கத்தி குறித்து இனி எழுத என்ன இருக்கிறது. நான் எழுத நினைத்ததையும் எழுத நினைக்காததையும் பலரும் எழுதிக் குவித்துவிட்டார்கள். எங்கெங்கு காணினும் கத்தியடா.
நேற்று இரவு படம் பார்த்து முடித்ததும் இருந்த மனநிலையில் இந்த விமர்சனத்தை எழுத வாய்ப்பு கிடைத்திருந்தால் 'கத்தியின் தாக்கம் இன்னும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்' என்பது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதிரசம் வடைசுட வராவிட்டால் வீட்டில் இருக்க இடம் கிடையாது என்று அம்மா மிரட்டியதால் இப்போது தான் சிஸ்டம் அருகிலேயே வருகிறேன். அதனால் நான் எழுத நினைத்த விசயங்களில் சிலவற்றை மட்டும் கூறுகிறேன்.
கத்தி கதை இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும், இணையத்தில் தானே உலவுகிறீர்கள். நிச்சயம் தெரிந்திருக்கும். ஒருவேளை தெரியாவிட்டாலும் நான் சொல்லபோவதில்லை.
இங்கே பலரும் கூறுகிறார்கள் கத்தி மிகப்பெரிய சமுதாய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது அல்லது ஏற்படுத்தப் போகிறது என்று. அப்படி கத்தி தான் உங்களுக்குள் மிகப்பெரிய சமுதாய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது என்றால் உறுதியாகக் கூறுகிறேன் இன்னும் பத்து நாட்களுக்குள் அந்த தாக்கம் உங்கள் மனதில் இருந்து காணமல் போயிருக்கும். கோலா கம்பெனி விவசாயியின் ரத்தத்தைத் உறிஞ்சி பணம் பண்ணுகிறான் என்பது போன்ற வீர வசனத்தை நாயகன் பேசிய முப்பதாவது நிமிடத்தில் ஆளுக்கொரு லார்ஜ் பாப்கானையும் ரெகுலர் கோக்கையும் கையில் தூக்கிக் கொண்டு மீண்டும் அரங்கினுள் நுழைந்த விந்தையைப் பார்த்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தேன். ஆச்சரியம் தாக்கம் முப்பது நிமிடம் கூட தாக்குப்பிடிக்கவில்லை.
வெல். நாயகன் ஹைட்ராலாஜி படிப்பதால் மட்டுமே நீர்ப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதாய் வைத்துக் கொண்டால் அதற்கான மெனக்கெடல் கொஞ்சம் கூட திரைக்கதையில் இல்லை. அதே நேரம் நீர்பிரச்சனையை மட்டுமே விவசாயிக்கு பூதாகரமான பிரச்சனை என்பது போல் பேசியது கொஞ்சம் டூ மச். சமீப காலமாக நம்மாழ்வார் அய்யா அவர்களின் புத்தகங்களையும் பசுமை விகடனையும் தொடர்ந்து படிப்பதால் நீராதாரத்திற்கு இணையான எவ்வளவோ விஷயங்கள் இன்னும் பொதுப்பார்வையில் வைக்கப்படாமல் இருப்பது புரிகிறது. பசுமைப் புரட்சியின் பின்விளைவுகள், உர உபாதைகள், மரபணு விதை, இயற்கை விவசாயம் என்று இன்னும் உரக்க பேச வேண்டிய விஷயங்கள் நீண்டுகொண்டே செல்கிறது. அவற்றை சேர்த்திருந்தால் ஒரு விவசாயின் பல பிரச்சனைகள் பொது வெளிக்கு வந்ததாய் உணரலாம். பாராட்டலாம் ஆனால் தண்ணீர்ப் பிரச்சனை என்பது ஏ.ஆர்.எம் கூறித் தான் நமக்குத் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனாலும் அதையாவது வைத்திருக்கிறார்களே என்ற எண்ணத்தில் வேண்டுமானால் பாராட்டலாம்.
ஒருவேளை இந்த சினிமாவை மக்கள்/விவசாயிகளின் பிரச்சனையைப் பற்றி பேசும் சினிமாவாக ரமணா இந்தியன் போல் தாக்கத்தை ஏற்படுத்திய சினிமாவாக பார்த்தீர்கள் என்றால் என் மேற்கூறிய பேரா உங்களுக்கானது. அப்படி இல்லை இது சினிமா தானே வெறும் சினிமாவாக பாப்போம் என்றால்,
முதல் இருபது நிமிடம் போர் என்று அனைத்து தரப்பினரும் கூறுகிறார்கள். வழக்கமாகவே பல தமிழ் சினிமா சந்திக்கும் தற்போதைய பிரச்சனை முதல் இருபது நிமிடம் மொக்க என்பது தான். முதல் இருபது நிமிடம் எவ்வளவு முக்கியமானது, பின் ஏன் அது போர். எல்லாம் இந்த இரண்டரை மணி நேர சாபக்கேடுக்காகத் தான். தமிழ் சினிமா என்றாலே இரண்டரை மணி நேரம் இருக்க வேண்டும், ஆனால் கதைக்கான சரக்கோ ஒன்றரை மணி நேரத்திற்கு தான் இருக்கிறது. பின் என்ன செய்வது, முதல் இருபது நிமிடம் இழுவை. பின்முப்பது நிமிடம் பாடல்கள். பைனலி டார்கட் அச்சீவ்ட். நமக்கும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் படம் ஓடவில்லை என்றால் ஏதோ குறைபட்டுவிட்டது போலவே தோன்றுகிறது பாருங்கள் அது நம் சாபக்கேடு. சரி கத்திக்கு வருகிறேன். முதல் இருபது நிமிடத்தை விடுங்கள் போனால் போகிறது, ஆனால் அதற்கு அடுத்த நிமிடங்கள்.
இது ரமணா புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய திரைக்கதையே அல்ல. ஏழாம் அறிவு படத்தை அவரே ஏழுமுறை பார்த்துவிட்டு எழுதிய திரைக்கதை போல் இருக்கிறது. பல இடங்களில் வசனம் அருமை என்றாலும் குண்டடிபட்ட விஜயை விஜய் சந்திக்கும் போது அந்த விஜயைப் பார்த்து இந்த விஜய் சொல்கிறார் 'ரைட் சைட்ல தான் குண்டு பாயஞ்சிருக்கு, இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆஸ்பிடல் கொண்டுபோனா இவர காப்பாத்திரலாம்'. அது எப்படிங்க சார் துல்லியமா ஒரு மணிநேரம். கொஞ்ச நேரத்துலன்னு சொன்னா ரசிகனுக்கு அதோட தாக்கம் புரியாதா? ஆனாலும் படத்தின் மற்ற வசனங்கள் மொக்க இல்ல. இடைவேளைக்கு அப்புறம் பல இடங்கள்ள வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கிறது.
இசை. திரைக்கதைக்கு இன்னொரு முக்கியமான பலம் இசை, இசைக்கு மிக முக்கியமான பலம் மௌனம். படத்தில் மௌனம் இசையாக இருக்க வேண்டிய இடத்தில் சம்மந்தமே இல்லாம ஏதேதோ இசை கேட்கிறது. பொருந்தாத இடத்தில் வரும் பொருந்தாத பாடல் கூட கொடுமையே என்று சகித்துக் கொள்ளலாம் போலும் ஆனால் பொருந்தாத இடத்தில் வருகின்ற பொருந்தாத பின்னணி இசை, கொடுமை. 'இதை சொன்னா அனிருத் மேல எனக்கு காண்டு பொறாமன்னு சொல்வாங்க எதுக்கு ப்ரோ தொல்ல, ம்யுசிக் அட்டகாசம்'. ஒளிப்பதிவு ரியலி குட். இது ரியலி ரியலான பாராட்டு தான். சமந்தா - படத்துக்கு சம்மந்தமே இல்லாத ஒரு வஸ்து, டோன்ட் கேர். அந்த காயின் பைட் நல்லா இருந்தது, முருகதாஸ் டச் (வேற யாரு டச்சும் ண்ணா சத்தியமா எனக்கு தெரியாதுங் ண்ணா).
இரண்டரை மணி நேரம் போர் அடிக்காம இருந்ததா என்று கேட்டால் என் பதில், 'மொத இருபது நிமிடம் போர், எல்லா பாட்டும் போர். வழக்கமா விஜய்க்கு சாங்க்ஸ் ஹிட்டாகும், இதில் படத்தில் ஒரு பாடல் கூட ஒட்டல, அப்புறம் எங்க மனசுல ஒட்ட'. மொதல்ல அஞ்சு பாட்டு வைக்கிற கலாச்சாரத்த மாத்துங்க சார். சோ இப்படியே மொத்த படத்தில் ஒருமணி நேரம் போர். 'இரண்டரை மணி நேரப் படத்தில ரொம்ப சாதாரணமாவே ஒரு மணி நேரம் போர் அடிக்கிற ஒரு படத்த எப்படி பாஸ் என்னால நல்ல படம்ன்னு சொல்ல முடியும்'. அதிலும் ஏ.ஆர்,முருகதாஸ் தன்னால் நூறு மதிப்பெண் எடுக்க முடிகிற ஒரு பாடத்தில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார் என்பது வியப்பான ஒன்று. அதையும் தமிழ் சினிமா கொண்டாடும் என்றால் ரசிகனையும் உங்கள் தரத்திற்கு கீழே இழுத்துவிட்டீர்கள் என்று தானே பொருள்.
ஒன் மோர் - இந்த படத்தில எனக்கு விஜய பிடிச்சு இருந்தது, விஜய்க்கு இது ரொம்பவே நல்லா அமைஞ்சிருக்க வேண்டிய படம். ஜஸ்ட் மிஸ். விஜய்க்கு வயசாகிட்டே போறது ரொம்பவே நல்லா தெரியுது. அதனால அவரு அவரோட அடுத்த வெர்சனுக்கு அப்டேட் ஆனா நல்லா இருக்கும். காதல் டூயட் எல்லாம் வேணாம் ப்ரோ. அப்புறம் விஜய பிடிச்சதுக்கு இன்னொரு காரணம், ஹீரோயிசம். நிஜ வாழ்க்கையில நம்மால முடியாத சில விசயங்கள நிழல் உலக ஹீரோ செய்வானே அதாகப்பட்ட காட்சிகள் சில கத்தியில் இருக்கு, அதுவும் ரசிக்கும்படியா இருக்கு, அது எனக்கு பிடிச்சி இருந்தது. அஜீத் விஜய் ரெண்டுபேருமே ஏதாவது துப்பறியும் சீரிஸ் நடிச்சா பிரமாதமா இருக்கும். ஆனா அதுக்கு பிரயத்தனப்பட இயக்குனர்கள் தயாரா இல்ல, சோ எப்படியும் ரெண்டு பேரும் இப்படியேத்தான் இருக்க போறாங்க, நாமளும் வேற வழி இல்லாம நூத்தியிருபது ரூபாயா காணப் பணமா ஆக்கத்தான் போறோம்.
சரி இப்போ தலைப்புக்கு வருகிறேன். கத்தி படத்தில் மூன்று வெவ்வேறு லொக்கேசன்களில் காட்சிகள் நகரும். ஒன்று கல்கத்தா ஜெயில், இன்னொன்று அம்பத்தூர் இந்தியா லேண்ட் பில்டிங். மூன்றாவது முதியோர் இல்லம். இப்போ இந்தியா லேண்ட் பில்டிங்கில் நடக்கும் காட்சி என்றால் இந்தியா லேண்ட் முகப்புப் பகுதியை ஒவ்வொரு முறையும் காட்டிவிட்டு பின்னரே திரைக்கதை நகரும், இது போல ஜெயில் என்றால் கல்கத்தா ஜெயிலை காட்டிவிட்டும் முதியோர் இல்லம் என்றால் அதனை காட்டிவிட்டும் நகரும். ஒருமுறை அல்ல இருமுறை அல்ல ஒவ்வொருமுறையும் இப்படித்தான் நகருகிறது திரைக்கதை. சுமார் அறுபது வருடங்களுக்கு முன்பு எஸ்.பாலச்சந்தர் என்ற இயக்குனர் நடு இரவில் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். (சுட்டி கூட கொடுத்திருக்கிறேன், படித்துப் பாருங்கள் - ஒரு விளம்பரந்தேன்) அதில் ஒரு பங்களாவைச் சுற்றி மட்டுமே கதை நகரும் ஒவ்வொருமுறை திரைக்கதை பங்களாவினுள் நுழையும் போதும் அதன் பங்களாவின் வெளிப்புறத்தைக் காண்பித்துவிட்டு அதனுள் நுழைவார்கள். கத்தியிலும் இதே போன்ற உத்தியைப் பார்த்ததும் எனக்கு நினைவிற்கு வந்தது நடுஇரவில் தான். ஆனாலும் நம்பினால் நம்புங்கள் கத்தி முழுக்க முழுக்க பிரஷ்ஷான திரைக்கதை.
பின்குறிப்பு : என் அஜீத் ரசிக கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டுத்தான் இந்த விமர்சனத்தை எழுதியுள்ளேன். ஒருவேளை இதில் விஜய்க்கு பதில் அஜீத் நடித்திருந்தால் விஜய் என்று வருகிற இடத்தில் அஜீத் என்று எழுதியிருப்பேன் அவ்வளவுதான்.
Tweet |
1 1/2 மணி நேரத்துக்கு சரக்கு இருந்துச்சா....அதுவே பெரிய விஷய்ம் சீனு!
ReplyDeleteஆச்சரியம் தாக்கம் முப்பது நிமிடம் கூட தாக்குப்பிடிக்கவில்லை.// ஹஹஹஹ அப்ப...இப்ப வர படங்கள் தாக்கத்தை ஏற்படுத்துதா என்ன!!?
அழகான விமர்சனம்! சூப்பர்!
ஸோ கத்தி! ரம்பமாயிடுச்சோ?!!
ReplyDeleteமுன்குறிப்பு ! : உங்களின் நடுநிலை பார்வையை பாராட்டுகிறேன்... அதுவும் தல ரசிகர், தளபதி படத்தை விமர்சிக்கும்போது... !
ReplyDeleteதமிழ் சினிமாவின் இரண்டரை மணி சாபக்கேடு முதல் கதை, வசனம், இசை என அனைத்தையும் அழகாக அலசிய விமர்சனம்.
விஜய் படம் மட்டுமல்ல, இன்றைய தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களின் படங்களில் இதுக்கு மேல எதிர்பார்க்க முடியாது சகோ !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !
http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி