29 Aug 2013

அம்முவும் அகாலமும் - சிறுகதை


ஒரே நேரத்தில் பல கைகள் என்மீது படர்வது போன்ற ஒரு உணர்வு, அத்தனை கைகளின் தொடுகையும் அம்முவை நினைவுபடுத்தின. இவ்வளவு மிருதுவாக இதமாக அவளைத் தவிர வேறு யாராலும் தொட முடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில்  அம்மு என்னை எழுப்புகையில், தோகை விரித்தாடும் மயில் ஒன்று தனது பீலிகளைக் கொண்டு இதமாய் வருடினால் எத்தனை இன்பம் கொடுக்குமோ அப்படி இருக்கும் அம்முவின் இதமான வருடல்கள்

பழையமகாபலிபுரம் சாலை. உயிர்ப் பலிக்களுக்குச் சற்றும் பஞ்சமில்லாத பரபரப்பான சாலை. அலுவலகம் செல்ல உபயோகிக்கும் இந்த சாலையில் பல நேரங்களில் பல சடலங்கள் அனாதையாக்கப் பட்டிருப்பதையும், அதைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியிருப்பதையும், அனிச்சையாய் பார்த்துக் கொண்டே கடப்பதுண்டு.

அலுவலகம் சென்று கொண்டிருக்கும் அன்றைய நாளின் பகற்பொழுதில் நானும் அடிபட்டு விழுவேன் என்று நிச்சயமாய் நம்பவில்லை. போன் பேசிக்கொண்டே பைக்கை ஓட்டிய கிறுக்கன் திடிரென்று நிலைதடுமாறி கீழே விழ, அவசரகதியாய் நானோ என் பிரேக்கை அழுத்த, பின்னால் வேகமாய் வந்த கார் என் மீது இடித்து சடுதியில் நான் மிதக்கத் தொடங்கியிருந்தேன். 

கழுத்தை ஒருபக்கமாய் சாய்த்துக் கொண்டே வண்டி ஒட்டியவன் தாறுமாறாக தடுமாறியதும், பின்னால் வந்த காரின் டயர் தேய்ந்து கறுகும் வாடையும் நியாபகம் உள்ளது. ஆனால் அதற்குப் பின் நான் என்ன ஆனேன். நானும் பலமுறை யோசித்துப் பார்த்துவிட்டேன், இதுவரையிலான சம்பவங்கள் மட்டுமே என் நியாபகத்தில் வந்து செல்கின்றன.  

சுற்றிலும் தடித்த மவுனம், இருளையும் வெளிச்சத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத குழப்பம். பேரிரைச்சல், பெரும்அமைதி. எனக்கு நேர்ந்தது விபத்தா இல்லை ஆழ்மனதில் என்னை அறியாமல் என்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கனவா? 

அம்மு? அம்மு எங்கே? அம்முவை உடனே பார்க்க வேண்டும். கனவு தான். கெட்ட சொப்பனம் தான். கனவு களைய வேண்டும், சட்டென எழுந்திருக்க வேண்டும். அம்மு தேடுவாள். அம்முவைப் பார்க்க வேண்டும். எழுந்திருக்க நினைத்தும் எழ முடியவில்லை. என்னை யாரும் கட்டிப் போடவில்லை, ஆனால் எழுந்திருக்கவும் முடியவில்லை.   

என்னுள் பொதிந்திருக்கும் வேறு நியாபகங்களை நினைவுபடுத்திப் பார்க்க முயன்றேன். அம்மு. அம்முவைத் தவிர வேறு எதுவும் நியாபகத்தில் இல்லை.

அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் அம்முவிடம் முத்தம் பெற மறந்த நாட்களில் என்னை விட அதிகம் துடித்துப் போவது அவளாகத் தான் இருக்கும். நான் எப்போதும் அவளுடனேயே இருக்க வேண்டும். அவளுக்காகவே இருக்க வேண்டும். அம்முவைப் பொறுத்தவரையில் நான் ஒரு கைப்பாவை... அவளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பொம்மை... உயிருள்ள உணர்வுள்ள விளையாட்டு பொம்மை. 

எப்போதும் ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பாள் 

"அப்பா" தன்னுடைய பிஞ்சு விரலை என் வலது கையின் மீது பதித்து என்னை அழைத்தாள்.   

" சொல்லு டி செல்லம்"

"அப்பா.. நா எப்போப்பா உன்ன மாதிரி அப்பாவவேன்..." அம்முவிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை நான். 

"உன்னால அப்பா ஆக முடியாதுடி செல்லம்.. அம்முவால அம்மாவாத்தான் ஆக முடியும்" என்னால் ஏன் என்று விளக்க முடியாவிட்டாலும் அவளுக்கு புரியும் பாஸையில் சொன்னேன். 

"அய்ய.. அம்மா எப்ப பார்த்தாலும் அடிச்சிட்டே இருப்பா.. நான் வளந்ததும் உன்ன மாதிரியே என்னயும் அப்பாவா ஆக்குப்பா" தன்னுடைய மழலை மொழியில் சிரித்துக் கொண்டே அம்மு கூறிய அடுத்த நொடி,  

"ஏய் ஒழுங்கா தூங்குடி.. அப்பாவே வேலைக்கு போயிட்டு வந்த டயர்ட்ல படுத்துருக்காரு.. சும்மா..அப்பா நொப்பான்னுட்டு...", என் மீது பாசம் காட்டுவது என் மகளாகவே இருந்தாலும் சமயங்களில் என் மனைவிக்கு அது பிடிப்பதில்லை. காரணம் என்னால் அவளையும் தவிர்க்கவே முடியாது.  

"அப்பா... அம்மா திட்டுனா நாளைக்கு முத்தம் கொடுக்க மாட்டேன்னு சொல்லுப்பா.."

அம்முவைப் பொறுத்தவரை அவள் பேசிக் கொண்டே இருக்க வேண்டும், அல்லது அவளுடன் நான் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவளுக்கு எல்லாமே அவளது அப்பாவாகிய நான் மட்டுமே.  

அம்மு. மூன்று வயதே நிரம்பிய எங்கள் செல்ல மகள். வரமாக வந்த தேவதையா இல்லை வரம் தர வந்த தேவதையா என்றால், எங்களுக்காக இறைவனிடம் வரம் வாங்கி வரம் தர வந்த தேவதை எங்கள் அம்மு.

என் வாழ்க்கையில் குறுக்கிடும் அத்தனை பிரச்சனைகளையும் தன் பிஞ்சுக் கரங்களில் சரணடையச் செய்ய அம்முவால் மட்டுமே முடியும். இருந்தும் என் வாழ்க்கையில் என்னால் சமாளிக்க முடியாத மிகப் பிரச்சனையே ஊருக்குச் செல்கையில் என்னைத் தனியே விட்டு அம்முவை மட்டும் தன்னோடு அழைத்துச் செல்லும் என் மனைவி தான். இதைத் தவிர்ப்பதற்காகவே பலமுறை அலுவலகத்தில் தேவையற்ற  விடுப்புகள் எடுத்ததுண்டு.

இன்னும் என்னவெல்லாமோ சிந்தித்துப் பார்த்துவிட்டேன் இன்னும் என்னால் என்  தூக்கத்தில் அல்லது தூக்கம் போன்ற நிலையிலிருந்து மீள முடியவில்லை. 

"இறைவா இது எவ்வளவு பெரிய கனவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அதுபற்றி  கவலை இல்லை. ஆனால் என்னுள் நன்றாக நியாபகம் இருக்கும் விபத்து வெறும் கனவாக மட்டுமே இருக்கட்டும். என் அம்முவுக்கு நான் வேண்டும், உயிரோடு வேண்டும். 

"அப்பா" 

"சொல்லு ம்மா"

"நீ வேலைக்கு போகாதப்பா.. " அம்முவின் குரலில் ஒருவித ஏக்கமும் கண்டிப்பும் கலந்திருந்தது. 

"ஏன்மா.. அப்பா வேலைக்கு போனாதான அம்முக்கு நிறைய பொம்மை வாங்கிக் கொடுக்க முடியும்.. அம்முவும் விளையாட முடியும்"

"டெய்லி அம்மா கூட விளையாடது போர் ப்பா... அம்மா நீ வேலைக்கு போ... பொம்ம வாங்கி தா.. அப்பா நீ இனி வீட்ல இரு.. ஆனா ஒரு கண்டிசன்" மெத்தையில் எங்களோடு படுத்திருந்தவள் சட்டென என் வயிற்றின் மீது ஏறி அமர்ந்து தன் பிஞ்சு விரலை என்னை நோக்கி நீட்டி கண்டிசன் போட்டாள் அம்மு.         

" என்ன கண்டிசன் டி அம்மு" அவள் கண்டிசனைக் கேட்பதில் நான் ஆர்வமானேன்.. என் மனைவியோ கிண்டலாக தன் தலையில் அடித்துக் கொண்டாள்.   

"வீட்ல என் கூட இருந்தேனா, சும்மா எப்ப பாரு தூங்கிட்டே இருக்கக் கூடாது.. அம்முகூட விளையாடிட்டே இருக்கணும்" சட்டெனெ நானும் என் மனைவியும் சிரித்து விட்டோம். நம்மை குழந்தையாக்க குழந்தைகளால் மட்டுமே முடிகிறது.     

என் நியாபகம் சரி என்றால் நேற்று இரவு தூங்கச் செல்வதற்கு முன் அம்மு என்னிடம் கூறிய வார்த்தைகள் தான் இவை.      




என் பிரிவால், நான் இல்லாத தனிமையால் அவளால் ஒருநாளைக்கு மேல் கூட அமைதியாக இருக்க முடியாது. அவளுக்கு நான் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு விளையாட்டு பொம்மையாகவாவது நான் வேண்டும். அவள் பொம்மைக்கு மைதீட்டி பவுடர் போடும் போதெல்லாம், அவற்றை எனக்கும் செய்ய வேண்டும். என் முகத்தில் எப்படியெல்லாம் ஓவியம் தீட்ட ஆசைப்படுகிறாளோ அதற்கெல்லாம் நான் அனுமதிக்க வேண்டும்.    

இது கனவு தான். எனக்கு விபத்து நேர்ந்திருந்தால் உடம்பெல்லாம் வலி எடுத்திருக்குமே?, ரத்தத்தின் ஈரம் என்னை நனைத்திருக்குமே? ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கவில்லை, யாருமே ஓடிவந்து என்னைத் தூக்கவில்லை. ஒருவேளை... ஒருவேளை... நான் இறந்துவிட்டேனா... இல்லை இல்லை நிச்சயம் இல்லை. இது கனவு தான். சிறிது நேரத்திற்கு மூளை எதையுமே சிந்திக்க விடவில்லை.

ஆழந்த உறக்கம். சலனமற்ற ஆழ்கடலும் அகன்று விரிந்த வானும் ஏற்படுத்துகின்ற அமைதி. என்னுள் எதுவுமே தோன்றாத, எதைப்பற்றியுமே சிந்திக்க முடியாத மரண அமைதி. 

எவ்வளவு நேரத்திற்கு இப்படி ஒரு அமைதி நீடித்தது என்று தெரியவில்லை. திடிரென்று என்னைச் சுற்றி சிறு சலசலப்பு. பெருங்கூட்டம் ஒன்று சேர்ந்து உருட்டுக் கட்டையால் என்னைத் தாக்கியது போன்ற வலி. கை, கால் எதையும் என்னால் அசைக்க முடியவில்லை.

மெல்ல கண்களைத் திறக்க முயற்சித்தேன், என்னைச் சுற்றிலும் இருந்த சலசலப்பு அதிகமாகியது, கனவு கலைகிறது, இதுவரை என்னைச் சூழ்ந்திருந்த மாயவலை கிழிகிறது என்ற நம்பிக்கையில் கண்களைத் திறக்க ஆரம்பித்தேன். கண்களின் முன்னால் நிழலாடுவது தெரிந்தது. மெல்ல மெல்ல கண்களை முழுவதுமாய் திறந்தேன். வழக்கமான தமிழ் சினிமா பாணியில் வெள்ளைகோட் டாக்டர், கையில் பிளேட்டுடன் ஒரு சிஸ்டர், பக்கத்தில் நன்கு பரிட்சியமான பல முகங்கள்.

"வெல் ஹீ ஒபண்ட் ஹிஸ் ஐஸ்"

ஒரு ஓரத்திலிருந்து நன்கு பரிட்சியமான குரல் அழுது கொண்டிருந்தது, அது என் மனைவியின் குரல்

பேச முயன்றேன் பேச முடியவில்லை, தலையை திருப்ப முயன்றேன் முடியவில்லை. என்னுடலைச் சுற்றிலும் ஏகத்திற்கும் கட்டுகள். 

"மிஸ்டர் நந்தா... நீங்க பிழச்சிட்டீங்க.. ஆக்சிடெண்ட் நடந்த அப்போ ஹெல்மெட் போட்டு இருந்ததால தலையில அடிபடல.. பட் பைக்ல இருந்து தூக்கி வீசப்பட்டதால  உங்க பாடி பயங்கரமா ஷேக் ஆகியிருக்கு, எல்லா ஜாயிண்டஸும் டிஸ்லொகெட் ஆகியிருக்கு, நவ் யு ஆர் சேவ்ட்.. இன்னும் மாசத்துல நார்மல் லைப்க்கு திரும்பிரலாம்." 

டாக்டர் கூறிய எதுவுமே என் காதுகளில் விழவில்லை. என் கண்கள் அம்முவைத் தேடியது. நான் தேடுவதைப் புரிந்துகொண்ட என் மனைவி மெதுவாக என்னருகே வந்தாள், அழுது அழுது அவள் முகமே வீங்கிப் போயிருந்தது. அவள் இடுப்பில் அம்மு இருந்தால், அம்முவின் இடுப்பில் ஒரு பொம்மை இருந்தது.

"அப்பா" அங்கு நிலவிய மவுனத்தைக் கலைத்தாள் அம்மு. 

"சொல்லு டி அம்மு" அம்மு என் முகத்திற்கு மிக இருந்தாள் .

"ப்பா... நான் அப்பாவும் ஆகல, அம்மாவும் ஆகல, ஆனா ஒரு கண்டிஷன்" வழக்கம் போல அவள் பிஞ்சு விரலும் கண்டிஷன் என்று காட்டியது.

"சொல்லுடி செல்லம்"

"அப்பா நா எப்பப்பா டாக்டர் ஆவேன், இந்த டாக்டர் ஒரு வாரமா என்ன உள்ள விடவே இல்லபா... பொம்மைக்கு பொட்டு வச்சேன், விபூதி வச்சேன், ஆனா உனக்கு தான் வைக்க முடியல... ப்பா நான் டாக்டர் ஆகணும் ப்பா" என்று சொல்லிக்கொண்டே தன் கையில் இருந்த விபூதியில் கொஞ்சம் எடுத்து என் நெற்றியில் பூச ஆரம்பித்தாள் அம்மு. 

அம்முவின் பிஞ்சுக் கை மெல்ல என் மேல் படரத் தொடங்கிய போதே என்னுடலில் இருந்த அத்தனை வலிகளும் அவள் முன் மண்டியிடத் தொடங்கியிருந்தன.   







மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு 
மட்டுமே தெரியும் 
தாங்கள் சிரஞ்சீவிகள் என்று 

21 comments:

  1. தல போல விழிப்புணர்வை ஊட்ட ஒரு சிறுகதையா! நல்ல கருத்து. நாம் ஒழுங்காக வண்டி ஓட்டினாலும் மற்றவர்களின் தவறாலும் நமக்கு ஆபத்து வரும் என்பதையும், தலைக்கவசம் போடா வேண்டியதன் அவசியத்தையும், வண்டி ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது என்பதையும் ஒரே கதையில் சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  2. அப்பாக்கள், மகளுக்கிடையில் இருக்கும் அழகான ஒரு நட்பை படம் காட்டி சென்றது உங்க கதை. ஆனா, பெண் வயசுக்கு வந்ததும் இந்த நட்பூ மெல்ல மெல்ல தன் இதழ்களை குறுக்கி கொள்வதுதான் வேதனை!! நல்லதொரு சிறுகதை வாழ்த்துகள் சீனு!!

    ReplyDelete
  3. // இறைவனிடம் வரம் வாங்கி வரம் தர வந்த தேவதை எங்கள் அம்மு//

    உணர்வுப் பூர்வமான வரிகள். மூன்று முறை படித்துவிட்டேன். அருமை. எழுத்தாளர் சீனுவின் சிறுகதைத் தொகுப்பு மூன்றாம் பதிவர் திருவிழாவில் பார்க்க ஆசைப்படுகிறோம்..

    ReplyDelete
  4. // அவசரகதியாய் நானோ என் பிரேக்கை அழுத்த,.//

    FRONT பிரேக் அடிச்சுருப்பீங்க.. வண்டி ஓட்டும் போது வண்டில கவனம் இருந்தா முன்னாடி போறவன் தப்பு செஞ்சாலும் நமக்கு பாதிப்பு வராது.. இப்ப பாரு ஒரு மாசம் கஷ்டப்பட வேண்டி இருக்கு.. இனிமேலாவது பீ கேர்புல் (BE CAREFUL).. சரி சரி நான் என்னதான் சொன்னேன்..

    ReplyDelete
  5. காலையிலே செம பீலிங் ஸ்டோரி. . . .அருமை சீனு. . .

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. அது என்ன பெண் குழந்தை மட்டும் ஸ்பெஷல். . . . குழந்தை என்றாலே ஸ்பெஷல்தானே. . . குழந்தைகள் உள்ள வீடு தெய்வம் வாழும் வீடு.

    ReplyDelete
  8. அம்முவின் பிஞ்சுக் கை மெல்ல என் மேல் படரத் தொடங்கிய போதே என்னுடலில் இருந்த அத்தனை வலிகளும் அவள் முன் மண்டியிடத் தொடங்கியிருந்தன.

    மிக அழகான விழிப்புணர்வுக் கதை..!

    ReplyDelete
  9. என்னையும் என் மகளையும் நினைத்துப் படித்தேன், கண்களில் கண்ணீர் வந்துவிட்டது...

    ReplyDelete
  10. சூப்பர்ப் ...! நெறைய இடங்கள்ள நுட்பமான உணர்வுகளை அழகான வார்த்தைகளால் வெளிப்படுத்திய விதம் அழகு ....!

    இது உம்மோட பெஸ்ட் ல டாப் ....!

    சிறப்பாய் எழுதியுள்ள சீனுவுக்கு ஒரு "HUG"....!

    ReplyDelete
  11. அப்பா,மகள் பாசத்தோடு விழிப்புணர்வை சொல்லி...சூப்பர்!

    ReplyDelete
  12. ரொம்ப நல்லா இருந்தது சீனு!!

    ReplyDelete
  13. பெற்றோருக்கு மட்டுமல்ல தாத்தா பாட்டிகளுக்கும் பாசத்தின் வலிமை தெரியும். தொடர்ந்து படிக்கத் தூண்டிய நடை. தொடர்ந்து எழுதுங்கள்.வளர்க. வெல்க.

    ReplyDelete
  14. ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது சீனு... !

    ReplyDelete
  15. Hi seenu, sema super.. but enna yen savadika parthanu than terla.. eatho polachitan..

    ReplyDelete
  16. ஹெல்மெட் போட்டிருந்தாரா கதாநாயகன். அப்பாடி. நல்லவேளை அம்முவின் அப்பா பிழைத்தார்.யதார்த்தமும் கனிவும் நீதியும் ஒருங்கே மிளிர்கின்றன. அருமை சீனு.

    ReplyDelete
  17. உணர்வுப்பூர்வமான கதை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. கதையில் முதலாக ஆரம்பித்து தொடர்ந்து வரும் பாசத்தின் ஸ்பரிசம் அருமை.தொடந்து எழுதுங்கள் அண்ணா :)

    ReplyDelete
  19. அழகான உருக்கமான கதை ..

    எல்லாக் கதைகளிலும் தலை கவசம் அணிவதின் சிறப்பை கதையோடு சேர்த்து சொல்லும் விதம் ரசிக்க வைக்கிறது :)

    ReplyDelete
  20. நிறைய பேருக்கு ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே பிடிக்கிறது என்னையும் சேர்த்து...

    ReplyDelete