21 Aug 2015

ஆர்.ஏ.சி - கோவை டூ சென்னை

'சீனு சத்தியமா சொல்றேன் உங்களுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகாது, ஆர்.ஏ.சி தான் கிடைக்கும்' கடுந்தவம் புரிந்த முனிவர் ஒருவர்  சாபம் கொடுப்பது போல் கூறினார் ஆவி. ஒரு காவி வஸ்திரமும், கையில் கமண்டலமும் கொடுத்தால் ஆவியை இன்றைய தலைமுறை சாமியார்களுக்கு போட்டியாக உருவாக்கிவிடலாம் அவ்வளவு பொருத்தமாக இருக்கும் அந்த அவதாரம் அவருக்கு.    
Aavee - Poet the great - Part 1 Part

'அப்டில்லா இல்ல பாஸ், கண்டிப்பா பெர்த் கிடைக்கும்' என்றேன். 'நம்பிக்க அதானே எல்லாம்' என்று நொடிக்கு நொடி கூறும் 'கல்யாண்' பிரபுவின் தொனி இருந்தது என்னிடம்.   

'யோவ் நான் தான் சொல்றேனுல்ல கிடைக்காதுன்னு' என்றார் அழுத்தமாக. என்ன நினைத்து அப்படிக் கூறினாரோ தெரியவில்லை. அதுபோலத்தான் நடந்தது.  பத்து நாற்பதுக்கு சென்னையை நோக்கிக் கிளம்பும் சேரன் விரைவு வண்டியைப் பிடிக்க பத்து மணிகெல்லாம் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டேன். ஆவிக்கு சிலபல குடும்ப கட்டாயங்கள் இருந்ததால் அவர் வாயிலில் இருந்தபடியே டாட்டா காட்டிவிட்டு கிளம்பிவிட்டார். 

கோவை ரயில் நிலையம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் ஆர்.ஏ.சி கிடைத்த வருத்ததில் சோகமாக நடந்து கொண்டிருந்தேன். கூடவே இரண்டு நாள் அலுப்பு வேறு. இரண்டு நாள் கோவை பயணத்தில் இரண்டு நாளும் சுற்றிக்கொண்டே இருந்தேன். சரியான ஓய்வும் இல்லை. இரவு எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் காலை ஒன்பது மணி வரைக்குமாவது உறங்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டு. நேற்றோ காலை ஆறுமணிக்கே எழுந்திருக்கச் செய்துவிட்டார்கள். அந்த அசதி வேறு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. தோளில் ஒரு சுமையையும் கண்ணின் இமைகளில் கும்பகர்ணனையும் சுமந்து கொண்டு தள்ளாடிக் கொண்டிருந்தேன். கடைசிவரைக்கும் s1 வந்தபாடில்லை. இறைவன் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு பொத்தானை அமுக்க வேறொரு மூலையில் இருந்து 'போகும்பாதை தூரம் இல்லை' பாடல் எசப்பாட்டு பாடியது. 

பின்னால் திரும்பிப் பார்த்தேன் 'கொஞ்சம் வழிவிட்டுப் போகோணும், அங்கயும் இங்கயும் அல்லாடிட்டே போவக்கூடாது' என்றபடி முறைத்துவிட்டு நகர்ந்தார் ஒரு பெரியம்மா. என்னைக் கடக்கும் போது 'பாப்பா பாப்பா இந்த பைய கொஞ்சம் வாங்கு' என்றார். சுமார் எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியப்பா வந்து அந்தப் பையை வாங்கிகொள்ள 'பாப்பா மெல்ல நட, வேகமா நடக்க முடியல' என்றார் பெரியம்மா. இப்போது பாப்பா மெல்ல நடக்கத் தொடங்கினார். பாப்பாவின் முகத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். 

ரயிலின் எந்தப் பெட்டியிலுமே பெயர்ப்பட்டியல் ஒட்டப்படவில்லை. ஆர்.ஏ.சி என்பதால் என் அருகில் அமரப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆணா பெண்ணா, முதியவரா என ஓராயிரம் கேள்விகள். அருகில் அமரப்போகிறவரைப் பொறுத்துதான் தூங்கப்போவது பெர்த்திலா இல்லை தரையிலா என்பதை முடிவு செய்யமுடியும். தரையில் சயனத்தை விரிப்பதும் அவ்வளவு எளிது இல்லை. அதற்கும் ஓராயிரம் தடைகளை உண்டு. மழைக்காலம் என்றால் தரை முழுவதும் சகதி அப்ப்யிருக்கும். லோயர் பெர்த்தில் இரண்டு பக்கமும் பெண்கள் என்றால் ஒன்றும் செய்யமுடியாது உட்கார்ந்தத நிலையில் தவம் செய்ய வேண்டியது தான். 

ரயில் கிளம்பும் வரையிலும் என் இருக்கைக்கு வந்திருக்க வேண்டிய பங்காளி வந்திருக்கவில்லை. ஒருவேளை வரவேயில்லை என்றால் எவ்வளவு சந்தோசமாயிருக்கும். அசதி கண்ணுக்கு வெளியேயும் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்க உறங்கிவிட்டேன். அருகில் ஒரு நபர் அவர் வீட்டில் பேயைப் பார்த்த கதையை தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை. தூக்கம் மெல்ல என்ன ஆரோகணிக்க யாரோ என்னை உதைப்பது போலவும், பந்தாடுவதைப் போலவும் இருந்தது. கனவெல்லாம் இல்லை, என்னோடு இத்தனை நேரமும் என்னோடு போராடிக் கொண்டிருந்தது டிடிஆர் தான். ஐடியை எடுத்து நிட்டினேன். பார்த்துவிட்டு 'பெர்த் கிடைச்சா தாரேன்' என்றார். எப்போது ஆர்.ஏ.சி  கிடைத்தாலும் டிடிஆர் நகரும் முன்னே அவரிடம் சார் பெர்த் என்று கெஞ்சாத குறையாக கேட்பது வழக்கம். அவரும் வழக்கம் போல ' என்ன கேக்காதீங்க, ஆண்டவனக் கேளுங்க' தொனியில் ஒருபார்வை பார்ப்பார். 

அன்றைக்கு ஒருவர் டிடிஆரிடம் பெர்த் கேட்கப் போய் செமத்தியாக வாங்கிக்கொண்டார். 'எங்க வேலைய செய்ய விடுங்க சார். பெர்த் இருந்தா அத பேஸஞ்சர்ஸ்க்கு அலர்ட் பண்ண வேண்டியது எங்க கடம' என்று தத்துவம் பேச ஆரம்பித்துவிட்டார். ஏண்டா கேட்டோம் என்ற விரக்தியில் அந்த நபர் வழிந்துகொண்டே தன் இருக்கையில் அமர, அந்த டிடிஆரின் பின்னால் வேறொரு கூட்டம் தொங்கிக் கொண்டிருந்தது. 

இப்போது என் நிலைமையைப் பார்த்த டிடிஆர் அவராகவே பெர்த் கிடைத்தால் தருகிறேன் என்று கூறிவிட்டார் போலும். தூக்குத் தண்டனைக் கைதியிடம் உங்க கடைசி ஆச என்ன என்பார்களே அதைப்போல டிடிஆரிடம் 'என் சீட்ல வேற யாரு சார் வாராங்க, வருவாங்களா?' என்றேன். சார்ட்டைப் பார்த்தவர் திருப்பூர்ல வருவார்ப்பா என்றார். அதுவரைக்கும் தான் தெரியும் அடுத்த சில நிமிடங்களில் உடல் மீண்டும் பயங்கரமாகக் குலுங்கியது. எழுந்து பார்த்தால் திருப்பூரில் பங்காளி நின்று கொண்டிருந்தார். எழுந்து அவருக்கு இடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்து கொண்டேன். 

சீட்டில் செட்டிலாகியவர் மெல்ல தன் திருவிளையாடலை ஆரம்பித்தார். சுற்றும் முற்றும் பார்த்தவர் கைகால்களை நீட்டி படுத்துவிட்டார். என் மடியில் கால்களைப் போடாத குறை. சரி நல்ல விசயம் தானென்று நானும் கிடைத்த இடத்தில் கால்களை நீட்டி படுத்துவிட்டேன். நான் படுத்த அடுத்த நிமிடத்திலேயே எழுந்தவர் என்னை எழுப்பி படுக்கக் கூடாது என்றார். ஆசாமி இந்தி. அரைகுறை ஆங்கிலத்தில் பேசினார். 'நீ படுத்தா நானும் படுப்பேன்' என்றேன். நான் வயசானவன் நான் தான் படுப்பேன் என்றார். ஆளைப் பார்த்தால் ஆவிக்கு அண்ணனைப் போல் இருந்தார். வயது முப்பதைந்திற்குள் இருக்கும். 'நீ படுக்கக் கூடாது' என்றார். முறைத்தேன். மீறி பேசினால் 'போலிசக் கூப்புடுவேன்' என்று கத்தியிருக்கலாம். உட்கார்ந்த்தபடியே பயணிக்க ஆரம்பித்தார். 

எனக்கும் தூக்கம் கண்ணைக் கட்டியது. ஜன்னலில் தலையை சாய்த்தேன். அந்தக் கண்ணுக்குள் ஈரம் கசிந்திருக்க வேண்டும். மெல்ல ஒரு ஓரமாக சாய்ந்து படுத்து, எனக்கும் படுப்பதற்கு இடம் விட்டார். மனுஷன் நல்ல உல்லாசமாக வளர்ந்தவன் போல. ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒருமுறையும் என்னை எழுப்பிவிட்டு உருண்டு கொண்டார். அவர் உருண்டதும் கிடைக்கும் இடத்தில் படுத்துக் கொண்டேன். 

திடிரென்று இரவில் எழுப்பினார். மணி ஒன்றைக் கடந்திருந்தது. என்ன என்றேன். தூக்கம் வரல என்றார். சரி என்றபடி நான் படுத்துக் கொண்டேன். எழுப்பிவிட்டார். என்ன என்றேன். படுக்கக் கூடாது என்றார். நான் படுத்துவிடாதபடி மொத்த இடத்திலும் தன் கால்களைப் பரப்பிக் கொண்டார். 'யோவ் உன்னோட பெறுத்த இம்சயாப் போச்சு' என்றபடி ஜன்னலில் தலைசாய்த்து உறங்கத் தொடங்கினேன். கொஞ்ச நேரத்தில் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. தன் கால்களை நீட்டி கடையை விரித்தார். நானும் நீட்டினேன். உருளும் போதெல்லாம் உறக்கத்தைக் கலைத்தார். உறக்கம் கலைந்து மீண்டும் உறங்கினேன். நல்ல தூக்கத்தில் என்னைக் கொலையே செய்தாலும் உங்களை மன்னித்து விடுவேன். (உபயம் சாரு :-) அதனால் அவரோடு அவரோடு சண்டை இடும் மனநிலையில் இல்லை. எனக்குத் தேவை தூக்கம்.


மணி நான்கரையை கடந்திருக்கும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். தூங்க வேண்டும் என்றேன். 'எனக்கு முதுகுவலி இருக்கு பையா, தூக்கம் வரல' என்றார். 'எனக்கு தூக்கம் வருது' என்றேன். சரி படுத்துக்கோ, ஆனா என் சீட்ட தாண்டி வரக்கூடாது என்று எல்லையைக் காண்பித்தார். என்னுடலை நான்காக மடித்து வளைத்து உடலைக் குறுக்கினேன். அந்த இடத்தில் சரியாக செட்டானது. இம்மி அளவும் உடல் வெளியே செல்லவில்லை. 'சீனு நீ ரொம்ப சின்ன பையனா இருக்க என்பார்கள்'. டிசைன் அப்படி என்பேன். இப்போது இடம் கொடுத்தது அந்த டிசைன் தான். கையை தலைக்கு வைத்து நிம்மதியாக உறங்கத் தொடங்கினேன். 

சற்றுநேரத்தில் பங்காளியின் கால் என் மீது பட்டது. எழுந்து பார்த்தால் என்னைப் போல் படுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். முடியவில்லை. தூக்கிய தலையை அப்படியே கையில் வைத்து 'வதனமே சந்திர பிம்பமோ' என மீண்டும் ஆரம்பிக்க 'பையா பையா' என்றார் பங்காளி. கண்களை லேசாகக் குறுக்கி பார்த்தேன் முகத்திற்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தார். மூடிக்கொண்டேன். எழுந்தால் தான் பிரச்சனை. ஏதாவது கிறுக்குத்தனம் செய்வார் என்று கண்களைத் திறக்கவேயில்லை. ஒருவழியாக இந்த ஜெனமத்து ஆர்.ஏ.சி பிரச்சனை தீர்ந்தது.

'யோவ் யார்யா அது லைட்டப் போட்டது' என்று ஒரு குரல் எங்கிருந்தோ வர பங்காளி லைட்டை அனைத்துவிட்டார். ஒருவேளை இப்போது அவர் முகத்தைப் பார்த்திருந்தால் மந்தையில் இருந்து தொலைந்து போன ஆட்டைப் போல் முழித்துக் கொண்டிருக்க வேண்டும். அடுத்த பத்து நிமிடத்திற்கு சப்தத்தையே காணோம். என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்காக கண்களைத் திறந்தால் பெட்டியை இழுத்துக்கொண்டு எங்கோ சென்று கொண்டிருந்தார். வேறெங்கேனும் பெர்த் கிடைத்திருக்கக் கூடும் என்று நினைக்கிறன். எப்படியோ எனக்கு பெர்த் கிடைத்துவிட்டது. கிடைத்திருக்காவிட்டாலும் இனி தொல்லை இல்லை, ஏன்னா டிசைன் அப்படி. வதனமே சந்திர பிம்பமோ.

6 comments:

  1. ஹாஹாஹா! இம்சையைக் கூட இத்தனை சுவாரஸ்யமாக எழுதி அசத்தி விட்டீர்கள்! ஆவியின் சாபம் பலித்துவிட்டதே! ஒருவேளை ஆசாமி சாமியாகிவிட்டாரா?

    ReplyDelete
  2. உங்களுக்குச் சொன்னது ஆவில்ல...அப்ப நடக்காம இருக்குமா.....இந்த ஆர் ஏ சி ரொம்பவே தொல்லைங்க...சுவாரஸ்யம்..சரியான போட்டி போல அந்த ஆளோட....ஹஹஹ்

    ReplyDelete
  3. பயணங்கள்...
    மு...
    டி...
    வ...
    தி...
    ல்...
    லை...

    ReplyDelete
  4. #ஏன்னா டிசைன் அப்படி#
    பெய்லியர் மாடல் என்று உற்பத்தியை நிறுத்தி இருப்பாரோ :)

    ReplyDelete
  5. Side Berth-ல் தனியாக படுத்துக் கொள்வதே பெரிய அவஸ்தை. இதில் RAC ஆக இருந்து இரண்டு பேராக இருந்தால்

    ReplyDelete
  6. Side Berth-ல் தனியாக படுத்துக் கொள்வதே பெரும் அவஸ்தை - குறிப்பாக என்னைப் போன்று உயரமானவர்களுக்கு! இதில் RAC- ஆக இருந்து இரண்டு பேரும் என்றால் மரண அவஸ்தை. ஒரு சமயம் இப்படி நானும் அவஸ்தைப் பட்டதுண்டு! இதில் இன்னுமொருவர் பெரும் சரீரம்! இப்படிஒரு நாள் இரண்டு இரவுகள் [தில்லியிலிருந்து சென்னை வரும் வரை RAC - Confirm ஆகாமல்! ரொம்பகஷ்டம்!

    நீங்கள் வேதனை அனுபவித்திருந்தாலும் அதனையும் ஸ்வாரசியமாகச் சொல்லி இருக்கீங்க சீனு!

    ஒவ்வொரு பயணமும் நமக்கு பல வாழ்க்கைப் பாடங்களையும் அனுபவங்களையும் தருகிறது! ஆதலினால் பயணம் செய்வோம்!

    ReplyDelete