26 Aug 2015

தலைவாரிப் பூச்சூடி உன்னை - குறும்படம்

ஆவி இயக்கி தயாரித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது குறும்படம் தலைவாரிப் பூச்சூடி உன்னை. 

ஒரு சிறிய கருவைக் கொண்டு இந்தக் குறும்படத்தை  உருவாக்கிய ஆவியின் வடிவில் பட்ஜெட் பத்மநாபனைக் காண்கிறேன். படம் பார்த்தால் உங்களுக்கும் புரியும். நேரத்தையும் சில நண்பர்களின் துணையையும் கொஞ்சம் திறமையையும் தன்னிடம் இல்லாத சில திறமைகளையும் வளர்த்துகொண்டு (எடிட்டிங், ஸ்பெஷல் எபெக்ட்ஸ்) அதையும் முயன்று பார்த்திருக்கிறார். 

பள்ளிக் கூடம் செல்லும் குழந்தையை பாடாய்ப்படுத்தும் இன்றைய தலைமுறை குழந்தைகளின் அம்மாவின் ஒருநாள் தான் இந்தக் குறும்படம். தான் கூற வந்ததை கிட்டத்தட்ட கூறிவிட்டார் என்று தான் கூறவேண்டும். 



'தனியொருவன் முயன்று விட்டால்' விளம்பரம் நொடிக்கு நொடி டிவியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்தக் குறும்படம் பற்றி கூறுவதென்றால் மொத்தமாக சுத்தமாக தனியொருவனின் முயற்சிதானிது. கொஞ்சம் ஆத்மார்த்தமான முயற்சியும் கூட.   

மேலும் இது தன்னுள் இருக்கும் ஒரு சினிமா கலைஞனுக்கு அவர் அளிக்க முயன்ற தீனி. யானைப் பசிக்கு சோளப்பொறி. 'இந்தப் படத்தை நான் இயக்கி இருந்தால்? இந்தப் படத்திற்கு நான் வசனம் எழுதி இருந்தால்' என்று அனைவராலும் ஆயிரம் ஆல் கூறமுடியும் என்பது தெரிந்தபோதிலும் ஒற்றை ஆளாக களமிறங்கி என்ன விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை என்று தான் கொண்ட முயற்சியில் மனம் தளராமல் செய்து முடித்த  ஆவியின் மனவலிமைக்கு பாராட்டுக்கள். ஆனாலும் ஆவியிடம் விமர்சனம் வைக்காமல் இல்லை. விமர்சனங்கள் கண்ணாடியைப் போன்றவை. அவை நமது பிம்பத்தை, நாம் இருக்கும் அழகைக் காட்டுபவை. அவற்றின் முக்கியத்துவம் உணர்ந்தவர்களுக்குத் தான் அதன் அவசியம் தெரியும். ஏற்றுகொள்வதும் மறுப்பதும் கலைஞனின் உரிமை.   

குறும்படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் மனதில் தோன்றுவதைக் கூறுங்கள் அவையாவும் ஆவி என்னும் கலைஞனை அடுத்தபடியை நோக்கி செதுக்கும் உளியின் சப்தமாக அமையட்டும். 

2 comments:

  1. மிகச்சுருக்கமாக நறுக்கென தைத்துவிட்டார் இன்றைய கல்வி முறையையும் மதிப்பெண்களுக்கு பிள்ளைகளை விரட்டும் பெற்றோரையும்! அருமை!

    ReplyDelete
  2. //கூற வந்ததை கிட்டத்தட்ட கூறிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.

    நல்லாவே கூறினீங்க.

    ReplyDelete