15 Apr 2020

வேள்பாரி - பெருங்கனவு, பேரனுபவம்

*** நிச்சயமாக இது விமர்சனம் அல்ல ***

விடாப்பிடியாய் வேள்பாரியை வாசித்து முடித்தாயிற்று. சர்வ நிச்சயமாக வேள்பாரி எனக்குக் கொடுத்தது மிகச்சிறந்த வாசிப்பனுபவம். பெருங்கனவு ஒன்றின் வழியாய் வந்துவிழுந்த எழுத்துக்கள் கொடுத்த பேரனுபவம். நிச்சயமாக விரிவாக எழுத வேண்டிய ஒன்று. அதற்குமுன் சில விஷயங்கள். 

சுமார் 1500 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை இதற்குமுன் வாசித்திருக்கிறேனா? என்றால் அது நிச்சயமாக பொன்னியின் செல்வன்தான் அதனை ஐந்து நாட்களில் வாசித்து முடித்திருந்தேன். அதன்பின் அதே போன்றதொரு வாசிப்பு வேகத்துடன் முடித்த புத்தகம் நிச்சயமாக வேள்பாரியே. பொன்னியின் செல்வனை வாசித்தே ஆக வேண்டும் என்ற சமூக அழுத்தம் இருந்தது எனக்கு; எப்படி இதற்குமுன் ஒரு கூட்டம் மாய்ந்து மாய்ந்து GOT-யையும் இப்போது ஒரு கூட்டம் மணி ஹெய்ஸ்டையும் ப்ரோமோட் செய்கிறதோ அப்படி ஒரு அழுத்தம். ஆனால் வேள்பாரியை நான் வாசிப்பதற்கு அப்படி எந்தவொரு காரணமும் இல்லை. வாசிக்க வேண்டும் என்ற பட்டியலிலும் அது இல்லை. 

வேள்பாரி நிறைவு விழா நிகழ்வில் நண்பன் விவேக் எடுத்துக்கொண்ட புகைப்படம் மூலமே வேள்பாரி என்று ஒரு தொடர் வெளியானதும் அதன் நிறைவு விழாவிற்கு அவன் சென்றுள்ளான் என்பதுமே தெரியவந்தது. இது ஒரு காரணம் என்றால் அதனைக் கடந்த சில வாரங்களில் பலரும் வேள்பாரியைப் பொன்னியின் செல்வனை மிஞ்சிய மிகச்சிறந்த வரலாற்று நாவல் என்று புகழ்ந்து எழுதுவதைக் கடக்க நேரிட்டது. ஒரு கதை ஒப்பீட்டளவில் ஒன்றுகொன்று இணையான தளத்தில் நிகழாதபொழுது அதனை ஒப்பிடுவதே தவறு. ஒப்பீடு தவறு அல்ல. எதனை எதனுடன் ஒப்பிடுகிறோம் என்ற அளவுகோல் இருக்கிறது. இங்கே அவர்களுக்கான அளவுகோல் இவ்விரண்டுமே சரித்திரப் புதினங்கள் என்றளவில் நின்று விடுகிறது. அதைத்தான் தவறு என்கிறேன். அதேசமயம் அந்த ஒப்பீடுதான் இந்த நாவல் குறித்தான வாசிக்கும் ஆர்வத்தையும் தூண்டியது. வாசிக்க வாசிக்க எத்தனை அபத்தமான ஒப்பீட்டை தமிழ் வாசகப்பரப்பு முன் வைத்திருக்கிறது என்று தோன்றுகிறது. அதன்பின் வேள்பாரியை மறந்துவிட்டேன்.

இந்நிலையில் கடந்தவாரத்தில் தற்செயலாக அருண் என்னிடம் கேட்டார் "சீனு வேள்பாரி, படிச்சிட்டீங்களா? படிக்கிறீங்களா?" ஒருவேளை அவரிடம் இருப்பது மின்னூல் என்றால் வேண்டாம் என்று சொல்ல இருந்தேன், நல்லவேளையாக அவரிடம் இருந்தது புத்தகமே. கிண்டிலில் வாசித்து வாசித்து கண்கள் ஓய்ந்துவிட்டன. இன்னும் என்னிடம் மீதம் இருப்பது பத்துக்கும் குறைவான அச்சுப் புத்தகங்களே. அவற்றையும் முடித்துவிட்டேன் என்றால் கிண்டில் ஒன்றே கதி. அதை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது. அதற்காகவே அச்சுப்புத்தகங்கள் வாசிக்கும் நாட்களை தள்ளிப்போட்டு வருகிறேன்.   

இங்கேதான் வேள்பாரியின் புத்தக வடிவமைப்பைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஏற்கனவே பத்திரிகையில் வெளிவந்த ஒன்று, வெற்றிகரமாக நூறு வாரங்களைக் கடந்ததும்கூட என்றபோதிலும், மிக உயர்ந்த தரத்தில் கண்ணுக்குக் குளுமையான ஓவியங்களுடன் பளபளவென கைகளில் புத்தகம் வந்து இறங்கியபோது அப்படியே ஒத்திக்கொள்ளலாம் போல் இருந்தது. தண்ணியில்லாக் காட்டில் இருப்பவன் குத்தாலத்தின் அருமையை உணரும் கணம். அதற்காகவே அவருக்கொரு தனி நன்றி. வாங்கி வந்த அன்றே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். இன்றைக்கு முடித்தாயிற்று.

வேள்பாரி இப்போது எனக்குச் சொல்வது சில உண்மைகளை. 

ஒரு கதையை சுவாரசியமாக எழுதினால் எத்தனைப் பக்கங்கள் அவை புரண்டு அலுப்பில்லாமல் வாசிக்கலாம். நள்ளிரவு இரண்டு மணி வரைக்கும் வாசித்தபோதிலும், காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே இரண்டு மணியோடு நிறுத்திக்கொள்வேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் அத்தனை சுவாரசியமாக எழுதியுள்ளார்.

தொடராக வெளியான கதை என்றபோதிலும் ஒரு அத்தியாத்தில் இருந்து மற்றுமொரு அத்தியாயத்திற்குத் தாவிச்செல்லும்போது கதையோட்டத்திற்காகப் பெரிதும் மெனக்கெடவில்லை, இயல்பாக அடுத்தடுத்துப் பறக்கிறது. ஒருவேளை ஒருவார இடைவெளியில் படித்தவர்களுக்கு வாசிப்புச் சிக்கல் இருந்திருக்குமா என்பதை அவர்கள்தான் சொல்லவேண்டும். பல தருணங்களில் கடைசி அத்தியாயத்தை வாசித்துவிடலாமா என்றுகூடத் தோன்றியது. இறுதி கட்டத்தில் என்ன நடக்கும்? பாரி ஜெயிப்பானா? என்றெல்லாம் பெரும்படபடப்பாய் இருந்தது. எப்போதுமே எனக்கு முன்னுரையை முதலில் வாசிக்கும் பழக்கம் இருந்ததில்லை. இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரையில் முன்னுரையே ஸ்பாய்லர்தான். நல்லவேளையாக அதனை கடைசியில் வாசித்தேன். 

கதையின் உண்மைத்தன்மையை விடுங்கள், அந்தத் தளத்திற்குள் செல்ல எனக்குப் போதுமான ஆய்வாராய்சசி இல்லை. இதனை ஒரு புனைவுக்கதை அல்லது சிறிது புனைவு கலந்த உண்மைக்கதை அல்லது சிறிது உண்மை கலந்த புனைவுக் கதை என்று ஏதோ ஒன்றாக எடுத்துக்கொண்டால் நிச்சயமாக வேள்பாரி எனக்குக் கொடுத்தது பேரனுபவமே. மிக நுட்பமாக கதையை வளர்த்துள்ளார். கணக்கில்லாமல் வந்து செல்லும் கதாப்பாத்திரங்களைக் கச்சிதமாகக் கையாண்டுள்ளார். நுட்பம் என்பதை விளக்குவதற்கு பல காட்சிகளைக் கூறமுடியும் அதனை விமர்சனத்தில் எழுதுகிறேன். நம்புங்கள் நிச்சயமாக இது விமர்சனம் இல்லை. அதே நேரம் நுட்பக் குறைபாடுகளும் இல்லை. நான் அறிந்து ஒரேயொரு இடத்தில் தவறி இருந்தார். அதை மட்டும் கூறுகிறேன். 

பாரி ஆட்சி புரியும் பறம்பு நிலத்தவர்கள் உப்பு என்ற ஒருபொருளைத் தவிர வேறு எந்த பொருளையும் பண்டமாற்றம் செய்ய மாட்டார்கள் என்று முதலில் ஒரு குறிப்பு வருகிறது. இதுவே இறுதிப் போர்க்களக் காட்சியில் கபிலருக்குக் கரும்பு கலந்த பழச்சாறு கொடுக்கும் உரையாடலில், பறம்பில் கரும்பு விளையவில்லை என்றபோதிலும் பறம்புக்குடியினர் அதனை மான் மாமிசத்திற்குப் பண்டமாற்றாகப் பெறுகின்றனர் என்று குறிப்பிடுவார். இந்த ஒரேயொரு காட்சியைத் தவிர வேறு எதுவும் என் கண்ணில் சிக்கவில்லை.

சுவாரசியம் பரபரப்பு என்பதையும் கடந்து காட்சிகள் இயல்பாகக் கண்களில் இருந்ததாலோ அல்லது காட்சிகளுக்கு இணையான ஓவியங்கள் கொடுத்த தத்ரூபங்களினாலோ இந்த மொத்த நாவலும் மிகக்கச்சிதமாக மனதில் ஒட்டிக்கொண்டது. முதல் வாசிப்பிலேயே ஒரு புத்தகம் இந்தளவிற்கு என்னுள் பதிந்ததில்லை என்பதை நானறிவேன். விமர்சனம் எழுத வேண்டும் என்றால் நிச்சயமாக எனக்கு மறுவாசிப்பு தேவை. வேள்பாரி அப்படி இருக்கப்போவதில்லை என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

சாருவின் புத்தக வெளியீட்டில் வாங்கியதோடும் ஓரிரு முறை புதிய எக்ஸைலைப் புரட்டியதொடும் சரி அதன் பக்க எண்ணிக்கை என்னை மலைப்படையச் செய்துகொண்டே இருந்தது. அதன் காரணமாகவே அதனை ஒத்திப்போட்டுக்கொண்டே இருந்தேன். வேள்பாரி உள்ளுக்குள் புது உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இப்போது என் கண்முன் இருக்கும் புத்தகம் புதிய எக்ஸைலே. அதற்குமுன் வாசுமுருகவேல் ஒரு டாஸ்க் கொடுத்திருக்கிறார் அதையும் முடிக்க வேண்டும்.

ஆக சர்வ நிச்சயமாக வேள்பாரி ஒரு பெருங்கனவு ஏற்படுத்தியப் பேரனுபவமாகவே என்னுள் இறங்கி இருக்கிறது என்பதே உண்மை.

2 comments:

  1. வேள்பாரி தொடராக வெளிவந்தபோது கொஞ்ச நாள் படித்தேன்.

    ReplyDelete
  2. தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!

    தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!

    உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை

    நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 29 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்

    31ஆவது வலைத்தளம்: thambattam

    32ஆவது வலைத்தளம்: திடங்கொண்டு போராடு

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

    இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

    ஒரே பார்வையில் எமது தளங்கள்:
    1. வலை ஓலை
    2. எழுத்தாணி
    3. சொல்

    தங்கள் பதிவு - எமது திரட்டியில்: வேள்பாரி – பெருங்கனவு, பேரனுபவம்

    முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

    நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    அனைவருக்கும் நன்றி!

    -வலை ஓலை

    ReplyDelete