குமரகம் மெல்ல எங்களைத் தன் எல்லைக்குள் அனுமதித்துக் கொண்டிருந்தது. தமிழகத்தில் இதுவரை எங்குமே பார்த்திராத சில காட்சிகள் கண்முன்னே விரிந்து கொண்டிருக்க, ஆச்சரியம் நிறைந்த பார்வையை அலைய விட்டுக்கொண்டே அவ்வூரின் அழகையும் அமைதியையும் உள்வாங்கிக் கொண்டிருந்தேன். கோட்டயத்தைத் தாண்டும் வரை அடித்துப் பெய்து கொண்டிருந்த பெருமழை கூட இப்போது மெல்லிய தூறலாக மாறியிருந்தது.
குமரகம் - கேரளா டூரிஸ்ட் ஹோம் வந்ததும் வண்டியை சாலையோரமாய் ஒதுக்கி நிறுத்த, நிறுத்தியது தான் தாமதம் போட்ஹவுசிற்கு ஆள்பிடிக்கும் கூட்டம் எங்களைச் சூழ்ந்து கொண்டது. 'சாரே ஹவுஸ் போட் சாரே' , 'எத்தர பேருக்கு போட் வேணும், அத்தன பேருக்கும் இவட உண்டு', 'தமிழ்நாடோ, எங்ககிட்ட ஹவுஸ் போட் உண்டு' என்று பலரிடம் இருந்தும் பல விதங்களில் அழைப்புகள். இருந்தாலும் மாமா ஏற்கனவே போட்ஹவுஸிற்கு முன்பதிவு செய்திருந்ததால் புதிதாய் ஒரு போட்ஹவுஸ் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. கடந்த சில வருடங்களாக அவர் தனது நண்பர்களுடன் வந்து செல்லும் இடம் என்பதால் எங்கு யாரிடம் நல்ல தரமான அதே நேரம் நியாயமான விலையில் போட் கிடைக்கும் என்பதை எல்லாம் நன்கு அறிந்து வைத்திருந்தார்.
கடந்த வருடமே எங்களையும் போட்ஹவுஸிற்கு அழைத்துச் செல்லும்படி பெட்டிஷன் போட்டிருந்தோம். அந்த மனு பரிசீலிக்கப்பட்டு, அனுமதிபெற்று, இதோ இப்போது ஒருவழியாய் குமரகம் வரைக்கும் வந்தாயிற்று. படகில் ஏற வேண்டியதுதான் பாக்கி. சில நிமிடகளில் வழிகாட்டியாக ஒருவர் வந்துசேர, அவரின் வழிகாட்டுதலின்படி ஒரே ஒரு கார் மட்டுமே செல்லக்கூடிய மண்பாதையில் அடுத்த பயணம் ஆரம்பமானது.
இடதுபுறம் வாழைத்தோட்டம் தன் மீது படிந்த நீர்த்துளிகளை கசிய விட்டுக் கொண்டிருக்க மறுபுறம் துறைமுகத்தில் புறப்படத் தயாராய் இருக்கும் கப்பல்கள் போல படகுகள் அனைத்தும் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தன. சொல்லபோனால் ஏழைகளின் டைட்டானிக் அவை. ஒருவேளை நண்பர்களுடன் சென்றோமானால் 'டைட்'டானிக் ஆகவும் மாற வாய்ப்பிருக்கிறது. இப்போது நாங்கள் வந்திருப்பது குடும்பத்தோடு. (இப்பயணம் சித்தியின் ஸ்பெஷல் ட்ரீட் என்பதால் அவருக்கு கோட்டான கோடி நன்றிகள்)
ஒரு பயணத்தில் நாம் யாருடன் பயணிக்கிறோம் என்பதே அந்தப் பயணத்தின் திசைகாட்டியாகவும் மாறும். நண்பர்களுடன் பயணிப்பது வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றால், குடும்பத்தோடு பயணிப்பது வேறு விதமான அனுபவத்தைக் கொடுக்கும். நண்பர்களைத் தவிர்த்து உறவினர்களுடன் பயணிக்க இருக்கும் இந்தப் பயணம் என்ன மாதிரியான அனுபவத்தை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது என்பது அப்போது தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்தேன்.
மெல்ல படகுகினுள் காலடி எடுத்து வைத்தோம். கிட்டத்தட்ட பல மாதத்துக் கனவு, பல வாரத்து எதிர்பார்ப்பு. இன்னும் ஒரு நாளைக்கு இதே படகில்தான் எங்கள் மொத்த நாளையும் களிக்கப்போகிறோம் என்ற ஆர்வம். அவசரமாக அவசரமாக அந்தப் படகை எங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட ஒரு யானையைப் பார்க்கும் ஆர்வத்தில் ஒவ்வொரு ரூம் ரூமாக சுற்றிக் கொண்டிருந்தோம்.
முழுக்க முழுக்க மரத்தாலான படகு. படகின் முன் பகுதியில் பத்து பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஒரு உணவு மேஜை, அதற்குப் பின்புறம் சுவற்றில் மாட்டப்பட்ட டிவி. ஒரு சோபா மற்றும் படகோடு சேர்த்து வடிவமைக்கப்பட்ட மரஇருக்கைகள். மொத்தம் பத்து பேர் வந்திருந்ததால் நான்கு பெட்ரூம் கொண்ட படகை வாடகைக்கு எடுத்திருந்தோம். ஒவ்வொன்றிலும் இரு படுக்கைகள். ஒரு அட்டாச்ட் பாத்ரூம் டாய்லெட். நல்ல வசதியான ரூம். மெத்தைகள் ஒவ்வொன்றும் தரமான பஞ்சில் செய்திருக்க வேண்டும். கையை வைத்தவுடன் உள்ளே நன்றாக அமுங்கியது. மெத்தையின் மிக அருகில் ஜன்னலின் வழியே எட்டிப் பார்க்கும் நீர். ஆக்சுவலி ஸ்பீக்கிங் இட் இஸ் எ பெஸ்ட் ஹனிமூன் ஸ்பாட்.
நான்கு படுக்கை அறைகள் கொண்ட படகு என்பதால் சற்றே நீளமான படகு. மெல்ல நடந்தாலே காலடி ஓசை கேட்கும் அளவிற்குப் படகில் ஓர் அமைதி நிலவியது. மெதுவாக நடந்து படகின் பின்புறம் சென்றேன். கிச்சனில் எங்களுக்குத் தேவையான பதார்த்தங்கள் தயாராகிக் கொண்டிருக்க மூன்று இளைஞர்கள் மும்மரமாக சமையலில் ஈடுபட்டிருந்தார்கள். ஒருவர் மீன் நறுக்கிக் கொண்டிருக்க மற்ற இருவரும் வேறு ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்த என்னைப் பார்த்ததும் புன்னகைத்துவிட்டு மீண்டும் குனிந்து கொண்டார்கள். அங்கிருந்த பிர்ட்ஜை திறந்து தண்ணீர்ப் புட்டியை எடுக்கும் போது தான் கவனித்தேன், தேர்ந்தெடுத்த பழச்சாறு கொண்டு தயாரிக்கபட்ட வேறு சில புட்டிகளும் இருந்ததை, சரி. எனக்கு அது தேவையில்லாத விஷயம். அங்கிருந்து அவர்களைக் கடந்து படகின் பின்புறம் சென்றேன். சமநேரத்தில் என் குடும்பத்தார் தங்கள் இருப்பை டிஜிட்டலில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். படகிற்கு வெளியில் நீர் சலனமற்று ஓடிக் கொண்டிருக்க படகின் பின்புறம் இருந்த அறையில் நாங்கள் பயணிக்க இருக்கும் டைட்டானிக் கப்பலைக் கிளப்புவதற்குத் தேவையான முன்ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் எங்கள் கேப்டன்.
துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல்கள் போல வரிசை வரிசையாக ஒவ்வொரு படகாகக் கிளம்பிச் சென்று கொண்டிருந்தன. சில படகுகள் வெளிநாட்டுக் காரர்களுக்காகவும் சில படகுகள் தேனிலவைக் களிபதற்காகவும் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருக்க, பெரும்பாலான படகுகள் பலரது அலுவலகத்து இம்சைகளை மறப்பதற்காக பயணப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது 'எப்படா எங்கள் படகை எடுப்பார்கள்' என்ற நிலைக்கு வந்திருந்தோம். ரஸ்னா போன்ற சுவையுடைய வெல்கம் டிரிங் வந்து சேர்ந்தது. அப்போது கிளம்பிய பசிக்கு அதுவே போதுமானதாக இருக்க சமநேரத்தில் மாலுமி எங்கள் கப்பலைச் செலுத்தத் தொடங்கியிருந்தார்.
அதுவரை கேரளத்தின் பசுமை நிறைந்த ஊர்களையும், வளைந்து நெளிந்து பயணிக்கும் சாலைகளையும், அவ்வபோது வந்து போகும் ஆறுகளையும் மட்டுமே காண்பித்துக் கொண்டிருந்த கேரளம் தனது வரைபடத்தின் மற்றொரு முக்கியமான அங்கத்தைக் காண்பிக்க தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது. நாங்களும் அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தோம்.
படகு கிளம்பிய சில நிமிடங்களிலேயே கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் நீர் நீர் நீரைத் தவிர வேறெதையும் பார்க்க முடியா ஒரு இடத்தை அடைந்திருந்தோம். இதுவரைக்கும் கடலை மட்டுமே அத்தனை பிரம்மாண்டமாய் கற்பனை செய்து பார்த்திருந்த என் கண்களுக்கு இந்த நீர்பரப்பு நம்ப முடியாத ஒரு காட்சியை பரிணமித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் ஆங்காங்கு சிறுசிறு புள்ளிகளாக நூற்றுக் கணக்கான படகுகள் தங்கள் நீர்வழிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க, நாங்களும் அவர்களில் ஒருவராக அனுமதிக்கப்பட்டிருந்தோம். ஆச்சரியத்தில் சந்தோசத்தில் இன்னெதென்று கூறமுடியா மனநிறைவில் கண்களை சுழல விட்டுக்கொண்டே இருந்த நேரத்தில் படகு இருபது கிமீ வேகத்தில் நீரைக் கிழித்துக் கொண்டிருந்தது..
படகின் கீழே சலனமற்று ஓடிகொண்டிருக்கும் இந்த நீர் ஆற்று நீர் தான் ஆனால் ஆற்று நீர் அல்ல. ஆற்றில் இருந்து பிரிந்து வந்த கழிமுகத்து நீர். ஒவ்வொரு ஆறும் கடலை நோக்கிப் பாயும் போது தங்களுக்குள்ளாகவே இருவேறு பாதைகளை ஏற்படுத்திக் கொள்கின்றன. ஒன்று சுழித்து வேகமாய் ஓடும் பாதை,. மற்றொன்று எவ்வித சலனமும் இல்லாமல் கடலை சென்று சேர்ந்தால் போதும் என்ற அசமந்தத்தில் பயணிக்கும் பாதை. இப்படியாக பத்துக்கும் மேற்பட்ட பெரிய ஆறுகள் மற்றும் இன்னபிற நீரோட்டங்கள் இணைந்து இந்தக் கழிமுகத்தை ஏற்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட இருநூறு சதுரகிமீ பரப்பளவுள்ள இந்தக் கழிமுகமானது இந்தியாவிலேயே மிகபெரிய நன்னீர் ஏரியாகும். ஆனாலும் வருடம் முழுவதும் நன்னீராக இருப்பதில்லை.
மார்ச் முதல் ஜூலை வரை மழைபொழியாத காலங்களில் இந்தப் பகுதியில் நன்னீர் வரத்துக் குறையும் போது ஏரியின் மட்டம் கடல் நீரின் மட்டத்தைக் விடக்குறைகிறது. இதைச்சாக்காக வைத்து கடல் நீர் உள்ளே புகுந்து மொத்த நீரும் உப்பு நீராகிறது. மழைக்காலங்களில் நன்னீர் வரத்து மிக அதிகமாக இருப்பதால் நன்னீர் மட்டம் உயர்ந்து தங்கள் பங்கிற்கு கடல்நீரைப் பழிவாங்குகிறது. அதனால் இங்கு ஒவ்வொரு ஆறுமாதங்களிலும் இருவேறு உயிர்ச்சூழல் நிலவுகிறது. குறைந்தபட்சம் மூன்று அடி ஆழத்தில் இருந்து அதிக பட்சமாக நாற்பது அடி வரை ஆழம் இருக்கிறது. இந்த ஏரியில் நீரின் ஆழம் எப்போதுமே சமநிலையில் இருப்பதில்லை என்பதால் ஆழத்தைக் கணக்கிடுவதற்காக ஆங்காங்கு குச்சிகளை நட்டுவைத்துள்ளனர். அவற்றின் மீது எங்கிருந்தோ வந்த அயல்தேசத்துப் பறவைகள் இளைப்பாறிக் கொண்டிருந்தன. பல தேசங்களில் இருந்தும் பறவைகள் வந்து போவதாகக் கூறுகிறார்கள். இப்படியாக வந்து போகும் பறவைகள் பறவைக் காதலர்களின் கண்களுக்கு நல்ல விருந்து படைக்க, நமக்கோ பறவையினத்திலே சற்றே உயரிய இனமான கோழியானது விருந்து படைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
எங்கள் படகு நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சரியாக நாற்பதாவது கி.மீட்டரில் கடல் இருப்பதாகக் கூறினார் எங்கள் கேப்டன். கண்ணும் கருத்துமாய் படகை செலுத்திக் கொண்டிருந்தவரின் அருகில் போய் அமர்ந்து கொண்டேன். பின்னே இந்தப் பதிவுக்கு மேலதிக தகவல் வேண்டாமா. என்னுடைய விசாரணைகளும் அவருடைய விவரணைகளும் ஆரம்பமாகியது. கடந்த பதினைந்து வருடங்களாக இதே தடத்தில் பல்வேறு வகையான மனிதர்களுடன் பயணித்துக் கொண்டுள்ளார். நன்றாகவே மலையாளத் தமிழ் பேசுகிறார், அதனால் அவரிடம் இருந்து தகவல்களைப் பிடுங்கவதில் அப்படி ஒன்றும் சிரமம் இருக்கவில்லை. இல்லை என்றாலும் மாமாவுக்கு மலையாளம் தெரியுமென்பதால் மொழி பெரிய பிரச்சனையில்லை.
இந்த கழிமுகத்துக் கரையில் ஏகப்பட்ட சிறுகுறு கிராமங்கள் இருக்கின்றன. இவர்கள் அத்தனை பேருக்கும் படகு தான் முக்கிய போக்குவரத்துச் சாதனம். தூரத்தில் இரண்டு அடுக்குகள் கொண்ட படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. கீழே நான்கு மேலே நான்கு என மொத்தம் எட்டு படுக்கையறை வசதி கொண்டது. மூன்றாவது தளத்தில் ஒரு சிறிய நீச்சல் குளம் வேறு இருக்கிறதாம். ஷெராட்டன் மற்றும் ஓபராய் விடுதிகளுக்குச் சொந்தமான உல்லாசப் படகு அது. அங்கு அறையெடுத்துத் தங்கும் நபர்களுக்கு மட்டுமே அதில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும்.
நீச்சல் குளத்துடன் கூடிய இரண்டடுக்குப் படகு இல்லம் |
டிசம்பரில் இருந்து ஜூன் வரைக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகளின் கூட்டம் அதிகமாய் இருக்குமாம். இந்த மொத்தக் கழிமுகத்தையும் சுற்றிவர ஒருவாரமாகுமாம். வெளிநாட்டுவாசிகள், ஆராய்ச்சியாளர்கள், திரைத்துறையினர் போன்றவர்கள் இந்த ஒருவாரப் படகுப் பயணத்தை தேர்ந்தெடுக்கும் நபர்கள் என்று கூறினார். சில இடங்களில் வலை கட்டிவைத்து அதன் நடுவில் குண்டு பல்பு தொங்க விட்டிருந்தார்கள். இரவு நேரத்தில் அந்த பல்பை எரிய வைத்தால் அதில் இருந்து வரும் வெளிச்சத்தின் கவர்ச்சியில் பல்பை நோக்கி வரும் மீன்கள் வலையில் மாட்டிக் கொள்ளுமாம். வலை விரிப்பதில் மனிதர்கள் தாம் கெட்டிக்காரர்கள் ஆயிற்றே. நல்லாவே விரித்திருந்தார்கள்.
கொஞ்சநேரம் படகோட்டியுடன் பேசிகொண்டிருந்த கௌதம், அவரிடம் படகை ஓட்டுவது எப்படி என்று கேட்க, மறுப்பெதுவும் சொல்லாமல் கற்றுகொடுக்க ஆரம்பித்தார். சில நிமிடங்களுக்கு அவனும் மாலுமி ஆகியிருந்தான். பின்னர் கொஞ்சம் நேரம் சொந்தக்கதை சோகக்கதை பேசியபடி பயணித்துக் கொண்டிருந்த நாங்கள், சிறிதுநேரத்தில் ஒரு புதிய விளையாட்டைக் கண்டுபிடித்து விளையாடத் தொடங்கினோம். இடையிடையே கொண்டு வந்திருந்த அல்வாவும் மிக்சரும் உள்ளே நொறுங்கிக் கொண்டிருந்தன. விளையாட்டு முடிவடையும் தருவாய்க்கு வர படகையும் அருகிலிருந்த கரையோரம் ஒதுக்கியிருந்தார்கள் மதிய உணவிற்காக.
மணி ரெண்டை நெருங்கியிருந்தது. நல்லபசி. சாம்பார் ரசம் மோர் ஒருபக்கம் இருக்க நல்ல சுடச்சுட மீன்குழம்பும் மீன்பொரியலும் எங்கள் பசியை அடக்கத் தயாராயிருந்தன. பசிக்கு ருசி தெரியாதென்றாலும் சும்மா சொல்லக் கூடாது நல்லருசி. நல்ல சமையல்.
*****
மீண்டும் படகு அங்கிருந்து வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது. தூரத்தில் ஒரு ஒரு சிறிய மேட்டின் மீது சின்ன சின்ன மரம் செடிகள் வளர்ந்திருப்பது போல் ஒரு இடம் தெரிய, அருகில் நெருங்க நெருங்கத்தான் தெரிந்தது, அது சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள குட்டித் தீவு என்று. அந்த தீவின் அருகில் ஆழம் இரண்டடி தான் இருக்கும் என்பதால் படகு அங்கு செல்லமுடியாது என்று கூறிவிட்டார். இந்நேரத்தில் ஒரு ஸ்பீட்போட் எங்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்து, வந்த வேகத்தில் ஒரு வட்டமடித்து நின்றது. என்னவென்று கேட்டோம். அந்தக் போட்டில் ஒரு ரவுண்ட் போய்வர தலைக்கு நூறு ரூபாயாம். ஆசை யாரை விட்டது. ஸ்பீட் போட்டில் ஏறிக் கொண்டோம். ஏரி நீர் முகத்தில் அறைய அந்தக் குட்டித் தீவை ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டுவந்து இறக்கிவிட்டார். எங்களைப் பார்த்த பக்கத்து போட்டுக்காரர்களும் அவர்களை அழைக்க நொடிப்பொழுதில் அவருக்கு டிமாண்ட் ஜாஸ்த்தியாகிவிட்டது.
குட்டித் தீவு |
குமரகத்தில் போட்ஹவுஸில் பயணிக்க விரும்பவில்லை சும்மா போட்டிங் மட்டும் போதும் என்று நினைத்தீர்கள் என்றால் அதற்கும் வழி இருக்கிறது.
போட் ஹவுஸ் என்றால் தோரயமாக... (சீசனுக்கு சீசன் விலை மாறுபடும்)
- சிங்கிள் பெட்ரூம் 7000/-
- டபுள் பெட்ரூம் 9000/-
- ட்ரிபிள் பெட்ரூம் 11000/-
- போர் பெட்ரூம் 13000/-
சில படகுகளில் பால்கனி வசதியுடன் கூடிய மேல்தளமும் இருக்கின்றன. என்ன காசுதான் கொஞ்சம் அதிகம். மேலும் அனைத்து சிங்கிள் பெட்ரூம் படகுகளிலும் பால்கனி வசதியுள்ளது. ஆழப்புழை குமரகம் போட்ஹவுஸிற்கான மிக முக்கியமான சுற்றுல்லாத்தலங்கள். தென் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு குமரகமும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு ஆழப்புழையும் வந்து போவதற்கு வசதியான இடங்கள்.
ஸ்பீட் போட் |
மாலை கொஞ்சம் கொஞ்சமாக மயங்கத் தொடங்க, தூக்கம் யாருடைய அனுமதியும் கேட்டுப் பெறாமல் கண்களைச் சுழற்றத் தொடங்கியிருந்தது. கூடவே சேர்ந்துகொண்ட குளிர்ந்த காற்றும் சூழ்நிலையை ஏகாந்தப்படுத்த ராம்சங்கர் தூங்கியே விட்டான். நான் மாமா கௌதம் மூவரும் படகின் விளிம்பில் ஓரிடத்தில் உட்கார்ந்து கொள்ள, பஸ்ஸில் புட்போர்டு அடிப்பது போல் படகில் புட்போர்ட் அடித்துக் கொண்டிருந்தோம். சமநேரத்தில் சூடான நேத்திரப் பழம் பஜ்ஜியுடன் கூடிய சுவையான டீயும் வந்து சேர மீண்டும் புத்துணர்ச்சி அடைந்திருந்தோம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள் கேரளா சென்றால் தவறவிடக் கூடாத பதார்த்தம் இந்த நேத்திரம் பழம் பஜ்ஜி. செம டேஸ்ட்டு.
தூரத்தில் ஒரு மிகபெரிய பாலம் கண்ணில் தட்டுபட்டது. கோட்டயத்தையும் ஆழப்புழையையும் இணைக்கக் கூடிய மிக முக்கியமான பாலம். பாலத்தின் நீளம் மட்டும் இரண்டு கிமீக்குக் குறையாமல் இருக்க வேண்டும். அதன் இரு ஓரங்களிலும் சற்றே அளவில் பெரிய படகு செல்லும் வகையில் வழி இருக்கிறது, அதன் உள்புகுந்து மறுபுறம் சென்றால் கடலுக்குச் செல்லும் பாதையை அடையலாம். பாலத்தின் மறுபக்கத்தில் மீன்பிடித் தொழில் மும்மரமாக நடந்து வருவதால் மறுபக்கம் செல்வதற்குத் தடா. பாலத்தின் மிக அருகில் செல்லச் செல்லச் தான் தெரிந்தது அதுவும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் என்று. அந்தவழியாகப் பயணிக்கும் மக்கள் அனைவரும் அங்கு சிறிது நேரம் நின்று இயற்கையை அனுபவித்துவிட்டே செல்கிறார்கள்.
மெல்ல இருட்டத் தொடங்கியது. வழியில் ஓரிடத்தில் மீன் வாங்கலாம் என்று சென்றால், எங்களுக்கு முன் வந்தவர்கள் மீன்கள் அனைத்தையும் அள்ளிச் சென்றிருக்க வெறும் இரால் மட்டுமே எஞ்சியிருந்தது. சரி அதுவாவது பிழைத்துப் போகட்டும் என விட்டுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். செல்லும் வழியில் படகு கட்டும் இடம் பரமாரிக்கும் இடம், எப்படிப் பராமரிப்பார்கள், எவ்வளவு நாளுக்கு ஒருமுறை பராமரிப்பார்கள் போன்ற தகவல்களைக் கூறிக்கொண்டே வந்தார் எங்கள் கேப்டன். சிலநிமடங்களில் படகை நிறுத்த வேண்டிய இடம் வந்து சேர, அன்றைய இரவு அங்கே தான். படகை இழுத்துப் பிடித்துத் தென்னை மரத்தில் கட்டி வைத்தார்கள்.
இங்கே படகோட்டிகள் அனைவரும் தாங்கள் நினைத்த இடங்களில் எல்லாம் படகுகளை நிறுத்திவிடுவதில்லை. மூன்று மூன்று படகுகளாகவே நிறுத்துகிறார்கள். அதில்தான் ஒரு சூட்சுமமும் ஒளிந்துள்ளது. இங்கிருக்கும் அத்தனைப் படகுகளிலும் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்டிருந்தாலும் பகல் நேரத்தில் அதனை போடுவதில்லை. இரவில் உறங்கும் சமயத்தில் மட்டுமே போடுகிறார்கள். அதனால் அருகருகில் நிப்பாட்டப்பட்டிருக்கும் இந்த மூன்று படகுகளுக்கும் ஒரே ஒரு பெரிய படகில் இருந்தே மின்சாரம் சப்ளையாகிறது. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் வந்திருந்த படகு பெரிய படகு என்பதால் எங்களிடம் இருந்து மற்ற படகுகளுக்கு மின்சாரம் சென்றது. இதற்காகவே பிரத்யேகமான பெரிய ஜெனரேட்டரைப் பொருத்தியிருக்கிறார்கள்.
குளிப்பதற்கு ஓர் இடம் தேடி வெகுதூரம் சென்றும் எங்குமே சுத்தமான நீர் இல்லை என்பதால் வந்தவழியே திரும்பிவிட்டோம். இந்நேரத்தில் மழை வலுக்கத் தொடங்கியிருந்தது. வெளியே பரந்து விரிந்த நீர்ப்பரப்பு, சுற்றிலும் கார்மேகங்கள், மொத்தமாக இருட்டியிருக்க தூரத்தில் ஆங்காங்கு நின்று கொண்டிருந்த படகுகள் மஞ்சள் ஒளியை ஏற்றிவிட்டிருந்தன. மழை பொழியும் சப்தம் தவிர வேறு எதுவும் இல்லா அமைதி. வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய சூழல் அது. அனுபவித்துக் கொண்டிருந்தோம். மழை வெறித்த இடைவெளியில் தவளைகளும் சில்வண்டுகளும் தங்கள் இசை மழையை ஆரம்பித்திருந்தன.
படகில் ரிலையன்ஸ் டிஷ் வசதி இருக்க சிரிப்பொலியில் கவுண்டமணியும் செந்திலும் தங்கள் பங்கிற்கு எங்கள் கவலைகளை மறக்கச் செய்து கொண்டிருந்தார்கள். லேசாக அடித்த காற்றில் படகு அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருக்க இரவு உணவிற்குப் பின் மெத்தையில் படுத்தது தான் தெரியும் விடிந்திருந்தது.
லேசான தூறலுடன் ஆரம்பித்த அன்றைய காலை பலத்த மழையுடன் நீளத் தொடங்கியது. தண்ணீரில் கைவைக்க முடியா அளவிற்க்குக் குளிர்ந்து கிடக்க, அந்த நீரில் தான் குளிக்க வேண்டுமாம் 'நாங்கல்லாம் கொடைக்கனால்லையே பச்ச தண்ணியில குளிச்சவங்க எங்க கிட்டயேவா!'. குளித்துமுடித்து காலை சாப்பாடு முடிய மணி ஒன்பதாகியிருந்தது. கார்மேகங்கள் இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.
ஒரு இரவுக்குப்பின், ஆரம்பித்த இடத்தை நோக்கிய பயணம் தொடங்க, இப்போதுதான் படகினுள் நுழைந்தது போல் இருந்தது அதற்குள் முடியப்போகிறதே என்ற கவலை எங்களைச் சூழ்ந்து கொண்டது. இந்நேரத்தில் காற்றின் வேகம் தாறுமாறாக அதிகரித்திருந்தது. எங்களுக்கு முன்னே மேகங்கள் கறுப்புப் பலூன் போல் கீழே இறங்கிக் கொண்டிருக்க அவசர அவசரமாக படகை கரையோரம் திருப்பினார் படகோட்டி. என்னாச்சு என்றேன். ஒரு பெரிய சுழல் காத்து வருது, அதுல போனா போட்ட சாச்சுரும். அது போனதும் போகலாம் என்றார். எப்படிக் கண்டுபுடிச்சீங்க என்றேன். எங்களுக்கு தெரியும் என்றார். அவருக்குத் தெரியும் என்பது எனக்கும் தெரியும். ஆனால் எப்படி?. சில கேள்விகளுக்கான பதில் எழுதப்படவில்லை. அனுபவத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை.
அடுத்து ஒரு க்ரூப் சென்னையில் இருந்து வந்திருப்பதாகக் கூறினார். பேங்க் ஆபீசர்ஸாம். உடனே கிளம்ப வேண்டி இருக்கும் என்று கூறினார்.
என்றைக்குமே இயற்கை இயற்கை தான். அது தரக்கூடிய அமைதியை ஆன்ம திருப்தியை வேறு எதனாலும் கொடுக்கவே முடியாது. மீண்டும் ஒருமுறை படகை முழுமையாகச் சுற்றிப்பார்த்தேன். தன்னுடைய அடுத்த பயணத்திற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது. நேற்றைய தினத்திலேயே இருந்திருக்கலாம். இருந்தாலும் வேறு வழியில்லை. எங்கள் பொருட்கள் அத்தனையையும் அங்கிருந்து எடுத்துக் கொண்டு நினைவுகளை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் தென்காசி நோக்கிக் கிளம்பினோம்.
பின்குறிப்பு 1 : குமரகம் போட்ஹவுஸ் சென்று வந்து ஒரு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. நானும் வந்தநாளில் இருந்து எழுத முயன்று தடைபட்டுக் கொண்டே இருந்த பதிவு இது. ஒவ்வொரு முறை மாமா போன் செய்யும் போதும் எழுதிட்டியாடா எழுதிட்டியாடா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். நானும் 'இன்னிக்கும் எழுதுறேன் மாமா, நாளைக்கு எழுதுறேன் மாமா ' என்று டபாய்த்துக் கொண்டே இருந்தேன். ஒருவேளை அவர் தொடர்ந்து கேட்டிருக்காவிட்டால் எழுதியிருப்பேனா தெரியாது. இதுவரை எந்தப் பதிவையும் யாருக்கும் டெடிகேட்டியது இல்லை. இந்தப் பதிவை அவருக்கு டெடிகேட்டுகிறேன் :-)
பின்குறிப்பு 2 : வாய்ப்பு கிடைத்தால், வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, கடனவுடன வாங்கி வாய்ப்பை உருவாக்கிக் கொண்டாவது ஒருமுறை சென்று வாருங்கள். இயற்கை அது தரும் தனிமை, நமக்குப் பிடித்தவர்களின் அருகாமை இவையனைத்தும் ஒன்றுகூடும் போது கடவுளின் தேசம் உங்களுக்கொரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பது உறுதி.
பின்குறிப்பு 3 : பதிவு கொஞ்சம் பெருசாயிருச்சு. மன்னிச்சு. எவ்வளவோ தாங்கிட்டீங்க. இதையும் தாங்கிக்க மாட்டீங்களா :-)
Tweet |
Soopperr seenu.
ReplyDeleteFantastic travelogue.
Reservation process may be posted.
மிக்க நன்றி ஜெயராஜன் சார்
Deletehttp://www.kailasamhouseboat.com/Boats.htm நாங்கள் சென்ற ஹவுஸ்போட்டின் இணைய தளம்... போன் மூலம் புக் செய்து கொள்ளலாம்... மேலதிக தகவல் வேண்டுமானால் எனக்கு ஒரு மின்னசல் செய்யுங்கள் :-)
Thanks Seenu...
Deleteஉண்மையில் ஆலாப்புழா படகு வீடு தனிச்சுகம் அனுபவவீத்தேன் §ஆத்தோடு உங்கள் குறிப்பும் தனிச்சுகம்!மீண்டும் போகும் ஆசை பார்ப்போம் அமையும் போது ஆமா எண்ணை மாசாஸ், பணம் திருட்டு எல்லாம் அனுபவிக்கவில்லை பாஸ்§ஈஈ
ReplyDeleteநேசன் அண்ணே எனக்கு முன்னாடி எல்லா ஊரையும் சுத்தி இருக்கீங்க போலியே
Deleteகண்டிப்பாக ஒரு முறையாவது இந்த படகு வீட்டில் பயணிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். அடுத்த முறை இந்தியா வரும்போது முயற்சிக்க வேண்டும்.
ReplyDeleteஅழகான படங்களுடன் விரிவான தகவல்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி
நிச்சயமா சொக்கன் சார்.. ஆஸ்திரேலியால கூட இப்படி இருக்கலாம்.. இருந்தாலும் இது நமது கடவுளின் தேசமாயிற்றே :-)
Deleteஅவசியம் ஒருமுறையாவது இவ்வீட்டில் தங்கிப் பார்க்க மனம் ஏங்குகிறது நண்பரே
ReplyDeleteதம +1
கண்டிப்பா சார்
Deleteமுதலில் இந்தப் பதிவு நீளமாயிருக்கே என்றுதான் நானும் ஸ்க்ரால் செய்து பார்த்து நினைத்தேன். ஆனால் இதற்கு மேல் இதைச் சுருக்கமாக எழுத முடியாது. உங்களால்தான் எனக்கு இப்படி ஒரு இடம் இருப்பது தெரிகிறது. அருமை சீனு. ஒருதரமாவது கட்டாயம் போகணும். ஒரு வாரம் என்றால் எவ்வளவு சார்ஜ் கேட்பார்கள்? (தெரிந்து கொள்ள மட்டும் கேட்கிறேன். நமக்கு ஒரு நாளுக்குமேல் தாங்காது) சைவ உணவுகளுக்கும் வழி உண்டா?
ReplyDeleteசைவ உணவுகளுக்கும் வழி உண்டு சார்! நமது சாய்ஸ் தான்....
Deleteகுமரகம் ரொம்ப ஃபேமஸ் சார்......அதுவும் போட் ஹவுஸ்...நம்ம வாஜ்பாய் கூட ஒரு முறை இங்க தங்கி முட்டி வலிக்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டார்னு செய்தி வந்துச்சு....அப்புறம் நம்ம ரஜனிகாந்த்......இப்படிப் பல பிரபலங்கள்......நிறைய நடிகர்கள் ஜெயராம் போட்ட எடுத்துக்கறாங்கனும் ஒரு முறை செய்தி வந்துச்சு.....ஆனா, பிரபலங்கள விடுங்க...இப்பா சாமானிய மக்களும் கூட புக் பண்ணறாங்க.....
Deleteநன்றி துளசிதரன்ஜி.
Deleteஸ்ரீராம் சார்
Delete//ஆனால் இதற்கு மேல் இதைச் சுருக்கமாக எழுத முடியாது. // இது வ.புகழ்ச்சி இல்லையே :-)
நீங்கள் நல்லா என்ஜாய் செய்வீர்கள் சார்.. தவறாது உங்கள் குடும்பம் கேஜி சார் குடும்பம் எல்லாரையும் கூட்டிச் சென்று வாருங்கள்
துளசிதரன் சார்,
அங்குள்ள ஆயில் மசாஜ் மற்றும் ரிசார்ட் பற்றி குறிப்பிட நினைத்தேன் ஏற்கனவே பதிவு நீஈஈண்டு விட்டது, அதான் டீல்ல விட்டுட்டேன்.. நீங்க குறிப்பிட்டதுக்கு மிக்க நன்றி :-)
நமக்கும் இதுவரை சந்தர்ப்பமே அமையலை:( இந்த வருடக் கேரளப்பயணத்தில் ஒரு நாள் இதுக்காகவே ஒதுக்கிடணும் என்ற எண்ணம் வலுவாக இருக்கு, உங்க பதிவு பார்த்ததும்!
ReplyDeleteஅந்த நேந்திரம் பழம் பஜ்ஜிக்கு 'பழம்பொரி'ன்னு பெயர். பழம் பொரிச்சது! இதை வச்சு ஒரு பதிவு எழுதத்தொடங்கி பாதியில் கிடப்பில் இருக்கு. இப்போ தூசி தட்டப்போறேன்:-)
//இந்த வருடக் கேரளப்பயணத்தில் ஒரு நாள் இதுக்காகவே ஒதுக்கிடணும் என்ற எண்ணம் வலுவாக இருக்கு, // கண்டிப்பா போயிட்டு வாங்க டீச்சர்..
Delete//இப்போ தூசி தட்டப்போறேன்:-)// ஹா ஹ ஹா சூப்பர் :-)
//அருகருகில் நிப்பாட்டப்பட்டிருக்கும் இந்த மூன்று படகுகளுக்கும் ஒரே ஒரு பெரிய படகில் இருந்தே மின்சாரம் சப்ளையாகிறது//
ReplyDeleteநான் சென்றிருந்தபோது படகை ஒரு ஊரில் கரையோரம் நிறுத்திவிட்டார்கள். கரைக்கு அந்தப்பக்கம் ஒரு பெரிய வீடு. அதுதான் படகு ஓனரின் வீடாம். அங்கிருந்து வயர் இழுத்து ஏசிக்கு கரண்ட் சப்ளை கொடுத்தார்கள்....
ஆக்சுவலா உங்க பதிவும் படகு இல்லம் செல்வதற்கான ஆர்வத்தைத் தூண்ட ஒரு காரணம்.. ஒரு படகு இல்லப் பயணம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொண்டதே உங்கள்; பதிவு பார்த்து தான் :-)
Delete1. சுவற்றில் மாற்றப்பட்ட டிவி - சுவரில் மாட்டப்பட்ட டிவின்னு வரணும். சுவற்றில் என்று எழுதுவது இலக்கணப் பிழை.
ReplyDelete2. படகில போய்க்கிட்டிருந்தப்பவும் காலையிலயும் நல்லா மழை பெய்ஞ்சதுன்னு சொல்ற.... அதுல நனைஞ்சு ஆனந்தமாக் குளிச்சு அனுபவிக்கறத விட்டுட்டு.... போய்யாங்...
3. பதிவு கொஞ்சம் பெரிசாயிடுச்சா...? டேய்... இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியல.... ரொம்ம்ம்பப் பெரிசாயிடுச்சு. ராம்குமாரை மிஞ்சிச் சாதனை படைச்சுட்ட.
4. இதுவரைக்கும் படகுப் பயணத்தின் மேல அதிக ஈடுபாடு இல்லாம இருந்த என்னை உன் விரிவான அனுபவப் பகிர்வு அபரிமிதமான ஈடுபாட்டை உண்டாக்கிடுச்சு. வெல்டன்.
5. மிதத்தல் இனிதுதான். மிதந்து கொண்டே பறத்தல் அதனினும் இனிது. அது உன்னால முடியாது. எங்களால முடியுமே..... ஹி... ஹி.. ஹி....
பாயின்ட் பாயின்ட்டாவே சொல்லிட்டிங்களா :-) அது எழுதி முடிக்கவே ரொம்ப நேரம் ஆயிருச்சா எழுத்துப் பிழை பார்க்க தாவு இல்ல :-) ஓரளவுக்கு திருத்திட்டேன் ஆனா எத்தனவாட்டி படிச்சாலும் எங்கியாது ஒன்னு ரெண்டு தட்டுப்படுது :-)
Deleteபிரிக்க முடியாதது எதுவோ ?
சீனுவும் எழுத்துப்பிழையும் :-)
ஆவி கிட்ட பேசிட்டு அங்க ஒரு ட்ரிப்ப போட்ரலாம்..
சூப்பர் சூப்பர்....சீனு! பதிவு பெரிசா....யாருங்க சொன்னது? நாங்களும்ல உங்க கூட போட்டுல வந்தோம்........
ReplyDeleteஎன்றைக்குமே இயற்கை இயற்கை தான். அது தரக்கூடிய அமைதியை ஆன்ம திருப்தியை வேறு எதனாலும் கொடுக்கவே முடியாது. // உண்மை உண்மை! சத்தியம்!
வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தான், பக்கத்து மாநிலங்களில் இருந்து வருபவர்கள்தான் இதை அதிகம் அனுபவிக்கின்றார்கள்! கேரளத்தில் உள்ளவர்கள் இதில் பயணித்துக் கொண்டாடுகின்றார்களா என்றால் குறைவுதான்......ஆனால் கேரளத்துக்காரர்களாயிருந்தாலும் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டிய ஒன்றுதான்....
சினிமாக்காரர்கள் பயணிக்கலாம்....ஷூட்டிங்க் என்று...நடிகர் ஜெயராம் கூட ஒரு போட் ஹவுஸ் சொந்தமாக வைத்திருப்பதாகத் தகவல் உண்டு.
நல்ல அருமையான பதிவு சீனு....போட்டின் பயண நடை மிக அற்புதம்....
//யாருங்க சொன்னது? நாங்களும்ல உங்க கூட போட்டுல வந்தோம்........// ஹா ஹா ஹா நன்றி சார்..
Delete//பக்கத்து மாநிலங்களில் இருந்து வருபவர்கள்தான் இதை அதிகம் அனுபவிக்கின்றார்கள்! // அது கிட்டத்தில் இருந்தால் அதன் மதிப்பு தெரியாது என்பார்களே அதுதான் காரணம் :-)
//போட்டின் பயண நடை மிக அற்புதம்...// மிக்க நன்றி சார்.. நளதமயந்தி பார்த்ததில் இருந்து பாலக்காடு பார்க்க வேண்டிய பட்டியலில் இருக்கிறது.. சமயம் கிட்டுமோ :-)
குமரகம் ,நல்ல அறிமுகம் .வித்தியாச அனுபவம் பெற நிச்சயம் செல்ல வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது உங்கள் பதிவு !
ReplyDeleteமிதப்பது ,பறப்பது வேறுபாட்டை பாலகணேஷ் ஜி அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன் !
த ம 8
மிக்க நன்றி பகவான் ஜி.. நல்லா அருமையான இடம்..
Deleteபாலகணேஷ் ஜி என்ன ஸ்கூல் பையனிடம் கேட்டால் கூட தெரியும் :-)
good write up :)
ReplyDeleteமிக்க நன்றி அப்துண்ணே... :-)
Deleteஅவ்ளோ பெரிய்ய பதிவுலாம் இல்லைணா!! மிகச்சுருக்கமான பயணக்கட்டுரைனு தான் சொல்லனும் !! அடுத்த மாசம் கிளம்ப ப்ளான் பண்ணிட்டேன்!! போட் ஹவுஸ்ல போகனும்னு ரொம்ப நாள் ஆசை ! ஆனா , அதப்பத்தி சரியான விவரம் தெரியாததால , மனசுக்குள்ளயே ஒரு ஓரத்துல கிடப்புல இருந்துச்சி!! அத தோண்டி வெளிய கொண்டு வந்துடுச்சி , உங்க பதிவு!!!
ReplyDeleteபாலகணேஷ் சார் சொன்னமாதிரியே மிதந்துகொண்டே பறந்துட்டு வரேன்!!! :-)
தம்பி நீ ராமேஸ்வரம் பைக்ல போயிட்டு வந்ததா சொன்னே அத பத்தி ஏதும் எழுதுனியா.. இருந்தா லிங்க் ப்ளீஸ்
Delete// மிதந்துகொண்டே பறந்துட்டு வரேன்!!! :-)// எனக்கு தெரியும் நீ செய்யக் கூடிய ஆளுதான் :-)
அண்ணே!! நா சேலத்து பார்க் போன கட்டுரையே பத்து பக்கம்!! ராமேஸ்வரம் போனத பத்தி எழுதுனா , எப்படியும் 200 பக்கம் தாண்டும்!!! எழுதனுமா??
Deleteநல்ல பயணக் கட்டுரை சீனு. சில முறை கேரளம் சென்றிருந்தாலும் இந்த Boat House அனுபவம் மட்டும் தட்டிக்கொண்டே போகிறது. விரைவில் செல்ல வேண்டும்... பார்க்கலாம்! :)
ReplyDeleteஆவி பாஸ் உடனே வெங்கட் சார புடிங்க நமக்கு நிறைய ப்ரோபைல் பிக் கிடைக்கும் :-)
Deleteஅடுத்த முறை தமிழகம் வரும் போது முன்னரே சொல்கிறேன். ஒரு ட்ரிப் போயிட்டு வந்துடலாம்...... :)
Deleteயார் யார் வரீங்க!
Wow, enna arumaiyaana payanam Seenu-ji !! Anupavikkareenga.........enjoy !
ReplyDeleteசுரேஷ் சார்.. சும்மா காமெடி பண்ணாதீங்க.. இந்த விசயத்துல எனக்கு குரு நாயரே நீங்க தான் :-)
Deleteஅற்புதமான பதிவு தோழர்,
ReplyDeleteகலா மாஸ்டர் ஸ்டைல்ல சொல்லனும்னா கிழி, கிழி, கிழி....
தேனிலவுக்கு தேர்தெடுக்க நினைத்த இடம், வழிகாட்ட ஆள் இல்லாததால் அப்போ போகஇயலவில்லை.
இப்பத்தான் நீங்க இருக்கீங்கல்ல, அடுத்தமுறை இந்தியா வரும்போது போய்விட வேண்டியதுதான்.
//இப்பத்தான் நீங்க இருக்கீங்கல்ல, அடுத்தமுறை இந்தியா வரும்போது போய்விட வேண்டியதுதான்.// ஹா ஹா ஹா நன்றி நன்றி.. நிச்சயமா போயிட்டு வாங்க.. நல்லா ரிலாசேஷனா இருக்கும்
Delete//கலா மாஸ்டர் ஸ்டைல்ல சொல்லனும்னா கிழி, கிழி, கிழி....// :-)))))
அனைத்தும் நல்ல தகவல்கள் நன்றி நண்பரே....
ReplyDeleteமிக்க நன்றி ஜீ :-)
Deleteபோக மிகவும் விரும்பிய இடம் கிடைத்தால் மகிழ்ச்சி சொல்லிமுடியாது.
ReplyDeleteஅப்போ கண்டிப்பா போயிட்டு வாங்க :-)
Deleteநாங்களும் உங்களோட குமரகம் சென்று வந்த மாதிரி இருக்கு...
ReplyDeleteஇனிய அனுபவத்தை ஒரே பதிவில் முடித்துவிட்டீர்கள்... நீளமான பதிவு என்கிறீர்கள்... ஆனால் சட்டென முடிந்துவிட்டது போன்று இருக்கிறது...
ReplyDeleteவணக்கம் தோழர் ...
வாசிப்பவரை சலிப்படைய வைக்காமல்
எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் எழுதலாம் என்று நண்பர்
ஒருவர் சொல்லிருக்கார் ... உங்களின் எழுத்தில் எந்த இடத்திலும் சலிப்புதட்டவில்லை ...
போட்டோக்களில் இரண்டு பிரமாதமாக இருக்கிறது ...
ReplyDeletet:m 11
ReplyDeleteஅட மிக அருமையான இடமாக இருக்கே.....
ReplyDeleteசீனு.... அடுத்த பதிவர் சந்திப்பை இந்த இடத்தில் வைக்கச் சொல்லி
சிபாரிசு பண்ணுங்களேன்....
குமரகம் பற்றி படித்துள்ளேன். தற்போதைய தங்களின் பதிவு மூலமாக அதிகமான செய்திகளைத் தெரிந்துகொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்பாக வாஜ்பாயி (பிரதமராக இருந்தபோது என நினைக்கிறேன்) The Hindu நாளிதழில் அவருடைய குமரகம் பயணத்தின்போது அங்கிருந்து Musings from Kumarakhom என்று கட்டுரை எழுதியது இன்னும் நினைவில் உள்ளது. அப்போதுதான் முதன்முதலாக அந்த ஊரைப் பற்றி அறிந்தேன். நன்றி.
ReplyDeleteஅருமையான பகிர்வு. நாங்களும் உடன் வந்த உணர்வைத் தந்தது.
ReplyDeleteபடகுப் பயணம் செல்ல நீண்ட நாட்களாய் எண்ணம். சைவ உணவு கிடைக்குமா என்று தான் யோசனையாக இருந்தது....:) துளசிதரன் சாரின் தகவலுக்கு நன்றி.