மதிய வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இது வெயிலின் ஆரம்பம் தான் மெயின் பிக்சர் அக்னி நட்சத்திரத்தின் வருகைக்காக காத்திருக்கிறது. இபோதாவது பரவாயில்லை வெறும் வெயில். அடுத்த மாதம் வெயிலோடு சேர்ந்து வெக்கைக் காற்றும் சேர்ந்துகொள்ளும்.
மேடவாக்கம் மெயின்ரோடை நெருங்கும் போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. பதற வேண்டாம். வண்டி பன்ச்சர். அவ்வளவுதான். இதற்கு முன்பும் பஞ்சராகி இருக்கிறது. அப்போதெல்லாம் வண்டியை தள்ளிக்கொண்டு வந்தால் மெக்கானிக் அண்ணனுக்குப் பிடிக்காது.
'ஒரு கால் பண்ணுணா ஊட்டுக்கு வரப்போறேன், இப்டி தள்ளின்னு வராத' என்று திட்டுவார். இப்போ மெயின் ரோடு வரைக்கும் வந்துவிட்டேன். அரைகிமீ தள்ளினால் கடை வந்துவிடும். வீட்டுக்குப் போவதென்றாலும் அதே அரை கிமீ தள்ள வேண்டும். இருநூறு மீ கூட வண்டியை தள்ள முடியவில்லை. எங்கெல்லாமோ தசை பிடித்து இழுத்தது. அதிலும் இடது பக்கம் தோள்பட்டை காலில் விழுந்து மன்றாடியது. இரண்டு சாத்தான்கள் வண்டியின் பின்புறம் அமர்ந்திருப்பது போலவும், சாட்டையை சுழற்றி சுழற்றி என் முதுகில் அடிப்பது போலவும் இருந்தது அந்த உணர்வு. ஒருவழியாக் வண்டியும் நானும் போதையில் தள்ளாடியபடி மெக்கானிக் ஷெட்டை வந்து சேர்ந்தோம்.
அவரும் தூரத்திலேயே என்னைக் கவனித்திருக்கிறார் போலும் 'ஏன்னா தள்ளினு வந்த' என்றார். 'தோ இங்க வண்டேன்' என்று கூறிமுடிப்பதற்குள் 'ட்யுப் நாசாமாயிரும், அப்புறம் புதுஸு தான் போடணும், இன்னா புள்ளையோ, ஒரு பத்து நிமிஷம் உக்காரு' என்றபடி பக்கத்தில் இருந்த வண்டியை பாகம் பிரிக்கத் தொடங்கினார்.
நல்ல வெயில். வேர்த்து ஒழுகியது. வறட்சி தொண்டையைக் கவ்வியது. எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தால் கடை முழுவதும் இரும்பாக இருந்ததே தவிர தண்ணீர் இருப்பதற்கான அறிகுறி எங்குமே இல்லை. சென்னை முழுவதும் கட்சிக்காரர்கள் மாநகர் முழுவதும் தண்ணீர் பந்தலைத் திறந்திருக்கிறார்கள். அன்றைக்கு ஓ.எம்.ஆரில் வந்து கொண்டிருந்த போது நல்ல தாகம். தூரத்தில் தண்ணீர்ப் பந்தல் இருப்பது தெரிந்து வண்டியை ஓரங்கட்டினேன். வெறும் பந்தல் மட்டும் இருந்தது. மண்பானையைக் கூட காணவில்லை. காற்றும் அனலும் மாறிமாறி அடித்துக் கொண்டிருக்க என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக அங்கேயே இரண்டு நிமிடம் நின்றேன். பந்தலை பிளாஸ்டிக்கில் போட்டிருந்ததால் வெக்கை பிளாஸ்டிக்காக இறங்கிக் கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன் தண்ணீர்ப் பந்தலின் மூலையில் நான்கைந்து குவாட்டர் பாட்டில்கள் கிடந்தன. ஒருவேளை தண்ணீர்ப் பந்தல் என்பதை கட்சிக்காரர்கள் தவறாக நினைத்துவிட்டார்கள் போலும்.
'இங்க பாரு எவ்ளோ பெரிய கோடு' மெக்கானிக் அண்ணா காட்டிய இடத்தில் ட்யுப்பின் ஒருபகுதியில் நீளமான கோடு தெரிந்தது. 'இதுக்குதான் வண்டி பஞ்சரானா உருட்டக்கூடாது, இன்னும் கொஞ்சம் உருட்டிருந்த அப்டியே கீச்சிருக்கும்' தஸ்புஸ் என்றவாறு மூச்சை இழுத்துக்கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அலுவலகத்தில் கொஞ்சம் ஏசியின் அளவு குறைந்தால் கூட 'ரொம்ப சப்பகேட்டிங்கா இருக்கு ஜீ ஏசி ஆப்பரேட்டருக்கு போன் பண்ணுங்களேன்' என்று கூறும் பலரையும் பார்த்திருக்கிறேன். எங்களுக்காவது பரவாயில்லை ஏசியின் அளவு குறைந்தால் ஆப்பரேட்டர் இருக்கிறார். இவர்களுக்கு? நிலைமை மிகவும் பரிதாபம்தான். இப்படியே சமுதாயத்திற்காக கவலைப்பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. ஆனால் நீங்களும் நானும் கவலைப்பட்டு என்ன பிரயோஜனம் கவலைப்பட வேண்டியவர்கள் காதில் பஞ்சை அல்லவா அடைத்திருக்கிறார்கள்.
பைக்கில் இருந்து கண்ணை எடுத்து கொஞ்சநேரம் சாலையை அளக்கத் தொடங்கினேன். மஞ்சள் வெயில் சாலையை கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் நிறைத்திருந்தது. சாலை மொத்தமும் வெயிலுக்கு அஞ்சியபடி நடமாடிக் கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்கமுடிகிறது. இன்னும் அக்னியே வரவில்லை. அதற்குள் இப்படியா. 'இந்த வருஷம் வெயில் கொஞ்சம் அதிகம்தான்' மெக்கானிக் அண்ணா கூறினார். அவர் கடை வாசலில் இன்னமும் வெட்டப்படாத வேப்பமரம் ஒன்று இருக்கிறது. அவ்வப்போது இரக்கத்தின் பேரில் கொஞ்சமாக காற்றை வீசிகொண்டிருந்தது. வேப்பமரக் காத்துக்கு ஈடு இணை வேறெதிலுமே இல்லைதான். யோசித்துப் பார்த்தால் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சாலை ஓர மரங்களையும் ஈவிரக்கம் இல்லாமல் வெட்டி வீழ்த்தி இருக்கிறோம்.
'த்தா ஓஎம்ஆர் என்னா மாதிரியான ரோடு தெரியுமா' என்று பெருமைபட்டுக் கொள்ளும் அதே நேரத்தில் எதுவுமற்ற கூலித் தொழிலாளிகளும் அன்றாடங்காய்ச்சிகளும் சைக்கிள் ஓட்டிகளும் எங்கு ஒதுங்குவார்கள் என்று யோசித்துப் பார்த்தால் அவர்களை நடுத்தெருவில் நடுவெயிலில் நிப்பாட்டி இருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது. ஓ.எம்.ஆர் என்று இல்லை, தமிழகம் முழுக்க இந்தியா முழுக்க இதுதான் நிலை. மார்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள். கட்டிடம் கட்டுபவர்கள், சாலைப்பணியாளர்கள், சைக்கிள் ஓட்டிகள் என்று அத்தனை பேருடைய மரநிழல்களையும் பெரிய பெரிய சாலைகளுக்காக வெட்டி வீழ்த்தி இருக்கிறோம். ஆனால் மீண்டும் மரத்தை நட்டோமா என்றால்?
ஓ.எம்.ஆர் கூட கொஞ்சம் பரவாயில்லை. அருகில் இருந்து வரும் கடல்காற்று வெப்பநிலையை ஓரளவுக்கு சமப்படுத்திவிடும். மாநகரின் மையப்பகுதிகளையும். ஆவடி அம்பத்தூர் போன்ற புறநகர்ப் பகுதிகளையும் நினைத்தால் இன்னும் பரிதாபமாக இருக்கிறது. சென்னையின் சாலைகள் மூச்சுவிடக் கூட நேரமின்றி இயங்கிக் கொண்டுள்ளன.
மிஞ்சிப்போனால் அவருடைய உயரம் நாலரை அடிதான் இருக்கும். டிரை சைக்கிள் நிறைய பிளாஸ்டிக் குடங்கள் வாளிகள் வீட்டு உபயோகப்பொருட்கள் என்று வண்டியை நிறைத்தபடி தன் சைக்கிளை மித்துக் கொண்டிருந்தார். பெடலை மிதிக்கும் அளவிற்கு உயரம் பத்தவில்லை. கொஞ்சம் எக்கி எக்கி மிதித்துக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்களுக்கு முன் பஞ்சரான வாகனத்தையே என்னால் தள்ளமுடியவில்லை ஆனால் அவர் அவ்வளவு கஷ்டப்பட்டு ட்ரை சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தார். வெயில் அவருக்கும் பொதுவானது தான். ஆனால் நிழல்?
சாலையின் ஓரத்தில் சேர்ந்துவிட்ட குப்பைகளை அகற்றியபடி செண்டர்மீடியனில் ஒரு கூட்டம் வெள்ளையடித்துக் கொண்டிருந்தது. அவர்களில் ஒருவர் கடைக்கு வந்து 'ன்னா கொஞ்சம் தண்ணி கொடுனா' என்றார். 'இருந்தா தரமாட்டானா, வேற எங்கனா கேளு' என்றார் மெக்கானிக் அண்ணா. அதே நேரத்தில் ஒரு பெரிய தண்ணீர் வண்டி சாலை முழுவதும் தண்ணீரை விரயப்படுத்தியபடி விரைந்து கொண்டிருந்தது. தண்ணீர் அவருக்கும் பொதுவானதுதான் ஆனால் தவிக்கும் போது? காசு கொடுத்து வாங்கக்கூட வழியில்லாமல் விலையை உயர்த்தி இருக்கிறோம்.
எது எப்படியோ சென்னை மீண்டுமொரு கோரமான வெயில்காலத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
Tweet |
ம்..... சமூக சிந்தனை.
ReplyDeleteஎனக்கென்னவோ இந்த மாதிரி சிந்தனைகள் நாம் அவதிக்குள்ளாகும் போது தான் நன்றாக விசுவரூபம் எடுக்கிறது என்று தோன்றுகிறதுகுளிரூட்டிய அறையில் இந்த மாதிரி சிந்தனைகள் வருகிறதா.? சென்னை வெயிலை நினைத்தே அங்கு வருவதைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறேன்
ReplyDeleteவார்த்தைகளில் அனலின் தாக்கத்தை உணர முடிந்தது.
ReplyDeleteமரங்கள் அழித்து... விரைவாக போய் சேர...
ReplyDeleteஎங்கு...?
வெயிலின் கொடுமை இந்த வருடம் அதிகமாகவே தோன்றுகிறது! சென்ற ஞாயிறன்று வேளச்சேரி வந்து அனுபவித்தேன்! அதற்கு இரண்டு நாள் முன்பு பொன்னேரி சென்று வந்தவன் சாப்பிடக் கூடத் தோன்றாமல் படுத்துக் கிடந்தேன்! இது மாதிரி ஏழை கூலித்தொழிலாளிகள் நிலைமை படு கஷ்டம்தான்!
ReplyDeleteசமூக அக்கறையுடன் எழுதப் பட்ட அனல் வீசும் பதிவு
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDelete‘சென்னை - அனலின் ஆரம்ப நாட்குறிப்புகள்’ கானல்நீர்க் கோலங்கள் புகைப்படம் நன்றாக படம்பிடித்துக் காட்டியது.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்... நல்ல பதிவு அய்யா.
குளிரூட்டும் அறையில் இருந்து கொண்டு... உயர் மட்டத்தில் இருப்பவர்கள்... நடுத்தரமக்கள்... !
ஆனால் அன்றாடம் காய்ச்சிகள் என்று சொல்லக்கூடிய பாமரர்கள்...மார்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள். கட்டிடம் கட்டுபவர்கள், சாலைப்பணியாளர்கள், சைக்கிள் ஓட்டிகள், கூலித்தொழிலாளிகள், மூட்டை தூக்குபவர்கள், சாலையோர வியபாரிகள் என்று எத்தனை எத்தனை பேர் அந்த வெயில்தானே நாள் முழுக்க அல்லல் படுகிறார்கள்...!
நமக்குக் கொஞ்ச நேரத்திற்கு வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை... அவர்களை பற்றி யார் அறிவார்?
-நன்றி.
த.ம. 5.
வெயிலின் தாக்கம் மிகக் கொடூரமாக தொடங்கி விட்டது....
ReplyDeleteபகலில் சூடாக இருந்தாலும் இரவுகள் இன்னமும் மிதமான குளிர் அகலவில்லை தில்லியில்.
எங்களுக்கு மே மாதம் தொடங்கி ஆகஸ்ட்/செப்டம்பர் வரை வாட்டப் போகிறது. கூடவே அனல் காற்றும். சாலைகளில் இருக்கும் நபர்களை நினத்தால் பரிதாபம் தான்.