிறது. இப்போ ஏன் இவ்ளோ நீட்டி முழக்குகிறேன் என்கிறீர்களா? எல்லாவற்றிற்கும் காரணம் கடந்த வாரத்தில் நான் கலந்து கொண்ட திருமணம் என்னும் நிக்காஹ்தான். திருமணம் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் தோழிக்கு.  

கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிமீ தொலைவில் இருக்கும் அந்த கிராமமும் அங்கு நடைபெற்ற திருமணமும் அதன்பின் எங்களுக்குள் ஏற்பட்ட கேள்விகளும் விவாதங்களும் உரையாடல்களும் தான் நான் இந்தப் பதிவை எழுதுவதற்கான முழுமுதற் காரணம். 

அலங்கார தோரணங்கள், காதுகிழியும் மைக் செட். தெரு முழுக்க சேர் போட்டு கூடிக் கொட்டமடிக்கும் ஊர்க்காரர்கள், அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் அழுதுகொண்டும் ஆரவாரப்பட்டுக் கொண்டும் திரியும் சிறுவர்கள். பட்டுப்பாவடைகள் தாவணிகள் என ஒரு கல்யாண வீட்டிற்கு உண்டான எந்த அறிகுறியும் அவ்விடத்தில் இல்லை. மாறாக இயல்புக்கு மீறிய ஒருவித அமைதியே அந்த இடம் முழுவதும் வியாபித்திருந்தது. 

மணி காலை பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மணப்பெண்ணின் வீட்டினுள் நுழைந்தோம். டிப்டாப்பாக இன் பண்ணிய ஒருவர் எங்களனைவரையும் வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றார். இயல்பாகவே தன்னைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் நாம் நிபுணர்கள் என்பதால் ஒவ்வொரு தருணங்களிலும் நாமும் அவர்களும் எங்கெல்லாம் மாறுபடுகிறோம் எந்த விசயங்களில் எல்லாம் மாறுபடுகிறோம் என்பதை ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது இந்த பாழாய்ப்போன மனசு. சில ஒப்பீடுகள் ஆச்சரியமாய் இருக்கின்றன, சில ஆச்சரியத்தையும் மீறிய வியப்பைத்தருகின்றன. சில 'அட'வையும் சில 'அடடா'வையும் ஏற்படுத்துகின்றன. அந்த திருமணத்தில் நான் கண்ட காட்சிகள் சுவாரசியமானவை. ஒரு புதிய சூழலை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவை.  

பசி வயிற்றைக் கிள்ளியது. வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடியே சாப்பிட அழைத்தனர். இங்கே அதிக வியப்பை ஏற்படுத்தியது அவர்கள் அளித்த விருந்தோம்பல் தான். நாங்கள் பதிமூன்று பேரும் அமர்ந்ததும் அவர்கள் உறவினர்களில் ஒருவர் கையில் ஒரு சிறிய வாளியையும் ஜக்கு நிறைய நீரையும் எடுத்துக் கொண்டு எங்கள் அருகில் வந்தார். முதலில் எங்களுக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். அந்த வாளியினுள் கையைவிடும்படிக் கூறி நீரை ஊற்றினார். அப்படி கைகழுவுவதற்கு கொஞ்சம் சங்கோஜமாய் இருந்தாலும் ஆச்சரியமாய் இருந்தது. மட்டன் சால்னாவும் பரோட்டா இட்லி வடையுடன் கூடிய அருமையான காலைச் சாப்பாடு.

வீட்டில் இருந்த உறவினர்கள் திருமண பரபரப்பில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க, வீடு முழுக்க உறவினர்கள் நிறைந்து இருந்தாலும் அவ்வீட்டுப் பெண்கள் ஒருவர் கூட கண்ணில் தென்படவில்லை. ஏன் எங்கள் அலுவலக தோழிகளே அவர்கள் இருந்த அறையைவிட்டு வெளியே வரவில்லை. மேலும் இஸ்லாம் வழக்கப்படி சிலநாட்களுக்கு மணப்பெண்ணைக் குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து வேற்று ஆண்கள் யாரும் பார்க்கக்கூடாதாம். அதனால் மணப்பெண்ணையும் பார்க்கமுடியவில்லை. ஒரு சாயாவைக் குடித்துவிட்டு மெல்ல அங்கிருந்து பள்ளிவாசலை நோக்கிக் கிளம்பினோம்.  
  
எங்களில் பெரும்பாலானோர் ஒருமுறை கூட இஸ்லாமிய திருமண விழாவில் கலந்து கொண்டிராதவர்கள். கலந்து கொண்டிராதவர்கள் என்பதைவிட கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காதவர்கள் எனலாம். அதனால் அவர்களின் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி இருந்தது. கூடவே பரிமாறப்பட இருந்த பிரியாணிக்கும் சேர்த்துதான். 

கடந்த வருடம் இதே கும்பகோணத்தில் வேறொரு அலுவலக நண்பரின் திருமணதில் கலந்து கொண்டவன் என்பதால் எனக்கு தெரிந்த விசயங்களை நண்பர்களிடம் கூறிக் கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு எங்களோடு வந்திருந்த மஸ்தானை கேள்விமேல் கேள்விகேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தார்கள் என் சகாக்கள். முஸ்லீம் வீட்டுக் கல்யாணம் எப்படி நடக்கும்? எவ்வளவு நேரம் நடக்கும்? என்னவெல்லாம் பண்ணுவாங்க?' என்பதுதான் எங்களில் பெரும்பாலானோரின் கேள்வி. 

மணி பதினொன்றைக் கடந்திருந்தது. பள்ளிவாசலில் அவர்கள் கொடுத்த சேமியா கலந்த ரோஸ்மில்க் வெயிலுக்கு இதமாய் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வரத்தொடங்கினார்கள். அங்கிருந்தவர்களில் நாங்கள் மட்டுமே சொல்லிவைத்தாற்போல் ஜீன்ஸ் அணிந்திருந்தோம். மற்றவர்கள் அனைவருமே எளிமையான வெள்ளை நிறக்கைலி வெள்ளைச் சட்டையுடனேயே வலம் வந்தனர். அவ்வப்போது யாரேனும் ஒருவர் எங்களுடன் வந்து கைகுலுக்கிச் சென்றபடி இருந்தார்களே தவிர நான் இன்னார் என ஒருவருமே அறிமுகம் செய்துகொள்ளவில்லை. நாங்களும் கைகுலுக்கிக் கொண்டோம். 

சிறிது நேரத்தில் ஆட்டோ ஒன்றில் ஸ்பீக்கர் கட்டி அதன் பின்னால் சிலர் பக்திப் பாடல்களைப் பாடியபடி வர, அவர்களுக்குப் பின்னால் வந்த காரில் மணமகனும் அவருக்குப் பின்னால் வந்த காரில் மணமகளும் வந்து சேர்ந்தார்கள், மணமகனை பள்ளிவாசலுக்கும், மணமகளை பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த முஸ்லீம் சமுதாய நலக்கூடத்திற்கும் அழைத்துச் சென்றவுடன் கடந்த சில வாரங்களாக நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திருமண வைபோகம் ஆரம்பமானது.     




பள்ளிவாசலுக்கு அருகே நீச்சல் குளம் போன்ற அமைப்பில் கால் கழுவுவதற்கு வசதியாக ஒரு தொட்டி கட்டி வைத்துள்ளார்கள். அங்கு சென்று கால்களை சுத்தப்படுத்திவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமானோம். திடிரென்று எங்களுக்குள் ஒரு பரபரப்பு. ஒரு பெரிய டப்பாவில் பிளாஸ்டிக்கால் ஆன குல்லாக்களை எடுத்து வந்து ஒருவர் வைக்க எங்களோடு வந்த சிலநண்பர்கள் அதனை எடுத்து அணிந்து கொண்டார்கள். என்னுடைய மாற்று மதத்து நண்பர்கள் என்னுடன் கோவிலுக்கு வரும்போது சில சமயங்களில் விபூதி வைத்துவிடும்படி கேட்டு ஆர்வத்துடன் வைத்துக் கொள்வார்கள். அதே போன்றதொரு ஆர்வம் இவர்கள் குல்லா அணிந்துகொள்ளும் போது வெளிப்பட்டதை உணர்ந்தேன்.  

மசூதியின் வெளியே இருக்கும் பெரிய மண்டபத்தில் வைத்துதான் திருமணம் நடைபெற்றது. மண்டபத்தின் நடுவில் மணமகன் அமர்ந்துகொள்ள அவருக்கு வலப்புறம் மணமகளின் தந்தையும் இடப்புறம் மணமகனின் தந்தையும் அமர்ந்திருந்தார்கள், மணமகனின் எதிர்புறம் அந்தப் பள்ளியின் தலைமை இமாம் அமர்ந்துகொண்டார். இவர்தான் திருமணத்தை வழிநடத்துகிறார். 

தொழுகையுடன் ஆரம்பிக்கும் திருமணத்தில் ஓதி முடித்தும் திருமண சங்கல்ப்பம் வாசிக்கபடுகிறது. இன்னாரின் மகன் இன்னாரின் மகளை இவ்வளவு கிராம் தாலியுடன் இறைவனின் திருபெயரால் மணமுடிக்கிறார் என்ற வகையில் செல்கிறது அந்த சங்கல்ப்பம். அதை அரபிக்கிலும் சொல்கிறார்கள் என நினைக்கிறன், பின் சிறிது நேரம் தொழுகை நடக்கிறது. இருபதாவது நிமிடத்தில் கண்ணாடி டம்ளர்களில் தண்ணீரும் (தண்ணீர் போல் தான் இருந்தது) பாலும் வருகிறது. ஒவ்வொன்றிலும் மூன்று மடக்கு அருந்துகிறார். 




இந்த சமநேரத்தில் மணமகளுக்கு மணமகனின் தாயார் தாலி அணிவித்து விடுவதாக கூறினார்கள். மணமகளும் நீரும் பாலும் அருந்த திருமணம் நிறைவு பெறுகிறது. பின்னர் உறவினர்கள் நண்பர்கள் என ஒவ்வொருவராக வந்து மணமகனைத் ஆரத்தழுவி தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அதிகபட்சமாக மணமகனின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்

மணமேடை இல்லை. மணமகனும் மணமகளும் அருகே அருகே நின்று விதவிதமாக போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை. குடும்பம் குடும்பமாக மேடையேறி தங்கள் வருகைகளை டிஜிட்டலில் பதிந்து கொள்ளவில்லை. போகஸ் லைட், பிளாஷ் லைட், மணமேடையைச் சுற்றிலும் குடை, இன்னிசைக் கச்சேரி, ஆட்டம் பாட்டம் என எதுவுமே இல்லை. இத்தனையும் இல்லாமல் ஒரு திருமணமா என்றால் நிச்சயமாய் இஸ்லாமில் சாத்தியமே! 

சமீபத்தில் வியாசர்பாடியில் நடந்த நண்பனின் திருமண வரவேற்பிற்குச் சென்றிருந்தேன், பப்களில் நடத்தப்படும் இன்னிசைக் கச்சேரியை தன்னுடைய திருமண வரவேற்பிலும் ஏற்பாடு செய்திருந்தான். மண்டபத்தின் உள்ளே இருந்த மொத்தபேரும் வைப்ரேட் மோடில் அதிர்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு எந்திரம் அவ்வபோது புகையைக் கக்கிக் கொண்டிருக் இன்னொரு எந்திரம் விதவிதமான வெளிச்சங்களை உமிழ்ந்து கொண்டிருந்தது. நகர்ப்புற திருமணங்களில் மேலைநாட்டு ஆதிக்கம் அதிகமாய் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டதை அந்த நிகழ்வில் உணர்ந்தேன்.

அங்கே அப்படியிருக்க இவர்கள் இன்னும் தங்கள் ஆதிகாலத்து எளிமையை மாற்றாமல் அதையே பின்பற்றி வருவது வியப்பாய் இருந்தது. அனைவருமே திருமணம் முடிந்ததும் சாப்பிட்டார்கள் வீட்டை நோக்கிக் கிளம்பிவிட்டார்கள். குடும்பத்து ஆண் பெண் தவிர வேறு யாருமே பொதுவெளியில் பேசிக்கொள்ளவில்லை. வட்டமாய் அமர்ந்து சிரித்துப் பேசும் யாரையும் பார்க்க முடியவில்லை. திருமணதிற்கு வந்திருக்கிறோம் என்பதை விட நண்பனின் வீட்டு விருந்திற்கு வந்துள்ளோம் என்பது போலவே உணர்ந்தோம். இஸ்லாம் எவ்வளவு கட்டுக்கோப்பான மார்க்கம் என்பதை நெருங்கிச் சென்று பார்க்கும் போதுதான் புரிகிறது.   

பெரும்பாலானவர்கள் மசூதியை விட்டுக் கிளம்பியதும் மஸ்தானுடன் மெல்ல மசூதிக்குள் நுழைந்தோம். ஒரு பெரிய ஹால். பெரிய என்றால் சுமார் இருநூறு முன்னூறு பேர் அமரக்கூடிய பெரிய ஹால். மிகவும் சுத்தமாக பெருக்கப்பட்டிருந்தது. தூரத்தில் ஒரு அலமாரியில் குண்டுகுண்டான புத்தகங்கள் அடுக்கபட்டிருந்தன. நிச்சயம் அவை குரானாகத்தான் இருக்க வேண்டும். இரண்டு மூன்று பெரியவர்கள் கூட்டமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் திருமணத்தை நடத்தி வைத்தப் பெரியவர். நாங்கள் உள்ளே நுழையவும் எங்களை யார் என்று தலையை உயர்த்திப் பார்த்தார்கள். ஏதேனும் திட்டுவார்களோ என்று நாங்கள் தயங்க, நாங்கள் தயங்குவதைப் பார்த்ததும் தங்கள் முகத்தை வேறுபக்கம் திருப்பி மீண்டும் தாங்கள் விட்ட இடத்தில் இருந்து பேசத்தொடங்கிவிட்டார்கள். நாங்களும் எங்களுக்கு வசதியாய் ஒரு ஓராமாய்ச் சென்று அமர்ந்து எங்கள் பங்குக்குப் பேசத்தொடங்கினோம். 



விக்கிதான் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்தான். 'மச்சி அந்த மூணு பேரும் யாரு?, ஏன் இங்க இருக்காங்க?, அது என்ன புக்கு?, அங்க ஏன் பேன் போட்ருக்காங்க?' என்றபடி அவன் கேள்விகள் அளவே இல்லாமல் சென்று கொண்டிருந்தன. மஸ்தான் பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தான். விக்கியின் கேள்விகள் எனக்கு எவ்வித வியப்பையும் தரவில்லை. ஒருவேளை அவன் 'டேய் மச்சி சாமி சிலைய எங்கடா காணோம்' என்று கேட்டிருந்தாலும் கூட நான் வியந்திருக்க மாட்டேன். காரணம் மசூதிக்குள் நுழையும் சில நிமிடங்களுக்கு முன்னர்தான் என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தான் விக்கி'அண்ணே அந்த கோவிலுக்குள்ள நம்மள எல்லாம் விடுவாங்களான்னே, பாக்கணும் போல இருக்கு' என்று. 

40 comments:

  1. "நிக்காஹ்" வீட்டார்க்கு தெரியும், சீனுவின் "ஆருப்பட்டமான" பதிவு அடுத்த வெள்ளிக்குள் வெளிவரும் என்று. அதனால "நிக்காஹ்"வில் ஆருப்பட்டத்தை குறைந்துக் கொண்டனர்.

    ReplyDelete
  2. "நிக்காஹ்" வீட்டார்க்கு தெரியும், சீனுவின் "ஆருப்பட்டமான" பதிவு அடுத்த வெள்ளிக்குள் வெளிவரும் என்று. அதனால "நிக்காஹ்"வில் ஆருப்பட்டத்தை குறைந்துக் கொண்டனர்.

    ReplyDelete
  3. "நிக்காஹ்" வீட்டார்க்கு தெரியும், சீனுவின் "ஆருப்பட்டமான" பதிவு அடுத்த வெள்ளிக்குள் வெளிவரும் என்று. அதனால "நிக்காஹ்"வில் ஆருப்பட்டத்தை குறைந்துக் கொண்டனர்.

    ReplyDelete
  4. திரைப்படங்களில் மட்டும் வேறுவிதமாகக் காண்கிறோமே. பெண்ணைச் சம்மதம் கேட்பது போலவும் சரி சொல்லுவது போலவும்..............இவரும் மல்லிகைப் பூமாலையால் முகம் மறைத்திருந்தாரா. வெகு சுவாரஸ்யம் சீனு. பொத்வாகவே இஸ்லாமியர்களிடம் கட்டுப்பாடு நிறைய தான். என் முஸ்லிம் தோழிகள் வீட்டுக்கு நான் தான் சென்றிருக்கிறேன். அவர்கள் அந்தப் பாய்த்தடுப்பைத் தாண்டி வரமாட்டார்கள். நான் சொல்வது நாற்பது வருடங்களுக்கு முன்னால். மிக நன்றி.

    ReplyDelete
  5. இப்ப காலம் மாறிப்போச்சுன்னு பதிவு படித்துத் தெரிந்து கொண்டேன்.

    நான் கலந்து கொண்ட நிக்காஹ் வைபவம் மணமகள் வீட்டுலேயே நடந்தது. மசூதிக்கெல்லாம் போகலை. இமாம் ஒருத்தர் வந்து கல்யாணம் நடத்தி வச்சு மணமக்களிடம் கையெழுத்து வாங்கிக்கிட்டார் ஒரு ரெஜிஸ்த்தரில்.

    மணமகன் & அவருடைய அப்பா கையெழுத்து போட்டபிறகு புத்தகம் மணமகள் அறைக்கு வந்தது நினைவிருக்கிறது.

    வெஜிடேரியன்களுக்கு தனியா பக்கத்து வீட்டில் சமைச்சுக் கொண்டுவந்து தந்தாங்க.

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  7. தலைப்பை பார்த்துட்டு படம் ரிலீஸ் ஆயிடுச்சான்னு குழம்பிட்டேன்.
    மற்றபடி ஒரு நிக்காஹ் வை கண் முன் காட்டிவிட்டீர்கள். என் தோழி நிஷா வின் நிக்காஹ் நினைவுக்கு வந்தது. விக்கி நீ யாருப்பா ? இவ்ளோ நாளா எங்கே இருந்த ராசா:)).

    ReplyDelete
  8. கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் வசித்தபோது இஸ்லாமிய நண்பர்களின் வீட்டு திருமணத்துக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் பள்ளிவாசல் வரை சென்று கலந்துகொண்டதில்லை. காரணம் திருமண நிகழ்வுக்கு வரும் பிற நண்பர்களுடனான அரட்டை. பல நாட்களாக போனில் மட்டுமே பேசிவரும் சில நண்பர்களும் திருமணத்தில் கலந்துகொள்ளும்போது அவர்களுடனான உரையாடல் தவிர்க்க முடியாததாகிறது.

    ReplyDelete
  9. முன்னர்தான் என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தான் விக்கி, 'அண்ணே அந்த கோவிலுக்குள்ள நம்மள எல்லாம் விடுவாங்களான்னே, பாக்கணும் போல இருக்கு' என்று. /// hahahahaa finishing super sir. eppadiyo pathivin mulama oru islam marriage ku poyttu vantha anupavam koduthittirkal.

    ReplyDelete
  10. பல இஸ்லாமிய நண்பர்கள் இருந்தாலும் அவர்கள் இல்ல திருமணத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. நிகழ்ச்சி வர்ணனை அருமை.பார்த்ததை அழகாக எழுத்தாக்கம் செய்துவிட்டாய் சீனு.

    ReplyDelete
  11. //பட்டுப்பாவடைகள் தாவணிகள் என ஒரு கல்யாண வீட்டிற்கு உண்டான எந்த அறிகுறியும் அவ்விடத்தில் இல்லை.//

    இருந்தா மட்டும் இவருக்கு அப்படியே காதல் பூத்து குலுங்கிருமோ? அந்த பொண்ணு கிட்டயும் 'சுஜாதா எழுதுன பொஸ்தகம் படிச்சி இருக்கீங்களா?'ன்னு ஒரு மணி நேரம் பேசத்தானய்யா போற படுவா.

    ReplyDelete
  12. //////சிலநாட்களுக்கு மணப்பெண்ணைக் குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து வேற்று ஆண்கள் யாரும் பார்க்கக்கூடாதாம்.//////. அப்படி ஒரு நடைமுறை இஸ்லாத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அந்த ஊரில் இருக்கலாம்.

    பிரியாணிய பத்தி சொல்லவே இல்லையே பாஸ்????

    ReplyDelete
  13. அருமையான பகிர்வு புரியாணி எப்படிச்சுவை என்று சொல்லவேயில்லை:))

    ReplyDelete
  14. நான் பதிவு தியேட்டரும் தியேட்டர் சார்ந்த இடம் பற்றியதாக இருக்கும் என்று நினைத்து வந்தேன். திருமணமும் திருமணம் சார்ந்த பதிவாகவும் இருக்கிறது. நானும் இதுவரை ஒரே ஒரு முஸ்லீம் கல்யாணத்துக்குத்தான் சென்றிருக்கிறேன்.

    ReplyDelete
  15. அதானே... காலை டிபன் பற்றி மட்டும்தான் சொன்னீர்கள். பிரியாணி மற்றும் என்ன ஸ்பெஷல் உணவு என்று சொல்லவில்லையே? உணவும் உணவு சார்ந்த பதிவும் தனியாக வருமோ! :))))

    ReplyDelete
  16. இப்ப அவுங்களும் காலவெள்ளத்தில் கலந்துக்கிடறாங்க.

    சுட்டியில் முதல் படம் பாருங்க.
    http://thulasidhalam.blogspot.co.nz/2010/04/blog-post_04.html

    ReplyDelete
  17. திருமண நிகழ்வுகள் தாங்கள் கண்ணுற்றதை அழகாய் வடித்தீர்கள்.

    திருமண பதிவுப் புத்தகத்தில் மணமகன், மணமகள் இருவரும் கையெழுத்திட்டார்களா என்ற விவரம் விடுபட்டுள்ளதே, சரியாக கவனிக்கவில்லையோ? (இதைக் குறிப்பிட்ட துளசி டீச்சருக்கு நன்றி!)

    ReplyDelete
  18. ஆஸ்திரேலியாவில் மகனின் முஸ்லிம் நண்பர் திருமணத்தை அவர்கள் தங்கியிருந்த இல்லத்திலேயே ஆஸ்திரேலிய அரசாங்கமே நியமித்த இமாம் வந்ந்திருந்து நடத்திக்கொடுத்தார்..

    பெரிய லெட்ஜர் ஒன்றில் மணமக்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்..

    மணமகனின் பெற்றோர் அரேபியாவில் இருந்து நேரடி ஒளிபரப்பில் மகனின் திருமணத்தை கண்டுகளித்தனர்..
    மணப்பெண் ஆஸ்திரேலிய கிறிஸ்தவர்.. திருமணத்திற்காக முஸ்லீம் மதத்தைற்கு மாறி தொழுகை கற்றுக்கொண்டவர்..
    திருமண் ஏற்பாடுகள் விருந்து எல்லாம் மகனும் நண்பர்களும் கவனித்துக்கொண்ட்னர்.
    கேக் வெட்டினார்கள்... நண்பர்கள் பிரியாணி செய்திருந்தார்கள்..

    எனக்கான சைவ உணவை ஹோட்டலிலிருந்து தருவித்து கொடுத்து உபசரித்த நிகழ்வை மறக்கமுடியாது..!ஜப்பான் நாட்டு பெண் ஒருவர் மாமிசம் சாப்பிடாமல் கூட ஒருவரால் இருக்கமுடியமா என்று ஆச்சரியப்பட்டாள்..

    ReplyDelete
  19. தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக சகோ சீனு,

    ஒரு இஸ்லாமிய திருமணத்தை மிக அழகிய முறையில் தொகுத்து எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.

    //இன்னாரின் மகன் இன்னாரின் மகளை இவ்வளவு கிராம் தாலியுடன் இறைவனின் திருபெயரால் மணமுடிக்கிறார் என்ற வகையில் செல்கிறது அந்த சங்கல்ப்பம்//

    இது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருக்கும் என்று அஞ்சுகின்றேன். அவர்கள் கொடுத்தது மஹர் என்று அழைக்கப்படும், மணமகன் மணப்பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய சம்பிரதாயமாகும். இஸ்லாமை பொருத்தவரை பெண்ணிடம் இருந்து வாங்கும் வரதட்சணைக்கு இடமில்லை. மாறாக, மணமகன் தான் மணப்பெண் கேட்பவற்றை கொடுக்க வேண்டும். இதற்கு பெயர் தான் மஹர். பொதுவாக, இந்தியாவில், தங்க நகைகலாகவே மஹர் கொடுக்கப்படுகின்றது. மஹர் கொடுக்கப்படவில்லை என்றால் இஸ்லாமிய திருமணங்கள் நடத்தப்பட மாட்டாது.

    பெண்கள் தாறுமாறாக மஹர் கேட்பதாலேயே சவூதி போன்ற நாடுகளில் திருமண வயதை தாண்டியும் ஆண்கள் மணம் முடிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதற்காக சவூதி அரசாங்கம் ஆண்களுக்கு பொருளாதாரத்தை அளித்து திருமணம் நடத்தி வைக்கின்றது...

    (தொடர்கின்றது)

    ReplyDelete
  20. //இந்த சமநேரத்தில் மணமகளுக்கு மணமகனின் தாயார் தாலி அணிவித்து விடுவதாக கூறினார்கள்.//

    தாலி போன்ற வைபவங்களும் இஸ்லாம் கூறாது. கலாச்சார தாக்கத்தினால் இது பல்வேறு இஸ்லாமிய திருமணங்களில் நடந்தேறுவது உண்மை. பெண்களிடையே நடைபெறும் இப்பழக்கத்தை அந்நேரத்தில் தடுக்க முடியாது என்பதால் நான் முன்பே எச்சரித்ததையும் மீறி, என்னுடைய திருமணத்திலும் இது நடந்தேறியது. ஆனால் திருமணத்திற்கு பிறகு என் மனைவியை கண்ட முதல் தருணத்திலேயே இதனை கழட்ட சொல்லிவிட்டேன். அவரும் கழட்டிவிட்டார்.

    வஹாபிய கொள்கை (?) என்று பலரும் அழைக்கக்கூடிய, அதாவது இஸ்லாமை அதன் தூய வடிவில் பின்பற்றுவோம் என்று அழைக்கக்கூடியவர்களின் திருமணங்கள் இன்னும் எளிமையாக இருக்கும். மஹர் கொடுத்து பதிவு செய்து சில நிமிடங்களில் திருமணம் முடிந்துவிடும். மணமாலை, பெண்கள் மணப்பெண்ணுக்கு அணிவிக்கும் தாலி என்று எதுவும் இருக்காது. இறைவனின் கிருபையால் அதிகப்படியான இஸ்லாமிய திருமணங்கள் எளிமையான முறையில் நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிக்கின்றது.

    அதே நேரம், துளசி கோபால் அவர்கள் மேலே கூறியிருக்கும் படியாக நடைபெறுவதும் உண்மை. பல முஸ்லிம்களுக்கும் இம்மாதிரியாக (நோட்டிஸ் போஸ்டர் களேபரங்களுடன்) திருமணம் செய்யும் முஸ்லிம்களை கண்டு கோபம் தான் வருகின்றது. முஸ்லிமல்லாதவர்களுக்கு இது ஆச்சர்யத்தை கொடுக்கும், ஆனால் முஸ்லிம்களின் மனநிலை இது தான். சிறு வயதில் இருந்தே மார்க்க கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்ததினால், அதனை தாண்டிய ஒன்றை காணும் போது ஏற்படும் ஆதங்கமாக இருக்கலாம்.

    அழகிய பதிவுக்கு மீண்டுமொருமுறை நன்றிகள்..

    சகோதரத்துவத்துடன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  21. தமிழக முஸ்லிம்களின் திருமணத்தை பார்க்காதவர்களுக்கு நேரடியாக பார்த்த உணர்வை தந்தது இந்த போஸ்ட்...

    குட் ட்ரை.. குட் அட்டம்ப்ட் சீனு...

    ReplyDelete
  22. தமிழக முஸ்லிம்களின் திருமணத்தை பார்க்காதவர்களுக்கு நேரடியாக பார்த்த உணர்வை தந்தது இந்த போஸ்ட்...

    குட் ட்ரை.. குட் அட்டம்ப்ட் சீனு...

    ReplyDelete
  23. நான் போன வருடம் தான் ஒரு இஸ்லாமிய தோழியின் திருமணத்திற்குச் சென்றேன்.

    அந்தக் கல்யாணத்தில் நான் வியந்தது....
    நடு இரவில் தான் தாலி கட்டினார்கள்.
    அதைக் கேமராவில் படம் பிடித்தது கூட
    பெண் கலைஞர் தான். ஆண்கள் பெண்கள்
    இருக்கும் இடத்திற்கு வரக்கூடாதாம்.

    வீடு நிறைய ஜனம் இருந்தும் மிகவும் அமைதியாகத் திருமணம் நடந்தது.

    பார்த்ததை அழகாக பதிவாக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சீனு.

    ReplyDelete
  24. மனித நேயம் வளர அருமையான கட்டுரை

    ReplyDelete
  25. இந்து திருமணங்கள் அத்தனையும் ஒரு காலத்தில் எப்படி கோயிலில் மட்டுமே நடந்ததோ அதுபோல இஸ்லாமியத் திருமணங்களும் ஒரு காலத்தில் பள்ளிவாசலில் வைத்து மட்டுமே நடத்தப்பட்டன,,, இப்போது காலச் சூழலில் மாறி திருமண அரங்குகளில் நடைபெறுகிறது. ஒரு சில திருமணங்கள் மட்டுமே பள்ளிவாசலில் நடைபெறுகிறது! மண்பத்தில் திருமணம் நடந்தாலும் பள்ளிவாசலில் உள்ள மதகுரு பள்ளிவாசல் ரிஜிஸ்டரோடு வந்துவிடுவார்.

    இஸ்லாமியத் திருமணங்களில் மிக முக்கியமானது மணமகன் மற்றும் மணமகள் இருவரிடம் சம்மதம் கேட்பதும் சம்மதித்ததும் அதை உறுதி செய்ய பள்ளிவாசல் ஏட்டில் திருமண ஒப்பந்தம் எழுதி இருவரிடமும் கையெழுத்து பெறுவதும் ஆகும்.

    மற்றபடி தண்ணீர், பால் அருந்துவது போன்ற சடங்குகள் இஸ்லாமிய மதநெறிகளில் இல்லை. அந்தப் பகுதியின் கலாச்சாரமாக இருக்கலாம்! இது போன்ற சிற்சில நிகழ்வுகள் பகுதி சார்ந்து வேறுபடும்.

    last but not least... a very good write-up :)

    ReplyDelete
  26. நண்பர் ஆஷிக் இஸ்லாத்தில் தாலி அணிவது இல்லை. அது இங்குள்ள கலாச்சார வழக்கம். அதை கடைபிடிக்கக்கூடாது என்று கூறி இருக்கிறார். குரானில் தாலி கட்ட வேன்டும் என்று எப்படிச் சொல்லப்படவில்லையோ அதேபோல தாலி கட்டக்கூடாது என்றும் சொல்லப்படவில்லை. தாலி என்பது இங்குள்ள மண்ணின் பழக்க வழக்கம். இந்து மத சடங்கு அல்ல. காரணம் இந்துக்களின் 4 வேதங்களிலும் தாலி அணிவது பற்றி எதுவும் இல்லை. அதேபோலத்தான் வாழை மரம் கட்டுவதும் இஸ்லாத்தில் இல்லை. எனவே கட்டக்கூடாது என்று வஹாபியக்கொள்கைவழி நண்பர்கள் கூறுவார்கள். குரானில் திருமணத்தில் வாழைமரம் கட்டக்கூடாது என்று எங்கும் இல்லை. குரான் செய்யக்கூடாது என்று சொல்லும் ஒரு விசயத்தை செய்வது மட்டுமே பெரும் தவறு. வாழை மரம் இந்துகள் திருமணத்தில் கட்டும்முறை அதனால் நாம் கட்டக்கூடாது என்று ஒரு வஹாபிய நண்பர் என்னிடம் சொன்னார். திருமண வீட்டில் வாழைமரம் கட்ட வேண்டும் என்று 4 வேதத்திலும் சொல்லவில்லை. அது இந்துக்களின் பழக்கமாக இருந்தால் ஏன் தமிழகம் தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இந்துக்கள் தங்கள் திருமணங்களில் வாழைமரம் கட்டுவதில்லை? காரணம் அது மதப் பழக்கம் இல்லை.. இந்தப் பகுதி மனிதர்களின் கலாச்சார வழக்கம். மதம் செய்யக்கூடாது என்று சொல்லாத ஒன்றை அது மண்ணின் பகுதி சார்ந்ததாக இருப்பின் எந்த மதத்தினரும் கடைபிடிப்பதில் தவறே இல்லை...
    பொதுவாக வஹாபிகள் ஒரு மண்ணின் கலாச்சாரத்தை அந்தப் பகுதியின் பெரும்பான்மை மதத்தோடு இவர்களே இணைத்து தங்களைக் குழப்பிக்கொண்டு பொது நீரோட்டத்தில் இருந்து தங்களைத் துண்டித்துக்கொள்வார்கள்.


    கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... அப்துல்லா வீட்டு திருமணத்தில் வாயிலில் வாழைமரம் கட்டப்பட்டு இருக்கும். அய்யனார் வீட்டு திருமணத்தில் வாயிலில் வாழைமரம் கட்டப்பட்டு இருக்கும். அப்துல்லா வீட்டு திருமணத்தில் அலங்காரத்திற்கு மாவிலை தோரணம் தொங்கும். அய்யனார் வீட்டு திருமணத்திலும் அலங்காரத்திற்கு மாவிலைத் தோரணம் தொங்கும். வாசலில் நின்று பார்த்தால் அப்துல்லாவீடா அய்யனார் வீடா என்று கண்டுபிடிக்க முடியாது. உள்ளே சென்று பார்த்தால் மட்டுமே வித்யாசம் தெரியும். மனிதர்கள் வீட்டின் உள்ளே எப்படியும் வித்யாசமாக இருக்கலாம். ஆனால் வாசலில் ஒரே கலாச்சார மனிதர்களாக காட்சி அளிப்பதே பரஸ்பர சகோதரத்துவத்தை, அன்பை, நெருக்கத்தை அதிகரிக்கும். மதத்திற்கும், கலாச்சாரத்திற்குமான வேறுபாட்டை அனைவரும் உணரவேண்டும்.

    ReplyDelete
  27. யோவ் சீனு.. பாத்தியா எங்க அண்ணனை? ஒமக்கு போட்டியா ஒரு பதிவு போட்டு இருக்காரு. உன்னோட கல்யாணத்துக்கு அண்ணன்தான் சிறப்பு விருந்தாளி. இல்லைன்னா சாப்பாட்டுல செங்கல் வச்சி பிரச்னை பண்ணுவோம்.

    ReplyDelete
  28. அண்ணன் அப்துல்லா,

    அதிகபட்சம் அல்ல, குறைந்தபட்சம் உங்கள் கருத்தை சீர்தூக்கி பார்த்தாலே அதிலுள்ள முரண்பாடுகளை அறிந்துக்கொள்ள முடியும். எனினும் இத்தளத்தை விவாத இடமாக மாற்ற நான் விரும்பவில்லை :-) :-)

    நன்றி,

    சகோதரத்துவத்துடன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  29. சகோதரர் சீனுவின் பதிவு மிகவும் அருமை அடுத்த கலாச்சாரத்தை அறிந்துகொள்வதும் முக்கியம் என்பதை அழகான முறையில் பதிந்துள்ளார் வாழ்த்துக்கள் மிஸ்டர் seenu .

    அபுபஹீம் ரியாத்

    ReplyDelete
  30. சகோதரர் சீனுவின் பதிவு மிகவும் அருமை

    ReplyDelete
  31. நான் போயிருந்த முஸ்லீம் நண்பர் வீட்டு கல்யாணத்துலயும் கல்யாண மண்டபம், ஃபோட்டோ எடுத்தல், மணமேடை அலங்காரம், ரிஷப்ஷன், மொய் கவர் கொடுத்தல்லாம் இருந்துச்சு. மேள தாளமு, ஹோமம் மட்டும்தான் மிஸ்ஸிங். ஒருவேளை நீங்க போனது கிராமத்து திருமணம்ன்றதால அடக்கி வாசிச்சாங்களோ என்னமோ!!??

    ReplyDelete
  32. still so many things are yet to know for our beloved friends, in ISLAM.just keep on searching don't stop from this article.ISLAM oru matham illay.ISLAM oru markam.
    orvanay valthuvathilerundu avanku vendi prathipathu vary migavam elimayane murailyel pirar manam nogamal edhthu koorvathu than ISLAM.

    ReplyDelete
  33. மணப்பெண் சம்மதித்தால் தான் திருமண ஏற்பாடு நடைபெறும். மண்மகளுக்கு பொறுப்பாக இருக்கும் தந்தையிடமும் மண்மகளை பொறுப்பேற்க இருக்கும் மணமகனிடமும் ஒப்புதல் வாய்மூலமாக பெறப்பட்டு பெண்ணுக்கு கொடுக்க மணமகன் கொடுக்கவேண்டிய சீதனம்(மஹர்) குறிப்பிடப்பட்டு அதற்கு சாட்சியாக இருவரை பதிவு செய்வதுடன் திருமணம்/ நிக்காஹ் முடிந்துவிடுகிறது. இது தான் இஸ்லாமிய திருமண சட்டம்.. மணமகனுக்காக மணமகளை அலங்கரித்துவைப்பதும் அன்று முதல் உள்ள இஸ்லாமிய வழக்கம். திருமணத்தின் பின் தன் மணமகனால் அவரது வசதிக்கேற்ப உறவினர், அயலவர், நண்பர்களை இணைத்து விருந்தளிக்க வேண்டும். அது தான் வலீமா.

    இதற்கு மேலாக நடக்கும் ஒவ்வொரு சடங்கும் முஸ்லிம்கள் தாம் வாழும் பிரதேசங்களில் பிற கலாச்சாரங்களை பார்த்து தம்மில் சேர்த்துக்கொள்வதால் வரும் வேறுபாடுகள். வெவ்வேறு பகுதியில் வாழும் முஸ்லிம்கள் வெவ்வேறு சடங்குகளை சேர்த்துக்கொள்வார்கள். இதில் பல சடங்குகள் இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானது. எந்தப்பகுதியில் இருந்தாலும் இஸ்லாமிய சட்டத்திற்குட்பட்டு நிக்காஹ் செய்ய விரும்பும் இளைஞர்கள் முதல் கூறிய ஒப்பந்தத்துடன் முடித்துக்கொள்கிறார்கள்..

    ReplyDelete
  34. //மேலும் இஸ்லாம் வழக்கப்படி சிலநாட்களுக்கு மணப்பெண்ணைக் குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து வேற்று ஆண்கள் யாரும் பார்க்கக்கூடாதாம்// இது அவர்களாக சேர்த்துக்கொண்ட சடங்கு தான். இஸ்லாத்தில் அப்படியெல்லாம் இல்லை. எப்போதுமே நெருங்கிய உறவினரை தவிர பெண்கள்/ ஆண்கள் தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்கள் தவிர எதிர்ப்பாலினரை பார்ப்பது/பேசுவது கூடாது.. தவறான புரிதலை நீக்கவே சுட்டிக்காட்டினேன்.

    ReplyDelete
  35. அண்ணன் மெட்ராஸ் பவனாரின் முதல் கருத்தை நான் கண்ணை மூடிக்கொண்டு ஆமோதிக்கிறேன் ...

    தோழர் சீனு எழுத்து நடை விறு விறு முன்னேற்றம் .. அடுத்த புத்தக திருவிழாவில் நான் எழுத்தாளர் சீனுவிடம் அவரின் புத்தகத்தை வைத்துக் கொண்டு கையெழுத்து வாங்க வரிசையில் நிற்பதாக கண்ட கனவு நனவாகிடும் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  36. வித்தியாசமான பதிவு. பொதுவாக இதுபோன்ற அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்படவேண்டியவையே. நன்றி.

    ReplyDelete
  37. இவ்வாறான் பதிவுகளும் மூலமே உலகத்தை நாம் கற்கின்றோம். மிக்க நன்றி

    ReplyDelete
  38. நான் எனது தோழியின் திருமணத்திலும் அவரது சகோதரியின் திருமணத்திலும் கலந்து கொண்டிருக்கிறேன். மண்டபத்தில் தான் நடந்தது - ஆனால் பள்ளி வாசலில் இருந்து அதன் முக்கிய பிரமுகர் கல்யாண ரெஜிஸ்டர் கொண்டு வந்திருந்தார். அதில் மணமகன் - மணம்கள் இருவருமே கையொப்பம் இட்டார்கள். அக்குடும்பத்தில் நானும் ஒருவனாகவே பழகிவிட்டதால் பல விஷயங்களை அருகில் இருந்து பார்க்க முடிந்தது.

    நீங்கள் பார்த்த திருமணத்தினை அழகாய் விவரித்து இருப்பது நன்று.

    ReplyDelete
  39. இந்த பதிவு இன்றுதான் என் கண்ணில்பட்டது.பார்த்ததை மிக அழகாக உங்கள் தெளிவான எழுத்துகளால் பதிவாக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete