20 Aug 2014

சுதந்திர தினத்திற்கு முந்தைய அந்த வியாழக்கிழமை இரவு

சுதந்திரதினத்திற்கு முந்தைய அந்த வியாழக்கிழமை இரவு மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. சாதாரணமாகவே சென்னையின் வார இறுதி இரவுகள் பரபரப்புடன் தான் கழியும் என்ற போதிலும் சனி ஞாயிறுடன் வெள்ளியும் சேர்ந்து கொண்டதால், புறநகரானது வாகன நெரிசலில் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது. பிறந்த வீட்டிற்குச் செல்வோர், புகுந்த வீட்டிற்க்குச் செல்வோர், எங்களைப் போல விடுமுறையைக் களிக்கச் செல்லும் நாடோடிகள் என்று சென்னை தன்னைக் காலி செய்து கொண்டிருக்க, கோயம்பேடு வடபழனியில் ஆரம்பித்த வாகனநெரிசல் தாம்பரத்தில் உச்சகட்டத்தை அடைந்திருந்தது. பெருங்களத்தூர் தாண்டி வண்டலூர் கடந்தால் மட்டுமே ஊருக்குச் சென்று சேரும் துல்லியமான நேரத்தைக் கூற இயலும். அதுவரைக்கும் 'சீக்கிரம் ட்ராபிக் குறைய வேண்டுமே' என நமக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டிருக்கலாமே ஒழிய அதுவாகக் குறையாத வரைக்கும் வாகனநெரிசல் குறைய வாய்ப்பே இல்லை. 

தாம்பரம் மேம்பாலத்தின் மீது பேருந்து ஊரும் போதுதான் கவனித்தேன் ஹிந்து மிஷன் ஆஸ்பத்திரியின் முன் நின்று கொண்டிருந்த அந்த மிகப்பெரிய கூட்டத்தை. குறைந்தது ஆயிரம் பேராவது நின்று கொண்டிருந்திருக்க வேண்டும். அத்தனையும் தாங்கள் செல்ல வேண்டிய ஆனால் அப்போதுவரை வந்து சேர்ந்திராத ஆம்னி பஸ்சுக்காகக் காத்துக் கிடந்த கூட்டம். அருகில் உட்கார்வதற்குக் கூட இடம் இல்லாத புறநகர்ச்சாலை அது. பொழுதன்னிக்கும் வேலை பார்த்திருந்த களைப்பில் கால்கள் நடனம் ஆடிக் கொண்டிருக்க மனம் என்னென்னவோ கணக்குப் போட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஒன்று அடுத்தவாட்டி எப்டியாது ட்ரைன்ல டிக்கெட் புக் பண்ணிறனும் இல்லாட்டி சீக்கிரம் ஒரு கார் வாங்கணும் அல்லது இனி இவ்ளோ கஷ்ட்டப்பட்டு ஊருக்கே போகக் கூடாது. 

தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையமே வெறிச்சோடிக் கிடந்தது. இரவு ஒன்பதரை மணிக்கு அந்தப் பேருந்து நிலையம் அப்படிக் கிடப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. வரிசையாக அடுக்கப்பட்ட இருக்கைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் படுத்திருந்தார்கள். ஒரேயொரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது. புதிதாய்க் கட்டப்பட்ட பேருந்து நிலையம் என்றாலும் சுற்றிலும் சிதறிக் கிடந்த குப்பைகளுக்குப் பஞ்சம் இல்லை. 

ஒரு ப்ரீ அட்வைஸ். ஒருவேளை சானிடோரியம் பேருந்து நிலையத்திற்குச் சென்றால் அங்கிருக்கும் இலவச நவீன கழிப்பிடதிற்குள் சென்று வாருங்கள். அங்கிருக்கும் கழிப்பறைக் கதவுகள் ஒவ்வொன்றும் ஆண் சமுதாயதிற்கு என்னவோ கூற விழைகின்றன. பல்லவனும் பாண்டியனும் சேர சோழனும் கூற விழையாத கருத்துகளை இவர்கள் தம் சிற்பங்கள் மூலம் கூற விரும்புகிறார்கள். விதவிதமான ஓவியத் தீட்டல்கள், ஆண்பெண்களின் போன் நம்பர்கள். அதற்கு ஆள் தேவையா இதற்கு ஆள் தேவையா விளம்பரங்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களை வஞ்சம் தீர்த்துக் 'கொல்லும்' வசைமொழிகள், வரும்போதே கையில் கரியையோ மார்க்கரையோ எடுத்து வந்துவிடுவார்கள் போல தீயா வேலை பார்த்திருக்கிறார்கள். 

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒன்பதரைக்கு தாம்பரத்திற்கு வந்திருக்க வேண்டிய பேருந்து இன்னும் கோயம்பேடுக்கே வந்திருக்கவில்லை. சுந்தர்ராமனிடம் இருந்து அவரசமாய் ஒரு கால் 'டேய் சீனு பஸ் இன்னும் சி.எம்.பி.டி.க்கே வரல. இப்ப தான் அண்ணாநகர் வெஸ்ட் தாண்டிருக்காம் என்றான். இப்போது இருக்கும் ட்ராபிக்கில் அண்ணாநகர் வெஸ்ட் டூ சி.எம்.பி.டிக்கு மட்டும் ஒரு மணிநேரம் ஆகும். இந்த லட்சணத்தில் சி.எம்.பி.டி டூ தாம்பரம். நாளை மதியத்திற்குள்ளாவது மூணாறு சென்று விடுவோமோ என்று யோசிக்கத் தொடங்கினேன். SRT ட்ராவல்ஸில் புக் செய்யும் போதே ஏதோ ஒரு சந்தேகம் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்போது விதி விளையாடிக்கொண்டுள்ளது.

சுதந்திர தினத்திற்கு முந்தைய அதே வியாழக்கிழமையில் சென்னையின் போக்குவரத்து நெரிசலைப் போலவே குருவும் உக்கிரம் அடைந்திருக்க வேண்டும். காலையில் இருந்தே வரிசையாய்ப் பிரச்சனைகள் கட்டம் கட்டத் தொடங்கியிருந்தன. மூணாறு பயணத்திற்கு வருவதாய்க் கூறியிருந்த மணி நம்பர் சுவிட்ச்ஆப். பேஸ்புக் மூலமாக தகவல் அனுப்பியும் பதில் எதுவும் இல்லை. ஒருவேளை அவன் வராது போனால் அதனால் ஏற்படும் நஷ்டம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் மொத்தமும் என் தலையில் விழும். காரணம் மூணாறு சென்று வருவதற்காக அவனுக்கும் சேர்த்து டிக்கட் புக் செய்திருந்த மகாபிரபு நான்தான். அதேநேரம் அவன் வராவிட்டால் ஆகப்போகும் மொத்தச்செலவின் சுமையும் எங்கள் ஒட்டுமொத்தக் குழுவின் தலையில் விழும். சரி அதையாவது சமாளித்துக் கொள்ளலாம். அந்த ஆயிரத்து ஐந்நூறுக்கு விடை.

காலையில் எழுந்ததில் இருந்து ஒரு நூறுமுறையாவது அவனுக்குப் போன் செய்திருப்பேன். நூறுமுறையும் 'த நம்பர் யு ஆர் ட்ரையிங் டூ ரீச் இஸ் கரன்ட்லி அன் அவைளபிள்' என்று கூறிய பதிலையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தது. அவனது ரூம் மேட், உடன் வேலை செய்யும் நண்பர்கள் என எத்தனையோ பேரைப் பிடித்தும் அவனை மட்டும் பிடிக்க முடியவில்லை. ஒருவழியாக ராமுவைப் பிடித்து அவன் அப்பாவைப் பிடித்தால் 'அவனா போன் போட்டு பேசினாத் தான் உண்டு. அவன் நம்பர் என்கிட்டயும் இல்ல' என பொறுப்பாகப் பதில் கூறினார். 'சரி இனி அவன நம்பிப் பிரயோசனம் இல்ல அந்த டிக்கட்ல வேற யாரைவது பிடிப்போம்' என வேறு யாரிடமாவது கேட்டால் 'எலேய் கடைசி நேரத்துல கூப்பிடுறியே அறிவு இல்ல' என அன்பாய்த் திட்டத் தொடங்கினார்கள். இடைபட்ட நேரத்தில் அலுவலகத்திற்கும் கிளம்ப வேண்டும். பேஸ்புக் சேவையும் ஆற்ற வேண்டும். 

இப்போது நான் டென்சனாய் இருப்பதைக் கண்டுகொண்ட குடும்பம் இதுதான் சாக்கு என மெல்ல தன் அர்ச்சனையைத் தொடங்கியது. 'இதுக்கு தான் சொல்றது சும்மா ஊர் சுத்தாத ஊர் சுத்தாதன்னு, இனிமே வாங்குற சம்பளத்த ஒழுங்கா கையில கொடு, இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் வேற பண்ணனும்!' என அம்மா ஆரம்பிக்க எங்களுக்கிடையிலான த்வந்த யுத்தம் தொடங்கியது. 

இடைப்பட்ட நேரத்தில் பலருக்கும் போன் செய்தால், பலரும் தங்களுக்கான வரமுடியாத காரணங்களுடன் தயாராயிருந்தனர். இந்நேரத்தில் தான் செல்வா போன் செய்து அவன் நண்பன் வருவதாய்க் கூற பிரச்சனை முடிந்தது. முடிந்தது என்று தான் சந்தோசப்பட்டேன். அவன் நண்பன் வருவதாய்க் கூறிய அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் செல்வாவிடம் இருந்து போன் 'சீனு அவன் வீட்ல எதோ வேல இருக்காம் வல்லியாம்' என்றான் சோகமாக. இப்போது மணியின் மீதிருந்த கோபம் உச்சபட்ச கோவமாய் மாறியிருந்தது. ஒரேநாளில் சென்ம விரோதியாய் மாறியிருந்தான். உள்ளுக்குள்ளோர் எரிமலைக் குமுறிக் கொண்டிருந்தது. வீட்டுக்குப் போனதும் முதல்ல அவன பேஸ்புக்ல இருந்து பிளாக் பண்ணனும். இப்போதெலாம் பெரும்பாலானோரின் உச்சபட்ச வன்முறையே யாரைவாது பிளாக் பண்ணுவது தானே :-)

அலுவலகத்தில் ஒவ்வொருவரிடமாக கேட்டுக் கொண்டிருந்தேன், அத்தனை பேறும் வேறு வேலையிருப்பதாகக் கூறி ஜகா வாங்க, ஒரு ஓரத்தில் அப்பாவி ஜீவன் ஒன்று கணினியைத் தட்டிக் கொண்டிருந்தது. 'தெய்வம் இருப்பது எங்கே, அங்கே' பாடல் பின்னால் ஒலிக்க மெல்ல அவனை நெருங்கினேன். 'நீ வாறியான்னு கேட்கல. வாறன்னு சொல்றேன்' சேது மாதிரி பஞ்ச் டயலாக் பேச ஆசைதான். பட் தம்பி எஸ் ஆயிட்டாருன்னா. மெல்ல ஆரம்பித்தேன். 'சூர்யா மூணாறு ட்ரிப் போறோம், ஒரு டிக்கெட் இருக்கு வாரியா' என்றேன். யோசிக்க ஆரம்பித்தான். அவன் யோசிப்பது ஒரு வகையில் நல்லது 'ஹி இஸ் கன்சிடரிங் மீ', ஆனா ஓவரா யோசிக்கிறது நல்லது இல்ல பயபுள்ள வரமாட்டேன்னு சொல்லிட்டா. ஒருவழியாய் சம்மதித்துவிட்டான், திக்க வைத்துவிட்டேன் என்றும் சொல்லலாம். 

மணி பதினொன்றைக் கடந்திருந்ததும் பேருந்து வந்தபாடில்லை. 'தாம்பரம் பெருங்களத்தூர் சுத்திப் போனா ட்ராபிக்ல மாட்டிப்போம், சானிடோரியம் வந்தீங்கன்னா முடிச்சூர் வழியா வண்டலூர் போயிறலாம்' என்று அட்டகாசமாகத் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருந்தார் எங்கள் பேருந்து டிரைவர் ஆனால் கடைசி நேரத்தில் ஏசி லீக் ஆனதால் அதை சரி செய்ய தாமதமாகிவிட்டதாம். அதுவரை பேருந்து குறித்து இருந்த பயம் வலுத்திருந்தது. 

ரெட்பஸில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஓரளவிற்கு காசு கம்மி ஏசி பஸ்சும் கூட என்ற நப்பாசையில் தான் இந்த பஸ்ஸை புக் செய்தேன். இதுவரை கேள்வியேபட்டிராத ட்ராவல்ஸ், எஸ்.ஆர்.டி ட்ராவல்ஸ். எங்கே துட்டை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விடுவார்களோ என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஏமாற்றவில்லை ஆனாலும் டப்பா பஸ் போல. ஆரம்பத்திலேயே ரிப்பேர் ஆகிவிட்டது. இன்னும் என்னவெல்லாம் ஆகப்போகுதோ அட ஆண்டவா! 

பேருந்து நிலையத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கும் மேல் காத்துக் கிடந்தோம். 'சீனு மூணாறு போயிருவோமா?, தம்பி இதுக்குத்தான் எங்கள ஒம்போது மணிக்கே வரச் சொன்னீங்களா!' என அவ்வபோது செல்லமாக என்னை ஓட்டிக் கொண்டிருந்தாலும் நிலைமையைப் புரிந்து கொண்ட என் நண்பர்கள் பொறுமை காத்தார்கள். இதைவிட வேறு என்ன நல்லூழ் வேண்டும் எனக்கு. ஒருவழியாய்ப் பேருந்து கோயம்பேடு கிண்டியில் நின்று கொண்டிருந்த எனது நண்பர்களை ஏற்றிக் கொண்டு தாம்பரம் வந்து சேர்ந்தபோது மணி பன்னிரெண்டை நெருங்கியிருந்தது. 


சும்மா சொல்லக் கூடாது அட்டகாசமான புத்தம் புதிய பேருந்து அது. உயர்வாய்ச் சொல்லலாம் என்றால் வெள்ளை ரதம் அது. இதுவரை இப்படியொரு அட்டகாசமான பேருந்தில் பயணித்ததில்லை. உள்ளே ஏசி காற்று மெல்ல கசிந்து கொண்டிருக்க கூடவே பேருந்தின் புதிய மணமும் காற்றில் பரவிக் கொண்டிருந்தது. மெல்ல அவரவர் இருக்கையில் செட்டில் ஆனபோது தான் காதின் அருகில் இடி விழுந்தது போல் ஒரு சத்தம். சட்டெனத் திரும்பினேன்...

ஓயாமல் ஒழியாமல் உழைப்பாண்டா போலீஸ்
இரவென்ன பகலென்ன உறங்காது போலீஸ்
 
சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம் (அது ஹீ இஸ் துரசிங்கம் தான், கூகுள் தப்பா காமிக்குது, இருந்தாலும் என்ஜாய்)
இவன் நின்றால் கூட படையும் பதுங்கும்  
சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம்
இவன் வந்தால் போதும் வன்முறை அடங்கும் 


விழுந்தது இடி அல்ல இசை... தேவி ஸ்ரீ பிரசாத் தனது தொண்டைக் கட்டிய குரலில் அலறிக் கொண்டிருக்க, ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்றபடி சிங்கம் 2 தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தது. 


சுதந்திர தினத்திற்கு முந்தைய அந்த வியாழக்கிழமை இரவில் எவ்வளவோ கஷ்டங்களைப் பார்த்தாயிற்று. அனுபவித்தாயிற்று. இதையெல்லாம் பார்த்த ஆண்டவனுக்குக் கொஞ்சமேனும் எங்கள் மீது கருணை இருந்திருக்க வேண்டும். அவர்தான் எங்களோடு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த அந்த அரசியல்வாதி மூலம் சிங்கம் டூ போடச்சொல்லி சண்டையிட வைத்திருக்க வேண்டும். சிங்கம் டூவும் போடப்பட்டிருக்க வேண்டும். 

தலைவர் பேருந்தின் முதல் இருக்கையில் அமர்ந்து சீரியசாகப் படம் பார்த்துக் கொண்டிருக்க, ஒட்டு மொத்தப் பேருந்தும் அவருடன் சேர்ந்து படுசீரியஸாகப் படம் பார்த்துக் கொண்டிருந்தது. சமநேரத்தில் சிங்கம் பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசி சீறப்பாய நாங்களோ எங்கள் பங்கிற்கு கெக்கபிக்க கெக்கபிக்கவென விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கியிருந்தோம்.   

26 comments:

  1. //அங்கிருக்கும் கழிப்பறைக் கதவுகள் ஒவ்வொன்றும் ஆண் சமுதாயதிற்கு என்னவோ கூற விழைகின்றன.//

    பார்ரா....

    ReplyDelete
  2. அடுத்த பயணத்தில் 'அஞ்சான்' தான். தப்பவே முடியாது.

    ReplyDelete
  3. இந்தப் பிரச்சனைக்குத்தான் நான் டிரெயின்ல டிக்கெட் கிடைக்கலேன்னா ஊருக்கே போறதில்ல, அப்படியே பஸ்ல போற ஊரா இருந்தாலும் நேரா கோயம்பேடு தான்... சிரமம் பார்க்காம ஆட்டோவோ டாக்சியோ எடுத்துக்குவேன்.... ம்ம்ம்ம்.. அதனால என்ன பண்றது, இந்த மாதிரி பதிவு தேத்த முடியாதே....

    ReplyDelete
  4. வழக்கமான கலக்கல் ஆரம்பம்! தொடருங்கள்! உடன் வருகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. சரியான கலக்கல் பதிவு, நண்பா,

      Delete
  5. இந்தப் பயணம் ஒரு த்ரில்லான அனுபவத்தோட ஆரம்பிச்சிருக்கு போலருக்கே.... தொடரட்டும்....

    ReplyDelete
  6. //இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் வேற பண்ணனும்!'// Ithukkaavathu koopidunga boss..... trippukkuthaan kooppida maatenreenga !
    Super start...... innum ethir parkkirom !

    ReplyDelete
  7. புதுசா இருக்கு தல உச்சபட்ச வன்முறை. நானும் அதையேதான் follow பண்ணப்போறேன் :)

    ReplyDelete
  8. // சீக்கிரம் ஒரு கார் வாங்கணும்// ததாஸ்தூ!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹஹஹ ஆவி! சூப்பர் நாங்களும் ததாஸ்தூ வில் சேர்ந்துக்கறோம்!!!

      Delete
  9. // இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் வேற பண்ணனும்// சரி அதுக்கும் ஒரு ததாஸ்தூ!! (அப்புறம் நீங்க மட்டும் எவ்வளவு நாள் சிங்கிளா ஜாலியா இருப்பீங்க?)

    ReplyDelete
  10. //யோசிப்பது ஒரு வகையில் நல்லது 'ஹி இஸ் கன்சிடரிங் மீ', ஆனா ஓவரா யோசிக்கிறது நல்லது இல்ல /// ஹஹஹா

    ReplyDelete
  11. யோவ்.. பதிவு சின்னதா இருக்கு இந்த முறை?

    ReplyDelete
    Replies
    1. இன்னம் நீளும்ல அங்ஙன இருக்கு ....

      Delete
  12. லேடி வித் தி பிரவுன் பேக், (யாருன்னு இங்க சொல்ல வேணாம், வாட்ஸ் ஏப் புக்கு வந்து உரைக்கவும்) ;)

    ReplyDelete
  13. சீனு! அந்த தாம்பரம் சானட்டேரியம் கழிவறை பத்தி எழுதிருந்தீங்க பாருங்க...சூப்பரப்பு.....ரொம்பவே ரசிச்சோம்.....

    ReplyDelete
  14. இதே போன்ற ஒரு நன்னாளில் மூன்றாண்டுகளுக்கு முன் எனக்கும் ஒரு பயணம் வாய்த்தது,பதிவாகவும் இட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  15. இன்னும் கொஞ்சநாளில் கல்யாணம் ஆகி பயணங்கள் தொடருக்கு முடிவு காணட்டும்:)))). கோயம்பேடு தனிச்சுகமான தொல்லை அனுபவம் எனக்குண்டு சீனுசார்!

    ReplyDelete
    Replies
    1. கல்யாணத்திற்குப் பிறகுதானே பயணங்கள் அதிகமாகும்

      Delete
  16. கோ ஐபி நெட் மூலம் நானும் இதே போல எஸ் ஆர் எம் என்ற பஸ்ஸில் மதுரைக்கு ரிசர்வ் செய்து இதே போல பெருங்களத்தூரில் இரவு 12.15க்கு பஸ் வரும் என்று சொல்லி 1.45க்கு வந்து கழுத்தருத்தது. ஆனால் அப்புறம் பயணம் பரமசுகம். பஸ்சும்!

    ReplyDelete
  17. பயணம் பல வித அனுபவங்களை தருகிறது சீனு. காத்திருத்தலிலும் ஒரு சில சுகம் இருக்கத்தான் செய்கிறது!

    பயணத்தொடர் சுறுசுறுப்பாக தொடங்கியிருக்கிறது. மற்ற அனுபவங்களையும் விரைவில் பதிவு செய்திடுவீர்கள் தானே! :)

    ReplyDelete
  18. விடுமுறை நாட்களில் பஸ் பயணம் செல்லும் எல்லோரும் இந்த சங்கடத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் நீங்கள் அந்த அனுபவத்தை விறுவிறுப்பான பதிவாக மாற்றி எழுதியுள்ளது ரசிக்கும்படியாக உள்ளது.

    ReplyDelete
  19. ஸ்ஸபா. இப்பவே கண்ண கட்டுதே.

    மன்னிக்கணும் சீனி. உங்க பதிவை படிச்சதும் இந்த வரி தான் ஞாபகம் வந்துச்சு... :) பதிவு கலக்கலா இருக்கு... நீங்க நடத்துங்க பாஸ். நீங்க நடத்துங்க... :)

    ReplyDelete
  20. பாஸ் ஒரு தகவல் பிழை.. அந்த பாட்டு சிங்கமா? இல்ல சிங்கம் டூவா?

    ReplyDelete
  21. வித்தியாசமான அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete