22 Apr 2015

ரயிலோடும் பாதை

மதுரையைக் கடந்து ரயில் அதன் போக்கில் தடதடத்துக் கொண்டிருந்தது. ஆர்.ஏ.சி-யில் பயணம் செய்யக்கூடிய அளவுக்குத்தான் தென்னக ரயில்வே கருணை காட்டி இருந்ததது. தொடர்ந்து உட்கார்ந்தபடியே பயணிப்பது அலுப்பாக இருந்ததால் மெல்ல புட்போர்டுக்கு வந்தேன். ரயிலோ பேருந்தோ புட்போர்ட்டில் அமர்ந்து பயணிப்பது என்பது ஒரு பறவையின் சிறகில் உட்கார்ந்துகொண்டு பயணிக்கும் உணர்வைத் தரக்கூடியது. நல்ல நிறைஞ்ச அமாவாசை. 

யாருமற்ற இரவில்
துணைக்கு 
நிலவு கூட இல்லை

என நான் எழுத நினைத்த கவிதை ஒன்று நியாபகம் வருகிறது.

பொதிகை எக்ஸ்பிரஸ் மெல்ல வேகம் எடுத்துக் கொண்டிருந்தது. காற்று கொஞ்சம் கொஞ்சமாக பெட்டியை நிறைக்கத் தொடங்க ரயிலும் காற்றும் இணைந்து கவிதை எழுதிக் கொண்டிருந்தார்கள். இதுவே பகல் என்றால் படியில் அமர்ந்து விடலாம். இரவென்பதால் காவல்துறையிடம் இருந்து மிரட்டல் வரக்கூடும். இப்படி நிற்பதற்கே திட்டுவார்கள். அதுவும் சரிதான். இதுபோன்ற தருணங்கள் மனிதனின் மெல்லிய சைக்கோத்தனங்களை சீண்டிப் பார்ப்பவை. ஒருநிமிடம் போல் ஒரு நிமிடம் நாம் இருப்பதில்லை. இங்கிருந்து குதித்தால் என்னவாகும் என உள்ளிருக்கும் சைத்தான் யோசிக்க ஆரம்பித்தது நம்மைத் தூண்டிவிட்டால் நிலைமை என்னாவது. 



குறைந்தது ஒருமணி நேரம் நின்றிருப்பேன். பயணம் கொஞ்சம் கூட அலுக்கவில்லை. கொடரோடு ஸ்டேசன் யாருமற்று பச்சை விளக்கை ஏந்தியபடி வழிவிட்டுக் கொண்டிருந்தது. முன்பெல்லாம் கொடரோடில் அரைமணி நேரத்திற்கும் குறைவில்லாமல் ரயில் நின்று செல்லும். இனி அடுத்த நிலையம் திண்டுக்கல் தான். 

இந்தப் பாதையில் ஒரேஒருமுறை தான் பகலில் பயணித்துள்ளேன். அது கொஞ்சம் கடுப்புடன் கிளம்பி கடுப்பைக் கிளப்பிய பயணம் என்பதால் சுவாரசியம் என்று எதுவுமில்லை. அது ஒரு சிறப்பு ரயில். அண்ணா யுனிவர்சிட்டி எடுத்த அவசர முடிவினால் தென்காசியில் இருந்து உடனடியாகக் கிளம்ப வேண்டிய நிலை. நெல்லையில் இருந்து காலை ஏழு மணிக்குக் கிளம்பிய சிறப்பு ரயில் உருட்டி உருட்டி உருட்டி நள்ளிரவு இரண்டு மணிக்கு மாம்பலத்தில் இறக்கிவிட்டான். பக்கத்தில் இருந்த நபர் என் தோளை பாதிநேரம் சோபாவாக பயன்படுத்திக் கொண்டார். மீதிநேரம் படியில் செலவழித்தேன் என்பதைத் தவிர பெரிதாக ஒன்றும் நியாபகம் இல்லை. அப்போது கையில் குமுதமும் விகடனும் மட்டுமே இருந்தது. தீவிர வாசிப்பாளன் ஆவேன் என யாருக்குத் தெரியும். தெரிந்திருந்தால் யாரையாவது துணைக்கு அழைத்திருக்கலாம். 

கொஞ்சம் கூட வெளிச்சமே கிடைக்காத இருளின் இடைவெளிகளின் ஓடாக ரயில் ஓடிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஆங்காங்கு தெரியும் வெளிச்சப் புள்ளிகள் மக்கள் வாழ்வதற்கான அறிகுறியை காண்பித்துக் கொண்டிருந்தன. எப்போதாவது கடக்கும் சாலை. ஒன்றிரண்டு ரயில்வே கதவு பின் எப்போதும் நிறைந்திருக்கும் இருட்டு அதில் பென்சிலில் கோடு தீட்டியது போல் தெரியும் சித்திரங்கள் என இதுவரைக்கும் பார்க்காத காட்சிகளை வழங்கிக் கொண்டிருந்தது இப்பயணம். 

கொடைரோடு கழிந்த சில நிமிடங்களிலேயே மிகப்பெரிய குன்று ஒன்று குறுக்கிட்டது. பொதுவாகவே மதுரை திண்டுக்கல் எல்லாம் உறக்கத்தில் கழியும் பகுதிகள். எப்படி இருக்கும் என்பதை ஒருமுறை வைகை எக்ஸ்பிரஸில் வரும்போது பார்த்திருக்கேன். அதுவே அலாதியான ஒரு அனுபவம். அதனை முதன்முதலில் எழுதிய ரயிலோடும் பாதையில் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் இந்தக் குன்றைப் பார்க்கிறேன். குன்றுதானே இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா. குன்று தான் சிறப்பே. 

அபிதா-வில் லாசரா ஒரு குன்றைப் பற்றி எழுதி இருப்பார். அந்த நாவலில் அபிதாவுடையது மிகப்பெரிய கிராமம். அந்தக் கிராமத்தின் எல்லையே அங்கு உயர்ந்து வளர்ந்து நிற்கும் குன்றும் அந்தக் குன்றைச் சுற்றி ஓடும் ரயில் பாதையுமே. கிட்டத்தட்ட இதுவும் அப்படி ஒரு குன்று தான். 

முதலில் ரயில் சாதாரணமான வளைவு ஒன்றில் திரும்புவதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன், ரயிலோடும் பாதையில் குறுக்கிடும் வளைவுகள் அற்புதமானவை. நாம் பயணிக்கும் ரயில் முழுமையையும் காட்சிக்குள் கொண்டு வருபவை. நம்மை இழுத்துச் செல்லும் இன்ஜினையும் பார்க்கலாம்; துரத்தி வரும் கடைசிப் பெட்டியையும் பார்க்கலாம். இப்போதும் அப்படித்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். வளைவு முடிவதாகவே தெரியவில்லை. நாற்பது டிகிரி கோணத்தில் ரயில் வளைந்து கொண்டே இருந்தது. என்ன ஒரு அருமையான காட்சி. ஆம் ரயில் அந்தக் குன்றை சுற்றிக் கொண்டிருந்தது. குறைந்தது மூன்று கிமீ தூரத்திற்காவது ரயில் அந்தக் குன்றைச் சுற்றி இருக்கும். அலாதியானதொரு அனுபவம். நல்ல இருள். ரயில் பெட்டியின் ஊடாகக் கசியும் குறைந்த வெளிச்சம். குன்றினைச் சுற்றி ரயிலோடு பாதை. சில அனுபவங்களை நாமாக அமைத்துக் கொள்கையில் சில அனுபவங்கள் தாமாக அமையும். இது நானாக அமைத்துக் கொண்ட அனுவபத்தில் தானாகக் கிடைத்த அனுபவம். 

திண்டுக்கல் நிலையத்தைக் கடந்து ரயில் ஓடத்தொடங்கிய பொழுது தோளில் ஒரு கை. எனக்கு படுக்கை இல்லை என்று கூறிய டிடிஆரின் கை அது. என்னைப் பார்த்து புன்னகைத்தார். நூற்றில் ஒருவர் தான் இப்படி சிரித்த முகத்துடன் வருவார்கள். இவர் அவர்களில் ஒருவர். 'தூக்கம் வரலியா' என்றார். 'நீங்க தான சீட்டு இல்ல சொன்னீங்க' என்றேன். சிரித்தார். 'கதவ அடைக்கப் போறேன், உள்ள போறீங்களா'. என் பதிலுக்குக் காத்திருக்காமல் கதவை அடைக்கத் தொடங்க, என்னை படியிலேயே விட்டுவிட்டு மெல்ல உள்ளே நுழைந்தேன் ரயில் தனக்கான பாதையில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தது. 

10 comments:

  1. அருமையான வர்ணிப்பு.. ரயிலில் உங்களுடன் பயணம் செய்தது போலவே இருந்தது. அழகான நடை. வாழ்த்துக்கள் நண்பரே!

    உங்களுக்கு நேரம் இருந்தால் இதைப் போன்ற எனது ரயில் பயண அனுபவ பதிவை படித்துப் பாருங்கள்

    http://senthilmsp.blogspot.com/2015/03/1.html

    ReplyDelete
  2. இப்போதெல்லாம் பொதிகை ரயில் அதிகமாக குலுங்குகிறது.....
    ஒருவர் அல்ல, பெரும்பாலும் டிடிஆர் கள் சிரிப்பது பொதிகை ரயிலில் மட்டும்தானோ என்று கூட நினைக்க வைத்திருக்கிறார்கள்...

    அழகான பதிவு சீனு...தென்காசி நலமா...

    ReplyDelete
  3. பயணங்கள் அலுப்பதே இல்லை.

    ReplyDelete
  4. அலாதியான அமைதியான அனுபவத்தை ரசித்தேன்...

    ReplyDelete
  5. சிறப்பான வருணணை! கவிதை கூட நல்லாத்தான் இருக்கு பாஸ்! அவ்வப்போது முயற்சிக்கலாமே!

    ReplyDelete
  6. நல்ல அனுபவம், சீனு. எனக்கும் இதுபோல ரயில் போவதைப் பார்க்கப் பிடிக்கும் (ஜன்னல் வழியாகத்தான் பார்ப்பேன்) சிறுவயதில் ஸ்ரீரங்கப் பயணத்தில் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டே வரும்போது கரி கண்ணில் விழ,அம்மா திட்டுவதையும் பொருட்படுத்தாமல் ரயிலை ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிப்பேன்.
    இப்போதெல்லாம் அடிக்கடி ரயிலில் பிரயாணம் செய்கிறேன். வெளியே பார்த்து ரசிக்கும் மனநிலை தான் மிஸ்ஸிங்.

    குன்றைச் சுற்றி ரயில் ஓடுவதை கற்பனையில் பார்க்கும்போதே மனது உற்சாகப் படுகிறது. தும்கூர் டு பெங்களூர் வரும்வழியில் ஒரு சிறிய குன்று இருக்கிறது. ரயில் பாதை அதை ஒட்டியே அமைந்திருக்கும். ஓரிடத்தில் பாலம் அமைக்கப்பட்டு சலசலவென்று நீர் ஓடி வந்து கொண்டிருக்கும். அந்த நீரின் ஆரம்பம் தெரியவே தெரியாது. அந்தக் குன்றின் மீது நீரூற்று இருக்கிறதா என்றும் தெரியாது. அந்த ரயில் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே ஒருமுறை ரயிலில் தும்கூரிலிருந்து பெங்களூருக்கு வந்தேன்!

    ReplyDelete
  7. அற்புதமான அனுபவம்...... முகப்புத்தகத்திலேயே படித்திருந்தாலும் மீண்டுமொரு முறை படித்தேன்.

    ரயில் பயணங்கள் அலுப்பதே இல்லை!

    ReplyDelete
  8. பறவைகளின் சிறகில் உட்கார்ந்து பயணிப்பது - beautiful சீனு.

    ReplyDelete
  9. வர்ணனை அற்புதம்
    அமாவாசை இரவில் கூட வளைந்து செல்லும் ரயிலின் பெட்டிகளை ரசித்த சீனுவின் பார்வை பறவையை விட கூர்மையானது

    ReplyDelete