13 Oct 2013

ரயிலோடும் பாதை

வைகை அதிவிரைவு வண்டி மதுரையை நோக்கி உற்சாகத்துடன் தடதடத்துக் கொண்டிருந்தது. 

வானம் ஒரு அவசரமான கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை நிதானமாகத் தொடங்கியிருந்ததுமின்னலும், மின்னலைத் தொடர்ந்த இடியும், இடியும் இடியைத் தொடர்ந்த மின்னலுமாக வானில் அந்த ஆனந்தத் தாண்டவத்தின் ஒத்திகையும் அரங்கேற்ற இவர்களோடு சேர்ந்துகொண்டு காற்றும் தன் அங்கம் முழுமையையும் மண்வாசனையால் நிரப்பிக் கொண்டு பவனி வரத் தொடங்கியிருந்ததுகார்மேகங்கள் பலவந்தமாக ஆதவனை அந்தபுரத்திற்கு அனுப்ப முயன்று தோற்க, வானமோ மந்தகாசமாக இருட்டத் தொடங்கியிருந்தது. மேகங்களின் பலவந்தம் ஆதவனுக்குள் கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். காற்று, கார்மேகம், மழை, மலை, இடி, மின்னல் என தனது அத்தனை நண்பர்களும் ஒன்று கூடியிருக்க, தன்னை மட்டும் "வீட்டிற்குப் போ"  என்றால் அதனால் எப்படிப் போக முடியும். யாரும் தன்னைப் பார்த்திரா வண்ணம் மிகத் தந்திரமாக ஒரு மழை மேகத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு வீட்டிற்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. 

முழுச் சூரியனை மேகத்திற்குள் அடைக்க முடியாது என்பதை அந்த அப்பாவி ஆதவனிடம் எடுத்தியம்ப யாருக்கும் தெம்பில்லை, தடுத்து நிறுத்த யாருக்கும் நேரமுமில்லை. இந்நேரம் ஆதவனின் கோபம் தலைகேறியிருக்க வேண்டும். தான் ஒளிந்து கொண்டிருந்த கரிய மேகத்தினூடாகக் தன்னுடைய செங்கதிர்களால் கவிதை எழுதத் தொடங்கிவிட்டான் அந்த அப்பாவி ஆதவன். அவனது அழகிய கவிதை அங்கிருந்த யாரை மயக்கியதோ இல்லையோ நிச்சயம் பூமாதேவியை மயக்கி இருக்க வேண்டும், ஒருநிமிடம் தன் சுழற்சியை நிறுத்தி அந்தக் கவிதையின் அழகை ரசித்துப் பின் சுழலத் தொடங்கினாள்.    

காணற்கரிய இந்த அற்புதக் காட்சியை மட்டும் ஒரு கவிஞன் கண்டு ரசித்திருந்தால் தமிழுக்கோர் புதுக்கவிதை கிடைத்திருக்கும், ஒருவேளை இந்த அழகியலின் தரிசனத்தில் ஒரு ஓவியன் மயங்கி இருந்தால் உலகின் மிகச் சிறந்த ஓவியம் உதயமாகியிருக்கும், ஏதாவது ஒரு புகைப்படக்கண் இக்கண்கொள்ளாக் காட்சியைக் நோக்கிக் கண்சிமிட்டியிருந்தால் கூட அற்புதமான ஒரு புகைப்படம் ஒளிர்ந்திருக்கும். விதி வலியது. பாவம் அதனால் தானோ என்னவோ இவ்வளவு அற்புதமான காட்சி ஒரு மழைநேர மாலைப் பொழுதில் என் கண்ணில்பட்டு அவதிப்படுகின்றது.

யிலின் வாசலில் நின்று கொண்டே வானில் நிகழ்ந்து கொண்டிருந்த காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தேன். என்றாவது ஒருநாள் இரயிலின் வாசலில் அமர்ந்து கொண்டோ அல்லது அதன் அருகாமையில் நின்று கொண்டோ பயணித்துள்ளீர்களா...? அது ஒரு அற்புதமான அனுபவம். கொஞ்சம் திகில் நிறைந்த அனுபவம் போல் தோன்றினாலும், பயப்படும்படியான மிகப்பெரிய ஆபத்தொன்றும் இல்லை என்று நினைக்கிறன். ஆபத்தென்றால் இந்த வரியோடு விலகிக் கொள்ளுங்கள், ஏனென்றால் நாங்கள் தீயைத் தீண்டுபர்கள், சூரியனுக்கே நெடுஞ்சாலையமைப்பவர்கள். சுனாமியில் ஸ்வ்மிங் போட பயிற்சி பெறுபவர்கள்..       

வைகை அதிவேக விரைவு வண்டி என்பதால் அதன் மொத்த வேகத்தையும் என்னுள் உணர்ந்து கொண்டிருந்தேன். இரயில்ப் பெட்டியின் வாயிலில் இருந்த அந்த இரு கம்பிகளையும் பிடித்துக் கொண்டே என்னை மெல்ல ரயிலிலிருந்து வெளிக்கொணர்ந்தேன். மழைமேகங்களால் காற்று மென்மையாயிருந்தது. எவ்வளவு மென்மை என்றால் ஒருபெரிய இலவம் பஞ்சு மூடையை உங்கள்மீது கட்டவிழ்த்துவிட்டால் அதன் மென்மையை எத்தனை சுகமாய் உணர்வீர்களோ அப்படித்தான் இருந்தது எனக்கு. இந்நேரம் காற்றுடன் மழைத்துளிகளும் சேர்நதுகொண்டிருந்தன. ரயிலின் வேகம் சற்று குறைந்தது போல் இருந்தது, என்னுள் இருந்து என்னை இயக்குபவன் திடிரென்று என்னிலிருந்து தன்னை விடுத்துக்கொண்டான். நகரும் தண்டவாளங்களின் மீது துள்ளிக் குதித்து விளையாடத் தொடங்கியவன், ஒவ்வொரு பெட்டியாக ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தான்.

சுற்றிலும் பந்த வெட்டவெளி, நிறைந்து வழிந்து கொண்டிருந்த மவுனம். அதனை மவுனம் என்று சொல்வதை விட நிசப்தம் எனலாம். ரயிலோடும் சப்தம் கூட தேர்ந்தெடுக்கபட்ட ஒரு சிறந்த இசைக்கலைஞனின் வாத்தியத்தில் இருந்து வெளிப்படும் இசையைப் போல் உணர்ந்தேன்.   


ரியங்காவில் இருந்து தென்காசி திரும்பிக் கொண்டிருந்த கொல்லம் மெயிலில் தான் முதன்முறையாக ரயில்ப்படிகளில் அமர்ந்து பயணித்ததாக நியாபகம், சற்றும் எதிர்பாராதா ஒரு தருணத்தில் என் முதுகில் சுளீர் என்று ஒரு அறை விழுந்தது, கண்களில் நீர் தளும்ப மெல்லத் திரும்பினேன், அம்மாவின் கண்கள் என்னை மிரட்டிக் கொண்டிருந்தன, சத்தமில்லாமல் மக்களோடு மக்களாக சென்று அமர்ந்து கொண்டேன். நல்லவேளையாக இந்தப் பயணத்தில் என்னோடு அண்ணன் மட்டும் தான் பயணிக்கிறான், அவனும் உள்ளே இரா.முருகனின் மூன்று விரல் படித்துக்கொண்டுள்ளான். நானும் ஜேஜேயின் சில குறிப்புகளைத் தான் வாசித்துக் கொண்டிருந்தேன், இருந்தாலும் காற்றில் பரவிய மண்வாசனை என்னை இங்கே இழுத்து வந்துவிட்டது.                         

ழையின் வேகம் கொஞ்சம் அதிகமாகியிருந்தது. ரயிலோடும் பாதையை முழுவதாய் இருள் ஆக்கிரமித்திருந்தது. காற்றின் தன்மை மட்டும் மாறவேயில்லை, என் மீது பஞ்சை வாரியிறைத்துக் கொண்டேவந்தது. ஆகாசத்தில் அவ்வப்போது வெட்டிச் செல்லும் மின்னல் மனதினுள் ஏதோ ஒரு ரம்யமான உணர்வைக் கொண்டுதுக் கொண்டிருந்தது. ஆற்றுப்பாலத்தின் மீது பெருஞ்சத்ததுடன் ரயில் தடதடக்கும் ஓசை என்னை எனது ஐந்தாம் வகுப்பிற்கு இழுத்துச் செல்கிறது. ஐந்தாம் வகுப்பில் ஒரு உணவு இடைவேளையில் முதல்முறை அதேபோன்ற ஒரு பெரிய ஆற்றுப்பாலத்தில் நடந்து சென்றபோது பாதி பாலத்தைக் கடந்த நேரம் எங்களோடு நடந்து கொண்டிருந்தவன் கதறி அழத் தொடங்கிவிட்டான், பின்னர் உயரத்தைப் பார்த்து பயந்து அழுகிறான் என்பதை அறிந்து கொண்டு அவனின் கண்களை கைகளால் பொத்திக் கொண்டே பாலத்தைக் கடக்கச் செய்தோம்.

தாமிரபரணியின் மீது உயர எழும்பி இருக்கும் கல்லிடைக்குறிச்சி ஆத்துப்பாலத்தின் மீது நடக்கும் பொழுது, பாதி பாலத்தைக்  கடந்த நிலையில் ரயில் வர, அங்கிருந்த ஒரு சிமெண்ட் சிலாப் மீது ஏறிக்கொண்டோம். அதன் மீது ஏறிய பின்பு தான் தெரிந்தது அந்த சிலாப் இப்பவோ அப்பவோ என்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்ததை, ரயிலின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ரயிலுடன் சேர்ந்து சிமெண்ட் சிலாப்பும் தடதடக்க எங்கள் இதயம் காதுக்கு மிக அருகில் துடித்துக் கொண்டிருந்தது. எங்கள் காலுக்கு கீழே நூறடி பள்ளம்  எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. இதுபோல் மறக்கவே முடியா நினைவலைகள் என்னுள் மோதிக்கொண்டிருந்தன. நிஜம்தான். ஒரே ஒரு ரயில்ப்பயணம் போதும், வற்றிப்போன கற்பனைகளை மீட்டெடுக்கும் ஜீவவூற்றாக மாற்றுவதற்கு. 

யிலானது ஒரு நேரான பாதையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் என்னை இழுத்துக் கொண்டிருந்த பெட்டிகளையும், எனக்குப் பின்னால் இழுபட்டுக் கொண்டிருந்த பெட்டிகளையும் பார்க்க முடியவில்லை. ரயில் பயணத்தில் ரசிக்கத் தகுந்த மற்றொரு விஷயம் உண்டென்றால் அது வளைவான பாதையில் ஓடும் ரயிலின் அழகு தான். அப்படி ஒரு சந்தற்பத்திற்காகத் தான் காத்துக்கொண்டிருந்தேன். ரயிலோடும் பாதையும் என்னை நெடுநேரம் காக்க வைத்துவிடவில்லை. ஒரு மிகபெரிய வளைவில் ரயில் தன்னை திருப்பத் தொடங்கியிருந்தது. இஞ்சின் ரயிலை லாவகமாக இழுத்துக் கொண்டு பறந்து கொண்டிருக்கும் அந்த அழகியக்காட்சி இந்த வரிக்கு உரமேற்றிக்கொண்டிருந்தது. அதற்கு இணையான வேகத்தில் கடைசிப் பெட்டியும் இன்ஜினைப் போட்டிபோட்டுத் துரத்திக் கொண்டிருந்தது. இன்ஜின் அழகா? இல்லை இன்ஜினைத் துரத்தும் கடைசிப்பெட்டி அழகா என்றால், அடர்ந்த இருளில் தனக்கு முன்னால் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டு மிக உற்சாகமாக எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கும் அந்த இஞ்சின் தான் அழகு என்பேன். இஞ்சின் மறையும் பொழுது பாம்பாட்டியின் மகுடிக்குக் கட்டுப்பட்டது போல தனது எசமானனின் ஆணைக்கு கட்டுப்படும் கடைசிப்பெட்டி கொள்ளை அழகு.

ற்றொரு மிகபெரிய ஒரு வளைவில் ரயில் திரும்பிய பொழுது தான் அதன் உடலை மொத்தமாய்க் கவனித்தேன், அத்தனை பெட்டியிலும் மின்விளக்குகள் வெள்ளை வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன, அந்த வெளிச்சத்தின் மிச்சம் ஜன்னல் வழியாக வழிந்து கொண்டிருந்தது. வேகமாக தடதடக்கும் ரயில், மெல்லிய காற்று, காற்று சுமந்து வரும் மழைத்துளிகள், எதிர்பாராநேரம் வெட்டிச் செல்லும் மின்னல் கீற்றுகள், இந்தக் காட்சியை மிகச் சரியாக வர்ணிக்க வேண்டுமென்றால்அதனை வர்ணிக்க எனக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் தான் தேவைப்படுகிறான். இது நிச்சயம் ஹோம்ஸ் பயணிக்க வேண்டிய பயணம் அல்லது ஹோம்ஸுடன் பயணிக்க வேண்டிய பயணம். இது போன்ற இருள் நிறைந்த, மழை நிறைந்த, மின்னல் நிறைந்த பயணங்கள் தான் அவனுக்கு மிகவும் பிடிக்கும். இந்நேரம் இந்த ரயிலில் ஹோம்ஸ் இல்லையே என்பது தான் எனது பெருங்கவலையாக இருந்தது. 

துவரை நான் அறிந்திராத குக்கிராமங்கள் அனைத்தும் ரயில்நிலையமாகிக் கடந்து கொண்டிருந்தன. லால்குடி தாண்டிய சிலநிமிடங்களில் ரங்கநாதரும் அதிலிருந்து சிலநிமிடங்களில் உச்சிப் பிள்ளையாரும் அந்த இருளின் மௌனத்தில் நனைந்து கொண்டிருந்தார்கள். திடிரென்று தோன்றிய ஒரு தொழிற்சாலையின் கொண்டை விளக்கு நெடுந்தூரத்திற்கு என்னிடம் கதை சொல்லிக் கொண்டே வந்தது.  

ழைத்தூறல்கள் பெருமழையாகிப் போனபோது தான் உணர்ந்தேன் ஒட்டுமொத்த ரயிலும் தன்னை அடைத்துக்கொண்டு குளிருக்கு நடுங்கிக் கொண்டிருந்ததை, காவி வேஷ்டி கட்டியிருந்த அந்த தாத்தா என்னைப் பார்த்து புன்முறுவலுடன் சிரித்தார், அவரது சிரிப்பில் குளிரின் நடுக்கம் இருந்தது. மெல்ல என் அருகில் வந்தவர், "ரொம்ப நேரமா நின்னுட்டே வாறீங்களே, கொஞ்ச நேரம் உக்கார்றது, தாத்தாக்கு குளிருது கொஞ்சம் கதவ அடைக்க முடியுமா?" என்று கேட்டுவிட்டு என் பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டார். அவருக்குத் தெரியும் எப்படியும் நான்  அடைத்து விடுவேன் என்று, அது தான் நடந்தது, அந்தக் கதவை அடைத்துவிட்டு எனது இருக்கையில் அமர்ந்து கொண்டேன். 


ங்கிருந்த ஒவ்வொரு பயணிகளின் பயணத்தின் பின்னாலும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது, அவைதான் காரணி ஆகி அவர்களை இழுத்துச் செல்கிறது, சுகம் துக்கம், பிறப்பு, இறப்பு என எத்தனையோ உணர்வுகளைச் சுமந்து கொண்டு வைகை அதிவிரைவு வண்டி மதுரையை நோக்கி உற்சாகத்துடன் தடதடத்துக் கொண்டிருந்தது. கூடவே எனது நினைவுகளின் வடிவமானவன் அந்தக் கதவருகில் அரூபமாய் நின்றுகொண்டே பயணித்துக் கொண்டிருந்தான் தனக்கான பயணத்தின் காரணத்தை மனம் முழுவதும் சுமந்துகொண்டு.   

31 comments:

  1. ஒ.. இது தான் ஜெ.மோ டச் சா?

    ReplyDelete
    Replies
    1. இல்ல ஜெமோ கிட்ட கூட நெருங்க முடியாது.. இது மாதிரி எழுதி ரொம்ப நாள் ஆச்சு.. அதான் ஒரு ட்ரை :-))))

      Delete
  2. அதி விரைவாகவும் பலவித சப்தங்களோடு பயனித்த ரயில் இறுதியில் மெளனமாக...நிசப்த இருளில்....

    ReplyDelete
  3. vaarthaikal kaatchikalai kaattina...
    vaazhthukkal...

    ReplyDelete
  4. அருமை , சீனு.

    அந்தக் காலத்து ரயில் பயணங்கள்தான் அழகு! இப்போதெல்லாம் குளிரூட்டப்பட்ட பெட்டி என்று நம்மை உள்ளே அடைத்து விடுகிறார்கள்:(

    அது போகட்டும். ஒரு சின்ன திருத்தம் சொல்லலாமா?

    //மழை மேகத்தின் பின்னால் ஒழிந்து கொண்டு வீட்டிற்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. //

    //தான் ஒழிந்து கொண்டிருந்த கரிய மேகத்தினூடாகக் தன்னுடைய செங்கதிர்களால் கவிதை எழுதத்.......//
    இங்கே இந்த ழி எல்லாம் ளி என்றிருக்கணும்.
    ஒழிந்து= ஒளிந்து
    தனிமடலாகப் பாவியுங்கள்.

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு சீனு.

    ReplyDelete
  6. //ஏனென்றால் நாங்கள் தீயைத் தீண்டுபர்கள், சூரியனுக்கே நெடுஞ்சாலையமைப்பவர்கள். சுனாமியில் ஸ்வ்மிங் போட பயிற்சி பெறுபவர்கள்..//

    ஆஹா....

    நான் சொல்ல நினைத்ததை துளசி டீச்சர் சொல்லிட்டாங்க.

    ரயில் பயணத்தில் கிடைக்கும் இனிமை - கடந்த 22 வருடங்களுக்கு மேலாக தமிழகம் - டில்லி வந்து இன்னும் அலுக்காத இனிமை. பேருந்து பயணம் தான் அதிகமாக பிடிக்கும் என்றாலும்......
    கவிதை வரவில்லை எனச் சொல்லி, கட்டுரையிலேயே கவிதை படைக்கும் சீனு....... வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. Nice !, கடைசி வரியை கடக்கும்போது ரயிலின் தடதடப்பு சற்றே அதிகமாகியிருந்தது,ஒரே விசயம் தான் என்றாலும் ஒரே மாதிரியாய் படுவதில்லை ஒவ்வொருவருக்கும்...
    //நாங்கள் தீயைத் தீண்டுபர்கள், சூரியனுக்கே நெடுஞ்சாலையமைப்பவர்கள். சுனாமியில் ஸ்வ்மிங் போட பயிற்சி பெறுபவர்கள்.. // :)

    //எங்கள் இதயம் காதுக்கு மிக அருகில் துடித்துக் கொண்டிருந்தது// பின்றீங்க சீனு அண்ணா ..

    வளைவில் செல்லும் ரயிலின் அழகை வர்ணித்துச்சொல்லும் வரத்தை வார்த்தைகளுக்கு வாய்த்துக்கொடுத்தமை அருமை !! ரயில் ...ஒரு பயண வாகனம் என்பதையும் தாண்டி அதிசயம்,ஆச்சர்யம்,அனுபவம்,சிந்தனை,கவிதை இப்படி நிறைய பரிணமங்களில்.... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமாக ஓடிக் கொண்டேயிருக்கிறது ஒவ்வொரு ரயிலும் ...

    ReplyDelete
  8. எல்லோரும் உணர்வதை தனிப்பட எழுதி மறுபடி அனுபவ மழையில் நனைய வைத்த பதிவு.

    ReplyDelete
  9. உணர்வுகளின் ஸ்பரிசத்தை உள்வாங்கி எழுதுவது இதுதானா...! கவிதையே கதையானது போன்ற உணர்வு.. மிகுந்த ரசனையுடன் எழுதியுருக்கீங்க சீனு...

    ReplyDelete
  10. தொடர்பவர்களில் டபுள் செஞ்சுரி அடித்ததற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ரயில் பயணம் இனிமை....!

    ReplyDelete
  12. ஒரே ஒரு ரயில்ப்பயணம் போதும், வற்றிப்போன கற்பனைகளை மீட்டெடுக்கும் ஜீவவூற்றாக மாற்றுவதற்கு.

    ReplyDelete
  13. உண்மை... அந்த ரசனையே தனி... ஒவ்வொரு விவரிப்பும் ரசிக்கத்தக்க வகையில் (எழுதி) அனுபவித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  14. அனுபவம் அருமை?

    ReplyDelete
  15. அன்பின் சீனு - துளசி டீச்சர் சுட்டிக் காட்டிய தட்டச்சுப் பிழையினைச் சரி செய்திருக்கலாமே ! ஏன் இன்னும் செய்ய வில்லை. உடனே செய்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  16. எனக்கு இப்போதே ரயிலில் பயணிக்க வேண்டும் . அதுவும் எ/சி இல்லமல் திறந்த ஜன்னலகளுடனும் ,ரயிலின் தடதட சப்தத்தோடு, அந்த இசைக்குப் பாடலை முணுமுணுத்துக்கொண்டு.

    அருமையானபதிவு சீனு. பயணத்தை எல்லோரையும் ரசிக்க வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு கூட்டம் இல்லாம இருக்க்கனும் வல்லிசிம்ஹன் ......நடக்கிற காரியமா ?

      Delete

  17. ஏகப்பட்ட இடங்களில் கற்பனை கொடி கட்டும் பறக்கிறது ......
    கொட்டி விட்டாய்
    அள்ளுவதற்கு நேரமில்லா
    அளவிற்கு
    கொட்டி விட்டாய் வர்ணனைகளை !!

    ReplyDelete
  18. சூப்பர்... ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது.... இந்த மாதிரி எழுத்து நடை படித்து ரொம்ப நாளாகிறது... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  19. இனிய ரயில் பயணம்.

    ரயில் பயணம் சென்று பலவருடங்கள். மீண்டும் ரயில் ஓடத்தொடங்கி விட்டது பார்ப்போம். :)

    ReplyDelete
  20. வாணவேடிக்கையாக எழுதக் கற்றுக் கொண்டுவிட்டீர்கள். காட்சியைப் படிப்பவருக்கும் காண்பவரின் குதூகலம். பாராட்டுக்கள்.
    படர்க்கையில் முடித்திருக்கிறீர்களே?

    ReplyDelete
  21. எத்தனை முறை பணித்தாலும் ரயில் பயணம் அலுக்கவே அலுக்காது.

    ReplyDelete
  22. வா­சிக்க்­கி­ற ­ஒவ்­வொ­ருத்­த­ரும் ­­­ர­யி‌­லை ­நே­சிக்­கி­ற ­மா­தி­ரி... தன் ­ம­ன­சு­ல ­ர­யில் ­ப­ய­ண ப்­ளாஷ்­பேக்­கு­க­ளை ­ஓட்­டிப் ­பாக்­க­ற ­மா­தி­ரி... அ­ழ­கா ­எ­ழு­தி­யி­ருக்­கே.. வார்த்­தை­கள் ­வ­சப்­பட்­டு ­விட்­ட­ன ­உ­னக்­கு!

    ReplyDelete
  23. ரயில் பயண வர்ணனை அற்புதம் சீனு.னு. ஒரு தேர்ந்த எழுத்தாளனின் கைவண்ணம் போல் ஜொலிக்கிறது கட்டுரை. இதை எழுதியது யார் என்ற கேள்வியை நீயே எழுப்பி இருந்தால் பல பிரபலங்களின் பெயர்கள் இங்கே குறிப்ப்பிடப் பட்டிருக்கும். வாழ்த்துக்கள். இன்னொரு இலக்கிய வாதி தயாராகிக் கொண்டிருக்கிறார்
    //ஏனென்றால் நாங்கள் தீயைத் தீண்டுபர்கள், சூரியனுக்கே நெடுஞ்சாலையமைப்பவர்கள். சுனாமியில் ஸ்வ்மிங் போட பயிற்சி பெறுபவர்கள்//
    இந்த வரிகள் தேவை இல்லை என்று தோன்றுகிறது. அழகான எழுத்து நடையில் குறுக்கே வந்து அழகியலை கெடுத்து விடுவதாக தோன்றுகிறது.

    ReplyDelete
  24. T.N.M ஐ வழிமொழிகின்றேன் ...!

    POETIC POST ....!

    ReplyDelete
  25. என்ன ஒரு கவிதைமயமான பயண அனுபவம், சீனு. வியப்பாக இருக்கிறது - எனக்கு கவிதை எழுத வராது என்று பின்னூட்டம் எனக்குப் போட்டுவிட்டு எப்படி கட்டுரையையே கவிதை ஆக்கிவிட்டீர்கள்?
    மிகவும் அருமை! பாராட்டுக்கள்.
    கவிதை போட்டிக்கு உடனடியாக எழுதி அனுப்புங்கள்.

    ReplyDelete
  26. செம எழுத்து யா தல ... காட்சி விவரிப்புகள் கண்ணில் வந்து போகின்றன ! இப்படி அப்ப அப்ப ஒன்னு எடுத்து விடும் சாரே ... கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இருக்கிறது சரி செய்து கொள்ளவும் அடுத்த அடுத்த பதிவுகளில் ...

    ReplyDelete
  27. அனுபவம் அருமை?//

    தம்பி வீட்ல சுத்தி போட சொல்லு ...

    ReplyDelete
  28. வாசிப்பின் முதிர்ச்சி உங்கள் எழுத்துக்களில் நன்றாக தெரிகின்றது.ஜெமோ,சுந்தர ராமசாமி எழுத்துக்களின் பாதிப்பு பட்டவர்த்தனமாக புலப்படுகின்றது.அருமையான ஒரு பயணப் பதிவு

    ReplyDelete