குடந்தையூர் சரவணன் அவர்கள் இயக்கத்தில் ஆவியும் அரசனும் கூடவே துளசிதரன் அவர்களும் இணைந்து நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படத்தை சில நாட்களுக்கு முன்பும் நேற்றும் பார்த்தேன். அப்படத்தைப் பற்றி சில விஷயங்கள்.
குடந்தையூர் அவர்கள் சற்றே நீள, அந்த நீளத்திற்கு ஏற்ற பட்ஜெட்டில் ஒரு குறும்படம் தயாரித்து இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தபோது இருந்தே அவரைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர் தனது முதல் குறும்படத்திற்கான கதையை விவரித்த போதே நிச்சயம் அது வெகுஜன ரசிகர்களுக்கு (என்னைப் போன்ற குறும்படப் பிரியர்களுக்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன்) பிடிக்கும் என்பது புரிந்தது, அதேநேரம் அந்தப் படத்திற்கு நாம் எதிர்பார்க்கும் ஒரு பெர்பெக்சன் வர வேண்டுமென்றால் அதற்கான உழைப்பு மிக அபாரமாக இருக்க வேண்டும். தயாரிப்பு செலவுகளும் முன்னப்பின்ன வரலாம். திரைத்துறையில் நன்கு அனுபவமிக்க சில நண்பர்கள் சில அறிவுரைகள் கூறியதன் பேரில் அந்தத் திட்டத்தை தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளார் குடந்தையூரர். அதிலும் அண்ணன் கே.ஆர்.பி கூறியது இதைத்தான் 'ஒரு பத்து குறும்படம் எடுத்து அடிபட்டு, அனுபவபட்டு வாங்க சார், அதுக்கு அப்புறம் இந்தப் படம் எடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்' என்றார்.
அவ்வகையில் தனது முதல் குறும்படமாக சில நொடி ஸ்நேகத்தை எடுத்து முடித்துவிட்டார். அரசனும் ஆவியும் குடந்தையூரரின் கூடவே இருந்ததால் குறும்படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை என்னால் ஓரளவேனும் புரிந்து கொள்ள முடிந்தது.
மேலும் இந்த குறும்பட டீமில் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். தங்கள் அலுவலகம் முடிந்த இரவுகளில் மட்டுமே குறும்படத்திற்கான எடிட்டிங் மற்றும் மற்ற டிங்கரிங் வேலைகளைப் பார்க்க முடியும். அப்படித்தான் பார்த்தார்கள். ஒவ்வொரு இரவுகளிலும் அவர்கள் தூங்கச் செல்லும்போது அடுத்தநாள் தனது விடியலை நெருங்கியிருக்கும். ஒரு குட்டித்தூக்கம் போட்டு பின் அலுவலகம் நோக்கி ஓடி மீண்டும் ஒரு கூரையின் கீழ் இயங்கத் தொடங்கும் போது அடுத்த இரவு அவர்களுக்காக முழித்திருக்கும். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு இதே நிலை தான். அந்த பத்து நாட்களில் குறும்படத்திற்காக தன்னை முழுமையாக அர்பணித்தவர் குடந்தையூரர்.
கும்பகோணத்தில் வைத்து நடைபெற்ற ஷூட்டிங் அனுபவங்களை அவ்வபோது ஆவியும் அரசனும் பகிர்ந்து கொண்டே இருப்பார்கள், வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை தாங்கள் உணர்ந்த தருணம் என்றார்கள். பெரிய பெரிய படங்களின் படப்பிடிப்புகளில் crowd controlling என்பது மிகவும் கஷ்டமான காரியம் தான் என்றபோதிலும், அதைக் கட்டுபடுத்த சில நபர்கள் இருப்பார்கள்.
ஆனால் குறும்படம் எடுக்கும் போது, கேமெராமேன் தீர்மானிக்கும் frameற்குள் தேவையில்லாத நபர்வரின் அவரை வரவிடாமல் பார்த்துக் கொள்வதே உடன் இருபவர்களுக்குப் பெரும்பாடாய் இருக்கும். ஒருவேளை மீறி ஏதாவது கூறினால் சண்டைக்கு வருவார்கள் அல்லது எகத்தாளமாகப் பார்ப்பார்கள். இத்தனைக்கும் நடுவில் லைட்டிங் மிக மிக முக்கியம். இருளில் ஷூட்டிங் செய்யும் அளவுக்கு எல்லாம் நம்முடைய பட்ஜெட் நம்மை அனுமதிக்கப் போவதில்லை. மேலும் குறித்த நேரத்திற்குள் படத்தை எடுத்தும் முடிக்க வேண்டும். இதையெல்லாம் விட மிக முக்கிய விஷயம், நடிப்பதற்காக நம்மோடு வருபவர்களுக்கு நடிப்பதில் ஓரளவேனும் ஈடுபாடு வேண்டும். சு'ம்மா அவர் கூப்டாரு வந்தேன், நட்புக்காக, ஜாலியா தலைய காட்டலாம்னு வந்தேன்'னு சொன்னா நீங்க உங்க கனவுகளை மூட்டை கட்டிற வேண்டியது தான்.
அப்படியே நடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு ஒருவர் வந்தாலும் கேமெரா முன் நின்று நாலு பேர் முன் நடிக்கத் தொடங்கினால் அப்படியே ஒதரும். இதில் அவர் இயல்புநிலைக்கு வருதல் என்பது பெரும்பாடு. இத்தனை சவால்களும் ஒட்டுமொத்தமாக ஒரே ஒருவர் தோளின் மீது மட்டுமே சுமத்தப்படும் அவர் வேறு யாருமில்லை அக்குறும்பட இயக்குனரே. இவ்வளவையும் கடந்து அவர் தனது இயக்குனர் வேலையையும் பார்க்க வேண்டும். இத்தனை சாவல்களையும் மீறித்தான் குடந்தையூரும் தனது சூட்டிங்கை முடித்துள்ளார். கூடவே போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளையும்.
அரசனும் ஆவியும் நடித்திருந்ததாலோ என்னவோ படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது. குடந்தையூரும் நட்பின் அடிப்படையில் 'வாத்தியார் ஸ்கூல்பையன் சீனு இவங்களோட கருத்த தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கேன். அவங்ககிட்ட கேட்டு சொல்லுங்க' என்று அரசன் மற்றும் ஆவியிடம் கூறியிருந்தார்.
கடந்த வாரம் வாத்தியாரின் வீட்டில் வைத்து படத்தைப் பார்க்கத் தொடங்கினோம். படம் பதினைந்து நிமிடங்கள் ஓடுகிறது என்று நினைக்கிறன். தற்செயலாய் சந்திக்கும் இரு நபர்களுக்கிடையே நிகழும் ஸ்நேகம் என்பது தான் கரு. மற்றவற்றை நீங்கள் குறும்படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தக் குறும்படம் பார்க்கும் போதும் சரி பார்த்து முடிக்கும் போதும் சரி வாத்தியாரும் ஸ்கூல்பையனும் சும்மாத்தான் இருந்தார்கள். நான் தான் ஆரம்பத்தில் இருந்தே இது இப்படி இருந்திருக்கலாம் அது அப்படி இருந்திருக்கலாம் என்று ஒவ்வொன்றாகக் கூற ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் ஆவி பொறுமையிழந்துவிட்டார். யோவ் பேசாம படத்தப் பாரு, அப்புறமா கருத்த சொல்லு என்றார். ஆனாலும் நான் விடவில்லை. இல்ல பாஸு என்று நான் ஆரம்பித்தால் முறைக்க ஆரம்பித்துவிடுவார். அப்புறம் சில காட்சிகள் நான் புரியவில்லை என்றால் அதனை விளக்குவார், நானோ 'அதெல்லாம் முடியாது, ஒரு காட்சி பார்த்தவுடன புரியணும், நீங்க ஒவ்வொருத்தர் கிட்டயா போய் விளக்குவீங்களா என்றேன். 'இல்லப்பா இது குறும்படம் மோர் டீடெயிலிங் எதுக்கு' என்பார். 'கேமரா வசனம் எல்லாம் ஒகே, ஆனா இசை' என்று இழுத்தேன் என்றால் மீண்டும் முறைப்பார்.
கிட்டத்தட்ட கடந்த நான்கு வருடங்களாக வெறும் குறும்படங்களாக தேடித்தேடிப் பார்ப்பது மட்டுமே எனது முக்கியப் பொழுதுபோக்காக இருந்தது. (இப்போ கொஞ்சம் குறைச்சிட்டேன், அரைச்ச மாவையே அரைக்கிறாங்க). அதனால் என்னிடம் குறும்படப் பாதிப்பு அதிகம். குடந்தையூரிடம் இருந்தும் ரொம்பவே சிறப்பான ஒரு படைப்பை எதிர்பார்த்திருந்ததலோ என்னவோ என் எதிர்பார்ப்புகளின் உள் அவை வரமறுத்தது. படம் பார்க்கும்போது என்னுள்ளே இருந்த ஒருவன் தன்னுடைய வாதங்களை வைக்கத் தொடங்க ஆவி டென்சன் ஆகிவிட்டார். 'ப்பா இது முதல் படம்ப்பா போக போக நல்லா பண்ணிரலாம்' என்றார். அவர் சொன்னது சமாதானம் தருவதாய் இருந்தாலும் முழு சமாதானம் அடையவில்லை.
அதேநேரம் படம் பார்த்து முடித்ததும் நான் கூறிய கருத்துக்களில் வாத்தியாரும் ஸ்கூல்பைனும் ஒத்துப்போனார்கள், சிலவற்றை மறுத்தார்கள். விமர்சனம் என்பது தலையில் கொட்டுவது போல் இருக்கலாம் ஆனால் பாறாங்கல்லைப் போடுவது போல் இருக்ககூடாது என்பார்கள். நான் ரெண்டு மூன்று பாறாங்கல்லை வைத்திருந்தேன் போலும்.
இருந்தாலும் நாங்கள் கூறிய விமர்சனங்கள் நிச்சயம் குடந்தையூரைப் பாதித்திருக்க வேண்டும், வருத்தபட்டிருப்பார் என்றும் தெரியும். விமர்சனங்கள் என்பது ஒருவர் வருத்தபடுவதற்காகக் கூறப்படுவதில்லை, அவர் தன்னை கூர்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அக்கறையில் கூறப்படுபவை. எல்லாருமே எல்லாவற்றையும் முதல் முறையே சிறப்பாக செய்துவிடவில்லை. இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா என்று நாம் நினைக்கும் சில விஷயங்கள் பெரிய பிரச்சனையாக வரும். இன்றைக்கு அலுவலகத்தில் கூட ஒரு சில்லறைத்தனமான பிரச்னையை செய்துவிட்டு டெஸ்கை தடவிக் கொண்டிருந்தேன், அதனை என் டி.எல் கார்த்திக் சரிசெய்த போது 'ச்ச இது கூட தெரியலியா எனக்கு' என்று தான் தோன்றியது. ஆனால் அது ஒரு பாடம். அவ்வளவு தான், அடுத்தமுறை அதே தவறை செய்யக்கூடாது. புதியதாய் ஒன்றை தேடிப்போக வேண்டும். ச்ச என்று அங்கேயே தேங்கிவிட்டேன் என்றால் கடைசி வரைக்கும் தேங்கிக் கிடக்க வேண்டியதுதான்.
நாங்கள் கொஞ்சம் காட்டமான விமர்சனம் தான் வைத்தோம் என்றபோதிலும் முதலில் வருத்தப்பட்டவர் பின் அதனை சரி செய்வது எவ்வாறு என்பது குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அதற்காக இன்னொருமுறை ஷூட்டிங் எல்லாம் செல்ல முடியாது. இருப்பதை வைத்து இன்னும் பெட்டர் ஆக்குவது ஒன்றே சிறந்த வழி.
நேற்றைக்க்கு மீண்டும் ஒருமுறை படம் பார்த்தேன். எனக்கு எதுவெல்லாம் உறுத்தியதாக உணர்ந்தேனோ அதையெல்லாம் வெட்டி இருக்கிறார். எதையெல்லாம் வெட்ட முடியாதோ அதையெல்லாம் வேறுவழிகளில் சீர்படுத்தியுள்ளார். குடந்தையூர் சார் உங்களிடம் உங்களின் முதல் படமாக எதிர்பார்த்தது கிட்டத்தட்ட இது போன்ற ஒரு படத்தைத்தான். இந்தப்படம் உங்களுக்குக் கற்றுகொடுத்த பாடம் உங்களின் அடுத்த படத்தை மெருகூட்டும் என்று நம்புகிறேன். 'அன்னிக்குப் பார்த்தப்பவிட இப்போ எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு' என்றார் ஸ்கூல்பைனும். வாத்தியார் இன்னும் பார்க்கவில்லை என்று நினைக்கிறன். இந்த நள்ளிரவில் வாத்தியாருக்கு போன் செய்து 'பார்த்துட்டீங்களா' எனக் கேட்பது சற்றே சிரமமான காரியம் என்பதால் அவர் டீலில் விட்டுவிடுகிறேன்.
இந்த போட்டோக்கு மட்டும் எனக்கு பேமன்ட் வந்த்ரனும் |
அப்புறம் உங்களின் அடுத்த படத்தில் மிஸ்டர் ஸ்கூல்பையனை ஹீரோவாக வைத்து இயக்க இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. அப்படம் இன்னும் மென்மேலும் மெருகூட்டப்பட்ட ஒன்றாக வெளிவர வாழ்த்துகள். இன்னொரு விஷயம் எப்படியேனும் என்னை உங்களின் ஏதேனும் ஒரு படத்தின் ஒரு காட்சியிலாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற தீவிரத்தில் இருப்பதாக அதே உளவுத்துறை கூறியது. நானெல்லாம் அமெரிக்க மாப்பிள்ளையாக நடிப்பதற்குக் கூட லாயக்கிலாதவன் என்பதை இச்சமூகத்தின் முன் கூறிகொள்கிறேன் :-)
Tweet |
ஒரு கொஞ்சம் நீளமான பதிவை படிக்கும் ஆயாசம் சிறிதுகூட ஏற்படவில்லை, சுவைபட சொல்லியிருக்கிறீர்கள் சகோ! (எனக்கு நீளமான கட்டுரை என்றாலே அலர்ஜி:)
ReplyDeleteநண்பர்களின் படத்தில் இருக்கும் அக்கறை தெரிகிறது!! சும்மா அருமை! நல்ல முயற்சி என போறபோக்குல சொல்லாமல் நட்பின் ஆழத்தை காட்டியதால் இப்போ கொஞ்சம் டென்சன் ஆனாலும் பின்னர் புரிந்துகொள்வார்கள் இல்லையா சகோ?
சூப்பர் சீனு! நல்ல கருத்துக்கள் பரிமாற்றம்! எப்பவுமே முதல் ப்ரின்ட் நாம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டு அதை இன்னும் எப்படி எடிட் செய்யலாம் என்பதற்காக....என்ன சீன் வேண்டும், வேண்டாம், கட் செய்யலாம் என்பதற்காக...
ReplyDeleteஉங்கள் கருத்து அருமை! சீனு!
உலகத்தோருக்கு உரக்கக் கத்தாமலே நான் சொல்லிக் கொள்ள விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், குடந்தையூராரின் அடுத்த படத்தில் ஸ்கூல் (போகமறுக்கும்) பையனைக் கதறக் கதற அடித்து இழுத்து பள்ளிக்கு அனுப்பும் அப்பா கேரக்டர் எனக்குத் தருவதாக அவர் உறுதி செய்திருக்கிறார் என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் (கடுந்துயரத்துடன்?) தெரிவித்துக் கொள்ளும் இந்த வேளையிலே... ஹப்பா... எங்கடா சோடா?
ReplyDeleteஸ்கூல் (போகமறுக்கும்) பையனைக் கதறக் கதற அடித்து இழுத்து பள்ளிக்கு அனுப்பும் அப்பா கேரக்டர் எனக்குத் தருவதாக ** இதை சொல்லும்போது backgroundல ஒரு கொலைவெறி தெரியுது??:))) அண்ணனுக்கு எத்தனை நாள் ஆசையோ:))
Deleteசமீபத்திய வெர்ஷனை நான் பார்க்கலை சீனு. ஆனால் ஒரு பாத்திரத்தை இரண்டு மூன்று முறை துலக்கினால் மிகப் பளிச்சென்று மின்னுவது போல நான் பார்த்த மூன்று வெர்ஷன்களிலும் ஒவ்வொன்றாக மேம்படுத்தி குறைகளைக் களைந்து வந்திருக்கிறார் குடந்தையூரார். நாம் பார்த்த வெர்ஷனில் இருந்த விஷயஙகளும் இப்ப அழகா சீர் பண்ணியிருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. திறந்த மனதுடன் சொல்வதை ஏற்றுக் கொள்கிற குடந்தையூரார் இன்னும் பல வெற்றிக் கனிகளைப் பறிப்பார். அவரை நாம் மகிழ்வோடு வாழ்த்துவோம்.
ReplyDeleteஆர்வத்தைத் தூண்டும் முன்னோட்டம். ஆவியும் அரசனும் ஏன், துளசிதரன்ஜியும் அழகாகத் தெரிகிறார்கள். ஆவியின் முறைப்பு தெரிகிறது காட்சியில். பஸ்ஸில் ஆவி... படம் சூப்பர்!
ReplyDeleteகுடந்தையூராருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஆவியின் கவனத்திற்கு!, கறாராக விமர்சனம் செய்த சீனுவை அடுத்த குறும்படத்தில் எப்படியாவது நடிக்க வைத்து அதை காட்டமாக விமர்சனம் செய்வது கிழி கிழியென்று கிழித்து பழிக்கு பழி வாங்கலாம்
ReplyDeleteகுடந்தையூராருக்கு சிகரம் தொட வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய நண்பர் சரவணின் ஆர்வம் எதையும் சமாளித்து வெற்றி அடைவார்...
ReplyDeleteஅடுத்து நாம நடிக்கிறோம் சீனு...!
//இருந்தாலும் நாங்கள் கூறிய விமர்சனங்கள் நிச்சயம் குடந்தையூரைப் பாதித்திருக்க வேண்டும், வருத்தபட்டிருப்பார் என்றும் தெரியும்//
ReplyDeleteப்ளாக், பேஸ்புக், பத்திரிக்கை அல்லது ஏதாவது ஒரு பொது ஊடகம் மூலம் கருத்து தெரிவித்திருந்தால் அதை விமர்சனம் என்று சொல்லலாம். நேரிலோ தொலைபேசி மூலமாகவோ தனிப்பட்ட முறையில் கூறுவதால் இது வெறும் கருத்து என்றே பொருள் கொள்ளலாம்.....
//அப்புறம் உங்களின் அடுத்த படத்தில் மிஸ்டர் ஸ்கூல்பையனை ஹீரோவாக வைத்து இயக்க இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது//
ReplyDeleteஇதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் என் காதுக்கே வரவில்லை. அதற்குள் வதந்தியைப் பரப்பும் இந்த வலைத்தளத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்... :)
யோவ்...ஒமக்கு சிநேகா பிடிக்கும்குற ஒரே காரணத்துக்காக சில நொடி சிநேகான்னு டைட்டில மாத்த சொல்லி இருக்க. அது முடியாதுன்னு சொன்ன ஒடன டென்சன் ஆயி எங்க இயக்குனரை திட்டி இருக்கறதா கேள்விப்பட்டேன். ஏரியாவ விட்டு வெளியா வாய்யா...இதுக்கு ஒரு பஞ்சாயத்த கூட்டணும்.
ReplyDeleteஒரு படைப்பை நாம் பார்க்கும் கோணத்தில் அதனை நேர்மையாக விமர்சிப்பதே சரியானது. எந்த ஒரு படைப்பாளிக்கும் எதிர்மறை விமர்சனம் வலியைக் கொடுத்தாலும் அதனை பொதுவில் வைக்கும்போது உண்மையான வீச்சு தெரிந்துவிடும். நேரில் புகழ்ந்துவிட்டு பின்னால் அதனை மற்றவர்களிடம் விமர்சிப்பதைவிட எப்போதும் ஒரே மாதிரியான விமர்சனங்களை முன்வைப்பதுதான் நேர்மையானது. மேலும் ஒரு படைப்பை பொதுவில் வைத்துவிட்டால் அதன்மீதான எல்லாவகையான விமர்சனங்களையும் ஒரு படைப்பாளி எதிர்கொள்ளவேண்டும். அப்போதுதான் அடுத்த படைப்பின் மீது அதீத கவனம் செலுத்த முடியும். குடந்தையூராருக்கு அத்தகைய பார்வை இருப்பதால்தான் மீண்டும் எடிட் செய்திருக்கிறார் எனத் தெரிகிறது. சீனுவுக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteஎனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...
ReplyDeletehttp://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி
தங்கள் மூவரிடமும் குறும்படத்தை காண்பிக்க சொன்னதே குறைகள் என்ன செய்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளவும் பார்வையாளர்களின் எண்ணங்களை உங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம் என்று தான். எனவே இதில் நான் வருத்தப்பட ஏதுமில்லை. எனக்கு வருத்தம் இருந்தது.உண்மை தான். அது இன்னும் கவனமெடுக்காமல் உழைக்காமல் இருந்து விட்டோமோ என்பதால் தான். நான் எப்போதும் சொல்வது தான். இங்கேயும் சொல்ல வேண்டியிருக்கிறது. உங்கள் அனைவரின் ஊக்கம் தான் கனவுகளுடன் இருந்த என்னை குறும்படம் எடுக்கும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. உங்களின் அனைவரின் ஆதரவிற்கு நன்றி. பகிர்வுக்கு நன்றி சீனு
ReplyDeleteIt's just a first step of your Dream run..! Way to go Sir..! Happy to be part of your first movie. All the best for our 'SilaNodi Snegam' and all your future creations..!
Deleteகுடந்தையூர் நண்பர் சரவணன் இப்போது குறும்படத்தை சீர் செய்துவிட்டார் என அறிய மகிழ்ச்சி!
ReplyDeleteஅடுத்த கு.படத்தை சிறப்பாய் செய்வார் என்று நமக்கு நம்பிக்கை இருக்கின்றது!!
ஆவலுடன் காத்திருப்போம்!!!
குழுவுக்கு வாழ்த்துக்கள் படம் யூட்டிபிள் வந்தால் நானும் பார்க்க ஆவலுடன் லிங்கு உங்க வலையில் பகிருங்க சார்!
ReplyDelete