25 Apr 2020

ஆஹா ரசிகன்


பால கணேசனை எப்போதிருந்து தெரியும் என்பது சரியாக ஞாபகம் இல்லை. பால கணேசன் எழுதும் சினிமா பதிவுகளையும் கடந்து, இவர் மீது ஈர்ப்பு வரக்காரணம், ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் இவர் கொடுத்துவரகூடிய ஜெட்லி விருதுகள். கடந்த ஆறு வருடங்களாக அந்த விருதினைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அந்த விருதுகளின் தொடர்ச்சியாய் பலருடன் நட்புப் பட்டியலிலும் இணைந்துள்ளேன். இன்றைக்கு அந்த விருதுகள் ஆஸ்கர் அளவுக்குத் தனிச்சிறப்பு அடைந்திருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் பால கணேசன் தன்னை ஓர் ஆளுமையாக வளர்த்திருப்பதால்தான்.
கரோனா நாட்களில் பலரும் லைவ் நிகழ்த்திக் கொண்டிருக்க, நானாக விரும்பிக் கலந்துகொள்ளும் லைவ் பால கணேசனுடையது மட்டுமே. தன்னை நோக்கி வரும் பல கேள்விகளையும் ஸ்பாண்டேனியஸாக அவர் எதிர்கொள்ளும் விதம் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி இந்த மனிதனால் இப்படிப் பல்வேறு முனைகளில் இருந்தும் வரும் அத்தனைக் கேள்விகளுக்கும் பதில் கூற முடிகிறது! முன் தயாரிப்புகள் செய்வாரா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் எப்படி இத்தனை கச்சிதமாக பதில் கூற முடிகிறது?

*****

ஆஹா ரசிகனைப் பொறுத்தவரையில் “என்னுரையில்” இருந்தே இறங்கி அடிக்க ஆரம்பித்துவிடுகிறார் பால கணேசன்.



“ஐம்பது வருடம் முன்னர் மாட்டு வண்டியில் குழாய் ரேடியோவில் பாட்டு அலற, சிதறவிடப்பட்ட சினிமா நோட்டீஸ்களை பொறுக்கி, தன் வீட்டு கதவில் ஒட்டிவைக்க ஓடிய சிறுவனின் பிரதிதானே?” இந்த பால கணேசன் என்று அவர் குறிப்பிடுவது நம்மையும் சேர்த்துதானே. வெகு சாதாரண மனநிலையில் வாசிக்கத் தொடங்கிய இந்தப் புத்தகம் ‘என்னுரை’யிலேயே என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது இந்த வரிகளின் மூலம்தான். ஆகா இந்த மனுஷன் உண்மையிலேயே எதோ உருப்படியா சொல்ல வாறாப்ல என்று.

எப்படி சினிமாத்துறையில் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லையோ அதேபோல் சினிமாவை மட்டுமே எழுதும் எழுத்தாளர்களுக்கு எழுத்துத்துறையில் போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லையோ என்று தோன்றுவதுண்டு. ஓரிரு கட்டுரைகள் பிரபலாமாவது வேறு, ஓர் எழுத்தாளரின் அத்தனை கட்டுரைகளும் பரவலாக நினைவு கூறப்படுவது வேறு. சினிமாவை மட்டுமே எழுதியவர்களில் எத்தனை பேர் இன்று வரைக்கும் நினைவில் நிற்கிறார்கள்? விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தக் கூற்று தவறாகவும் இருக்கலாம்.

தவறாக இருக்காது என்று நான் நினைப்பதற்கான காரணம், சினிமா எல்லாருக்குமான களம். ஒரு சினிமா எடுப்பதுதான் கடினமே தவிர எழுதுவது அல்ல.

சினிமா சார்ந்த கட்டுரைகள் எந்த அளவிற்குப் பரவலாக வாசிக்கப்படுகிறதோ அதே எண்ணிக்கையிலான எழுத்தாளர்களையும் கூடவே வைத்திருக்கிறது. ஒருவர் எழுத்துப் பழக ஆரம்பிக்க வேண்டுமெனில் மிகச்சிறந்த தளம் சினிமா.

வலை மற்றும் பேஸ்புக்கில் பிரபலமாக வேண்டுமென்றால் ஒரேயொரு கட்டுரையை அட்டகாசமாக எழுதினால் போதுமானது பிரபலாமாகிவிடலாம். நிற்க. இங்கே பிரபலமாவது கட்டுரை மட்டுமே. எழுத்தாளர் அல்ல. சமூகம் எழுத்தாளர்களிடம் எதிர்பார்ப்பது கன்சிஸ்டன்சியை. அது இல்லாவிட்டால் தூக்கிப்போட்டுப் போய்கொண்டே இருப்பார்கள்.

இங்கே சினிமா எழுத்தாளர்கள் தனித்து நிற்கும் இடங்கள் கன்சிஸ்டன்ஸி எனும் புள்ளியில். பொதுவாக கன்சிஸ்டன்ஸி அனைத்து தளங்களுக்குமே முக்கியம் என்றாலும் சினிமா எனும் தளம் பன்முனைப் போட்டி நிறைந்த களம் என்பதால் ஒருவர் எழுதும் கட்டுரைகளையும் மீறி அவர் பெயர் வாசகர் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் நிச்சயமான தேவை கன்சிஸ்டன்ஸி. பால கணேசனின் முதல் பலம் என்று நான் கருதுவது அதைத்தான்.

கன்சிஸ்டன்ஸி முதல் விஷயம் என்றால் இரண்டாவது விஷயம் கட்டுரைகளின் வடிவம். இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கதாநாயகர்களின் ஒப்பீடாகவே இந்தப் புத்தகம் இருக்கிறது (ஒட்டுமொத்த புத்தகத்திற்குமான டெம்ப்ளேட்டும் அதுவே).

ஒப்பீடு என்றால் ஒருவர் ஏன் ஸ்டார் ஆனார், இன்னொருவரால் ஏன் முடியவில்லை; வாழ்ந்த இடம் எது, தாழ்ந்த இடம் எது போன்ற ஒப்பீடுகள். இப்படிப்பட்ட கட்டுரையில் முன்னுக்கும் பின்னாக ஆட்களை மாற்றி குழப்பியடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்தப் புத்தகத்தில் அதுபோன்ற பிரச்சனைகள் இல்லை. மிக தெளிவாக, மிக நிதானமாக தன் தரவுகள் ஒவ்வொன்றாக முன்வைக்கிறார். நிதானமாக என்ற வார்த்தையைக் கவனியுங்கள். அதைக்கூறக் காரணம், இது சினிமாதானே வேகவேகமாக பரபரப்பாக பக்கங்களை நகர்த்திச் செல்லலாம் என்று காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு அவர் ஓடவில்லை. கைபிடித்தே அழைத்துச் செல்கிறார். பரபரப்பாக பதட்டத்துடன் படிக்கவேண்டிய புத்தகம் இது இல்லை என்று நிதானப்படுத்துகிறார்.

மூன்றாவது கதாபாத்திர ஒப்பீடுடன் கூடிய தரவுகள். பொதுவாக சினிமா என்பது கடல். மாபெரும் சமுத்திரம். அதிலிருந்து எதைத் தருவது எதை விடுவது என்ற தேர்வு மிகமுக்கியம். பால கணேசன் இங்கே எதையும் புதிதாக எழுதவில்லை. இதுவரை தான் கற்ற தகவல்களை தன்னுடைய மொழியில் இங்கே பகிர்கிறார் அவ்வளவுதான். அதனால் தரவு எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியம் ‘எதைத் தருவது’ என்ற தேர்வு. அதைக் கச்சிதமாகக் கையாண்டுள்ளார். தனக்கான வரையறைக்குள் அதனை மிகச் சிறப்பாகவே செய்துள்ளார் என்று கூறலாம். உதாரணமாக எம்.ஜி.ஆர் – வாசன் இவர்கள் இருவருக்குள்ளும் நிகழும் சரித்திர முரண். அட்டகாசமான தரவு அது. அதேபோல ஜெய்சங்கரின் திரைவாழ்க்கை ஹீரோ வில்லன் என்ற வகையில் எப்படி ஒரு முரணை தோற்றுவித்தது போன்ற இடஞ்சுட்டி விளக்கம் அட்டகாசம்.

நான்காவது, கட்டுரைக்கான காரணங்கள். முதல் இருபெரும் நடிகர்கள் என்ற நிலையை ஒப்பிட்டால் அது வழக்கமான ஒரு புத்தகமாகி இருக்கும். இரண்டாம் மூன்றாம் நிலை நடிகர்கள் என்றால் சுவாரசியம் குறைந்துவிடும். அதனால் முதல்நிலை நடிகர்களின் பலத்தை நம்முன் நிறுத்திவிட்டு, இன்னின்ன காரணங்களால் இத்தனை திறமை இருந்த போதிலும் இந்த இரண்டாம் நிலை நாயகர்களால் முதல்நிலைக்கு வரமுடியவில்லை என்று கூறும் விதம் அட்டகாசம். இப்போது இவையனைத்துமே ஒரு சித்திரம் போல் நம்முள் நீங்கா இடம் பிடிக்கின்றன.

ஆஹா ரசிகன் ஒரு முழுமையான புத்தகமா என்றால்? ஒரு முழுமையான தேடலை நோக்கியப் பயணத்திற்கான ஆரம்பநிலை வழிகாட்டி என்று சொல்லலாம். சினிமா என்பது கடல். நூறு அல்லது ஆயிரம் பக்கங்கள் என்ற வரையறைக்குள் எல்லாம் அதனை சுருக்கிவிட முடியாது. உதாரணமாக இந்தப் புத்தகத்திலேயே அவர் எழுதி இருக்கும் ஒவ்வொரு வாக்கியத்தையும் கொண்டு ஒரு கட்டுரை எழுத முடியும். ஆக பால கணேசன் தன் வாசகர்களுக்கு எந்தெந்த தகவல்களைத் தர முன் வந்தாரோ, அதைத் தந்திருக்கிறார் என்ற விதத்தில் இது ஒரு முழுமையான புத்தகம். அதேநேரம் சில கட்டுரைகளை இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றாமலும் இல்லை. குறிப்பாக விஜயகாந்த் குறித்த கட்டுரை. எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சட்டென முடிந்ததைப் போல் உணர்ந்தேன்.

புத்தகத்தின் மைல்கல் அந்தக் கடைசிக் கட்டுரை. கட்டுரையின் தலைப்பை “ஆஹா ரசிகன்” என்றே வைத்திருக்கலாமோ என்று தோன்றியது. இந்தக் கட்டுரையில் அவர் பேசியிருக்கும் அரசியல் முக்கியமானது. ரசிக சண்டைகள் ஆரோக்கியமற்று உருக்குலைவது எவ்விதத்தில் ஒவ்வொரு ரசிகனையும் சினிமாவில் இருந்து தொலைதூரத்தில் வைக்கிறது என்பது குறித்துப் பேசுகிறது. Good one.

என்னுரையில் அடுத்த புத்தகத்தில் சந்திப்போம் என்று கூறியுள்ளீர்கள். I like that positive note. ஒருவேளை அடுத்த புத்தகமும் சினிமாவைப் பற்றியது என்றால் இதில் இருக்கும் நிறைகளை விட்டுவிடாதீர்கள். அதுபோக மேலும் நிறைய கட்டுரைகளுடன் தமிழ் சினிமாவைப் பற்றி எழுதுங்கள். Thanks for this one.



கண்ணை உறுத்தாத எழுத்துருக்களுடனும் அட்டகாசமான அட்டைப் படத்துடனும் வெளியிட்ட வாசகசாலைக்கு வாழ்த்துகள்.

1 comment: