சூழலியலாளரான தியோடர் பாஸ்கரன் சுற்றுசூழல் மாசடைவதற்காக மட்டும் கவலைப்படாமல் சுற்றுசூழல் சார்ந்த தமிழும் வளராமல் தேங்கியே நிற்கிறது என்ற கோணத்தில் பல பிரச்சனைகளை அலசுவதால் இவரைப்பற்றி இன்னும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.
இன்னமும் தமிழ்ச்சூழலில் சூழலியல் சார்ந்த வாதங்கள் தமிழில் நடைபெறாமல் ஆங்கிலத்திலேயே நடைபெறுவதை காரணம்காட்டி அதனால் மட்டுமே சூழலியல் (Environmental) மக்களிடையே பரவலாக அறியபடாமல் அது மேட்டுகுடிக்கானது என்ற மாயை நிலவுகிறது. இந்தக் கூற்றை சில பத்தாண்டுகளுக்கு முன்பே தியோடர் முன்வைத்து இருந்தாலும் நிலைமை இன்னமும் அப்படியே தான் இருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விசயமே.
ஆங்கிலவழிப் பள்ளி ஒன்றில் அவருக்கு நேர்ந்த அனுபவத்தை உதாரணமாக முன்வைக்கிறார். காட்டுயிரிகள் சார்ந்த வினாடிவினா நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்ட தியோடர் அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தது என்றும் வேங்கைகளும் யானைகளும் என்னவென்றே தெரியாத நிலத்தில் இருந்து வந்த மொழியில் அவற்றைப்பற்றி நடத்தப்படும் வினாடிவினா கேள்விக்குறியானது என்றும் கூறுகிறார். இதனால் காட்டுயிரிகள் சார்ந்த தமிழ் வழக்கு மெல்ல அழியும். அதேசமயம் அத்தனை காட்டுயிர்களுக்குமான தமிழ்ப்பெயர் இன்னமும் கண்டறியப்படவில்லை அதற்கான முனைப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.
யானைக்கு பத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் தமிழில் இருக்கிறது ஆனால் ஒற்றைவார்த்தையை மட்டுமே ஆங்கிலம் கற்றுத் தருகிறது. யானையின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு பெயரைச் சூட்டி அழகு பார்க்கிறது தமிழ். இவை வழக்கற்றுப் போகும் போது மொத்தமாக மறைந்து மறக்கபட்டுப் போகும் அபாயம் இருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறார். எப்படி அருவியானது water falls என்ற ஆங்கில தமிழாக்கத்தின் மூலம் நீர்வீழ்ச்சியானதோ அப்படி.
யானை, வேழம், களிறு, பிடி, களபம், மாதங்கம், கைம்மா, உம்பர், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு இவை அத்தனையும் யானைக்கான பிறபெயர்கள் இன்னமும் அதிகமான பெயர்களைக் கூட சங்கத் தமிழ் பதிவு செய்துள்ளது என்பதை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
நமது காடும் காட்டுயிரிகளும் எப்படி வேட்டையாடப்பட்டன பட்டுக்கொண்டுள்ளன என்பதை மிக வருத்ததுடனும் அதே சமயம் வீரியத்துடனும் கூறுகின்றன இவருடைய எழுத்துக்கள். உலகிலேயே போதைக் கடத்தலுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருக்கும் கள்ளச்சந்தை காட்டுயிரிகளுக்கானது என்று கூறுகிறார். ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் ஒற்றைக் கொம்பின் விலை மட்டும் பல கோடிகள். ஒருகாலத்தில் இந்தியா முழுவதும் பரந்து இருந்த இந்த ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இன்றைக்கு சில நூற்றுக் கணக்கில் மட்டுமே தமது உயிரை தாக்குப்பிடித்துக் கொண்டுள்ளன என்பது நம்பமுடியாத அவலமான தொரு விஷயம்.
நம்மைப் பொறுத்தவரை சிங்கங்கள் இந்தியாவிலேயே குஜராத்தில் மட்டும்தான் வசிக்கிறது. உண்மையென்னவெனில் ஒருகாலத்தில் இந்தியா முழுவதும் சிங்கங்கள் வாழ்ந்திருக்கின்றன. சிங்கம் குறித்து வள்ளுவர் திருக்குறளில் மேற்கோள் காட்டியிருப்பதாக குறிப்பிடுகிறார் தியோடர் பாஸ்கரன். மேலும் வேட்டையடபடுதலின் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் மற்ற மிருகங்கள் புலி மற்றும் வரையாடு. மனிதர்களின் கொடூரத் தாக்குதலைத் தாக்குபிடிக்கமால் இவை எப்போது வேண்டுமானாலும் கூண்டோடு அழிந்துபோகலாம்.
ஜெமோ எழுதிய யானை டாக்டர் கதையில் அடிபட்ட செந்நாய்க்கு வைத்தியம் பார்க்காமல் அப்படியே விட்டுவரும் டாக்டர் கே விடம் நாயகன் கேட்பார் ஏன் அதுக்கு மருந்து போடவில்லை என்று. அதற்கு கே கூறுவார் ஒருவேள அதுக்கும் ஆன்டிபயாட்டிக் செலுத்தினா காட்டில கிமீ ஒரு விலங்கு ஆஸ்பத்திரி வைக்க வேண்டிய சூழல் வந்துவிடுவம் என்று.
காட்டுயிரிகள் இயல்பாகவே நோய்த்தடுப்பு சக்தி அற்றவை ஆனால் அவைகளால் பெருவலியை தாங்கிக்கொள்ள முடியும். இதனால் அவைகளுக்கு இடையே ஏதேனும் நோய்த் தோற்று ஏற்படும் போது உயிரிழப்பு ஒன்றிரண்டாக அல்லாமல் கொத்து கொத்தாக மடிந்து போவதற்கான வாய்ப்பு அதிகம். சமீபத்தில் மூணாறு சென்றிருந்த போது ராஜாமலை வரையாடுகள் சரணாலயத்தில் இதை வன பாதுகாவலர்கள் அங்குவரும் ஒவ்வொரு சுற்றுல்லாவாசிகளிடமும் மறக்கமால் கூறுகிறார்கள். வரையாடுகளை தொடுவதோ அவைகளைப் பிடிப்பதோ சட்டபடி குற்றமாகும். காரணம் மனிதர்களின் நோய் அவைகளைப் பிடித்துகொண்டாள் பின் அந்த இனத்தைக் காப்பாற்றுவது இன்னும் கஷ்டமாகிவிடும்.
நமது காடுகளில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்பே வேட்டையாடுதல் மிகத் தீவிரமாக நடந்திருக்கிறது. அதுவும் இதனை ஒரு சடங்கு போலவே நிகழ்த்தி இருக்கிறர்கள். ஆங்கிலேயர்கள் புலிகளும் யானைகளும் அற்ற நிலபகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதால் இயல்பாகவே அவர்களுக்கு புலி யானைகளின் மீது பயம் இருந்திருக்கிறது. அதனை வெல்வதற்காக இவற்றின் மீது தங்கள் வேட்டையாடலை நிகழ்த்தி குரூரமாக மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இவர்களைப் பின்பற்றிய நமது மன்னர்களும் ஜமீன்களும் வேட்டையில் இறங்கி காட்டுக்குள் மரண ஓலத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பல்லுயிர்ச் சுழற்சியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருகிறார்கள்.
அடுத்ததாக மரங்கள். கட்டு விலங்குகள் எப்படி வேட்டையாடப்பட்டதோ அதே போல் கட்டு மரங்களும் ஆங்கிலேயர்களின் வருகைப்பின்னே மொத்தமாக வேட்டையாடப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்டன. தேக்கும் வேம்பும் பலாவும் ஈட்டியும் ரயில் தண்டவாளங்கள் அமைக்கவும் போர்க்கப்பல்கள் கட்டவும் இங்கிலாந்த்திற்கு கடத்தபட்டிருக்கின்றன. கடினை மொட்டையாக்கியவர்கள், நமது நிலத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாத தைல மரங்களையும் காப்பி தேயிலைச் செடிகளையும் நட்டு காட்டையும் நாசமாக்கி லாபாம் பார்த்திருக்கிறார்கள். இவர்கள் விட்டுப்போனபின் சூழலியல் பற்றிய பிரக்ஞை இல்லாத நம் மக்கள் காடுகளையும் காட்டுயிர்களையும் வேட்டையாடி இருக்கிறார்கள். வேட்டையாடுகிறார்கள்.
ஆங்கிலேயே அதிகாரிகளிலும் சில நல்லவர்கள் இல்லாமல் இல்லை. அவர்களின் மூலம்தான் எஞ்சிய சில உயிரினங்கள் காப்பற்றபட்டன. மற்றும் இந்திய அரசாங்கத்தின் முனைப்பால் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டன.
காடு மட்டும் அல்ல; நீர்ச்சூழலும் மனிதனின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கத்தான் செய்கிறது. அணை கட்டுகிறோம் என்று காடுகளை அழித்தோம், இன்றைக்கு வீடு கட்டுகிறோம் என்று ஆறு ஏறி குளங்கள் என்று பாகுபாடு இல்லாமல் அழித்துக் கொண்டுள்ளோம். காட்டுயிரிகள் நீர்வாழ்வன பறவைகள் என்று ஒரு உயிர் இயக்கத்தை சீரழிப்பதில் பாரபட்சமே காட்டாமல் இயங்கிக் கொண்டுள்ளோம். இதில் பெரிய வேடிக்கை என்னெவென்றால் சூழலியலுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்துவதே இந்த வளர்ந்த நாடுகள் தான் ஆனால் இவை ஏழை நாடுகளைப் பார்த்து உச்சுக் கொட்டிக்கொண்டே அவர்களின் உச்சந்தலையில் கொட்டிக் கொண்டுள்ளார்கள்.
எது எப்படியோ மாற்றம் என்பது எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். உங்களால் சூழலியலுக்கு எந்த தீங்கும் சேதமும் நேரக்கூடாது என்ற உறுதிமொழியை உங்களுக்குள் நீங்களாக எடுத்துக்கொள்ளுங்கள்.
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக என்ற தலைப்பில் தியோடர் பாஸ்கரன் எழுதி இருக்கும் இந்தநூல் நம்முள் காட்டு உயிர்கள் பற்றியும் பறவைகள் நீர்நிலைகள் சுற்றுசூழல் குறித்து ஆழமான விழிப்புணர்வையும் ஆரம்பநிலை கற்பிதத்தையும் நம்முள் ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தமிழ் வாசிக்கத் தெரியுமானால் நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தமாக இதனைப் பரிந்துரை செய்கிறேன். மேலும் சமீபத்தில் வாசித்த மிக முக்கியமானதொரு கட்டுரைத் தொகுப்பாக இந்த இந்தப் புத்தகப் பார்க்கிறேன்.
தியோடர் பாஸ்கரன் - தற்போதைய தமிழ்ச் சூழலில் மிக முக்கியமானதொரு சூழலியலாளராக அறியப்படக் கூடியவர். 2005-ம் ஆண்டு வரைக்குமாக பல்வேறு சஞ்சிகைகளில் வெளிவந்த இவரது கட்டுரைகளை தொகுத்து உயிர்மைப் பதிப்பகம் 2006-ம் ஆண்டு புத்தகமாக வெயிளியிட்டுள்ளது. இவருடைய பெரும்பாலான கட்டுரைகள் உயிர்மையில் வெளிவந்தவை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
Tweet |
அன்பு நண்பரே!
ReplyDeleteவணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!
நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!
மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை (சூட )ஈட்ட வேண்டும்!
தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!
பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!
புதுவை வேலு
வளர்ந்த நாடுகள் - சீரழிந்து சீரழிக்கும் நாடுகள்...
ReplyDeleteநல்ல புத்தக அறிமுகம் சீனு.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அருமையான அறிமுகம் சீனு...
ReplyDeleteபெர்முடா எப்டிகீது..
தம +
இப்போது வாட்சப்பிலும் முகவரியோடு ..
ReplyDeleteஅழகான புத்தக அறிமுகம் சீனு!
ReplyDelete