Showing posts with label பெரியகுளம். Show all posts
Showing posts with label பெரியகுளம். Show all posts

21 May 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - கொடைக்கானலை நோக்கி

வெள்ளிக்கிழமை இரவென்பதால் சென்னையை விட்டு ஓடும் அவசரத்தில் அதிதீவிரமாய் இருந்தன பெரும்பாலான வாகனங்கள். இவைகளுக்கு மத்தியில் தாம்பரத்தில் இருந்து மெல்ல நகரத் தொடங்கியது எங்கள் பேருந்து. இந்தப் பயணத்தில் என்னோடு பயணித்துக் கொண்டிருக்கும் வெகுசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் புதியவர்கள். பேருந்தில் ஏறியதுமே எங்களுக்குள்ளான அறிமுகம் தொடங்கியது. ஒவ்வொருவரிடமும் என்னை அறிமுகம் செய்துகொள்வதில் சவால் ஏதும் இல்லை என்றாலும் தொடர்ந்து பழகுவதில் ஏதோ ஒரு பொதுவான தயக்கம். 

'பேர் என்ன' 'நல்லா இருக்கீங்களா' 'எந்த ப்ராஜெக்ட்' 'ஓ நீங்கதான் அவரா' என்பதைத் தாண்டி கேட்பதற்கும் ஆச்சரியப்படுவதற்கும் கூறுவதற்கும் எதுவும் இல்லை என்றான போதுதான் ஏதோ ஒரு இடைவெளி உட்புகுவதை உணர்ந்தேன். இந்த இடைவெளியை நிரப்ப ஒரு தருணம் தேவை. இல்லையென்றால் பயணம் இனிக்காது. காரணம் இன்னும் இரண்டு நாட்களுக்குத் துணை வரபோகிறவர்கள் இவர்கள்தானே. போதாகுறைக்கு சிலரின் பெயர்கள் என் நியாபகசக்தியை சோதித்துக் கொண்டே இருந்தன. சில சமயங்களில் பலரும் என்னை தவறான பெயருடன் அழைத்த்த போதுதான் 'ரைட்டு நமக்கு மட்டும் இந்த பிரச்சன இல்ல' என்றெண்ணி மகிழ்ச்சியடைந்தேன். என்ன செய்வது இப்படியெல்லாம் கூட சந்தோசப்பட வேண்டியுள்ளது. 

பல தருணங்களில் அனைவரும் அனைருடனும் அவ்வளவு எளிதில் பழகி விடுவதிவதில்லை. சிலர் தாமாக வந்து பேசுவார்கள். சிலரிடம் நாமாக சென்று பேச வேண்டும். சிலரோ ம்கும் அசைந்து கூட கொடுக்க மாட்டார்கள். இது போன்ற நேரங்களில் ஏற்படும் இடைவெளியை நிரப்ப பொதுவான ஒருவர் தேவை. Ice breaker என்பார்களே அப்படியொருவர் தேவை. ஒருவேளை கூட்டத்தில் அப்படியொருவர் இல்லாது போனாலும் சிக்கலே, இருந்தும் தன் பணியை செய்யாது போனாலும் சிக்கலே. அறிமுகம் இல்லாத நண்பர்களுடனான பயணம் இப்படிப்பட்ட சவால்களுடன் தான் ஆரம்பமாகியது. இந்த சவால்களைக் கடப்பதில்தானே சுவாரசியமே அடங்கியுள்ளது.  

பேருந்தில் பிரம்மன் என்னும் மகா மொக்கை ஓடிக்கொண்டிருக்க, நானும் விக்ரமும் நாங்கள் சந்திக்காதிருந்த இரண்டு வருடத்துக் கதைகளையும் பேசத் தொடங்கியிருந்தோம். நடிகர் சசிகுமாரை வியக்காமல் இந்த வரியைவிட்டு நகர மனமில்லை. நம் ஹீரோக்கள் அனைவரும் வசனங்களுக்கு மத்தியில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்க, தலைவரோ நம் காதில் பஞ்சை வைத்து அடைக்கும் அளவிற்கு ஒவ்வொரு டயலாக்கையும் பஞ்ச் பஞ்சாக உதிர்த்துக் கொண்டிருந்தார். தியேட்டர்ல பார்த்தவன் காதுல ரத்தம்கக்கி செத்துருப்பான். என்ன படம்டா சாமி. சமநேரத்தில் பேருந்தின் பின்புறம் பயணங்களின் தேசிய விளையாட்டான அன்தாக்ஸரி விளையாடத் தொடங்கியிருந்தார்கள். கிட்டத்தட்ட அன்தாக்ஸரி கூட Ice breaking வகையறா விளையாட்டுதான். அவர்களிடமிருந்து அழைப்புவரவே நாங்களும் இணைந்து கொண்டோம். நாங்களும் என்றால் நானும் விக்ரமும். 

விளக்கணைக்கபட்ட பேருந்தில் ஒருவரின் முகமும் தெளிவாய்த் தெரியவில்லை. ஒருவர் கடைசி இருக்கையின் ஜன்னலின் வழியே பயண சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்க, மற்றொருவர் அன்தாக்ஸரியில் இருந்து விலகி விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தார். குடும்பம் சகிதமாக வந்தவர்கள் உறங்கிவிட ஒரு பத்து பேர் விளையாட்டில் மும்மரமாயிருந்தார்கள். இவர்களனைவரும் மறக்கமுடியாதொரு நட்பைவிட்டுச் செல்லப்போகிறார்கள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. 

ஒருமணி வரை இவர்களோடு சேர்ந்து நானும் விளையாடிக் கொண்டிருந்தேன். அலுவலக அலுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சோர்வடையச் செய்ய ஒதுங்கிக்கொண்டேன், நான் உறங்கும் வரையிலும் சிரிப்பு சத்தமும் ஒருவரை ஒருவர் கலாயித்தலும் தொடர்ந்துகொண்டே தான் இருந்தது. 'என்ன ஒரு ஸ்டாமினா பாரேன்' என்று விக்ரமிடம் கூறி வியந்து கொண்டிருந்தேன். எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை, அவர்களது சிரிப்பொலி தாலாட்டுபாட சுகமாய்த் தூங்கியிருந்தேன்.    

விழித்துப் பார்த்தால் திண்டுக்கல்லை அடைந்திருந்தோம். மணி நான்கரை. சித்திரை மாதத்து அதிகாலை அப்படியொன்றும் விஷேசமாய் இல்லை. திண்டுக்கல் வரை பேருந்து. அங்கிருந்து கொடைக்கானலைச் சுற்ற ஒரு ட்ரவல்ஸ் வேன். இதுதான் பயண ஏற்பாடு. இதுவரை சாலைகளில் மட்டுமே வந்துகொண்டிருந்த திருப்பம் முதல்முறையாக பயணத்திலும். குறித்த நேரத்திற்குள் வருவதாய்க் கூறியிருந்த வேன் வரவில்லை. இருபத்தியாறு பேர் கொண்ட எங்கள் குழு ஆங்காங்கு பிரிந்து சாயா குடிக்கச்செல்ல சிலம்பரசன் மட்டும் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தான். பரபரப்பாக யார்யாருக்கோ போன் போட்டுக் கொண்டிருந்தான், அதிகாலையிலும் வியர்த்திருந்தான். பயணத்திட்டதிற்கு வடிவம் கொடுத்தவன் இல்லையா, அந்த அவஸ்த்தை அவனிடம் இருந்தது. நல்லவேளையாக யாரும் அவனிடம் சென்று கோபப்படவில்லை, இப்டி நடுரோட்ல நிக்கவுட்டுட்டியே என கேள்வி எழுப்பவில்லை. நிலமையை உணர்ந்து கொண்டவர்கள் டீ குடிக்கக் கிளம்ப, சிலம்பரசன் மட்டும் ஒரு ஓரமாக நின்றுகொண்டு 'தம்பி வேன் இன்னும் வரல' என்று வருந்திக் கொண்டிருந்தான். பாவம் அதிகமாய் டென்சன் ஆகியிருந்தான். 

சிலம்பரசன் 
   
சனிக்கிழமையின் அதிகாலையிலும் திண்டுக்கல் உற்சாகமாக இருந்தது. மோடியின் வெற்றியையும் லேடியின் சாதனையையும் விவாதித்துக் கொண்டிருந்தது. பழவாசனை,  டீசல்வாசனை, மூத்திரவாடை, மங்கியும் மங்காத ட்யுப்லைட் வெளிச்சம் என கிட்டத்தட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தைப் பிரதி எடுத்தது போல் இருந்தது திண்டுக்கல் பேருந்து நிலையம். ஒரு டீயை குடித்துவிட்டு நாங்களும் அரசியல் பேசத்தொடங்கி இருந்தோம். சரியாக நாற்பதாவது நிமிடத்தில் வேன் வந்துசேர பெரியகுளம் நோக்கிய பயணம் ஆரம்பமானது

தேனிமாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் பெரியகுளம். திண்டுக்கலில் இருந்து சுமார் இரண்டு மணிநேரப் பயணம். சிலம்பரசனின் உறவினர் ஒருவரின் வயலில் குளியலைப் போட்டுவிட்டு அப்படியே காலை உணவையும் முடித்துவிட்டு பின் அங்கிருந்து கும்பக்கரை செல்வது என முடிவாகியிருந்தது. குறித்த நேரத்தைவிட சற்று தாமதமாகவே வயலைச் சென்றடைந்திருந்தோம். அதிகாலைப் பனியின் மிச்சம் புல் வெளிகளில் பரவிக்கடக்க வெறுங்கால்களுடன் அவற்றின் மீது நடப்பதற்கே சுகமாய் இருந்தது. ஒரு பக்கத்தில் கரும்புத் தோட்டம் செழித்து வளர்ந்திருக்க, இது உழவுக் காலம் என்பதால் மற்றபக்கங்களில் எல்லாம் வயலை உழுது போட்டிருந்தார்கள். இட்லி வடை மற்றும் சுவையான பணியாரத்துடன் அருமையான சாப்பாடு, பின் அங்கிருந்த தோப்பிற்குள் சென்று இளநீர் குடிக்கத் தொடங்கினோம். நேரம் மெல்ல கரைந்து கொண்டிருக்க சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தான் ஆதவன்.  
  

எல்லாம் சரி ஆனாலும் இந்த பயணத்தில் ஏதோ ஒன்று குறைவது போலவே இருந்தது. நான் என்ன உணர்கிறேன் என்பதை என்னாலேயே சரியாக சிந்திக்க முடியாத அளவிற்கு சோர்வடைந்திந்தேன். சோர்வென்றால் மொத்தமாய் தளர்ந்திருந்தேன். யாருடனும் உற்சாகமாய்ப் பேசக்கூட முடியவில்லை. உடல்வலியுடன் வயிறும் சேர்ந்து வலிக்கத் தொடங்கியிருந்தது. கிடைத்த இடங்களில் எல்லாம் பொசுக்பொசுக்கென உட்கார்ந்து கொண்டேன். ஒரு ஒருமணி நேரத்தில் சட்டுபுட்டென வயலில் இருந்து கிளம்பிவிடுவார்கள் என எதிர்பார்த்தால் இரண்டு மணிநேரமாகியும் இங்கேயே இருந்தார்கள். கிணறு வயல் வரப்பென உற்சாகமாய் படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். கும்பக்கரை அருவியில் குளிக்கலாம் என்று முடிவு செய்திருந்ததால் பம்புசெட்டில் குளிக்கும் திட்டம் கைவிடப்பட்டிருந்தது. 

இந்நேரத்தில் தான் தோழர் வந்தார். 'என்ன தோழர்' என்றேன். 'இல்லீங்க தோழர் இந்த வயல்வெளிய நம்ம ஊர்ல கூட பார்த்துக்கலாம், இதப் பார்க்கவா இவ்ளோ தூரம் வந்தோம்' என்றார், அவர் குரலில் சலிப்பில்லை ஆதங்கம் இருந்தது. 'ஆனாலும் தோழர் இதையெல்லாம் பார்க்காதவங்க இங்க நிறைய பேரு இருக்காங்க இல்லையா' என்றேன். 'அதான் தோழர் நானும் பொறுமையா இருக்கேன்' என்றார் சிரித்துக்கொண்டே. தெய்வீகச் சிரிப்பையா உமக்கு. இந்தப் பயணத்தில் ஏதோ ஒன்று குறைவது போலவே தோன்றுகிறது என்று கூறினேன் இல்லையா. தோழர் அதைத்தான் மிகச்சரியாகக் கூறியிருந்தார். இந்த வயல்வெளிச் சூழல் தென்காசியை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. சுற்றுல்லாவிற்கு வந்தது போலவே இல்லை. ஏதோ அரை கிமீ தூரத்தில் என் வீடு இருப்பது போன்ற உணர்வு. 


'தல நம்ம குழந்தைங்க காலத்திலதான் வயல்வெளி அபூர்வமாகும்ன்னு நினைச்சேன், நாமலே அபூர்வமா பார்க்க ஆரம்பிச்சிட்டோமே' என்றான் வருத்தத்துடன். என்ன செய்வது சென்னையின் வெயிலும் கான்கிரீட் வயலும் இப்படித்தான் பேசச்சொல்லும். சும்மாவா சொன்னார்கள் 'A single Indian is a great philosopher' என்று. 

பெரியகுளத்தில் இருந்து சுமார் பதினைந்து கிமீ தொலைவில் இருக்கிறது கும்பக்கரை அருவி. சனிக்கிழமை மற்றும் சம்மர் விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. குற்றாலத்தில் புலியருவி பார்த்திருக்கிறீர்களா அப்படியொரு அருவி. கோடைக்காலம் என்பதால் நீர் நூலாய் வழிந்து கொண்டிருந்தது. எங்கேயாவது குளிக்க இடம் கிடைக்குமா என விக்ரமோடு தேடிக் கொண்டிருந்த நேரத்தில் என்னோடு வந்தவர்களை தவறவிட்டிருந்தேன். சற்றுமுன் வரை கூடத்தானே இருந்தார்கள் அதற்குள் எங்கே சென்றார்கள் என்று தேடினால், ஒருவரையும் காணோம் எஸ் ஆகியிருந்தார்கள் 'தல மேல எங்கயாது குளிக்க போயிருப்பாங்க' என்றான் விக்ரம். பாறைகளின் இருபக்கமும் மரங்கள் அடர்ந்த அருவியில் அவர்களைத் தவறவிட்டிருந்தோம். 'நீ வேணா போயிட்டுவா, நா டயர்டா இருக்கேன் என்னால வர முடியாது' என்றேன். என்னைத் தனியே விட்டுச்செல்ல அவனுக்கு மனமில்லை என்பதால் அவனும் செல்லவில்லை.   

கும்பக்கரை அருவி காடுகள் அடர்ந்த பகுதிதான் என்றாலும் சுத்தமாய்க் குளுமை இல்லை. நல்லவேளையாக பதநீர் விற்றுக் கொண்டிருந்தார் ஒரு தாத்தா, பதநீர் குடிக்கலாம் என்று அருகில் சென்றால் 'தம்பி கள்ளு இருக்கு வேணுமா' என்றார் அவர். ஏற்கனவே ஒரு பான கள்ளு உள்ள போன மாதிரிதான் இருக்கு இதுல இது வேறயா. வெறும் பதநீரை மட்டும் வாங்கிக் கொண்டோம். நடுமதிய வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. ஒருமணி நேரத்தில் வருவதைக் கூறியவர்கள் இரண்டுமணி நேரம் ஆகியும் வரவில்லை. எவ்வளவு நேரம்தான் நானும் விக்ரமும் உலக விசயங்களைப் பற்றி மட்டுமே பேசி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது. அவர்களைத் தவற விட்டிருக்கக்கூடாது அவர்களுடனேயே சென்றிருக்கலாம் அல்லது அவர்களைத் தேடியாவது சென்றிருக்கலாம். என்னையே நான் நொந்து கொண்டேன். மேலும் குளித்து முடித்து வரும் அவர்கள் என்ன கூறுவார்கள் என்று எதிர்பார்த்தேனோ அதையேத்தான் இம்மி பிசகாமால் அவர்களும் கூறினார்கள் 'சீனு செம குளியல். சான்ஸே இல்ல, செம ஆட்டம்' என்றார்கள். நான் ஆரோக்கியமாய் இருந்து தவறவிட்டிருந்தால் தானே அதைப்பற்றி வருத்தப்பட, பரிதாபத்திற்குரியவன் விக்ரம்தான். 

எங்களின் பயணத்திட்டப்படி பெரியகுளம், சோத்துப்பாறை, கும்பகரை அருவி அதன் பின் அங்கிருந்து கொடைக்கானல் என்றுதான் வகுத்திருந்தார்கள். இடையில் ஏற்பட்ட சில மாறுதல்களாலும் தாமதங்களாலும் சோத்துப்பாறைக்குச் செல்ல முடியவில்லை. ஒருவழியாய் நாடோடி எக்ஸ்பிரஸ் கொடைக்கானலை நோக்கிக் கிளம்பியது. 
   
(க்நோமி - KNOWME எங்கள் அலுவலக ஊழியர்களுக்கான நாங்கள் மட்டும் உபயோகிக்கூடிய ஒரு சமூக வலைத்தளம். அதில் தமிழ் வலைப்பூக்கள் என்றொரு குழுமம் இயங்குகிறது. இக்குழுமத்தில் தமிழின்பால் ஈர்ப்பு கொண்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சகஅலுவலர்கள் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் எழுத்துக்களாக்கி வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் இக்குழுமம் பற்றி பின்பொருநாள் விரிவாக எழுதுகிறேன்).