29 Nov 2012

சுஜாதா - கணேஷ் - வசந்த்


கையில் இருக்கும் காசு பேருந்தில் டிக்கெட் வாங்கவே சரியாய் போகும் காலத்தில் எங்கிருந்து காசு கொடுத்து நாவல்கள் வாங்கிப் படிப்பது. விகடனில் அவ்வப்போது வரும் சிறுகதைகளும் நூலகத்துப் புத்தகங்களும் மட்டுமே என்னிடம் சுஜாதா கதைகளை கூறி வந்தன. காரணம் சுஜாதா கூற்றில் நாங்கள் மத்யஸ்த்தர்கள். யாராவது ஒருவர் அதிசியமாக சுஜாதா புத்தகம் வாங்கி இருந்தால் அதைப் படிப்பதற்கு பெருங்கூட்டமே காத்திருக்கும். இந்த நேரதில் தான் சுஜாதா விகடனில் கணேஷ் வசந்த்தை வைத்து நாவல் ஒன்று எழுதினார், என் நியாபகம் சரி என்றால் அந்த நாவலின் பெயர் சில்வியா. ஒவ்வொரு வாரமும் விகடன் கையில் வந்ததும் அதை முதலில் படித்து விட்டு தான் மற்றதைப் படிக்கத் தொடங்குவோம்.  




சுஜாதா என்னும் பிரம்மா படைத்த வரலாற்று நாயகர்கள் தான் கணேஷ் வசந்த். இவர்களை அவ்வளவு நிஜப்படுத்தி இருப்பார், ரத்தமும் சதையும் கலந்த நம்முள் அந்த கற்பனைக் கதாபாத்திரங்களை ரத்தமும் சதையும் உள்ள வக்கீல்கள் என்று நம்ப வைத்தார். அவர்களை கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று எழுத வருத்தமாய் உள்ளது. அவர்களை நிஜம் என்றே மனம் நம்புகிறது. ஆன்மாவின் வலி உலக இன்னல்களைக் பேச வைத்தவரின் ஆன்மா அண்ட வெளியில் கலந்த பின்பு கூட கணேஷும் வசந்தும் நம் போன்றவர்களின் எண்ணங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். 



சென்னையும் இணையமும் ஒன்று கூடிய சம காலகட்டத்தில் சுஜாதாவைப் பற்றி தேடித் தேடி படிப்பேன், பாலஹனுமான் அவர்களின் தளம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, கணேஷ் வசந்த் என்றே தனி வலைபூ ஒன்று கூட உள்ளது, அதிலும் மூழ்கி முத்து இல்லை இல்லை பொக்கிசங்கள் பலவற்றை அறிந்து தெரிந்து கொண்டாயிற்று. இணைய உலகுடன் இணைந்த காலகட்டம் என்பதால் வாத்தியாரின் மின் புத்தகங்களைத் தேட ஆரம்பித்தேன், அந்தத் தேடலில் சிக்கிய முதல் புத்தகம் "". வெகுநாட்களுக்குப் பின் படித்த சுஜாதாவின் கணேஷ் வசந்த் நாவல் அது. அறிவியல் உளவியல் சைக்கோ என்று விளையாடி இருப்பார். படிக்க படிக்க வெகு சுவாரசியமாக சென்று கொண்டிருந்த கதை , அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும் பொழுது அதில் கணேஷ் வசந்த் வருவார்கள் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை, அவர்கள் வந்ததும் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. கீ போர்டின் டவுன் ஆரோ பக்கங்களை இன்னும் வேகமாகப் புரட்ட ஆரம்பித்தது. கணேஷ் வசந்தின் மீது ஈர்ப்பு வர காரணமான மிக முக்கியமான நாவல் அது.  படித்து முடித்ததும் எனது பேஸ்புக்கில் நான் போட்ட ஸ்டேடஸ் 


புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது நாயகன் மண்டைக்குள் ஏற்படும் சப்தம் நம்முளும் ஏற்படும் பொழுது தொடங்குகிறது சுஜாதா என்னும் எழுத்தாளனின் வெற்றி...  ஆ!






தற்கு அடுத்ததாக எனக்குக் கிடைத்த மின்புத்தகம் கொலையுதிர் காலம், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மிரட்டலுடன் ஆவிகள் நிறைந்த அமானுஷ்ய நாவல் எழுதி இருப்பார் சுஜாதா, ஒவ்வொரு வரிகளும் அற்புதமாக இருக்கும், முழுவதுமாக கணேஷ் வசந்தின் ரசிகன் ஆனேன், இந்த காலகட்டத்தில் ஒரு சிறிய அலுவலகத்தில் வேலைக்கும் சேர்த்திருந்தேன், புத்தகங்கள் வாங்குவதில் இருந்த பிரச்னை விலகியது.  முதலில் வாங்கிய புத்தகம் வசந்த் வசந்த், புத்தகத்தின் பின் அட்டையிலேயே எழுதி இருப்பார்கள், கணேஷ் வசந்த் நாவலில் ஹாஸ்யம் உச்சத்தைத் தொட்ட கதை என்று, அதற்கு கொஞ்சமும் மாறமால் எழுதி இருப்பார், இப்படி ஒவ்வொரு புத்தகமாக கூறிக் கொண்டே சென்றால் நிச்சயம் இது ஒரு அரைகுறை புத்தக விமர்சனமாக மாறி விடும் அபாயம் உள்ளது, நான் படித்த அத்தனை சுஜாதா புத்தகங்களுக்கும் விமர்சனம் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, அதனால் புத்தகங்ளில் இருந்து வெளி வருகிறேன்.






ணேஷை கட்டை பிரமசாரியாகவும், வசந்தை கட்டைகளைத் தேடும் பிரமச்சரியாகவும், இருவரின் பண்பு குண நலன்களில் அவர்களை எதிர் எதிர் துருவத்தில் வைத்தும் அழகு பார்த்திருப்பார் வாத்தியார். அமைதியை புத்தகங்களைத் தேடும் ஜீனியஸ் கணேஷ், உலகில் இருக்கும் அத்தனை கெட்ட வஸ்துவையும் பரிசோதித்துப் பார்க்கத் துடிக்கும் வசந்த். கணேஷ் வசந்த் இடையில் இருக்கும் நட்பு நகர்வுகளை அவ்வளவு  ழகாக ழமாக யல்பாக ர்ப்புடன் ற்சாகத்துடன் ட்டச்சதுடன் ழுத்தில் ற்றி வ்வொருவருக்கும் ர் ஒளடகம் ஒரு நாளைக்கு என்ற கணக்கில் பல கணேஷ் வசந்த் நாவல்களை எழுதி உள்ளார். ஒளடகம் என்றால் மருந்து. சுஜாதாவின் கணேஷ் வசந்த் கதைகள் நிச்சயம் என்னைப் பொறுத்தவரையில் அருமருந்து. எப்பொழுது எல்லாம் மனசோர்வு ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் உற்சாகம் தரும் மருந்து. (மேலே எழுதி இருக்கும் அந்த வாக்கியம் உயிர் எழுத்துக்களின் தொடர்ச்சியாக முயன்று பார்த்தது, பிழை குறைந்து தான் இருக்கும், இருந்தும் கொஞ்சம் மொக்கை போன்று இருந்தால் மன்னித்து அருளவும்.)


பெரும்பாலான நேரங்களில் கணேசை புத்திசாலியாகவும், சில நேரங்களில் கணேஷே வியக்கும் அளவிற்கு புத்திசாலியாக வசந்தையும் காட்டி இருப்பார். ஒரு இடத்திற்கு சென்றால் நாம் எப்படி எல்லாம் மதிக்கப்பட வேண்டும் என்று நினைப்போமோ அப்படி எல்லம் கணேஷ் வசந்தை  செதுக்கி இருப்பார்.  உ.ம் காவல் நிலையங்களில் ராஜேந்திரன் பெயர் உச்சரிக்கப்படுவது. 1970களில் இருந்து கணேஷும் வசந்தும் வாசகர்களுடன் பயணிக்கத் துவங்கிவிட்டனர், காலத்திற்கு ஏற்ப தம்புசெட்டி தெருவில் இருந்த அலுவலகமும் அவர்கள் காரும் மாறியதே தவிர அவர்கள் மாறவே இல்லை அவர்களுக்கு திருமணமும் ஆகவில்லை. இன்றும் ஏதோ ஒரு இடத்தில யாரோ ஒருவருக்கு கவுண்டர் கொடுக்கும் இளைஞனைப் பார்த்தால் வசந்த் நியாபகம் தான் வருகிறது.





சில்வியா என்ற நாவலில் வரும் கீழ்க்கண்ட உரையாடலில் ஒற்றை வார்த்தையில் கணேசையும் வசந்தையும் வேறு படுத்திக் காட்டி இருப்பார் சுஜாதா.

கணேஷ், உங்க நேரத்தை வீணாக்க விரும்பலை. நீங்க ரிசப்ஷன்ல அவளுடைய அழகான பக்கத்தைதான் பார்த்திங்க !

க : ஸ்கூல் பையன் மாதிரி இருந்தாங்க . கூல்!

அவளுடைய மற்றொரு பக்கத்தை நீங்க பார்க்கலை

வ : ஒரு பக்கமே எதேஷ்டம் சார்

அவளுக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் இருக்கு 


அப்படின்னா? என்றான் வசந்த் தேநீரைக் கலக்கிக் கொண்டு.

அப்படியா என்றான் கணேஷ்


அப்படின்னா? என்றான் வசந்த் தேநீரைக் கலக்கிக் கொண்டு. அப்படியா என்றான் கணேஷ். இந்த ஒற்றை வரியை மட்டும் பலமுறை படித்து மனதிற்குள் சுஜாதாவை எண்ணி வியந்து பெருமைப்பட்டு பின் அடுத்த வரிக்கு தாவினேன். இந்த நாவலில் பைபோலர் டிஸ் ஆர்டர் பற்றி பல வருசங்களுக்கு முன்பே எழுதி விட்டார் சுஜாதா, சமீப்த்தில் வெளிவந்த மூணு படத்தில் ஏதோ முதல்முறை ஒரு வியாதி பற்றி குறிபிடுவது போல கூறி இருந்தார்கள். சுஜாதா காலம் கடந்தவர் என்பது நிச்சயம் உண்மையே. 


ஒரு இடத்தில கணேஷ் வசந்தை இப்படி கூறுகிறான் "கலைந்த தலை, அழுக்கு ஜீன்ஸ், கையில் சிகரெட் மனதில் பெண்கள், வேலை என்று வந்துவிட்டால் தீவிரமாக களத்தில் இறங்கும் இந்த இளைஞனை நான் எப்படிக் கண்டுபிடித்தேன்". என்ன ஒரு ரசிப்புத் தன்மை. வசந்த் வசந்த் நாவலில் கதை எழுதிய விதமே அதிஅற்புதமாக இருக்கும், அத்தனை அற்புதமான காட்சி நகர்வுகள் மற்றும் வித்தியாசங்களை புனைந்து இருப்பார். இருவருக்கும் எதாவது வித்தியாசமாக செய்து கொண்டே இருக்க வேண்டும், ரிஸ்க் எடுக்க வேண்டும், மரணத்தை தொட வேண்டும், சில கதைகளில் அவர்கள் செயல் படும் விதம் ஒரே மாதிரியானதாய் இருந்தாலும் சுஜாதாவின் எழுத்துகளால் மிக அழகாக அந்த நகர்வுகளை விளக்கி இருப்பார். 





பெரும்பாலான கணேஷ் வசந்த கண்டுபிடித்த குற்றங்களைப் படித்துவிட்டேன், மொத்தம் எத்தனை கணேஷ் வசந்த் புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்ற கணக்கு தெரியவில்லை, தெரிந்தால் விட்டுப் போனதையும் படித்து முடிக்க வசதியாய் இருக்கும். கணேஷ் வசந்த் இடம் பெரும் மொத்தக் கதைகளின் தொகுப்பு உங்களிடம் இருந்தால் கொஞ்சம் தாருங்கள் உங்களுக்கு கோடி நமஸ்காரம். 


பதிவிற்கு சம்மந்தமில்லாத தகவல் : எனது தளத்திற்கு முதலில் பெரிதினும் பெரிதுகேள் என்று தான் பெயர் வைக்க நினைத்தேன், ஆனால் அதை விஜய் டிவி உபயோகித்துக் கொள்ளவே, திடங்கொண்டு போராட ஆரம்பித்து விட்டேன். இதை நான் ஏன் இங்கு குறிப்பிட்டேன் என்று எங்கள் பிளாக் ஸ்ரீராம் சாருக்குப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறன். 


விளம்பரம்



திருமணம் முடிந்த புது மாப்ள மீண்டும் கலக்க ஆரம்பித்து உள்ளார். மின்வெட்டு பற்றிய அவரது புலம்பல்கள், இடி அமீன் பற்றிய தகவல்கள் உங்கள் பார்வைக்காக.






28 Nov 2012

"பதில்" வினவு தளம் - நம்மால் நமக்காக நாமே


னைவருக்கும் இனிமையான வணக்கங்கள். சம்பளம் கொடுக்கும் முதலாளி இந்த மாதம் வேலையும் கொஞ்சம் அதிகம் கொடுத்துவிட்டதால் வலையுலகம் பக்கம் வருவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. என்றும் தொடர்ந்து உற்சாகமாக இயங்கும் வலையுலகிற்கு மீண்டும் ஒருமுறை உற்சாகமான வணக்கம் வைத்துவிட்டு பதிவிற்குள் நுழைகிறேன் உங்களோடு...

பிரபல பதிவர் பிளாக்கர்நண்பன் அப்துல் பாசித்தும் அவரைப் போலவே பிரபல பதிவரான கற்போம் பிரபு கிருஷ்ணாவும் இணைத்து தொடங்கியுள்ள புதிய தளம் "பதில்". பதில் என்னும் தளத்தின் பெயரே அதற்கான பதிலை தெளிவாக சொல்லிவிடுகிறது, இருந்தும் இந்தப் பதிவை நீட்டி முழக்க வேண்டிய கட்டாயத்திற்கு என்னை நானே தள்ளிக் கொண்டதால் இந்தத் தளத்தினைப் பற்றி கொஞ்சம் விரிவாக பின்வரும் வரிகளில்.

சுஜாதவின் ஏன் எதற்கு எப்படி, மதனின் ஹாய் மதன்ஸ் கேள்விகளில் இடம் பெரும் கேள்விகளில் இருந்தே தமிழனின் ஞானத்(!) தேடலை நாம் வியக்கலாம். இது வரை நாம் கேள்விபட்டிராத வார்த்தைகளையெல்லாம் கோர்த்து கேள்வியாகக் கேட்பார்கள், சுஜாதாவும் மதனும் அவற்றிக்கான விடையை எங்கிருந்தாவது தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்துவிவார்கள். சமீபத்தில் என்னைக் கவர்ந்த ஒரு ட்வீட் "விக்கிபீடியா இல்லாத நாட்களில் தமிழகத்தின் விக்கிபீடியாவாக இருந்தவர் சுஜாதா". 

நிச்சயமாக உலகம் முழுவதுமே கேள்விகளாலும் பதில்களாலும், பதில் தேடுவதற்கான பதில் கேள்விகளாலுமே நிரம்பியுள்ளது. கேள்வி கேட்பவன் ஞானம் பெறுகிறான், பதில் கொடுப்பவன் ஞானத்தை விருத்தி செய்கிறான் என்ற பழமொழியை நிச்சயம் ஏதோ ஒரு நாட்டில் யாரோ ஒரு மகான் சொல்லி இருப்பார். அதனால் கேள்வி பதில் என்பது நம் வாழ்வு சார்ந்தது, வாழ்தலுக்கான தேடல் சார்ந்தது. இன்றைய இணைய உலகத்தில் கேள்விகளை விட பதிலே நிரம்வி வழிகின்றன இருந்தும் அவை அனைத்தும் தமிழில் கிடைக்கப் பெறுகின்றனவா என்பது தான் முக்கியம். 


                                       

ணையவெளியில் தொழில்நுட்பம் சார்ந்த நமது சந்தேகங்களைத் தீர்க்க உதவும் விதமாக பாசித்தும் பிரபுவும் இணைத்து தொடங்கியுள்ள தளம் "பதில்". உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் கேள்வியாக்கலாம், மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். சுருக்கமாக லிங்கன் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் நம்மால் நமக்காக நம்மைக் கொண்டு நடத்தப்படும் ஒரு தளம் தான் கேள்வி "பதில்" தளம். கணினி இணையம் மொபைல் ப்ளாக் இவை சார்ந்த கேள்விகளும் இத்துறை சார்ந்த வேலைவாய்ப்பு பற்றியும் உங்கள் கேள்விகளையும் பதிலையும் தரலாம்.

த்தனை பெரிய தமிழ் இணைய வெளியில் நிச்சயம் பல்லாயிரக்கனக்கான தமிழர்களுக்கு பலவிதமான தொழிநுட்பத்தில் சிறந்த புரிதலும் அனுபவமும் இருக்கும் அவர்களின் வழிகாட்டுதல்கள் தேவைப்படுபவர்களுக்கு தேவையான நேரத்தில் சென்று சேரலாம். அந்தப் பல்லாயிரக் கணக்கானவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம், யாரோ ஒரு நண்பரின் கேள்விக்கு பதில் தரலாம், அதனால் இப்படி ஒரு தளம் திறந்த இரு நண்பர்களுக்கும் இந்த முயற்சிக்கும் முதலில் வாழ்த்துக்கள்.

                                           
மிழில் குழுமம் என்றும் ஆங்கிலத்தில் forum என்றும் சொல்லுவார்கள். இங்கு நடைபெறுவது முழுவதும்கேள்வி பதிகலாகவும் விவாதங்களாகவும் இருக்கும். சம காலத்தில் பேஸ்புக் ட்விட்டர் கூட விவாதகளங்கள் தான் ஆனால் அவற்றை முழுமையான கேள்வி பதில் தளங்களாகக் கருத முடியாது, காரணம் இவற்றில் முறையான கோர்ப்பு கிடையாது, மற்றும் இவை பொழுதுபோக்கு சார்ந்தவை. மேலும் கேள்வி கேட்டு பதில் அளிப்பது ஒன்றும் புதிய முயற்சி இல்லை காலம் காலமாக இணையம் அறிந்த ஒன்று தான், இதனை நான் மறுக்கவில்லை, ஆங்கிலத்தில் தொழில் நுட்பம் சார்ந்த விவாத களங்களும் கேள்வி பதில் தளங்களும் அதிகம், ஆனால் தமிழில் தொழிநுட்பம் சார்ந்த விவாத களம் இதுவரை யாராலும் முறையாக நடத்தப் படவில்லை என்பதே உண்மை. அந்தக் குறையை போக்கும் விதமாக இரு இளைஞர்கள் வழிநடத்துகிறார்கள் என்றால் அவர்களை நாம் ஊக்குவிப்பதில் தவறு இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதில் தளத்திற்கு செல்லுங்கள் உங்கள பங்களிப்பை அளியுங்கள். 

                          

தில் தளத்தில் உங்களுக்கு என்று ஒரு கணக்கு தொடங்குகள், வாருங்கள் பயணத்தில் இணைவோம். சில நாட்களுக்கு முன் ஹாரியின் வலைப்பூவில் எங்கள்பிளாக் ஸ்ரீராம் சார் நினைவுபடுத்திய பாரதியின் இந்த வரிகள் நியாபகம் வருகிறது "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்". எட்டுத்திக்கில் இருக்கும் கேள்விகளுக்கும் கலைச் செல்வமாக பதில் தளம் மாற எனது வாழ்த்துக்கள் மற்றும் பங்களிப்புகள். 

"மிழில் இது புது முயற்சி இல்லை என்றாலும் சிறந்த முயற்சியாக கொண்டு செல்ல நினைக்கிறோம்" என்ற பிளாக்கர் நண்பனின் வார்த்தைகளை நான் வழிமொழிகிறேன். 


விளம்பரம் 

காமெடிகும்மி என்னும் வலைப்பூவில் சீனு என்னும் பெயரில் எழுதும் ஒரு பதிவரின் அமானுஷ்ய தொடர் படிக்கத் தவறாதீர்கள்.  

14 Nov 2012

துப்பாக்கி - இது விமர்சனமே அல்ல


நான் கடைசியாக அரங்கில் பார்த்த விஜய் படம் போக்கிரி என்று நினைக்கிறன் ( நண்பன் விதி!விலக்கு ) அதற்குப் பின் திருட்டு பென்டிரைவில் கூட விஜய் படம் பார்த்தது இல்லை. அந்த அளவிற்கு கலை சேவை ஆற்றியவர் தான் நமது இளைய தளபதி. எனக்கு விஜயை பிடிப்பதற்குக் காரணம் அவரது தெனாவெட்டான பார்வையும் கிண்டல் கலந்த பேச்சும், பிடிக்காமல் போனதற்குக் காரணம் டெம்ப்லேட் படங்களும் காஸ்ட்யும் கூட மாற்றாமல் நடிக்கும் விஜயும் அதை ஆதரித்த விஜய் ரசிகர்களும் ( என்னை அஜித் ரசிகன் என்று சொல்வோருக்கு எனது வேண்டுகோள் பில்லா டூ விமர்சனத்தையும் படித்து விடுங்கள்.

ங்கே அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையில் இருக்கும் சிறு வித்தியாசம், அஜித் ரசிகர்கள் பழகிப் போன தோல்வியை காமெடியாக எடுக்கப் பழகிக் கொண்டார்கள் விஜய் ரசிகர்கள் இன்னும் சீரியசாகவே எடுத்துக் கொள்கிறார்கள்).அஜித்தும் விஜயுமே தங்களை நண்பன் என்று சொல்லிக் கொள்கிறார்கள் ரசிகர்கள் தான் அடித்துக் கொண்டு __கிறார்கள் என்பது மட்டுமே இங்கே வேதனையான விஷயம். (அஜித்தா விஜயா என்ற விவாவதம் பொழுதுபோக்காக இருக்கும் வரை தவறு இல்லை , என்ற அளவில் என் பகுத்தறிவு உள்ளது என்பதே உண்மை. ) 


ன்னும் இருபது நாட்களுக்கு திரையரங்கம் பக்கம் திரும்பி கூட பார்க்க முடியாது, துப்பாக்கி பற்றிய ஒருவரி விமர்சனங்கள் உடனே பார்க்கத் தூண்டியது. TICKETNEW.COM BOOKMYSHOW  என்று எத்தனையோ டிக்கெட் வியாபாரிகளின் தளங்களைத் திறந்து பார்த்து விட்டேன் வியாழக் கிழமைக்குக் கூட நான் எதிர்பார்த்த காட்சிக்கு டிக்கெட் கிடைக்க வில்லை. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய படம் என்பதால் சென்ற தீபாவளி அன்று வெளியாகிய ஏழாம் அறிவை அதிகாலை மூன்று மணிக்கு எல்லாம் வெறிக்க வெறிக்கப் பார்த்து வெறி கொண்டு "தமிழன்டா தாங்குவண்டா" என்ற பஞ்சுடன் அரங்கில் இருந்த பஞ்சை எல்லாம் பிய்த்து எரிந்து கொண்டு வெளியில் வந்தேன். இருந்தும் விஜய்க்காக இல்லாவிட்டாலும் முருகதாசுக்காக துப்பாக்கி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 


றுதியாக நண்பன் ஆன்டோவிற்கு போன் செய்தேன், அவன் ரூம் மேட் ஹாரிஸின் அசிஸ்டென்ட் என்பதால் அவர் மூலமாக இரவு காட்சிக்கு முயற்சி செய்வதாகக் கூறினார், நானும் எனது இணைய வழித் தேடலை விடவில்லை டிக்கெட்டும் கிடைத்த பாடில்லை, இரவு எட்டு மணிக்கு போன் செய்தார் "உதயம் தியேட்டர்ல டிக்கெட் இருக்கு கிளம்பி வா", சென்னைப் புறநகரில் இருந்து சென்னைக்குள் செல்வது நேற்று சவாலாக ஒன்றும் இல்லை காரணம் சென்னையின் அணைத்து சாலைகளுக்கும் நேற்று விடுமுறை விடப் பட்டிருந்தது, இருந்தும் எனக்கிருந்த ஒரே சவால் எங்கு இருள் நிறைந்த சாலைகள்.

தயம் முன் நின்று போன் செய்தேன் " தம்பி எஸ்கேப் ல டிக்கெட் இருக்கு, என் ரூம்க்குவா நாம எஸ்கேப் போயிறலாம்" என்றார், டிக்கெட்டே கிடைகாதவனுக்கு எஸ்கேப்பில் டிக்கெட் என்றால் கேட்கவா வேண்டும். கே கே நகரில் இருந்து பழக்கப்படாத சாலை வழிகள், அண்ணா சாலையை அடைவதற்குள் சென்னை மேப்பை கரைத்துக் குடித்துவிட்டோம்.

இனி எஸ்கேப் :

ஸ்கேப் திரையரங்கமே கோலாகலமாக இருந்தது சென்னையின் அத்தனை செல்வந்தர்களும் தங்கள் செல்வங்களுடன் இங்கே குழுமி இருந்தார்கள், "இந்த கூட்டதுலையே சுமாரா டிரஸ் பண்ணிருக்க ரெண்டு ஜீவன் நாம தான்" என்றேன் நான், "அது கூட பரவா இல்ல டா எவளுமே சுமாரா கூட டிரஸ் பணலையே என்ன பண்றது!" என்றார் ஆண்டோ. தலை முதல் கால்வரை இழுத்துப் போர்த்தி இருந்த ஆண்களும், கணவன் மட்டும் காணும் அழகை என்ற இலக்கணத்தை மறந்த பெண்களும் ஏராளம் தாராளம். சென்னையின் அல்ட்ரா மாடல் சற்றே அதிகம் தலைவிரித்து ஆடியது. "அது சரி இவங்க எல்லார் வீட்லயும் ஸ்ட்ரிக்ட் ஆகிட்டா சென்னையும் தென்காசி மாதிரி ஆயிரும் டா" என்றார் ஆண்டோ இதற்க்கு நான் சந்தோசப்படுவதா இல்லை வருத்தப்படுவதா. திரைப் படத்திற்கு யு சர்டிபிகேட் திரை அரங்கிற்கு ஏ சர்டிபிகேட் என்பது சாலச் சிறந்ததாக இருக்கும்.

இனி துப்பாக்கி :

டைட்டில் கார்டில் வரும் டூ டி வடிவமைப்பு பழைய காலப் படங்களை நினைவு படுத்தியது, இருந்தாலும் புதுமையாக இருந்தது, முதல் பாடலில் ஐந்தாவது நிமிடத்திலேயே லேசாக சலிப்பு ஏற்பட ஆரம்பித்தது இருந்தும் திரைகதையில் தொய்வு இல்லை, கூகிள் பாடலைத் தவிர மற்றவை எல்லாமே வேஸ்ட். அரங்கில்  இருக்க முடியவில்லை, பாய் தலையணை கொண்டு சென்றிருந்தால் தூங்கி இருப்பேன். 

டத்தில் எவ்வளவோ லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் அனைவரும் கேட்பது மிலிட்டரி மேன் ஏன் பிரஞ்ச் பியர்ட் வச்சி இருகாரு என்பது தான்? இதற்கு இரண்டாவது காட்சியிலேயே இயக்குனர் தெளிவாக்கியிருபார்.

விஜய் பாமிலி : என்னப்பா புதுசா தாடி எல்லாம் 
விஜய் : அது ஒன்னும்மில்ல வீட்டுக்கு வரேன்ல அதான் 

( இதை எல்லாம் லாஜிக்மிஸ்டேக் என்று சொல்லாதீர்கள், சிபி அண்ணனுக்கும் சேர்த்து தான்.) 

டிங்க டிங்க டிங்க டிங்கடிங்க டிங்கடிங்க டிங்க டிங்க டி என்ற பாடல் வரிகளில்! வெகு நாளைக்கு பின் விஜய் தனக்கே உரித்தான ஸ்டப் போட்டது போன்ற உணர்வு. அடியாட்கள் மற்றும் வில்லன்களை அடிக்கும் காட்சிகளில் விஜய் காண்பிக்கும் உடல்பாவனை வெகுவாக ரசித்தேன். படம் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம், எஸ்கேப்பில் நான் நேற்று கண்ட கோலத்தைப் பார்த்ததும் காஜல் அவ்வளவு ஒன்றும் கிளமாராக உடை அணியவில்லை என்பதால் நிச்சயம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கலாம். 


ல்லாம் இருந்தும் ஏழாம் அறிவு சூர்யா போன்று இறுதிக் காட்சியில் நீட்டி முழக்கி வசனம் பேசுவது சிரிப்பு தான் வருகிறது, தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றும் பணியில் இருந்து விஜயகாந்த் ஓய்வு பெற்றபின் அதற்க்கு நல்ல மாற்றனாக(!) விஜய் கிடைத்திருப்பது இந்தியா செய்த புண்ணியம். ( காவலன் அதை தொடர்ந்து துப்பாக்கி). நிச்சயம் இது முருகதாஸ் படம் இல்லை இதில் இருக்கும் டிவிஸ்ட்டுகளை எல்லாம் காப்டன் எப்போதோ செய்து காட்டிவிட்டு சென்றுவிட்டார், அதனால் தீவிரவாதிகளை ஒழிக்க இன்னும் சிறப்பான ட்விஸ்ட்களைக் கையாண்டிருக்கலாம். 

டம் பார்த்துவிட்டு வந்து விஜய் ரசிகனான எனது நண்பன் சொன்னது "மாப்ள படம் மங்காத்தா மாதிரி தாறுமாறா இருக்குல". இதை விட அஜித் ரசிகனான எமக்கு வேறு என்ன வேண்டும். 

மங்காத்தாடா ............

பின்குறிப்பு : எந்தவொரு தனிமனிதனையும் ஆபாசமாகத் தாக்கும் பின்னூட்டங்களுக்கு இங்கே எழுத்துச் சுதந்திரம் கிடையாது :-) )

விளம்பரம் :

ஹ்மான் இசையமைப்பில் கடல் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலான "நெஞ்சுக்குள்ள" பாடலும் பாடல் வரிகளும் பாடல் விமர்சனங்களும் பதிவாக படிக்க ஆசையா  டி என் முரளிதரன் சார் அவர்களின் எழுத்தில் உங்களுக்காக 




7 Nov 2012

சென்னை விமான நிலையம் : பறத்தலும் பறத்தல் நிமித்தமும்

சிறுவயதில் விமானம் செல்லும் சத்தம் கேட்டால் 90 டிகிரியில் இருக்கும் தலையை 180 டிகிரிக்கு கொண்டு வந்து சத்தம் வரும் திசைக்கு ஏற்ப தலையை சுழற்றி வான்வெளியில் சிறு புள்ளியாக தோன்றும் அந்த எந்திரப் பறவையைக் கண்டு பிடித்துவிட்டால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதில் கிடைத்திருக்கும். சுட்டெரிக்கும் வெயில், உச்சியில் இருக்கும் சூரியன், அண்ணாந்து பார்க்கமுடியாத அளவிற்கு கண்கள் கூசும் பிரகாசம் இவை எல்லாவற்றையும் மீறி நம்மை அண்ணாந்து பார்க்கச் செய்யும் சக்தி விமானம் என்ற மனித படைப்பிற்கு மட்டுமே இருக்க முடியும் என்பது என் எண்ணம். 



"அங்க பாருல, அந்தாப் பறக்கு பாருல" சிறுபுள்ளியாகப் பறக்கும் விமானத்தைப் பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பான் என்னுடன் விளையாண்டு கொண்டிருக்கும் நண்பன். அவன் கண்களுக்குத் தெரிந்த விமானத்தை நானும் பார்க்காவிட்டால் தூக்கம் வராது, அவன் பார்த்த விமானத்தை நமக்குக் காண்பிக்கா விட்டால் அவனுக்கும் தூக்கம் வராது. ஒருவேளை நாம் பார்த்திராவிட்டாலும் பார்த்ததாகச் சொல்லியாக வேண்டும், இல்லை என்றால் அடுத்த முறை விமானம் பார்க்கும் வரை சொல்லிக் காண்பித்துக் கொண்டே இருப்பான். சமயங்களில் தனக்குப் பின் இருகோடுகளை வரைந்து கொண்டே செல்லும் ஜெட்டை ஓடிக் கொண்டே துரத்திச் சென்ற நாட்களும் உண்டு, வானத்தைப் பார்த்துக் கொண்டே யார் மீதாவது முட்டி அடிபட்டுக் கொண்ட சம்பவங்களும் உண்டு. 



விமானம் பற்றி நினைவு கூறும் பொழுது நெடுநாளைக்கு முன்பு பார்த்த குறும்படம் ஒன்று நினைவிற்கு வருகிறது, படத்தின் பெயர் தெரியவில்லை, ஆனால் ஐந்து நிமிடத்திற்குள் அற்புதமான ஒரு மேசேஜ் சொல்லி இருப்பார். படத்தில் வசனங்கள் கிடையாது, விமானம் பறக்கும் சத்தம் மட்டுமே இசை. மூன்று கோணங்களாக நகரும் திரைக்கதை. விமானம் செல்லும் சத்தம் கேட்டு விமானத்தை தன் கைக் குழந்தைக்கு காட்டத் தயாராகும் தாய், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் விமானத்தின் சத்தம் கேட்டு அதைப் பார்க்கத் தயாராகும் காட்சி, மூன்றாவது ஒரு சிறுவன், விமானத்தின் சத்தம் கேட்டதும் எங்கோ ஓடுவான், படம் முழுவதும் எதையோ தேடிக் கொண்டு ஓடுவான், விமான சத்தம் அருகில் வர அருகில் வர இன்னும் வேகமாய் ஓடுவான், விமானத்தைப் பார்க்கும் அவசரத்தில் அவன் ஓட்டுவது போன்று காட்சிகள் நகரும், இறுதியில் இடுந்து போன ஒரு கட்டிடத்தினுள் ஒடி, மறைவான இடம் தேடி ஒளிந்து கொள்வான், தன இரு காதுகளையும் தன கைகளால் இருக்க மூடிக் கொண்டு விமான சத்தம் கடக்கும் வரை நடுங்கிக் கொண்டு இருப்பான், இங்கிருந்து விரியும் காட்சி சொல்லும் அவன் ஒரு ஈழத்துச் சிறுவன் என்று, விமானம் பறந்தாலே குண்டுகள் விழப் போகிறது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் ஈழத்து நிலைமையை மிக அற்புதமாகப் படமாக்கி இருப்பார்கள். 


சிங்காரச் சென்னையில் விமானம் செல்லும் சத்தம் கேட்டு அண்ணாந்து பார்த்துவிட்டால் நம்மை ஊர்நாட்டான் என்று சொல்லிவிடுவார்கள். அந்த அவச் சொல்லுக்குப் (!) பயந்தே பலரும் அந்த சுகத்தை அனுபவிப்பது இல்லை. இருந்தும் ஒய்யாரமாக செல்லும் அந்தப் பறவையைப் பார்த்தே ஆகவேண்டும். இல்லை என்றால் எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைக்காது. முதன்முறை  சென்னை  வந்த பொழுது மீனம்பாக்கத்தைகடந்த நேரம் வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த விமானங்களைப் பார்த்த பொழுது, தென்காசி பேருந்து நிலையத்திற்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை முகத்தில் ஏற்பட்ட ஆச்சரியக்குறியைத் தவிர!


சென்னைக்கு வந்த பின் விமானம் என்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது, அடிகடி கேட்கும் சத்தம் பழகிப் போய்விட்டது. இருந்தும் சிறுபுள்ளியாக பார்த்த விமானத்தை அதன் முழு உருவமும் தெரியும் அளவிற்குப் பார்ப்பது நல்ல முன்னேற்றம் தான்! அமெரிக்கா சென்ற சித்தி பையனை வழியனுப்புவதற்காகத் தான் முதல் முறை விமான நிலையம் சென்றேன். நுழைவுக் கட்டணம் அறுபது ருபாய். விமான நிலையத்தில் ஏழையும் ஏழை அல்லாதவனும் வித்தியாசப்படுவது இந்த அறுபது ரூபாயில் தான். 

வெளிநாடு செல்லும் தன் மகனை கணவனை அண்ணனை அக்காவை ஏதோ ஒரு உறவு முறையை வழியனுப்பும் பொழுது வித்தியாசமே இல்லாமல் அனைவருக்கும் வருவது சில துளிகள் கண்ணீர் தான். உலகம் சுற்ற செல்பவர்களைக் காட்டிலும் பணி நிமித்தம் பறப்பவர்கள் தான் மிக அதிகம் இருகிறார்கள். ஆயா வேலைக்கு செல்லும் அம்மா வயதுள்ள பெண்கள், வீட்டுவேலைக்கு செல்லும் இள வயது பெண்கள், எப்படியாவது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று செல்லும் கனவுகளைத் தொலைத்தவர்கள் அல்லது தொலையாத கனவுகளைத் தேடிச் செல்பவர்கள் என்று பறத்தலும் பறத்தல் நிமித்தமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். 


சென்னை விமானநிலையம் சர்வேதச விமான நிலையம் என்பதால் பல்வேறுபட்ட மனிதர்களை காணலாம், வெள்ளையர்களையும் கறுப்பர்களையும் செவ்விந்தியர்களையும் திறந்த வாயை மூடமால் வேற்றுக் கிரக மனிதர்கள் போல் பார்த்துக் கொண்டிருப்பதால் இதுவும் ஒரு மனிதக் கண்காட்சி சாலை தான். வெள்ளைக்காரி கருப்பு சுருட்டை ரசித்து இழுத்து புகைப்பதை பார்க்கும் பொழுது ஹாலிவூட் படத்தை நேரில் பார்ப்பது போல் தான் உள்ளது. விமான நிலைய இரண்டாவது மாடியில் இருந்து ரன்வே நடவடிக்கைகளை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை லைவாக பார்க்கலாம். பைக் பார்க்கிங் செய்ய பதினைந்து ருபாய், கார் பார்க்கிங் செய்ய அநியாயம் 120 ருபாய். உள்ளே கிடைக்கும் சுவை இல்லாத அந்த காபி டி தண்ணியை குடிப்பதை விட குடிக்காமல் இருக்கலாம், இல்லை வீட்டில் இருந்து பிலாஸ்கில் எடுத்துச் செல்வது நலம். 



சென்னை விமான நிலையத்தை ரசிக்க நினைத்தீர்கள் என்றால் குடும்பத்துடன் சென்று வாருங்கள், விமானத்திற்கு பெட்ரோல் நிரப்புவது, லோட் ஏற்றுவது, பயணிகள் மற்றும் சரக்கு விமான வருகை புறப்பாடு போன்றவற்றை நேரில் பார்த்து ரசிக்கலாம், அறுபது ரூபாயில் மலிவு விலை சுற்றுலாத் தளம் என்பது பலருக்குத் தெரியாத விஷயம்! விமானங்களில் பறக்க வேண்டும் என்பது தற்காலிக ஆசை, ஒருமுறையாவது சென்னையிலிருந்து மதுரை வரை சென்று வந்து விட வேண்டும். பார்க்கலாம் விமானத்தில் செல்லும் நாள் என்று வரப் போகிறது என்று.


ப்ரொஜெக்டில் சேர்ந்த முதல் நாள் எனது டி எல் கார்த்திக் என்னிடம் கேட்டார் 


"ஸ்ரீனிவாசன் உங்களுக்கு எந்த ஊரு"



"தென்காசி கார்த்திக்"


" எந்தப் பக்கம் இருக்கு"

"திருநெல்வேலி பக்கம்"

" ஓகே உங்களுக்கு மாசம் ரெண்டு நாள் லீவ் கொடுத்த போதும் தான, மதுரை வரைக்கும் ப்ளைட்ல போயிட்டு வந்த்ருவீங்கல்ல "

சீனு  "?????!!!@@@@##$$$$%%%%%"


"நாங்கெல்லாம் இன்னும் அன்ரிசர்வட் கம்பார்ட்மென்ட்ல அடிச்சி புடிச்சி போரவங்கன்னு  உங்ககிட்ட எப்படி சொல்லுவேன் கார்த்திக்" மை மைன்ட் வாய்ஸ். 




விளம்பரம் 

பிளாக்கர் நண்பன் போன்ற  பிரபலங்களின் பதிவுகளுக்கு விளம்பரம் தேவை இல்லை தான், இருந்தும் இந்தப் பதிவை உங்களுக்கு நினைவு படுத்துவதற்காக இங்கே. நீங்கள் இது வரை எழுதிய மொத்தப் பதிவுகள், இனி எழுதப் போகும் போகும் பதிவுகள் அனைத்தையும் ஒரே இடத்தில பட்டியலிட வேண்டுமா படித்துப் பாருங்கள், நிச்சயம் பயனுள்ள தகவல்    

பதிவுகளை பட்டியலிடுவது எப்படி?


ஒரே ஒரு கேள்வி :  விளம்பரம் பகுதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து செல்லுங்கள். நன்றி.  




6 Nov 2012

blogspot.com இல் இருந்து .com மிற்கு - FYI


கடந்த சில நாட்களகாவே சிந்தித்துக் கொண்டிருந்த விஷயம் டொமைன் நேம் வாங்கலாமா வேண்டாமா என்று. பலரிடமும் இது குறித்து கேட்டேன், அனைவரும் சொன்ன ஒரே பதில் வாங்குவதால் லாபமும் இல்லை, வாங்காமல் இருப்பதால் நஷ்டமும் இல்லை. அப்படியும் லாபம் என்று பார்த்தால் blogspot.com தடை செய்யப்பட்ட பகுதிகளில் .com திறக்க வாய்ப்புள்ளது. நியாபகம் வைத்துக் கொள்வது கொஞ்சம் எளிது. 

கணினி என்னும் போதி (போதை) மரத்தின் முன் தவம் செய்து கொண்டிருந்த பொழுது திடிரென்று தோன்றிய ஞானம் என்னுடைய இரண்டு மாத வெட்டிச் செலவும் (ரெண்டு படம் பார்த்த இருநூற்றி ஐம்பது ரூபா காலி)  ஒரு வருட டொமைன் நேமிற்கான பணமும் ஒன்று தான் என்னும் பொழுது வாங்கிவிடலாம் என்று தீர்மானித்து மீண்டும் ஆலோசனை கேட்டகத் துவங்கினேன், வாங்கியும் விட்டேன். 

blogspot இல் இருந்து டொமைனிற்கு மாறுவதால் ஏற்படும் சில பிரச்சனைகளில் ஒன்று நாம் இடும்பதிவுகள் இரண்டு மூன்று நாட்கள் தாமதமாகவே பிறரை சென்று சேரும் என்பது, அதைத் தடுக்க செய்ய வேண்டியது seenuguru.blogspot.com உள் சென்று  என்னை UNFOLLOW செய்து விட்டு SEENUGURU.COM உள் சென்று FOLLOW செய்வதே. சிறிது சிரமம் தான் என்றாலும் சிரமம் பார்க்காமல் அதை செய்யுங்களேன். ஒருவேளை UNFOLLOW செய்து FOLLOW செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எதற்கும் பதில் வைத்திருக்கும் நமது பிளாக்கர் நண்பனின் இந்தப் பதிவை பாருங்கள். 


பொழுதுபோக்கு, எழுத்துப்பயிற்சி, சந்தித்ததையும் சிந்தித்ததையும் எழுதும் ஒரு ஊடகம் என்பதை எல்லாம் தாண்டி வலைபூ அருமையான ஒரு நட்பு வட்டத்தைக் கொடுத்து உள்ளது. 


அந்த நட்பின் நட்பில்  உங்கள்
சீனு 

பின் குறிப்பு 1 : எனக்கு தெரிந்து நான் எழுதிய மிக சிறிய பதிவு இது தான் என்று நினைக்கிறன்.

பின் குறிப்பு 2 :நான் கேட்ட மொக்கை சந்தேகங்களுக்கு எல்லாம் சலிப்பு தட்டாமல் பதில் அளித்த பிளாக்கர் நண்பனுக்கும் ஹாரிக்கும் திடமான நன்றிகள் ( அவிங்க காதுல ரத்தம் வருதுன்னு வசு சொன்னாரு, அப்படியா ?)  

விளம்பரம் 

சிறுகதை எழுதுவதைப் போல வாசிக்கவும் பிடிக்கும், சமீபத்தில் நான் ரசித்த சிறுகதை, வித்தியாசமான கதை எத்ரிபாராத முடிவு என்பதை எல்லாம் கடந்து இவை எதுவும் இல்லாமல் அழகாக ஒரு கதையை நகர்த்த முடியும் என்று என்னை எண்ண வைத்த கதை  ( இதை எழுதியவர் மனநிலை எப்படி என்று எனக்குத் தெரியாது, என் மனதில் தோன்றியது)