5 Jul 2019

மீரா தியேட்டர்...


சுப்ரமணியபுரம் படம் வெளிவந்து பதினோரு வருடங்கள் என்றொரு பதிவு பார்த்தேன். ஒரேயொரு ஒரு வார்த்தை எத்தனையோ பழைய ஞாபகங்களைக் கிளறிவிடுகின்றது. வார்த்தைகளின் வழி ஞாபகங்களைத் துரத்துவதன் சுவாரசியம் வேறெதில் இருக்கப்போகிறது. 

சுப்ரமணியபுரம் படத்திற்கும் எங்களின் புலம் பெயர்வுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நாட்களில் தான் தென்காசியில் இருந்து சென்னைக்கு, திருவள்ளூருக்குப் புலம் பெயர்ந்தோம். பலகாலத்துப் போராட்டம் அது. ஒவ்வொரு ஆண்டுத்தேர்வின் முடிவிலும் நண்பர்களிடம் கூறுவேன் "நாங்க சென்னைக்குப் போகப்போறோம், இனி அடுத்த வருஷம் நாம ஒரே பள்ளிக்கூடத்துல படிப்போமோ தெரியாது" என்று. காலம் எப்போதுமே வேறு பதிலை வைத்திருக்கும். அடுத்த வருடம், அடுத்த வருடம் என அப்பா ஏதேனும் காரணம் சொல்ல, அண்ணன் வேலைக்குப் போன தைரியத்தில்தான் சென்னைக்குள் காலடி எடுத்து வைத்தோம். சென்னை என்றால் சென்னைக்கு மிக அருகில் திருவள்ளூரில். 

என்னைப் பொறுத்தவரை திருவள்ளுரே சென்னையைப் போல் பெரிதான, மிகவும் பரபரப்பான ஊராகத்தான் தோன்றியது. முதன்முறையாக நான்கு வழிச்சாலையில் சைக்கிள் ஓட்டியது திருவள்ளூரில் தான். திருவள்ளூர் என்ற பெயரே சென்னை என்கிற உணர்வை, ஒருவித மிதப்பைக் கொடுத்தது. நாம சென்னை வந்துட்டோம் என்கிற கொண்டாட்டத்தைக் கொடுத்தது. அம்மாவால் தான் தென்காசி ஞாபகங்களில் இருந்து வர முடியவில்லை. 

அப்பாவும் அண்ணனும் வேலைக்கு போன நாட்களில், முப்பது ரூபாய் டிக்கெட்டை எடுத்துவிட்டு சென்னையைச் சுற்றக் கிளம்பிவிடுவேன். திருவள்ளூரில் ஆரம்பிக்கும் பயணம், பூவிருந்தமல்லி வழியாக கரையான்சாவடி, குமணன்சாவடி, போரூர், கத்திப்பாரா, சைதை என திநகர் வரை நீளும், சமயங்களில் மெரீனா, தாம்பரம் வரைக்கும் கூட ஊர் சுற்றிவிட்டுத் திரும்புவேன். கத்திப்பாராவினுள் பேருந்து நுழையும் போதெல்லாம் கனவுபோல் இருக்கும். பேருந்தின் ஜன்னல்களின் வழி சென்னையை ஆராதித்துக் கொண்டிருப்பேன். ஆரத்தழுவிக் கொண்டிருப்பேன். சென்னை எவ்வளவு பிடிக்கும் என்பதை வார்த்தைகளில் கூறிவிட முடியாது. ஆந்த சென்னைகளின் சாலைகளின் வழி பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பது பேருணர்வு. பேர் உவகை.  

இளநிலை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த சமயம், கையில் சல்லி பைசா இருக்காது. அண்ணன் தரக்கூடிய தினசரிப்படி தான் வேலை தேட, ஊர்சுற்ற எல்லாவற்றுக்கும். சென்னை எனும் பிரமாண்டம் காசு இல்லாதவனை ஒன்றும் இல்லாதவன் எனப்பார்க்கும் மாயபிம்பம், வாழ்க்கையில் முன்னேறியே ஆகவேண்டும் என்ற மிகப்பெரிய உந்துதலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஐடி கம்பெனிகளின் பேருந்துகளையும், படோடமாகச் செல்லும் ஊழியர்களையும் பார்க்கும் போதெல்லாம் ஏக்கமாக இருக்கும். ஏதோ ஒன்றை இழக்கவிருப்பனைப் போல் நாட்களைக் கடத்திக்கொண்டிருப்பேன். பலநாட்கள் டி.எல்.எப் பின் வாசலில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறேன். அந்த பிரமாண்ட வாயில் ஒரு ராட்சனனைப் போல, தேவதையின் கண்களைப் போல இருக்கும். ஒருமுறையேனும் அதன் உள் நுழைந்து பார்த்துவிடத் துடிக்கும். ஐடி கூட வேண்டாம், பிபிஓ போதும். அதுவும் டி.எல்.எப்பினுள். 

பிசிஏ படிப்புக்கு ஐடி வேலை அத்தனை எளிதில்லை, முதுநிலை படி என என்னை முதுநிலைக்கல்வி படிக்க வைப்பதில் அண்ணனும் கார்த்தியம்மாவும் மிகத்தீவிரமாக இருந்தார்கள். ஒருவேளை அவர்களில் ஒருவர் பிசிஏ போதும் எனக் கூறியிருந்தாலும் வாழ்க்கை எந்த பாதையில் எதை நோக்கிப் பயணித்திருக்கும் எனத் தெரியவில்லை. நான் ஒரு மந்தை ஆடு என்றால், என் மேய்ப்பன் அவர்கள் இருவரும் தான். 

திருவள்ளூர் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டம். ஒருவேளை திருவள்ளூரில் இருந்து தியாகராய நகர் வரை தினமும் பயணித்திருக்காவிட்டால், டி.எல்.எப் என்னுள் மிகப்பெரும் உந்துதலை ஏற்படுத்தி இருக்காவிட்டால், அண்ணனும் கார்த்தியம்மாவும் என் போக்கில் விட்டிருந்தால்? நல்லவேளை அவை கேள்விகளாகவே காலத்தின் ஓட்டத்தில் தங்கிவிட்டன.

வெறும் ஆறு மாதங்கள் தான் திருவள்ளூரில் இருந்தோம் என்றாலும் மறக்கமுடியா பல நினைவுகளைக் கொடுத்திருக்கிறது அந்த ஊர். எங்கிருந்தோ வந்தவர்களை நெருங்கிய சொந்தம் போல் அரவணைத்துக்கொண்ட ஹவுஸ்ஓனர், அக்கம்பக்கத்து நட்புகள், வீரராகவர், மீரா தியேட்டர், துளசி தியேட்டர், ரயிலடி, தேரடி, அழுக்கடைந்த அந்த பேருந்திநிலையம் என சென்னை எங்களை முழுமையாக அரவணைத்துக்கொண்டது திருவள்ளூரில் இருந்துதான். 

திருவள்ளூர்ல எங்க என யார் கேட்டாலும் சொல்லும் பதில், 'மீரா தியேட்டர் பக்கத்தில'. இரண்டு நிமிடம் நடந்தால் மீரா தியேட்டர். திருவள்ளூருக்கு வந்து சேர்ந்த இரண்டாவது நாள் அம்மாவிடம் இருபது ரூபாய் வாங்கிகொண்டு மீரா தியேட்டரின் பால்கனியில் போய் அமர்ந்தேன். சுப்ரமணியபுரம் ஓடிக்கொண்டிருந்தது.

2 comments:

  1. Good to see you blogging after a long break.

    ReplyDelete
  2. வழக்கமான அழகான நடையில் சொல்லி சென்றவிதம் அருமை

    ReplyDelete