வேள்பாரியை நான் வாசிக்கிறேன் என்று தெரிந்தபோதே வாசு முருகவேல்
என்னிடம் கூறியிருந்தார் “சீனு, நிலம் பூத்து மலர்ந்த நாள் தவற விடாதீங்க.”,
என்று. வேள்பாரி கொடுத்த உச்சகட்ட வாசிப்பனுபவம் நிலம் பூத்து மலர்ந்த நாளை
உடனடியாக வாசிக்கத் தூண்டியது. இதில் எனக்கு ஏமாற்றமான விஷயம் கிட்டத்தட்ட
வேள்பாரி கொடுத்த அதேபோன்ற ஒரு வாசிப்பனுபவத்தை இதில் எதிர்பார்த்தது.
(இடைக்குறிப்பு : வேள்பாரி வாசித்து விட்டீர்கள் என்றால் இந்த நாவலை
தவறவிடாதீர்கள், கிட்டத்தட்ட இந்நாவல் வேள்பாரியின் சீக்வெல் போல)
என்னைப் பொறுத்தவரையில் ஒரு கதை எப்படி சொல்லப்படுகிறது என்பதை மிக
தீவிரமாகக் கவனிப்பேன். அவ்வகையில் முதல் சில அத்தியாயங்களுக்கு இந்தக் கதையின்
போக்கை புரிந்துகொள்வதில் கொஞ்சம் திணறினேன். சில புதினங்கள் சட்டென நம்மை
உள் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது. இது
அப்படியில்லை. ஒருவேளை வேள்பாரிக்கு இணையான கதைகளத்தை, கதை சொல்லலை எதிர்பார்த்தது
கூட காரணமாக இருக்கலாம். இவையெல்லாமே எனக்கிருந்த ஆரம்பகட்ட வாசிப்புச்
சிக்கல்கள். வேள்பாரியில் இருந்து வெளியேறி நிலம் பூத்து மலர்ந்த நாளுக்குள்
நுழைவதற்கான இடைவெளி - அந்த முதல் சில
அத்தியாயங்கள். இத்தனைக்கும் இவ்விரண்டிற்கும் இதற்கிடையே சில நூல்கள்
வாசித்திருந்தேன் என்பது வேறுவிஷயம்.
ஒரு சில அத்தியாயங்களுக்குப் பின் வேள்பாரியை தூர வைத்துவிட்டு இந்த
உலகத்தினுள் நுழைந்துவிட்டேன்.
இந்த நாவலுக்கும் வேள்பாரிக்கும் இருக்கக்கூடிய தொடர்பு இரண்டுமே ஒரே
காலத்தில் ஒரே மன்னனை மையமாகக்கொண்டு புனையப்பட்ட கதைக்களம். அதில் பாரி வாழ்ந்த
கதை என்றால் இதில் பாரி...
கடும் வறுமையில் இருக்கும் பாணர்கள் கூட்டம் ஒன்று தங்கள் தாய்பூமியை
விட்டு இடம்பெயர்ந்து, மன்னன் ஒருவனை சந்தித்து, அவன் சபையில் கூத்து இயற்றி,
பரிசில் பெற்றுத் தம் துயரைப் போக்கலாம் என்று நினைகிறார்கள். கூடவே தொலைந்துபோன
தங்கள் தலைமகன் மயிலனையும் கண்டுபிடிக்க நினைக்கிறார்கள். பயணம் தொடங்குகிறது. பயணத்தின்
வழியில் பெரும்புலவர் பரணரைச் சந்திக்கிறார்கள். அவரிடம் மயிலன் குறித்த சில
குறிப்புகள் இருகின்றது என்றாலும் அவர் அதனைக் கூறமறுக்கிறார். மேலும் பெருவள்ளல்
வேள்பாரியைச் சந்தித்து அல்லல் தீர்த்துக்கொள்ளச் சொல்கிறார்.
மேலும் சில தகவல்களாக, “வேள்பாரியுடன் கபிலர் இருக்கிறார். அவரிடம்
பரணரைச் சந்தித்ததாகக் கூறுங்கள். கபிலர் மற்றதைப் பார்த்துக்கொள்வார்”, என்று
நம்பிக்கை அளித்து வழியனுப்புகிறார். கிடைத்த நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு பறம்பு
நோக்கி விரைகிறது பாணர் கூட்டம். அங்கே கபிலரைச் சந்திக்கிறார்கள், பாரியையும்
சந்திக்கிறார்கள். கூடவே வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையையும்
சந்திக்கிறார்கள். அதன் பின் என்னவானது என்பதே மீதிக்கதை.
இந்தப் புதினம் மூன்று சிறு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு நபர்களின் பார்வையில் கூறப்பட்ட ஒன்றாக
அமைந்துள்ளது. முதல் பார்வை மயிலனின் தந்தையின் மூலமும், பின் மயிலனின் சகோதரி
சித்திரை மூலம், பின் மயிலன் மூலமும் கூறப்படுகிறது.
மயிலனின் அப்பாவின் பார்வையில் கூறப்படும் கதையானது, பாணர்
கூட்டத்தினர் படும் அவஸ்தைகளையும், பிறந்த நாய்க்குட்டிக்குப் பால்கொடுக்க முடியாத
வறுமையால் அக்குட்டிகளைக் கூடக் காப்பாற்றமுடியாத தம் நிலையையும், பின்
நாடோடிகளாகப் பெயர்ந்து, சிலர் மூலம் சுடு சொல்லுக்கு ஆளாகி, சிலர் மூலம்
அரவணைக்கப்பட்டு, பின் அங்கிருந்து பறம்பு தேசம் நகர்வது போலவும், இடையிடையே
மயிலனைப் பற்றிய சிந்தனைகளாகவும் அவர் சொல்லும் கதை நகர்கிறது. ஒரு கட்டத்தில்
அவர் மூச்சு நிற்கிறது.
அங்கிருந்து சித்திரையின் மூலம் கதை நகர்கிறது. எதை எதிர்பார்த்து
பறம்பின் உள் நுழைந்தார்களோ அது கிடைக்காமல் அவப்பெயருக்கு ஆளாகி பின்
எதிர்பார்ப்பும் ஏமாற்றுமுமாக அல்லல்பட்டு இறுதியில் பெருங்கிழவி அவ்வையிடம்
தஞ்சம் அடைகிறாள். இடையே வாழ்வின் பெரும்சுமைக்கும் ஆளாகிறாள்.
இங்கிருந்து மயிலன் தன் கதையைத் தொடங்குகிறான். சிறுவயதில் வீட்டை
விட்டு ஓடியதில் இருந்து தன் திறமையின் மூலம் அடுத்தடுத்த படிநிலைகளுக்கு
உயர்ந்தபோதும் வாழ்க்கை அவனை அலைகழித்துக்கொண்டே இருக்கிறது. எத்தனை தூரம் அவன்
உயர்ந்தபோதும், எத்தனை அறிவு அவன் பெற்றபோதும் அவன் உள்ளத்தில் ஊறிப்போன சூது அவன்
வாழ்வை நிலைகுலையச் செய்கிறது. தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாருக்கும் பள்ளம்
தோண்டுகிறான். பின்னொரு கட்டத்தில் அவன் செய்த சூது ஊழ்வினையாக உருகொள்கிறது.
இந்த நாவலின் மிக முக்கியமான முடிச்சாக நான் கருதுவதே, கதை கூறும்
இம்மூவருமே கதையோட்டத்தில் எதோ ஒரு காரணத்திற்காகப் பகடையாக்கப்பட்டிருப்பார்கள்.
ஆனால் என்ன காரணத்திற்காக அலைகழிக்கப் படுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது
இருக்கும். இந்த மூவரையும் சுழன்றடிக்கும் மைய விசையில் மயிலன் நின்று
கொண்டிருப்பான். அவனையே அறியாமல் அவனையும் வீழ்த்தி, அவன் குலத்தையும் வீழ்த்தி
கூடவே ஒரு பெரும் குலத்தையும் வீழ்த்தி இருப்பான்.
முதல் கதை மயிலனையும், வாழ்வையும் தேடிய கதையாகவும், அடுத்த கதை மயிலனின்
வாழ்வில் நிறைந்திருக்கும் புதிர்த்தன்மைகளைத் தேடிய கதையாகவும், இறுதியில் இவை
அனைத்திற்கும் மயிலனே விடை கூறும் கதையாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கும்.
மலையாள நாவல் ஒன்றின் மொழிபெயர்ப்பு என்ற போதிலும் அந்த சுமை
தெரியாமல் மொழிபெயர்ப்பு நிகழ்த்தபட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. கதையின்
முதல் சில அத்தியாயங்களுக்கு நாவல் எதை நோக்கி நகர்கிறது என்பதையே புரிந்துகொள்ள
முடியாதது மட்டும் வாசிப்பு வேகத்தை மட்டுப்படுத்தியதைப் போல் இருந்தது. சங்ககால
இலக்கியம் சார்ந்த என்ற வகைமையில் நிச்சயமாக வாசிக்கப்பட வேண்டிய புதினம் என்றே
கருதுகிறேன்.
இந்த நாவலின் மைய முடிச்சை கூறாமல் தவிர்ப்பதன் காரணம், அதனை நீங்கள்
வாசிப்பின் மூலமே கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக. ஏனெனில் நாவலின் சுவாரசியமே
அதில்தான் அடங்கி இருக்கிறது. நன்றி.
வம்சி வெளியீடு. வாசிப்பு கிண்டில் வழியாக.
Tweet |
கிண்டில் சுட்டியும் தந்திருக்கலாம் சீனு. தேடுகிறேன்.
ReplyDeleteநல்லதொரு அறிமுகம். நன்றி.
புதிர்த்தன்மை இருந்தால் சுவாரஸ்யம் தான்...
ReplyDelete