21 Jan 2015

செண்பகாதேவி - வேலம்மா பாட்டியும் அகஸ்தியரும்

செண்பகாதேவி கோவிலைக் கடந்து அருவியை நோக்கி நடந்து கொண்டிருக்கையில் நெற்றி நிறைய விபூதி பூசியிருந்த ஒரு பாட்டி கோவிலில் இருந்து வெளிப்பட்டு அருவியை நோக்கி நடந்து கொண்டிருந்தார். குறைந்தது எழுபத்தி ஐந்து வயதாவது இருக்கும் அவருக்கு. லேசாக கூன் விழுந்திருந்தது என்றாலும் தெம்பாக நடந்து கொண்டிருந்தார். எங்களுடன் வந்து கொண்டிருந்த ஸ்ரீ அண்ணாவைப் பார்த்ததும் 'கோவிலுக்குப் போய்ட்டு அய்யாவப் பார்க்க வா' என்றார். 'அண்ணே யாருன்னே அவங்க, இதுக்கு முன்னாடி வந்தப்பவும் அவங்களப் பார்த்திருக்கேன்' என்றேன். 

'அந்தப் பாட்டி தன்னோட பதினேழு வயசில இருந்து செண்பகாதேவில தான் இருக்காங்க. இப்ப எண்பது வயசாது. கிட்டத்தட்ட அறுபது வருஷம் இங்கதான் இருக்காங்க. குளிச்சிட்டு கோயிலுக்குப் போயிட்டு அவங்களைப் பார்க்கலாம்' என்றார். 

யாருமற்ற வனத்தில் வெறும் பத்து பேருக்கும் குறைவாகவே ஆட்கள் இருந்ததால் தொல்லை இல்லாமல் குளித்துக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரக் குளியல். குளித்து முடித்து கரையேறிய போது பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கி இருந்தது. அங்கே எதுவுமே கிடைக்காது. முன்பெல்லாம் செண்பகாதேவி ஏறும் பாதையில் பட்டாணி சுண்டல் மாங்காய் சோடா எல்லாம் கிடைக்கும். மலைப்பாதையில் ஆங்காங்கு விற்றுக்கொண்டு இருப்பார்கள். இப்போது யாருக்குமே அனுமதி இல்லை என்பதால் எல்லாவற்றுக்கும் கீழேதான் சென்றாக வேண்டும். அதுவரைக்கும் பசியும் தாங்கியாக வேண்டும். 




இன்றைக்குத்தான் முதல்முறையாக செண்பகாதேவி அம்மன் கோவிலுக்குள் நுழைகிறேன். இதற்குமுன் வந்த போதெல்லாம் யாருமற்று பூட்டிக் கிடக்கும் கோவிலை மட்டுமே பார்த்திருந்த எனக்கு, இன்றைக்கு அம்மனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது நிச்சயம் அதிர்ஷ்டம் தான். குரங்குகள் கோவிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து விடக்கூடாது என்பதற்காக கோவிலின் கதவுகளை அடைத்தே வைத்திருந்தார்கள். மிகப் பழைய கோவில். 

பழமையான கோவில்களுக்கே உண்டான விபூதி வாசம். சுத்தமான பொதிகைமலைக் காற்று. நிரம்பிக்கிடக்கும் மௌனத்தின் ஊடாக கோவிலுக்குள் நுழைந்தோம். பௌர்ணமி என்பதால் கோவில் சுத்தமாகக் கழுவி விடப்பட்டிருந்தது. வனம் வனத்தின் மத்தியில் இருக்கும் கோவில் என்று மனம் தன்னையே அறியாமல் ஒருவித சமநிலைக்கு வந்திருந்தது. சிலநிமிட வேண்டுதல்களுக்குப் பின் அங்கிருந்து வேறோரு கட்டிடம் நோக்கி நடந்தோம். 

பாறை மீது கட்டப்பட்ட மற்றுமொரு சிறிய கட்டிடம். அதனுள் நான்கைந்து பேர் உணவருந்திக் கொண்டிருந்தனர். சிறிய அகஸ்தியர் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யபட்டு அவர் அருகில் ஒரு ஜோடி பாதம் கல்லில் செதுக்கபட்டிருக்க கிட்டத்தட்ட அதுவும் சிறிய கோவில் போன்ற அமைப்பிலேயே இருந்தது. அங்கும் ஒரு சிறிய வழிபாட்டிற்கு பின் எங்களையும் உணவருந்தச் சொன்னார்கள். தயிர்சாதம் ஊறுகாய். தேவாமிர்தமாய். இது அடுத்த அதிர்ஷ்டம். பௌர்ணமி தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான சிறப்பு அன்னதானம் என்ற தகவல் பின்னர் கிடைத்தது. குளியல் கோவில் உணவு என்று எதிர்பார்க்காத விஷயங்கள் ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருக்க, அங்கிருந்து நேராக ஒரு அந்தப் பாட்டி தங்கியிருக்கும்  குகைக்கு சென்றோம். அதற்கு அவ்வையார் கோவில் என்றும் ஒரு பெயர் உண்டு. 

தென் மாவட்டங்களில் அவ்வையார் பூஜை என்று ஒன்று நடைபெறும் (மற்ற மாவட்டம் பற்றி தெரியவில்லை) விதவிதமான வடிவங்களில் (வட்டம், சதுரம் நீள் உருளை) மிக சிறியதாக அரிசி கொளுக்கட்டை செய்து அதனை நள்ளிரவில் அவ்வையாருக்குப் படைத்து பூஜை செய்வார்கள், அந்தக் கொளுக்கட்டையை ஆண்கள் பார்க்கக் கூடாது. நாடோடிகள் படத்தில் அனன்யா சசிகுமாருக்கு ஒரு கொழுக்கட்டை ஊட்டி விடுவரே அதேதான். அந்தப் பூஜை செண்பகாதேவியில் விமர்சையாக நடைபெறும். தன்னுடைய சின்ன வயதில் எங்கள் பாட்டி அம்மா சித்தியை இங்கு நடைபெறும் பூஜைக்குக் கூட்டி வந்துள்ளதாகக் கூறியுள்ளார். இதுவரை வெளியில் இருந்து மட்டுமே பார்த்த அந்த கோவிலினுள் இன்றுதான் நுழைகிறேன். மனம் முழுவதும் ஆனந்தம் நிறைந்திருந்தது.

வேலம்மாள் பாட்டி உள்ளே அமர்ந்திருந்தார். கதவைத் திறந்தால் எங்களுக்கு முன் உள்ளே நுழைய குரங்குகள் தயாராய் இருந்தன. உள்ளே ஒரு சிறிய அவ்வையார் சிலை இருந்தது. பாட்டி டார்ச் லைட் ஒன்றை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குள் நுழைய, நாங்களும் நுழையும் போதுதான் தெரிந்தது அது அறையல்ல குகை என்று. மிகபெரிய குகை. குகையின் முடிவில் அகஸ்தியர் நின்று கொண்டிருந்தார். பாட்டி அவருக்கு சூடம் காண்பித்துவிட்டு வெளியில் செல்ல கொஞ்சம் நேரம் குகையின் இருளில், விளக்கொளியில் பிரகாசமாகி இருந்த அகஸ்தியரைப் பார்த்தபடி கண்களை மூடி தியானம் செய்தோம். செண்பகாதேவி சலசலத்து இறங்கி கொண்டிருந்தாள்.  அதன் சத்தம் குகைக்குள் துல்லியமாக ஒலித்துக் கொண்டிருந்தது. மற்றவர்கள் தியானம் செய்து கொண்டிருக்க மெல்ல வேலம்மாள் பாட்டியிடம் வந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். 


வேலம்மாள் பாட்டி

அவருடைய இளவயது போட்டோ ஒன்றை காண்பித்தார். ஆர்ப்பரிக்கும் செண்பகாதேவிக்கு முன் ஜடாமுடியுடன் நின்று கொண்டிருந்தார். நல்ல சிரித்த முகம். 'இத எடுத்து நாப்பது அம்பது வருஷம் இருக்கும்' என்றார். 

குற்றாலத்திற்கு கீழ் இருக்கும் கிராமத்தில் இருந்து தன்னுடைய பதினேழாவது வயதில் இங்கு வந்துவிட்டதாகக் கூறியவர், இடி மழை புயல் வெள்ளம் அத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இந்த அத்துவானக் காட்டில் தான் வசித்து வருகிறார். தினமும் செண்பகாதேவியில் நீராடல், அகஸ்தியர் பூஜை, இருவேளை மட்டுமே உணவு என்று கூறினார். இந்தியாவின் முக்கியமான திருத்தலங்களுக்கு சென்று வந்துள்ளதாகவும், இரண்டு மூன்று தொலைக்காட்சி சேனலில் இருந்து வந்து படம்பிடித்து சென்றதாகவும் கூறினார். அந்தக் குகைக்கு உள்ளேயே சமையல் செய்து சாப்பிட அடுப்பு வைத்திருக்கிறார். பயமா இல்லையா என்றால் சிரித்தார். உள்ளே நிரம்பி இருக்கும் சாமிகளைப் பார்த்தார். வார்த்தைகளால் கேட்ட கேள்விக்கு பாவனையால் புரிய வைத்துவிட்டார். 

இது சித்தர் வாழுற காடுன்னு சொல்றாங்களே நீங்க சித்தர்கள பார்த்து இருக்கீங்களா என்றேன். இது வழக்கமாக அவர் எதிர்கொண்டிருக்கக் கூடிய கேள்வி தான், அதனால் அவர் என்ன கூறுவார் என்று யூகித்திருந்தேன். இருந்தாலும் கேட்டேன். ஆர்வம். 'பார்த்திருந்தா சொல்லுவனாய்யா' என்றார். சிரித்தேன். 'சொல்லலாமா' என்றார். கூடாது என்று தலையாட்டினேன். ஆனால் அவர் பார்த்ததாக அவருடைய கண்களும் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியும் கூறியது. குகைக்குள் தியானம் செய்து கொண்டிருந்த எல்லாருமே இப்போது பாட்டியின் முன் அமர்ந்திருந்தோம்.

'இத்தன வருசமா தனியா இருக்கீங்களே பயமா இல்லையா பாட்டி' மீண்டும் கேட்டேன். மீண்டும் சிரித்தார். எனக்கென்ன பயம். 'அய்யா துணைக்கு இருக்காரு இல்ல'. இங்கே அனைவருமே அகஸ்தியரை அய்யா என்றே குறிப்பிடுகிறார்கள். 'இங்க ரொம்ப நாளா ஒரு கருநாகம் இருக்கு. அதுபாட்டுக்கு அது வேலைய பார்க்கும். நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்ப்பேன். ஒருநாள் அய்யா பக்கத்தில நின்னுட்டு இருந்திருக்கு. இங்க வெளிச்சம் இல்ல பார்த்தியா, கண்ணு தெரியாம மிதிச்சிட்டேன். தீண்டிருச்சு. ஆனா விசப்பல்லு இல்ல. ஆனாலும் கடுமையான வலி. அப்புறம் ஒரு பெரியவர் வந்து பச்சிலை கொடுத்துட்டு போனார். அவர் யார் என்னன்னு தெரியாது. ஆனா யாரா இருக்கும்னு எனக்குத் தெரியும்', என்று தனக்கு நடந்த அனுபத்தைக் கூறினார். 


அவ்வையார் குகை

'என்னது கொகைக்குள்ள கருநாகம் இருக்கா' எங்களுக்கெல்லாம் ஒரு நிமிடம் திக் என்று இருந்தது. பாட்டி அதனை முதலிலேயே கூறியிருந்தால் தைரியமாகக் குகையினுள் சென்றிருப்போமா தெரியவில்லை. அவரோடு மேலும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து செண்பகாதேவிக்கு மேற்புறம் இருக்கும் அகஸ்தியர் குகைக்குச் சென்றோம். அகஸ்திய குகை மிக மிகப் பெரிய குகை. உள்ளே உள்ளே சென்று கொண்டே இருக்கிறது. அங்கே ஒரு சாமியார் தங்கி இருக்கிறார். அவர் இங்கு வந்து ஒரு சில வருடங்கள் தான் இருக்கும் என்று ஸ்ரீ அண்ணா கூறினார். அவரைச் சுற்றி நெல்லையில் வந்திருந்த யோகா மாஸ்டர்கள் உட்கார்ந்திருந்தனர். அகஸ்தியரை வழிபட்டுவிட்டு மீண்டும் வெளியில் வந்தோம். மேலே தேனருவி நடக்கும் தூரம் தான் என்றாலும் இன்னொருநாள் போய்க் கொள்ளலாம் என்று மெல்ல கீழே இறங்கத் தொடங்கினோம். இப்படி ஒரு அற்புதமான பயணத்தை சாத்தியபடுத்திய ஸ்ரீ அண்ணாவுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும். மாறாக கீழே இறங்கும் வரை அவர் எங்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருந்தார். எங்களால் தான் இந்தப் பயணம் சாத்தியாமாயிற்று என்று.  

எங்களுக்கு எதிர்புறம் உள்ளூர் மக்கள் வரத்து அதிகரித்துக் கொண்டு இருந்தது. நிதானமாக மலையேறிக் கொண்டிருந்தார்கள். எப்படியும் அவர்கள் அனைவரும் மாலை வரை அங்கிருந்துவிட்டுத்தான் வருவார்களாம். 

அவ்வையார் குகைக்கும் அகஸ்தியர் குகைக்கும் இடையே தெட்சிணா மூர்த்தி குகை இருக்கிறது. ஆனால் அடைத்திருந்தது என்பதால் உள்ளே செல்ல முடியவில்லை. அவ்வையார் குகையில் இருந்து வெளியில் வரும்போது வேலம்மாப் பாட்டி என்னை அழைத்தார். 'சொல்லுங்க பாட்டி' என்றேன். என்னைப் பார்த்து சிரித்தவர் அடுத்தவாட்டி வரும்போது அய்யாவுக்கு நல்லெண்ண வாங்கிட்டு வா, விளக்குக்கு ஊத்தணும் என்றார். 'இனி அடிக்கடி இங்க வரணும்' நினைத்துக் கொண்டே கீழே இறங்கத் தொடங்கினேன். 

படங்கள் : நன்றி இணையம்

முந்தைய பதிவு செண்பகாதேவி - ஒரு வனாந்திரப் பயணம்

6 comments:

  1. அந்தப் பெரியவர்...?!!!

    அடுத்த முறை நானும் வருகிறேன்...

    ReplyDelete
  2. அற்புதமான அனுபவம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது சீனு. அடுத்து எப்போது பயணம் என்று சொல்லுங்கள். முடிந்தால் நானும் உங்களுடன் வருகிறேன்.

    ReplyDelete
  3. பயண அனுபவத்தை படிக்கும் போதே குற்றால சாரலில் நனைந்தது போல இருந்தது அந்த பழமையான கோவில்களுக்கே உண்டான விபூதி வாசம் இந்த பதிவை படிக்கும் போது நானும் சுவாஸித்தது போல இருந்தது. பழமையான நினைவுகள் மனதில் வந்து போயின...

    ReplyDelete
  4. பதிவு அருமை ...படிக்கும் போது நேரடியாக அங்கிருந்த அனுபவத்தை கொடுத்தது...வாழ்த்துக்கள் சீனு...

    ReplyDelete
  5. சீனு! சூப்பர் சீனு! 8 வருடங்களுக்கு முன், நானும் இதே பாட்டியைச் சந்தித்துள்ளேன், என் உறவினர்கள் திருனெல்வேலியில் இருப்பதால் அவர்களுடன் சென்ற போது. அந்தப் பாட்டிக்கு மூலிகை வைத்தியம் கூட தெரியும்....ஆனால் அப்போது என்னிடம் காமெரா இல்லை ஆனால் எடுக்கவும் அப்பொது அனுமதி இல்லை ஏனென்றால் சித்தர்கள் நடமாடும் இடம் என்பதால். செண்பகா தேவி, தேனருவி எல்லாம் சென்று குளியல்....கையில் கொண்டு போன சாப்பாடு...நாங்கள் சென்ற போது பௌர்ணமி இல்லை ஸோ நொ ப்ரசாதம்....நீங்கள் சொல்லியிருக்கும் அதே விபூதி வாசம் + வேறு செடிகளின் வாசமும் கலந்து, மூலிகை என்று சொன்னார்கள். அப்போது அங்கு ஒரு முதியவரும் இருந்தார். சடை முடியுடன். ஆனால் பேசவில்லை அவர். மௌனம் என்றார்கள். தட்சிணா மூர்த்தி, அகஸ்தியர், ஔவை...எல்லாம் தரிசித்தோம்...

    எங்களுடன், அகஸ்தியர் அருவியின் பக்கவாட்டில் மேலே ஏறும் ரோடு அருகில் கீழே, ஒரு அகஸ்தியர் கோயில், சித்தர் கோயில் இருக்கிறது பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், அங்கு இருந்த ஒருவர் வந்திருந்ததால் செண்பகா தேவி அருவி அருகில் இத்தனையும் பார்க்க முடிந்தது. பாட்டியுடனும் பேசினோம்...

    மற்றொரு முறை இதே பாட்டி அகஸ்தியர் அருவி பக்கத்தில் உள்ள அந்தக் கோயிலில் பாட்டி இருந்தார். சித்தர் என்று சொல்லிய ஒருவரும் இருந்தார். அந்தக் கோயிலுக்கு படிகள் உண்டு. அதன் அருகே பெரிய ஆழமான கிடங்கு அதனுள் நிறைய அருவியின் நீர் விழுந்து தேங்கி இருக்கும் பார்த்திருப்பீர்கள். நீர் விழும் சப்தம் கேட்கும் ஆனால் அதைக் காண முடியாது. அமானுஷ்யமான உணர்வைத் தந்தது. அப்போது....

    அருமையான அனுபவம் உங்களுக்கு. எனக்கும் நல்ல ஒரு அனுபவம் அதுவும் ஏதோ இரு இனம் புரியாத அனுபவம் கிடைத்தது. அதன் பின் அங்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. மிகவும் அனுபவித்தேன் பதிவை....-கீதா

    ReplyDelete
  6. சுவாரஸ்யமான பயணம்! சுவாரஸ்யமான அனுபவம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete