21 Jul 2012

ஆடிவெள்ளி : சென்னை : ஈ வெ ரா


ப்பதிவை சகோதரி சசிகலாவும் தோழி நிரஞ்சனாவும் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆடி வெள்ளி தொடர் பதிவாகவும் கொள்ளலாம், சென்னையைப் பற்றி தொடர்ந்து  எழுதி வருவதால் சென்னையைப் பற்றிய  எனது  மற்றொரு பதிவாகவும் கொள்ளலாம்.   

சென்னையில் எதுவுமே கொஞ்சம் அதிகம் தான் அது வானிலையாக இருந்தாலும் சரி மக்களின் மனநிலையாக இருந்தாலும் சரி. வெயில் பனி மழை எல்லாமே அதிகம். அதுபோல் கண்மூடித்தனமான பக்தியும் இங்கு அதிகம்.  இதனை எனது சென்ற பதிவான சென்னையில் ஓர் ஆன்மீக உலாஎன்ற பதிவில் கூறி இருந்தேன், அதையே இங்கு மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கூறுகிறேன். ஆடி பற்றிய தொடர் பதிவு. ஆடி என்றால் ஆன்மீகம் இல்லாமல் எப்படி! எனது ஊரில் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி அன்று மட்டும் தான் சிறப்பு பூஜை செய்வார்கள் கூழ் ஊத்துவார்கள். சென்னையிலோ அப்படி இல்லை தினம் தினம் இவர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆயிரம் முகமுடையாளின் பாடல்களை அலற விட்டுக் கொண்டு இவர்கள் படுத்தும் பாட்டை சொல்லிமாளாது. 

ஆடி மாதம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் மாதம். வெயில், காற்று இரண்டுமே அதிகம் இருக்கும். மழையும் நினைத்த நேரங்களில் எல்லாம் பெய்யும். சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் பரவும் நோய்களுக்கும் குறைவே இல்லை. பெரியவர்களிடம் கேட்டுப் பாருங்கள் ஆடி மாதம் பிரசவித்த தாய்க்கும், பிறக்கும் குழந்தைக்கும் கவனிப்புகள் விஷேசமாக இருக்கும், தொற்றுவியாதி பரவும் காலம் என்பதால் அவர்களிடம் யாரையும் அண்ட விட மாட்டர்கள். மேலும் யாருக்கும் வியாதிகள் பரவக் கூடாது என்பதற்காகத் தான் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவார்கள். கூழ் உடம்பிற்கு குளிர்ச்சி, வேப்பிலை கிருமி நாசினி. கவனித்துப் பாருங்கள் அம்மன் கோவில்களில் கூழுடன் வேப்பிலையும் சேர்த்துக் கொடுப்பார்கள். நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்கள் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான் அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான். 

றை வழிபாட்டில் நாம் செய்யும் ஒவ்வொன்றின் பின்னும் கலாச்சாரம் இருக்கும் மகிமை இருக்கும் மருத்துவம் இருக்கும். சுருங்கச் சொன்னால் உளவியலின் மறு உருவமாக இறைவழிபாடு இருக்கும். இதே போல் எனக்குத் தெரிந்த மற்றொன்று, மார்கழி மாதம் வாயு சுத்திகரிப்பு நடை பெறுவதால், அதிகாலையில் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வெகு சுத்தமாக இருக்கும். அதனால் தான் மார்கழி அதிகாலையில் திருப்பாவை திருவெம்பாவை பஜனைகள் நடைபெறும். இதில் ஆண்கள் மட்டுமே பங்குபெறுவார்கள். சரி ஆண்களுக்கு சுத்தமான ஆக்சிஜன் கிடைக்க வழி செய்தாயிற்று பெண்களுக்கு! மார்கழி அதிகாலையில் மட்டும் அவளவு பொறுமையாக நிதானமாக பெரியதாக கோலம் போடுகிறார்களே ஏன்? வீட்டை அழகுபடுத்த இல்லை.அவர்களும் அந்த ஆக்சிஜனை உட்கொள்ள வேண்டும் என்பதக்காகத் தான் இத்தனையும். சென்னையில் நிலைமை வேறு,  மார்கழியில் இங்கு அளவிற்கு அதிகமான பனி விழும் என்பதால் முந்தின நாள் இரவே கோலம் போட்டு விட்டு  தூங்கிவிடுவார்கள். இங்கெல்லாம் மார்கழி பஜனை நான் பார்த்தது கிடையாது. ஒரு பதிவில் அத்தனையையும் சொல்லிவிட முடியாது. இனி சென்னைக்கு வருகிறேன்.

ங்கே எல்லாமே தலைகீழ். கருத்துக்களை அப்படியே தவறாக எடுத்துக் கொள்வதில் இவர்களை மிஞ்ச முடியாது. பக்கத்துப் பக்கத்து கோவில்களில் அடுத்து அடுத்து இருக்கும் கோவில்களில் இத்தனை ஆர்பாட்டமாக கூழ் ஊட்ற வேண்டும் சத்தமாக பாடல் ஒலிக்க விட வேண்டும் என்று அம்மன் சொல்லவில்லை, அவன் செய்கிறான் நானும் செய்வேன் என்ற போட்டி மனப்பான்மை தான் காரணம். தெய்வத்தின் பெயரால் மனிதன் சண்டை போட்டுக் கொண்டால் மூடநம்பிக்கையில் வீழ்ந்தால் அதற்க்கு தெய்வம் என்ன செய்யும். கடவுள் பற்றிய சரியான புரிதல் இல்லாததே இத்தனைக்கும் காரணம். கிறஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் முறையாக அவர்கள் மதம் போதிக்கப்படுகிறது. அவர்கள் இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு இந்துவால் முடிந்ததா. தேவாரமும் திவ்யப்பிரபந்தமும் திருவாசகமும் பிறந்த இம்மண்ணிலே  ஏன் சமகாலத்தில் எவ்வித நூல்களும் இயற்றப்படவில்லை. எனது முந்தைய தலைமுறைக்கே இவையெல்லாம் தெரியாத போது நான் யாரிடம் போய் கற்றுக் கொள்வேன். பாட்டி கதைகள் அழிந்து, கை வைத்தியம் அழிந்து, சித்த மருத்துவ நூல்களை அழித்து, சுகமான மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழும் இந்துவிற்கு எப்படி அத்தனையும் புரியும்.

புரிந்து கொள்ளமாட்டான். தெய்வம் என்ற பெயரிலே கண்மூடித்தனமாக எதாவது செய்து கொண்டுதான் இருப்பான். கடந்த இரு தலைமுறையினரை திருத்த முடியாது, வரப் போகும் சந்த்தயினரை திருத்த வழிகாட்டிகள் கிடையாது. பின் ஏன் நித்தியானந்தாக்களும் பிரேமானந்தாகளும் நடமாட மாட்டார்கள். கோவில்கள் மேல் குற்றம் சுமத்தாதீர்கள் கோவில்களை பராமரிப்பவன் மேல் குற்றம் சுமத்துங்கள், கோவில்களைக் கொண்டு கொள்ளை அடிபவர்கள் மீது குற்றம் சுமத்துங்கள். கோவில்களை வியாபார ஸ்தலமாக்கும் கயவர்கள் மீது குற்றம் சுமத்துங்கள். தன் வசதிக்காக தெருவிற்கு கோவில்கட்டும் முட்டாள்கள் மீது குற்றம் சுமத்துங்கள். தெய்வங்களின் மீதும் கலாச்சாரத்தின் குற்றம் சுமத்தாதீர்கள். கோவில்கள் கலாச்சாரத்தின் அடையாளம். 

நாத்திகர்கள் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லுபவர்கள் எளிதில் கேட்கும் ஒரு கேள்வி கடவுளை நீ பார்திருகிறாயா? பார்த்திருந்தால் என் கண் முன் காட்டு நான் நம்புகிறேன். ஒத்துக் கொள்கிறேன் கடவுளை என்னால் காட்ட முடியாது தான். ஆனால் என்னால் உணர முடியும். நான் உணரும் அதிர்வுகளை என்னால் அனுபவிக்க முடியும் கேள்வி கேட்க்கும் உன்னால்  எப்படி அதனை அனுபவிக்க முடியும். ஒருவரின் உணர்சிகள மற்றவர்கள் மீது திணிக்கக் கூட முடியாது, இதை உணராதவர்கள் பெயர் பகுத்தறிவாளர்கலாம். 

யத்தின் மறு உருவம் கடவுள் என்று வைரமுத்து சொல்கிறார், சொல்லிவிட்டுப் போகட்டும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே என்று கூறி ரௌத்திரம் பழகச் சொன்ன என்கவி பாரதி ஒரு ஆத்திகன், கண்ணனின் காதலன், காளியின் தீவிர பக்தன். காளியைத் தான் கண்டதாக் கூறுபவன்.விவேகானந்தரும்  பரமகம்சரும் கூட தேவியை தரிசித்துள்ளார்கள் முக்கயமான விஷயம் இவர்கள் யாரும் தாம் கண்ட தெய்வத்திற்கு உரு கொடுக்க வில்லை. வள்ளலாரும் ஒளி வடிவிலேயே இறைவனை தெரிசிதுள்ளர்.       

இனி பெரியார் 

.
தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் என்று ஏழாம் வகுப்பு உரைநடையில் தமிழ்நாடு அரசு இவரை ஒரு வைக்கம் வீரராக அறிமுகம் செய்து வைத்தது எனக்கு. இவர் கூறுகிறார் ஆதிக்கத்தில் இருந்து தான் மூட நம்பிக்கை வந்ததாம். வரலாறு தெரிந்த  யாரும் அவ்வாறு கூற  மாட்டார்கள். இந்தியாவில் இருண்ட காலம் என்று ஒன்று உண்டு. அக்காலத்தில் தான் மூட நம்பிக்கைகள் அதிகமாகப் பரவ ஆரம்பித்திருந்தது. மூவேந்தரிகளின் வீழ்ச்சிக் காலம் அல்லது அந்நிய நாட்டுப்படை எடுப்புக் காலம் என்று எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம். இவர் மூட நம்பிக்கையை ஒழிக்கப் பாடுபட்டார் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் மததுவேசத்தில் ஈடுபட்டார். உருவ வழிபாட்டை எதிர்த்த இவர் உருவத்தை ஏன் சாலைகளில் வைத்து அழகு பார்கிறார்கள், மாலை அணிவித்து மரியாதையை செலுத்துகிறார்கள். 

த எதிர்ப்பு மக்கள் சார்ந்த விஷயம் என்றால் வயது வித்தியாசம் பாராமல் தந்தை மகள் உறவு முறையில் பழகிய பெண்ணை ஏன் மணந்து கொண்டார்,  முறை தவறிய வயது தவறிய திருமணம் ஆகாதா? இது தனிப்பட்ட விஷயம் என்பதாலா. அப்படி பார்த்தால் இவர் கூறிய அனைத்தையும் தமிழன் தனிப்பட்ட விசயமாகத் தானே எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களை தகாத வார்த்தைகளால் கேலி செய்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு என்பது பெண்களுக்கு தெரியுமா? ம வெங்கடேசன் என்ற இளம் எழுத்தாளர்  எழுதிய பெரியாரின் மறுபக்கம் புத்தகம் படித்துப் பாருங்கள், பெரியாரின் உண்மை முகத்தை ஆதரங்களுடன் நிரூபித்து இருப்பார். 

பெரியார் பொறுப்பில் நீதிக்கட்சியின் கொள்கை என்ன தெரியுமா! தென் தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரித்து திராவிட நாடு உருவாகுவது தான், அவர்கள் பத்திரிக்கையின் பெயரும் திராவிட நாடு தான். அதனாலேயே அந்தக் கட்சி வலு இழந்த்தது. மக்கள் அனைவரும் தேசிய இயக்கமான காங்கிரசில் சேர்ந்தனர். ஒன்றுபட்ட இந்தியாவிற்காக பாடுபட்டனர். ஆத்திகம்  பிரிவனைவாதத்தை வளர்க்கவில்லை, தி க தான் ஆரியன் திராவிடன் என்ற பிரிவனைவாதம் வளர்க்க காரணமாய் இருந்தது. முறை தவறி திருமணம் செய்ய இருந்த பெரியாரை அண்ணா தட்டி கேட்டார், பெரியார் செவிமடுக்க வில்லை. உண்மை சீடன் என்று கூறிய அதே வாயாலேயே அண்ணாவை தி க விலிருந்து வெளியேற்றினார். திமுக வின் வரலாறு இது தான். 
தி மு க பிறந்தது.

கவியால் புரட்சி செய்த பாரதிதாசனை பகுத்தறிவாளனாய் ஏற்று கொள்கிறேன் 
கதையால் புரட்சி செய்த புதுமைப் பித்தனை குத்தறிவாளனாய் ஏற்று கொள்கிறேன் 
பாடல்களால் புரட்சி செய்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரை குத்தறிவாளனாய் ஏற்று கொள்கிறேன் 

ஆனால் முரண்பட்ட கருத்துக்களை உடைய சுயநலவாதி பெரியாரையோஇல்லை அவர் வழி வந்த எப்போது எந்தக் கட்சிக்கு ஜால்ரா போடுவாரோ என்று பகுத்தறிய முடியாத வீரமணியையோ, இல்லை பெரியாரின் உண்மை பக்தன் என்று தன் மார்தட்டிக் கொண்டு ஆ ராசா ஒரு தலித் அதனால் அவரை சிறையிலடைக்கக் கூடாது என்று பகுத்தறிந்து மேடை போட்டு முழங்கிய சுப.வீ யையோ என்னால் குத்தறிவாளனாய் ஏற்று கொள்ள முடியாது. 

சுஜாதா தன் கடவுள் இருகிறார புத்தகத்தில் இப்படித் தான் முடிப்பார், விஞ்ஞானமும் மெய்ஞானமும் இரு துருவங்களாக  கடவுளைத் தேடுகிறார்கள், இவ்விருவர்களின் தேடல் இருக்கும் வரை கடவுளும் இருப்பார்.

கல்லூரியின் இறுதி நாளில் பெரியார் பக்தனான என் நண்பனின் கையெழுத்துப் புத்தகத்தில் நான் எழுதிய முதல் வரியை இப்பதிவின் இறுதி வரியாக எழுதி நிறைவு செய்கிறேன்

ஆரியமோ திராவிடமோ 
மனித மனதில் மனிதம் பிறக்கும் பொழுது 
இறைவனின் இருப்பு 
உன்னதமாய் இருக்கும். 

பின் குறிப்பு : நான் சொல்ல நினைத்த மூன்று கருத்துகளையும் முழுமையாக அலசி இருக்கிறேன் என்று கருதுகிறேன். ஆழம் தெரியாமல் கலை விடும் பதிவு இது என்பதால் என்னால் செல்லக் கூடிய ஆழம் வரை சென்றுள்ளேன். தகாத வார்த்தைகளால் திட்டாதவரை மறுப்புகளையும் ஏற்கிறேன் 




39 comments:

  1. கிறஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் முறையாக அவர்கள் மதம் போதிக்கப்படுகிறது. அவர்கள் இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு இந்துவால் முடிந்ததா? -இந்தக் கேள்வி என்னிடமும் எழுந்ததுண்டு சீனு. அவர்களுக்கு ஒரு பைபிள், ஒரு வேதம். படித்து விடலாம். நம் மதத்திலோ... எத்தனை எத்தனை புத்தகங்கள். அவற்றை ஒருங்கிணைக்காதவரை பக்தியின் பெருக்கு நிகழாது. தெளிவும் கிடைக்காது. பெரியாரைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது எனக்கு மிகப் புதிது. ஜீரணிக்க சற்று சிரமமாய்த்தான் இருக்கிறது. ஆனால் நீங்கள் முடித்திருக்கும் பாரா இருக்கே...

    ஆரியமோ திராவிடமோ மனித மனதில் மனிதம் பிறக்கும் பொழுது இறைவனின் இருப்பு உன்னதமாய் இருக்கும்.

    -சூப்பர். இது எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. சசிகலாக்காவைத் தொடர்ந்து நான் விட்ட அழைப்பை மதிச்சு தொடர்ந்த உங்களுக்கு அன்போட சேர்ந்த என் நன்றிகள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. சூடான வருகைக்கும் சுவையான கருத்துக்களுக்கும் நன்றி தோழி. நீங்கள் கூறி இருப்பது போல் அது நம் மதத்திற்கு உண்டான சவால் தான்... பைபிளும் குரானும் பல தூதர்களால் பரப்பப்பட்டிருக்கும், அதில் அவர்கள் பெயரும் அடங்கி இருக்கும்... நமக்கு ஒரு ஒருகிணைந்த வடிவம் இல்லை என்பது உண்மை தான்... ஆனால் அந்த ஒருங்கிணைந்த வடிவத்திற்கு கொண்டுவருவதற்கே இக்காலத்தில் யாருக்கும் தெரியவில்லை என்பது ஏற்றுக் கொள்ளப் பட வேண்டிய உண்மை.

      Delete
  2. அட. ஆமாம்ப்பா... முதல்நாள் மாலையிலயே கோலம் போட்டுட்டு படுத்துக்கற கொடுமைய நானும் பார்த்து நொந்திருக்கேன்.

    தெய்வங்களின் மீதும் கலாச்சாரத்தின் குற்றம் சுமத்தாதீர்கள். கோவில்கள் கலாச்சாரத்தின் அடையாளம். -அப்படிங்கற கருத்து அருமை. எனக்குப் பிடிச்சிருக்கு. பெரியார் பத்தின விஷயங்கள் புதுசா இருக்கு. படிச்சு செரிக்க முயற்சி பண்றேன். தொடர்(ந்த) பதிவு நல்லாவே வந்திருக்கு சீனு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிபாக படியுங்கள் வாத்தியாரே, நான் கூறிய கருத்துகளில் இருந்து நீங்கள் அடைந்த மகிழ்ச்சி, யாம் பெற்ற இன்பம்.

      Delete
  3. ஆடியைப்பற்றி அறியபல செய்திகளை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. இதைவிடவும் பல கருத்துகள் நிச்சயமாக இருக்கும் நான் மேய்ந்தது என்னவோ நுனிப்புல் தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  4. //தகாத வார்த்தைகளால் திட்டாதவரை மறுப்புகளையும் ஏற்கிறேன்//

    :)))

    மார்கழிக் காலை பற்றியும் ஆடி மாதம் பற்றியும் சொல்லியிருப்பவை சுவாரஸ்யமாக இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையால் மகிழ்ந்தேன் ஸ்ரீ ராம் சார்...
      //சுவாரஸ்யமாக இருக்கின்றன.// சுவாரசியம் என்று சொல்லி என்னை ஆனந்தப் பட வைத்த உங்களுக்கு நன்றிகள்

      Delete
  5. சீனு,
    பின்னிட்டேங்க போங்க....ரொம்ப ரொம்ப அழுத்தமா உங்க கருத்தை பதிவு செஞ்சு இருக்கேங்க....உங்க கடைசி வரிகள் அருமையோ அருமை......
    //ஆரியமோ திராவிடமோ
    மனித மனதில் மனிதம் பிறக்கும் பொழுது
    இறைவனின் இருப்பு
    உன்னதமாய் இருக்கும். ///
    உங்கள் கருத்தை அப்படியே ஏற்கிறேன்......கடவுளை பற்றிய உங்கள் கருத்து தான் எனக்கும்.....

    ReplyDelete
    Replies
    1. ஒரு சக்தி நம்மை செயல்பட வைக்கிறது அதற்க்கு நாம் இட்ட பெயர் இறைவன் என்ற என் கருத்தை ஏற்றுக் கொண்ட உங்களுக்கு மிகுந்த நன்றிகள்... அந்த வரி உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி...

      Delete
  6. ஆடி மாத சிறப்புப் பகிர்வு.
    நன்றி. வாழ்த்துக்கள் (த.ம. 5)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் தங்களுக்கு தங்கள் எனக்கு அளித்த வோட்டிற்கும்

      Delete
  7. அர்த்தமுள்ள இந்து மதத்தைபோல் கூழுக்கும் வேப்பிலைக்கும் உள்ள அர்த்தத்தை நயமாக கூறியிருக்கிறீர்கள்! எனது பாராட்டுகள்!

    பெரியாரை கடுமையாக எதிற்பவர்களில் நானும் ஒருவன் (இதை சொல்லிக் கொள்வதால் எனக்கு பயமெதும் இல்லை)இறை நம்பிக்கையின் மீது பற்று கொள்பவர்களை விட இறை நம்பிக்கையை எதிர்ப்பவர்கள் அதிகம் இருப்பதால் பெரியாரை பற்றிய உண்மைகள் பல மறைக்கப்பட்டு விட்டன! இதற்க்கு மேலே உள்ள கருத்துரைகளே சாட்சி!

    வாழ்கையில் ஒரு வினாடி கூட 'இறைவா என்னை காப்பாற்று' என்று இறைவனை நினைத்துக்கொள்ளாதவன் உலகில் எவனும் இருக்க வாய்ப்பில்லை! பின் எப்படி அவன் உண்மையான நாத்திகன் ஆவான்! தான் நாத்திகன் என்று ஒருவன் பெருமைக்காக கூறிக்கொள்ளலாமே தவிர உண்மையான நாத்திகன் என்று உலகில் எவனும் இருக்க வாய்ப்பில்லை!

    உலகில் மனிதத்துடன் வாழ்பவன் எவனாக இருந்தாலும் அவனில் இறை நம்பிக்கை குடிகொள்வது தவிர்க்க இயலாதது!

    ReplyDelete
    Replies
    1. //அர்த்தமுள்ள இந்து மதத்தைபோல்// நண்பரே கண்ணதாசன் அளவிற்கு நான் வொர்த் இல்லை.. இருந்தும் அதனை ரசித்துப் படித்த உங்களுக்கு அருமையான நன்றிகள்.
      //இதை சொல்லிக் கொள்வதால் எனக்கு பயமெதும் இல்லை// அழுத்தமான என் கைகுலுக்கல்கள்.

      ஆத்திகன் நாத்திகன் தங்கள் கருத்துக்களில் இருக்கும் உண்மைக்கு ஒரு வாழ்த்துக்கள்...

      தங்கள் முதல் வருகைக்கும் தெளிவான கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா

      Delete
  8. ஆரியமோ திராவிடமோ
    மனித மனதில் மனிதம் பிறக்கும் பொழுது
    இறைவனின் இருப்பு
    உன்னதமாய் இருக்கும்.
    வணக்கம்!
    உங்களின் இறுதியென்ற இறுதியில்லாத
    தொடர்வரிகளை முதல் வரியாக்கி விடை
    தேடமுயல்கின்றேன்.
    மனிதனென்று சொல்லளவில் வாழும்
    மிருக மனங்கள் மாறாதவரையில்
    எல்லாம் பொய் உருவங்களே!
    தனிப்பட்ட நபர் தொடர்பான விமர்சனங்கள்
    மனப்புழுக்கத்தின் வெளிப்பாடு என்பது
    எனதெண்ணம்!
    அப்பா தாத்தா பூட்டன் முப்பாட்டனென நாம்
    பின்நோக்கிப் பார்க்க ஆரம்பி்தால் ஆரம்பத்திற்கே
    எலலை தேடமுடியாது!
    தொலைந்தவை தொலைத்தவை என்று பார்த்தால்
    நினைவு மட்டுமே மிஞ்சும்!
    ஆதங்கங்கள் அபிலாசைகள் ஏற்றங்கள் ஏமாற்றங்கள்
    எல்லாவற்றிலும் உண்டு!
    ஆடிக்கழிவை நம்பி அலைமோதும் மாக்களில்
    நாமும் ஒருவரே ஏற்றுத்தானாகவேண்டும்!
    விருந்துவைத்தா சென்னைக்கு அழைத்தார்கள்
    வாழ்விங்கே தேடிவந்ததுநாம்!
    இழந்தசொர்கத்தையும் இருக்கும் நகரத்தையும்
    வசைபாடி ஆவதொன்றுமில்லை!
    நாம் ஏன் உதாரணங்களாகி அடுத்த தலைமுறைக்கு
    வழிகாட்டக்கூடாது!
    மதங்களின் மகிமை மாண்புகளால் அழிக்கப்படுமெனில்
    அதைக் காப்பதே நம்கடமை!
    உள்ளே நுழைந்தால்தான் தெரியும் எங்கே என்ன
    நன்மை தீமை வாழ்கிறதென்று!
    கடந்து போய்க்கொண்டிருக்கிறோம் காலத்தோடு
    நாமும்-நல்லதும் கெட்டதும்!
    நல்லதைப் பகிர்வோம் உள்ளதைக்கொடுப்போம்
    இறைவனிருக்கட்டும் நாம் முதலில் மனிதராக
    முயற்சிப்போம்......

    ReplyDelete
    Replies
    1. // தனிப்பட்ட நபர் தொடர்பான விமர்சனங்கள் // தனிப்பட்ட அந்த நபர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்திப் பேசும் பொழுது அதனை மனப் புழுக்கமாகவே நினைத்தாலும் அதில் தவறொன்றும் இல்லையே சகோதரி.

      //நாம் ஏன் உதாரணங்களாகி அடுத்த தலைமுறைக்கு// நிச்சயமாக சகோதரி எங்களால் முயன்ற காரியங்களை செய்துவருகிறோம் சத்தம் இல்லாமல்.

      //இறைவனிருக்கட்டும் நாம் முதலில் மனிதராக
      முயற்சிப்போம்......// மனிதன் என்ற மதிப்பு நமக்கு நாமே இட்டுக் கொள்ள முடியாது என்பது என் கருத்து. சக மனிதன் என்னைப் பற்றி கருதுவதில் இருந்து தான் என் மதிப்பு எனக்கே தெரியும்.. பார்வை வேறு படுவதால் நான் எப்போது மனிதன் ஆவேன் என்பதை சமுதாயத்தின் கைகளில் விட்டுவிடுகிறேன். என்னை நானே மனிதன் என்றால் பைத்தியக்காரன் என்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும்....

      இவ்வளவு தெளிவாக அழகாக என் பதிவில் ஒரு மினி பதிவை எழுதிச் சென்ற உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி

      Delete
  9. ஆரியமோ திராவிடமோ
    மனித மனதில் மனிதம் பிறக்கும் பொழுது
    இறைவனின் இருப்பு
    உன்னதமாய் இருக்கும்.
    வணக்கம்!
    உங்களின் இறுதியென்ற இறுதியில்லாத
    தொடர்வரிகளை முதல் வரியாக்கி விடை
    தேடமுயல்கின்றேன்.
    மனிதனென்று சொல்லளவில் வாழும்
    மிருக மனங்கள் மாறாதவரையில்
    எல்லாம் பொய் உருவங்களே!
    தனிப்பட்ட நபர் தொடர்பான விமர்சனங்கள்
    மனப்புழுக்கத்தின் வெளிப்பாடு என்பது
    எனதெண்ணம்!
    அப்பா தாத்தா பூட்டன் முப்பாட்டனென நாம்
    பின்நோக்கிப் பார்க்க ஆரம்பி்தால் ஆரம்பத்திற்கே
    எலலை தேடமுடியாது!
    தொலைந்தவை தொலைத்தவை என்று பார்த்தால்
    நினைவு மட்டுமே மிஞ்சும்!
    ஆதங்கங்கள் அபிலாசைகள் ஏற்றங்கள் ஏமாற்றங்கள்
    எல்லாவற்றிலும் உண்டு!
    ஆடிக்கழிவை நம்பி அலைமோதும் மாக்களில்
    நாமும் ஒருவரே ஏற்றுத்தானாகவேண்டும்!
    விருந்துவைத்தா சென்னைக்கு அழைத்தார்கள்
    வாழ்விங்கே தேடிவந்ததுநாம்!
    இழந்தசொர்கத்தையும் இருக்கும் நகரத்தையும்
    வசைபாடி ஆவதொன்றுமில்லை!
    நாம் ஏன் உதாரணங்களாகி அடுத்த தலைமுறைக்கு
    வழிகாட்டக்கூடாது!
    மதங்களின் மகிமை மாண்புகளால் அழிக்கப்படுமெனில்
    அதைக் காப்பதே நம்கடமை!
    உள்ளே நுழைந்தால்தான் தெரியும் எங்கே என்ன
    நன்மை தீமை வாழ்கிறதென்று!
    கடந்து போய்க்கொண்டிருக்கிறோம் காலத்தோடு
    நாமும்-நல்லதும் கெட்டதும்!
    நல்லதைப் பகிர்வோம் உள்ளதைக்கொடுப்போம்
    இறைவனிருக்கட்டும் நாம் முதலில் மனிதராக
    முயற்சிப்போம்......

    ReplyDelete
  10. நான் இதுவரை எந்த உண்மை கிறிஸ்தவனையோ
    இஸ்லாமியனையோ இந்துவையோ காணவில்லை!
    மனிதன் மனிதனானபின் இறைவன் இருக்கிறானா?
    இல்லையா?அவன்யார்?எந்தமத இனத்தைச்
    சார்ந்தவன்?...தேடுதல்வேட்டையைத் தொடங்கலாம்!
    நான் பிறப்பால் கிறிஸ்தவன்..மனிதனாக முயற்சி
    செய்து கொண்டிருக்கிறேன்..இப்போது இந்தியத்
    தமிழன் என்கிற பெருமையோடு...காயங்களும்
    காயப்படுத்துதலும் வேண்டுமோ?மனதை மதம்
    பிடிக்காமல் பாதுகாத்தல் நன்றோ?

    ReplyDelete
    Replies
    1. அய்யா தங்கள் முதல் வருகைக்கு என் தாழ்மையான வணக்கங்கள்...

      //கிறிஸ்தவனையோ
      இஸ்லாமியனையோ இந்துவையோ காணவில்லை!// இது உங்கள் பார்வை...

      // இந்தியத்
      தமிழன் என்கிற பெருமையோடு.// இதை நீங்கள் இந்தியன் என்ற ஒற்றைச் சொல்லோடு நின்றுந்தீர்கள் என்றால் பெருமைப்பட்டிருப்பேன்.
      இந்தியத் தமிழன் என்பதில் எல்லாம் உடன்பாடு இல்லை.... இங்கும் பிரிவினை தானே வருகிறது...

      தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்... உலகிலோ நமது இனம் மூத்த குடி என்பதில் மிகப் பெருமை கொள்கிறேன்... குமரி முதல் இமயம் வரை ஒன்று பட்டு இருந்த ஒரு இனம் தான் பலவாறாக பிரிந்து கிடக்கிறது என்பதற்கு சான்றுகள் உள்ளது.

      மகாபாரத யுத்தத்தில் சேர மன்னன் ஒருவன் அன்னதானம் செய்தான் என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று உள்ளது . இதை நான் கூறுவது குமரி முதல் இமயம் வரை நட்பாய் வாழ்ந்தார்கள் என்பதை கூறுவதர்காகத் தான்...

      இந்தியர்களை இருப்போம்
      தமிழன் என்பதால் தலை நிமிர்வோம்

      அதிகம் பேசியிருந்தால் மன்னிக்கவும்

      Delete
  11. படித்து விட்டு வருகிறேன் பாஸ்.......நிறைய விடயங்கள் சொல்லியிருக்கிறீங்க போல ...பார்ப்போம்

    ReplyDelete
  12. ///ஆரியமோ திராவிடமோ
    மனித மனதில் மனிதம் பிறக்கும் பொழுது
    இறைவனின் இருப்பு
    உன்னதமாய் இருக்கும். ////

    Super

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் தங்களுக்கும் தங்கள் முதல் வருகைக்கும்

      Delete
  13. எனக்கு இப்படியான பதிவுகள் ஆவதில்லை இருந்தாலும் சீனுவிட்காக சில கருத்து

    ----உள்ளிருந்து----

    இறைவனை உண்மையாக நேசித்து அவர் வழியில் மற்றவர்களையும் நேசித்து வாழ்வது தான் பேசிக் தியரியே.. இப்படி வாழ்பவன் மேலதிக முட்டாள் நம்பிக்கைக்கு போக மாட்டான்.. எந்த விதத்திலும் போட்டு யோசிங்க.. ஒரு ஆசை (தேவை) தான் மனிதர் பார்வையில் கடவுளை நல்லவராகவும் கெட்டவராகவும் காட்டுகிறது. கிடைத்தா கடவுள் நல்லவர் கிடைகாட்டா கடவுள் இல்லை.. கடவுள கடவுளா பார்க்காம பிசினஸ் மேனா பார்கிறத நிப்பாடாத வரை இந்த பிரைச்சினை தொடரும்..

    ----கறுத்த ஆடுகள்----

    //நித்தியானந்தாக்களும் பிரேமானந்தாகளும்//
    இருக்கிற கடவுள் காண என்று இன்னும் ஆசை முட்டாள் தனம்.. ஹா ஹா ஹா ..

    ----பகுத்தறிவு [புதிய மதம் - கடவுளோடு ஒப்பிடுகையில்] - நிரஞ்சனா அக்காவிற்கு பண்ணிய கமென்ட்----

    எனக்கு புரியவில்லை மதம் வேண்டாம்.. பகுத்தறிவு போதும் என்பவர்களின் ஒரே கொள்கை சண்டை வேண்டாம் பேதம் வேண்டாம் என்பதே.. ஆனால் அந்த பகுத்தறிவு கூட மதம் ஆகி போகிறது இப்படி ஆன வாதங்களினால்.. பிரச்சனை பண்ண காரணம் வேண்டும்.. இதற்க்கு புதிய வழி பகுத்தறிவு, உளவியல்..

    நன்றாக ஒரு மணி நேரம் இருந்து யோசித்து பாருங்க மதம் அல்ல மனம் தான் காரணம் என்று அறிவீங்க..
    (இப்ப நெட்.ல தேடி பாருங்க ஹிந்து - முஸ்லிம் - கிறிஸ்டியன் சண்டை எல்லாம் குறைஞ்சு போய்ட்டு பகுத்தறிவாளன் தான் இந்த மூவரோடும் சண்டை பிடிக்கிறான். இதுக்கு முன்னைய மததிலயே இருந்து இருக்கலாம் கடைசி ஓரிரு மதத்தோடு தான் சண்டை பிடித்து இருப்பான்.. இப்ப ஓவர் டியூட்டி.. ஹி ஹி)

    //பெரியார் - ஏன் சாலைகளில் வைத்து அழகு பார்கிறார்கள், மாலை அணிவித்து மரியாதையை செலுத்துகிறார்கள். //

    மச்சி ரெண்டு பேருக்கு சண்டை நடக்கும் போது நடுநிலை வகிப்பவன் நாட்டாமை ஆகிற கதை தான் நீ பெரியாருக்கு சொன்ன கதை.. சண்டைக்கு பதில் சொல்லி தனக்கு பின்னால் புது மதமான பகுத்தறிவை பின்பற்ற மற்றவர்களையும் அழைக்கிறான்.. இப்போது பகுத்தறிவு மதம் கூட சிலை வைக்கிறது.. அட போங்கடா..

    ஆத்திகன் - கடவுளை மட்டும் நேசியுங்கள் மனிதன் கொண்டு வந்த முறைகளையோ அல்ல..
    நாத்திகன் - மனிஷன உண்மையா நேசிங்க.. நம்பாதிங்க.. காரணம் அவன் கடவுள் இல்ல..
    பகுத்தறிவாளன் - நீங்க என்னையாவது செய்ங்க என்னை ஆள விடுங்க.. ஹி ஹி..

    நான் சவாலா ஒன்று சொல்லி முடிகின்றேன்
    இனி
    ஆத்திகன் VS ஆத்திகன்
    ஆத்திகன் VS நாத்திகன் பிரச்சினை குறைஞ்சு..

    பகுத்தறிவாளன் VS ஆத்திகன்
    பகுத்தறிவாளன் VS நாத்திகன் பிரச்சினை அதிகமா இருக்கும்.. பாருங்க..

    ReplyDelete
    Replies
    1. எனக்காக நீ போட்ட பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பா...
      பகுத்தறிவு என்பதை நான் மதமாக பார்க்கவில்லை நண்பா... ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் சுயமாக ஊறி இருக்கும் ஒரு கருவி தான்... நாத்திகன் மட்டுமே அதை உபயோகிபதாய் நினைகிறார்கள்... இதோ இங்கே ஒவ்வொரு விசயத்தையும் பகுத்தறிந்து பதிவுக்கள் எழுதுகிறோமே அப்போ நமக்கு பகுத்தறிவு இல்லையா.

      எவ்வளவு காலம் ஆனாலும் எத்தனை யுகம் ஆனாலும் நில்லாமல் தொடரும் வாக்குவாதம் நண்பா இது... எப்போதோ புரிந்து கொண்டேன் இது வாதத்திற்கு உரிய பொருள் இல்லை வாக்குவாதத்திற்கு உரிய பொருள் அதனால் இந்தப் பக்கம் வருவதே இல்லை

      அழகான தெளிவான விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தோழா

      Delete
  14. பெரியாரை, திராவிடத்தின் முரண்பாடுகளை என் வலைத்தளத்தில் வாசிக்கலாம்.


    வாசியுங்கள் இந்த சுயமரியாதையை.

    ReplyDelete
  15. பெரியார் சிலைகள் வழிபட அல்ல..என் குழந்தைக்கு அங்கு அறிமுகம் ஆக ஒரு வாய்ப்பு வடக்கு நாட்டினனுக்கு காண்பித்து கொடுக்க ஒரு வாய்ப்பு...அவர் யாரென்று கேட்க்கும் போது அவரின் பணிகளையும் பேச ஒரு வாய்ப்பு....யாரும் தீ மிதித்து அலகு குத்தி கும்பிடவில்லை தம்பி....நம் தலைமுறை ஜாதி பெயர் துறக்க பெரியாரும் ஒரு காரணம் என்பதை மறக்க வேண்டாம்..மதம் என்ற ஒரு போதையை பேசும்போது பெரியார் என்ற மருந்தை பேசாமல் பேசி முடிக்க முடியாது என்பதே அவரின் வெற்றி... கோவில்கள் கலாச்சாரத்தின் அடையாளம்..எது?ஒரு ஜாதி வெளியே ஒரு ஜாதி உள்ளே..அந்த கலாச்சாரமா?ஒரே பதிவிர்க்குள் அனைத்தையும் அடக்கிவிட முடியாது சீனு...ஒரு தாழ்த்தபட்டவன் மட்டுமே உணரமுடியும் இந்து மத கோர முகத்தை.அம்மனுக்கு கூழ் ஊத்த கிராமத்து கோவிலுக்கு அய்யர் சாமி வராத மர்மம் என்னடா தம்பி?ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்றால் அது எதுவும் கேட்டதாய் தெரியவில்லையே நண்பா...ணீ என்னடா என்றால் பால் ஊற்றுகிறாய்,பழம் படைக்கிறாய்,பணம் தருகிறாய்...பெரியாரின் ஒரு சிலையின் மீது எழுதப்பட்ட வாசகம்தான் கொஞ்சம் எனக்கு உணர்வை தந்தது..கடவுளை மற மனிதனை நினை....உணர்ந்தாத்தால் தெரியும் என்பாய்.என்ன சகோதரா உன்ர்ந்துவிட்டாய்?ஒரு லட்சம் கடன் இருந்தால் உனக்கும் எனக்கும் இரவுகள் ஒரே மாதிரியே கழியும்..இடையில் எதை உணர்வாய்?முடிந்தால் பெரியாரின் புத்தகங்கள் வாசித்து பார்க்கலாமே..அர்த்தமற்ற இந்து மதம் படித்து பார்க்கவும்..முரண்பட்ட உறவுகளும் பிறப்புகளும் கதைகளும் உடையவற்றை நம்பும் மனங்கள் பெரியாரின் திருமணத்தை விமர்சிப்பது பற்றி என்ன சொல்ல? இந்திய தமிழன்?சிரிப்பு வருகிறது நண்பா...இந்தியா என்ற ஒரு கேடு கெட்ட நாட்டில் தமிழனின் நலம் எவ்வளவு என்று தெரிந்துதான் எழுதினாயா?தனி தமிழ்நாடு கேட்க்கும் அளவுக்கு பிரச்சனைகள் முட்டுகிறது நண்பா..சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து கதைகளை மீறி திருச்சி உண்டு என்பதை புரிவாயா?அவர் ஒரு பிரபல எழுத்தாளர் மட்டுமே சமூக அக்கறைக்கு அங்கவை பொன்கவை வைத்த வியாபார எழுத்தாளர்.கடவுள் மறுப்பு மட்டும் பகுத்தறிவு இல்லை நண்பா..கடவுளின் பெயரால் நீ செய்யும் வேலைகளை யோசித்து பார்...கடவுளின் பெயரால் நடக்கும் ஜோதிட கொடுமைகளை கவனித்து பார்..என் கல்யாணம் நல்ல நேரம் முடிந்து பின் அய்யர் இல்லாமால் நடந்த திருமணம்..என் ஜாதக பித்தகத்தை என்றோ தூக்கி எரிந்து விட்டேன்.என் மகனுக்கு எழுதவில்லை.நானும் உன்னை போலத்தான் நண்பா சுகமாகவும்,கஷ்டமாகவும் வாழ்கிறேன்.நீ கோவிலை காக்க சொல்கிறாய் கோவிலை அசிங்கபடுத்துகிரவர்களை கண்டிக்கிறாய் என்றால் அதே போலத்தான் பெரியாரும் செய்தார்.மூட நம்பிக்கைகள் அனைத்தையும் விமர்சித்தார் ஆதாரபூர்வமாக உடைத்தார்.பிறப்பால பிரித்து ஜாதி படைத்த கடவுளர்களை விட பெரியார் சிறந்தவரே..கடவுளின் மறுபெயர் பயம்..நீ மனதுக்கு பயப்படவில்லை கடவுளுக்கு பயப்படுகிறாய்.அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும் என்ற பொன்மொழியை மறந்து செல்கிறாய்.. கடவுள் பெயரால் ஒரு ஜாதி வாழ்ந்தது..பெரியார் மொழியால் பல ஜாதி விழித்தது..அவ்வளவே.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நீங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதிலாய் என்னால் தனி பதிவொன்று போட முடியும், ஆனால் என் முகத்தில் மதவாதி இந்துத்துவா என்று முத்திரை குத்துவார்கள்... அப்படி முத்திரை குத்துவதில் பெரும்பாலானோர் இந்துக்கள் ஆகத் தான் இருப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும்....

      முரண்பட்ட கருத்துக்கள் உடைய ஒரு மதத்தில் ஒன்றுபடாத கருத்துக்கள் உடைய ஒரு மதத்தில், மதம் என்றால் இது தான், அதில் என் பயணம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று என்னை சீர் செய்து கொண்டு வாழும் எனக்கு பெரியார் வழிகாட்டி இல்லை. விவேகானந்தரும் பாரதியும் தான் என் வழிகாட்டி...

      போராளி என்று ஏதோ ஒரு நாட்டில் இருக்கும் சே கு வெ ராவை பச்சைக் குத்திக் கொள்ள நான் விரும்பவில்லை.... துணிந்து மணியாச்சியில் வெள்ளையன் மார்பை குண்டுகளால் துளைத்து தன் தலையையும் அதே துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி மாண்டு போனானே வீர வாஞ்சி, அவன் என் கலாச்சாரம் வழி வந்தவன்... அவனை போராளியாய் எத்தனை பேருக்குத் தெரியும்... போராளியைத் தேர்ந்து எடுப்பதில் கூட வெளிநாட்டு மோகம் .... இதற்க்கு அடிப்படையில் பெரியாரும் ஒரு காரணம்...

      மூட நம்பிக்கைகள் ஒழிவதில் பெரிதும் பங்காற்றிய ஒரே ஒரு காரனத்திற்க்காகத் தான் பெரியாரை ஓரளவிற்கு மதிக்கிறேன்... இனத்தின் (இனம் என்பதை ஜாதி என்று இங்கு நான் சொல்லவில்லை) அடையாளத்தை நசுக்கி மொழியின் அடையாளத்தை காட்டுமிராண்டி என்று துவேசித்து இல்லாத பொல்லாத கதைகளைக் கூறி எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றிய பெரியாரையும் நான் அறிவேன்....

      தாழ்த்தபட்டவன் இதை உணர நான் ஒரு தாழ்த்தபட்டவனாகத் தான் இருக்க வேண்டும் நாத்திகனாகத் இருக்க வேண்டும் என்று இல்லை... அவனை அவ்வாறு கூறி நசுக்குவதில் அரசாங்கம் தான் பெரும்பங்கு ஆற்றி வருகிறது... மதம் இல்லை.... வயிறு வளர்த்து பெரியலவன் அனைவரும் திராவிடக் கட்சிகளை சேர்ந்தவன்... பகுஜன் சமாஜும் விடுதலை சிறுத்தைகளும் அவனை அடியாள் போல் உபயோகிக்கிறது இந்து மதம் இல்லை....

      இந்து மதத்தின் முறையான கருத்துகள் முறையாக சென்று சேராதவரை என் மதம் முரண்பாடான மதம் தான்.....

      பிராமணன்... நிற்க எல்லா பிராமணனும் அப்படி இல்லை... அவர்கள் எல்லையை மாற்றிக் கொண்டர்கள்... இரு விதத்திலும்... எல்லாருடனும் நெருங்கி பழகுவதிலும்... கருவறைக்குள் சல்லாபம் செய்வதிலும்.... அவர்களை நான் கடவுளின் தூதுவர்களாகப் பார்க்கவில்லை... வேதம் படித்தால் நானும் பிராமணன் தான்.... கருவறைக்குள் பாண் பராக் போட்டு துப்பினால் அவனும் கேடு கெட்டவன் தான்.... தமிழகத்தில் எத்தனை நிலை ஜாதிகள் இருக்கிறதோ அத்தனை நிலை ஜாதிகளிலும் எனக்கு(எங்களுக்கு ) நண்பர்கள் உண்டு.... எங்கள் வீடுகளிலும் எல்லாருக்கும் இடம் உண்டு.... இது எங்கள் நட்பின் நிலை... இதுவே தமிழகத்தின் நிலை ஆக வேண்டும் என்று நினைக்கிறன்... இதற்கும் பெரியார் தேவை இல்லை என்பது வாதம்...


      மேலே நண்பன் ஹாரியிடம் சொல்லியதைக் கூறியே உங்களிடமும் சொல்கிறேன் அண்ணா

      எப்போதோ புரிந்து கொண்டேன் இது வாதத்திற்கு உரிய பொருள் இல்லை வாக்குவாதத்திற்கு உரிய பொருள் அதனால் தான் இந்தப் பக்கம் வருவதே இல்லை...

      இதில் ஒன்று உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும்... இல்லை என் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மன நிலைக்கு இருவருமே தள்ளப்படுவோம்... அதனால் தான் இது போன்ற விவாதங்களில் ஈடுபடமால் ஒதுங்கியே உள்ளேன்... நான் கூறியது அனைத்துமே உங்களுக்கு தவறாக தெரிய வாய்ப்பு உள்ளது... இருந்து சிறுவனை மன்னித்துக் கொள்ளுங்கள்

      அழகான தெளிவான விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அண்ணா ....

      Delete
    2. சுஜாதா என்ற கேள்விக்கு பதில் தர மறுத்தேன் இல்லையா.. மறுக்கவில்லை... மறந்தேன்...
      அங்கவை சங்கவை மட்டும் தான் தமிழ் பெயரா.. அப்படி என்றல் என் பெயர் உங்கள் பெயரில் எல்லாம் தமிழ் இல்லையா....
      தமிழின் எழுத்து உலகத்தை புரட்டிப் போட்டதில் அவர் பங்கு பெரிது...
      தூங்கி வழிந்து கொண்டிருந்த தமிழ் எழுத்துலகை தன் நடையால் மாற்றி அமைத்தவர்
      அறிவியல் தமிழை தமிழனுக்குள் எளிமையாக புகுத்தியது அவர் உரைநடை
      சங்க இலக்கியமான புறநானூற்றை எளிய தமிழ் ஆக்கியது அவர் எழுத்து..
      வியாபாரமும் செய்தார் அவர் திறமையாகவே அதைக் காண்கிறேன்..

      உங்களுக்கு சுஜாதா பிடிக்காத உங்களுக்காகவே இருக்கிறார் ஒரு எழுத்தாளர், வேறு யாரும் இல்லை ஜெயமோகன்..
      அந்த மனிதனுக்கு என்ன பிரச்சனையோ சுஜாதா உயிருடன் இருந்தவரை மறைமுகமாக தாக்கி மறைந்ததும் நேரிடையாக தாக்கிக் கொண்டுள்ளார்...
      ஆனால் ரொம்ப நல்லவரு மதியம் என்ன சாப்டீங்கன்னு மெயில் போட்டக் கூட ரெண்டு பக்கத்துக்கு விளக்கம் குடுப்பாரு....

      அவரும் முரண்பட்ட கருத்துடையவர் தான் ஆனாலும் அவர் கதைகள் ரசிக்கும் படி இருக்கும்

      Delete
  16. ஆன்மிகத்தில் எனக்கு இடுபாடு கிடையாது...இந்த பதிவில் நான் எப்படி கருத்து சொல்வது என்றே தெரியவில்லை...சில சமயம் கடவுள் இருக்கிறார் என்று தொன்ற்கிறது பல சமயம் அவ்வாறு இல்லை...பெரியார் பக்தன் என்று எல்லாம் நினைக்க வேண்டாம்...சென்னை கோவில்களில் சாமி கொண்டு செல்வது வழிபடுவது கோலம் போடுவது இதை எல்லாம் பார்த்து என் மனதில் ரொம்ப சசிரித்து உள்ளேன் எங்கள் ஊரை நினைத்து....தமிழ்மணம் ஒட்டு போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. நண்பா சிரிக்கும் படியாய் மாறிவிட்டதே என்று நினைக்கும் போது கஷ்டமாய்த் தான் உள்ளது... ஒரு மதத்தின் முழுக் கருத்துகளையும் புரிந்து கொண்டவன் உலகில் எவனுமே இருக்க மாட்டான்... இது இரு நிலைக்கும்.... இரு நிலையிலுமே நம்பகத் தன்மை என்ற நிலையில் கோளாறு உள்ள போது, என் மனம் விரும்பிய நிலையை அடைவது தானே எனக்கு மகிழ்ச்சி

      Delete
  17. மிகச்சிறப்பான கருத்துக்கள்! இந்துமதத்தில் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் ஒரு அறிவியல் பார்வை உண்டெண்பதையும் போலி திராவிட இயக்கத்தினரை வெளிச்சம் போட்டு காட்டியமையும் மிகவும் அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சார்

      Delete
  18. வாஞ்சி நாதன் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவும் நண்பா..முரண்பட்ட கருத்துக்கள் கொண்ட மதம் என்கும் போதே தெரியவில்லையா?கருத்துக்கள் என்பதை விட ஜாதிகள் என்பதே பொருத்தம்.ஒவ்வொரு கேள்விக்கும் பதில் பதிவு என்றால் இடலாமே...இந்துத்துவா என்றால் என்ன குற்றம்?மனதில் உள்ளதை வெளியில் காண்பிக்க என்ன தயக்கம்?எனது மகனின் பெயர் சே பாரதி பாரதி கடவுள் வழிபாடு கொண்டவர் என்பதால் புறக்கணிக்க முடியாதவர்.இந்த நேர்மை பெரியாருக்கு காண்பிக்க படுவதில்லை என்பதே வருத்தம்.உண்மையை பொட்டில் அடித்தாற் போல சொன்னது சுடும் போல...
    பொல்லாத கதைகள் சொன்னது பெரியார் இல்லை தம்பி..அனைத்து கதைகளும் இந்து மதத்தில் எழுதப்பட்டவையே..அந்த பழம்பெரும் கதைகளை அந்த படைப்புகளை காட்டி சிந்திக்க செய்தார் அவர்.சிந்தித்ததால் விளைந்த வினைகள் சிலருக்கு இங்கு பொல்லா கதை தந்த பெரியார் என்று கூற தூண்டுகிறது.

    தாழ்த்த பட்டவனின் வழி சத்தியமாக மற்றவர்க்கு புரிவது கஷ்டமே..ஒரு வீடு தேடும் இடத்தில் கூட ஜாதியால் நிராகரிக்கப்படும் அவலம் உனக்கு நேர்ந்திருக்க வாய்ப்பில்லை.வர்ணாசிரம அரசாங்கத்தை எதிர்த்துதான் பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறினார்.

    பெரியார் என்ற பெயர்தான் கடைசி வரை நிற்கும்.அண்ணாவை வெளியேற்றவில்லை அவர்.அவராக வெளியேற வாய்ப்பு தேடினார் வெளியேறினார்,ஆனாலும் தலைவனுக்கு இந்த நாற்காலி என்று பெரியாருக்கு இருக்கை வைத்து மரியாதை செய்தார்.கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையாக கருணா அந்த இருக்கையில் மஞ்சள் துண்டு போட்டார்.தமிழ் கண்ட கடைசி நேர்மையான தலைவர்களில் பெரியாரும் ஒருவர்.

    பகுஜன் விசிக யாராக இருந்தால் என்ன?தவறான வழி சென்றால் கண்டிக்க கூடியதே.சமீபத்து முக நூல் பதிவு ஒன்றில் திருமாவை பற்றிய என் கருத்துக்கு எனக்கும் என் தாய்க்கும் மதிப்பு மிக்க வார்த்தைகளால் பூஜை கிடைத்தது.

    எல்லைகளை விரித்து இடம் கொடுக்க வைத்த அம்பேத்கர்,பெரியார் மற்றும் பெறும் தலைவர்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.நட்பு வட்டங்கள் சரி..குடும்ப வட்டங்களில்?நட்பு வட்டாரங்களில் வந்து சேர்ந்த ஒவ்வொருவனும் எப்படி வந்தான்?யார் போராடி வந்தார்கள்?அதை விடு தம்பி..குடும்ப வட்டாரத்தில்?உனக்கு பெண் பார்ப்பார்கள்..பேசிப்பார் வீட்டில்.நான் ஒரு SC ST பெண்ணை விரும்புறேன் கல்யாணம் முடித்து வைங்க என்று..விசேசமா இருக்கும்.அத்தனை நிலை ஜாதிகளிலும் கல்யாண சம்பந்தம் முடியாத ஒன்று என்பதே உண்மை நண்பா.

    வேதம் தெரிந்தால் பூஜை பண்ணிடலாமா?அவ்வாறு வேதம் தெரிந்த மற்ற ஜாதி பூசாரிகளுக்கு பூசை செய்ய மதுரை நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கியுள்ளனர் எல்லை விரித்த பிராமணர்கள்.நல்ல நியாயமான நியாயம்.

    சீனு படித்தும் புரியாமல் இருக்கிறாயோ என்று வருத்தமாக உள்ளது.மன்னிப்பு எழுதி சங்கடபடுத்தாதே.இதற்க்காக இன்னும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நீ சொல்வதால் அப்படி ஒரு பதிவை வரவேற்கிறேன்..எனக்கு புரிய வேண்டும்.இல்லைனாஉனக்கு...

    ReplyDelete
    Replies
    1. // மன்னிப்பு எழுதி சங்கடபடுத்தாதே// மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா... மன்னிப்பு கோரியதற்காக வருந்துகிறேன்... அண்ணா உங்கள் புரிதலில் மாற்றமும் இல்லை என் புரிதலில் ஏமாற்றமும் இல்லை... காரணம் நாம் நமது பாதைகளில் தெளிவாக உள்ளோம்.. பெரியாரை சொல்ல உங்களிடம் நல்ல கருத்துக்கள் பல உள்ளன... மதன் செய்யும் நன்மைகளைக் கூற என்னிடம் பல கருத்துகள் உள்ளன என்ற அளவில் முற்றுப் புள்ளி வைத்துக் கொள்கிறேன் அண்ணா... மீண்டும் உங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றிகள் பல....

      அந்த பதிலுரையில் சொல்ல மறந்த இன்னொரு விசயத்தையும் சேர்த்துக் கொள்கிறேன்

      எங்களைக் காக்கும் உங்களை மதிக்காத இந்தியாவை திட்டுவதற்கு உங்களுக்கு தகுதி உள்ளது என்ற ஒன்று தான் அது....

      Delete
  19. மிக அருமையான கருத்துக்களை பதிவு செய்திருக்கிறீர்கள். ஆடி மாதத்தில் நடக்கும் விஷேஷங்களின் காரணங்களையும் சொல்லி இருக்கிறீர்கள். அதே போல பெரியார் விஷயத்தின் எனக்கும் உங்கள் கருத்துக்களோடு உடன்பாடு உண்டு. விவேகானந்தர் கூற்றுப்படி, கடவுள் இல்லை என்பவன் பகுத்தறிவாளன் அல்ல. உண்மையான கடவுளை கண்டு கொள்பவனே பகுத்தறிவாளன். நன்றி நன்ப்ரே

    ReplyDelete
  20. நன்றி பாலா சார் என் கருத்துடன் உடன்பட்ட உங்களுக்கு நன்றிகள் ... தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்கள் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான் அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான்

      Delete
  21. நன்றாக எழுதியுள்ளீர்கள். இந்து மதத்தை முழுமையாக புரிந்துகொள்ள நிறைய படிக்கவேண்டும் என்ற தேடலை மேலும் தூண்டிவிட்டீர்கள். உங்களை தொடர ஆரம்பித்துவிட்டேன். நிறைய எழுதுங்கள். மக்களிடையே பிரிவினை தூண்டும் எவரும் விஷமிகளே!

    ReplyDelete
  22. ஆரியமோ திராவிடமோ மனித மனதில் மனிதம் பிறக்கும் பொழுது
    இறைவனின் இருப்பு உன்னதமாய் இருக்கும்...... Lovely Line :)

    ReplyDelete