இந்தப் புத்தகத்தை நான் தேர்ந்தெடுத்தற்கான காரணங்கள் இரண்டு.
ஒன்று இந்தப் புத்தகம் அமெரிக்காவோடு தொடர்புடையது.
இரண்டு இதில் கூறப்பட்ட சம்பவம் என்னோடு நேரடித் தொடர்புடையது.
இந்தியாவில் தமிழ்நாடு எப்படி மிகப்பாதுகாப்பான மாநிலாமோ, அதேபோல
இங்கே டெக்சாசைக் குறிப்பிடலாம். இயற்கைப் பேரிடர்கள் என்று பெரிதாக எதுவும்
வருவதில்லை. அதிகபட்சம் கொஞ்சம் பெரிய சைஸ் ஆலங்கட்டி மழை வரும். அதையும்
முன்கூட்டியே அறிவித்துவிடுவார்கள் என்பதால் உஷாராக இருந்தால் தப்பித்துவிடலாம்.
தப்பித்துக் கொண்டும் இருக்கிறேன். அதேநேரம் அதில் சிக்கி சின்னாபின்னம்
ஆனவர்களின் கதையும் அறிவேன் என்றாலும் ஆலங்கட்டி என்பது மிக மோசமான இயற்கைப்
பேரிடர் கிடையாது.
இங்கே டெக்சாஸ் என்று குறிப்பிட்டேன் இல்லையா டெக்சாஸ் என்பதை டாலஸ்
என்று சுருக்கிக் கொள்கிறேன். டெக்சாஸின் இதயமான ஹ்யூஸ்டனை அப்படிச்
சொல்லமுடியாது. கடற்கரையோர பகுதி என்பதால் சூறாவளிக்கு இரையாகும் வாய்ப்பு அதற்கு
மிக அதிகம். 2017-ம்
வருடம் ஹரிகேன் ஹார்வி என்ற ஒன்று ஹ்யூஸ்டனை முழுதாகப் புரட்டிப் போட்டது. கடந்த வருடம்
வந்த சூறாவளி ஹாரிவி முடிக்காத மீதியை கைவைத்தது.
ஹரிகேன் ஹார்வி ஒட்டுமொத்த அமெரிக்க மாகாணங்களையுமே புரட்டிப்போட்டது.
காரணம் ஹ்யூஸ்டனை மையமாகக்கொண்டு இயங்ககூடிய அமெரிக்காவின் மிக முக்கியமான கச்சா
எண்ணை சுத்திகரிப்பு ஆலை.
ஹார்வி இந்த ஆலையை முடக்க, கச்சா எண்ணைத் தட்டுப்பாடு - சாலையை
முடக்கியது. அதுவும் ஓரிருநாட்களுக்குத்தான். அந்த ஓரிரு நாளையே பூதாகரமான
பிரச்சனையாக மாறியது நிதர்சனம். காரணம் நாட்டின் முதுகெலும்பில் விழுந்த அடி.
பெட்ரோல் தேடித்தேடி பல மணி நேரங்கள் காத்திருப்பிலேயே கழிந்தன. கூடவே காற்றில்
பரவிய வதந்தி இன்னும் ஒரு மாதத்திற்கு பெட்ரோல் கிடையாது என்ற குண்டைத்
தூக்கிப்போட்டது. பங்குகள் நிரம்பி வழிந்தன. எங்கும் ஏமாற்றம். புயல் பாதிக்காத
எதோ ஒரு கண்ணியில் இந்த நிலை என்றால்? புயல் பாதித்த நிலம்?
ஹரிகேன் ஹார்வியின் பேரோலம் அடங்கும் முன்பே மற்றொமொரு சூறாவளி
ப்ளோரிடாவை நெருங்கிக் கொண்டிருந்தது. இர்மா என்ற பெயருடைய அந்த சூறாவளி ஹார்வியை
விடப் பலமடங்கு பலங்கொண்டதாக இருக்கும் என்று கணித்தார்கள்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை - ஹ்யூஸ்டன், மியாமி மற்றும் நியூஆர்லியன்ஸ்
இவை மூன்றுமே சூறாவளிக்குப் பெயர் போன மாகாணங்கள். இவற்றில் நியூஆர்லியன்ஸின்
நிலமைதான் பரிதாபகரமான ஒன்று. சூறாவளி எங்கு வலுகொன்டாலும் அது சம்மந்தமே இல்லாமல்
நியூஆர்லியன்சை நோக்கித் திரும்பிவிடுவதுண்டு. இர்மா கூட நியூஆர்லியன்சை பதம்
பார்க்ககூடும் என்று கணித்தார்கள். எப்போதோ வலுகொண்ட ஹரிகேன் கேட்ரினாவின் சுவடே
இன்னும் அங்கிருந்து அழிந்திருக்கவில்லை அதற்குள் மற்றொன்றா? நல்லவேளை ஆர்லியன்ஸ்
தப்பித்தது.
இங்கு வந்த புதிதில் பெருத்த சூறைக்காற்று ஒன்று ப்ளானோவைக் கடக்க
இருக்கிறது என்று கூறினார்கள். அந்த சமயத்தில் பாத்ரூமில் ஒளிந்து கொள்ளுங்கள்.
அது ஒன்றுதான் அக்காலத்திற்குமான பாதுகாப்பான இடம் என்று கூறினார்கள். இர்மா
நாவலிலும் அப்படியொரு இடம் வருகிறது. இவை அனைத்தும் உங்களுக்குப் புதிதாக
இருக்கலாம் அல்லது புதிராக இருக்கலாம். ஆனால் அதுதான் நிஜம்.
அமெரிக்காவின் சூறாவளி வரலாறு இப்படியிருக்க கரீபியன் தீவுகளின் வழியே
ராட்ச்ச உருவத்துடன் ப்ளோரிடாவை நெருங்கிக் கொண்டிருந்த இர்மாவை அமெரிக்காவின்
மாபெரும் பேரழிவு என்று குறிப்பிட ஆரம்பித்திருந்தார்கள். பொதுவாகவே சூறாவளிகள்
கடலின் நடுப்பகுதியில் செயல் இழந்து கரையைக் கடக்கும்போது பெருங்காற்றாக மட்டுமே
கடப்பது வழக்கம். ஆனால் இர்மாவோ கரையை நெருங்க நெருங்க வலுவை இழக்காமல் மேலும்
மேலும் வலுவடைந்து வருதாகக் குறிப்பிட ஆரம்பித்தார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.
மேற்சொன்ன இந்த தகவலை எல்லாம் டாலஸ் வாசிகளான நாங்கள் தெரிந்து
வைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் பாருங்கள் ஹரிகேன் இர்மா ப்ளோரிடாவின்
எந்தப் பகுதியை முதலில் கரையைக் கடக்கும் என்று கணித்திருந்தார்களோ, மிகச்சரியாக
அந்தப் பகுதியில்தான் ஊர்சுற்றிக் கொண்டிருந்தோம். நாங்கள் சுற்றிக் கொண்டிருந்த
அந்தப் பகுதியின் பெயர் கீவெஸ்ட். அது குறித்து பின்னொரு நாளில் விளக்கமாக
எழுதுகிறேன்.
மியாமி மற்றும் கீவெஸ்ட் பகுதிகளுக்குச் செல்லும் முந்தைய வாரமே இர்மா
குறித்து கேள்விப்பட்டிருந்த போதிலும், புயல் நிச்சயம் வலு இழந்துவிடும் என்று
நம்பிக்கைக் கொடுத்திருந்தார்கள் வானிலை ஆய்வாளர்கள். அவர்களை நம்பி களத்தில்
இறங்கியது சொதப்பிவிட்டது என்பதை புயலுக்கான வெளியேற்றத்தின் போது உணர்ந்து
கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட இந்தப் புயல் எல்லா விதத்திலும் வானிலை ஆய்வாளர்களை
ஏமாற்றிவிட்டது. அதையும் நாவலில் பதிவு செய்துள்ளார் ஆரூர் பாஸ்கர்.
சூறாவளி எந்த திசையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்த்து
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்திருந்தார்களோ அது அனைத்தையும்
புறக்கணித்துவிட்டு அதற்கு நேர் எதிர் திசையில் பயணித்துப் பெரும் நாசத்தை
ஏற்படுத்திவிட்டுத் தன் வலுவை இழந்தது இர்மா.
ஆனாலும் கீவெஸ்ட் உருக்குலைந்தது நிஜம். தப்பியது தம்புரான்
புண்ணியம்.
*****
இர்மாவின் பொழுது ப்ளோரிடா மாகாண சுற்றுப்பயணத்தில் இருந்த என்னாலேயே
இது குறித்து மிகப்பெரிய கதைகளை எழுத முடியும் என்றால் அங்கேயே பலவருடங்களாக வசித்துவரும்
ஆரூர் பாஸ்கரைப் பற்றிக் கேட்கவா வேண்டும். மேலும் அங்கு வாழ்ந்துவரும் அத்தனை
மக்களையும் இர்மா கரையைக் கடக்கும் முன்னரே மனதளவில் அசைத்துப் பார்த்திருக்கிறது.
ஆரூர் பாஸ்கர் குறிப்பிடும் இந்தத் தகவலின் மூலம் இர்மாவின் வலுவை நம்மால் புரிந்துகொள்ள
முடிகிறது. இதைக் கூறுவதன் காரணம் –சூறாவளி என்பது அந்த நிலத்தில் அவர்கள் ஆரஞ்சு
ஜூஸ் குடிப்பதைப் போல. பழகிய ஒன்றைக் கண்டு யாரேனும் மிரள்வார்களா? ஒருவேளை பழகிய
ஒன்று முன்னெப்போதையும் விட வெறிபிடித்துப் பேய்வேகத்தில் வந்தால்?
இந்த நாவலை அவர் மிகச் சிறப்பாக எழுதுவதற்கான மற்றுமொரு காரணம் அவர்
சார்ந்த பணிச்சூழல். ஒட்டுமொத்த ப்ளோரிடா மாகாணத்தின் மின்பகிர்மான நிறுவனத்தில்
பணிபுரியும் அவர், தன் நாவலின் ஒரு பகுதியாக மனிதனின் மிக அத்தியாவசியத் தேவையான
மின்கட்டுமானம் – இது போன்ற இடர் காலங்களில் எவ்வாறு மறுசீரமைக்கப்படுகிறது
என்பதையும் சேர்த்தே குறிப்பிடுகிறார்.
அந்த ஆறா நாட்கள் என்று குறிப்பிடுவது, தன் வாழ்வில் மிக நேரடியாக
நுழைந்து மனதளவில் மிகவும் நிலைகுலையச் செய்த இர்மா என்ற பெரும் சூறாவளியையும்
அதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்ற நம்பிக்கைக் கதையையும்தான்.
தமிழ் எழுத்தாளர் எழுதிய அமெரிக்கக் கதை என்றளவிலும் இந்த நாவல்
முக்கியத்துவம் பெறுகிறது. காரணம் இந்த வகைமையில் நான் வாசிக்கும் இரண்டாவது நாவல்
இது. அ.மி எழுதிய ஒற்றன் வாசித்திருக்கிறேன் அதில் தன்னை ஒரு பயணியாகப்
பொறுத்தியிருப்பார் அ.மி. இதில் ஆரூர் பாஸ்கர் தன்னை ஒரு பேரழிவின் நேரடி
சாட்சியாகப் பொருத்தி இருக்கிறார்.
பரணி என்கிற மைய கதாபாத்திரம் தன் மனைவியிடம் ஹரிகேன் இர்மா குறித்து
பேசுவதைப் போல் ஒரு பகுதி வரும் “பொண்ணுங்க பேர் வச்சா ஹரிகேன் இன்னும் பயங்கரமா
நாசம் செய்யுமாம்”. மனிதர்களிடம் சிக்கிக்கொண்ட இந்த ஹரிகேனை நினைத்து அழுவதா
சிரிப்பதா என்று தெரியவில்லை. 😊
நாவலின் ஊடாக அமெரிக்க வாழ்க்கையும் பதிவு செய்துகொண்டே வருகிறார்
ஆரூர் பாஸ்கர். அவற்றை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசி இருக்கலாமோ என்று
தோன்றினாலும், ஒருவேளை நான் அமெரிக்கா வராமல் இருந்திருந்தால் அப்படி ஒரு எண்ணம்
ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.
நாவலின் இடையே அவர் சந்தித்த மற்றுமொரு ஹரிஹேன் பற்றிக் குறிப்பிடும்
இடம் அட்டகாசமாக அமைந்துள்ளது. நாவலின் பெருங்குறை முன்பாதி என்றால் பெரும்பலம்
பின்பாதி. நாவலைக் கட்டமைக்கும் ஆரம்ப இடங்களில் சொதப்பிவிட்டாற்போல் தோன்றுகிறது.
அதற்குக் காரணம் வாக்கியக் கட்டமைப்பு. அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நாவலின் ஒவ்வொரு அத்தியாத்தின் ஆரம்பத்திலும் சூறாவளி குறித்த
முன்குறிப்புகளை சேர்த்தது நல்ல யுக்தி. மேலும் எத்தியோப்பிய உணவகம் ஒன்றில் அவர்
சந்திக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் உடனான உரையாடலும், அந்த மனிதர் கூறும்
கறுப்பர்கள் கதையும் அமெரிக்க வரலாற்றின் துன்பப் பக்கங்களை நினைவு கூற்பவை.
எழுத்து பிரச்சுரத்தின் புத்தக வடிவமைப்பு அட்டகாசமாக இருக்கிறது.
லைட் வெயிட். கையில் காற்றைச் சுமப்பதைப் போல் இருக்கிறது. பாண்ட் சைஸ் சிறியதாக
இருப்பது ஒரு குறை என்றாலும் அதுவும் வாசிக்க வாசிக்கப் பழகிவிட்டது.
அந்த ஆறா நாட்கள் – அமெரிக்கா எனும் பெருந்தேசத்தின் வேறொரு
பக்கத்தினை நம்மோடு உரையாடுகிறது. நம்முடைய மொழியில்.
Tweet |
சுய அனுபவத்தோடு இருக்கும் போது புத்தகமும் சுவாரசியம்...
ReplyDelete