9 May 2015

சிறுசேரி சிப்காட் - வனம் வளர்ப்போம் வளம் பெறுவோம்...!

நேற்று மதியம் பாலா சாரிடம் இருந்து ஒரு அழைப்பு. பதற வேண்டாம் வழக்கம் போல் நான் எடுக்கவில்லை. அலுவலகத்தினுள் நுழையும் போது பாலா சார் அழைத்தது நியாபகம் வர உடனடியாக அவருக்கு அழைத்தால் 

'சீனு எங்க இருக்கீங்க' என்றார். சார் இப்ப தான் ஓடிசி உள்ள நுழையுறேன், நீங்க என்றேன். 

'நான் செண்டர் ஸ்பைன்ல நிக்குறேன், நீங்க உடனே வர முடியுமா, நீங்க நான் எழில் மூணு பேரும் சிப்காட் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வரலாம்' என்றார். 

அழைப்பது பாலா சார். நிச்சயமாக மறுக்க முடியாது. நானோ அலுவலகத்தினுள் நுழைந்தது தாமதமாக, அங்கும் சமாளிக்க வேண்டும். பாலா சாரிடம் என்ன என்னவோ கூறிப்பார்த்தேன். அவரோ 'சீனு நீங்க டைம் எடுத்துகோங்க. ஆனா நீங்க வரணும், நான் அங்கேயே காத்திருக்கேன்' என்றார். வயதில் அனுபத்தில் மிகப்பெரியவர். எனக்காக காத்திருப்பதா? நெவர். சார் நீங்க காத்திருக்க வேண்டாம். நான் உடனே வாறன் என்று கூறிவிட்டேன். 

நேரே பாஸிடம் சென்று 'கார்த்திக் இன்ன விசயத்திற்காக பாலா சார் அழைக்கிறார்' என்றேன். 'அப்போ வெயிட் பண்ணு நானும் வாறன்' என்று கார்த்திக் கூற கிளம்பிவிட்டோம். 

அலுவலகத்தில் ஊழியர்களுக்கு என வடிவமைக்கபட்ட சமூகவலைதளம் ஒன்று இயங்குகிறது. அதில் இயங்கிவரும் தமிழ்வலைப் பூக்கள் குழுமம் வழியாகத்தான் பாலா சாரை தெரியும். பாலா சாரும் எங்கள் பிளாக் கௌதமன் சாரும் முன்னொரு காலத்தில் அலுவலக நண்பர்கள் என்பது கூடுதல் தகவல். 

'சீனு சிப்காட்ல இப்ப மிகபெரிய மாற்றம் தெரியுது பார்த்தீங்களா' என்றார். சிப்காட் நாளுக்குநாள் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு இடம். நேற்று பார்த்ததன் வடிவம் இன்று மாறியிருக்கலாம். நாளை வேறொன்றாக ஆகியிருக்கும். ஆகவே பாலா சார் எதைக் குறிப்பிடுகிறார் என்பது புரியவில்லை. பதில்சொல்லாமல் காத்திருக்க 'சிப்காட்ல பதினஞ்சு அடிக்கு ஒரு மரக்கண்ணு நட்டு பராமரிக்கிறாங்க பார்த்தீங்களா' பாலா சாரின் குரல் பெருஞ்சப்பத்திலும் அமைதியாகக் கேட்கக் கூடியது. 

'ஒவ்வொரு மரத்தையும் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு. எவ்வளவு பெரிய விஷயம். இன்னும் பதினைந்து வருஷம் கழிச்சு பாருங்க சிப்காட் உருவமே மாறி இருக்கும். ஒரு காடு மாதிரி வளந்து நிக்கும். வேம்பு, வாகை தேக்கு இன்னும் நிறைய மரக்கண்ணு நட்டு வச்சிருக்காங்க, அவங்களை நாம பாராட்டியே ஆகணும். இங்க இருக்கிற நாம பாராட்டாட்டா வேற யாரு செய்வாங்க.' என்றார்.

சமீப காலமாக நானும் இந்த மாற்றத்தை கவனித்துக் கொண்டுதான் உள்ளேன். மிகக் கச்சிதமான பராமரிப்பு, வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதம் முன்பே இந்த வேலைகளை ஆரம்பித்து இருந்தார்கள். இப்போது கூண்டு தாண்டி சற்றே உயரமாக வளர்ந்துவிட்டது

சிறுசேரி சிப்காட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அலுவலக்திற்கு ஒண்ணரை கிமீ நடக்க வேண்டும். மேலும் சில கிமீ தொலைவிற்கு நடக்க வேண்டிய அலுவலகங்களும் இருக்கின்றன. வெறும் கான்க்ரீட் காடு மட்டுமே நிறைந்த சிப்காட்டில் நீங்கள் வெயிலுக்கு ஒதுங்க வேண்டும் என்றால் அது உங்களுடைய அலுவலமாக மட்டுமே இருக்க வேண்டும். மொட்டை வெயிலில் இவ்வளவு தூரம் நடப்பவர்களின் கதையை யோசித்துப் பாருங்கள். 

இங்கெல்லாம் ஆட்டோக்காரர்கள் வைத்ததுதான் சட்டம். ஐடி பசங்க தான் கேக்குற காச தருவாங்க என்ற மாயை இன்னும் அவர்களிடம் இருந்து விலகவில்லை. அவர்கள் கேட்கும் காசை ஒரு நாள் கொடுக்கலாம் இரண்டு நாள் கொடுக்கலாம். தினம் தினம் என்றால். இதற்கு வழியில்லாமல் நடந்து செல்வோர்கள் ஏராளமானவர்கள். நடந்து செல்லும் போது நிழலுக்கு வழியில்லாமல் லிப்ட் தருவார்களா என காத்து நிற்கும் பலரையும் பார்த்திருக்கிறேன். இன்னும் சில வருடங்கள் தான் அதன் பின் கவலை இல்லை. இந்த மரக்கன்றுகள் உயிர் தர ஆரம்பித்துவிடும். 



நான், பாலா சார், கார்த்திக், எழில் சகிதமாக சிப்காட் அலுவலகத்தில் நுழைந்தோம். சிறிதுநேர காத்திருக்குப் பின் சிப்காட் நிர்வாக அதிகாரியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழில் ஏற்கனவே சிப்காட் அலுவலக ஊழியர்களிடம் இது குறித்து பேசி வைத்திருக்கிறார் என்பது பின்பு தான் தெரிந்தது. எங்களை அறிமுகம் செய்துகொண்டு அவரிடம் பேசத் தொடங்கினோம். வனச்சரக அதிகாரிகளின் உதவியோடு சிப்காட் முழுவதும் இந்தக் கன்றுகளை நட்டு பராமரிப்பதாகக் கூறினார். எங்களுடைய பாராட்டுக்களையும், சரவணபவனில் இருந்து வாங்கிச் சென்றிருந்த இனிப்பு மற்றும் காரங்களையும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டனர். அவர்களோடு பேச முடிந்தது சில நொடிகள் என்றாலும் நிறைவான ஒரு சந்திப்பாக அமைந்தது. 

மரக்கன்று நடுதல் மற்றும் பராமரித்தல் அரசாங்கத்தின் பணி தான் என்றாலும் அவர்களைப் பாராட்டி ஊக்குவித்தால் அவர்கள் முன்னை விடவும் நன்றாக இயங்குவார்கள். யாரோ அவர்களை பாராட்டிவிட்டு போகட்டும் நமக்கேன் இந்தவேளை என்றில்லாமல் அதற்கு முயற்சி எடுத்த பாலா சாரையும் அவருக்கு துணையாய் நின்ற எழில் சாரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்...

சந்திப்பு முடிந்து அலுவலகம் தொரும்பும் வழியில் பாலா சார் உற்ச்சாகமாக அத்தனை மரகன்றுகளையும் காண்பித்து சிலாகித்துக் கொண்டிருந்தார். இன்னும் சில வருடம் தான் சிப்காட்டில் மரங்கள் செழித்து வளரத்தான் போகின்றன என்ற எண்ணம் கொளுத்தும் வெயிலிலும் கொஞ்சம் குளுமையாகத்தான் இருந்தது. 

6 comments:

  1. வருங்காலத்தில் மூன்றாம் உலக யுத்தம் நீருக்காக தான் நடக்கும் என் மேதைகள், மெத்தப்படித்தவர்கள் ஆருடம் சொல்லிகொண்டிருக்க, பாலா சார் போன்ற நிகழ்கால மனிதர்கள் முன்னெடுக்கும் இது போலும் முயற்சிகள் தான் பசுமையான எதிர்காலத்தின் அடையாளமாய் இருக்கிறது. வழக்கம் போல செழுமையான நடை , ஆனால் நேரமின்மை பிரச்சனையா சீனு ? எழுத்துப்பிழைகள் சில. மற்றுமொரு மனிதம் நனைக்கும் குளுமையான பதிவுக்கு நன்றி சகா!

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு, அலுவலக நண்பர்கள் இப்படி அமைவது வரம், நமக்கும், உலகுக்கும்

    ReplyDelete
  3. நட்டு வைத்ததோடு இல்லாமல் தொடர்ந்து பராமரிப்பு... பாராட்டுக்கள் அன்பர்களுக்கு...

    ReplyDelete
  4. மரம் நட்டு விட்டு போஸ் கொடுக்கும் பலரை பார்த்திருக்கிறேன்.நட்டதும் மறந்து விடுவார்கள் ஒவ்வோர் ஆண்டும் அதே இடத்தில் மரம் நடுவர்கள்..அதற்கு மாறாக அதன் பராமரிப்பையும் தொடர்ந்து செய்ததற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  5. மரக் கன்றுகள் நட்டு அதைத் தொடர்ந்து பராமரித்து வரும் அவர்களுக்கு எனது பாராட்டுகளும். நல்ல மனம் கொண்ட அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு பூங்கொத்து....

    ReplyDelete
  6. ஊக்குவிப்போம்
    தம +

    ReplyDelete