27 Apr 2020

நிலம் எனும் நல்லாள் – சு.வேணுகோபால்

நிலம் எனும் நல்லாள் – சு.வேணுகோபால்

இந்த புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயத்தைக் கடக்கும் முன்பே இதை தொடர்ந்து வாசிக்கலாமா எனும் கேள்விக்கு ஆளாகினேன். அரசன் என்னிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுக்கும்போது “உனக்கு இது கண்டிப்பா பிடிக்கும்ன்னு சொல்ல முடியாது. பிடிக்கலாம்யா!”, என்று கூறித்தான் கொடுத்திருந்தார். அவர் அப்படிக்கூறும் ஆள் அல்ல. எனக்கு பிடிக்குமா இல்லையா என்பதை ஓரளவுக்குக் கணித்துவிடுவார்.



சில புத்தகங்கள் வாசிக்கும் வேகத்தில் அதிரிபுதிரியாகப் பறக்கக் கூடியவை. சில நிதானமாக நகரக் கூடியவை. சில எவ்வளவு முயன்றாலும் அழுத்திப் பிடித்து ஒரே இடத்தில் நிற்க வைக்கக்கூடியவை. இந்த புத்தகம் மூன்றாவது ரகம் என்பது புரிந்தது. இணையத்தில் யாரேனும் இது குறித்து எழுதியுள்ளார்களா என்று தேடிப் பார்த்தேன். ஆச்சரியம் இதே பெயரில் மூன்று புத்தகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று அ.முத்துலிங்கம் எழுதியது. அதற்கான விமர்சனங்களும் அதிகமாக இருந்ததன்.

சு.வேணுகோபால் எழுதிய நிலம் எனும் நல்லாள் விமர்சனத்தை தேடிக் கண்டடைந்தபோது அவர் எழுதியவற்றில் இது மிக முக்கியமான நாவல் என்ற குறிப்பு கிடைத்தது. அப்படியென்றால் வாசித்தே ஆக வேண்டும். வாசித்துமாயிற்று

கணவன் மனைவிக்கு இடையே நிகழக்கூடிய வாழ்வியல் சிக்கல்கள் நிறைந்த எளிமையான கதை. கூடவே நிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. (அடிக்குறிப்பாக ஒன்றை கூறிகொள்கிறேன் -  குடும்ப சண்டைக்குப் பின்னான நாட்களில் இந்த நாவலை வாசிக்காதீர்கள் குடும்ப வாழ்க்கையையே வெறுத்து விடுவீர்கள்).

பழனிகுமார் என்பவன் பணி நிமித்தமும், வாழ்க்கை நிமித்தமும் தன் சொந்த ஊரான தேனியை விட்டுப்பிரிந்து மதுரைக்கும் கோயமுத்தூருக்குமாக அல்லாடுகிறான். அவனுடைய விருப்பு வெறுப்புகளின் காரணமாக அவனுக்கும் மனைவிக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்படுகிறது. பழனிகுமார், தன் மனைவி ராதா தன்னைப் புரிந்துகொள்ளவில்லை. தன்னுடன் வர மறுக்கிறாள். தன் குடும்பத்துடன் இணக்கமாக இருக்க மறுக்கிறாள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அவள் மீது வைக்கிறான். ராதாவும் அதற்கு ஏற்றாற்போல் சரிக்கு சமமாக மல்லுக்கு நிற்கிறாள். கணவன் என்கிற கிஞ்சித்து மரியாதையும் அவளிடத்தில் இல்லை. தன்னைக் கொல்ல வந்த சாத்தானாக அவனைப் பார்க்கிறாள்.

பழனிகுமார் தன்னுடைய குடும்பம் தன்னுடைய பூர்வீகம் என்று அல்லாடுகிறான். மனைவி தன்னிடம் எதிர்பாப்பது அத்தனையும் ஆடம்பரம் என்று புலம்புகிறான். இதற்கிடையே தாம்ப்தயம் முற்றிலுமாக அற்றுப்போகிறது, இவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை மணம் முடித்துக் கொள்ளலாமா என்று அல்லாடுகிறான். கள்ளத் தொடர்புக்கும் தயாராகிறான். நிறைவேறாத ஆசைகளை தன்னுடைய புலம்பல்களாக மாற்றி உள்ளுக்குள்ளே போட்டுக் குமைகிறான். நாவல் ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரைக்கும் இப்படியே நகர்கிறது (இது ஒருவிதத்தில் எனக்கு அயற்சியைக் கொடுத்தது).

இந்த கதையின் ஊடாக விவசாயத்தின் பின் இருக்கும் வலி வேதனைகள் விளைச்சலின் மூலம் அவ்வபோது கிடைக்கும் சந்தோசங்கள் ஏமாற்றங்கள் என நகர வாழ்வில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் விவசாயம் குறித்தும் பேசுகிறார் வேணுகோபால். இந்த நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது பழனிகுமாரின் தம்பியாக வரக்கூடிய குமரன்தான். கதை நகர்வின் பெரும்பலமும் அவனே.  

கதை என்றளவில் புரிந்துகொள்ளக் கஷ்டமில்லாத கதைதான். பழனியின் மன ஓட்டங்கள் ஊரை விட்டுப் பிரிந்த யாரொருவரும் எதிர்கொள்ளகூடியதே. புரிந்துகொள்ள முடியாத ஒன்று அந்தக் கதாபாத்திர சித்தரிப்பு. நியாயப்படி இந்தக் கதையின் ஓட்டத்தில் பழனிகுமாரின் மீதுதான் நமக்குப் பரிதாபம் வந்திருக்க வேண்டும். அதைத்தான் ஆசிரியரும் சித்தரிக்க முயன்றிப்பார் என்று நினைக்கிறன்.

ஆனால் பழனிகுமாரின் மீது உருப்படியான பரிதாபம் ஏற்பட இந்த நாவலில் நமக்கு இருக்ககூடிய ஒரே காரணம் அவன் நிலத்தை விட்டுப் பிரிந்து நிலங்களுக்கு இடையே அல்லாடுபவன் என்ற ஒற்றைத்தரவு மட்டுமே. அதைத்தவிர வேறொன்றும் அவனுக்கு நியாயமாக இல்லை.

இந்த நாவலில் என்னால் பரிதாபப்பட முடிந்தது பழனிகுமாரின் மனைவி ராதாவிற்காக. இப்படியொரு குழப்பவாதி கணவனுடன் எப்படி அவளால் இத்தனை காலம், காலம் கடத்த முடிகிறது என்று. பழனிகுமார் எதிலுமே உருப்படியில்லை. வாசிங் மெஷினில் இருக்கும் துணிகளை காயப்போட மறக்கிறான். கொண்டு வந்த கடலையை உலறப்போடவில்லை. வாடகைப் பணம் கொடுக்க மறக்கிறான். ஏன் பள்ளிவிட்டு வரும் தன் பிள்ளைகளை அழைத்துவரகூட அவனுக்கு மனம் ஒப்பவில்லை. ஆற்றங்கரையில் அவன் சந்திக்கும் மனநிலை பிறழ்ந்த பெண்ணின் மீது வரும் பரிதாபம் கூட தன் மனைவியின் மீது வர மறுக்கிறது.

அவளை ஒரு பேயை ஒப்ப பார்க்கிறான். ஆனால் அவளோ பம்பரம் போலச் சுழல்கிறாள். நிதானமாக உணவு உண்ண முடியாமல் நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுகிறாள். நோயுற்று அவதியுறும் பிள்ளைகளைத் தாங்குகிறாள். பிள்ளைகளுக்காக பழம் வாங்கிவரச் சொல்லி, இவன் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையில் அவளே வாங்கி வருகிறாள். இப்படி ராதா எனும் பெண்ணை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவளைப் பற்றிச் சொல்லப்படாத பக்கங்களின் மூலமே. இந்த நாவல் முழுக்கவே ராதாவுக்காகப் பேசும் குரல் என்று எதுவுமே இல்லை. ஆங்காங்கு கிடைக்கும் தகவல்களின் மூலமே ராதாவைப் பற்றிப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் பழனிகுமாரோ கடந்த காலத்தில் உழல்கிறான். காமத்திற்காக ஏங்குகிறான். தன்னைச் சுற்றி நிலவும் பிரச்சனைகளையே பூதாகரமாகப் பார்க்கிறான். தன் மனைவி தான் நினைப்பதைப் போல இல்லையே என்று உழல்கிறான். தன் இளமையை அழிக்க வந்தவள் என்ற பிம்பத்தை அவள் மீது சுமத்துகிறான். அதற்காக ராதாவும் குறையற்ற பெண்ணா என்றால் அவளுக்கும் பலவீனங்கள் இருக்கின்றன. அதைச் சீண்டிப்பார்க்கும் குணம் பழனிகுமாருடையது. அவளும் அதற்கு ஏற்றார் போல் ஆடுகிறாள் அவ்வளவுதான்.

பிரச்சனை என்பது இருமுனைக் கத்தி, எப்படி வீசினாலும் இருவரையும் பதம் பார்க்கும். பழனிகுமாருக்கு இணையாக ராதாவும் கத்தி வீசுகிறாள் என்ற காரணத்திற்காக பழனிகுமார் மேலானவனும் இல்லை, ராதா தாழ்ந்து போவதும் இல்லை. பழனிகுமார் எப்போதுமே தன்னைக் கடந்து எதுகுறித்தும் யோசிக்க முயன்றதுமில்லை.

நாவலில் நான் கண்ட இன்னொரு வியப்பான பகுதி பழனி கோயமுத்தூர் நிலத்தாரையும், ராதா தேனிவாசிகளின் மீதும் வைக்கும் நிலம் சார்ந்த நேரடிக் குற்றச்சாட்டு. இதுவரைக்கும் வேறெந்த நாவலிலும் இதுபோல் வாசித்ததில்லை என்பதால் அதுவொரு புதுமையான வாசிப்பனுபவம்.

இந்த நாவல் நிலம் சார்ந்த பிறழ்வு குறித்து பேசமுனைந்த ஒன்று. அதற்காக அவர் கட்டமைக்க முயன்ற பழனிகுமார் என்ற பிம்பம் ஒழுங்காக கட்டமைக்கப்படவில்லையோ என்று தோன்றியது. பழனிகுமாரின் மீது எனக்கும் கிஞ்சித்தும் மரியாதை வராதபோது எப்படி அவன் உணர்வுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்?

நிலம் எனும் நல்லாள் வாசிப்புக் கடந்து என்னுள் ஏற்படுத்திய சிந்தனைகள் இவையே. அந்தவிதத்தில் இந்த எழுத்து என்னைப் பாதித்திருக்கிறது. அதேநேரம் முழுமையாகக் கட்டமைக்க முயன்று தோற்றுப்போன பழனிகுமாரின் சித்திரத்தை விட ராதா எனும் பெண்ணே என்னுள் உயர்ந்து நிற்கிறாள். அவளே பூரணத்துவம் பெறுகிறாள். அவளே நிலம் எனும் நல்லாள்.
  

2 comments:

  1. இந்தப் புத்தகம் படித்ததில்லை சீனு. ஓரிரு முறை புத்தகக் கடைகளில் பார்த்திருந்தாலும் ஏனோ வாங்கத் தோன்றவில்லை.

    ReplyDelete
  2. படிக்க வேண்டிய நாவல் தான்... ஆனா...

    வாழ்க்கையையே வெறுத்து வெறுத்து, அதே விருப்பமா போச்சி...!

    ReplyDelete