28 May 2015

ஒரு பறவையின் கதறல்

அண்ணனின் திருமணத்திற்காக தென்காசி சென்றிருந்த போதுதான் அந்தப் பறவையை முதன்முதலில் பார்த்தேன். வீட்டிற்கு வெளிப்புறம் தொங்கிக் கொண்டிருக்கும் கேபிள் ஒயரின் மீது அமர்ந்து கொண்டு சுற்றுப்புறத்தை வேவு பார்த்துக் கொண்டிருந்தது. வாயில் சிறு குச்சியை வேறு வைத்திருந்தது. உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் இருந்தாலும் தலை மட்டும் கருப்பு நிறத்தில் இருக்க, உபரியாக தலையின் உச்சியில் இருந்த சிறிய பட்டுக்குஞ்சம் அதை இன்னும் அழகாகக் காட்டியது. பின்புறத்தில் நல்ல சிவப்பு நிறத்தில் சில இறக்கைகள். இந்தப் பறவையை இப்போதுதான் முதன்முதலில் பார்க்கிறேன். பெயர் தெரியவில்லை. பறவையை பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த மாமா என்னருகில் வர அவரிடம் 'இது என்ன பறவ' என்றேன். 'தெரியலையே டா, நானும் இப்பதான் மொத தடவ பாக்குறேன். எங்கியாவது மலயில இருந்து வந்திருக்கும்' என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். சிறிதுநேரத்தில் பறவையும் பறந்துவிட நானும் கிளம்பிவிட்டேன். 

இதன் பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறவும் 

அடுத்தநாள் காலையில் வீட்டின் முன்புறம் கல்யாணப் பந்தல் போடும் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடிரென பறவைகளின் கீச்சு குரல் அதிகமாகப் கேட்பது போல் தோன்றவே வெளியில் வந்தேன். பந்தல் போடுபவர் திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தார். கீச்சுக் குரல் எனக்கு மிக அருகில் கேட்டது. 'என்னாச்சுன்னே என்றேன்'. 

'ஒண்ணுமில்ல தம்பி, இந்த செடியில பறவ ஒண்ணு கூடு கட்டி இருக்கு போல, அத கவனிக்காம கிளைய வளச்சிட்டோம். கூட்டில இருந்த குஞ்சு கீழ விளுந்துருச்சு. அதுதான் பயங்கரமா கத்துது' என்ற படியே கீழே கிடந்த அந்த குஞ்சை எடுக்க போனார். இதை கேட்டதும் ஒருநிமிடம் எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கூட்டில் இருந்து கீழே விழுந்த குச்சு நடக்கவும் முடியமால், பறக்கவும் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தது. நேற்றைக்குப் பார்த்த அதே பறவையின் தோற்றம். நேற்று அதைப் பார்த்தபோது அதன் வாயில் இருந்த இரை நியாபகத்திற்கு வந்தது. அந்நேரம் என்னைப் பார்த்ததும் 'எங்கே நான் கூட்டினை கண்டுபிடித்து விடுவேனோ என்ற பய உணர்ச்சியில் என் கண்ணில் இருந்து மறைந்து பின் நான் போனதும் வந்திருக்க வேண்டும். 


கீழே தவித்துக் கொண்டிருந்த அந்த பறவைக் குஞ்சை எடுக்கப் போனவரின் மிக அருகில் ஏதோ ஒன்று மின்னல் வேகத்தில் வந்து மறைய வெடுக்கென தலையை உயர்த்தியவருக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. 'என்னாச்சுன்னே' என்றேன். ஏதொ கொத்தின மாதிரி என்று கூறிக்கொண்டே தலையை உயர்த்தினார். மேலே தொங்கிக் கொண்டிருந்த கேபிளில் அதே பறவை. தன் இணையோடு அமர்ந்திருந்தது. அமர்ந்திருந்தது என்பதை விட உணர்ச்சிப் போராட்டத்தில் தவித்துக் கொண்டிருந்தன. அம்மாவின் அருகாமையை உணர்ந்துவிட்ட குஞ்சு மேலும் பெருங்குரலெடுத்து கத்தத் தொடங்கியது. மீண்டும் அவர் அதைத் தொடப்போக மீண்டும் அந்தப் பறவை அவரைத் தாக்க முயல, 'இப்ப என்ன செய்ய' என்பது போல் என்னை நோக்கினார். 

இப்போது அவரோடு வந்தவர்களும் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களும் இந்நிகழ்வை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் 'சனியன கொன்னுட்டு வேலையைப் பாருடே' என்றதும் எனக்கு சுள்ளென ஏறியது. 'அண்ணே அதுக்கு ஒண்ணும் ஆகாம பார்த்துக்கோங்க' என்றேன். 'நான் என்ன செய்ய தம்பி, கூட்டுல விடலாம்னு நெனக்கேன், அது கொத்த வருது, நான் என்ன செய்ய' என்றார். இந்நேரம் மெதுவாக நடந்தும் கொஞ்சம் தாவியும் அருகில் இருந்த கரண்ட் கம்பத்தின் மீது ஏற முயன்று. செண்பக செடியின் மீது ஏறி அமர்ந்து கொண்டது அந்தக் குஞ்சு. தன் குஞ்சு என்ன செய்கிறது என்பதையே கவனித்துக் கொண்டிருந்த தாய்ப்பறவை வேகமாக அதன் அருகில் போய் அமர்ந்துகொள்ள இன்னும் அதன் பரிதவிப்பு அதைவிட்டு அன்றிருக்கவில்லை. அதுவும் அதன் இணையும் க்கீரிச்சிக் கொண்டே இருந்தன. 

அம்மாவை எதிர்பார்த்து காத்திருக்கும் குஞ்சு
'அண்ணே அதோட கூடு எங்க இருக்கு' என்றேன். கிளை நொடிந்துபோன குரோட்டன்ஸ் செடியில் விழுவோமா மாட்டோமா என்ற நிலையில் தொங்கிக் கொண்டிருந்த கூட்டைக் காண்பித்தார். அதைக் கூர்ந்து கவனித்தால் அதனுள்ளும் ஒரு குஞ்சு. தன் தாயின் வருகையை எதிர்பார்த்து 'ஆ' வென வாயைத் திறந்தபடி காத்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் பார்த்து செஞ்சிருக்க வேண்டியதுதான என்றேன். 'அங்கன போய் கூடு கட்டும்னு யாருக்கு தெரியும்' என்றார். அதுவும் சரிதான். சிட்டுக்குருவி கூடுகட்ட வேண்டுமென வீட்டின் வாசலில் சித்தி ஒரு பெரிய அட்டைப் பெட்டியைத் தொங்கவிட்டுள்ளார். குருவியோ அட்டைப் பெட்டியை விட்டுவிட்டு அதன் மேற்புறத்தில் கூட்டினை கட்டியுள்ளது. அது எங்கு கூடு கட்ட வேண்டும் என்பது அதன் விருப்பம். நாமா முடிவெடுக்க முடியும்.

பறவைகளின் வாழிடங்களை கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் செய்துவிட்டதால் ஏற்பட்ட வினைப்பயன் தான் இதுவெல்லாம். தனக்கு கொஞ்சமும் சம்மந்தமும் இல்லாத, கொஞ்சம் கூட உறுதி இல்லாத குரோட்டன்ஸ் செடியில் தனது வாழிடத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது பெயர் தெரியாத அந்தப் பறவை. இதுநாள் வரை கண்ணில் தென்பட்ட வேப்பமரங்கள், ஒட்டு வீடுகளின் அடைசல்கள் என தனக்குத் தோன்றிய இடங்களில் எல்லாம் கூடு கட்டிய சிட்டுக்குருவியோ இன்று தன வாழிடங்களை கான்க்ரீட் அரக்கனிடம் ஒப்புக் கொடுத்துவிட்டு அட்டைப்பெட்டியின் மேற்புறம் ஒடுங்கியபடி தன் இனத்தை விருத்தி செய்து கொண்டுள்ளது. 

கல்யாண வேலைகள் ஆயிரம் இருந்தாலும் 'சனியன கொல்லு' என்று கூறிய அந்த நபர் ஏடாகூடமாக ஏதாவது செய்துத் தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்ற சோகத்தில் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். தாய்ப்பறவை அந்த குஞ்சின் அருகிலும், இணைப் பறவை கேபிளின் மீது அமர்ந்தபடியும் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. அவைகளுடைய எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும் என்பதை அவதானித்த்துப் பார்த்தால் அவற்றின் வாழ்க்கைப் போராட்டத்தை எவ்வளவு கொடுமையாக்கி இருக்கிறோம் என்பது புரிகிறது. இவ்வளவுக்கும் மத்தியில் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை அதன் பின் இருக்கும் போராட்டத்தை சமாளித்துக் கொண்டிருகின்றன என்பதே பெரிய விசயம்தான். கூட்டினுள் இருக்கும் குஞ்சு பசியில் திறந்த வாயை மூடாமல் தனக்கான இரையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு எப்படியாவது இரையை ஊட்டிவிட வேண்டும் என்ற பதபதப்பில் இரண்டு பறவைகளும் அல்லாடிக் கொண்டிருந்தன.

தாய்ப்பறவை சிறிது ஏமாந்த சமயத்தில் வெளியில், வெயிலில் பாடுபட்டுக் கொண்டிருந்த அந்தக் குஞ்சினை லாவகமாக எடுத்து கூட்டினுள் வைத்தார் அந்த அண்ணா. இப்போதுதான் நிம்மதியே வந்தது. அதன்பின் சரிந்துபோன அந்த கிளையில் ஒரு கயிறைக் கட்டி ஜன்னலோடு சேர்த்துக் கட்டியபின் கூடு கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பதைப் போல் உணர்ந்தோம். இனி கவலை இல்லை. ஆனால் பறவையின் வாழிடம் அங்கிருந்த பூனை ஒன்றிற்கு தெரிந்துவிட்டது. குஞ்சுகளின் கீச்சுக் குரல் கொடுத்த சப்தத்தில் குரோட்டன்ஸ் செடியையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. இயற்கையின் சுழற்சியில் என்னமாதிரியான பாதுக்காப்பும் அதே சமயம் எவ்வளவு ஆபத்துக்களும் நிறைந்திருக்கின்றன என்பதை கண்முன் உணர்ந்த தருணம் அது.

பறவைகளின் உலகம் என்ன? அது எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள எனக்குள் ஆர்வத்தைத் தூண்டிய நிகழ்வு இதுதான். இருந்தும் அதற்குப் பின் வந்த கல்யாண வேலைகள், அடுத்தடுத்த நிகழ்வுகள் என இந்தப் பறவைகளை மறந்தே போனேன். அடுத்தமுறை தென்காசி சென்றபோது பறவையின் நியாபகம் வர நேரே அங்கு சென்றால், அந்த இடத்தில் கூடு இல்லை. கூடு இருந்ததற்கான தடயம் கூட இல்லை. சித்தியிடம் கேட்டேன். 'தெரியலையேம்மா பறந்து போயிருக்கும் போல' என்றார். குஞ்சுகள் ரெண்டும் வளர்ந்திருக்க, இந்த இடம் பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்த பறவைகள் தங்கள் இடத்தைக் காலி செய்துவிட்டு, எங்கோ ஓரிடத்தில் தங்களுக்கான வானத்தில் பறந்து கொண்டிருக்க வேண்டும். அப்படித்தான் நம்புகிறேன்.

அதேநாளின் மாலையில் மொட்டைமாடிக்குச் சென்றேன். அங்கு நின்றுகொண்டு மலையடிவாரத்து நகரமான தென்காசியை கவனித்தல் என்பது அமைதியான தியானம் போன்றது. ஒருபுறம் உயர்ந்து வளர்ந்த மலை. அதன் அடிவாரங்களில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்கள். ஊரின் எந்தப் பகுதியில் இருந்து நோக்கினாலும் தெரியக்கூடிய ராஜகோபுரம். தென்காசியின் அழகை ரசிக்க வேண்டும் என்றால் ஏதேனும் உயரமான மொட்டைமாடிக்கு சென்றுவிடுங்கள். தென்றலின் ஏகாந்தத்தில் திளைத்துக் கொண்டே ரசிக்கலாம். 

மிக உயரத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்த கழுகார்
இப்போது பறவைகளின் பக்கம் எனது கவனம் திரும்பி இருப்பதால். முதல்முறையாக வானில் பறந்து கொண்டிருக்கும் பறவைகளை கவனிக்கத் தொடங்கினேன். வானம் மெல்ல இருட்டத் தொடங்கி இருந்தது. கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்த கொக்கும் நாரைகளும் கிழக்கில் இருந்து மேற்காக சென்று கொண்டிருந்தன. அந்த மாலையில் குறைந்தது சில ஆயிரம் பறவைகளையாவது பார்த்திருப்பேன். அத்தனையும் பள்ளிக்கூடம் முடிந்து வீடு செல்வதைப் போல் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தன. சில பறவைகள் மிகத்தாழ்வான உயரத்தில், ஏன் தைரியாமாக எனது முகத்தின் அருகில் கூட பறந்து சென்றன. 

சிறுவயதில் ட்யுஷன் படிக்கும் போது வானத்தில் கொக்கு பறந்தால் சாந்தி மிஸ் 'அந்தாப் பாருங்கல கொக்கு பறக்கு. கொக்கே கொக்கே பூ போடு. கொக்கே கொக்கே பூ போடுன்னு கை ரெண்டையும் ஆட்டு. கொக்கு பூ போடும். அப்படி உன் நகத்தில பூ போட்டா, உனக்கு புது ட்ரெஸ் கிடைக்கும்' என்று கூறியது நியாபத்திற்கு வந்தது. நாங்களும் கொக்கே கொக்கே பூ போடு என்று விரல்களை வேகமாக ஆட்டிவிட்டு, நகத்தைப் பாப்போம். சில பேருக்கு நகத்தில் புள்ளிகள் தோன்றியிருக்கும். 'ஏ மக்கா உனக்கு கொக்கு பூ போட்ருச்சுடே ட்ரெஸ் கெடச்சிரும். எனக்குத்தான் பூ விழல' என்று கவலைப்பட ஆரம்பிப்போம். கொக்கிடம் பூ கேட்டதற்குப் பிறகு இத்தனை காலமாய் வானத்தையே பார்க்காமல் இருந்திருக்கிறேன் என நினைக்கிறன். 

கூட்டம் கூட்டமாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பறவைகள் / நாரை
பறவைகளின் மீது ஆர்வம் வர இன்னொரு காரணமும் இருக்கிறது. அது சோளிங்கநல்லூர் சதுப்பு நிலப்பகுதியும் அங்கு கூடும் பறவைகளும். வருடத்தின் குளிர்காலத்தில் அந்த சதுப்பு நிலமே கொண்டாட்டமாக இருக்கும். சில ஆயிரம் பறவைகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். இரவுநேரப் பணி முடித்து திரும்பும் வேளைகளில் அங்கேயே என் வாகனத்தை நிறுத்திவிட்டு அரைமணி நேரம் நின்றுவிடுவேன். ராணுவ அணிவகுப்பைப் போல் நடைபோடும் பூநாரைகளை கண்டுகளிக்க வேறு எங்கும் போகத் தேவையில்லை என்ற உண்மை அந்த சாலையில் பயணிக்கும் பெரும்பாலானோருக்குத் தெரியாது என்பதுதான் அவலம்.

மாஞ்சோலைக்கு மேல் இருக்கும் ஊத்தில் தரிசனம் கொடுத்தவர். பெயரை சொல்ல மறந்துவிட்டார். உங்களுக்குத் தெரியுமா?
இப்போது சில மாதங்களாத்தான் இந்த ஆர்வம் அதிகமாக தலை தூக்கி இருக்கிறது. இன்னும் பல பறவைகளின் பெயர் தெரியாது. இப்போதுதான் பறவைகளை கவனிக்கத் தொடங்கி இருக்கிறேன். அடுத்த படி அதற்கு அடுத்த படி என்று இன்னும் எத்தனையோ இருக்கிறது. பார்க்கலாம் எத்தனையாவது படி வரைக்கும் என்னால் உற்சாகமாக மேலே ஏறமுடிகிறது என. 

அவரேதான். தன் இணையோடு
சமீபத்தில் மாஞ்சோலை சென்றிருந்த போது சில மலைவாழ்ப் பறவைகளைக் காண முடிந்தது. உள்ளூர்வாசிகளுக்கே அவைகளின் பெயர் தெரியவில்லை. சிலரிடம் பறவைகளின் பெயரைக் கேட்டால். 'யாரு நீ, நீ ஏன் இதையெல்லாம் கேக்குற', நீ படிச்சவன் தான நீ சொல்லு இதோடப் பேர' என்பதைப் போல பதிலுக்குக் கேட்க ஆரம்பித்தார்கள். நமக்குத் தெரிந்ததெல்லாம் பத்துக்கும் குறைவான பறவைகளே. ஒருகாலத்தில் நம்முடைய வாழிடங்களைச் சுற்றி பலநூறு வகைப் புள்ளினங்கள் வாழ்ந்திருக்கின்றன. 

காட்டு மைனா என்று கூறினார்கள்.
அன்றைக்கு இயற்கையோடு வாழ்ந்த சமுதாயம் பறவைகளின் ஒலியை வைத்தே இன்ன காரணத்திற்காக கூவுகிறது என்று கண்டறிந்தார்கள். நாமோ பறவையின் சப்தமே இல்லாத பரபரப்பின் உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லது வாழ வைக்கப்படுகிறோம். பறவைகள் காட்டுயிர்களின் மீதான கரிசனம் தொடங்க வேண்டும். அந்தப் புள்ளியில் இருந்து இயற்கையை மீட்டெடுக்கத் தொடங்க வேண்டும். இதெல்லாம் நடக்க வேண்டுமானால் பறவையின் கதறலை நிறுத்த முன்வர வேண்டும். அது நம் கையில் தான் இருக்கிறது.

9 May 2015

சிறுசேரி சிப்காட் - வனம் வளர்ப்போம் வளம் பெறுவோம்...!

நேற்று மதியம் பாலா சாரிடம் இருந்து ஒரு அழைப்பு. பதற வேண்டாம் வழக்கம் போல் நான் எடுக்கவில்லை. அலுவலகத்தினுள் நுழையும் போது பாலா சார் அழைத்தது நியாபகம் வர உடனடியாக அவருக்கு அழைத்தால் 

'சீனு எங்க இருக்கீங்க' என்றார். சார் இப்ப தான் ஓடிசி உள்ள நுழையுறேன், நீங்க என்றேன். 

'நான் செண்டர் ஸ்பைன்ல நிக்குறேன், நீங்க உடனே வர முடியுமா, நீங்க நான் எழில் மூணு பேரும் சிப்காட் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வரலாம்' என்றார். 

அழைப்பது பாலா சார். நிச்சயமாக மறுக்க முடியாது. நானோ அலுவலகத்தினுள் நுழைந்தது தாமதமாக, அங்கும் சமாளிக்க வேண்டும். பாலா சாரிடம் என்ன என்னவோ கூறிப்பார்த்தேன். அவரோ 'சீனு நீங்க டைம் எடுத்துகோங்க. ஆனா நீங்க வரணும், நான் அங்கேயே காத்திருக்கேன்' என்றார். வயதில் அனுபத்தில் மிகப்பெரியவர். எனக்காக காத்திருப்பதா? நெவர். சார் நீங்க காத்திருக்க வேண்டாம். நான் உடனே வாறன் என்று கூறிவிட்டேன். 

நேரே பாஸிடம் சென்று 'கார்த்திக் இன்ன விசயத்திற்காக பாலா சார் அழைக்கிறார்' என்றேன். 'அப்போ வெயிட் பண்ணு நானும் வாறன்' என்று கார்த்திக் கூற கிளம்பிவிட்டோம். 

அலுவலகத்தில் ஊழியர்களுக்கு என வடிவமைக்கபட்ட சமூகவலைதளம் ஒன்று இயங்குகிறது. அதில் இயங்கிவரும் தமிழ்வலைப் பூக்கள் குழுமம் வழியாகத்தான் பாலா சாரை தெரியும். பாலா சாரும் எங்கள் பிளாக் கௌதமன் சாரும் முன்னொரு காலத்தில் அலுவலக நண்பர்கள் என்பது கூடுதல் தகவல். 

'சீனு சிப்காட்ல இப்ப மிகபெரிய மாற்றம் தெரியுது பார்த்தீங்களா' என்றார். சிப்காட் நாளுக்குநாள் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு இடம். நேற்று பார்த்ததன் வடிவம் இன்று மாறியிருக்கலாம். நாளை வேறொன்றாக ஆகியிருக்கும். ஆகவே பாலா சார் எதைக் குறிப்பிடுகிறார் என்பது புரியவில்லை. பதில்சொல்லாமல் காத்திருக்க 'சிப்காட்ல பதினஞ்சு அடிக்கு ஒரு மரக்கண்ணு நட்டு பராமரிக்கிறாங்க பார்த்தீங்களா' பாலா சாரின் குரல் பெருஞ்சப்பத்திலும் அமைதியாகக் கேட்கக் கூடியது. 

'ஒவ்வொரு மரத்தையும் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு. எவ்வளவு பெரிய விஷயம். இன்னும் பதினைந்து வருஷம் கழிச்சு பாருங்க சிப்காட் உருவமே மாறி இருக்கும். ஒரு காடு மாதிரி வளந்து நிக்கும். வேம்பு, வாகை தேக்கு இன்னும் நிறைய மரக்கண்ணு நட்டு வச்சிருக்காங்க, அவங்களை நாம பாராட்டியே ஆகணும். இங்க இருக்கிற நாம பாராட்டாட்டா வேற யாரு செய்வாங்க.' என்றார்.

சமீப காலமாக நானும் இந்த மாற்றத்தை கவனித்துக் கொண்டுதான் உள்ளேன். மிகக் கச்சிதமான பராமரிப்பு, வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதம் முன்பே இந்த வேலைகளை ஆரம்பித்து இருந்தார்கள். இப்போது கூண்டு தாண்டி சற்றே உயரமாக வளர்ந்துவிட்டது

சிறுசேரி சிப்காட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அலுவலக்திற்கு ஒண்ணரை கிமீ நடக்க வேண்டும். மேலும் சில கிமீ தொலைவிற்கு நடக்க வேண்டிய அலுவலகங்களும் இருக்கின்றன. வெறும் கான்க்ரீட் காடு மட்டுமே நிறைந்த சிப்காட்டில் நீங்கள் வெயிலுக்கு ஒதுங்க வேண்டும் என்றால் அது உங்களுடைய அலுவலமாக மட்டுமே இருக்க வேண்டும். மொட்டை வெயிலில் இவ்வளவு தூரம் நடப்பவர்களின் கதையை யோசித்துப் பாருங்கள். 

இங்கெல்லாம் ஆட்டோக்காரர்கள் வைத்ததுதான் சட்டம். ஐடி பசங்க தான் கேக்குற காச தருவாங்க என்ற மாயை இன்னும் அவர்களிடம் இருந்து விலகவில்லை. அவர்கள் கேட்கும் காசை ஒரு நாள் கொடுக்கலாம் இரண்டு நாள் கொடுக்கலாம். தினம் தினம் என்றால். இதற்கு வழியில்லாமல் நடந்து செல்வோர்கள் ஏராளமானவர்கள். நடந்து செல்லும் போது நிழலுக்கு வழியில்லாமல் லிப்ட் தருவார்களா என காத்து நிற்கும் பலரையும் பார்த்திருக்கிறேன். இன்னும் சில வருடங்கள் தான் அதன் பின் கவலை இல்லை. இந்த மரக்கன்றுகள் உயிர் தர ஆரம்பித்துவிடும். 



நான், பாலா சார், கார்த்திக், எழில் சகிதமாக சிப்காட் அலுவலகத்தில் நுழைந்தோம். சிறிதுநேர காத்திருக்குப் பின் சிப்காட் நிர்வாக அதிகாரியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழில் ஏற்கனவே சிப்காட் அலுவலக ஊழியர்களிடம் இது குறித்து பேசி வைத்திருக்கிறார் என்பது பின்பு தான் தெரிந்தது. எங்களை அறிமுகம் செய்துகொண்டு அவரிடம் பேசத் தொடங்கினோம். வனச்சரக அதிகாரிகளின் உதவியோடு சிப்காட் முழுவதும் இந்தக் கன்றுகளை நட்டு பராமரிப்பதாகக் கூறினார். எங்களுடைய பாராட்டுக்களையும், சரவணபவனில் இருந்து வாங்கிச் சென்றிருந்த இனிப்பு மற்றும் காரங்களையும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டனர். அவர்களோடு பேச முடிந்தது சில நொடிகள் என்றாலும் நிறைவான ஒரு சந்திப்பாக அமைந்தது. 

மரக்கன்று நடுதல் மற்றும் பராமரித்தல் அரசாங்கத்தின் பணி தான் என்றாலும் அவர்களைப் பாராட்டி ஊக்குவித்தால் அவர்கள் முன்னை விடவும் நன்றாக இயங்குவார்கள். யாரோ அவர்களை பாராட்டிவிட்டு போகட்டும் நமக்கேன் இந்தவேளை என்றில்லாமல் அதற்கு முயற்சி எடுத்த பாலா சாரையும் அவருக்கு துணையாய் நின்ற எழில் சாரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்...

சந்திப்பு முடிந்து அலுவலகம் தொரும்பும் வழியில் பாலா சார் உற்ச்சாகமாக அத்தனை மரகன்றுகளையும் காண்பித்து சிலாகித்துக் கொண்டிருந்தார். இன்னும் சில வருடம் தான் சிப்காட்டில் மரங்கள் செழித்து வளரத்தான் போகின்றன என்ற எண்ணம் கொளுத்தும் வெயிலிலும் கொஞ்சம் குளுமையாகத்தான் இருந்தது.