22 Jul 2014

கடவுளின் தேசத்தில் ஒரு பயணம் - தென்காசி டூ கோட்டயம்

புளியரை செக்போஸ்ட் தாண்டியதும் வரக்கூடிய அந்த S வளைவின் மீது மெல்ல ஏறத் தொடங்கியது எங்கள் டவேரா. அதுவரை சமதளத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் சாலை வளைந்து நெளிந்து மலையேறத் தொடங்குவது இங்கிருந்துதான். ஒருபுறம் உயர்ந்த மலை. மறுபுறம் கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆழத்தை அதிகரித்துக் கொண்டிருக்கும் பள்ளம். சுற்றிலும் அடர் வனம். ஆங்காங்கு வழிந்தோடிக் கொண்டிருக்கும் சாலையோர அருவிகள். கடவுளின் தேசம் மெல்ல எங்களைத் தன் எல்லைக்குள் அனுமதித்துக் கொண்டிருந்தது. கேரள சாலைகளில் நீண்ட தூரப் பயணம் போவது இதுவே முதல் முறை. இதற்கு முந்தைய எனது பயணங்கள் மொத்தமும் ஆரியங்காவு அச்சன்கோவில் வந்ததுமே நின்றுவிட இப்போதுதான் ஒரு ஐந்து மணி நேரப்பயணத்திற்குக் கருணை காட்டியுள்ளது காலம். 

கொல்லம் - செங்கோட்டை ரயில்பாதை

அப்போது கொல்லம் திருச்செந்தூர் மெயில் ஓடிக் கொண்டிருந்த காலம். எங்களுடைய பெருமாபலான கேரளப் பயணங்கள் இருப்புப் பாதை வழியாகவே நடந்து முடிந்துவிட சாலைவழிப் பயணம் என்பதே எப்போதாவது அரிதாக நடக்கக் கூடிய ஒன்றாகத்தான் இருந்தது. அதிலும் அந்தப் பெரிய டனலில் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே இரயிலில் செல்லவேண்டும் என அடம்பிடித்த நாட்கள் அவை.    

ரயில் டனலை நெருங்க நெருங்க மனம் ஒருவித அவசரப் பரபரப்பிற்கு ஆளாகியிருக்கும். ரயிலின் வேகம் குறைந்து நத்தையின் வேகத்தில் டனலின் உள்ளே நுழைகையில், உடன் வரும் மரங்களும் செடிகொடிகளும், கரும்பாறைகளும், பாறைகள் எதிரொளிக்கும் சூரியவெளிச்சமும் மெல்ல மறையத் தொடங்கி, மிகப்பெரிய இருட்டறையில் நம்மைத் தள்ளிவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அடுத்த மூன்று நிமிடங்களுக்கு ரயில் இந்தக் குகையினுள்தான் பயணிக்கும் என்ற எண்ணமே அலாதியாய் இருக்கும். 

டனலினுள் நுழையும் போது ரயிலில் இருந்து ஒலிக்கும் ஹார்ன் சப்தமானது மதங்கொண்ட யானை ஒன்றின் பிளிறலைப் போன்றிருக்கும், அப்படியான ஹார்ன் சப்தமும் தண்டவாளத்தில் சக்கரங்கள் தடதடக்கும் பெருஞ்சப்தமும் குகைகளின் சுவர்களில் மோதி எதிரொலிக்கையில் ஏற்படும் அதிர்வலைகள் இனம்புரியா அமானுஷ்யத்தை உண்டுபண்ணும். விதவிதமான திகில் குரல்களும் அடித்தொண்டையில் இருந்து கத்தபடும் ஊளைச் சத்தங்களும் அந்த இடத்தின் அமானுஷ்யத்தை இன்னும் அதிகபடுத்தும். பயத்தில் தங்கள் கண்களை இறுக்க மூடிக்கொள்ளும் பெண்களும் உண்டு. இந்த நேரத்தில் ஒட்டுமொத்த ரயிலும் ஒருவித இனம்புரியா பரவச நிலையில் இருப்பதைப் போல் உணர்வேன். அதுவே உண்மையுமாயும் இருக்கலாம். 



நூற்றாண்டு கண்ட கொல்லம் - செங்கோட்டை ரயில்பாதை தற்போது ப்ராட்கேஜ் பணிகளுக்காக அடைக்கபட்டுள்ளது. மேலும் அரை கிலோமீட்டருக்கும் நீளமான அந்த டனல் அகல ரயில்பாதைக்கு இடையூறாக இருப்பதால் ஒட்டு மொத்தமாக இடித்துவிடலாம் என்று ரயில்வே நிர்வாகம் நினைக்கிறது. 'இத்தனைநாள் அக்குகையோடு ஒன்னுமண்ணாய்ப் பழகியவர்கள் நாங்கள் அதனால் அதை இடித்துவிட வேண்டாம்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள் பொதுமக்கள். அந்த ஒரு பகுதியை மட்டும் கிடப்பில் போட்டுவிட்டு மற்ற பகுதிகளில் பணிகள் ஜரூராய் நடந்து கொண்டுள்ளன.

பதிமூன்று கண் பாலம்

இதே இருப்புப்பாதையில் மற்றுமொரு முக்கியமான இடமும் உண்டு. அது கழுதுருட்டிக்கும் தென்மலைக்கும் இடையில் இருக்கும் பதிமூன்று கண் பாலம். கொல்லத்தில் இருந்து புனலூர் வழியாக செங்கோட்டையை இணைப்பதற்காக 1902-ல் போடப்பட்ட இந்த ரயில்வே பாதை ஆங்கிலேயே அரசாங்கத்தின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குச் செய்த மிக முக்கியமான நல்லகாரியம் இருப்புப் பாதைகளை நாடு முழுவதும் அமைத்துக் கொடுத்தது. ஒருவேளை அன்றைய தினத்தில் அவர்கள் ஆட்சி செய்திருக்காவிட்டால் இன்றைக்கு பல ஊர்களிலும் இருப்புப் பாதை வேண்டி ஆர்பட்டாம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதிலும் கேரளா போன்ற மலைப் பிரதேசங்களுக்கு இருப்புப்பாதை என்பது இன்றளவிலும் கனவாகத்தான் இருந்திருக்க வேண்டும். மலையைக் குடைந்து, சுழித்து ஓடும் ஆறுகளின் மேல் பாலம் அமைத்து, மேடு பள்ளங்களை சமன் செய்து உருவாக்கப்பட்ட கொல்லம் - செங்கோட்டை இருப்புப்பாதை ஏறக்குறைய 90 கிமீ நீளம் உடையது. அவ்வாறு போடப்பட்ட பல பாலங்கள் இன்று வரையிலும் மிக உறுதியாக நிற்கின்றன. அகல ரயில்பாதைக்காக உடைக்கப்படும் பல பாலங்களையும் அவர்களால் அவ்வளவு எளிதில் உடைத்து விடமுடியவில்லை. 



அவ்வாறு கட்டப்பட்ட பாலங்களில் ஒன்றுதான் இந்த பதிமூன்று கண் பாலம். சேட்டனின் மொழியில் பதிமூன்று கண்ணர பாலம் என்று வழங்கப்பட்ட ஒன்றைத் தமிழர்கள் பதிமூன்று கண் பாலமாக மாற்றிவிட்டனர். மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரானது கூட்டம் கூட்டமான பெரிய பெரிய மலைகளையும் சிறிய குன்றுகளையுமுடைய ஒரு நீளமான மலைத்தொடர். அவ்வாறான இரண்டு குன்றுகளை இணைப்பதற்காக போடப்பட்ட பாலமே இது. மொத்தம் பதிமூன்று தூண்களைக் கொண்ட இந்தப் பாலத்தின் ஒவ்வொரு தூண்களும் சுமார் நூறு அடிக்கும் குறையாத உயரம் கொண்டவை. இப்பாலத்தை ரயிலில் கடக்கும் போது எழில்மிகு பள்ளத்தாக்கைக் கண்டுகளிக்க முடியும் என்றால், அந்தப் பள்ளத்தாக்கின் அடிப்புறம் வழியாக நகரும் தார் சாலையில் இருந்து ஒட்டுமொத்த பாலத்தின் கம்பீரத்தையும் கண்டு களிக்கலாம். 

1992-ல் ஒரு மிகபெரிய வெள்ளம் மேற்குத்தொடர்ச்சி மலையையும் அதன் அடிவார கிராமங்களையும் ஆட்டிபடைத்த போது செங்கோட்டை புனலூருக்கு இடையிலான அத்தனைப் பாதைகளும் பாலங்களும் சேதப்பட்டு தொடர்பற்றுப் போயின. போக்குவரத்து ஸ்தம்பித்தது. நிலைமை இப்படியிருக்க பதிமூன்று கண் பாலம் மட்டும் அசாதாரணமாய் அனைத்தையும் தாங்கிக் கொண்டு கம்பீரமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது. தற்போது அகல ரயில்ப்பாதை அமைப்பதற்காக பாலத்தின் உறுத்தித்தன்மையை சோதிக்கும் வகையில் பாலம் முழுவதும் சின்ன சின்ன ஓட்டைகளைப் போட்டு சோதித்துப்பார்த்துள்ளனர். சோதனையின் முடிவில் இன்னும் ஒரு நூறு வருடத்திற்குக்கூட இப்பாலம் உறுதியாய் இருக்கும், இடிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளனர். பாலத்தின் அத்தனை தூண்களிலும் மிக நெருக்க நெருக்கமான குழிகளாக அந்த ஓட்டைகளைக் காணமுடிகிறது. 

லுக்அவுட் - தென்மலை  


தென்மலை - லுக்அவுட் 

தென்மலையைக் கடந்ததும் லுக்அவுட் என்றொரு இடம் இருக்கிறது. இந்த இடத்தில் தென்மலை நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பள்ளத்தாக்கைக் கண்டுகளிக்கும் விதமாக முப்பதடி உயரத்தில் டவர் ஒன்று கட்டிவைத்துள்ளனர். லுக்அவுட்டைக் கடக்கும் போது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. மற்றவர்கள் அனைவரும் காரிலேயே அமர்ந்துகொள்ள நான் மட்டும் அந்த டவரின் மீது ஏறினேன். கண்முன்னே இயற்கை அற்புதமான ஓவியத்தை வரைந்து வைத்திருக்க நம்மவர்களோ அங்கிருந்த சுவர் முழுவதும் தங்கள் கைதிறமையை (ஆபாசமாக) காண்பித்திருந்தார்கள். டவரின் உள்ளே யாருமே இல்லை. ஒரே ஒரு காதல் ஜோடி மட்டும் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் யாரோ ஒருவருக்கு வாய் பேசமுடியாது போலும். அவர்கள் உலகமும் காதலும் சைகைகளாலேயே நிறைந்துள்ளன. இம்முறைப் பொறாமைப்படவில்லை. 'எங்கிருந்தாலும் வாழ்க' பாடிவிட்டு நகர்ந்துவிட்டேன்.      



காலை ஏழரை மணிக்குப் புனலூரில் பரோட்டாவும் டீயும் சாப்பிட்டது. மணி இப்போது பத்தரையைக் கடந்திருக்க லேசாக பசிக்கத் தொடங்கியது. வெளியில் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் கிளைமேட்டிற்கு இதமாய் ஒரு டீ குடித்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்ற 'மாமா டீ' என்றேன். மாமா தகவலை டிரைவருக்கு அனுப்ப, சாயா கடையைத் தேடத்தொடங்கி, தேடினோம் தேடினோம் தேடிக்கொண்டே இருந்தோம் கிட்டத்தட்ட பல கிமீக்கள் கடந்து விட்டோம் ஆனாலும் ஒரு சாயாக் கடையைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பத்தடிக்கு ஒரு கடை இருக்க இங்கோ பல கிமீக்கள் வந்தும் ஒரு கடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஒருவழியாய் கடையைக் கண்டுபிடித்து வண்டியை நிறுத்தினால் வேகவேகமாய் ரோட்டைக் கடந்து எங்களை நெருங்கிய ஒருவர் 'சாரே லாட்டரி' என்றார். மாமா அவரிடம் கேட்ட அடுத்த கேள்வி 'சுரண்டையா சங்கரன்கோவிலா' என்பதுதான். இவரோ சற்றும் தாமதியாமல் 'சுரண்டன்னே' என்றார். பார்ப்பதற்கு டிபிகல் மலையாளி போல இருந்தவரை 'எப்படி கண்டுபிடிச்சீங்க' என்றேன். தமிழ்நாட்டுல லாட்டரிய க்ளோஸ் பண்ணினதும் பாதிபேரு லாட்டரி சீட்டு யாவாரம் பார்க்க இங்க வந்துட்டாங்க என்றார். லாட்டரி யாவாரம் பார்க்கும் அந்த தமிழகத்து சேட்டன் மாதம் ஒருமுறை ஊருக்கு சென்று வருவாராம். நாங்கள் டீ குடித்த கடையில் வேலை பார்க்கும் சிறுவனும் கூட நெல்லையில் இருந்து வந்தவனே. ஒரு டீயைக் குடித்துவிட்டு மீண்டும் கேரள சாலைகளில் பறக்கத் தொடங்கியது எங்கள் வாகனம்.  


  
கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போன்றவை கேரள சாலைகள். வளைந்து நெளிந்து தன் போக்கிற்கு எங்கெங்கோ எப்படியெப்படியோ பயணிக்கின்றன. அதிலும் புனலூரைக் கடந்து அடூர் வரைக்கும் மலையின் மீது பயணிக்கும் சாலைகள், அதன்பின் மலையும் அல்லாத சமதளமும் இல்லாத ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பாதைகளில் பயணிக்கின்றன. கேரள எல்லைக்குள் நுழைந்ததில் இருந்தே சிறு சிறு தூறலாக ஆரம்பித்திருந்த மழை கொஞ்சம் கொஞ்சமாக வலுக்கத் தொடங்கியிருந்தது. நனைந்துகிடக்கும் சாலைகளும் சாலையோரத்தில் பச்சை வர்ணம் பூசப்பட்டது போல் பாசிபிடித்துக் கிடக்கும் கட்டிடங்களின் சுற்றுச்சுவரும் கடவுளின் தேசத்திற்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தன. 

புனலூர் தாண்டி கோட்டயம் வரையிலும் சாலையோரத்தில் கட்டப்பட்ட வீடுகள் ஒவ்வொன்றும் அட்டகாசமாய் இருக்கிறது. மிகச் சாதாரணமான அல்லது சாதாரணமான வீடுகளையே பார்க்க முடியவில்லை. அத்தனையும் திரைபடங்களில் சீரியல்களில் காட்டப்படும் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய பெரிய வீடுகள் 'எல்லாம் வெளிநாட்டுப் பணம்' என்றபடி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தார் எங்கள் டிரைவர். அவர் வாங்கிய லாட்டரி சீட்டிற்குப் பணம் விழ வேண்டுமே என்ற கவலை வேறு அவரை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. 

புனலூர் - தொங்கும் பாலம்  

புனலூரில் இருந்து கோட்டயம் பிரிந்து செல்லும் பாதையில் ஊரின் மத்தியில் ஒரு பெரிய தொங்கும் பாலம் இருக்கிறது. தென்இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு தொங்கும் பாலம் இதுமட்டுமே. செங்கோட்டை - கொல்லத்தை தரைவழியாக இணைப்பதற்காக கல்லடா என்ற நதியின் மீது 1877-ல் கட்டப்பட்ட பாலம் இது. கிட்டத்தட்ட 1975 வரையிலும் பயன்பாட்டில் இருந்த இப்பாலம், போக்குவரத்து பெருகிப் போனதால் அதன் அருகிலேயே மற்றொரு பாலத்தைக் கட்டிவிட்டு இதை மூடிவிட்டனர். அது என்ன செங்கோட்டையின் மீது மட்டும் கேரள அரசாங்கத்திற்கு அவ்வளவு பாசம் என்றும் நினைக்க வேண்டாம். இந்தியா மொழிவாரியாக பிரியும் முன் வரைக்கும் செங்கோட்டை கேரளா சமஸ்தானத்தின் அங்கமாக இருந்த பகுதியாகும். 



இந்த தொங்கும் பாலத்தின் பின்னணியில் சுவாரசியமான நிகழ்ச்சி ஒன்றும் இருக்கிறது. 

கல்லடா நதியைக் சுற்றிலும் வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காடு. ஒருவேளை தரைவழிப் பாலம் அமைத்தால் கொடிய விலங்குகள் ஊருக்குள் புகுந்து தொல்லை செய்யும் என்று அஞ்சிய அரசாங்கம் ஆங்கிலேய பொறியாளர்களின் உதவியில் தொங்கு-பாலம் அமைக்க என்று முடிவு செய்தது. இப்பாலம் ஒரு ஊஞ்சல் போல் ஆடிகொண்டிருக்கும் என்பதால் இதனைக் கடப்பதற்கு வனவிலங்குகள் அஞ்சும். அவைகளால் ஊறு ஏதும் ஏற்படாது என்று நினைத்தது அரசாங்கம். 

ஒருவழியாக தொங்கும் பாலம் கட்டிமுடித்து திறப்புவிழா நடத்தி முடித்தபோதிலும், ஊர் மக்கள் அப்பாலத்தின் உறுதித் தன்மையை சந்தேகித்து அதன் மீது பயணிக்க பயந்துள்ளனர். மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக பாலத்தின் பொறியாளர் அந்த பாலத்தின் மீது ஆறு யானைகளை நடக்கவிட்டு, அவைகள் பாலத்தைக் கடக்கையில் இவர் தனது குடும்பத்துடன் ஒரு படகில் பாலத்தின் அடிப்புறத்தைக் கடந்துள்ளார். அதன்பின்னரே மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட்டு இந்தபாலத்தை உபயோகபடுத்தத் தொடங்கியுள்ளனர். அவ்வளவு அடர்காடுகள் நிறைந்த புனலூர் வனப்பகுதி இன்றைக்கு கான்க்ரீட் காடாக மாறியிருப்பது வேறு விஷயம். 


எவ்வளவு கெஞ்சியும் வழிவிடாத சேட்டனின் சேட்டை 
கேரளத்து புறநகர் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடக்க நகர்ப்புறத்து சாலைகளோ அம்புட்டு பிசியாக இருக்கின்றன. அதேநேரம் இங்குள்ள வாகன ஓட்டிகள் தாறுமாறாக வாகனம் ஓட்டுகிறார்கள். நம்மூர் ஆட்டோகாரன் செய்யகூடிய அத்தனை வித்தைகளையும் இவர்கள் செய்கிறார்கள். அதிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அநியாயத்திற்கு கடுப்பைக் கிளப்புகிறார்கள். கேரளாவிலும் சரக்கு விற்பனையை அரசாங்கமே எடுத்து நடத்துகிறது. ஒவ்வொரு கடையின் வாசலிலும் ரேசன் கடையைப் போல கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று தேசப்பணி ஆற்றுகிறார்கள் கேரளத்துக் குடிமகன்கள்.        


தேசியப் பொருளாதாரத்தை வலுபடுத்த வரிசைகட்டி நிற்கும் குடிமகன்கள் 
பந்தளம் அரண்மனை 

கோட்டயதிற்குச் செல்லும் பாதையில் சுவாமி ஐயப்பன் வாழ்ந்த பந்தளம் அரண்மனை இருக்கிறது. நாங்கள் சென்றபோது நேரம் மூன்றைக் தாண்டியிருந்ததால் அரண்மனையும் அதன் அருகில் இருக்கும் கோவிலையும் அடைத்து வைத்திருந்தனர். இன்னும் எப்போது இந்த வழியாக பயணிப்போமா தெரியாது என்பதால் சும்மா கோவிலையும் அரண்மனையையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு அங்கிருந்துக் கிளம்பினோம். பந்தளம் கோவிலின் அருகில் மிகபெரிய ஆறு ஒன்று ஓடுகிறது. கிட்டத்தட்ட அப்படியான ஆறுகளை தமிழகத்தில் பார்ப்பதே மிக அரிது. 


கேரளம் முழுவதுமே மிகபெரிய அகலமான கரைபுரண்டு ஓடக்கூடிய ஆறுகளை ஒவ்வொரு நகரத்திலும் பார்க்க முடிகிறது. கேரளா இன்றளவிலும் தங்கள் நீர் வளத்தை முறையாகப் பாதுகாக்கிறது. ஆனால் நாம்? தமிழக ஆறுகளுக்கு நடக்கும் அவலங்களை அதன் கண்ணீர்க் கதைகளைத் தனியொரு பதிவாய் எழுதலாம். சொல்லபோனால் கடவுளின் தேசத்தை அழகுபடுத்த தமிழகத்தின் தென்னகத்து நதிகளை பாழாக்கிக் கொண்டுள்ளோம். 

காரணம் கேரளாவில் மணல் அள்ளத் தடை. நம் அரசியல்வாதிகளோ அவர்களிடம் பணத்தை வாங்கிகொண்டு தாமிரபரணியையும் சிற்றாரையும் இன்னும் சில உப ஆறுகளையும் கேவலமாய்க் கற்பழித்துக் கொண்டுள்ளனர். லாரிலாரியாக மணலை அனுப்பிக் கொண்டுள்ளனர். போதாகுறைக்கு தொழிற்சாலைகளுக்கு என லட்சகணக்கான லிட்டரை மானிய விலைக்கு விற்கின்றனர். முறையான நீர் சேகரிப்புகள், நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அத்தனையும் பாழ்பட்டுப் போய்விட்டன. ஒருகாலத்தில் தமிழகத்திலும் இப்படியாக ஓடிய ஆறுகள் மெல்ல மெல்ல தங்கள் தடங்களை சுறுக்கி சுறுக்கி இன்று வாய்க்காலைப் போல் ஓடிக் கொண்டுள்ளன. இதையெல்லாம் பார்க்கும் போது தோன்றுவது கடவுளுக்காக பூசாரிகளால் பலியாடாகும் ஆடுகள் தமிழகத்தின் ஆறுகள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. எது எப்படியோ கடவுளின் தேசமாவது ஓரளவிற்குப் பாதுகாப்பாய் இருக்கிறதே அதுவரை சந்தோசம்.  

சில புகைப்படங்கள் - நன்றி இணையம் 

35 comments:

  1. மேட்டரே இம்பூட்டு இருக்கறப்ப ரெண்டு படம் போட்டாப் போறாதாய்யா...? இப்ப வேலைக்கு கிளம்பறதால ஈவினிங் பொறுமையா படிச்சுட்டு கருத்துச் சொல்றேன்...

    ReplyDelete
  2. குழந்தையின் கிறுக்கலைப்போன்ற என்றே சொல்லிருக்கலாம் ..கிட்டத்தட்ட என்ற வார்த்தை அந்த வர்ணிப்பி குறைத்து விடுகிறது ...
    கிட்டத்தட்ட நூறடி .....சரியான தகவலா ?
    மூன்றாம் ஐந்தாம் படங்கள் சீனு க்ளிக்கியதா இருந்தா பாராட்டுக்கள் ......செம்ம க்ளிக்
    தென்மலையிலும் ஒரு தொங்குப்பாலம் உண்டு ...முடிந்தால் படத்தை அனுப்புகிறேன்
    தென்மலையில் சேட்டன்கள் அதிக கட்டணம் வாங்குகின்றனர்

    கடைசி ரெண்டு பேராக்கும் வாழ்த்துக்கள் ..எக்ஸ்பிரஸ் இப்ப்டியாக நெறைய்ய எக்ஸ்போஷ் செய்யனும் .
    வழக்கம் போல நீளமான எக்ஸ்பிரஸ் ?

    ReplyDelete
    Replies
    1. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நீளமான எக்ஸ்பிரஸ்

      Delete
    2. இப்படி யாராச்சும் எடுத்துகொடுத்தா எசப்பாட்டா? நல்லவேளை ஆஹா அருமைன்னு சொல்லாம உண்மையா சொன்னிங்கக்கா

      Delete
  3. படங்கள் அருமை. பதிவு ........அதுக்குள்ள எப்படிப்பா சொல்லமுடியும் இவ்வளவூஊஊஊஊஊஊஊஉ பெரிய பதிவிற்கு உடனே பதில் சொன்னா அது படிக்காம போட்ட மாதிரி ஆயிடும் அதனால பொறுமையா படிச்சு சொல்லுறேன் ஒகேவா..

    ReplyDelete
  4. கடவுள் நேரில் வந்து எனக்கு வரம் தருவதாக சொன்னார் என்ன வரம் வேண்டுமென்றாலும் கேள் என்றார்.

    நான் உடனே இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஒரு நாலு வழிப்பாதை உள்ள ஒரு ரோடு வேண்டுமென்றேன் அதை கேட்ட அவர் மதுரைத்தமிழா செய்ய முடியாததை எல்லாம் கேட்காதே வேறு ஏதாவது கேளு ப்ளீஸ் என்றார்
    நானும் உடனே அப்ப சீனுவின் இந்த பதிவை சிறியதாக்கி தாருங்கள் என்றேன்

    அவர் உடனே மதுரைத்தமிழா நான் அமெரிக்காவிற்கு ரோடே போட்டு தருகிறேன் ஒன்றுமட்டும் நிச்சயம் உன்னை மாதிரி ஆட்கள்கிட்ட மட்டும் என்ன வரம் வேண்டுமென்று கேட்கவே மாட்ட்டேன் என்று சொல்லி ஒடிவிட்டார்

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. சீனுவின் ஸ்டாண்டடுக்கு இந்தப் பதிவு கொஞ்சம் சிறியதுதான்.

      Delete
    2. ஹிஹி..

      மண்டையில அடிக்குறாப்புல இருக்குங்க - சந்திரனுக்கு ஆறு லேன் ஹைவே கேட்கத் தோணுதா? ஒரு வழி இருக்கு.

      Delete
  5. கேரளம் எப்போதுமே அழகுதான். கொஞ்சமா மழையும் பெய்யும்போது அலங்காரம் செய்து வைத்த யானை மாதிரி இன்னும் ரொம்ப அழகு. படங்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களுடன் பதிவு நீளமா இருந்தாலும் நீளமான ரயில்வண்டி மாதிரி அழகா இருக்குங்க

    ReplyDelete
  6. நீங்க யாரை பற்றியும் கவலைப்படாமல் (நீளமாகவோ, குறைவாகவோ) எழுதுங்க தம்பி! படிக்காமலா போய்விடுவார்கள்? எதற்கும் படங்களில் இளம்பெண்கள் இருப்பதுபோல் உள்ள படங்களை வெளியிடலாம் என்று பொதுக் கருத்து நிலவுவதைச் சுட்டிக்கட்ட வேண்டியவனாகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இதை நானும் ஆமோதிக்கிறேன் ஹிஹிஹி

      Delete
  7. கொட்டும் மழையில் முப்பதடி டவரின் உச்சியிலும் ரெண்டுபேர்....(இவர் கண்ணிலே சிக்குகிறார்கள்) லட்சக்கணக்கான நீர் விற்பனை அரசே செய்யும் போது நீர் பாதுகாப்பாவது மண்ணாவது.

    ReplyDelete
  8. வாவ், நானும் உங்களுடனேயே பயணம் செய்தது போல இருந்தது. இப்போதானே தொடங்கி இருக்கு..... அருமையா இருக்கு !


    என்ன சேட்டா, கேரளாவில் டீ கடை தேடி அலைந்தேன் என்பர் சொன்னது நம்பும்படியாகவா இருக்கு ? உண்மைதானா ?!

    ReplyDelete
  9. கடவுளின் பூமி என்பது சரியாகத்தான் இருக்கிறது. கண்பட்டுவிடும் போல வளம் கொழிக்கிறது.

    ReplyDelete
  10. நீண்ட பதிவாக இருந்தாலும் சுவாரஸ்யம் குறையவில்லை! கேரள முக்கிய பகுதிகளை விவரித்தமை, தமிழக ஆறுகள் கொள்ளை போவது குறித்த கருத்துக்கள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. நண்பா அடுத்த தடவ கேரளாவுக்கு பொண்ணு பாக்க போகும் போது என்னயவும் கூட்டிட்டு போங்க.. நீங்க பொண்ணப்பாருங்க, நான் கேரளாவை பாக்குறேன் ஒரு ஓரமா நின்னுக்கிட்டு.. கேரளாவை சுற்றிப்பார்க்க பல ஆண்டுகளாக ஆசை எனக்கு.. இந்தப்பதிவு அந்த ஆசையை இன்னும் அதிகரித்துவிட்டது.. கேரளா டூர் போட்ருவோமா?

    அதெல்லாம் சரி, ஏதோ பெரிய பதிவு ஒன்னு எழுதப்போறேன்னு சொன்னேளே, அத எப்ப போடப்போறேள்? ஐயம் வெயிட்டிங்..

    ReplyDelete
    Replies
    1. ராஆஆஆம்.. இப்படிக் கேக்கறது உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலயா....? அவ்வ்வ்வ்வ்!

      Delete
    2. ராம்! கேரளாவைப் பாத்ததுக்கே இவளோ பெரிய பதிவு கிடைச்சிருக்கு . பொண்ணு பாக்க போனா ...

      Delete
    3. ராம்குமார் எழுத்துக்கள் பட்டாசு சீனுவின் எழுத்துக்கள் மத்தாப்பூ

      Delete
  13. அருமையான பதிவு
    படங்கள் அருமை நண்பரே

    ReplyDelete
  14. கடைசி இரண்டு பாராக்களைப் படித்ததும் மேலே உள்ள பாராக்களினால் மனதில் ஏறிய ரசனை மாறி மனம் கனத்துப் போனது. ஆவியா இருந்தா அந்த ரெண்டு பாராக்களை மட்டும் எழுதி பதிவாக்கிருப்பாரு., ஹி... ஹி... ஹி... கேரளத்தின் இயற்கை எழிலையும், வீடுகளின் அழகையும் பத்தி சொல்லிருக்கறதாப் பாக்கறப்ப... ராம் கேட்டதைத்தான் நானும் கேக்கறேன். ஒரு கேரளா டூர் போட்ரலாமா ராம்?

    ReplyDelete
  15. சாயா கடை இல்லாதது ஆச்சரியம் தான்...!

    நீர் வளத்தை முறையாகப் பயன்படுத்தவும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது... ம்...

    ReplyDelete
  16. மிக அழகிய வர்ணனை! கடவுளின் அழகான தேசத்திற்குள் அழகான தமிழ் அன்னை ஒயிலான நடை நடந்திருக்கின்றாள்!

    தமிழ் நாட்டில் மணல் மட்டுமா அள்ளுகின்றார்காள்? ஷாம்பூ, சோப்பு என்று தங்களையும், தங்கள் துணிகளை மட்டும் நுரைத்து வெள்ளையாக்கினால் போதாது என்று தண்ணீரையும் நுரைத்து, ஆற்றுப் படுகையையும் அல்லவா வெளுத்துக் கொண்டிருக்கின்றார்கள்!

    அருமையான பதிவு! படங்கள் மிகத் தெளிவு கொள்ளை அழகு! சீனு நீண்ட பதிவு என்று சொல்லப்பட்டாலும் தெரியவில்லை...நாங்களும் பயணித்ததால்....உங்கள் எந்தப் பதிவுமே நீண்டது என்று சொல்ல முடியவில்லை....சுவாரஸ்யமாக, உங்கள் அனுபவ ரசனை அதில் இருப்பதால்......வாசிப்பதற்கு சுகமாக இருக்கின்றது! குடோஸ்!!!!

    ReplyDelete


  17. /////இம்முறைப் பொறாமைப்படவில்லை. 'எங்கிருந்தாலும் வாழ்க' பாடிவிட்டு நகர்ந்துவிட்டேன். ///

    புரிஞ்சுடுச்சு புரிஞ்சுடுச்சு

    ReplyDelete
  18. எனது பிறந்த(செங்கோட்டை ) மண்ணையும் அதை சுற்றி நான் சிறுவயதில் பயணித்த பகுதிகளையும் அப்படியே படத்துடன் கூடிய அழகிய பதிவாக மனதில் கொண்டு வந்து நிறுத்திய சீனுவுக்கு பாராட்டுகள் & நன்றிகள். செங்கோட்டை சென்று 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டன... ஹும்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. செங்கோட்டையா நீங்கள்?

      Delete
  19. நான் இன்னும் பெரிசா எதிர்பார்த்திருந்தேன் சீனு.... நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
  20. அப்போ தமிழ்நாடு என்ன சாத்தானின் தேசமா - அம்மாட்ட சொல்லவா?

    ஒரு தடவை கேரளா போகணும். உங்க கேமராவைக் கடன் வாங்கிக்கிட்டு. சமீப இந்திப் படம் ஒன்றில் தென்மலை காட்சியைப் பார்த்தது போல தோன்றுகிறது.

    ReplyDelete
  21. வெறும் ஒரு பயண பதிவா இல்லமா, வரலாறையும் சொல்லி எழுதுனது சூப்பர்... என்ன ஒன்னு ரெண்டு நாள் ஆச்சு முழுசா படிக்க!

    :-)

    ReplyDelete
  22. அருமையான தேசம் கேரளா நானும் பந்தளம் பார்த்திருக்கின்றேன் ஐயா!

    ReplyDelete
  23. உடன் பயணித்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டது. பயணக்கதையுடன் வரலாற்றையும் இணைத்திருப்பது பல செய்திகளை அறிய உதவியாக இருந்தது. பாராட்டுகள். www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  24. //கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போன்றவை கேரள சாலைகள். வளைந்து நெளிந்து தன் போக்கிற்கு எங்கெங்கோ எப்படியெப்படியோ பயணிக்கின்றன.// வர்ணனை அட்டகாசம்
    நீளமாக இருந்தாலும் சுவாரசியம் குறையவில்லை . நிறைய படங்கள் இணைக்கவேண்டும் என்று நினைத்தால் ஸ்லைடு ஷோ வாக இணைக்கலாம்

    ReplyDelete