31 Jul 2014

கர்த்தரின் தூதர்களும் - சூலாயுத நாதரும்

பெரும்பாக்கத்தில் சரவணாவை இறக்கி விட்டு மேடவாக்கத்தை நெருங்கிய போது நேரம் நள்ளிரவைக் கடந்து பின்னிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. தூறலும் ஈரமான காற்றும் நள்ளிரவை நனைத்துக் கொண்டிருக்க எதிர்பட்ட லாரிகளை எல்லாம் மடக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் காக்கிச் சட்டைக்காரர்கள்... நான் அவர்களுத் தேவையில்லை என்பதால் எனக்குக் கவலையில்லை. அவர்களைக் கடந்து மேடவாக்கம் பேருந்து நிறுத்தத்தைக் கடக்க முயலும் போது தான் அவரைக் கவனித்தேன். 

மெலிந்த தேகம். கருத்தமேனி. கையில் ஒரு சேல்ஸ்மேன் அல்லது லேப்டாப் பேக். டக்-இன் செய்திருந்தார். தாம்பரம் பேருந்திற்காக காத்திருந்திருக்க வேண்டும். கடைசி பேருந்தைத் தவற விட்டிருக்க வேண்டும். வாகன உதவி கேட்டு வழிமறித்துக் கொண்டிருக்க வேண்டும். . 

இன்னும் சில அடி தூரத்தில் என் வீட்டிற்கு திரும்பும் வளைவு என்பதால் என்னால் லிப்ட் கொடுக்க முடியாது என்பதை சைகையின் மூலம் கூறினேன். அவருக்குப் புரியவில்லை. வண்டியை மெல்ல ஸ்லோ செய்தேன்.    

நான் வண்டியை ஸ்லோவாக்குவதைப் பார்த்த அவர் எங்கே லிப்ட் தான் கொடுக்கப் போகிறேனோ என்ற ஆர்வத்தில் என்னை நெருங்கி ' தாம்பரமா சார்' என்றார். வயது நாற்பதை நெருங்கியிருக்க வேண்டும். அல்லது கடந்திருக்க வேண்டும். நல்லவர் என நம்பலாம் போல் தான் தோன்றியது. கெட்டவன் என்றாலும் உருவுதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. மாசக் கடைசி வேறு.  

'சார் இங்க பக்கத்துல தான் என் வீடு. இந்நேரத்துல பஸ் உண்டு.' என்றேன்.

'இல்ல தம்பி ஒரு மணி நேரமா நிக்குறேன், பஸ்ஸே இல்ல' அது சற்றே மிகைப்படுத்தப்பட்ட பொய் என்றாலும் அவரின் கவலை உண்மை. 

ஒருவேளை அவர் செல்ல வேண்டிய இடம் அருகில் தான் என்றால் இறக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் எங்க போகணும் என்றேன். 

'சந்தோஸ்புரம் போகணும் தம்பி, ஆட்டோ கூட இல்ல, வேளச்சேரில பஸ் இல்ல.  இங்கயாது கிடைக்கும்னு வந்தேன், இங்கயும் இல்ல' என்றார்.

சந்தோஸ்புரம் அப்படியொன்றும் எனக்குத் தூரம் இல்லை, மூணு கிமீ, வெறும் ஐந்து நிமிடம். ஆனால் மணி பன்னிரெண்டைக் கடந்து பல நிமிடம் ஆகியிருந்தது. என்னை எதிர்பார்த்து அம்மா நிச்சயம் அரைத் தூக்கத்தில் காத்திருப்பார் என்று தெரியும். 

'வாங்க சார், நான் உங்கள விடுறேன்'

'god bless you' என்றபடி சந்தோசமாக ஏறிக் கொண்டார். 

நகரத் தொடங்கினோம். 

என்னைப் பற்றி என் வீடு இருக்கும் ஏரியாவைப் பற்றி விசாரித்தார். அவரும் அந்த ஏரியாவில் வசித்ததாகக் கூறினார்.  அவர் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால் வீட்டிற்கு உடனே போக வேண்டும் என்று கூறினார். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்று வருந்தினார். இதன் பின் தான் பேச்சு மெல்ல வேறு பக்கம் சென்றது. 

'தம்பிக்கு சௌத்தா'

'ஆமா சார் தென்காசி'

'அதான், நீங்க உதவி செய்யிறத பார்தததும் தெரிஞ்சது.  நீங்க சௌத்து-தான்னு, உங்க ஏரியாகாரங்க தான் தம்பி நல்லா உதவி பண்ணுவாங்க, எனக்குக் கூட கோயமுத்தூர் தான். நானும் பலருக்கும் உதவி செஞ்சிருக்கேன். இதோ இப்ப கூட நானா கேட்கல, நான் செஞ்ச உதவி தான் எனக்கு இப்ப உதவி பண்ணுது' என்றார். 

சிரித்தேன். இது எனது வழக்கமான சிரிப்பு தான். 

'தம்பி கிறிஸ்டியனா' என்றார்

'இல்ல சார் இந்து என்றேன்'     

'இல்ல கிறிஸ்டியன்னா உடனே உதவி பண்ணுவாங்க, அவங்களுக்கு உதவுற மனப்பான்மை ஜாஸ்தி, நீங்களும் நான் கேக்காம உதவுனீங்க, அதான் கேட்டேன்' என்றார். 

அதற்கும் சிரித்தேன். இதுவும் வழக்கமான சிரிப்பு தான்.       

'தம்பி பைபிள் படிச்சி இருக்கீங்களா, எனக்கு பைபிள் ரொம்ப புடிக்கும், டெயிலி பைபிள் படிப்பேன். நம்பிக்க ஜாஸ்தி'      

'இல்ல சார் படிச்சது இல்ல' என்றேன் 

'வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா படிங்க தம்பி' என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே வண்டியின் வேகத்தை மெல்ல அதிகரித்தேன். பின்னால் உட்கார்ந்திருக்கும் அவர் பயப்படக் கூடாது என்பதற்காக வண்டியை உருட்டிக் கொண்டிருந்தேன். அதனால் வந்த சோதனை இது. என் வழக்கமான வேகத்திற்கு வண்டியை மாற்றிக் கொண்டிருந்தேன். அவரும் தொடர்ந்து பேசத் தொடங்கினார். 

'பைபிள்ல்ல எல்லாமே உண்ம தம்பி, மத்த எல்லா வேதமும் கடவுள் எப்படி இருப்பார்ன்னு சொல்லுது, ஆனா கிரிஸ்தவம் மட்டும் தான் கடவுள் எப்படி உலகுக்கு வருவார்ன்னு சொல்லுது., நீங்க படிச்சது கிரிச்ட்டியன் ஸ்கூலா' என்றார். 

'ஆமா சார்' என்றேன். 

'அங்க படிச்சுமா பைபிள் படிக்காம இருக்கீங்க, இப்பல்லாம் முன்ன மாதிரி கிறிஸ்டின் ஸ்கூல் இல்லப்பா, அப்போ ஒழுக்கத்த சொல்லிக் கொடுத்தாங்க, இப்ப எங்க. அங்க படிச்சு பைபிள் கூட படிக்காம வந்து இருக்கீங்க' என்று அங்கலாய்த்தார்.       

இப்போதும் சிரித்தேன். ஆனால் இது வழக்கமான சிரிப்பு இல்லை. ஒருவன் சிரித்துக் கொண்டே இருந்தால் தொடர்ந்து என்ன வேண்டுமானாலும் பேசிக்கொண்டே போகலாம் என்று நினைத்த அவரின் அறிவுஜீவித்தனம் குறித்த சிரிப்பு.   

'தம்பி பைபிள் படிச்சா இரக்க குணம் அதிகமாகும். கிறிஸ்டியன் இரக்கமா இருக்கக் காரணம் பைபிள் தான்.' என்றார்.  

இப்போதும் சிரித்தேன். ஆனால் இதுவும் வழக்கமான சிரிப்பு இல்லை. அலுவலக அலுப்பு அசத்திக் கொண்டிருக்க 'ஏண்டா லிப்ட் கொடுத்தோம்' என்ற நிலைக்கு என்னைத் தள்ளியிருந்த சிரிப்பு. 

'தம்பி சண்முகநாதன்ன்னு ஒருத்தர். ஓர் அன்புக்... தம்பி ஸ்டாப் வந்த்ருச்சு..ஸ்டாப் வந்த்ருச்சு..' என்று எச்சரிக்க.' ஷப்பாடா' என்றபடி அவரை இறக்கிவிட்டேன். 

ஒரே ஒரு நிமிஷம் என்றவர், அந்த இருளில் சிறிது நேரம் பையை துழாவிட்டு ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தார். அவர் அதைச் செய்வார் என்று எதிர்பார்த்தேன். 'ஓர் அன்புக் கடவுளின் உண்மைக் கதை' சண்முகநாதன்னு நம்ம நண்பர் எழுதிய புத்தகம். கிறிஸ்தவம், பைபிள் பற்றிய அழகான தெளிவான விளக்கம் இருக்கு, நீங்க படிக்கணும். அவரு ஒரு பெரிய ஆராய்ச்சியாளர்' என்றபடி என்னிடம் கொடுத்தார். 

வாங்கிக்கொண்டு நன்றி என்றேன்.  


'god bless you' என்றபடி ஹெல்மட்டில் சிலுவையை வரைந்தார். அதற்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை. என்னுடைய தொலைபேசி எண் கேட்டார். அவரின் உள்ளர்த்தம் எதற்கு என்று தெரிந்ததால் என்னிடமிருந்த அணைத்து வைக்கப்பட்ட எண் ஒன்றைக் கொடுத்துவிட்டு அங்கிருந்துக் கிளம்பினேன். 

வெகுசமீபத்தில்  கிடைத்த கேப்பில் மதப்பிரசங்கம் செய்த ஒரு பாஸ்டருக்கு லிப்ட் கொடுத்திருந்தேன். இவர் இரண்டாமவர். இவர் போன்றவர்களிடம் கோபப்பட்டோ வாக்குவாதம் செய்தோ எதுவும் ஆகப் போவதில்லை. எதிர்வினை ஆற்றத் தெம்பும் இல்லை.  

வீட்டிற்கு வந்ததும் அந்தப் புத்தகத்தைத் திறந்தேன். அறிவுக் கண்ணைத் திறக்கப் போகும் புத்தகமல்லவா! அந்தப் புத்தகத்தின் நான்காவது கட்டுரை 

'இந்து சகோதர மக்களின் வேதம் எது?' 

பதில் 

ஒரு மிகபெரிய விளக்கத்திற்குப் பின் : 

சூலாயுதம் தீமையை அழிக்கும் ஆயுதம். இந்துக்களின் முக்கிய அடையாளம். 

வேதாகமத்தின் படி தீமையை அழிக்க வல்லவர் இறைவன் ஒருவரே. அப்படி தீமையாகிய சாத்தானை அழிக்க வல்லவர் சிலுவைநாதரே. சிலுவையின் மீது வீற்றிருக்கும் அவரே சூலாயுதத்தின் குறியீடு. 

இந்து சகோதரர்களே இப்போது கூறுங்கள் உங்களின் வேதம் எது? நீங்கள் முக்தியடைய இது தவிர வழியே கிடையாது என்றபடி நிறைவடைகிறது அந்த கட்டுரை.  

அந்த கட்டுரையின் கீழே ஒருபடம் வரைந்திருந்தார்கள். அந்தப் படத்தில் சிலுவைநாதர் சூலாயுதம் வடிவத்தில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார் . 


இப்போதும் சிரித்தேன். இது வழக்கமான சிரிப்பா இல்லை வழக்கத்திற்கு மாறான சிரிப்பா தெரியவில்லை!

ஹல்லேலுயா...!  

31 comments:

  1. Nice experience. :-)

    ReplyDelete
  2. இவர்கள் நிறுத்தவேமாட்டார்களா.

    ReplyDelete
  3. நைட் நேரத்துல இப்படி எல்லாம் லிப்ட் குடுக்காதய்யா.. கத்தி சொருவிடபோறான்.. இரக்கம் எல்லாம் ஒரு லிமிட்டுக்கு இருந்தா போதும்.. அது நேரம் காலம் தெரியாம பொங்கி வழிஞ்சா அப்புறம் சூலாயுதாமோ, கர்த்தரோ யாருமே காப்பாத்த வர மாட்டாங்க!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா....சூப்பர் ஆவி! ......சூலாயுதமோ, கர்த்தரோ யாருமே காப்பாத்த வர மாட்டாங்க.....ரொம்ப கரீக்ட்டு

      Delete
    2. கவனம்யா..

      நானும் ஆரம்பத்துல ஆவி போல இவன் ஏன் ராத்திரில லிப்டு கொடுக்கான்னு தான் நெனச்சேன்..

      Delete
    3. லிப்ட்டு கொடுததனாலும் ஒரு நன்மைதானே! நமக்கு ஒரு "பிரபல எழுத்தாளர்" சீனுவின் பதிவு வாசிக்க கிடைத்ததே!

      Delete
  4. நானும் சவுத் தான். ஆனா இந்த மாதிரி நடு ராத்திரியில் லிப்ட் எல்லாம் கொடுக்க மாட்டேன். பகல்ல கூட இந்த மாதிரி அனுபவம் வாய்ச்சதில்லை....

    ReplyDelete
  5. இந்த மாதிரி புத்தகங்கள் கொடுத்தும் பேசியும் கேன்வாஸ் செய்வது ஒன்றும் புதிய விஷயமில்லை. வெகுகாலமாய் நடந்துட்டிருக்கறதுதான். பட்.... சூலாயுதத்தை இயேசுவோட திங்க் பண்ணி சிந்திக்கறாங்கன்ற விஷயம் புதுசு.... (ஆவி சென்ன விஷயமும் யோசிக்க வேண்டியதுதான்யா. டேக் கேர்.)

    ReplyDelete
  6. என்னங்னே இப்படி சூதானமே இல்லாம இருக்கிங்க... உங்க ஏரியா பக்கம்லாம் சைக்கோ நடமாட்டம் அதிகமாம்.. போலிஸ் கெடுபிடி இருக்கறதால , பொண்ணுங்க கற்ப சூறையாடுறதுக்கு பதிலா , பசங்கள படுத்தி எடுத்துடறாய்ங்கலாம்.. பீ கேர்புல் அண்ணே!!! அப்புறம் இவிய்ங்கல பத்தி கமெண்ட் போடறதுக்கு பதிலா , உங்கள மாதிரியே சிரிச்சிட்டு போய்டலாம் . :-)

    ReplyDelete
  7. தம்பி ,அங்கேயே நானஸ்தானம் எடுத்துட்டு சர்ச்ல ஜாய்ன் செய்துடலாமே .....செம்ம வருமானம் ...நான் கூட பென்சன் வரும்போது சர்ச் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் .
    சோகம் என்னான்னா இந்த மாதிரி பேசுற்வங்க சலவை செய்யப்பட்ட அப்பாவிகளே ...அதீத ஆர்வத்தை தூண்டும் போதகர்கள் அடிக்கடி சொல்லும் வசனம் ஏசுவின் வார்த்தைகளை எடுத்து செல்லுங்கள் ,பரப்புங்கள் என்பதாகும். அடுத்த வசனம் கொடுங்க உங்களுக்கு கூடுதலாக கொடுக்கப்படும் (காணிக்கைதான்)
    ஆட்கள் சேர்ந்தால்தான் காணிக்கையும் கூடும் ....அனுப்விப்பவர்கள் தினகரன் போன்றவர்கள் ....ஏச்சும் பேச்சும் ...சில சமயம் அடியும் உதையும் வாங்கி கொண்டு ரத்த சாட்சியாக(!!) வருபவர்கள்தான் நீங்கள் சந்தித்தவர் .
    உனக்கு மட்டும் எப்படி இப்படி தேடி வந்து லிப்ட் கேட்கிறாங்கன்னு தெரில ....
    கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவரே நீர் உள்ளே வாரும்னு கூப்பிடுறாங்க ......ஐடி ய விட செம்ம காசு ....அப்புறமாய உன் இஷ்டம்ப்பா

    ReplyDelete
  8. மதமாற்றம் செய்ய எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ?பலருக்கும் இது பிழைப்பாகி விட்டது !
    த ம 5

    ReplyDelete
  9. ஹ்ம்ம்.... நடு ராத்திரில முன் பின் தெரியாத ஒருத்தன் லிப்ட் கேட்டா குடுக்க கூடாது என்பதற்கு, இந்த பதிவு ஓர் நல்ல அடையாளம்...

    ReplyDelete
  10. பகல் நேரங்களில் மட்டும்தான் இது மாதிரி பிரச்சனைகள் வருவதுண்டு என நினைத்திருந்தேன். நடு இரவிலுமா.......?

    ReplyDelete
  11. Initially I also think like that but after reading bible i saw its true please read this bible online before argue http://www.tamil-bible.com - please start with sangeetham and neethi mozhigal if you start read from athikamam you should know the hierarchy of the birth like adam-eve-kalil-nova-sem-abraham-mose-samuel-david-salomon-jesus its interesting

    ReplyDelete
  12. Initially I also think like that but after reading bible i saw its true please read this bible online before argue http://www.tamil-bible.com - please start with sangeetham and neethi mozhigal if you start read from athikamam you should know the hierarchy of the birth like adam-eve-kalil-nova-sem-abraham-mose-samuel-david-salomon-jesus its interesting// பாஸ் செம பாஸ் .... உங்களை நானும் பின்பற்றுகிறேன் ...

    ReplyDelete
  13. தோழர் சீனு ...
    உங்களுக்கு ஏற்படும் அனுபவ நிகழ்வுகளை படிக்கையில் மண்டைக்குள் மணி அடிக்க துவங்கி விட்டது ... எதுவாக இருந்தாலும் சொல்லிவிட்டு செய்யுங்கள் விழா எடுக்க வசதியாக இருக்கும் எங்களுக்கு ....

    ReplyDelete
  14. உங்க ஏரியாகாரங்க தான் தம்பி நல்லா உதவி பண்ணுவாங்க, எனக்குக் கூட கோயமுத்தூர் தான். நானும் பலருக்கும் உதவி செஞ்சிருக்கேன்.// மனுஷன் இங்க நிக்குறார்யா ... என்னா சத்தமா ஓதியிருக்காரு விசுலு ...

    ReplyDelete
  15. இப்போதும் சிரித்தேன். ஆனால் இது வழக்கமான சிரிப்பு இல்லை. ஒருவன் சிரித்துக் கொண்டே இருந்தால் தொடர்ந்து என்ன வேண்டுமானாலும் பேசிக்கொண்டே போகலாம் என்று நினைத்த அவரின் அறிவுஜீவித்தனம் குறித்த சிரிப்பு. // இந்த வரிகளை ரசித்தோம்....

    இப்போதும் சிரித்தேன். இது வழக்கமான சிரிப்பா இல்லை வழக்கத்திற்கு மாறான சிரிப்பா தெரியவில்லை!// இதற்கும் சிரிப்புத்தானா.......நாகேஷ் திருவிளையாடல்ல சொல்ற மாதிரி நினைச்சுக்கங்க சீனு...

    அரசன் சொல்றா மாதிரி சீனு உங்களுக்கு ரொம்பவே வித்தியாசமான அனுபவங்கள்தான்....ஒரு வேளை இந்த மாதிரி அர்த்த ராத்திரில பைக்குல ட்ராவல் பண்ணா அனுபவம் கிடைக்குமோ?!!!! மண்டை காயுதே.......

    ஆனா ஒண்ணு நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுளை கூர்ந்து கவனித்து கொஞ்சம் கற்பனைக் குதிரையையும் எழுத்தில் பாய விட்டால் நல்ல பதிவுகள் கிடைக்குமோ?!!

    ReplyDelete
  16. செம எழுத்தாளர் ஐயா நீரு!

    ReplyDelete
  17. காலையிலேயே மொபைலில் படித்தேன்! வழக்கம் போல உங்கள் எழுத்து நடை பிரமாதம்! இது போன்ற போதகர்களை சிரித்தபடி சமாளிப்பது நல்ல ஐடியா! ஆனாலும் நடு இரவில் முன் பின் தெரியாதவர்களுக்கு லிப்ட் கொடுத்த உமது தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும். மதம் மாற்ற எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்! ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றத்தான் செய்வார்கள்! நன்றி!

    ReplyDelete
  18. தாம்பரம் பேருந்திற்காக காத்திருந்திருக்க வேண்டும்.
    கடைசி பேருந்தைத் தவற விட்டிருக்க வேண்டும்.
    வாகன உதவி கேட்டு வழிமறித்துக் கொண்டிருக்க வேண்டும். .
    வயது நாற்பதை நெருங்கியிருக்க வேண்டும்.
    அல்லது கடந்திருக்க வேண்டும்.


    உமக்கு இதுவும் "வேண்டும்" .... இன்னமும் "வேண்டும்" ....

    ReplyDelete
  19. What is the difference between நள்ளிரவு & பின்னிரவு ....?

    ReplyDelete
  20. நெருங்கிய போது நேரம் நள்ளிரவைக் கடந்து பின்னிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. தூறலும் ஈரமான காற்றும் நள்ளிரவை நனைத்துக் கொண்டிருக்க//

    நள்ளிரவுதான் கடந்து விட்டதே அப்புறம் எப்பூடி தூறலும் ஈரமான காற்றும் நள்ளிரவை நனைத்துக் கொண்டிருக்கும் ...? நாங்களும் கேப்போம்ல ...

    ReplyDelete
  21. இப்படி ஆளுங்க கையில நீங்களும் ஒரு முருகன் ஃபோட்டோவ குடுத்துட்டு வந்துருங்க அடுத்த தடவை எல்லாம்.. Mummy படத்தில் அந்த வில்லனால் பாதிக்கப்பட்டு மூளை செயல் இழந்த உள்ளூர்வாசிகள் எல்லாம் “Imhotep Imhotep” என்று கத்திக்கொண்டே சாலையில் நடந்து செல்வார்கள்.. அது போல் தான் இந்த குரூப்பும்.. எங்க போனாலும் கடுப்புகள கெளப்பிக்கிட்டு...

    ReplyDelete
  22. பாவம் பாத்து லிப்ட் கொடுத்ததுக்கு ஒரு பதிவு தேறுனதுதான் மிச்சம்

    ReplyDelete
  23. Srini,

    Few of your updates are good, But Dhanuskodi is Excellent,
    would suggest you to join in Journalism,
    when i read writersamas article on Dhanuskodi realized that your article covers better than him,
    and you deserve a pat...
    Cheers...

    ReplyDelete
  24. இந்த கட்டுரையை படிக்கும்போது என்ன கருத்திட்ட வேண்டும் என நினைத்தேனோ அப்படியே முடிந்திருக்கிறது பதிவும். அதனால் என்ன? ஹல்லேளுயா வை இப்படி ரீப்ளேஸ் பண்ணுவோம்ல !!
    அருமை ஆண்டவரே:)))))

    ReplyDelete
  25. சென்னைல நள்ளிரவு தாண்டி லிப்ட்டு கேட்குறது, லிப்ட்டு கொடுக்குறது ரெண்டுமே செய்யகூடாதுன்னு அறிந்தேன்!

    ReplyDelete
  26. எந்த நிகழ்வையும் சுவாரசியமாக சொல்லும் திறமை கூடிக் கொண்டே போகிறது.சீனு வாழ்த்துக்கள்

    ReplyDelete