'அந்த ஆக்சிடென்ட்ல இறந்து போன பசங்க வீடியோ காமில' என்றார் அம்மா. இரண்டு நாட்களாக அந்த வீடியோவைக் காண்பிக்காமல் டபாய்த்துக் கொண்டிருந்த கோபம் என் அம்மாவின் பேச்சில் இருந்தது. அந்த வீடியோவைக் காண்பிக்காமல் இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
ஹிமாச்சலப் பிரதேச விபத்து வீடியோவைப் பார்த்து விட்டு எனக்கே மனசு தாங்கவில்லை. ஒருவேளை என் அம்மா பார்த்துத்தொலைத்தால் நிச்சயம் நாள் முழுவதும் புலம்பிக் கொண்டிருப்பார். நான் சும்மாவே ஆறு குளம் என ஊர் ஊராய் சுற்றுபவன். இனி எங்கு சென்றாலும் இதையும் தன் புலம்பலில் சேர்த்துக் கொள்வார் என்ற காரணத்தாலேயே அதைக் காண்பிக்கவில்லை. இன்று வேறு வழியே இல்லை. அருகில் வந்து அமர்ந்து கொண்டார். கூடவே கெளதமும் சேர்ந்து கொண்டான். 'பார்த்துட்டு சும்மா பொலம்பக் கூடாது' என்ற கண்டிசனோடு அந்த வீடியோவைப் பேஸ்புக்கில் தேடினேன். கிடைக்கவில்லை. ஏன் பேஸ்புக்கில் தேடினேன் என்ற காரணத்தை பின்னால் நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
இப்போ வேறுவழியில்லை என்றானதும் மெல்ல யுட்யுபை ஓபன் செய்து வீடியோவைத் தேடினேன். வீடியோ கிடைத்துவிட்டது. கூடவே இலவச இணைப்பாக வேறு பல வீடியோக்களும் ஓரத்தில் வந்து விழுந்தன. அத்தனையும் மிட் நைட் மசாலாவை விட மோசமான XXX வீடியோக்கள். அம்மா அதைப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக ஸ்க்ரீனைப் பெரிதாக்கி தேவையான வீடியோ மட்டும் தெரியும்படி பார்த்துக்கொண்டேன். அந்த விபத்து வீடியோவைப் பார்க்கும்போது நான் எதிர்பார்த்தபடியே புலம்பத் தொடங்கினார் அம்மா. 'பொலம்பக் கூடாதுன்னு சொன்னம்லா' என்று சத்தம் போட்டதும் நிறுத்திவிட்டார். ஆனால் அதிலிருந்து சிறிது நேரம் கழித்ததும் யூட்யுப் பற்றியும் அதை யார் எல்லாம் பார்க்கமுடியும், என்னமாதிரியான வீடியோ இருக்கும், குழந்தைகளும் பார்க்கமுடியுமா என்பது குறித்தெல்லாம் விசாரித்தார். கேள்வியின் உள்ளர்த்தம் எனக்குப் புரிந்ததால் - யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்றபடி மையமாக முடித்துக் கொண்டேன். இனி என் அம்மாவின் புலம்பல்கள் எல்லாம் இந்த இணையத்தைப் பயன்படுத்தப் போகும் குழந்தைகளைச் சார்ந்ததாகத்தான் இருக்கப்போகிறது.
ஏழு கழுத வயசான பையன் இருக்கும் என் அம்மாவே கவலைப்படும்போது, இன்றைய தினத்தில் இணையம் சர்வ சாதாரணமாக எல்லா இடங்களிலும் நுழைந்துவிட்ட நிலையில், இன்றைய ஜெனரேசன் பெற்றோர்களின் நிலை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால் கவலையும் கவலையை மீறிய அச்சமும்தான் ஏற்படுகிறது. காரணம் மாணாக்கர்கள் மடிவரை கணினி வந்துவிட்டது. இணையவசதி உள்ள கைபேசி அவர்களின் கைகளினுள் புகுந்துவிட்டது. பெற்றோர்களை விட பிள்ளைகள் புத்திசாலிகளாக இருப்பதாக பெற்றோரே பெருமகிழ்ச்சி அடைகின்றனர். இப்போது இந்த சிறுவர்கள் இணையத்தை வைத்து என்ன செய்வார்கள். நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுரையையோ அல்லது தாமஸ் ஆல்வா எடிசனின் ஆராய்ச்சி தரவுகளையோ படிப்பான்/ள் என்று நம்புகிறீர்களா! இதனை இன்றைய தலைமுறை அப்பாவி அப்பா அம்மாக்கள் வேண்டுமானால் வேறு வழியில்லாமல் நம்பித்தொலைக்கட்டும். ஆனால் உண்மை வேறு மாதிரியானது. ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியது.
நம்முடைய காலத்தில் அதாவது இணையம் பிரபலமாகாத 2004க்கு முந்தைய காலத்தில் விடலையாக இருந்தவர்கள், இளவட்டங்ள், எக்ஸட்ரா எக்ஸட்ராக்கள் அனைவருக்கும் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு கில்மா தியேட்டர் இருந்திருக்கும். இப்போதும் இருக்கலாம் பாழடைந்த நிலையில். அங்கு போடுவானா மாட்டானா என்ற நிலையில் ஓட்டப்படும் பிட்டுப்படம் பார்க்க, தலையில் துண்டு போட்டுக் கொண்டு மறைந்து மறைந்து போன தலைமுறை நம்முடையது. மேலும் சிறார்களுக்கு சுவறுகளில் ஒட்டப்பட்ட பிட்டுப்பட போஸ்டரின் அந்த இடத்தில் கரி பூசப்பட்ட நாயகியின் ஸ்டில் தான் அதிகபட்ச ஆபாசமாக இருந்திருக்க வேண்டும். நாம் அந்த போஸ்டரைப் பார்ப்பதை வேறுயாரும் பார்த்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் ஓரக்கண்ணால் வெறிக்க வெறிக்க பார்த்த நாட்கள் எல்லாம் உண்டு. 'பிள்ளையோ நடமாடுற இடத்துல போஸ்டர் ஒட்டிருக்கானுவோ பாரு போஸ்டரு' என்று போஸ்டரைக் கிழித்தெறிந்த ஆட்களையும் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு அதை விட ஆபாசமான போஸ்டர்கள் நாளிதழ்களில் கூட சர்வசாதாரணமாக உலவத் தொடங்கிவிட்டது என்பது வேறு விஷயம்.
அரசுப் பள்ளியில் படித்த எங்களுக்கு வாத்தியார் என்பவர் அவருக்குப் பொழுதுபோகாவிட்டால் பாடம் நடத்த வருபவர் என்று பொருள். அப்படியிருக்க எங்களுக்குப் பொழுதுபோக வேண்டாமா. பள்ளிக்கு வந்ததும் முதல் காரியமாக ஆளுக்கொரு ஆலமரத்தடியில் கூடுவோம். எங்களுக்கென வகுப்பறைகள் எல்லாம் கிடையாது. ஒவ்வொரு மரத்தடியின் கீழும் பத்துபேர் அமர்ந்துகொள்வோம். பாக்கெட் மணியாக எங்களிடம் ஒரு ரூபாய் இருந்தாலே நாங்கள் பணக்கார்கள். தலைக்கு ஒரு ரூபாய் வசூலிப்பு முடிந்ததும் தென்காசி புதிய பேருந்து நிலையத்தை நோக்கி ஓடுவோம். மஞ்சப்பத்திரிகை வாங்குவதற்காக. எந்த கடையில் என்ன புத்தகம் கிடைக்கும் என்று எங்களுக்கு வழிகாட்டியவர்கள் எங்கள் சீனியர்கள்.
அந்த நம்பர் நடிகையின் குளியலறைக் காட்சியின் பிளாக் அண்ட் வொயிட் பக்கங்கள் அடங்கிய புத்தகம் தான் நாங்கள் முதன்முதலாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த புத்தகம். நாட்கள் நகரநகர நாளொரு புத்தகமும் தினமொரு புத்தகமுமாய் வந்துபோய்க் கொண்டிருந்தது எங்கள் வாழ்க்கையில். ஒருகட்டத்தில் இது மட்டுமே எங்கள் தினசரி வாடிக்கைகளில் ஒன்றாக மாறியிருந்தது. ஆலமரத்தடி புளியமரத்தடி புட்பால் கிரவுண்ட் பேஸ்கட் பால் கிரவுண்ட் மூலை முடுக்குகள் என்று பார்த்த இடங்களில் எல்லாம் புக்கும் கையுமாக அலைந்து கொண்டிருந்தார்கள். கூடிக்கூடி புத்தகம் வாசித்தார்கள். புக்கும் கையுமாக அலைவதில் தப்பில்லை என்ன மாதிரியான புக்கும் கையுமாக அலைந்தோம் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இங்கே இதனை ஏன் இவ்வளவு அழுத்தமாகக் குறிப்பிடுகிறேன் என்றால் சாதாரண ஒரு புத்தகதிற்கே இவ்வளவு கவர்ச்சி எனின் பால்ய வயதில் பதிவு செய்யப்பட்ட ஆபாசக் காட்சிகள் என்பது இன்னும் எவ்வளவு கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாய் இருக்கும்.
கிட்டத்தட்ட புத்தகங்களில் இருந்து இணையத்திற்கு மாறிய முதல் தலைமுறை மாணவர்கள் நாங்களாகத்தான் இருப்போம் என நினைக்கிறன். இந்த நாட்களில் எங்கள் பள்ளியின் கம்ப்யுட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கு மற்ற க்ரூப் மாணவர்கள் மத்தியில் ஒருதனி கிராக்கி உண்டு. ஏனெனில் அவர்களுக்குத் தான் கணினியைக் கையாள்வது பற்றி தெரியும். எந்த வெப்சைட்டில் என்ன இருக்கிறது என்பது தெரியும். அதிலும் கணினியில் புகுந்து விளையாடக் கூடிய மாணவர் என்றால் அவனைக் கொத்திக்கொண்டு போக ஒரு கூட்டமே காத்திருக்கும் நான் கூறுவது 2005ன் தொடக்கத்தில். நான்கு பக்கமும் அடைத்து வைக்கப்பட்ட பிரவுசிங் செண்டர்களின் காட்டில் மழையடித்தக் காலம் அது. வெறும் ஒரு மணி நேரம் பார்க்கக் கூடிய அந்த படங்களுக்காக ஒரு மாதம் துட்டு சேர்த்து வைத்தவனை எல்லாம் எனக்குத் தெரியும்.
வெறும் ஆறேழு ஆண்டுகளில் எப்படியிருந்த நாம் எப்படியாகிவிட்டோம் என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாய் இருக்கிறது. காமம் எவனையும் சபலப்பட வைக்கும். கற்பு காமம் என்பது மூடி போற்றிப் பாதுகாத்து வளர்க்கப்படும் ஒரு சமுதாயத்தில் நாம் என்னமாதிரியான நிலையை நோக்கிப் பயணிக்கிறோம். இது நம்மை எங்கு கொண்டு போய்ச் சேர்க்கப்போகிறது என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கவேமுடியவில்லை. மறைத்து மறைத்து பார்க்கப்பட்ட ஒன்றை பாரு பாரு என்றால் அவன் பார்க்கத்தான் செய்வான். அதைதான் இன்றைய இணைய தளங்களும் செய்கின்றன. அவர்களுக்கு அது வருமானம். நமக்கு?
இந்நேரத்தில் சிறுவர்களை மட்டும் குறைசொல்லி எதுவும் ஆகபோவதில்லை. சமுகத்தில் முன்னோடிகாளக இருக்க வேண்டிய நாம் சமுகவலைதளத்தில் என்னமாதிரியான முன்னோடிகளாக இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒரு பெண்ணின் முகம்கூட இங்கு பலருக்கும் முக்கியமாயில்லை. அவளது தகவல் பக்கத்தில் அவள் பதிந்திருக்கும் FEMALE என்ற வார்த்தையே பலருக்கும் போதுமானதாய் இருக்கிறது. ஒரு பெண் புள்ளி வைத்தாலே நூறு லைக் போட சிலநூறு ஆண்கள் காத்துக்கிடக்கிறார்கள். சில பெண்களும் அதையே விரும்புகிறார்கள். இந்த விசயத்தில் பெண்களின் மீது பெண்களே பொறாமை கொள்கிறார்கள். இன்னும் சில ஆண்கள் ஆபரேசன் செய்து கொள்ளாமலேயே சமூக வலைதளங்களில் பெண்களாக மாறிவிடுகிறார்கள். இவர்களின் அட்டூழியம் கொடுமையிலும் கொடுமை.
இந்நேரத்தில் சிறுவர்களை மட்டும் குறைசொல்லி எதுவும் ஆகபோவதில்லை. சமுகத்தில் முன்னோடிகாளக இருக்க வேண்டிய நாம் சமுகவலைதளத்தில் என்னமாதிரியான முன்னோடிகளாக இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒரு பெண்ணின் முகம்கூட இங்கு பலருக்கும் முக்கியமாயில்லை. அவளது தகவல் பக்கத்தில் அவள் பதிந்திருக்கும் FEMALE என்ற வார்த்தையே பலருக்கும் போதுமானதாய் இருக்கிறது. ஒரு பெண் புள்ளி வைத்தாலே நூறு லைக் போட சிலநூறு ஆண்கள் காத்துக்கிடக்கிறார்கள். சில பெண்களும் அதையே விரும்புகிறார்கள். இந்த விசயத்தில் பெண்களின் மீது பெண்களே பொறாமை கொள்கிறார்கள். இன்னும் சில ஆண்கள் ஆபரேசன் செய்து கொள்ளாமலேயே சமூக வலைதளங்களில் பெண்களாக மாறிவிடுகிறார்கள். இவர்களின் அட்டூழியம் கொடுமையிலும் கொடுமை.
உலகம் முழுவதும் இதே பிரச்சனையா என்றால் நிச்சயம் இல்லை. என்னுடைய அமெரிக்கத் தோழி சமீபத்தில் தனது ப்ரோபைல் பிக்சர் மாற்றி இருந்தாள். அழகானவள். அவள் அழகைக் (அங்கங்களை மூடியும் மூடாமலும்) காண்பிக்கும் சமீபத்திய புகைப்படத்தை பதிவேற்றி இருந்தாள். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அந்தப் படத்திற்குக் கிடைத்தது வெறும் இரண்டு லைக்குகள் மட்டுமே. இரண்டுமே பெண்களிடம் இருந்து வந்தவை. இங்கே இதனைக் குறிப்பிடுவதன் காரணத்தை நீங்களே புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் பிரச்சனை நமது ஆண்களிடமா பெண்களிடமா இல்லை ஒட்டு சமூகத்திடமா என்று?
இணையயுகத்திற்கு முன் காமமே இல்லையா. இல்லை காம தூண்டல்கள்தான் இல்லையா என்ற கேள்வி எழலாம். இருந்தது. அப்போது லிமிடட் மீல்ஸாக கிடைத்த ஒன்று இன்று அன்லிமிட்ட மீல்ஸாக பரிமாறப்படுகிறது. எதையுமே அரைகுறையாக, நமக்குப் பாதகம் தராத வரைக்கும் நல்லது என்ற நிலையில் ஏற்றுக்கொள்பவர்கள் நாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காதல் திருமணத்தையே ஏற்றுக்கொள்ளாத ஒருசூழலில் வாழ்கிறோம். நாளை இந்த சமுதாயம் காமத்தை நேரிடையாக அறுவடை செய்யும் போது நமது நிலை என்னவாக இருக்கப்போகிறது. ஒருவேளை நீயாநானாவில் கள்ளகாதலையும் ஒரு பேசுபொருளாக சேர்த்து விடுவார்களோ?
பிள்ளைகள் மீது ஓவராய் பாசம் வைத்து அவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக ஆக்க இருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் சார்ந்தவரும் சிந்திக்க வேண்டிய தருணமிது.
பிள்ளைகள் மீது ஓவராய் பாசம் வைத்து அவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக ஆக்க இருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் சார்ந்தவரும் சிந்திக்க வேண்டிய தருணமிது.
சமீபத்தில் தென்காசியில் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய குட்டி பையனுக்கு இணைய வசதியுடனான டேப்லட் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அதைக் என் கையில் கொடுத்து எப்படி இருக்கு பார் என்றார். அதுவரை வேறு எதோ செய்து கொண்டிருந்த சிறுவன் என்னருகில் ஓடிவந்துவிட்டான். பையனின் முகம் போன போக்கு சரியில்லை. நான் அதில் என்னவெல்லாம் நோண்டுகிறேன் எங்கல்லாம் செல்கிறேன் என்பதை நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தான். நம் புத்தி சும்மா இருக்குமா! நேரே ஹிஸ்டரியைத் திறந்தேன். எஸ்டிடி மிக முக்கியம் அமைச்சரே. அவ்வளவு தான் சடாரென என் கையில் இருந்து டேப்லெட்டைப் பிடுங்கினான். பிடுங்கியவன் அவனுக்கு என ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி ஓடினான். ஓடியவன் பத்து நிமிடம் கழித்து மீண்டும் என்னிடம் தனது டேப்லெட்டை நீட்டினான். ஹிஸ்டரி துடைத்து வைக்கபட்டிருந்தது. நானும் அதையேதான் எதிர்பார்த்திருந்தேன். அவன் அப்பா அதாவது என் நண்பர் கூறினார் 'எம்புள்ளக்கி எல்லாமே தெரியும். எனக்கு தெரியாதது கூட அவனுக்கு தெரியும் என்றார்' பெருமை பொங்க. யோவ் நிசாமவே உனக்குத் தெரிஞ்சத விட உம்புள்ளைக்கு நிறைய தெரிஞ்சிருக்கும்யா' என்பதை மனதில் நினைத்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினேன். அந்தச் சிறுவனும் அவனுடைய அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டான் இணைய வசதியுடன் கூடிய அந்த டேப்லெட்டுடன்.
