7 Nov 2013

சுஜாதாவும் ஜெயமோகனும் தமிழும்


"யாருண்ணே இந்தாளு சுத்த லூசா இருப்பாரு போல, சுஜாதாவ போய் திட்டி எழுதி இருக்காரு..."

சில வருடங்களுக்கு முன்பு சுஜாதா பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருந்த சமயம் கூகிள் மூலம் அறிமுகமானவர் தான் ஜெயமோகன். அவரது தளத்தில் வாசகர் கடிதங்கள் மற்றும் அதற்கான மறுவினை என்று ஒரு பகுதி உண்டு, அதில் சுஜாதா பற்றி தனது வாசகர் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் நேரிடையாக மற்றும் கொஞ்சம் வெளிப்படையாகவே விமர்சித்து எழுதி இருந்தார் ஜெயமோகன். அன்றைய காலகட்டத்தில் சுஜாதா என்பவர் எனக்கு சூப்பர் ஸ்டார் போன்றவர், ஆதர்சநாயகன், இன்றும் அப்படித்தான், ஆனால் அது ஆரம்ப கட்டம் என்பதால் கொஞ்சம் சூடான இள ரத்தம் உடைய சுஜாதா ரசிகன் என்று சொல்லலாம். 

தனது வாசகர்களின் கேள்விகளுக்கு மறுவினையாற்றியிருந்த ஜெயமோகனின் பதில்கள் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை, அவர் சுஜாதாவை விமர்சனம் என்ற போர்வையில் தனது பார்வையைத் தான் பதிவு செய்திருந்தார். இருந்தும் என் சூடான வாசக ரத்தம் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தது, இன்றைக்கும் சுஜாதா குறித்த அவரது பார்வையை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு நான் தயாராயில்லை. சுஜாதாவைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் படித்துவிட்டு என்னுள் எழுத கோவத்தில் அண்ணனிடம் சொன்னேன் "யாருண்ணே இந்தாளு சுத்த லூசா இருப்பாரு போல, சுஜாதாவ போய் திட்டி எழுதி இருக்காரு... "

வழக்கமான தனது புன்னகையை உதிர்த்துவிட்டு என் அண்ணன் என்னிடம் சொன்னான் "அப்டி சொல்லாதல, அவரும் பெரிய எழுத்தாளர் தான், நல்லா எழுதுவாரு...படிச்சிப்பாரு". 

"ஓகோ அதான் சுஜாதா மேல இருக்க பொறாமையில பொங்கிட்டாறு போல.. அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேல" என்றேன் அதே கோவத்தோடு.

"ஜெயமோகன் சொன்னது எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது, ஆனா சுஜாதா பத்தின சில விஷயங்கள் ஏத்துகுற மாதிரி தான் சொல்லிருப்பாரு" என்றான்.

ஒரு நிமிடம் என்னையே என்னால் நம்ப முடியவில்லை. சுஜாதாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்த, என்னை விட அதிகமாய் சுஜாதாவை கொண்டாடுகிற என் அண்ணனா இதை கூறுகிறான் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

"நீயும் யாம்லே லூசுத்தனமா பேசுற, ;அந்தாளு என்ன சொல்றாரு பாரு, சுஜாதா அறிவியல் தமிழையும், நவீன தொழில்நுட்ப அறிவையும் வாசகன்கிட்ட முழுமையா கொண்டு போய் சேர்க்கலையாம், சுஜாதாவ அறிவியல் தமிழ் எழுத்தாளர்ன்னே சொல்ல முடியாதுன்னு எழுதி இருக்காரு"

அவன் எதுவும் பதில் பேசவில்லை, நானே தொடர்ந்தேன் 

"நீயே சொல்லுடே, சுஜாதா ஒரு எழுத்தாளான அறிவியல் தமிழ வாசகன் கிட்ட கொண்டு போலையா, இது தான்யா இன்டர்நெட் இப்படி தான் இது வேல செய்யும், இது தான் ஜீனோ, இப்படி ஒரு ரோபோட் உண்டு, அப்புறம் ஏன் எதற்கு எப்படி, இப்படி தன் எழுத்து மூலமா அறிவியல் அறிவ வாசகனுக்கு தூண்டி விடுற வேலைய மட்டும் தான் ஒரு எழுத்தாளனால செய்ய முடியும், முழுமையா ஒரு அறிவ புகுத்த முற்பட்டா அதுக்கு அவரு பாடப் புத்தகம் தான் எழுதணும் தலைமைச் செயலகம் மாதிரி"

"நீ சொல்றதும் கரெக்ட் தான், அதே நேரம் ஜெயமோகன் சொல்றதும் ஓரளவு கரக்ட் தான், அவரு சொல்றத முழுமையா ஏத்துக்கறதும், ஏத்துக்காம போறதும் உன் விருப்பம், ஆனா ஒண்ணு, ஜெயமோகனையும் படி நல்லா எழுதுவாரு"

அண்ணன் சொன்னால் மிகச் சரியாக இருக்கும், அவனுடைய வாசிப்பனுபவம் என்பது எல்லையற்றது, கொஞ்சம் பரந்துவிரிந்தது. சுஜாதாவின் அத்தனை கதைகளும் அவன் நியுரான்களில் தேங்கிக் கிடக்கின்றன, இதில் முக்கியமான விஷயம் சுஜாதாவின் எந்தவொரு நாவலையும் அவன் ஒருமுறைக்கு மேல் படித்ததில்லை, சமயங்களில் அவன் கூறுகின்ற சுஜாதா தகவல்களை வைத்து தான் நானே இங்கு ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறேன், அப்படிப்பட்ட அவனிடம் ஜெயமோகனைப் பற்றிக் கூறினால் பொங்கி எழுவான் என்று நினைத்த என் நினைப்பிற்கு நேரெதிராக பேசிக்கொண்டிருந்தான். 

என்னதான் அவன் ஜெயமோகனை நல்லவர் வல்லவர் என்றாலும் அவர் மீதான அவர் எழுத்துக்கள் மீதான வெறுப்பு என்பது என்னையறியாமலேயே என்னுள் வளர்ந்துவிட்டது. காரணம் சுஜாதாவை விமர்சிக்க அவர் யார் என்ற ஒரே ஒரு காரணம் தான். பின்னர் ஒருசமயம் அண்ணனின் நண்பன் கணேசன் அண்ணனிடமும் இதே விவாதத்தை முன் வைத்தேன். இவர் விகடனில் மாணவப் பத்திரிக்கையாளராக இருந்தவர், பல சுஜாதா புத்தகங்களை எனக்கு இரவலாக வழங்கியவர். இவரிடம் ஜெயமோகன் குறித்து பேசிய போது ஜெயமோகன் எழுதிய கன்னியாகுமரி என்ற நாவலை என்னிடம் கொடுத்து படி என்றார், ஏனோ தெரியவில்லை அந்த நாவலை நான் தொடக்கூட இல்லை, படிக்காமலேயே திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

"அண்ணனே சொல்றான் அவர் அப்படி என்னதான் எழுதுறாரு" என்ற எண்ணத்தில் சுஜாதா தவிர்த்து அவர் எழுதிய மற்ற கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன். ஆகச்சிறந்த அவதானிப்புகள் அடங்கிய இலக்கிய நடை! எனக்கு இவ்விடம் தான் பரிட்ச்சியமானது. எளிதில் புரிபடவில்லை, விளங்கவுமில்லை. ஒருமுறைக்கு இருமுறை வாசித்தாலும் வாசிப்பு என்பது கடினமாகவே இருந்தது.

"என்னல எழுதுறாரு இந்தாளு... ஒன்னும் புரிய மாட்டேங்குது" என்று சலித்துக் கொண்டேன்.

அவன் கூறினான் ஒருகாலத்தில் இதுபோன்ற இலக்கியம் ததும்பும் புத்தகங்கள் மட்டும் தான் அதிகம் உண்டு, ஜெயமோகன் போன்றவர்கள் தங்களை சுந்தர ராமசாமியின் பட்டறையில் இருந்து வந்தவர்களாக அறிமுகம் செய்து கொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே எளிதில் புரியும் தமிழ் இது. என்றபடி என்னிடம் மற்றொரு கேள்வி கேட்டான்,

"சரி சாருவோட ஜீரோ டிகிரி வாங்கிட்டு வந்தனே படிச்சியா"

"போண்ணே நீயும் உன் புக்கும், என்னால ஒரு பக்கத்த கூட தாண்ட முடியல, புக்கா அது.." 

"என்னாலையும் வாசிக்க முடியல தான், ஆனா அந்த புக்க கொண்டாடுறதுக்கும் ஒரு பெரிய கூட்டம் இருக்கு தெரியுமா?"

"சரி இவங்க ஏன் இப்படி எழுதுறாங்க"

"அதான் சொன்னேனே, அந்த காலத்துல தமிழ்ல பலபேர் இப்படி தான் எழுதினாங்க, இதையெல்லாம் உடச்சு தமிழ் புத்தக உலகத்துல பெரிய மாற்றம் கொண்டுவந்தவர் தான் சுஜாதா, சாதாரண படிப்பறிவு இருக்கவன் கூட சுஜாதவ விரும்பிப் படிக்கும் படியா எழுத ஆரம்பிச்சாரு, அதே நேரம் ஜெயமோகன் மாதிரி எழுதுறவங்களும் தமிழுக்கு வேணும், அது வேற ஸ்டைல், இது வேற ஸ்டைல்" என்றான். அதன் பிறகு நானும் ஜெயமோகனை மறந்தே போய்விட்டேன். நான் கடவுளுக்கு ஜெயமோகன் தான் வசனம் என்பது கூட அண்ணன் சொல்லி தான் தெரியும். 

ஆறு மாதங்களுக்கு முன்பு அரசன் என்னிடம் இரண்டு புத்தகங்களைக் கொடுத்து "தலைவரே இந்த புக்ஸ படிங்க ரொம்ப அருமையா இருக்கும், நீங்க கண்டிப்பா படிக்க வேண்டிய புத்தகம்" என்றார்.

"ஒன்று வேலராம மூர்த்தியின் கதைகள், மற்றொன்று ஜெயமோகனின் அறம்". 

அரசன் புத்தகத்தை என்னிடம் கொடுக்கும் பொழுது வாத்தியார் அருகில் தான் இருந்தார். அவர் அறம் புத்தகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு 'யானை டாக்டர் படி ராசா ரொம்ப நல்லா இருக்கும்' என்றார்.

எனக்கு யானையையும் பிடிக்கும், காடுகளையும் பிடிக்கும். போதாக் குறைக்கு வாத்தியாரும் யானை டாக்டரை பரிந்துரைத்துவிட்டார். இருந்தாலும் இப்புத்தகத்தைப் படிக்க ஒரு சிறு தயக்கம், எழுதியது ஜெமோவாயிற்றே. இருந்தாலும் ஒரு சிறிய தயக்கத்திற்கு பின் யானை டாக்டரை படிக்கத் தொடங்கினேன். யானை டாக்டரின் முதல் பக்கத்திலேயே // எண்ணங்கள்மேல் மணல்சரிந்து மூட ஆரம்பிக்க நான் என்னை இழப்பதன் கடைசி புல்நுனியில் நின்று மேலே தாவ உடலால் வெட்டவெளியை துழாவிக்கொண்டிருந்தபோது மீண்டும் அழைப்பு.// என்று ஒரு வரியை எழுதி இருப்பார்... ஷப்பா சத்தியமா முடியல, இப்பொழுது கூட இதன் அர்த்தத்தை யாராவது விளக்கினால் நலம். இருந்தும் இது போன்ற சவாலான வார்த்தைக் கோர்வைகள், மிகச் சரியாக சொல்வது என்றால் ஒரு எழுத்தாளனின் எண்ணக் கோர்வைகள் நிறைந்த ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது புதுமையான வாசிப்பனுபவமாகவே இருந்தது. 

யானை டாக்டர் கொடுத்த உற்சாகம் அறத்தில் இருக்கும் அத்தனை கதைகளையும் உடனே படித்து முடிக்கும் படி என்னை அவசரபடுத்தியது. இங்கே தான் சுஜாதாவின் தமிழும் ஜெயமோகனின் தமிழும் வேறுபடுவதை நான் உணர்ந்தேன். சுஜாதாவின் தமிழ் ஜெட் வேகத்தில் வாசித்தாலும் சுவாரசியம் குறையாது நம்மை தொடர்ந்து வாசிக்கச் சொல்லும், ஜெயமோகனின் தமிழ் நம்மை வேகமாகக் கூட நடக்க விடாது, நிதானமாக பொறுமையாக படித்தால் மட்டுமே அதன் சுவையை தெள்ளத்தெளிவாக உணர முடியும். அவசரகோலத்தில் படித்த பல சுஜாதா கதைகளை நான் மறந்ததுண்டு, ஆனால் அறம் புத்தகத்தில் இருக்கும் அத்தனை கதைகளும் அப்படியே நியாபகத்தில் நிற்கின்றன. 

நூறுநாற்காலிகள் கதை படிக்கும் பொழுது தீண்டத்தகாத நாயாடி சமுதாயத்தை சேர்ந்த நாயகனின் உலகம் என்னையும் அறியாமல் என்னுள் ஒருவித பாரத்தை ஏற்படுத்தி என்னை அழுத்திக் கொண்டே இருந்தது. பெருவலியில் கோமல் தனக்கு வந்த வலியை எப்படி வர்ணிப்பார் என்றால் கை சுண்டுவிரலை கதவிடுக்கில் வைத்து மெல்ல நசுக்கினால் எப்படி ஒரு வலி ஏற்படுமோ அப்படி உணருகிறேன் என்பார், இப்போது நினைத்தாலும் ஜெயமோகனின் எழுத்து அந்த வலியை எனது சுண்டு விரலிலும் ஏற்படுத்திச் செல்கிறது.

சமீபத்தில் அவரது இணையத்தில் தான் சென்ற இமயமலைப் பயணத்தை நூறு நிலங்களின் மலைகள் என்ற தலைப்பில் பயணக்கட்டுரையாக எழுதினார், ஒரு பயணக் கட்டுரை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுரை அது, இமயத்தில் தான் உலா வந்த ஒவ்வொரு பகுதிகளின் வரலாற்று சிறப்புகளையும் அதன் பின்னணிகளையும் சுருக்கமாக இணைத்திருப்பார். சமீப காலத்தில் என் மனம் கவர்ந்த, நான் பெரிதும் விரும்பிப் படிக்கும் ஒரு எழுத்தாளர் என்றால் அது நிச்சயம் அது ஜெயமோகன் தான்.   

கடந்த மாதம் தி.இந்துவில் வணிக நோக்கத்துடன் எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார், அதிகம் கவனம் ஈர்த்த கட்டுரை அது, அதைத் தான் சுஜாதா எப்போதோ செய்துகாட்டிவிட்டு சென்றுவிட்டார். சமீபத்தில் தங்கிலிஷ் பற்றிய ஜெமோவின் கட்டுரை மிகபெரிய தமிழ் அலையை இணையம் எங்கும் வீசிவருகிறது. 

ஜெமோ ஏன் அப்படி ஒரு கட்டுரையை எழுதினார், ஜெமோ கூறியது சரியா இல்லை மனப்பிறழ்வா, நாயரா, மலையாளியா என்றெல்லாம் விவாதம் செய்யும் அளவிற்கு எனக்கு தமிழ்ப்புலமை கிடையாது. ஆனால் என் சுயபுத்தி என்ன சொல்கிறது என்றால் எப்படி ஜெமோவின் சுஜாதா பற்றிய விமர்சனங்களை எப்படி நான் மதிக்கப் போவதில்லையோ,என் மனதில் ஏற்றிக்கொள்ளப் போவதில்லையோ அதே போல் இதையும் ஒரு மொக்கை கட்டுரையாக ஒதுக்கிவிட்டு அவரிடம் இருந்து வெளிபடப்போகும் அடுத்த நல்ல கட்டுரைக்காக காத்திருக்கப் போகிறேன். 

ஒருவேளை ஜெயமோகன் எழுதிய அந்த கட்டுரையின் மூலம் தமிழ் எழுச்சி அலை வானுயர வளர்ந்து தமிழுக்கு தமிழருக்கு நல்லது நடக்கப் போகிறது என்றால் மகிழ்ச்சியே, அதே நேரம் அந்த ஒரு கட்டுரை தமிழையே தமிழின் வரி வடிவத்தையே அழித்துவிடும் என்றளவில் பேசித்திரிபவர்களுக்கு இக்கட்டுரையின் இதற்கு முந்தைய பாராவின் இரண்டாவது வரியை சமர்ப்பிக்கிறேன்.   

58 comments:

  1. நல்ல பார்வை. இதுதான் ஒரு நல்ல வாசகனுக்கு இருக்க வேண்டிய தகுதி. எங்கள் கடன் படித்துக் கிடப்பதே!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சூப்பர் சார்

      Delete
  2. த.ம இதுவரை 'சப்மிட்' ஆகவில்லை என்பதால் வாக்களிக்கவில்லை!

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மணத்துல என்னவோ கோளாறு ஸ்ரீராம்! பதிவை சப்மிட் பண்ணினா ஏத்துக்க மாட்டேங்குது. அதான் சீனுவும் சலிச்சுப் போய் விட்டுட்டாரு போல...!

      Delete
    2. சிறிது நேரம் பிரச்சனை இருந்தது, காலையில் சரியாகிவிட்டது, இருந்தாலும் என்னை வோட்டு போட்டு என்னை முதல் தரம் கொண்டுவர போராடும் உங்களுக்கு மிக்க நன்றி :-))))))))))))))

      Delete
  3. The Hindu என்பதை 'தி இந்து ' என தமிழில் மொழிபெயர்த்த பத்திரிகையில் எழுதுபவரின் சிந்தனை பிறகு எப்படி இருக்கும்...? இவரது புத்தகங்கள் சரியாக விற்பனையாகவில்லை என்றால் கடைநிலை தமிழனும் படித்துப் புரிந்துகொள்ளும் படி இவரது எழுத்து நடையை மாற்றிக்கொள்ளவேண்டும். சுஜாதா புத்தகங்கள் ஆயிரகணக்கான பிரதிகள் விற்பனையாகவில்லையா..? நீயா நானா கோபியின் புத்தகம் லட்சம் பிரதிகள் தாண்டி விற்க வில்லையா..? முதலில் எழுத்துருவுக்கும் வரி வடிவத்திற்கும் வித்தியாசம் என்ன என்பதை அவர் புரிந்துகொள்ளட்டும்..

    ReplyDelete
    Replies

    1. மிக சரியான கருத்து மணிமாறன்

      Delete
    2. மணிமாறன் சார் வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா ஜெயமோகன் புத்தகம் படிங்க சார்.. அது ஒரு வித்தியாசமான களம்... கொஞ்சம் ஆரோக்கியமான களமும் கூட :-)))))))

      Delete
    3. "மணிமாறன் சார் வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா ஜெயமோகன் புத்தகம் படிங்க சார்.. "

      மணிமாறன் ஜெமோவின் புத்தகங்களை படிக்கவில்லை என்று எப்போது சொன்னார். உங்களை விட அதிகமாக அவரது புத்தகங்களை படித்திருக்கின்றோம். தங்க ஊசி என்பதற்க்காக கண்ணை குத்தி கொள்ள முடியாது

      BABU SIVA

      Delete
    4. மணிமாறன் சார் என்ன மன்னிச்சு.. இந்த விசயம் எனக்கு தெரியாமா போச்சே ...


      Delete
  4. //கூகிள் மூலம் அறிமுகமானவர் தான் ஜெயமோகன். // ஹி...ஹி...

    ReplyDelete
    Replies
    1. ஒரிருதடவை ஜெயமோகனின் தளம் சென்றதுண்டு ஆரம்பமே ரம்பமாக இருந்ததால் அதன் பின் அந்த பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை

      Delete
    2. தூக்ககத்தை கட்டுபடுத்தி படித்தால் தூக்கம் இழக்கச் செய்யும் வலிமை அவரின் சில கதைகளுக்கு உண்டு மதுரை ஜீ :-)))))

      Delete
    3. :) அப்படியா ம்ம் முயற்சிக்கிறேன்

      Delete
  5. நல்ல சொல்லியிருக்கிறீங்க குரு

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... சீனு குரு...! குருநாதரா உயர்ந்துட்டதுக்கு வாழ்த்துக்கள் தம்பீ!

      Delete
    2. வாத்தியாரே ஆத்மா தான் என்ன ஓட்ராருருன்னா நீங்களுமா... மீ பாவம்.. மீ எஸ்கேப் :-0)))))))))

      Delete
  6. நான் ஆயாள் எழுதின எல்லாக கதையையும் படிச்சதில்ல... ஒண்ணு ரெண்டுதான். சிலசமயங்கள்ல தூக்கம் வரவழைக்கிற ஆசாமியாத்தான் அவர் எனக்கு இருந்திருக்காரு. முன்பொரு முறை இதே ஜெ.மோ. ‘தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி கிடையாது’ என்று திருவாய் மலர்ந்தருளினார். ரொம்பப் பேரும் புகழும் வந்துட்டவங்க அப்பப்ப இப்படி லூஸுத்தனமா உளர்றது சகஜம்தான்.

    ReplyDelete
    Replies
    1. //ரொம்பப் பேரும் புகழும் வந்துட்டவங்க அப்பப்ப இப்படி லூஸுத்தனமா உளர்றது சகஜம்தான்.// அது என்னாவோ உண்மை தான் வாத்தியாரே.. ஆனாலும் ஒரு எழுத்தாளனை எழுத்தாளானக பார்க்கமால் அவனை பூஜிக்கும் கூட்டம் இங்கே பல்கிபெருகியதால் வந்த வினை...

      Delete
  7. நடுநிலை விமர்சனம்... நான் இது வரை ஜெயமோகன் எழுதிய எந்தக் கதையையும் படித்ததில்லை... படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் வந்ததில்லை.... முதல் முறை படிப்பதற்கு நல்ல புத்தகம் பரிந்துரை செய்யவும்....

    ReplyDelete
    Replies
    1. யானை டாக்டர், நூறு நாற்காலிகள், பெருவலி படியுங்கள்... நூருநிலங்களின் மலை படியுங்கள்... இவை அனைத்துமே அற்புதமாக இருக்கும்

      Delete
  8. ஆயாளா? கெட்ட வார்த்தையா கணேஷ்?

    ReplyDelete
  9. நல்ல விமர்சனம் சீனு....

    சுஜாதாவிற்கு ஒரு இடம் என்றால் ஜெமோவுக்கும் ஒரு இடம்..... பிடித்ததைப் படிப்போம்.... பிடிக்காததை விடுவோம்! :)

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் வெங்கட் சார்

      Delete
  10. யார் ஜெயமோகன்?
    சுஜாதாவைத் திட்டினவர் என்பதால் நாலு பேர் கவனித்தார்கள். மிச்ச ரெண்டு பேர் கடல் பார்த்த திகிலில் கவனித்தார்கள்.
    நிற்க, உக்காந்தாலும் சரிதான், எழுத்தை வணிகமாக்கியவர்களில் மேல்தட்டுக்காரர் சுஜாதா. காசுக்காகவும் தன் ரசிகர்களுக்காகவும் எதை வேண்டுமானாலும் எழுதியவர். எழுத்து வியாபாரி. இதில் சுஜாதாவுக்கு இருக்கும் பங்கு பத்திரிகைக்காரர்களுக்கும் குறிப்பாக வாசக விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் உண்டு. த்மிழினி மெல்லச்சாகும்னு ஒலிபெருக்கிய அவரை தமிழ் வளர்க்கலேனு சொல்லி என்ன ஆகப்போவுது?

    ReplyDelete
    Replies
    1. அப்பா சார் கடைசில என்னையும் விசிலடிச்சான் குஞ்சுன்னு சொல்லிட்டீங்க :-)))))) என்ன பண்றது சுஜாதாவ யாரு எப்படி திட்டினாலும் அவர 0.1% கூட வெறுக்க முடியலியே :-))))))))))

      Delete
    2. சுஜாதாவை வணிக விரும்பினு சொன்னா திட்டுறதா அர்த்தமில்லை. வாசகர் விருப்பத்துக்கு எழுதுனதால் தான் அவர் சூபர் ஸ்டார் ஆனார்.
      பத்து நிமிடமாவது சலிக்காமல் படிக்குறாப்புல முதலில் ஜெயமோகன் எழுதக் கற்கட்டும் என்று தான் அவர் எழுத்தைப் படிக்க நேரும் போதெல்லாம் தனது.

      Delete
  11. ஜெமோ எழுதினத படிக்கலாமா வேண்டாமான்னு ஜெமோ ஸ்டைல்ல எழுதாம சுஜாதா ஸ்டைல்ல எழுதி எங்களுக்கு புரிய வச்ச சீனுவுக்கு ஒரு "ஓ"

    ReplyDelete
    Replies
    1. இது ஆவி ஸ்டைல் ஆஆஆஆ :-))))))))

      Delete
  12. தமிழில் தேர்ந்த எழுத்தாளராகக் காட்டிக் கொள்ளும் ஜெயமோகன், எதோ சரக்கடித்துக் கிறுக்கியது போல் எழுதியதையும் தி இந்துவினர் வெளியிட்டு வாங்கிக் கட்டியுள்ளனர். ஐயா எழுதியது போல அவரின் பதிவில் உள்ள அபத்தங்களை எளிமையாக விளக்கியுள்ளீர்கள். அவற்றை விவரணமாய் விளக்க முடிவு செய்துள்ளேன். முதற்கட்டமாய் இன்றைய பதிவில் சிலவற்றை எடுத்து வைத்துள்ளேன் அடுத்த பதிவில் மேலும் சிலவற்றை விளக்கமளிக்க உள்ளேன், வாசித்து நிறை குறைகளை அறியத்தரவும். நன்றிகள்!

    ReplyDelete
    Replies

    1. //தமிழில் தேர்ந்த எழுத்தாளராகக் காட்டிக் கொள்ளும் ஜெயமோகன்,// காட்டிக் கொள்ளுமா, அப்போ அவரு தேர்ந்த எழுத்தாளர் இல்லையா :-))))))))

      Delete
    2. என் கணிப்பில் இல்லை.

      Delete
  13. எங்க பாஸு மோன நிலையில ஒக்காந்து எழுதியிருக்கார்வோய்!

    #இதப் பத்தி விவாதிக்க ஒண்ணுமில்லவோய். சென்னை புத்தகக் கண்காட்சில அவரு பத்து புஸ்தகம்கிட்ட போடுறதா கேள்வி. அதுக்கு ஒரு வெளம்பரம். அம்புட்டுத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மகா தியானம் அதிகமாயிருக்குமோ :-)))))))

      Delete
  14. ஜெயமோகனின் விஷ்னுபுரம் நாவல் புகழ்பெற்றது. ஆனால் படித்ததில்லை.யானை டாக்டர்மட்டும் படித்திருக்கிறேன். இணைய அறிமுகத்திற்கு பின்னர் ஜெயமோகனின் காந்தி பற்றிய கட்டுரைகள் என்னை பெரிதும் கவர்ந்தது. சுஜாதா பற்றிய அவரது எண்ணங்களின் மீது எனக்கு உடன்பாடில்லை.சுஜாதாவின் வீட்டிற்கு அவர் ஒரு முறை சென்றிருந்த போது உடல் முழுதும் நாமம் போட்டுக் கொண்டிருந்தாராம். அதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்து விமர்சித்தது ஜெயமோகன் மீதான மதிப்பை சற்று குறைக்கவே செய்தது. ஹிந்து அவரது இந்த கட்டுரையை எப்படி வெளியிட்டது என்று தெரிய வில்லை.

    ReplyDelete
    Replies
    1. விஷ்ணுபுரம் புத்தகத்தையும் புத்தக விலையையும் பார்த்த போது இப்போதைக்குள் என்னால் மட்டும் தெளிவாக தெரிந்தது... என்றாவது வாய்ப்பு கிடைத்தால் படிக்க வேண்டும்...

      //ஹிந்து அவரது இந்த கட்டுரையை எப்படி வெளியிட்டது என்று தெரிய வில்லை.// ஹா ஹா ஹா

      Delete
  15. // எண்ணங்கள்மேல் மணல்சரிந்து மூட ஆரம்பிக்க நான் என்னை இழப்பதன் கடைசி புல்நுனியில் நின்று மேலே தாவ உடலால் வெட்டவெளியை துழாவிக்கொண்டிருந்தபோது மீண்டும் அழைப்பு.//
    ஐயையோ!
    பயமுறுத்துகிறீர்களே! இப்படி எழுதினால் எப்படிப் புரியும்.
    இவர் கட்டுரைகளில் தமிழ், தமிழர் என்பது சற்று கேலிக்குரியவை என்ற உணர்வுடனே எழுதுவார்.தமிழிலேயே எழுதும் துணிச்சல்காரர்.
    சிவாஜிக்கு நடிக்கத் தெரியாதெனக் கூட கூறியுள்ளார்.
    இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டத்தையும் கூட்டி வைத்துள்ள கெட்டிக்காரர்.
    ஆனாலும் இந்த மேதாவிகள் எல்லோரும் , எல்லாவற்றுக்கும் கருத்துக்கூறி தங்களை அதி மேதாவிகளாகக் காட்டி ஏன் தான் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.
    இந்தியாவில் தமிழ்நாட்டில் மாத்திரம் தான் இப்படியாக கூத்துக்கள் நடக்கும் போல் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. //ஐயையோ!
      பயமுறுத்துகிறீர்களே! இப்படி எழுதினால் எப்படிப் புரியும்.// எனக்கும் அதே பிரச்சனை தான் :-))))))

      // எல்லாவற்றுக்கும் கருத்துக்கூறி தங்களை அதி மேதாவிகளாகக் காட்டி ஏன் தான் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.// அவர் கொஞ்சம் மேதாவி தான் சமயங்களில் அதிமேதாவியாக காட்டிக்கொள்கிறார் :-)))))

      Delete
  16. நானும் உங்கள் மனநிலையில்தான் இருந்தேன்!! மிக அருமையாக எழுதியுள்ளிர்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சலீம்

      Delete
  17. ஜெய மோகனின் கதை ஒன்றை குமுதமோ விகடனிலோ ரொம்ப நாள் முந்தி படித்து புரியாமல் விட்டு விட்டேன்! தமிழ் வரி வடிவம் குறித்த கட்டுரையும் படிக்க வில்லை! அது அவர் கருத்தாக இருந்துவிட்டு போகட்டும்! இது போன்ற லூசுத்தனமான உளறல்களை ஏன் கண்டுகொள்ள வேண்டும்? விட்டுத்தள்ளுவோம்! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு கிடைத்தால் பொறுமையாக படித்துப் பாருங்கள், என்னவொன்று அவரது பதிவுகளை பொறுமையாக மட்டுமே படிக்க முடியும் என்பதால் பொறுமை நமக்கு அவசியம் தேவை :-))))))

      Delete
  18. இன்னும் ரெண்டு பக்கம் எழுதி இருக்கலாம்.......

    ReplyDelete
    Replies
    1. உங்கள் குறியீடு புரிகிறதுன்னே... இனி கண்டிப்பா மூணு பக்கத்த கொறச்சி எழுதுறேன், சந்தோசமா ஹா ஹா ஹா :-))))))

      Delete
  19. ஜெயமோவன் பத்தி என்ன விமர்சிச்சாலும், "சு"னா னு சொல்லிக்கிட்டு ஒரு அடியாள் மாறுவேடத்தில் வந்த "அந்தாளு" சொல்றதெல்லாமே சரினு ஒளறுவானே? அவனை எங்கே இன்னும் காணோம்?

    எனக்குத் தெரிய பதிவுலகில் இருக்கும் பெரிய தமிழ் பேராசிரியை எம் எ சுசிலா கூட ஜயமோஹன் புகழ் பாடுவதைத்தவிர வேறெதுவும் செய்யவில்லை. இந்தாளு செய்ற அருவருப்பான செய்லகளை எடுத்துச் சொல்ல எந்தத் தமிழ் அறிஞர்களுக்கும் வக்கில்லை! அந்தாளச் சொல்லி என்ன செய்ய?

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ற அந்த //"சு"னா// யாருன்னு எனக்கு தெரியலியே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      Delete
    2. புதிர் போடுறீங்களே வருண்?

      Delete
  20. ஒரு வகையில் பார்த்தால், அந்தாளு சுஜாதாவை விமர்சிச்சது நல்லதாப் போச்சு! அதனாலதான் இன்னைக்கு சுஜாதாவின் பரம விசிறிகள் எல்லாம் ஜெயமோகன் உளறல்களையெல்லாம் கவனிச்சுப் பார்க்க ஆரம்பிச்சு இருக்கா!

    என்ன இப்போ ஜெயமோஹனை உங்களோட சேர்ந்து நாங்களும் விமர்சிச்சா, "சுஜாதா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்.. அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டை விமர்சிக்க எவனுக்கும் தகுதியில்லை" னு நாங்களும் சுஜாதாவின் விசிறிகளுடன் சேர்ந்து ஏற்றுக்கொண்டமாரி ஒரு தர்மசங்கடம் உருவாகுகிறது..

    ReplyDelete
    Replies
    1. //சுஜாதா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்.. அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டை விமர்சிக்க எவனுக்கும் தகுதியில்லை// அப்போ அது உணமையில்லையா ஹா ஹா ஹா Cooooooooooool :-))))))))))

      Delete
  21. ம்ம் ..விஸ்னூபுரம் அவர் இப்படித்தான்!

    ReplyDelete
    Replies
    1. அவரே தான் அவரே தான் :-)))))))

      Delete
  22. . தங்க ஊசி என்பதற்க்காக கண்ணை குத்தி கொள்ள முடியாது

    ReplyDelete
  23. ஜெயமோகனின் புத்தகங்களை இதுவரை வாசித்ததில்லை..முயற்சிக்கிறேன்...

    ReplyDelete
  24. ம்ம்... காத்திருங்கள் அடுத்ததையாச்சும் நல்லதாக தர கடவுளைப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  25. வணக்கம் நண்பரே..
    தீவிர வாசிப்பில் பிறந்த அற்புதமானக் கட்டுரை. அத்தனை வரிகளையும் ரசித்து படித்தேன். இனி மேல் தான் ஜெயமோகன் படைப்புகளைப் படிக்க வேண்டும். நல்லவற்றை வடிகட்டி படிக்கச் சொல்லிய தங்கள் கட்டுரைக்கு எனது நன்றிகள் நண்பரே. தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  26. //அதே போல் இதையும் ஒரு மொக்கை கட்டுரையாக ஒதுக்கிவிட்டு அவரிடம் இருந்து வெளிபடப்போகும் அடுத்த நல்ல கட்டுரைக்காக காத்திருக்கப் போகிறேன். // நல்ல அப்ரோச் .இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு. ஜெ.மொ வ நம்பி படிக்கலாம்னு நம்பிக்கை தந்த சீனூ அண்ணா !! நீர் வாழ்க !!

    ReplyDelete